search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்மா உணவகம்"

    • இந்த உணவகம் மாற்று இடத்தில் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.
    • இந்த உணவகத்தை இடிக்காமலேயே மழைநீர் வடிகால்வாய் பணிகளை மேற்கொள்ளலாம்.

    சென்னை :

    சென்னை கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் உள்ள அம்மா உணவகத்தை, மழைநீர் வடிகால்வாய் பணிகளை காரணம் காட்டி இடித்து தள்ள உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இதற்கு பொதுமக்கள் தெரிவித்த எதிர்ப்பின் காரணமாக, இந்த உணவகம் மாற்று இடத்தில் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் குடிநீர் உள்பட எந்தவித வசதியும் இல்லாத ஒரு குறுகிய இடத்தில் அம்மா உணவகம் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

    இதனால் இந்த அம்மா உணவகத்தை தேடி வருவோர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். நாடி வருவோர் சிரமப்பட கூடாது என்பதற்காக அக்கம்பக்கத்து வீடுகளில் குடிநீரை வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு அம்மா உணவக ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    மேலும் உணவு சமைக்க வசதியில்லாத நிலையில் மாற்று இடத்தில் உணவு சமைத்து அங்கிருந்து நடையாய் சென்று உணவுகளை எடுத்து இங்கே வந்து வினியோகம் செய்கிறார்கள்.

    மேலும் அங்கு முறையான கழிவுநீர் செல்லும் வசதி ஏற்படுத்தப்படாத நிலையில் சாப்பிட்டு கை கழுவும் நீர் கூட வாசலில் தேங்கி நிற்கும் அளவுக்கு நிலைமை மோசம் அடைந்திருக்கிறது. இதனால் சாப்பிட வருவோருக்கும் தர்ம சங்கடம் ஏற்படுகிறது.

    ஏதோ கடமைக்கு செயல்படுவது போல அம்மா உணவகம் இருப்பதாக ஏழை மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

    என்ன சொல்வதென்றே தெரியாத நிலையில் ஊழியர்களும் தவிக்கிறார்கள். இதையெல்லாம் சரிகட்ட தினந்தோறும் ஆயிரக்கணக்கானோரின் பசியாறும் மையமாக செயல்பட்ட ராஜமன்னார் சாலை அம்மா உணவகம் முன்பு போலவே செயல்பட அனுமதியளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    ராஜமன்னார் சாலையில் உள்ள அம்மா உணவகத்தை மழைநீர் வடிகால்வாய் பணிகளை காரணம் காட்டி இடிக்க இருக்கிறார்கள். இந்த உணவகத்தை இடிக்காமலேயே மழைநீர் வடிகால்வாய் பணிகளை மேற்கொள்ளலாம். அதற்கான சாத்தியக்கூறுகள் நிறைய இருக்கின்றன. இல்லையெனில் அருகேயுள்ள குடிநீர் வாரியத்துக்கு சொந்தமான காலியிடத்தில் கூட அம்மா உணவகத்தை ஏற்படுத்தலாம். ஆனால் எங்கோ ஒரு மூலையில் அடிப்படை வசதிகள் இல்லாத ஒரு குறுகிய இடத்தில் மாற்று இடம் ஒதுக்கி இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

    ஒரே நேரத்தில் 100 பேர் சாப்பிடக்கூடிய இந்த இடம் எங்கே? 15 பேர் கூட சாப்பிட முடியாத அந்த புதிய இடம் எங்கே? இதையெல்லாம் அதிகாரிகள் எண்ணிப்பார்க்காதது ஏன்? மக்கள் நலனுக்காக தொடங்கப்பட்ட அம்மா உணவகங்களுக்கு விரைவில் மூடுவிழா ஏற்பட்டு விடுமோ? என்ற சந்தேகத்தையே இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுத்துகிறது.

    எனவே ஏழை மக்கள் நலன் கருதி, முன்புபோலவே ராஜமன்னார் சாலை அம்மா உணவகம் செயல்பட அரசு அனுமதி அளிக்க வேண்டும். அதை இடிக்க கூடாது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • பொதுமக்கள் புகாரை தொடர்ந்து நடவடிக்கை
    • அம்மா உணவகத்தில் உணவின் தரத்தை பார்வையிட்ட மேயர் சாப்பிட்டு பார்த்தார்.

    நாகர்கோவில்:

    ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் தரமான உணவு வழங்கப்படவில்லை என்று மாநகராட்சி மேயர் மகேசுக்கு புகார்கள் சென்றது.

