search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமராவதி அணை"

    • அமராவதி அணைக்கு தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் அதிகமான நீர்வரத்து பெரும்பாலான ஆண்டுகளில் கிடைத்து வந்துள்ளது.
    • அமராவதி ஆற்றில் குடிநீர் தேவைக்கென கடந்த காலங்களில் கூடுதலான தண்ணீர் திறப்பது நடைமுறையில் இருந்து வந்துள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன், செயலாளர் ஆர்.குமார் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உடுமலை அடுத்த மடத்துக்குளம் தாலுக்கா, அமராவதி ஆற்றில் அமைந்துள்ள அமராவதி அணை மூலம் மடத்துக்குளம் தாலுக்கா, தாராபுரம் தாலுக்கா மற்றும் கரூர் மாவட்டத்திலும்சேர்த்து பழையவாய்க்கால் பாசனம் மூலம் 25 ஆயிரம் ஏக்கரும், புதிய கால்வாய் மூலம் பாசனம் பெறும் பகுதியும் சேர்த்து 55 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி கிடைத்து வருகிறது. இதன் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டம் உட்பட நிலத்தடி நீரும் பெருகி ஓரளவுக்கு பயன்பெற்று வருகிறது. ஆனால் அமராவதி அணைக்கு தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் அதிகமான நீர்வரத்து பெரும்பாலான ஆண்டுகளில் கிடைத்து வந்துள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதுமான அளவு கிடைக்கப் பெறாத நிலையில் தேவையான நீரை விட மிகக் குறைந்த நீரே கிடைத்துள்ளது. இந்நிலையில் பாசனப்பகுதியில் தென்னை மரங்கள், நீண்ட கால பயிர்களும் இந்த ஆண்டு பயிரான கரும்பு உட்பட பயிர்கள், நீர் பற்றாக்குறையால் காயும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையும் துவங்க வேண்டிய காலத்தில் துவங்காத நிலை உள்ளதால் கடுமையான வறட்சி நிலவுகிறது. குறிப்பாக பிரதான கால்வாய் பகுதிகளில் உள்ள தென்னை மரங்கள் காய்ந்து கொண்டு வருகிறது. நீர் பற்றாக்குறையால் காய்ப்பு இழந்து கருகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் கால்நடைகளுக்கும், குடிநீருக்கும் தண்ணீரை டிராக்டர்களிலும் லாரிகளிலும் விலை கொடுத்து வாங்கி ஊற்றி வருகின்றனர். அமராவதி சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்த கரும்பு பயிர்களை காப்பாற்ற முடியுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேற்காணும் பயிர்களுக்கு உடனடியாக நீர் பாசனம் செய்ய வேண்டி உள்ளது. அமராவதி அணையில் 65 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பதால் உள்ள நீரை பயன்படுத்தி வறட்சியான நேரத்தில் வடகிழக்கு பருவமழை கிடைப்பதற்கு முன்னால் ஏற்பட்டுள்ள வறட்சி பாதிப்பை தடுத்திடவும், புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கும் பழைய பாசன பகுதிகளுக்கும் இருக்கிற நீரை பகிர்ந்து அளிக்க வேண்டும். அமராவதி ஆற்றில் குடிநீர் தேவைக்கென கடந்த காலங்களில் கூடுதலான தண்ணீர் திறப்பது நடைமுறையில் இருந்து வந்துள்ளது. இதன் மூலம் ஆற்றில் உள்ள சட்டவிரோதமான 1500 -க்கும் மேற்பட்ட பம்பு செட்டுகள் இந்நீரை பயன்படுத்தும் நிலைமையே இருந்து வந்துள்ளது. இதனால் பாசனம் பெற வேண்டிய பகுதிகள் பாதிப்புக்குள்ளாகிறது.

