search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Srirangam Renganathar"

    • அரங்கன் மனித பிறவியில் உயர்வு தாழ்வு பார்த்ததில்லை.
    • முகமதிய பெண்மணிக்கும் அருள்பாலித்தவன் அரங்கன்.

    ஸ்ரீரங்கத்து அரங்கன் அனைவருக்கும் பொதுவானவர். இவர் மனித பிறவியில் உயர்வு தாழ்வு பார்த்ததில்லை. ஏன், மதங்களிடையே வேறுபாடு கண்டதில்லை. அனைவரையும் அரவணைத்து செல்லும் பேரருளாளர் இவர். இந்த பிரமாண்ட ஆலயத்தின் இரண்டாவது பிரகாரத்தில் அமைந்திருக்கும் துலுக்க நாச்சியார் சன்னதி, புதிதாக வருபவர்களை வியப்பில் ஆழ்த்தும்.

    ஆமாம், முகமதிய பெண்மணிக்கும் அருள்பாலித்தவன் இந்த அரங்கன். கண்ணன் அடிதொழ ஜாதி வேண்டாம், மதம் வேண்டாம், அன்பு ஒன்றே போதும் என நிரூப்பித்த சம்பவம் இது. முகலாயர்களின் முதல் படையெடுப்பின் போது இந்த ஸ்ரீரங்கத்திருத்தலம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

    சுல்தானின் படைகள் திருவரங்கத்தை நெருங்குவதை அறிந்து கொண்ட பக்தர்கள், மூலஸ்தானத்துக்கு முன்பாக ஒருதற்காலிக சுவற்றை எழுப்பி அதன் முன் உற்சவரான நம்பெருமாளை வைத்து விடுகின்றனர். கோவிலை சூறையாட வந்த மாலிக் கபூரின் படையினர் உற்சவர் நம்பெருமாளின் விக்ரகத்தை டெல்லிக்கு தூக்கி சென்று விடுகின்றனர்.

    அந்த விக்ரகத்தை பார்த்த சுல்தானின் மகள், அதை தன் அறையிலேயே வைத்துக் கொண்டாள். அது மட்டுமல்லாமல் அந்த அரங்கனை அவள் உளமார நேசிக்கவும் ஆரம்பித்தாள். திருவரங்கத்து வாழ் பெரியோர்கள் நம்பெருமாளை எப்படி மீட்பது என ஆலோசித்தனர்.

    கசன்பி பாதுஷாவிற்கு ஆடல், பாடல் என்றால் மிகவும் விருப்பம் என்று அறிந்தனர். அதில் சிறந்தவர்களில் 60 பேர் பாதுஷாவின் மாளிகைக்கு சென்றனர். புகழ் பெற்ற ஜக்கிந்தி நடனம் ஆடினார்கள். மனம் மகிழ்ந்த பாதுஷா நிறைய பரிசுகள் வழங்கினார். அதை வேண்டாம் என்று கூறிய நடன குழுவினர் எங்கள் அரங்கன் சிலையை பரிசாக தாருங்கள் என்று கேட்டனர்.

    வெறும் சிலையை மட்டும் கேட்கிறார்களே என வியந்த பாதுஷா, அந்தப்புரத்தில் இருந்து எடுத்துக் கொள்ள கூறினார். சுரதாணிக்கு தெரியாமல் அவர்கள் அரங்கன் சிலையை கொண்டு வந்துவிட, சுரதாணி அரங்கனைக் காணாமல் அழுது புலம்பினாள். அவளின் நிலையை கண்ட பாதுஷா அரங்களை மீட்டு வருமாறு வீரர்களை அனுப்பினார். அரங்கனை காண வேண்டும் எனும் ஆசையில் சுல்தாணியும் படைகளோடு சென்றாள்.

    படை வருவதை அறிந்த நாட்டிய குழுவினர், அரங்கனை எடுத்துக் கொண்டு திருமலை காட்டுப்பகுதியில் மறைத்து வைத்தார்கள். வீரர்களுடன் திருவரங்கம் வந்த சுல்தாணி அரங்கனைக் காணாமல் மிகுந்த துயரம் அடைந்தாள். துக்கம் தாங்காமல் கோவிலின் முன் மயங்கி விழுந்து உயிர் துறந்தாள். அப்போது அங்கு அரங்கனின் விஸ்வரூபம் தோன்றியது. சுரதாணியின் உடலில் இருந்து ஒரு துளி கிளம்பி அரங்கனின் திருமேனியில் ஐக்கியம் அடைந்தது.

