search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆறுமுகநேரி"

    • பூட்டிய வீட்டிற்குள்ளே யாரோ இருப்பது போல் சத்தம் கேட்டுள்ளது.
    • அந்த மர்ம நபரோ வயல் காட்டு பகுதிக்குள் சென்று தப்பிவிட்டார்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி மடத்துவிளை குரூஸ் நகரில் குடும்பத்துடன் வசித்து வருபவர் செல்வம் (வயது 45). இவர் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று காலை இவர் வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் ஆத்தூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    பின்னர் மதியம் அவர்கள் வீடு திரும்பி உள்ளனர். அப்போது பூட்டிய வீட்டிற்குள்ளே யாரோ இருப்பது போல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் செல்வம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்துள்ளார். அதே வேளையில் வீட்டின் பின் வாசல் வழியாக வெளியே வந்த ஒரு மர்ம நபர் காம்பவுண்ட் சுவரில் ஏறி தப்பி ஓடினார். உடனே செல்வம் உள்ளிட்டோர் அந்த நபரை துரத்திச் சென்றனர். ஆனால் அந்த மர்ம நபரோ வயல் காட்டு பகுதிக்குள் சென்று தப்பிவிட்டார்.

    அந்த நபர் வீட்டின் சமையலறை ஓட்டுக்கூரையை பிரித்து உள்ளே சென்று பீரோவை உடைத்து ரூ.3 ஆயிரம் பணத்தை திருடி சென்றுள்ளது தெரிய வந்தது. இது பற்றி செல்வம் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 11 அடி வீர விநாயகர் சிலை சோமநாத சுவாமி கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
    • மெயின் பஜார் செந்தில் விநாயகர் ஆலயத்தை வந்தடைந்தது.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் இந்து முன்னணி சார்பில் 31-வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி மற்றும் இந்து எழுச்சி திருவிழா நேற்று தொடங்கி 6 நாட்கள் நடைபெறுகிறது.

    இதனை முன்னிட்டு 11 அடி வீர விநாயகர் சிலை சோமநாத சுவாமி கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அய்யப்ப பட்டர் இதற்கான பூஜைகளை நடத்தினார். பின்னர் இரவில் வீர விநாயகர் சிலை அங்கிருந்து அலங்கார ரதத்தில் புறப்பட்டு மெயின் பஜார் பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு வந்தது. அங்கு நடந்த சிறப்பு பூஜையில் கோவில் நிர்வாகிகள் கிழக்கத்தி முத்து, ஆதிசேஷன், பார்வதி குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டு மெயின் பஜார் செந்தில் விநாயகர் ஆலயத்தை வந்தடைந்தது. அங்கு வீர விநாயகர் சிலை கொலு அமர்த்தபட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜையும் நடந்தது. நிகழ்ச்சிகளில் இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளர் கசமுத்து, திருச்செந்தூர் வடக்கு ஒன்றிய தலைவர் ராமசாமி, பொதுச் செயலாளர் ஜெகன், ஆறுமுகநேரி நகர தலைவர் ஜெகன், நகர செயலாளர்கள் தியாகராஜன், அருணாச்சலம், மணிகண்டன், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிர்வாகிகள் பழனி, சிவராமன், சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் ஆறுமுகநேரியில் 35 இடங்களில் பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் இன்று இரவு பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. வருகிற 3-ந்தேதி குரும்பூர், ஆத்தூர் பகுதிகளில் பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகளுடன் மொத்தமாக 108 விநாயகர் சிலை ஊர்வலம் ஆறுமுகநேரியில் இருந்து தொடங்கி காயல்பட்டினம் வழியாக திருச்செந்தூருக்கு செல்கிறது.

    • சீனந்தோப்பு விலக்கு ரோடு அருகே நின்றிருந்த ஒரு நபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.
    • பூலோக பாண்டியன் அரசு மதுபான வகைகளை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றுக் கொண்டிருந்ததும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி சப்-இன்ஸ்பெக்டர் பிரபகுமார் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது சீனந்தோப்பு விலக்கு ரோடு அருகே நின்றிருந்த ஒரு நபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அந்த நபர் காயல்பட்டினம் ஓடக்கரையைச் சேர்ந்த பூலோக பாண்டியன் (47) என்பதும், அவர் அரசு மதுபான வகைகளை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றுக் கொண்டிருந்ததும் தெரியவந்தது.

    அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • கீழ சண்முகபுரத்தை சேர்ந்த முத்தையா (43) என்பவர் இசக்கிமுத்துவை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.
    • இசக்கிமுத்து அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தையாவை தேடி வருகின்றனர்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி சண்முக புரம் கீழத்தெருவில் வசித்து வருபவர் இசக்கிமுத்து (39), பெயிண்டர். இவர் சம்பவத்தன்று கடைக்கு சென்றுவிட்டு ஆறுமுகநேரி வடக்கு பஜார் வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது கீழ சண்முகபுரத்தை சேர்ந்த முத்தையா (43) என்பவர் இசக்கிமுத்துவை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

    பலத்த காயம் அடைந்த இசக்கிமுத்து காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தையாவை தேடி வருகின்றனர்.

    • அம்பாளுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகமும், சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தன.
    • மதியம் மகேஸ்வர பூஜையும் அன்னதானமும் நடைபெற்றன.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி பூவரசூர் ஸ்ரீ ஆதிபிராமணி பொடிபிள்ளை அம்மன் மற்றும் ஸ்ரீ இலங்கத்தம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கி 3 நாள் நடைபெற்றது.

    நேற்று காலை முதலாம் யாகசாலை பூஜை, பூர்ணாஹிதி, யந்திர ஸ்தாபனம் மற்றும் மருந்து சாத்துதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நிறைவு நாளான இன்று காலை 4-வது கால யாகசாலை பூஜை, மகா பூரண ஆகுதி ஆகியவை நடந்தன. வேத பாராயணமும் திருமுறை பாராயணமும் பாடப்பட்டன.

    பின்னர் கோவிலின் விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்பாளுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகமும், சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தன.

    கும்பாபிஷேக வைபவங்களை அய்யப்ப சிவாச்சாரியார் குழுவினர் நடத்தினர். நிகழ்ச்சியில் ஊர் தலைவர் சிவசக்திவேல் நாடார், சக்திவேல், டாக்டர் வேல்குமார், பார்த்திபன், செல்வம், வெங்கடேசன், செல்வ முருகன், முருகானந்தம், மாரிமுத்து தேவர், சிவசக்திவேல், செல்வ தேவர், ராகவன், தினகரன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதியம் மகேஸ்வர பூஜையும் அன்னதானமும் நடைபெற்றன. இரவில் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.

    • 8-வது திருநாள் காலையில் நடராஜர், சிவகாமி அம்பாள் மற்றும் மாணிக்கவாசகர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
    • நாளை (செவ்வாய்க்கிழமை) காலையில் பூஞ்சப்பர பவனியும், மதியம் தீர்த்தவாரி அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெறுகின்றன.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி ஸ்ரீ சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலின் ஆனி உத்திர திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழா நாட்களில் தினசரி காலையிலும் இரவிலும் சப்பரபவனி, கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

    நேற்று 8-வது திருநாள் காலையில் நடராஜர், சிவகாமி அம்பாள் மற்றும் மாணிக்கவாசகர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து ஸ்ரீ நடராஜர் வெண்பட்டு உடுத்தி வெள்ளை சாதி சப்பரபவனி நடந்தது.

    இரவில் ஸ்ரீ நடராஜர் சிவகாமி அம்பாளுடன் பச்சை பட்டாடை உடுத்தி வில்வம், மரிக்கொழுந்து மற்றும் பச்சை இலை மாலை அணிந்து ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்வரூபமாக பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    9-வது நாளான இன்று காலையில் பூஞ்சப்பர பவனி நடைபெற்றது. இரவில் பஞ்சமூர்த்திகளின் சப்பர பவனி நடைபெறுகிறது. நிறைவு நாளான நாளை (செவ்வாய்க்கிழமை) காலையில் பூஞ்சப்பர பவனியும், மதியம் தீர்த்தவாரி அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெறுகின்றன.

    இரவில் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் எழு ந்தருளி முக்கிய தெருக்களின் வழியாக வீதி உலா நடக்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய பூஜகர் அய்யப்ப பட்டர், கோவில் மணியம் சுப்பையா மற்றும் பக்த ஜன சபையினர் செய்து வருகின்றனர்.

    • பேரணிக்கு பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார்.
    • பேரணியில் மாணவர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்றது.

    பேரணிக்கு பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார்.

    செயல் அலுவலர் கணேசன் பேரணியை தொடங்கி வைத்தார். வார்டு கவுன்சிலர்கள் வெங்கடேசன், புனிதா, தீபா, சந்திரசேகர், சிவக்குமார், தயாவதி, சகாயரமணி, மரிய நிர்மலாதேவி, கா.ஆ. மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர் கண்ணன் மற்றும் மாணவர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    பேரூராட்சி அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணி ஆறுமுகநேரி மெயின் பஜார் வழியாக தபால் நிலையம் முன்பு நிறைவுபெற்றது.