    ஆகவே, இந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவும் காலத்தில் ஆற்றிலிருந்து சட்டவிரோதமாக நீரை எடுக்கின்ற பம்பு செட்டுகளின் மின் இணைப்புகளை துண்டித்து அதன் மூலம் அபரிமிதமாக தண்ணீரை எடுப்பதை தடுத்து நிறுத்திட முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் , புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கும், பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கும் சமமான அளவில் நீர் திறக்கவும் செய்ய வேண்டும். தலா 800 கன அடி வீதம் குடிநீர் தேவை உட்பட திறக்க வேண்டுமெனவும், காலதாமதம் செய்யாமல் காய்ந்து வரும் நீண்ட கால பயிர்களான தென்னை, கரும்பு மற்ற பயிர்களை காப்பாற்ற உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும். வறட்சியான நேரத்தில் சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் சங்கத்தின் சார்பிலும், அப்பகுதி விவசாயிகளின் சார்பிலும் கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • அணையில் இருந்து பிரதான கால்வாய் வாயிலாக, புதிய ஆயக்கட்டு நிலங்களுக்கு பாசன நீர் வழங்கப்படுகிறது.
    • கால்நடைகளுக்கும், குடிநீர் தேவைக்கும், தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.

    உடுமலை:

    உடுமலை அமராவதி அணை புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 25,250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.அணையில் இருந்து பிரதான கால்வாய் வாயிலாக, புதிய ஆயக்கட்டு நிலங்களுக்கு பாசன நீர் வழங்கப்படுகிறது. இந்த பாசன பகுதியில் கரும்பு உள்ளிட்ட சாகுபடிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்தாண்டு போதிய மழை இல்லாத நிலையில் ஆயக்கட்டு பகுதியில் வறட்சி ஏற்பட்டுள்ளது.எனவே அணையிலிருந்து தண்ணீர் திறக்க விவசாயிகள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில், அமராவதி வடிநில கோட்ட செயற்பொறியாளரிடம் மனு கொடுத்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது:- பருவமழை பெய்யாததால் அமராவதி பிரதான கால்வாய் பகுதிகளில் வறட்சி நிலவுகிறது. நீண்ட கால பயிரான தென்னை மரங்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன.கால்நடைகளுக்கும், குடிநீர் தேவைக்கும், தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.

    அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பதிவு செய்து சாகுபடி செய்யப்பட்ட கரும்பை காப்பாற்ற உடனடியாக தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே அணையிலிருந்து பிரதான கால்வாயில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும்.

    அணையிலுள்ள தண்ணீரை புதிய ஆயக்கட்டு மற்றும் ஆற்றுப்பாசனத்துக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். கரூர் வரை தண்ணீர் சென்றடைய வேண்டுமானால், அணையிலிருந்து கரூர் வரை ஆற்றில் முறைகேடாக தண்ணீர் எடுக்கும் ஆயிரக்கணக்கான பம்ப் செட்களை குறிப்பிட்ட நாட்களுக்கு இயக்காமல் தடை செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    • கடந்த ஆண்டைவிட நடப்பாண்டு 8 மாதங்களில் 229.45 மி.மீ., மழை குறைந்துள்ளது.
    • பருவ மழைகள் குறைந்ததால் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணை உள்ளது. 90 அடி உயரம் கொண்ட இந்த அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன.

    பழைய ஆயகட்டு பகுதிகளுக்கு ஆற்று வழியாகவும் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு பிரதான கால்வாய் வழியாகவும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இது தவிர கல்லாபுரம், ராம குளம் வாய்க்காலிலும் ஆண்டு முழுவதும் தண்ணீர் திறக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரையில் தென்மேற்கு பருவமழை காலத்தில் பெய்யும் மழை அணைக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் தேனாறு, கூட்டாறு , சின்னாற்றில் கிடைக்கும் தண்ணீர் தூவானம் அருவி வழியாக அணைக்கு வந்து சேர்கிறது. வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையும் கணிசமான நீர்வரத்து இருக்கும்.

