search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Single Leadership Crisis"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க. விதிப்படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி 5 ஆண்டுகள் ஆகும்.
    • இந்த பதவிகளை தன்னிச்சையாக நீக்கி விட்டு மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வர முடியாது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றி உள்ளது.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அணியினர் வருகிற 11-ந்தேதி பொதுக்குழு கூட்டத்தை கூட்டி உள்ளனர்.

    இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில் புதிய தீர்மானங்கள் எதையும் நிறைவேற்றக் கூடாது என்ற தடையை மீறி 23-ந்தேதி நடந்த பொதுக்குழுவில் அவை தலைவரை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும், இது சட்ட விரோதம் என்ற நிலையில், 11-ந்தேதி பொதுக்குழுவை கூட்டுவதும் சட்ட விரோதமாகும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

    அ.தி.மு.க. விதிப்படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி 5 ஆண்டுகள் ஆகும். இந்த பதவிகளை தன்னிச்சையாக நீக்கி விட்டு மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வர முடியாது. பொதுக்குழு கூட்டம் தொடர்பாக 15 நாட்களுக்கு முன்பு அனைத்து நிர்வாகிகளுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற விதியும் மீறப்பட்டுள்ளது என்பது போன்ற குற்றச்சாட்டுகளை ஓ.பன்னீர்செல்வம் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இன்று காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வந்தது. முதல் வழக்காக இந்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. அப்போது, மனுதாரர் ஓ .பன்னீர்செல்வம் சார்பில் வக்கீல்கள் யாரும் ஆஜராகவில்லை. எடப்பாடி பழனிசாமி தரப்பில், சில வக்கீல்கள் ஆஜராகி இருந்தனர். இதையடுத்து, விசாரணையை நேரம் குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர் செல்வத்தின் நடவடிக்கைகளால் கட்சியின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன.
    • அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை என்பது ஒட்டுமொத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஒருமித்த கருத்தாகும்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் இறுதி கட்டத்துக்கு வந்துள்ளது.

    அ.தி.மு.க. மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொண்டர்களில் 97 சதவீதம் பேர் ஆதரவை கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வருகிற 11-ந்தேதி பொதுக்குழு கூட்ட த்தில் தீர்மானங்கள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளன.

    மேலும் ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கும் நடவடிக்கையையும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மேற்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கடைசி முயற்சியாக சென்னை ஐகோர்ட்டை நாடியுள்ளனர்.

    சென்னை ஐகோர்ட்டில் இன்று ஓ.பன்னீர் செல்வத்தின் வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதுபோல சுப்ரீம் கோர்ட்டிலும் அ.தி.மு.க. விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்துள்ள மேல் முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

    அந்த மேல் முறையீட்டு விசாரணைக்காக எடப்பாடி பழனிசாமி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் எடப்பாடி பழனிசாமி கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர் செல்வத்தின் நடவடிக்கைகளால் கட்சியின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன.

    அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை என்பது ஒட்டுமொத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஒருமித்த கருத்தாகும். இந்த நிலையில், ஒற்றைத் தலைமை கருத்து எழுந்தவுடன், கடந்த ஜூன் 23-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழுவை தடுக்க அவர் பல்வேறு வழிகளில் முயன்றார்.

    சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி, பொதுக்குழுவுக்கு தடை விதிக்குமாறு ஆவடி காவல் துறை ஆணையருக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் எந்த அசம்பாவிதமும் இல்லாமல் பொதுக்குழு அமைதியாக நடந்தது.

    முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பாணியில் ஒற்றைத் தலைமையுடன் கட்சி சிறப்பாக வழி நடத்தப்பட வேண்டும் என்பதே கட்சி நிர்வாகிகளின் ஒருமித்த எண்ணமாகும். ஆனால் கட்சித் தொண்டர்கள், தங்களது உணர்வுகளையும், கருத்துகளையும் வெளிப்படுத்தி விடக்கூடாது என்ற எண்ணத்தில் ஓ.பன்னீர் செல்வம் செயல்படுகிறார்.

    உள்ளாட்சி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 34 இடங்களுக்கு வேட்பாளர்களை நிறுத்த அவர் உரிய ஒத்துழைப்பை தரவில்லை. அது தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்க அழைப்பு விடுத்தும், அவர் பங்கேற்கவில்லை.

    கட்சியின் பொருளாளர் அவர்தான். கட்சி நிதியை அவர் விடுவிக்காததால், அ.தி.மு.க. அலுவலக ஊழியர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பொருளாளர் கடமையை செய்யாமல், கட்சியின் நலனை கெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    கடந்த ஜூன் 23-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தின் வாயிலாக ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. தொண்டர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் மத்தியில் செல்வாக்கையும், நம்பிக்கையையும் முற்றிலுமாக இழந்து விட்டார். எனவேதான் அவர் எங்களுடன் இணைந்து செயல்பட மறுத்து வருகிறார்.

    வருகிற 11-ந்தேதி நடைபெறவுள்ள அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து முடிவெடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் 2 ஆயிரத்து 432 பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் கடிதம் மூலமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில்தான் தனக்கு பிரச்சினை ஏற்படக்கூடாது என்பதற்காக பொதுக்குழுவுக்கும் தடை கோருகிறார்.

    கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டு, கட்சியின் செயல்பாடுகளையும், பொதுக்குழுவையும் முடக்க நினைக்கிறார். இது தொடர்பான அனைத்து ஆவணங்களும் இந்த மனுவுடன் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து கட்சி விரோத செயல்களில் ஈடுபடுகிறார். கட்சி விதிகளை மீறி நடக்கிறார். கட்சியை நடத்தாமல் முடக்கும் செயல்பாடுகளாக அவரது நடவடிக்கைகள் உள்ளன.

    எனவே ஓ.பன்னீர் செல்வத்துடன் சேர்ந்து செயல்பட இயலாது. ஆகவே சென்னை ஐகோர்ட்டில் வெளியிடப்பட்ட உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

    • வழக்கமாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இருவரது வீடுகளிலும் தினமும் கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் ஏராளமானவர்கள் திரளுவார்கள். ஆனால் இப்போது எடப்பாடி பழனிசாமி வீட்டில் மட்டும் கூட்டம் திரளுகிறது.
    • ஓ.பன்னீர்செல்வம் வீடு கிரீன்வேஸ் சாலையில் பறக்கும் ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் உள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க.விற்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி தரப்பும், இரட்டைத் தலைமைதான் என்பதில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் பிடிவாதம் காட்டியது.

    ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கே ஆதரவு பெருகியது. மொத்தம் உள்ள 2,665 பொதுக்குழு உறுப்பினர்களில் 2,400-க்கும் மேற்பட்டவர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருக்கிறார்கள்.

    அதே போல் 74 தலைமை கழக நிர்வாகிகளில் 65 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். தலைமை கழக நிர்வாகிகள் 74 பேரில் 65 பேர் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கிறார்கள்.

    எனவே வருகிற 11-ந்தேதி நடைபெறும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.

    வழக்கமாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இருவரது வீடுகளிலும் தினமும் கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் ஏராளமானவர்கள் திரளுவார்கள். ஆனால் இப்போது எடப்பாடி பழனிசாமி வீட்டில் மட்டும் கூட்டம் திரளுகிறது.

    ஓ.பன்னீர்செல்வம் வீடு கிரீன்வேஸ் சாலையில் பறக்கும் ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் உள்ளது.

    வழக்கமாக தினமும் கட்டுக்கடங்காத அளவுக்கு கூட்டம் திரண்டு நிற்கும். ஆனால் இப்போது தொண்டர்கள் வருகை மிகவும் குறைந்து விட்டது.

    எடப்பாடி பழனிசாமி வீட்டில் அதிகாலையிலேயே கூட்டம் திரண்டு விடுகிறது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் வீடு கொஞ்சம் கொஞ்சமாக களை இழந்தது. இன்று காலையில் முற்றிலும் ஒரு தொண்டர் கூட வரவில்லை.

    வெளிப்புற கேட் திறந்து இருந்தது. ஓ.பி.எஸ். வீட்டுக்குள் தனியாக இருந்தார். வெளியே ஒரு சில பத்திரிகையாளர்கள் மட்டும் நிற்கிறார்கள்.

    பகல் 11 மணிக்கு பிறகு வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன், ரவீந்திரநாத் ஆகிய 4 பேரும் வந்தனர்.

    ஆனாலும் அடிமட்ட தொண்டர்கள் கூட வராதது அவருக்கு ஏமாற்றம் அளித்தது.

    • தற்போது பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. பொதுக்குழு உறுப்பினர்களுக்கு இன்று அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது.
    • இந்த அழைப்பு கடிதம், தற்போது ஓ.பன்னீர்செல்வம் பொருளாளர் பதவியில் இருப்பதால் அவருக்கும் அனுப்பப்படும் என்று மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வருகிற 11-ந் தேதி மீண்டும் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற உள்ளது.

    ஒற்றைத்தலைமை என்பதில் உறுதியாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி அணியினர் கடந்த பொதுக்குழு கூட்டத்திலேயே அதை முடிவு செய்ய தீர்மானித்தனர்.

    ஆனால் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் கோர்ட்டு மூலம் போட்ட முட்டுக்கட்டையால் அது நிறைவேறாமல் போனது. கடந்த பொதுக்குழு கூட்டத்திற்கு பொதுக்குழு உறுப்பினர்களிடம் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றுதான் முதலில் கையெழுத்து பெறப்பட்டது.

    ஆனால் கோர்ட்டு மூலம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கொடுத்த நெருக்கடியால் அதை முறியடிக்க ஒற்றைத்தலைமை வேண்டும் என்று கடைசி நேரத்தில் பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கினார்கள்.

    மொத்தம் உள்ள 2660 பொதுக்குழு உறுப்பினர்களில் 2190 பேர் ஒற்றைத்தலைமைக்கு ஆதரவாக கையெழுத்திட்டு கடிதம் வழங்கினார்கள். அதை வைத்துதான் அன்றைய பொதுக்குழு கூட்டத்தில் கொண்டு வர இருந்த அனைத்து தீர்மானங்களையும் நிராகரித்து விட்டு 11-ந்தேதி கூட்டத்தை மீண்டும் கூட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது.