    இதையடுத்து இன்று மதியம் மாநகராட்சி மேயர் மகேஷ் திடீரென அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு வழங்க தயார் செய்து வைக்கப்பட்டிருந்த உணவின் தரத்தை பார்வையிட்ட அவர் அதை சாப்பிட்டு பார்த்தார். அவருடன் மாநகர நகர் நல அதிகாரி ராம்குமார், சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் அலுவலர்கள் உடன் சென்றிருந்தனர்.

    மேயர் மகேஷ் ஆய்வு நடத்திய போது மதிய உணவு விநியோகம் நடந்து கொண்டிருந்தது. ஏராளமான பொதுமக்கள் உணவு வாங்க நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது உணவு விநியோகம் தொடர்பாக உள்ள பண இருப்பு விவரத்தை ஆய்வு செய்ய மேயர் உத்தரவிட்டார் .

    இதையடுத்து சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் பில்லிங் எந்திரத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து உணவகத்தில் இருந்த உணவு இருப்பு விவரத்தை ஆய்வு செய்தனர்.ஆய்வின் போது மாநகரச் செயலாளர் ஆனந்த் , ஒன்றிய செயலாளர் மதியழகன் மற்றும் கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.

    • அம்மா உணவகம், காரிய மண்டபம், ரேஷன் கடை ஆகிய கட்டிடங்கள் இடிப்பதற்கு முடிவு செய்யப்பட்டு காரிய மண்டபம் இடிக்கப்பட்டு விட்டது.
    • அம்மா உணவகத்தை இடிக்கும் நடவடிக்கையை ரத்து செய்து மாற்று வழி காண பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் அரசுக்கு கோரிக்கை மேல் கோரிக்கை வைத்துள்ளனர்.

    சென்னை:

    விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட கே.கே.நகர் ராஜ மன்னார் சாலையில் அம்மா உணவகம் திட்டம் தொடங்கப்பட்ட போது அமைக்கப்பட்ட உணவகம். தனியார் உணவகம் போல் கட்டிட அமைப்பும் சரி, விற்பனையானாலும் சரி மிகுந்த பயனுள்ளதாக பொதுமக்களிடம் வரவேற்புடையதாகவும் இருந்து வருகிறது.

    அந்த பகுதியில் வசிக்கின்ற ஏழை எளியோர் முதல் தொழிலாளர்கள், முதியோர் பென்சன்தாரர்கள் என ஏராளமானோர் இந்த உணவகத்தால் பயன் அடைந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அங்குள்ள அம்மா உணவகம், காரிய மண்டபம், ரேஷன் கடை ஆகிய கட்டிடங்கள் இடிப்பதற்கு முடிவு செய்யப்பட்டு காரிய மண்டபம் இடிக்கப்பட்டு விட்டது. அம்மா உணவகத்தை இடிக்கும் நடவடிக்கையை ரத்து செய்து மாற்று வழி காண பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் அரசுக்கு கோரிக்கை மேல் கோரிக்கை வைத்துள்ளனர்.

    அந்த பகுதியில் வசித்து வரும் அரசு வேலையில் இருந்து ஓய்வுபெற்ற பழனியப்பன் கூறியதாவது:- நான் வேலையில் இருந்து ஓய்வுபெற்ற பின் நானும் எனது மனைவியும் தனியாக வசித்து வருகிறோம். இரண்டு பிள்ளைகளும் வெளியூரில் வசித்து வருகிறார்கள். வயதான காலத்தில் எங்கள் வீட்டின் அருகே இருந்த இந்த உணவகத்தில் தான் நாங்கள் இருவரும் 3 வேளையும் சாப்பிட்டு வந்தோம்.

    இப்போது கட்டிடத்தையே இடிக்கப்போவதாக அறிந்தோம். இதற்கு மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னைப் போல் பலரும் இந்த உணவகத்தால் பயன் அடைந்து வருகிறோம்.