    இந்நிலையில் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவு எட்ட வில்லை. கடந்த ஆண்டு இதே நாளில் 88.19 அடிக்கு நீர்மட்டம் இருந்தது .தொடர்ந்து 40 நாட்களுக்கும் மேலாக அணையில் முழு கொள்ளளவில் நீர்மட்டம் இருந்தது. 700 கன அடிக்கும் மேல் உபரிநீர் திறந்து விடப்பட்டது.

    தற்போது அணையில் 55.88 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. 250 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 259 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், அணையில் தற்போது 55 அடிக்கு அதிகமாக நீர்மட்டம் இருந்தாலும் இது போதுமானதாக இல்லை . இந்த மாதத்தில் அணை நிரம்பி வழிந்து இருக்க வேண்டும். தென்மேற்கு பருவமழை இனி பெய்யுமா என தெரியவில்லை. பெய்தாலும் அணை நிரம்புவது கடினம்தான். இன்னும் ஓராண்டுக்கு தாக்கு பிடிக்க வேண்டும். தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் வெளியேற்றும் போது நீர்மட்டம் வெகுவாக குறைந்து விடும். கோடைகாலத்தில் வறண்ட நிலைக்கு சென்று விடும். இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. அமராவதி அணையை நம்பி உள்ள நெல், கரும்பு விவசாயிகளும் பாதிக்கப்படுவர். எனவே சாகுபடி குறைய வாய்ப்புள்ளது என்றனர்.

    அமராவதி அணைப்பகுதியில் ஜனவரி - பிப்ரவரி மாதத்தில் நடப்பாண்டு ஒரே நாள் மட்டும் 7.75 மி.மீ., மழை பெய்தது. அதே போல் மார்ச் முதல் மே வரையிலான கோடை கால மழை பொழிவு 156.04 மி.மீ., மட்டுமே பெய்துள்ளது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென் மேற்கு பருவ மழை காலத்தில் கடந்த ஆண்டு 266.19 மி.மீ., மழை கிடைத்துள்ளது. ஆனால் நடப்பாண்டு ஜூன் 14.73 மி.மீ., ஜூலை 12.76 மி.மீ., ஆகஸ்டு 6.24 மி.மீ., என இதுவரை 33.76 மி.மீ.,மழை மட்டுமே கிடைத்துள்ளது. கடந்த ஆண்டைவிட நடப்பாண்டு 8 மாதங்களில் 229.45 மி.மீ., மழை குறைந்துள்ளது.

    இது குறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    பருவ மழைகள் குறைந்ததால் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது. அணைகளின் நீர்மட்டமும் பெருமளவு குறைந்து காணப்படுகிறது. இதனால் வேளாண் பயிர் சாகுபடி துவக்குவதிலும், நிலைப்பயிர்களை காப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    செப்டம்பர் மாதத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் கணித்துள்ளது. அடுத்து அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வட கிழக்கு பருவ மழை காலத்தில் கடந்த ஆண்டு 399.48 மி.மீ., மழை கிடைத்துள்ளது. இதனை விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    • கோடை காலத்தில் யானைகள் இடம் பெயர்வது அதிக அளவில் இருக்கும்.
    • ஒற்றை யானை கோபமாக இருக்கும் என்பதால் வாகன ஓட்டிகள் தொந்தரவு செய்யக்கூடாது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் சாலையில் அமராவதி ஒன்பதாறு சோதனை சாவடியில் இருந்து சின்னாறு வரை சாலையின் இருபுறமும் அமராவதி- உடுமலை வனச்சரகங்கள் உள்ளன. இங்கு ஏராளமான யானைகள், மான்கள், காட்டெருமைகள், சிறுத்தைகள், கரடிகள் உள்ளன. உடுமலை வனச்சரகத்தில் இருந்து அவ்வப்போது யானைகள் தண்ணீர் குடிப்பதற்காக மூணாறு சாலையை கடந்து அமராவதி அணைக்கு செல்வது வழக்கம். கோடை காலத்தில் யானைகள் இடம் பெயர்வது அதிக அளவில் இருக்கும்.