    பல்லாண்டு காலம் திருமலையில் மறைத்து வைக்கப்பட்ட அரங்கன், ஒருசோழ மன்னனால் திருவரங்கம் கொண்டுவரப்பட்டு மறுபடியும் பிரதிஷ்டை செய்யப்பட்டார்.

    சோழனின் கனவில் தோன்றி சுரதாணிக்கு ஒரு சன்னிதி அமைக்கும்படி அரங்கன் கூறினான். அதன்படி சோழ மன்னன், அரங்கன் கருவறைக்கு வடகிழக்கு மூலையில் ஒரு சன்னிதி அமைத்து, அதில் சித்திர வடிவில் சுரதாணியின் வடிவை தீட்டச் செய்தான்.

    இன்றும் கோவில் இரண்டாம் பிரகார வடகீழ் மூலையில் சித்திர வடிவில் சுரதாணி காட்சி அளிக்கிறார். இன்றும் நம்பெருமாளுக்கு ஏகாதசி அமாவாசை நாட்களில் லுங்கி அணிவித்து துலுக்க நாச்சியாருக்கு நைவேத்தியம் படைக்கப்பட்ட பிறகு அரங்கனுக்கு படைக்கப்படுகிறது. அரங்கனை தரிசிக்கும் போது மறக்காமல் அன்னை துலுக்க நாச்சியாரையும் தரிசிக்கின்றனர் பக்தர்கள்.

    • இறைவனை வழிபட்டு விரதத்தைத் தொடங்க வேண்டும்.
    • ஏகாதசி திதி முழுவதும் உணவு உட்கொள்ளாமல் இருக்க வேண்டும்.

    வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருக்க முடியாதவர்கள், வைகுண்ட ஏகாதசியிலாவது விரதம் இருந்தால் சிறப்பான பலனை அடையலாம்.

    சிறப்பு மிகுந்த ஏகாதசி விரதம் இருப்பவர்கள், ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒரு வேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும். ஏகாதசி அன்று அதிகாலையில் கண் விழித்து நீராடிவிட்டு, இறைவனை வழிபட்டு விரதத்தைத் தொடங்க வேண்டும். ஏகாதசி திதி முழுவதும் உணவு உட்கொள்ளாமல் இருக்க வேண்டும். குளிர்ந்த நீரை மட்டும் பருகலாம்.

    மேலும் 7 முறை துளசி இலையை மட்டும் சாப்பிடலாம். குளிர்ந்த நீர், வயிற்றை சுத்தமாக்குகிறது. துளசி இலை வெப்பம் தரக்கூடியது. ஏகாதசி விரதம் இருப்பது மார்கழி மாதமான குளிர்காலம் என்பதால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை உட்கொள்ள வேண்டும்.

    முழு நாளும் உணவருந்தாமல் இருக்க முடியாதவர்கள், நெய், காய்கனிகள், பழங்கள், நிலக்கடலை, பால், தயிர் போன்றவற்றை இறைவனுக்கு படைத்து உண்ணலாம்.

    இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும், விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் மற்றும் துதி முதலியவற்றை ஓதுவதுமாக இரவுப் பொழுதை உறங்காது கழிக்க வேண்டும். மறுநாள் துவாதசி அன்று அதிகாலையில் உணவு அருந்துவதை `பாரணை' என்கிறார்கள்.

    உப்பு, புளிப்பு போன்ற சுவை இல்லாத உணவாக நெல்லிக்கனி, சுண்டைக்காய், அகத்திக்கீரை போன்றவற்றைச் சேர்த்து சாப்பிட்டு விரதத்தை முடிக்கவேண்டும்.

    • விஷ்ணு முரனுடன் போரிட்டு வென்றார்.
    • இறைவனை சரணடையும், நல்லவர்களுக்கு வைகுண்ட பதவிகிடைக்கும்.

    இந்துக்களின் மிக முக்கிய விஷேசங்கள், பண்டிகைகளில் ஒன்றுதான் வைகுண்ட ஏகாதசி. இந்த முக்கிய நிகழ்வு மார்கழி மாதத்தில் நம் மனதை குளிர்விக்க வைக்கும் விரதம் தான் வைகுண்ட ஏகாதசி விரதம். இறைவனை சரணடையும், நல்லவர்களுக்கு வைகுண்ட பதவி கொடுப்பதற்காக வைகுண்ட கதவுகள் திறக்கும் நாளாகும்.

    மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினொன்றாம் நாள், `வைகுண்ட ஏகாதசி' என இந்துக்களால் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    அந்த அற்புத திருநாள் கோலாகலமாக நடைபெறுகிறது. பகல் பத்து, ராபத்து என இருபது நாள் திருவிழாவாகவும், பகல் பத்து முடியும் பத்தாம் நாள் வைகுண்ட ஏகாதசி என கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    வைகுண்ட ஏகாதசி எப்படி பிறந்தது?