    தற்போது பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. பொதுக்குழு உறுப்பினர்களுக்கு இன்று அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. அந்த அழைப்பு கடிதத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் 11-ந் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தவறாமல் கலந்து கொள்ள அழைக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டு தலைமைக்கழக நிர்வாகிகள் அழைப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த அழைப்பு கடிதம், தற்போது ஓ.பன்னீர்செல்வம் பொருளாளர் பதவியில் இருப்பதால் அவருக்கும் அனுப்பப்படும் என்று மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    11-ந்தேதி நடைபெறும் பொதுக்குழுவில் பல்வேறு அதிரடி முடிவுகள் மேற்கொள்ளப்படலாம் என்று பெயர் வெளியிட விரும்பாத மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க., தி.மு.க.வை எதிர்த்து தொடங்கப்பட்ட கட்சி. எம்.ஜி.ஆர்.காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி தி.மு.க.வை எதிர்க்கட்சி என்பதை விட எதிரி கட்சியாகவே பாவித்து அரசியல் நடத்தினார்கள்.

    அதனால்தான் தொண்டர்களும் இயக்கத்தில் பிடிப்புடன் இருந்தார்கள். ஆனால் இப்போது ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகள் கட்சி தொண்டர்களையே கோபப்படுத்தும் வகையில் அமைந்து விட்டது.

    அவர் சசிகலாவை ஆதரித்த போதுகூட தொண்டர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் கருணாநிதியை கலைஞர் என்று குறிப்பிட்டும், தான் அவரது ரசிகர் என்று குறிப்பிட்டும் தெரிவித்த கருத்துக்கள் தொண்டர்களுக்கு அவர் மீது வெறுப்பை ஏற்படுத்தியது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக எம்.பி. பதவியில் இருக்கும் அவரது மகன் ரவீந்திரநாத் முதல்-அமைச்சரை சந்தித்து பேசியது மட்டுமல்ல தி.மு.க. ஆட்சி சிறப்பாக இருப்பதாக பாராட்டியது கட்சியினரிடம் இருந்த கொஞ்சம் நஞ்ச மரியாதையையும் இழக்க செய்தது.

    அப்படி இருந்தும் கடந்த முறை பொதுக்குழுக்கூட்டம் கூடுவதற்கு ஒருநாள் முன்பு வரை சமரசம் செய்யப்பட்டது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் இரட்டை தலைமை தான் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால் சமரச முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன.

    கடந்த பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகாவது அமைதியாக இருந்திருந்தால் தொண்டர்களும் சகித்து கொண்டிருப்பார்கள். ஆனால் 11-ந்தேதி நடைபெறும் பொதுக்குழுவை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் அவர் இறங்கியதால் கொஞ்சம் நஞ்சம் அவரிடம் இருந்த அவரது ஆதரவாளர்களும் அவரை விட்டு விலகி விட்டார்கள்.

    அதனால்தான் இப்போது 2400-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய கோரி கடிதம் கொடுத்து இருக்கிறார்கள்.

    கடந்த முறையை விட இந்த முறை கூடுதல் எழுச்சியுடன் பொதுக்குழு கூட்டம் நடைபெறும். எப்படியாவது முட்டுக்கட்டை போட்டுவிடலாம் என்று மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்து விட்டன. ஐகோர்ட்டும் தடை செய்ய முடியாது என்று அறிவித்து விட்டது.

    கொரோனாவை காரணம் காட்டியாவது கூட்டம் தடை செய்யப்படுமா? என்று நினைத்தார்கள். ஆனால் அதையும் சுகாதாரத்துறை அமைச்சர் தெளிவுபடுத்தி விட்டார். பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கப்போவதில்லை. கட்டுப்பாட்டு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

    அதனால்தான் இந்த பொதுக்குழு, அரங்கத்திற்கு உள்ளே நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக வெளியே பந்தல் அமைத்து சமூக இடைவெளியுடன் இருக்கைகள் போடப்படுகிறது. பொதுக்குழுவுக்கு வரும் அனைவருக்கும் கிருமிநாசினிகள் மற்றும் முகக்கவசங்கள் வழங்கப்பட உள்ளன.

    வருகிற பொதுக்குழுவில் ஒற்றைத்தலைமை வேண்டும் என்ற பொதுக்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த முடிவின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமியை முதலில் தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்து அறிவிக்கப்பட உள்ளது.

    ஏனெனில் அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். உருவாக்கிய போது பொதுச்செயலாளரை கட்சியின் உறுப்பினர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விதியை உருவாக்கி வைத்துள்ளார். அந்த விதி இதுவரை திருத்தப்படவில்லை.

    எனவே தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்து விட்டு உறுப்பினர்கள் மூலம் தேர்தெடுப்பதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படும். அப்போது பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியை தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை என்றால் போட்டியின்றி அவர் தேர்வு செய்யப்படுவார்.

    அதுமட்டுமல்ல கட்சியின் விதிகளில் திருத்தம் கொண்டு வரவும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அதிகாரம் இருக்கிறது. இதுவும் அ.தி.மு.க.வின் விதிகளில் உள்ளது. ஆனால் தற்போது ஐகோர்ட்டு உத்தரவு காரணமாக அதை உடனடியாக செய்ய முடியாது. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டிருப்பதால் சாதகமான தீர்ப்பு பொதுக்குழுவுக்கு முன்பு வந்துவிட்டால் விதிகளை திருத்தும் தீர்மானம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

    நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் மன நிலையை புரிந்து கொண்டு சமாதானமாக போனால் ஓ.பன்னீர்செல்வத்தின் பதவிக்கும் ஆபத்து வராது. இல்லாவிட்டால் பொருளாளர் பதவியையும் பறிக்கும் தீர்மானம் கூட கொண்டு வரப்படலாம். அதுமட்டுமல்ல அ.தி.மு.க.வில் கட்சிக்கு விரோதமாக யாரேனும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தால் அவர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கலாம் என்பது கட்சி விதி.