    மழைக்காலங்களில் வனத்திலேயே குளம் குட்டைகளில் தண்ணீர் கிடைப்பதால் யானைகள் சாலையை கடந்து செல்வது குறைவாக இருக்கும். பெரும்பாலும் ஒன்பதாறு - சின்னார் சோதனை சாவடிக்கு இடையில் உள்ள 13 கிலோமீட்டர் தூரத்தில் ஏழுமலையான் கோவில் பிரிவு, காமனூத்துப்பள்ளம், புங்கனோடை ஆகியவை யானைகள் இடம்பெயரும் முக்கிய வழித்தடமாக உள்ளன.

    மேலும் யானைகள் செல்லும்போது சாலையில் சிறிது நேரம் நின்று செல்கின்றன. தற்போது மழை பொழிவு குறைவு காரணமாக வனத்தில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதிக அளவில் யானைகள் உடுமலை- மூணாறு சாலையை கடந்து செல்ல தொடங்கி உள்ளன.

    மேலும் கடந்த சில நாட்களாக ஒற்றை யானை ஏழுமலையான் கோவில் பகுதி சாலையில் சுற்றி திரிகிறது. ஒற்றை யானை கோபமாக இருக்கும் என்பதால் வாகன ஓட்டிகள் தொந்தரவு செய்யக்கூடாது. ஒலி எழுப்பக் கூடாது ,வாகனத்தில் இருந்து இறங்கி செல்பி எடுக்கக் கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    • 7,520 ஏக்கர் நிலங்களில் குறுவை நெல் சாகுபடிக்கு கடந்த ஜூன் முதல் நீர் வழங்கப்படுகிறது.
    • நடப்பாண்டு பருவ மழைகள் குறைந்து நீர்வரத்து பெருமளவு குறைந்துள்ளது.

    உடுமலை:

    உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.இதில் பழைய ஆயக்கட்டு பாசனம் கல்லாபுரம், ராமகுளம், கொமரலிங்கம், கண்ணாடிப்புத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு ஆகிய 8 ராஜவாய்க்கால்களுக்குட்பட்ட 7,520 ஏக்கர் நிலங்களில் குறுவை நெல் சாகுபடிக்கு கடந்த ஜூன் முதல் நீர் வழங்கப்படுகிறது.

    அமராவதி அணை 4 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டதாகவும், தென் மேற்கு மற்றும் வட கிழக்கு பருவ மழைகள் என ஆண்டுக்கு 10 டி.எம்.சி., நீர் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது.நடப்பாண்டு அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தென் மேற்கு பருவ மழை தீவிரமடையவில்லை. பருவ மழை ஏமாற்றி வரும் நிலையில் அணைக்கு நீர்வரத்து இல்லை.கடந்த ஆண்டு ஜூலை 15ல் அணை நிரம்பி 8 மாதம் வரை ததும்பிய நிலையில் காணப்பட்டது. நடப்பாண்டு கடும் வறட்சி நிலை காணப்படுகிறது.இதனால் அமராவதி பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு நடப்பாண்டு பாசனத்திற்கு நீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    அமராவதி புதிய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவில் 25,250 ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு இரு முறை உயிர்த்தண்ணீர் வழங்கப்பட்டது. கடந்த 8ந் தேதி திறக்கப்பட்டு 10 நாட்கள் நீர் வழங்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டது.

    அதே போல் அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தில் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் தாராபுரம், கரூர், அரவக்குறிச்சி தாலுகாவில் அலங்கியம் முதல் கரூர் வரை 10 பழைய வாய்க்கால் பாசனத்துக்கு உட்பட்ட 21 ஆயிரத்து 867 ஏக்கர் நிலங்களும் பயன்பெற்று வருகின்றன. நடப்பாண்டு 10 நாட்கள் மட்டும் உயிர்த்தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலங்களுக்கு வழக்கமாக ஆகஸ்டு - செப்டம்பர் மாதங்களில் பாசனம் துவக்கப்பட்டு ஜனவரி வரை நீர் வழங்கப்படும்.நடப்பாண்டு அணை நீர்மட்டம் மிகவும் குறைவாக உள்ளதால் கரூர் வரை உள்ள வலது கரை கால்வாய் பழைய ஆயக்கட்டு பாசன நிலங்கள் மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு நடப்பாண்டு நீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    மேலும் 8 ராஜவாய்க்கால் பாசன நிலங்களுக்கு, இரண்டாம் போகம் சம்பா சாகுபடிக்கும் நீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், நடப்பாண்டு பருவ மழைகள் குறைந்து நீர்வரத்து பெருமளவு குறைந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு பின் வறட்சி ஏற்பட்டுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து நீர் வரத்து அதிகரித்தால் மட்டுமே பாசனத்திற்கு நீர் திறக்க முடியும் என்றனர்.