    • அதிகாலையில் கும்ப பூஜையை தொடர்ந்து கொடி பட்டம் திருவீதி உலா நடைபெற்றது.
    • விழா நாட்களில் தினசரி சப்பர பவனி, பக்தி சொற்பொழிவு, உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலில் ஆனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக நேற்று காலையில் மகா கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

    மாலையில் நால்வர் சுவாமிகளின் பல்லக்கு பவனி நடந்தது.இன்று அதிகாலையில் கும்ப பூஜையை தொடர்ந்து கொடி பட்டம் திருவீதி உலா நடைபெற்றது. இதன் நிறைவாக கொடியேற்றம் நடந்தது.ஆலய பூஜகர் அய்யப்ப பட்டர் மற்றும் சண்முக பட்டர் குழுவினர் வைபவங்களை நடத்தினர்.

    நிகழ்ச்சியில் கோவில் மணியம் சுப்பையா, பக்த ஜன சபை சார்பில் அரிகிருஷ்ணன், பூபால் ராஜன், தெரிசை அய்யப்பன், சுப்பிரமணியன், தவமணி, அமிர்தராஜ், சைவ சித்தாந்தக் கழக தலைவர் சங்கரலிங்கம், பொருளாளர் கற்பகவிநாயகம், அரிமா சங்க தலைவர் நடராஜன் மற்றும் திருமுறை பன்னிசை குழுவினர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவில் இன்று மாலை திருநாவுக்கரசர் உழவாரபணி திருவீதி உலா நடக்கிறது. தொடர்ந்து ஸ்ரீபெலி நாயகர் அஸ்திர தேவருடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளல் நடக்கிறது. நாளை 2-வது நாள் திருவிழாவில் காலையில் யாகசாலை பூஜையும், சுவாமி அம்பாள் சப்பர பவனியும் நடக்கின்றன. மாலையில் விசேஷ அலங்கார பூஜையும் சப்பரபவனியும் நடக்கின்றன.

    இதேபோல் விழா நாட்களில் தினசரி காலையிலும் மாலையிலும் சப்பர பவனி, பக்தி சொற்பொழிவு, இன்னிசை, மாறுவேடப் போட்டி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

    7-ஆம் திருநாளான ஜூலை 2-ந் தேதி மாலை சிவப்பு சாத்தி சப்பர பவனியும், 8-வது நாள் காலையில் வெள்ளை சாத்தியும் மாலையில் பச்சை சாத்தியும் சப்பர பவனி நடக்கிறது. 9-வது நாளில் பூஞ்சப்பர பவனியும் நிறைவு நாளான ஜூலை 5-ந் தேதி மாலையில் சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெறுகிறது.

    • வெள்ளைக்காரர்களை விரட்டியடித்த காங்கிரஸ் இனி பாரதிய ஜனதாவை விட்டுவைக்காது என எம்.எல்.ஏ. பேசினார்.
    • ஆறுமுகநேரி முதியோர் இல்லத்தில் காங்கிரஸ் சார்பில் அன்னதானம் நடைபெற்றது.

    ஆறுமுகநேரி:

    ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு ஆறுமுகநேரியில் நகர காங்கிரஸ் மற்றும் திருச்செந்தூர் வட்டார காங்கிரஸ் சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. வட்டார தலைவர் சற்குரு தலைமை தாங்கினார். நகர தலைவர் ராஜாமணி வரவேற்று பேசினார்.

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கொடியேற்றி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    மத்திய பாரதிய ஜனதா தனது ஆட்சியின் அவலங்களை மறைக்க ராகுல்காந்தி மீது பொய்யான வழக்கை போட்டு மாபெரும் தவறை செய்து கொண்டிருக்கிறது. இதன் எதிர் விளைவை அவர்கள் உணரக் கூடிய நிலை சீக்கிரம் வரும்.