    இந்த விதிப்படியும் நடவடிக்கை எடுக்க முடியும். அப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டால் அ.தி.மு.க.வில் இருந்தே ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி வெளியில் போக செய்ய முடியும். இதற்கும் அதிக வாய்ப்புள்ளது.

    கடந்த முறை கொண்டு வரப்பட்ட 23 தீர்மானங்களில் சில தீர்மானங்களை நீக்குவது மற்றும் சில தீர்மானங்களில் மாற்றம் கொண்டு வருவது, புதிய தீர்மானங்களை சேர்ப்பது பற்றி பொன்னையன் தலைமையிலான தீர்மானக்குழு அடுத்த ஓரிரு தினங்களில் விவாதித்து முடிவு செய்யும்.

    கண்டிப்பாக தி.மு.க. அரசின் சீர்கேடுகளை பற்றி ஒரு பட்டியல் தயாரித்து வெளியிடப்படும். அதை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் நடத்தும் அறிவிப்பும் தீர்மானத்தில் இடம்பெற வாய்ப்பு உண்டு.

    • ஒரு கட்சியின் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடுவது என்றால் இரண்டு விஷயங்களில்தான் தலையிட முடியும்.
    • ஒன்று, கட்சியின் பெயர், மற்றொன்று கட்சியின் சின்னம். இந்த இரண்டு விஷயங்களில்தான் தேர்தல் ஆணையம் கட்சிகளுக்கு உடனுக்குடன் உத்தரவுகளை பிறப்பிக்க முடியும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் ஜூலை 11-ந்தேதி திட்டமிட்டபடி நடக்குமா?

    அந்த கூட்டத்தின் மூலம் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியை பெறுவாரா?

    அதன்பிறகு ஓ.பன்னீர் செல்வத்தின் அரசியல் எதிர்காலம் என்ன?

    இந்த கேள்விகள்தான் இப்போது அ.தி.மு.க. தொண்டர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து பகுதி மக்களிடமும் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஜூலை 11-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு அ.தி.மு.க.வின் அரசியல் பயணத்தில் மிகப்பெரிய மாற்றங்களுக்கு வித்திடும் என்பது அரசியல் நிபுணர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    அப்படி ஒரு மாற்றம் நிகழ்ந்துவிட்டால் தனது அரசியல் வாழ்வு இருண்டுவிடும் என்பதை ஓ.பன்னீர்செல்வம் நன்கு உணர்ந்திருக்கிறார். இதனால்தான் அவர் ஜூலை 11-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை நடத்த விட்டுவிடக் கூடாது என்று எல்லா கோணங்களிலும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

    எடப்பாடி பழனிசாமி அணியினர் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை மோப்பம் பிடித்து, மோப்பம் பிடித்து காய்களை நகர்த்தி வருகிறார். அதன் ஒரு அங்கமாகத்தான் தலைமை தேர்தல் கமிஷனருக்கு ஓ.பன்னீர்செல்வம் நேற்று ஒரு பரபரப்பு குற்றச்சாட்டு கடிதத்தை அனுப்பியுள்ளார்.

    அதில் அவர், 'சென்னையில் 27-ந் தேதி நடந்த தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் சட்ட விதிகளின் படி செல்லாது. அ.தி.மு.க. சட்ட விதிகளின் படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இரண்டு பேரும் இணைந்து தான் இதுபோன்ற கூட்டத்தை நடத்த முடியும்.

    இந்த கூட்டத்தில் ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று முடிவெடுத்து இருப்பது விதிகளுக்கு புறம்பானது. இதை தேர்தல் ஆணையம் ஏற்கக்கூடாது' என்று குறிப்பிட்டுள்ளார்.

    ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த வேண்டுகோளை ஏற்று அ.தி.மு.க. ஒற்றை தலைமை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடுமா? தேர்தல் ஆணையம் என்ன உத்தரவு பிறப்பிக்கும் என்று கேள்வி குறி எழுந்துள்ளது. பிரபல அரசியல் விமர்சகர் தராசு சியாம் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.

    ஒரு கட்சியின் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடுவது என்றால் இரண்டு விஷயங்களில்தான் தலையிட முடியும். ஒன்று, கட்சியின் பெயர், மற்றொன்று கட்சியின் சின்னம். இந்த இரண்டு விஷயங்களில்தான் தேர்தல் ஆணையம் கட்சிகளுக்கு உடனுக்குடன் உத்தரவுகளை பிறப்பிக்க முடியும்.

    ஒரு கட்சியின் தேர்தல் சின்னம் என்பது அந்த கட்சிக்கு சொந்தமானது அல்ல. அது தேர்தல் ஆணையத்துக்கு சொந்தமானது. கட்சி பயன்படுத்திக்கொள்ள உரிமையை மட்டுமே தேர்தல் ஆணையம் வழங்குகிறது.