    அமராவதி அணையில் தற்போதையை நிலவரப்படி, மொத்தமுள்ள 90 அடியில் 56.66 அடியாக உள்ளது. மொத்த கொள்ளளவான 4,047 மில்லியன் கன அடியில், 1,528.66 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 50 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து 740 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு இதே நாளில், அமராவதி அணை நீர்மட்டம் 87.9 அடியாகவும், நீர்இருப்பு 3,857 மில்லியன் கனஅடியாகவும் இருந்தது. நடப்பாண்டு நீர்இருப்பு பெருமளவு குறைந்து காணப்படுகிறது.

    • மாலை, இரவு நேரங்களில் அமராவதி அணைக்கு செல்வதற்கு யானைகள் கூட்டமாக ரோட்டை கடக்கின்றன.
    • வாகன ஓட்டுனர்கள் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை -மூணாறு சாலையில் கடந்த சில நாட்களாக யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    மாலை மற்றும் இரவு நேரங்களில் குட்டியுடன் யானைகள் கூட்டம் கூட்டமாக நீர் தேடி அமராவதி அணைக்கு வருகின்றன. ஏழுமலையான் கோவில் சுற்று, யானைக்காடு எஸ். வளைவு பகுதிகளில் யானைகள் கூட்டமாக கடந்து செல்கின்றன.

    2 நாட்களுக்கு முன்பு இரவு கேரள மாநில அரசு பஸ் மற்றும் வாகனங்களை யானைகள் வழிமறித்துள்ளன. அதிர்ஷ்டவசமாக எந்த பாதியும் ஏற்படவில்லை. அதேபோல் காட்டுமாடு, மான் உள்ளிட்ட வனவிலங்குகளும் அதிக அளவு தென்படுகின்றன. எனவே வாகன ஓட்டுனர்கள் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், உடுமலை-மூணாறு ரோட்டில் வாகன போக்குவரத்து அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் நீர் தேடி யானை உள்ளிட்ட வனவிலங்குகள் இடம்பெயர்ந்து வருகின்றன.

    மாலை, இரவு நேர ங்களில் அமராவதி அணைக்கு செல்வதற்கு யானைகள் கூட்டமாக ரோட்டை கடக்கின்றன. ரோட்டில் வன விலங்குகள் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    யானைகள் இருந்தால் சோதனை சாவடியில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. யானைகள் சென்ற பின் வாகனங்கள் அனுப்பிவைக்கப்படுகிறது. வாகனங்களில் செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தி அனுப்புகிறோம் என்றனர்.

    • திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
    • குடிநீர் மற்றும் கருகும் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்றும் வகையில் அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற நீராதாரங்களை கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது.

    தமிழகம் மற்றும் கேரளா மாநில வனப்பகுதியில் உற்பத்தியாகும் சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகள் மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்தை அளிக்கிறது. அதை ஆதாரமாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    இந்தநிலையில் அணையின் நீராதாரங்களான கேரளா மாநிலத்தில் உள்ள மூணார், காந்தலூர், மறையூர் உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக ஆறுகள் மூலமாக அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது. இதனால் 48.17 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் 50.20 அடியாக உயர்ந்து ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது.

