search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்"

    • சமூக வலைதளத்தில் என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு நான் பதில் அளிப்பதில்லை.
    • எனது பொது வாழ்வில் நான் செய்த அனைத்து விசயங்களும் முதலமைச்சர் ஆலோசனையின்பேரில் மட்டுமே அமைந்துள்ளன.

    மதுரை:

    அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஒருவருடன் ஆங்கிலத்தில் உரையாடும் ஆடியோவை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில், அமைச்சர் உதயநிதியும், சபரீசனும் ஒரே ஆண்டில் தங்களது மூதாதையரைவிட அதிகமாக சம்பாதித்துள்ளனர். அது பிரச்சினையாகி வருகிறது.

    அதனை எப்படி கையாளுவது? எப்படி சிக்கிக்கொள்ளாமல் இருப்பது? ரூ.10 கோடி, ரூ.20 கோடி என்று அவர்கள் சிறுக சிறுக குவித்தது தோராயமாக ரூ.30 ஆயிரம் கோடி இருக்கும் என்று உரையாடல்கள் இடம் பெற்றுள்ளன. அந்த ஆடியோவில் ஆங்கில உரையாடலுக்கான தமிழ் மொழி பெயர்ப்பும் இடம் பெற்றிருந்தது.

    இந்த நிலையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சமூக வலைதளத்தில் என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு நான் பதில் அளிப்பதில்லை. நான் அமைச்சரவையில் ஒதுக்கப்பட்டுள்ள இலாகாவில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறேன்.

    எனது பொது வாழ்வில் நான் செய்த அனைத்து விசயங்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின்பேரில் மட்டுமே அமைந்துள்ளன. எங்களை பிரிப்பதற்காக எந்த ஒரு நாசவேலையை செய்தாலும் வெற்றி பெறாது.

    அந்த ஆடியோ முழுக்க முழுக்க போலியானது. அதற்கு தொழில்நுட்ப ரீதியாக என்னிடம் ஆதாரம் உள்ளது. 26 நொடிகள் ஓடும் அந்த ஆடியோவில் முதல் சில விநாடிகள் வேறொரு கிளிப்பில் இருந்து எடுக்கப்பட்டது. எஞ்சிய உரையாடலில் குரல் தெளிவாக இல்லை. வேண்டும் என்றே சப்தம் குறைக்கப்பட்டுள்ளது. அதுவும் தவிர இந்த தொலைபேசி அழைப்பில் பின்னணி சத்தம் எதுவும் இடம்பெறவில்லை. எனவே நான் பேசியதாக வெளியான ஆடியோ போலியானது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எதிர்க் கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியும், பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் இந்த விவகாரத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
    • 2023 பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகை திட்டத்தை அறிவிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார்

    சென்னை:

    கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வழங்கிய 505 வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டு விட்டதாக தி.மு.க-வினர் கூறிவருகிறார்கள். ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்பன உள்ளிட்ட சில முக்கியமான வாக்குறுதிகளை தி.மு.க அரசு இன்னும் நிறைவேற்றவில்லை.

    அதனால், தி.மு.க அரசுக்கு எதிரான விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட தரப்பினர் முன்வைத்து வருகிறார்கள். குடும்பத் தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்கிற தி.மு.க-வின் வாக்குறுதி சட்டமன்றத் தேர்தலின்போது பெண் வாக்காளர்களைப் பெரிதாகக் கவர்ந்தது.

    தி.மு.க வெற்றி பெற்றவுடன், ரூ.1,000 உரிமைத்தொகையை தமிழக அரசு வழங்கும் என்று குடும்பத் தலைவிகள் எதிர்பார்த்தனர். ஆனால், இதுவரை அது வழங்கப்படவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும், பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் இந்த விவகாரத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பிவருகின்றனர்.

    இந்நிலையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மகளிருக்கு உரிமை தொகை தரும் திட்டம் தொடர்பான கணக்கெடுப்பு பணி 85 சதவீதம் நிறைவடைந்துள்ளது. 2023 பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகை திட்டத்தை அறிவிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார் என கூறினார்.

    • தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ரோப் கார் மூலம் மலைக்கோயிலுக்கு சென்றார்.
    • மின்சாரம் தடைபட்டதால் ரோப் கார் பழுதாகி அந்தரத்தில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் ஒன்றான திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அவர் மலைக்கோயிலுக்கு மேலே செல்வதற்காக அடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலமாகச் சென்றார்.

    அப்போது திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் மேலே சென்ற ரோப் கார் பாதியிலேயே அந்தரத்தில் தொங்கியபடி நின்றது.

    ரோப் காரில் நிதியமைச்சருடன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் உள்ளிட்ட அரசு அலுவலர்களும் உடன் இருந்தனர். இரண்டு நிமிடத்துக்கு பிறகு மின்சாரம் வந்தவுடன் மீண்டும் ரோப் கார் இயக்கப்பட்டது.

    இதையடுத்து, மலைக்கோயிலுக்கு சென்ற நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பழனிமுருகனை தரிசனம் செய்தார். அவருக்கு திருக்கோயில் சார்பில் பிரசாதம் வழங்கபட்டது. சாமி தரிசனம் முடிந்த பின்னர் மீண்டும் ரோப் கார் வழியாகவே அமைச்சர் கீழே இறங்கினார்.

    அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்ற ரோப் கார் மின்சார தடையால் பாதி வழியில் அந்தரத்தில் தொங்கியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நேரங்களில் அளிக்கப்படும் வாக்குறுதிகளில் இலவசங்கள் குறித்து எந்த வகையில் அந்த இலவசங்கள் வழங்கப்படுகிறது?
    • நிதி குறித்து எழுத்துப்பூர்வமாக தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பி இருக்கிறது.

    மதுரை:

    மதுரை மத்திய தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி 3-வது மண்டலத்தில் சுந்தரராஜபுரம் பகுதியில் புதிய ரேஷன் கடையை தமிழக நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து சுப்பிரமணியபுரத்தில் மாநகராட்சி உறுப்பினரின் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நேரங்களில் அளிக்கப்படும் வாக்குறுதிகளில் இலவசங்கள் குறித்து எந்த வகையில் அந்த இலவசங்கள் வழங்கப்படுகிறது? அதற்கான நிதி குறித்து எழுத்துப்பூர்வமாக தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பி இருக்கிறது.

    இந்த கடிதம் குறித்து பதில் அளிக்க வேண்டியது அரசியல் கட்சித் தலைவர்கள் தான். நான் எனது கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை என்றாலும் மாநில நிதி அமைச்சர் என்ற முறையில் அல்லது சராசரி ஒரு மனிதன் பகுத்தறிவு சிந்தனையுடன் சொல்லும் கருத்து என்னவென்றால் தேர்தல் ஆணையம் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு வரும்போது நாங்கள் எந்த குழுவும் அமைக்கவில்லை என்று கூறிவிட்டு தற்போது கூறும் கருத்து என்பது முரண்பாடாக இருக்கிறது.

    அப்போதே திராவிட முன்னேற்றக் கழகம் இந்த வழக்கு குறித்து எங்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடியது. இந்த கருத்துக்கு அரசியல் அனுபவம் வாய்ந்த எங்கள் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் அளிப்பார்.

    மத்திய அரசு ஒரு தலைப்பட்சமாக நிதியினை வைத்து பல அரசியல் தந்திர வேலைகளை செய்ய முடியும் என்று நினைக்கிறது. தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை திறந்து வைத்த பிரதமர் அதே நாளில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி விட்டு மதுரையில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தில் ஒரு சுவர் கூட எழுப்பவில்லை என்பது பாரபட்சமானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி பொன் வசந்த், மண்டல தலைவர் பாண்டிச் செல்வி, மிசா பாண்டி, போஸ் முத்தையா, பாலா மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், மாவட்ட தலைவர் கார்த்திகேயன், ஜெயந்திபுரம் முருகன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசியல்வாதிகளுக்கு கொள்கைகளை தாண்டி மனிதாபிமானமும் திறமையும் அவசியமான ஒன்றாகும்.
    • மத்திய சட்டமன்ற தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்து உள்ளேன்.