    ஒரு கட்சி பதிவு செய்யப்பட்டதும் முதலில் அதற்கு சுயேட்சையை போன்று ஒரு சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கும். தேர்தலில் அந்த கட்சி குறிப்பிட்ட சதவீதம் வாக்குகளை பெற்று காண்பித்த பிறகுதான் அந்த சின்னத்தை அந்த கட்சிக்கு தேர்தல் ஆணையம் நிரந்தரமாக வழங்கும். அதாவது பயன்பாட்டு உரிமையை கொடுக்கும்.

    இதில் பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் கட்சியின் தேர்தல் சின்னத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்கும் உரிமை தேர்தல் ஆணையத்துக்கு இருக்கிறது. அதுபோன்று தான் கட்சியின் பெயரில் முடிவெடுக்கும் உரிமையும் தேர்தல் ஆணையத்துக்கு இருக்கிறது.

    ஆனால் கட்சியின் சட்ட விதிகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் மிக ஆழமாக சென்று தலையிடுவது இல்லை. இதற்கு தேர்தல் ஆணையத்தில் எத்தனையோ முன் உதாரணங்கள் இருக்கிறது.

    குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், 1969-ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சி பிளவுபட்டபோது பொதுச்செயலாளராக இருந்த சாதிக் அலி வழக்கு தொடர்ந்தார். ஆனால் அந்த வழக்கு தொடர்பாக தீர்ப்பு இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் வெற்றிபெற்ற பிறகுதான் வந்தது.

    அதே சமயத்தில் தேர்தல் ஆணையத்தில் ஒரு கட்சியின் பிளவு தொடர்பாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால், தேர்தல் ஆணையம் 3 விதமான நடைமுறைகளை கையாளும்.

    1. எந்த அணியிடம் அதிக எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள்? என்று பார்ப்பார்கள்.

    2. பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் யார் பக்கம் அதிகம் இருக்கிறார்கள்? என்று பார்ப்பார்கள்.

    3. கட்சியின் சட்ட விதிகள் என்ன சொல்கின்றன என்று பார்ப்பார்கள்.

    இந்த மூன்றில் ஒரு கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை மற்றும் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை பற்றிய தகவல்கள் தேர்தல் ஆணையத்திடம் இருப்பதுண்டு. எனவே இந்த இரண்டின் அடிப்படையில் எளிதில் முடிவெடுக்க வாய்ப்புகள் உண்டு.

    கட்சியின் சட்ட விதிகள் தொடர்பாக பெரும்பாலும் தேர்தல் ஆணையம் தலையிடுவது இல்லை. ஏனெனில் இந்தியாவில் உள்ள கட்சிக்கு, சட்ட விதிகள் என்று ஏராளமான விதிகள் உள்ளன. அந்த விதிகளில் உள் பிரிவு விதகிளும் ஏராளம் இருக்கும்.

    அந்த விதிகள் அனைத்தையும் தேர்தல் ஆணையம் சரிபார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஏனெனில் தேர்தல் ஆணையத்தில் அந்த அளவுக்கு சட்ட வல்லுனர்களின் பலம் கிடையாது. சட்ட நிபுணர்கள் மிகவும் குறைவாக இருப்பதால் தேர்தல் ஆணையம் கட்சியின் சட்ட விதிகளில் இதுவரை ஆர்வம் காட்டியதே கிடையாது. இது தொடர்பாக ஏதேனும் மனுக்கள் வந்தால் அவற்றை தேர்தல் ஆணையம் சிவில் கோர்ட்டு தீர்ப்புக்கு தள்ளிவிட்டு விடும். இதுவரை அப்படித்தான் நடந்துள்ளது.

    எனவேதான் சட்ட விதிகளை பயன்படுத்தி ஒரு கட்சியை ஒரு அணி கைப்பற்றியதாக இந்தியாவில் வரலாறே கிடையாது. அந்த அடிப்படையில் பார்த்தால் ஓ.பன்னீர்செல்வம் தற்போது தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ள பரபரப்பு குற்றச்சாட்டு கடிதம் கை கொடுக்குமா? என்பது சந்தேகம்தான்.

    ஓ.பன்னீர்செல்வம் தனது கடிதத்தில் கட்சியின் சட்ட விதி மீறல்கள் பற்றிதான் குறிப்பிட்டுள்ளார். இதை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்வதற்கு வாய்ப்பு இல்லையென்றுதான் கருதுகின்றேன். எனவே ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மேற்கொண்டுள்ள முயற்சி வீணான முயற்சி.

    என்றாலும், அவர்கள் தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ள குற்றச்சாட்டு கடிதத்தின் பின்னணியில் ஏதாவது ஒரு சூட்சுமம் அல்லது வியூகம் இருக்கும் என்றே கருதுகின்றேன். தேர்தல் ஆணையம் தனது கடிதம் மீது அதிரடி நடவடிக்கை எடுக்காது என்பது ஓ.பன்னீர்செல்வத்துக்கு நன்றாகவே தெரியும்.

    அதிகபட்சம் இந்த கடிதம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பலாம். மற்றபடி வேறு எந்த அதிரடி நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பே இல்லை.

    ஆனால் கோர்ட்டு மூலம் ஏதாவது அதிசயம் நடந்து விடாதா? என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கருதுகிறார்கள். தற்போது ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. பொதுக்குழுவை நடத்தக்கூடாது என்ற வழக்கு இன்னமும் நிலுவையில்தான் உள்ளது.

    அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது, 'கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்து தீர்வு பெற்றுக்கொள்ளுங் கள்' என்று நீதிபதிகள் சொல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டுதான் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் முன்னதாகவே தேர்தல் ஆணையத்தை அணுகி இருப்பதாக நான் கருதுகின்றனே்.

    கோர்ட்டில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது, நாங்கள் ஏற்கனவே தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துவிட்டோம். அவர்கள் இன்னும் உரிய முடிவு எடுக்கவில்லை. எனவே கோர்ட்டு முடிவு எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தெரிவிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் கோர்ட்டும் முடிவெடுக்குமா? என்பது சந்தேகம்தான்.

    எனவே தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் ஆணையம் மற்றும் கோர்ட்டு இரண்டும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு முழுமையாக கைகொடுக்க வாய்ப்புகள் குறைவாக உள்ளன. இந்த விஷயத்தில் பா.ஜனதா யாருக்கு ஆதரவு கொடுக்கும் என்பதை பொறுத்துதான் அ.தி.மு.க. வில் அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும்.

    இந்த பிரச்சினைக்கு எம்.ஜி.ஆர். தனது உயிலில் விடை எழுதி வைத்திருந்தார்.

    எம்.ஜி.ஆர். எழுதிய உயில், 1988-ம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ந் தேதி ஜானகி அம்மாள் முன்னிலையில் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் வாசிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் நானும் பங்கேற்றேன். முன்னாள் அவைத் தலைவர் ஈ.வே.வள்ளிமுத்துவும் அந்த கூட்டத்தில் இருந்தார்.

    எம்.ஜி.ஆர். தனது உயிலில், 'எனது காலத்திற்கு பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டால் அப்போதுள்ள அங்கத்தினர்களில் குறைந்தபட்சம் 80 சதவீதம் பேர் யார் பக்கம் இருக்கிறார்களோ அவர்கள்தான் கட்சியை வழிநடத்த வேண்டும்' என்று கூறி இருந்தார்.

    இதன்படி பார்த்தால் அடுத்து என்ன நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். எம்.ஜி.ஆர். மொத்தம் 23 பக்கங்கள் உயில் எழுதியிருந்தார். கடந்த 23-ந் தேதிதான் அ.தி.மு.க. பொதுக்குழுவில் சர்ச்சை எழுந்தது. அந்த கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டன.

    இந்த 23-க்கும், தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கும் காலம் எதையோ உணர்த்த முற்படுகிறது. ஆனால் அதை புரிந்துகொள்ள தவறுகிறது அ.தி.மு.க.வின் தற்போதைய தலைமை.

    இவ்வாறு அரசியல் விமர்சகர் தராசு சியாம் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க.வில் நிலவும் தற்போதைய பிரச்சினை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
    • ஒற்றை தலைமைக்கு எதிரான கருத்துக்களை முறியடிப்பது குறித்து கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பேசினர்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

    கடந்த 23-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்றிருந்தனர்.

    அப்போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டதால் ஓ.பன்னீர்செல்வம் பாதியிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கிடையே கருத்து மோதல் வலுத்து வருகிறது.

    அடுத்த மாதம் 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ள எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் திட்டமிட்டபடி பொதுக்குழு நடைபெறும் என்றும், அதில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் தலைமை பதவிக்கு தேர்வு செய்யப்படுவார் என்றும் தெரிவித்துள்ளனர்.

    ஆனால் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களோ, 11-ந்தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறாது என்று கூறி வருகிறார்கள். இதனால் பொதுக்குழு கூட்டம் நடக்குமா? நடக்காதா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

    கடந்த 23-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் முடிந்ததும் டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம் அங்கு தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இதைத் தொடர்ந்து சென்னை திரும்பிய ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த மாவட்டமான தேனிக்கு சென்றார்.

    அங்கு தனது ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி வகுக்கும் வியூகத்தை முறியடிப்பது தொடர்பாக அவர் நிர்வாகிகள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில்தான் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுக்காமல் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

    இது தொடர்பான அறிவிப்பு நேற்று மாலை வெளியிடப்பட்டது. வழக்கமாக அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் வெளியிடப்படும் அறிவிப்புகளில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரின் பெயர்களும் இடம்பெற்றிருக்கும். ஆனால் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்துக்கான அறிவிப்பை தலைமை நிலைய செயலாளர் வெளியிட்டிருந்தார்.

    இதன்படி இன்று காலை 10 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    எடப்பாடி பழனிசாமியுடன் மேடையில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், கே.பி.முனுசாமி ஆகியோர் அமர்ந்திருந்தனர். சுமார் 70 பேர் வரை கூட்டத்தில் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வில் நிலவும் தற்போதைய பிரச்சினை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. ஒற்றை தலைமைக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் பல்வேறு கருத்துக்களை கூறி வரும் நிலையில் அதனை எதிர் கொள்வது குறித்து கட்சி நிர்வாகிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.

    கடந்த 23-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்துக்கு பின்னர் பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியாகி விட்டதாக அறிவிப்பு வெளியிட்டார். இதனால் தற்போது ஓ.பன்னீர்செல்வம் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் என்றும் அவர் பொருளாளராக மட்டுமே உள்ளார் என்றும் கூறி இருந்தார்.

    இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்திடமிருந்து பொருளாளர் பதவியையும் பறிக்க எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இதுபற்றியும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது.

    ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதில் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரில் ஒருவரை கட்சியின் பொருளாளராக நியமிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    11-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தை திட்டமிட்டபடி நடத்துவது குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. கட்சியின் நிர்வாக வசதிக்காக எடப்பாடி பழனிசாமியை தற்காலிகமாக தலைமை பொறுப்பில் அமர வைப்பது குறித்தும் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

    பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்தும், ஒற்றை தலைமை தீர்மானம் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

    காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் 11.45 மணி வரை நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் ஓ.பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவியையும் பறிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதா? என்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து ஜெயக்குமார் கூறும்போது, ஓ.பன்னீர் செல்வம் பொருளாளர் பதவியில் நீடிப்பாரா? இல்லையா? என்பது 11-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்துக்கு பிறகு தெரிய வரும் என்றார்.

    இதன் மூலம் 11-ந்தேதி பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவி பறிக்கப்படுவது உறுதியாகி இருப்பதாக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு எப்படியாவது தடை போட்டு விட வேண்டும் என்பதில் ஓ.பன்னீர்செல்வம் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில் அவரது பொருளாளர் பதவியையும் பறிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி வகுத்துள்ள புதிய வியூகம் அ.தி.மு.க.வில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அ.தி.மு.க. ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் எதிரும் புதிருமாக செயல்பட்டு வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி, தலைமை கழக நிர்வாகிகளை அழைத்து தனியாக ஆலோசனை நடத்தி இருப்பதும் அக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள மோதலை மேலும் அதிகரித்துள்ளது.

    • பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற ஓ.பன்னீர் செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டபோது எடப்பாடி பழனிசாமி உடனடியாக கண்டித்தார். தொண்டர்களையும் அமைதிப்படுத்தினார்.
    • வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது. தண்ணீர் பாட்டில் வீசப்பட்ட விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் மன உளைச்சலில் இருப்பதாக கூறுகிறார்கள். அவருக்கு ஏன் வீண் மன உளைச்சல்.

    சென்னை:

    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ''ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம் 5 குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அதற்கு எங்கள் தரப்பை சேர்ந்த சி.வி.சண்முகம் விளக்கமாக பதில் அளித்துள்ளார். அதை வைத்திலிங்கம் பார்த்து தெளிவு பெறுவது நல்லது.

    பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற ஓ.பன்னீர் செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டபோது எடப்பாடி பழனிசாமி உடனடியாக கண்டித்தார். தொண்டர்களையும் அமைதிப்படுத்தினார். யாரையும் அவமதிக்கும் நோக்கம் தொண்டர்களுக்கு கிடையாது.

    வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது. தண்ணீர் பாட்டில் வீசப்பட்ட விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் மன உளைச்சலில் இருப்பதாக கூறுகிறார்கள். அவருக்கு ஏன் வீண் மன உளைச்சல். ஊரோடு ஒத்துவாழ் என்பார்கள்.

    அனைவரும் ஒற்றை தலைமைக்கு ஆதரவு கொடுப்பது போல அவரும் ஒற்றைத் தலைமைக்கு ஆதரவு கொடுத்து கட்சியினரோடு ஒத்து போயிருக்கலாம். ஆனால் அவர் கோர்ட்டை நாடுகிறார். தேர்தல் ஆணையத்தை நாடுகிறார். ஓ.பன்னீர்செல்வத்துக்கு மன உளைச்சல் இல்லை. அவர் செய்யும் கலகங்களால் அ.தி.மு.க. தொண்டர்கள் தான் மன உளைச்சலில் உள்ளனர்.

    அ.தி.மு.க.வில் எடப்பாடி தலைமையிலான ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பா.ஜனதா தலையீடு இல்லை. 3-வது நபரின் தலையீட்டை அ.தி.மு.க.வும் ஏற்காது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது. அ.தி.மு.க.வை அழிக்க ஒருவன் பிறக்கவே மாட்டான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் முற்றியுள்ளதை தொடர்ந்து அ.தி.மு.க. மீண்டும் உடையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
    • 11-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்துக்கு இன்னும் 2 வாரங்களே இருக்கும் நிலையில் அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள உச்சக்கட்ட குழப்பம் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களால் ஓரம் கட்டப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றிருப்பதன் பின்னணியில் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அ.தி.மு.க.வில் எழுந்துள்ள ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கி இருப்பதால் ஓ.பன்னீர்செல்வம் அடுத்த கட்டமாக என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியின் பக்கமே இருப்பதால் அவரே அ.தி.மு.க.வின் தலைமை பொறுப்புக்கு வருவார் என்று கூறப்படுகிறது.

    இதனால் ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து வெளியேறி பா.ஜனதாவுக்கு சேர முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதற்காக டெல்லியில் பிரதமர் மோடியை சந்திப்பதற்கு ஓ.பன்னீர்செல்வம் முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் பிரதமரை நேரில் சந்திப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படவில்லை.

    அ.தி.மு.க.வில் உள்கட்சி பிரச்சினை தீவிரமாக இருக்கும் இந்த சூழலில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசுவதற்கு பிரதமர் மறுத்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் சசிகலா தரப்பினரிடமும் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க.வில் சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம் பின்னர் அவரை ஆதரித்து பேசினார்.