    குடிநீர் மற்றும் கருகும் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்றும் வகையில் அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக அணையில் நீர் இருப்பு வேகமாக சரிந்து வந்தது. இந்த சூழலில் மழை பெய்து நீர் வரத்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அணைக்கு வினாடிக்கு 12 கன அடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    • திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
    • 380.16 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டது.

    உடுமலை:

    உடுமலை அடுத்த மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதிஅணை உள்ளது.அணைக்கு மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற தேனாறு, பாம்பாறு,சின்னாறு உள்ளிட்டவை பிரதான நீராதாரங்களாக உள்ளன .அவற்றின் மூலமாக மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது. அதை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை ஆதாரமாகக்கொண்டு சுற்றுப்புற கிராம மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இன்னும் தொடங்கவில்லை. இதன் காரணமாக பாசன பரப்புகளில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. அத்துடன் அமராவதி ஆறு பிரதான கால்வாயை ஆதாரமாக கொண்ட குடிநீர் திட்டங்களும் முடங்கும் சூழல் ஏற்பட்டது.

    அதைத்தொடர்ந்து அமராவதிஆறு, பிரதான கால்வாய் பாசனப்பகுதியில் கருகும் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்றவும், குடிநீர் தேவையை போக்கவும் தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் அதிகாரிகள் தண்ணீர் திறப்பதற்கு உண்டான கருத்துரு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்தனர். அதன் பேரில் அரசு தண்ணீர் திறக்க உத்தரவிட்டது.

    அமராவதி ஆற்றை பிரதானமாக கொண்டுள்ள 10 வாய்க்கால் பாசனப்பகுதிகளில் உள்ள பயிர்களை காப்பாற்றும் வகையிலும் குடிநீர் தேவைக்காகவும் 1002.24 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. அதேபோன்று பிரதான கால்வாயை ஆதாரமாகக் கொண்ட புதிய பாசன பகுதியில் உள்ள பயிர்களை காப்பாற்றும் வகையிலும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் 380.16 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டது.

    இதையடுத்து தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நேற்று அமராவதி அணையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பொத்தானை அழுத்தி தண்ணீர் திறந்து வைத்தனர். அதைத் தொடர்ந்து அமராவதி ஆற்று சட்டர்கள் மற்றும் பிரதான கால்வாய் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது.அதில் அனைவரும் மலர் தூவி வரவேற்றனர்.

    ஜூலை 9-ந் தேதி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.இதன் மூலம் பாசன பெறுகின்ற பழைய வாய்க்கால்களில் 21 ஆயிரத்து 867 ஏக்கரும் பிரதான கால்வாய் மூலம் பாசனம் பெறுகின்றன. புதிய பாசனத்தில் 25 ஆயிரத்து 250 ஏக்கரும் என மொத்தம் 47ஆயிரத்து 117 ஏக்கர் நிலங்கள் பயன் பெறுகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், உடுமலைஒன்றியக் குழு தலைவர் மகாலட்சுமி முருகன்,ஒன்றிய செயலாளர்கள் செழியன், செந்தில்குமார்,எஸ்.கே.தங்கராஜ் என்ற மெய்ஞானமூர்த்தி, உடுமலை நகர மன்ற தலைவர் மத்தீன், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ஒவ்வொரு பகுதிகளில் ஒரு யானைக்கூட்டம் என ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான யானைகள் அணைக்குள் காணப்படுகின்றன.
    • ஆண்டு தோறும் இந்த சமயத்தில் யானைகள் வருகை அதிக அளவு காணப்படும்.

    உடுமலை:

    ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட திருப்பூர் வனக்கோட்டம் அமராவதி, உடுமலை, கொழுமம், வந்தரவு வனச்சரகங்கள் அரிய வகை விலங்குகள் வசிக்கும் பகுதியாக உள்ளது.வனப்பகுதிகளில் வறட்சி, தென்மேற்கு பருவ மழை தொடங்க தாமதம் காரணமாக காடுகளில் உள்ள ஓடைகள், சிற்றாறுகள் வறண்டு காணப்படுகின்றன.