    அம்மா உணவகம் அப்புறப்படுத்துவதை ரத்து செய்யக்கோரி மாநகராட்சி ஆணையருக்கு முன்னாள் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விருகை வி.என்.ரவி அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-

    விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட 136-வது வார்டு ராஜமன்னார் சாலையில் அமைந்துள்ள அம்மா உணவகத்தை இடித்து அப்புறப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். இந்த அம்மா உணவகத்தில் அந்த பகுதியில் வசிக்கின்ற ஏழை எளிய குடும்பத்தார்கள் மற்றும் முதியோர், விதவை ஆதரவற்றவர்கள் தினமும் காலை, மதியம், இரவு 3 வேளையும் இந்த அம்மா உணவகத்தில் உணவருந்தி வருகிறார்கள். இந்த தொகுதியிலே அதிக அளவில் விற்பனை நடைபெறும் அம்மா உணவகம் இதுதான். இந்த உணவகத்தை நம்பி முதியோர்கள், முதியோர் பென்சனை பெற்றுக்கொண்டு இந்த உணவகத்தை நம்பி வாழ்ந்து வருகிறார்கள். அம்மா உணவகத்தை அப்புறப்படுத்தாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் செயல்படும் ‘திடீர்’ அம்மா உணவகம் செயல்படுகிறது.
    • அதிகாரிகள் தகுந்த ஏற்பாடுகளை செய்து பழைய பஸ் நிலையத்தில் அம்மா உணவகம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விருதுநகர்

    தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின்போது அனைத்து மாவட்டங்களிலும் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன. குறைந்த விலையில் இங்கு உணவுகள் விற்கப்பட்டதால் ஏழை-எளிய மக்கள் பயனடைந்தனர்.

    தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி தற்போதும் அம்மா உணவகங்கள் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன.விருதுநகர் நகரில் அரசு ஆஸ்பத்திரி பகுதியிலும், ரெயில்வே பீடர் ரோட்டிலும் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இங்கு நாள்தோறும் காலை, மதியம், இரவு என 3 வேளைகளிலும் ஏழை-எளிய மக்கள், தொழிலாளர்கள், ஆதரவற்றவர்கள் உணவு சாப்பிட்டு வருகின்றனர். ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள அம்மா உணவகத்தில் பெண்கள் உள்பட 12 பேர் பணியில் உள்ளனர். இவர்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இந்தநிலையில் ரெயில்வே பீடர் அம்மா உணவகத்தில் கடந்த சில மாதங்களாக ரூ.2000-க்கும் குறைவாக விற்பனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. அம்மா உணவகத்தில் நாள்தோறும் குறிப்பிட்ட தொகைக்கு உணவுகள் விற்கப்பட வேண்டும். விற்பனை குறைந்தால் அம்மா உணவகம் மூடப்படும் என நகராட்சி நிர்வாகம் கண்டிப்புடன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக அந்த உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பணி இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் விற்பனையை அதிகரிப்பதற்காக ரெயில்வே பீடர் அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவுகள் விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள சுகாதார நிலையம் முன்பு ஊழியர்கள் தினமும் விற்பனை செய்து வருகின்றனர்.

    சாலையோர கடை போல் இயங்கும் இங்கு பொதுமக்கள், பயணிகள் உணவருந்தி செல்கின்றனர். சாப்பிட்ட பின் இலையை அங்கேயே வீசிவிட்டு நடுரோட்டிலேயே கை கழுவி செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

    தற்காலிக உணவகம் அமைந்துள்ள பகுதியில் குப்பைகளும், கழிவுகளும் தேங்கியுள்ளன. எனவே விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள திடீர் அம்மா உணவகத்தை சுகாதாரமான முறையில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், 'பழைய பஸ் நிலையத்தில் அம்மா உணவகம் அமைத்திருப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் ஏழை எளிய மற்றும் பல்வேறு தரப்பட்ட பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால் திறந்தவெளியில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் விற்கப்பட்டு வருவதால் உடல் நல பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதிகாரிகள் தகுந்த ஏற்பாடுகளை செய்து பழைய பஸ் நிலையத்தில் அம்மா உணவகம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாணவர்களுக்கு காலை உணவு தயாரிக்கும் திட்டம் தனியாக செயல்படுத்தப்படுகிறது. இதற்கும் அம்மா உணவகத்திற்கும் தொடர்பு இல்லை.
    • தனித்தனியாக சமையல் கூடங்கள் அமைக்கப்படுகின்றன.

    சென்னை:

    அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடை நிறுத்தலை தவிர்க்கவும் காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசு தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு மட்டும் காலை உணவு திட்டத்தின் மூலம் வழங்க ஏற்பாடு மும்முரமாக நடக்கிறது.

    தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக 1545 அரசு பள்ளிகளில் படிக்கும் ஒரு லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    சென்னையில் முதலில் காலை உணவு திட்டம் வட சென்னை பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மண்டலங்கள் 1, 3, 4, 5 ஆகியவற்றிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையில் 2 சமையல் கூடம் எங்கு அமைப்பது என்பது பற்றி கடந்த சில நாட்களாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இறுதியாக 6 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. 5 அம்மா உணவகங்களில் இருந்தும் ஒரு பள்ளியில் இருந்தும் உணவு தயாரித்து அருகில் உள்ள பள்ளிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தேர்வு செய்யப்பட்டு உள்ள இந்த இடங்களில் இருந்து மாநகராட்சி பள்ளிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதில் எவ்வித சிரமமும் இருக்காது என்று கருதப்படுகிறது.

    காலை உணவு தயாரிக்க தாழங்குப்பம் அம்மா உணவகம், அன்னை சிவகாசி நகர், மாதவரம் புதிய பஸ் நிலையம், ஜெ.ஜெ.நகர், எஸ்.என்.ஷெட்டி தெருவில் உள்ள அம்மா உணவகங்களிலும் ஆறாநகரில் உள்ள பள்ளிகூடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    அங்கு விசேஷ சமையல் கூடம் இதற்காக அமைக்கப்படுகிறது. அம்மா உணவக தற்போதைய சமையல் கூடத்தை பயன்படுத்தாமல் காலை சிற்றுண்டிக்காக தனி சமையல் கூடம் கட்டப்படுகிறது. அதுபோல உணவு பொருட்களை பாதுகாத்து வைக்க தனி அறையும் அமைக்கப்படுகிறது.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மாணவர்களுக்கு காலை உணவு தயாரிக்கும் திட்டம் தனியாக செயல்படுத்தப்படுகிறது. இதற்கும் அம்மா உணவகத்திற்கும் தொடர்பு இல்லை. தனித்தனியாக சமையல் கூடங்கள் அமைக்கப்படுகின்றன.

    சமையல் பணியில் 20 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்கள் அம்மா உணவகங்களில் பணிபுரியும் சுயஉதவி குழுக்களை சேர்ந்தவர்கள். உணவு தயாரிக்கக் கூடிய நல்ல அனுபவம் இருப்பதால் அவர்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

    விரைவில் சமையல் கூடம் அமைக்கும் பணி தொடங்கும். இத்திட்டம் எப்போது தொடங்கும் என்பதை அரசு தான் முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் சிற்றுண்டிக்கு ஆண்டுக்கு ரூ.1.66 கோடியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.
    • அம்மா உணவங்களால் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு 120 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலைச் சிற்றுண்டி திட்டம் முதல் கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது.

    1,545 பள்ளிகளில் படிக்கும் 1,14,095 மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படும். இந்த திட்டத்துக்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை மாநகராட்சியில் 36 பள்ளிகளில் 5,941 மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்க பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

    சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் சிற்றுண்டிக்கு ஆண்டுக்கு ரூ.1.66 கோடியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.

    இந்த நிலையில் சென்னையில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான சிற்றுண்டியை அம்மா உணவகத்தில் இருந்து தயாரித்து வழங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

    சென்னை மாநகராட்சியில் 407 அம்மா உணவகங்கள் உள்ளன. இந்த உணவங்களால் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு 120 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.

    இவற்றை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் மாநகராட்சி எடுத்து வருகிறது. அம்மா உணவகத்தில் உணவு தயாரிப்பதற்கான அனைத்து வசதிகளும் உள்ளதால், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அம்மா உணவகத்தில் சிற்றுண்டி தயாரித்து பள்ளிக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம்.

    அரசு அனுமதிக்கும் பட்சத்தில் காலை சிற்றுண்டியை அம்மா உணவகத்தில் தயாரித்து விடுவோம். இதற்கு போதிய அளவுக்கு பணியாளர்களும் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அம்மா உணவகத்தின் செயல்பாடுகளில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக ஆய்வு செய்ய சென்னை மாநகராட்சி சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
    • சென்னை மாநகராட்சியில் செயல்படும் அம்மா உணவகங்களை மேம்படுத்துவதற்கு நிதி திரட்ட ஒரு அறக்கட்டளை அமைக்கலாம் என்று அந்த குழு பரிந்துரை அளித்தது.