    மதுரை:

    மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எஸ்.எஸ்.காலனியில் 586 பயனாளிகளுக்கு ரூ.94 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் தலைமை தாங்கினார். மேயர் இந்திராணி முன்னிலை வகித்தார்.

    இதில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசும் போது கூறியதாவது:-

    அரசியல்வாதிகளுக்கு கொள்கைகளை தாண்டி மனிதாபிமானமும் திறமையும் அவசியமான ஒன்றாகும். மத்திய சட்டமன்ற தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்து உள்ளேன்.

    கடந்த ஆட்சியில் தகுதி வாய்ந்த, பரிந்துரை செய்த ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவில்லை. ஆனால் இந்த ஆட்சியில் மனிதாபிமானத்தோடு மக்களுக்கு விரைவாக நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறோம். இது போன்ற நிகழ்ச்சிகள் 3-வது முறையாக நடைபெற்று வருகின்றன.

    சிறந்த முறையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. மு.க.ஸ்டாலின் சிறந்த முதல்வராக செயலாற்றி வருகிறார். இந்த அரசுக்கு சிறந்த பொருளாதார நிபுணர்கள், நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர்கள் மற்றும் பிரதமரின் தலைமை ஆலோசகராக இருந்தவர்கள், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் என்று சிறந்த பொருளாதார வல்லுனர்களின் ஆலோசனைகளை கேட்டு இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

    யார் நல்ல ஆலோசனைகளை கூறினாலும் இந்த அரசு அதன்படி கேட்டு நடக்க தயாராக இருக்கிறது. ஆனால் அரசியல் ரீதியில் சர்வாதிகார போக்குடன் எங்களுக்கு தான் எல்லாம் தெரியும், நாங்கள் சொல்வதை தான் நீங்கள் செய்ய வேண்டும் என்ற மனோபாவத்துடன் சிலர் எங்களுக்கு கூறும் அறிவுரைகளை நாங்கள் ஒருபோதும் பின்பற்ற மாட்டோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமைச்சர் கார் மீது செருப்பை வீசிய பெண் குறித்தும், அவர்களுடன் வந்தவர்கள் குறித்தும் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
    • போலீசார் அங்கு பதிவான வீடியோ காட்சிகள் மூலம் அந்த பெண்களை தேடி வந்தனர்.

    அவனியாபுரம்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ முகாம் மீது நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் வீரமரணம் அடைந்தார். அவரது உடல் மதுரை விமான நிலையத்துக்கு கொண்டு வந்தபோது தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

    அப்போது தி.மு.க.-பா.ஜனதாவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அஞ்சலி செலுத்தி விட்டு மதுரை விமான நிலையத்தில் இருந்து தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்ற கார் மீது பா.ஜ.க.வினர் தாக்குதல் நடத்தி செருப்பு வீசி எறிந்தனர்.

    அதில் அமைச்சர் கார் மீது தாக்கிய வழக்கில் முதல் கட்டமாக பா.ஜ.க.வினர் 7 பேரை அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் முன்னாள் மதுரை மாவட்ட பா.ஜ.க.தலைவர் டாக்டர் சரவணன், துணைத்தலைவர் மனோகரன் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் 24 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    ஆனாலும் அமைச்சர் கார் மீது செருப்பை வீசிய பெண் குறித்தும், அவர்களுடன் வந்தவர்கள் குறித்தும் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் அங்கு பதிவான வீடியோ காட்சிகள் மூலம் அந்த பெண்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று 3 பெண்கள் உள்பட 5 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அதில் தெய்வானை, சரண்யா, தனலட்சுமி ஆகிய 3 பேர் தான் செருப்பு வீசி சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று தெரிய வந்தது. அதை தொடர்ந்து போலீசார் 3 பெண்களையும் கைது செய்தனர்.