    இதனால் குடிநீர் மற்றும் உணவுக்காக அமராவதி அணைக்கு யானைக்கூட்டங்கள் படையெடுத்து வருகின்றன. அணையிலும் நீர் இருப்பு குறைந்து புல்வெளிகளாக, நிலப்பகுதிகளாக காணப்படுகிறது. ஒவ்வொரு பகுதிகளில் ஒரு யானைக்கூட்டம் என ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான யானைகள் அணைக்குள் காணப்படுகின்றன.

    உடுமலை - அமராவதி வனச்சரகங்களுக்கு மத்தியில் உடுமலை - மூணாறு சாலை காணப்படுகிறது. இந்த சாலையில் போக்குவரத்து அதிகம் உள்ள நிலையில் காலை, மாலை நேரங்களில் யானைக்கூட்டங்கள், ஒவ்வொன்றாக இந்த சாலையை கடக்கின்றன.

    மேலும் சாலையோரத்தில் உள்ள வனப்பகுதிகளிலும் நிற்கின்றன. இதனால் வாகன ஓட்டுனர்கள் எச்சரிக்கையாக செல்லுமாறு வனத்துறை சோதனை சாவடிகளில் அறிவுறுத்தப்படுவதோடு வனத்துறையினர் ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ஆண்டு தோறும் இந்த சமயத்தில் யானைகள் வருகை அதிக அளவு காணப்படும். யானைகள் நடமாட்டம் குறித்து கண்காணிக்கப்படுகிறது. மூணாறு சாலையிலும் ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது என்றனர்.

    • மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாக அமராவதி அணை அமைந்துள்ளது.
    • அணையில் படகு சவாரியும் துவக்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாக அமராவதி அணை அமைந்துள்ளது. பொதுப்பணித்துறை சார்பில் அணைக்கரையில் பூங்காவும் அமைக்க ப்பட்டுள்ளது. கேரளாவிலுள்ள முக்கிய சுற்றுலா தலமான மூணாறுக்கு செல்லும் வழியில் இருப்பதால் அமராவதி அணை பூங்காவுக்கும், சுற்றுலா பயணிகளிடையே முன்பு வரவேற்பு இருந்தது.

    எனவே அப்பகுதியில் முதலை பண்ணை, அரிய வகை கள்ளிச்செடிகளை உள்ளடக்கிய கள்ளிப்பூங்கா, உயிரியல் பூங்கா, மலைவாழ் மக்களுக்கான விற்பனையகம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா அம்சங்கள் மேம்படுத்த ப்பட்டது. அணையில் படகு சவாரியும் துவக்கப்பட்டது.இவ்வாறு வார விடுமுறை நாட்களிலும் கோடை விடுமுறையின் போதும் பிசியாக இருந்த அமராவதி அணை மற்றும் பூங்கா தற்போது எட்டிப்பார்க்க ஆளில்லாமல் பரிதாப நிலையில் உள்ளது. காரணம் அணை பூங்காவில் பசுமை காணாமல் போய் நீருற்றுகள், நடைபாதை, சிலைகள் அனைத்தும் உடைந்து உள்ளே செல்லவே பயப்பட வேண்டியுள்ளது.

    உயிரியல் பூங்காவில் பறவைகள், விலங்குகள் எதுவும் இல்லாமல் வெறும் கட்டடம் மட்டுமே காணப்படுகிறது. சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து மாயமாகி உள்ளது.அணை பூங்காவை பராமரித்து மேம்படுத்த வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    குறிப்பிட்ட இடைவெளியில் பொதுப்பணித்துறைக்கு ஒதுக்கப்படும் குறைந்த அளவு நிதியிலும் எவ்வித முறையான பணிகளும் மேற்கொள்ளப்படுவதில்லை.ஒவ்வொரு முறையும் அமராவதிக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிய சுற்றுலா பயணிகள் தற்போது அப்பகுதிக்கு செல்வதை தவிர்த்து விடுகின்றனர்.இனியாவது திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அணை பூங்காவை மேம்படுத்தவும், படகு சவாரி விடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • பொதுப்பணித்துறை சார்பில் அணைக்கரையில் பூங்காவும் அமைக்க ப்பட்டுள்ளது.
    • உயிரியல் பூங்காவில் பறவைகள், விலங்குகள் எதுவும் இல்லாமல் வெறும் கட்டடம் மட்டுமே காணப்படுகிறது.