    சென்னை:

    அ.தி.மு.க. ஆட்சியின் போது சென்னையில் ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவு வழங்குவதற்காக அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. இதை சென்னை மாநகராட்சி செயல்படுத்தியது. இந்த திட்டத்துக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

    இதையடுத்து சென்னை முழுவதும் 407 அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இங்கு 3 வேளையும் மலிவு விலையில் உணவு கிடைக்கிறது.

    இந்த அம்மா உணவகங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.140 கோடி செலவாகிறது. ஆனால் வருவாயாக ரூ.20 கோடி மட்டுமே கிடைக்கிறது. மீதம் ரூ.120 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. எனவே அம்மா உணவகத்தின் செயல்பாடுகளில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக ஆய்வு செய்ய சென்னை மாநகராட்சி சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

    சென்னை மாநகராட்சியில் செயல்படும் அம்மா உணவகங்களை மேம்படுத்துவதற்கு நிதி திரட்ட ஒரு அறக்கட்டளை அமைக்கலாம் என்று அந்த குழு பரிந்துரை அளித்தது. பல்வேறு அமைப்புகளிடம் நிதி பெற்று அம்மா உணவகத்தை நடத்தினால் நஷ்டத்தை தவிர்க்கலாம் என்று கூறப்பட்டது.

    அம்மா உணவக அறக்கட்டளை அமைக்க ஏற்கனவே அ.தி.மு.க. ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி அம்மா உணவக அறக்கட்டளையை தொடங்க தி.மு.க. அரசு முடிவு செய்துள்ளது.

    இந்த நிலையில் அம்மா உணவகத்தை தொடர்ந்து செயல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசுக்கு சென்னை மாநகராட்சி கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. அதில், 'அறக்கட்டளை தொடங்கிய பிறகு போதிய நிதி கிடைக்காத பட்சத்தில் அந்த நிதியை தமிழக அரசு முழுமையாக அளிக்குமா? நிதியே கிடைக்காவிட்டால் தொடர்ந்து அம்மா உணவகத்தை செயல்படுத்த அரசு நிதி அளிக்குமா?' என கேள்வி எழுப்பி உள்ளது.

    இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

    அம்மா உணவகத்தை தொடர்ந்து நடத்த தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. நஷ்டம் ஏற்படாமல் அம்மா உணவகத்தை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. அறக்கட்டளைக்கு சமூக பங்களிப்பு நிதி மற்றும் பொதுமக்கள் விரும்பி நிதி அளிக்கும் பட்சத்தில் அவற்றை ஏற்பது குறித்து அரசிடம் கேட்கப்பட்டுள்ளது.

    அறக்கட்டளைக்கு அளிக்கப்பட்ட நிதி, அம்மா உணவகத்தை செயல்படுத்த செலவான நிதி ஆகியவை பற்றி ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கை கவுன்சில் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • ஒவ்வொரு அம்மா உணவகத்திற்கும் விற்பனை இலக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டது.
    • அம்மா உணவகங்களை நடத்துவதன் மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி மூலம் 200 வார்டுகளில் 400 அம்மா உணவகங்களும், அரசு ஆஸ்பத்திரிகளில் 3 உணவகங்களும் செயல்பட்டு வந்தன. இதில் வார்டுகளில் செயல்பட்ட 3 உணவகங்கள் மூடப்பட்டன.

    இதையடுத்து தற்போது 400 அம்மா உணவகங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.

    இந்த அம்மா உணவகங்களில் கடந்த சில வருடங்களாக விற்பனை சரிந்தது. இதனால் வருவாய் இழப்பை அதிகம் சந்திக்க நேரிட்டது. இதையடுத்து ஊழியர்களின் வேலை நாட்கள் குறைக்கப்பட்டன.

    ஒரு சில அம்மா உணவகங்களில் ஊழியர்களின் சம்பளத்திற்கு கூட விற்பனை நடைபெறாத நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில் அம்மா உணவகங்களில் விற்பனையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அங்குள்ள பொருட்கள் சேதம் அடைந்து செயல்படாமல் இருந்தது. அதனை பழுது நீக்கம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன.

    மேலும் ஒவ்வொரு அம்மா உணவகத்திற்கும் விற்பனை இலக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டது.

