search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    அரங்கன் மீது காதல் கொண்ட மன்னர் மகள்
    X

    அரங்கன் மீது காதல் கொண்ட மன்னர் மகள்

    • அரங்கன் மனித பிறவியில் உயர்வு தாழ்வு பார்த்ததில்லை.
    • முகமதிய பெண்மணிக்கும் அருள்பாலித்தவன் அரங்கன்.

    ஸ்ரீரங்கத்து அரங்கன் அனைவருக்கும் பொதுவானவர். இவர் மனித பிறவியில் உயர்வு தாழ்வு பார்த்ததில்லை. ஏன், மதங்களிடையே வேறுபாடு கண்டதில்லை. அனைவரையும் அரவணைத்து செல்லும் பேரருளாளர் இவர். இந்த பிரமாண்ட ஆலயத்தின் இரண்டாவது பிரகாரத்தில் அமைந்திருக்கும் துலுக்க நாச்சியார் சன்னதி, புதிதாக வருபவர்களை வியப்பில் ஆழ்த்தும்.

    ஆமாம், முகமதிய பெண்மணிக்கும் அருள்பாலித்தவன் இந்த அரங்கன். கண்ணன் அடிதொழ ஜாதி வேண்டாம், மதம் வேண்டாம், அன்பு ஒன்றே போதும் என நிரூப்பித்த சம்பவம் இது. முகலாயர்களின் முதல் படையெடுப்பின் போது இந்த ஸ்ரீரங்கத்திருத்தலம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

    சுல்தானின் படைகள் திருவரங்கத்தை நெருங்குவதை அறிந்து கொண்ட பக்தர்கள், மூலஸ்தானத்துக்கு முன்பாக ஒருதற்காலிக சுவற்றை எழுப்பி அதன் முன் உற்சவரான நம்பெருமாளை வைத்து விடுகின்றனர். கோவிலை சூறையாட வந்த மாலிக் கபூரின் படையினர் உற்சவர் நம்பெருமாளின் விக்ரகத்தை டெல்லிக்கு தூக்கி சென்று விடுகின்றனர்.

    அந்த விக்ரகத்தை பார்த்த சுல்தானின் மகள், அதை தன் அறையிலேயே வைத்துக் கொண்டாள். அது மட்டுமல்லாமல் அந்த அரங்கனை அவள் உளமார நேசிக்கவும் ஆரம்பித்தாள். திருவரங்கத்து வாழ் பெரியோர்கள் நம்பெருமாளை எப்படி மீட்பது என ஆலோசித்தனர்.

    கசன்பி பாதுஷாவிற்கு ஆடல், பாடல் என்றால் மிகவும் விருப்பம் என்று அறிந்தனர். அதில் சிறந்தவர்களில் 60 பேர் பாதுஷாவின் மாளிகைக்கு சென்றனர். புகழ் பெற்ற ஜக்கிந்தி நடனம் ஆடினார்கள். மனம் மகிழ்ந்த பாதுஷா நிறைய பரிசுகள் வழங்கினார். அதை வேண்டாம் என்று கூறிய நடன குழுவினர் எங்கள் அரங்கன் சிலையை பரிசாக தாருங்கள் என்று கேட்டனர்.

    வெறும் சிலையை மட்டும் கேட்கிறார்களே என வியந்த பாதுஷா, அந்தப்புரத்தில் இருந்து எடுத்துக் கொள்ள கூறினார். சுரதாணிக்கு தெரியாமல் அவர்கள் அரங்கன் சிலையை கொண்டு வந்துவிட, சுரதாணி அரங்கனைக் காணாமல் அழுது புலம்பினாள். அவளின் நிலையை கண்ட பாதுஷா அரங்களை மீட்டு வருமாறு வீரர்களை அனுப்பினார். அரங்கனை காண வேண்டும் எனும் ஆசையில் சுல்தாணியும் படைகளோடு சென்றாள்.

    படை வருவதை அறிந்த நாட்டிய குழுவினர், அரங்கனை எடுத்துக் கொண்டு திருமலை காட்டுப்பகுதியில் மறைத்து வைத்தார்கள். வீரர்களுடன் திருவரங்கம் வந்த சுல்தாணி அரங்கனைக் காணாமல் மிகுந்த துயரம் அடைந்தாள். துக்கம் தாங்காமல் கோவிலின் முன் மயங்கி விழுந்து உயிர் துறந்தாள். அப்போது அங்கு அரங்கனின் விஸ்வரூபம் தோன்றியது. சுரதாணியின் உடலில் இருந்து ஒரு துளி கிளம்பி அரங்கனின் திருமேனியில் ஐக்கியம் அடைந்தது.

    பல்லாண்டு காலம் திருமலையில் மறைத்து வைக்கப்பட்ட அரங்கன், ஒருசோழ மன்னனால் திருவரங்கம் கொண்டுவரப்பட்டு மறுபடியும் பிரதிஷ்டை செய்யப்பட்டார்.

    சோழனின் கனவில் தோன்றி சுரதாணிக்கு ஒரு சன்னிதி அமைக்கும்படி அரங்கன் கூறினான். அதன்படி சோழ மன்னன், அரங்கன் கருவறைக்கு வடகிழக்கு மூலையில் ஒரு சன்னிதி அமைத்து, அதில் சித்திர வடிவில் சுரதாணியின் வடிவை தீட்டச் செய்தான்.

    இன்றும் கோவில் இரண்டாம் பிரகார வடகீழ் மூலையில் சித்திர வடிவில் சுரதாணி காட்சி அளிக்கிறார். இன்றும் நம்பெருமாளுக்கு ஏகாதசி அமாவாசை நாட்களில் லுங்கி அணிவித்து துலுக்க நாச்சியாருக்கு நைவேத்தியம் படைக்கப்பட்ட பிறகு அரங்கனுக்கு படைக்கப்படுகிறது. அரங்கனை தரிசிக்கும் போது மறக்காமல் அன்னை துலுக்க நாச்சியாரையும் தரிசிக்கின்றனர் பக்தர்கள்.

    Next Story
    ×