    தேவர்களையும், முனிவர்களையும் முரன் என்ற அரக்கன் மிகவும் துன்புறுத்தி வந்தான். அவனிடமிருந்து தங்களை காப்பாற்றுமாறு பகவான் விஷ்ணுவிடம் முறையிட்டனர். அனைவரையும் காக்கும் பொருட்டு விஷ்ணு முரனுடன் போரிட்டு வென்றார். வென்ற பின்னர் ஒரு குகையில் ஓய்வெடுக்க பெருமாள் சென்றார். இதைப்பார்த்த தோல்வியின் விரக்தியில் இருந்த முரன், பெருமாளை கொல்ல ஒரு வாளை ஓங்கியபடி வந்தார். அப்போது விஷ்ணுவின் உடலில் இருந்து வெளிப்பட்ட சக்தி ஒரு பெண் வடிவில் உருவெடுத்து, முரனுடன் போரிட்டு வென்றாள்.

    முரனை வென்ற அந்த திருமாலின் சக்தியால் உருவான அந்த பெண்ணுக்கு ஏகாதசி என அரங்கன் பெயர் சூட்டினார். அதோடு அன்றைய திதிக்கு ஏகாதசி பெயர் வந்தது. இந்த நாளில் தன்னை வழிபடுவோருக்கு வைகுண்ட பதவி அளிப்பதாக பெருமாள் வரமளித்தார். இதனால் இந்த தினம் வைகுண்ட ஏகாதசி என்ற பெயரில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

    • சொர்க்க வாசல் திறக்கும் வைபவம் வரும் 23-ந்தேதி அதிகாலை.
    • திருவரங்கம் பூலோக வைகுண்டமாய் ஜொலிக்கும் என்பது சிறப்பு.

    பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா முக்கிய திருநாளான வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறக்கும் வைபவம் வரும் 23-ம் தேதி அதிகாலை நடைபெற உள்ளது. வைண்ட ஏகாதசி விழா பகல் பத்து, ராத்திரி பத்து என்று தொடர்ந்து 21 நாள்கள் நடைபெறும். அப்போது திருவரங்கம் பூலோக வைகுண்டமாய் ஜொலிக்கும் என்பது சிறப்பு.

    வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து உற்சவ முதல் நாளாக திருநெடுந்தண்டகத்துடன் தொடங்கும். நான்முகனுக்கு உண்டான அகங்காரத்தை ஒடுக்க நினைத்த திருமால், தன் காதுகளில் இருந்து மது, கைடபர்களை வெளிப்படச் செய்தார். அவர்கள் நான்முகனைக் கொல்ல முயன்றபோது, அவர்களைத் தடுத்த திருமால், பிரம்மாவை காப்பாற்றி, அசுரர்கள் கேட்கும் வரத்தைத் தருவதாகக் கூறினார்.

    அப்போது அந்த அசுரர்கள் திருமாலுக்கு வேண்டுமானால் தாங்கள் வரம் தருவதாக ஆணவத்துடன் கூறினர். திருமாலும் தன்னால் அவர்கள் வதம் செய்யப்பட வேண்டும் என்ற வரத்தைக் கேட்டார். அவ்வாறே அசுரர்களை வதமும் செய்தார். அப்போது ``பகவானின் பரமபதத்தில் தாங்கள் நித்திய வாசம் செய்ய வேண்டும்" என்ற வரத்தை அசுரர்கள் கேட்டனர்.

    அதன்படி, மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியன்று பரமபதத்தின் வடக்கு வாசலாம் சொர்க்கவாசல் திறந்து, அசுரர்களை பரமபதத்தில் சேர்த்துக் கொண்டார் திருமால். அசுரர்கள் பெற்ற முக்தியை அனைவரும் பெற வேண்டும் என்று விரும்பி, ``பெருமாளே! தங்களது அர்ச்சாவதாரம் விளங்கும் சகல ஆலயங்களிலும் மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியன்று, சொர்க்க வாசல் திறக்கப்பட வேண்டும்.

    அப்போது அந்த வழியாக எழுந்தருளும் தங்களை தரிசிப்பவர்களும், தங்களுடன் சொர்க்க வாசல் வழியாக வெளியே வருபவர்களும் பரமபத மோட்சம் அடைய வேண்டும்'' என்று வரம் கேட்டனர் அசுரர். தீனகருணாகரனான திருமாலும் அவர்கள் கேட்டபடியே வரம் அருளினார். இதுவே வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறக்கும் ஐதீகத்தின் திருக்கதை.

    ×