    அம்மா உணவகங்களை கண்காணித்து நிர்வகித்து வரும் 15 மண்டலங்களுக்கும் இலக்கு முடிவு செய்யப்பட்டது. மண்டலத்தின் கீழ் இயங்கும் ஒவ்வொரு உணவகத்திற்கும் வாரத்திற்கு ரூ.1.5 லட்சம், ரூ. 2 லட்சம், ரூ. 3 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டது. அதையடுத்து அதற்கேற்ப விற்பனையை ஊழியர்கள் செய்ய தொடங்கினர்.

    ஒவ்வொரு கடையிலும் தினமும் குறிப்பிட்ட அளவு விற்பனை செய்ய வேண்டும் என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இதனால் தற்போது அம்மா உணவகங்களில் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் 27-ந்தேதியில் இருந்து இந்த மாதம் 3-ந்தேதி வரை ஒரு வாரத்தில் 400 அம்மா உணவகங்களில் மொத்தம் ரூ.27 லட்சத்து 34 ஆயிரத்து 460-க்கு விற்பனை நடந்துள்ளது.

    சராசரியாக நாள் ஒன்றுக்கு 3 லட்சத்து 90 ஆயிரத்திற்கு உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.

    இந்த மாதம் 4-ந்தேதி முதல் 11-ந்தேதி வரையிலான ஒரு வார காலத்தில் ரூ.37 லட்சத்து 3 ஆயிரத்திற்கு விற்பனை ஆகியுள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரி விற்பனை 5 லட்சத்து 33 ஆயிரமாகும். ஒரு வாரத்தில் ரூ.10 லட்சம் அளவிற்கு விற்பனை உயர்ந்துள்ளது.

    இதற்கிடையில் அம்மா உணவகங்களை நடத்துவதன் மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை ஈடுசெய்ய அரசிடம் இருந்து நிதி கேட்டுள்ளது. 2021-22-ம் ஆண்டிற்கு ரூ.98 கோடி செலவிடப்பட்டு இருப்பதாக அரசுக்கு தெரிவித்துள்ளது.

    • சென்னையில் செயல்படும் 400 அம்மா உணவகங்களிலும் வழக்கம்போல் உணவுகள் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
    • அம்மா உணவங்களில் சப்பாத்தியை நிறுத்தும் எண்ணம் எதுவும் இல்லை.

    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ஏழை-எளிய மக்கள் பசியாற கடந்த 2013-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி பகுதியில் அம்மா உணவகங்களை திறந்தார்.

    இங்கு குறைந்த விலையில் இட்லி, சப்பாத்தி, பொங்கல், கலவை சாதம் உள்ளிட்ட உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டன.

    ஆரம்பத்தில் அம்மா உணவகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் சென்னையில் அம்மா உணவகங்கள் பல இடங்களில் தொடங்கப்பட்டது. இப்போது 400 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது.

    இவற்றால் சில இடங்களில் பராமரிப்பு பணிகள் முறையாக நடைபெறவில்லை என்றும் உணவின் தரம் குறைவாக உள்ளதாகவும் பலர் குறைகூறி வருகின்றனர்.

    இந்த நிலையில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் சப்பாத்தி வழங்குவது நிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இதுபற்றி மாநகராட்சி அதிகாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    சென்னையில் செயல்படும் 400 அம்மா உணவகங்களிலும் வழக்கம்போல் உணவுகள் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு கோதுமை கொள்முதல் செய்வதில் சில இடர்பாடுகள் இருந்ததால் சப்பாத்தி தயாரிப்பது தடைபட்டது. அதன் பிறகு அதனை சரி செய்து மீண்டும் சப்பாத்தி வழங்கினோம்.

    சில நாட்களுக்கு முன்பு சப்பாத்தி மாவு மிஷின் ரிப்பேர் ஆனது. அதையும் சரிசெய்து தடையின்றி சப்பாத்தி தயாரித்து வழங்குகிறோம். எனவே அம்மா உணவங்களில் சப்பாத்தியை நிறுத்தும் எண்ணம் எதுவும் இல்லை. சிலர் வதந்தியை கிளப்பி வருகிறார்கள்.

    அம்மா உணவகங்களை கண்காணிக்கவும், தரமான உணவு வழங்குவதற்காகவும் மாநகராட்சியில் தனியாக ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் அம்மா உணவகங்களின் செயல்பாடுகளை கண்காணித்து வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தாமரைச்செல்வி. சாலிகிராமம் வி.வி கோவில் தெருவில் உள்ள அம்மா உணவகத்தில் தாமரைச்செல்வி வேலை பார்த்து வருகிறார்.
    • இவர் சமையல் செய்யும் பணியில் ஈடுபட்டபோது அங்கு வந்த சூப்பர்வைசர் ராதிகா என்பவர், “இட்லி துணியை ஏன் சரியாக சுத்தம் செய்யவில்லை” என்று கூறி கண்டித்தார்.