    வெள்ளைக்காரர்களை விரட்டியடித்த காங்கிரஸ் இனி பாரதிய ஜனதாவை விட்டுவைக்காது. நாடு பிளவுபடாமல் தடுக்க அனைத்து மக்களும் ஒன்றுபட்டு காங்கிரசை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து ஆறுமுகநேரி முதியோர் இல்லத்தில் காங்கிரஸ் சார்பில் அன்னதானம் நடைபெற்றது.இதனை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். முதியோர் இல்ல நிர்வாகிகள் பிரேம்குமார், ஷேக்னா லெப்பை, இ.சி.ஐ. சேர்மன் அந்தோணி, சேகர தலைவர்கள் ஆறுமுகநேரி சுதாகர், மடத்துவிளை சிமியோன், ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக் குழு உறுப்பினர் சந்திரசேகரன், மாவட்ட விவசாயப் பிரிவு தலைவர் வேல் ராமகிருஷ்ணன், ஓ.பி.சி. பிரிவு தலைவர் ராஜகுமார், மாவட்ட மனித உரிமை தலைவர் ராஜகுமாரன்,

    மாவட்ட துணைத்தலைவர் சங்கர், பொருளாளர் எடிசன், நகர காங்கிரஸ் துணைத் தலைவர்கள் சிவகணேசன், சுந்தரகுருசாமி, நகர செயலாளர் மாடசாமி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆல்வின் சேகர், மகளிர் காங்கிரஸ் தலைவர் பெனிட் ராணி, காங்கிரஸ் தியாகிகள் வாரிசு மாநில துணைத்தலைவர் தவசிமுத்து,

    வட்டார செயலாளர்கள் சாலமோன் ஜெபராஜ், மோகன், முன்னாள் கவுன்சிலர் மாணிக்கம், வார்டு செயலாளர்கள் சுடலைமணி, முருகேசன், சிவபெருமாள், பாரத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 215 பேர் கண் பரிசோதனை முகாமில் பங்கேற்று பயன் பெற்றனர்.
    • ஆறுமுகநேரி பேரூராட்சி துணை தலைவர் கல்யாணசுந்தரம் முகாமை தொடங்கி வைத்தார்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி இந்து மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    ஆறுமுகநேரி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கிளையின் சார்பில் தூத்துக்குடி மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க நிதி உதவியுடன் தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இந்த முகாமில் வங்கியின் கிளை மேலாளர் சரவணன் முன்னிலை வகித்தார்.

    ஆறுமுகநேரி பேரூராட்சி துணை தலைவர் கல்யாணசுந்தரம் முகாமை தொடங்கி வைத்தார். 215 பேர் முகாமில் பங்கேற்று பயன் பெற்றனர்.

    இவர்களில் 18 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    ஆறுமுகநேரி நகர தி.மு.க செயலாளர் நவநீத பாண்டியன், வார்டு கவுன்சிலர் வெங்கடேசன், இந்து மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் குமரன் உள்பட பலர் முகாமில் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    • முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவபடத்திற்கு மரியாதை

    ஆறுமுகநேரி:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு ஆறுமுகநேரி மெயின் பஜார் சந்திப்பில் அவரது உருவப் படத்திற்கு தி.மு.க சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு ஆறுமுகநேரி நகர தி.மு.க செயலாளரும் பேரூராட்சி துணைத் தலைவருமான அ.கல்யாணசுந்தரம் தலைமை தாங்கி இனிப்பு வழங்கினார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக கால்நடை துறை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், ஆறுமுகநேரி நகர பொருளாளர் பாலசுப்பிரமணியன், ஏ.கே.எல். கூட்டுறவு சங்க துணை தலைவர் நவநீத பாண்டியன், வார்டு கவுன்சிலர் வெங்கடேசன், முன்னாள் கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆத்திரமடைந்த கார்த்திசன் மனைவியை கத்தியால் தாக்கியுள்ளார்.
    • தங்கம் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி அருகே உள்ள மூலக்கரை வடக்கு தெருவை சேர்ந்தவர் கார்த்திசன் (வயது40). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி தங்கம் (36). இவர்களுக்கு ஒரு மகனும், மூன்று மகள்களும் உள்ளனர்.

    தங்கம் பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான 17 பவுன் நகைகளை உறவினர் ஒருவரிடம் பாதுகாப்பு கருதி கொடுத்து வைத்துள்ளார்.

    ஆனால் அந்த நகைகளை கேட்டு அவரது கணவரான கார்த்திசன் அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன் -மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த கார்த்திசன் தனது மனைவியை கத்தியால் தாக்கியுள்ளார்.

    இதில் தங்கத்தின் தலை மற்றும் இரண்டு கைகளிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. உடனே கார்த்திகேசன் அங்கிருந்து சென்று விட்டார்.

    படுகாயமடைந்த தங்கம் உடனடியாக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இச்சம்பவம் பற்றி ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திசனை தேடி வருகின்றனர்.

    ×