search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "western ghats"

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக அடியானது குண்டாறு அணையும் நிரம்பியது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று தென்காசி, குற்றாலம் பகுதிகளில் கனமழை பெய்தது. தென்காசியில் அதிகபட்சமாக 15 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் குற்றால அருவிகளில் நேற்று மாலை முதல் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மெயினருவி, ஐந்தருவியில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இன்று காலை ஓரளவு தண்ணீர் குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இதுபோல பழையகுற்றால அருவி, புலியருவி உள்பட அனைத்து அருவிகளிலும் இன்று நன்றாக தண்ணீர் விழுந்தது.

    நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டாறு பகுதியில் 82 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. அடவிநயினார் அணைப்பகுதியிலும் 16 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. மழை காரணமாக நெல்லை மாவட்ட அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    பாபநாசம் அணைப் பகுதியில் இன்று காலை வரை 1 மில்லிமீட்டர் மழையே பதிவாகியுள்ளது. ஆனாலும் அணைக்கு வினாடிக்கு 628 கனஅடி தண்ணீர் வருகிறது. கீழ்அணையில் இருந்து 275 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் நேற்றை விட ஒரு அடி உயர்ந்து இன்று 67.50 அடியாக உள்ளது. சேர்வலாறு அணைப்பகுதியில் 4 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் அணைக்கு வினாடிக்கு 693 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்து இன்று 113.35 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 412 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 45 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் சற்று கூடி இன்று 83.90 அடியாக உள்ளது. கடனாநதி அணைநீர்மட்டம் 61.50 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 71 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 71.20 அடியாகவும் இன்று உயர்ந்துள்ளது.

    அடவிநயினார் அணைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து இன்று 109 அடியாக உள்ளது. வடக்கு பச்சையாறு மற்றும் நம்பியாறு அணைகளில் நீர்மட்டம் தொடர்ந்து அதே நிலையில் நீடிக்கிறது.

    நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே கொடுமுடியாறு அணை நிரம்பி வழிகிறது. அங்கு முழுகொள்ளளவான 52.50 அடி தண்ணீர் உள்ளது. நேற்று இரவு முதல் இன்று காலை வரை குண்டாறு அணைப்பகுதியில் இடைவிடாமல் கனமழை கொட்டியது. 82 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று குண்டாறு அணையில் 33.13 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் மளமளவென்று 3 அடி உயர்ந்து முழுகொள்ளளவான 36.10 அடியை இன்று காலை எட்டியது. இதனால் அணைக்கு வரும் நீர் வழிந்தோடி ஆற்றில் செல்கிறது.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

    குண்டாறு    - 82
    அடவிநயினார் - 16
    தென்காசி    - 15
    செங்கோட்டை - 5
    சேர்வலாறு - 4
    சிவகிரி - 2
    பாபநாசம் - 1

    குற்றால மலைப்பகுதியில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்வதால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    தென்காசி:

    குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் சீசன் காலமாகும். குற்றா லத்தில் இந்த ஆண்டுக்கான சீசன் ஒரு வாரத்துக்கு முன்பு தொடங்கியது. சீசன் தொடங்கிய 4 நாட்கள் கழித்து, சாரல் மழை இல்லாமல் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் கூட்டமும் குறைவாகவே இருந்தது.

    இதற்கிடையே குற்றாலத்தில் தற்போது சாரல் மழை பெய்து வருகிறது. இடையிடையே இதமான வெயிலும் அடிக்கிறது. குளிர்ந்த காற்று வீசுகிறது. சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் தொடங்கினாலும் குற்றாலத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் அதிகமாக விழுவதால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்கின்றனர். மெயின் அருவியை போன்று பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது.

    ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சாரல் மழை பெய்து கொண்டே இருந்ததால் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என்று ஐந்தருவியில் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

    அருவியில் விழும் தண்ணீரின் அழகை ரசிப்பதற்காகவே சுற்றுலா பயணிகள் ஐந்தருவிக்கு வந்து சென்றனர். மாலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். சாரல் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததால் இரவில் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என்று மாலையில் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நேற்று மாலை முதல் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்வதால் தொடர்ந்து இன்று காலை வரை சுற்றுலா பயணிகள் குளிக்க தடை தொடர்ந்தது. இன்று காலையும் குற்றால மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    மெயினருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் விழுந்தது. ஐந்தருவியின் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுவதாலும், சாரல் மழையுடன் குளிர்ந்த காற்றும் வீசுவதால் இன்னும் ஒருசில நாட்களில் குற்றாலத்தில் சீசன் களை கட்டும் என்று அங்குள்ள வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இன்று (சனிக்கிழமை) விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.


    மேற்குத்தொடர்ச்சி மலையோர பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக குற்றாலம் மெயினருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. #Courtallam
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையோர பகுதிகளான தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலான மழை பெய்து வருகின்றது. இன்று காலை முதல் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகமானது.

    மாலை அதிகளவில் தண்ணீர் கொட்டியதன் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி போலீசார் குளிக்க தடை விதித்தனர். இதனால், அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்து மற்ற அருவிகளுக்கு சென்றனர்.
    மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையினால் களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
    களக்காடு:

    கேரளாவில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக கேரளாவை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.

    களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையினால் அங்குள்ள நீர்நிலைகளில் தண்ணீர் வர தொடங்கியுள்ளது. களக்காடு மலையில் உள்ள தலையணையில் ஏற்கனவே கோடை வெயிலால் தண்ணீர் வற்றி வந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையினால் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. அங்குள்ள தடுப்பணையை தாண்டி தண்ணீர் ஓடுகிறது. குளிர்ந்த காற்றும் வீசுகிறது.

    இதையடுத்து தலையணைக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். நேற்று நாகர்கோவில், உவரி கேரளா, மார்த்தாண்டம், குலசேகரம், பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். தண்ணீர் அதிகளவில் செல்வதால் தடுப்பணை அருகே சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் ஆற்றின் ஓரமாக நின்று குளித்தனர்.

    இதைத் தொடர்ந்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனரும், வன உயிரின காப்பாளருமான ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவின் படி வனசரகர் புகழேந்தி மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். சாரல் மழை பெய்து வருவதையடுத்து களக்காட்டில் ஓடும் நாங்குநேரியான் கால்வாய், பச்சையாறு, உப்பாற்றிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    சாரல் மழை காரணமாக தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
    ×