    போரூர்:

    விருகம்பாக்கம் பச்சையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தாமரைச்செல்வி. சாலிகிராமம் வி.வி கோவில் தெருவில் உள்ள அம்மா உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் சமையல் செய்யும் பணியில் ஈடுபட்டபோது அங்கு வந்த சூப்பர்வைசர் ராதிகா என்பவர், "இட்லி துணியை ஏன் சரியாக சுத்தம் செய்யவில்லை" என்று கூறி கண்டித்தார். இதில் தாமரைச்செல்விக்கும், ராதிகாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் தாமரைச்செல்வியின் காதில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சிவகாசி அம்மா உணவகத்தில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
    • உணவு சாப்பிட வரும் ஏழைகள், முதியவர்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.

    சிவகாசி

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களில் ஒன்று அம்மா உணவகம். ஏழை-எளிய மக்கள் பசியால் வாடக்கூடாது என்பதற்காக குறைந்த விலையில் உணவுகள் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். இதன் மூலம் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

    அம்மா உணவகங்களில் சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும்,லெமன் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும், விற்கப்படுகிறது. காலை இட்லி, பூரி, மலிவு விலையில் விற்ப்படுகிறது.

    சிவகாசி மாநாகராட்சி சார்பில் நடத்தப்படும் அம்மா உணவகத்தில் தினமும் மதியம் 1 மணிக்கு லெமன் சாதம், தயிர் சாதம் காலியாகி விடுகிறது. சாம்பார் சாதம் 1.30 மணியளவில் காலியாகி விடுகிறது. ஆனால் மாலை 3 மணி வரை உணவுகள் வழங்க வேண்டும் என அரசு உத்தரவு உள்ளது.

    ஆனால் சிவகாசி மாநக ராட்சி நடத்தும் அம்மா உணவகம் 2 மணிக்கு பிறகு மூடப்பட்டு விடுவதால் உணவு சாப்பிட வரும் ஏழைகள், முதியவர்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.

    எனவே தேவையான அளவு உணவு சமைத்து தினமும் 2.30 மணி வரையிலாவது உணவு வழங்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பொது மக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர். இதுதொடர்பாக மாநகராட்சி நடவடிக்கை எடுக்க முன்வருமா?.

    தேர்ந்தெடுத்த மக்களுக்கு நம்பிக்கையுள்ள ஆட்சியாக தி.மு.க. ஆட்சி இல்லை என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது என ஓ. பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களுக்குத் தாங்களே நம்பிக்கை உள்ளவர்களாக நடந்துகொண்டால் மட்டும் போதாது. தேர்ந்தெடுத்த மக்களுக்கும் நம்பிக்கையுள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும்." என்றார் பேரறிஞர் அண்ணா.

    ஆனால் இதற்கு முரணான நிலைதான் தமிழ்நாட்டில் அனைத்துப் பிரச்சனைகளிலும் நிலவுகிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தேர்ந்தெடுத்த மக்களுக்கு நம்பிக்கையுள்ள ஆட்சியாக தி.மு.க. ஆட்சி இல்லை என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது.

    ஒரு பக்கம் அம்மா உணவகங்களை இருட்டடிப்பு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வரும் தி.மு.க.வினர், மறுபக்கம் அம்மா உணவகங்களில் பணிபுரிவோரை வேலையிலிருந்து நீக்கும் முயற்சியையும் செய்து வருகின்றனர். மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட அம்மா உணவகங்களில் பணியாற்றுவோரை பணிநீக்கம் செய்வதாக மாநகராட்சியினர் தெரிவித்தபோது 
    அதனைக் கண்டித்து அங்கு பணிபுரியும் பெண் பணியாளர்கள் சில நாட்களுக்கு முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், அவ்வாறு அறநெறியில் போராடியவர்களை காவல் துறையில் புகார் அளித்து  கைது செய்வோம் என மாநகராட்சி அதிகாரிகள் மிரட்டியதாகவும்- பத்திரிகைகளில் செய்தி வந்தன.

    திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட அம்மா உணவகங்களிலும் இதே நிலைமைதான் நீடிப்பதாக செய்திகள் வருகின்றன. சில இடங்களில் நிதிச் சுமையை காட்டி பணியாளர்களை விலகச் சொல்கிறார்கள் என்ற தகவலும் வருகிறது. மொத்தத்தில், தமிழ்நாடு முழுவதும் தற்போது அம்மா உணவகங்களில் பணியாற்றுபவர்களை பணியிலிருந்து நீக்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது அவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது.

    இந்தச் சூழ்நிலையில் கம்பம் நகர தி.மு.க. செயலாளர் அம்மா உணவகத்தில் பணிபுரியும் பெண்களிடம் பேசிய ஓர் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில், தி.மு.க. நகரச் செயலாளர் அம்மா உணவகங்களில் பணிபுரியும் பெண்களிடம், தாங்கள்தான் ஏழு ஆண்டுகள் பணிபுரிந்து விட்டீர்களே, புதிதாக மற்றவர்களுக்கு வழிவிடுங்கள் என்றும்,

    தன்னுடைய சொந்த ஓட்டலில் வேலை ஏற்படுத்தித் தருவதாகவும், கட்சிப் பணி புரிந்தவர்களுக்கு வேலை தர வேண்டிய கட்டாயத்தில் தான் உள்ளதாகவும், கட்சிக்காக வேலை பார்த்தவர்கள் பத்து ஆண்டுகள் வேலையில்லாமல் இருந்ததால் தங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கூறுவதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

    இதற்கு அந்தப் பெண்கள் தாங்கள் ஏழு ஆண்டுகளாக இங்குதான் பணிபுரிந்து வருகிறோம் என்றும், இதை நம்பித்தான் தங்களுடைய வாழ்வாதாரம் உள்ளது என்றும், தங்களில் பெரும்பாலானோர் கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள் என்றும் கூறியுள்ளனர். ஆனால் தி.மு.க.வின் நகரச் செயலாளரோ அவர்களை பணியிலிருந்து எடுப்பதில் உறுதியாக உள்ளதாக அந்த ஆடியோச் செய்தியிலிருந்து தெரிய வருகிறது.

    தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற செயலில் தி.மு.க.வினர் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வருகின்றன. தி.மு.க.வினரின் இதுபோன்றச் செயல் கடும் கண்டனத்திற்குரியது.  அம்மா உணவகங்களில் கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள், மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள்தான் பணியாற்றுகின்றனர்.

    கொரோனா நோய்த்தொற்று உச்சத்தில் இருக்கும்போது, அனைத்து  உணவகங்களும் முற்றிலுமாக மூடப்பட்ட நிலையில், தங்களது உயிரை - துச்சமென மதித்து, நேரம், காலம் பார்க்காமல் அல்லும் பகலும் அயராது உழைத்து ஏழை, எளிய மக்களின் பசியை ஆற்றும் மகத்தான பணியைச் செய்தவர்கள். அவர்களை அந்தப் பணியிலிருந்து எடுத்துவிட்டு அங்கு தி.மு.க.விற்கு பணியாற்றியவர்களை வேலைக்கு அமர்த்துவது என்பது நியாயமற்ற செயல். இயற்கை நியதிக்கு முரணானது. 

    "எங்களுக்கு வாக்களித்தவர்கள், இவர்களுக்கு வாக்களித்தோமே என்று மகிழ்ச்சி அடையக்கூடிய வகையிலே, வாக்களிக்கத் தவறியவர்கள், இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று வருத்தப்படக்கூடிய வகையிலே எனது பணி இருக்கும்" என்று  ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசும்போது முதலமைச்சர் குறிப்பிட்டார்.

    ஓ. பன்னீர்செல்வம்

    அம்மா உணவகங்களில் பணியாற்றுபவர்கள் எல்லாம் யாருக்கு வாக்களித்தார்கள் என்று தெரியாத நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் பணியமர்த்தப்பட்டவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களை பணியிலிருந்து நீக்க முயற்சிப்பது, பணியிலிருந்து விலகுமாறு மிரட்டுவது முதலமைச்சரின் கூற்றுக்கு எதிராக அமைந்துள்ளது. அம்மா உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு அரசிற்கு இருக்கிறது.

    எனவே, முதலமைச்சர்  இதில் உடனடியாகத் தலையிட்டு, களத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தீர விசாரித்து, அம்மா உணவகங்களில் பணியாற்றும் ஏழை, எளியத் தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்றிட வழிவகை செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் ஓ. பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
    ×