    உடுமலை:

    உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாக அமராவதி அணை அமைந்துள்ளது. பொதுப்பணித்துறை சார்பில் அணைக்கரையில் பூங்காவும் அமைக்க ப்பட்டுள்ளது. கேரளாவிலுள்ள முக்கிய சுற்றுலா தலமான மூணாறுக்கு செல்லும் வழியில் இருப்பதால் அமராவதி அணை பூங்காவுக்கும், சுற்றுலா பயணிகளிடையே முன்பு வரவேற்பு இருந்தது.

    எனவே அப்பகுதியில் முதலை பண்ணை, அரிய வகை கள்ளிச்செடிகளை உள்ளடக்கிய கள்ளிப்பூங்கா, உயிரியல் பூங்கா, மலைவாழ் மக்களுக்கான விற்பனையகம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா அம்சங்கள் மேம்படுத்த ப்பட்டது. அணையில் படகு சவாரியும் துவக்கப்பட்டது.இவ்வாறு வார விடுமுறை நாட்களிலும் கோடை விடுமுறையின் போதும் பிசியாக இருந்த அமராவதி அணை மற்றும் பூங்கா தற்போது எட்டிப்பார்க்க ஆளில்லாமல் பரிதாப நிலையில் உள்ளது. காரணம் அணை பூங்காவில் பசுமை காணாமல் போய் நீருற்றுகள், நடைபாதை, சிலைகள் அனைத்தும் உடைந்து உள்ளே செல்லவே பயப்பட வேண்டியுள்ளது.

    உயிரியல் பூங்காவில் பறவைகள், விலங்குகள் எதுவும் இல்லாமல் வெறும் கட்டடம் மட்டுமே காணப்படுகிறது. சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து மாயமாகி உள்ளது.அணை பூங்காவை பராமரித்து மேம்படுத்த வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    குறிப்பிட்ட இடைவெளியில் பொதுப்பணித்துறைக்கு ஒதுக்கப்படும் குறைந்த அளவு நிதியிலும் எவ்வித முறையான பணிகளும் மேற்கொள்ளப்படுவதில்லை.ஒவ்வொரு முறையும் அமராவதிக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிய சுற்றுலா பயணிகள் தற்போது அப்பகுதிக்கு செல்வதை தவிர்த்து விடுகின்றனர்.இனியாவது திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அணை பூங்காவை மேம்படுத்தவும், படகு சவாரி விடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • பி.ஏ.பி. பாசன திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
    • கடந்த சில நாட்களாக கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகள் கட்டப்பட்டு உள்ளது. வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற நீராதாரங்கள் அணைகளுக்கு நீர்வரத்தை அளித்து வருகிறது. அதை அடிப்படையாகக்கொண்டு திருமூர்த்தி அணை மூலமாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பி.ஏ.பி. பாசன திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    அதே போன்று அமராவதி அணை மூலமாக பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

    இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள நீராதாரங்கள் நீர்வரத்து இல்லாமல் வறண்டு விட்டது. அணைகளுக்கு வந்து கொண்டுள்ள தண்ணீரும் முற்றிலுமாக நின்று விட்டது. இதனால் நீர்வரத்து இல்லாமல் அணைகள் வறண்டு வருகிறது. ஆங்காங்கே மண் திட்டுக்களாக தோற்றம் அளித்து வருகிறது.

    கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்வதற்கு உண்டான சூழல் நிலவி வருகிறது. இதனால் விவசாயிகள் பருவ மழையை எதிர்பார்த்து உள்ளனர்.

    ×