    அமைச்சர் கார் மீது செருப்பு வீசிய சம்பவத்தில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    • வரி விதிப்பு குறித்து மூன்று கட்டங்களில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதை ஒன்றிய நிதி அமைச்சரே குறிப்பிட்டு உள்ளார்.
    • உண்மைநிலை இவ்வாறு இருக்க அரசியல் காரணங்களுக்காக பல்வேறு தவறான செய்திகளை சிலர் பரப்பி வருவது கண்டிக்கத்தக்கதாகும்.

    சென்னை:

    தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அரிசி உள்ளிட்ட பேக்கிங், லேபில் செய்யப்பட்ட பல உணவுப் பொருட்கள் மீது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிக்கப்பட்டது குறித்து பல்வேறு தவறான செய்திகள் உலவி வருகின்றன. ஆதலால் இந்நிகழ்வு குறித்த உண்மை நிலையை தெரிவிப்பது அவசியமாகும். சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றத்தின் 45-வது கூட்டத்தில் முடிவு செய்தவாறு, பின்வரும் இனங்களை பரிசீலித்து, பரிந்துரைகளை அளித்திட அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

    1. வரி விகிதங்களை எளிமைப்படுத்தி வரி கட்டமைப்பினை சீரமைத்தல்.

    2. தற்போதைய வரி விகிதங்களை மறுஆய்வு செய்து வரி வருவாயினைப் பெருக்குவதற்கான வழிமுறைகளை ஆராய்தல்.

    இக்குழுவில் கர்நாடகா மாநில முதல்-மந்திரி ஒருங்கிணைப்பாளராகவும், பீகார், கோவா, கேரளா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காள மாநில அமைச்சர்கள் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.

    இக்குழுவில் தமிழ்நாடு உறுப்பினராக இடம் பெறவில்லை. இக்குழு தனது பரிந்துரைகளை அளித்த பின்னர், அப்பரிந்துரைகள் மீதான மாநில அரசுகளின் கருத்துகள் கேட்கப்பட்டன.

    அரிசி, தயிர், மோர் மற்றும் வெல்லம் உள்ளிட்ட உணவு பொருட்களின் மீதான வரி சாமானிய மக்களை பாதிக்கும் என்பதால் இவை மீதான வரி விதிப்பு குறித்த முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்ள இயலாது என தமிழ்நாடு அரசால் 20.06.2022 நாளிட்ட கடித எண் 12680/ஆ1 / 2021-இல் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றத்திற்கு எழுத்துப் பூர்வமாக உறுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதிகாரிகள் அளவில் நடைபெற்ற கூட்டங்களிலும் தமிழ்நாடு அரசின் பிரதிநிதியால் இதே கருத்து வலியுறுத்தப்பட்டது.

    2022 ஜூன் 28-ந் தேதி மற்றும் 29-ந் தேதிகளில் சண்டிகரில் நடைபெற்ற சரக்குகள் மற்றும் சேவைகள் மன்றத்தின் 47-வது கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட அமைச்சர்களின் குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட 56 பரிந்துரைகள் கொண்ட இடைக்கால அறிக்கை மன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது.

    இந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது அனைத்தையும் நிராகரிக்க வேண்டும் என்ற முடிவு சரக்குகள் மற்றும் சேவைகள் மன்றத்திற்கு முன்வைக்கப்பட்டது. விவாதத்திற்கு பின், அமைச்சர்கள் குழுவின் இடைக்கால அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    வரி விதிப்பு குறித்து மூன்று கட்டங்களில் இவ்வாறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதை ஒன்றிய நிதி அமைச்சரே குறிப்பிட்டு உள்ளார்.

    உண்மைநிலை இவ்வாறு இருக்க அரசியல் காரணங்களுக்காக பல்வேறு தவறான செய்திகளை சிலர் பரப்பி வருவது கண்டிக்கத்தக்கதாகும்.

    தமிழ்நாடு தனது எதிர்ப்பைத் தெரிவித்த பின்னரும், மாநில மற்றும் ஒன்றிய அரசுகளின் கருத்தொற்றுமை முடிவின் படி விதிக்கப்பட்டுள்ள வரியால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்த உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    ×