    சசிகலாவும் இதனை ஆமோதித்து இருக்கிறார். இதனால் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவதற்கு சசிகலாவுடன் கைகோர்க்கவும் ஓ.பன்னீர்செல்வம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக சசிகலா குடும்பத்தினர் சிலருடன் அவர் ரகசியமாக பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    டெல்லி சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பியதும் தனது ஆதரவாளர்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது தனது எதிர்காலம் குறித்தும் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவது பற்றியும் ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளார்.

    எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் முற்றியுள்ளதை தொடர்ந்து அ.தி.மு.க. மீண்டும் உடையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    11-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்துக்கு இன்னும் 2 வாரங்களே இருக்கும் நிலையில் அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள உச்சக்கட்ட குழப்பம் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது.

    இதனால் அடுத்தடுத்த நாட்களில் அ.தி.மு.க.வில் மேலும் பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே அ.தி.மு.க.வில் நடைபெற்று வரும் இந்த உள்கட்சி மோதலை பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக கண்காணித்து வருகிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கும் நிலையில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது.

    அ.தி.மு.க.வில் நிலவும் தற்போதைய பிரச்சினை விரைவில் முடிவுக்கு வந்து அந்த கட்சியினர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்பதையே பா.ஜனதா விரும்புகிறது. இதுவே தற்போதைய சூழலில் தமிழகத்தில் பா.ஜனதா கால் பதிக்க உதவும் என்றே அக்கட்சியினர் நம்புகின்றனர்.

    இதனை மனதில் வைத்து அந்த கட்சி ரகசியமாக சில நடவடிக்கைகளில் இறங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    • பதவி வெறி அவர்களின் அறிவை மயக்கிவிட்டது.
    • சட்டத்தை மறந்து, நீதிபதிகளின் உத்தரவை மறந்து அவர்கள் நடத்திய நாடகம் சர்வாதிகாரத்தின் உச்சம் என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் இருந்து வெளியேறிய ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மாலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொதுக்குழுவில் 23 தீர்மானங்களையும் நிராகரிக்க உரிமை இல்லை. அதேபோல் அவர்கள் தேர்வு செய்த அவைத்தலைவர் தேர்வும் செல்லாது. தீர்மானங்கள் ரத்து ஆகும் போது பொதுக்குழு உறுப்பினர்களே ரத்து ஆகி விட்டதாகத்தானே அர்த்தம்.

    அப்படி இருக்கும் போது அவைத்தலைவரை எப்படி தேர்வு செய்ய முடியும். பதவி வெறி அவர்களின் அறிவை மயக்கிவிட்டது. சட்டத்தை மறந்து, நீதிபதிகளின் உத்தரவை மறந்து அவர்கள் நடத்திய நாடகம் சர்வாதிகாரத்தின் உச்சம்.

    பொதுக்குழுவை கூட்டுவதற்கு அவைத்தலைவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்குத்தான் அந்த அதிகாரம் உள்ளது. நேற்று நடந்தது பொதுக்குழு கூட்டமே அல்ல.

    ஓ.பன்னீர்செல்வம் எப்போதுமே பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறார். அவரை பொறுத்தவரை இரட்டை தலைமை தான் கட்சிக்கு நல்லது. எதிர்காலத்தில் ஆட்சியை பிடிக்க முடியும் என்றார்.

    ஆனால் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நிராகரித்துவிட்டார்கள். கட்சி இருக்கும் நிலையில் ஒற்றை தலைமை தான் கட்சியின் வளர்ச்சிக்கு நல்லது. சிறப்பாக செயல்பட முடியும்.

    ஒற்றை தலைமை என்ற திட்டத்தை எக்காரணத்தை கொண்டும் கைவிட முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டார்கள்.

    • ஓ.பன்னீர்செல்வம், ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவே டெல்லி சென்றிருப்பதாக கூறியுள்ள போதிலும், அவரது டெல்லி பயணத்தின் பின்னணியில் கட்சி விவகாரம் மறைந்திருப்பதாகவே பேசப்படுகிறது.
    • அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி அடுத்த மாதம் நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டம் தொடர்பாகவும் அதில் ஒற்றை தலைமை பதவியை ஏற்பது பற்றியும் வியூகம் வகுத்து வருகிறார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை கோஷம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திலும் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் கட்சியை வழி நடத்தி வந்த நிலையில் கடந்த வாரம் திடீரென ஒற்றைத் தலைமை கோஷத்தை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் எழுப்பினார்கள்.

    ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்தான் ஒற்றை தலைமை விவகாரம் முதலில் எழுப்பப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டியை தொடர்ந்து அ.தி.மு.க.வில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

    இதன் பின்னர் ஒற்றை தலைமையே வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும், இரட்டை தலைமையே நீடிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் குரல் எழுப்பி வந்தனர்.

    இந்த நிலையில்தான் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமைக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இதற்கு எடப்பாடி பழனிசாமியை முன்நிறுத்தி கட்சியின் முன்னணி நிர்வாகிகள் காய் நகர்த்தி உள்ளனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு கூட்டத்தில் இருந்து வெளியேறியதும், பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என்று அவரது ஆதரவாளர்கள் காட்டமாக கருத்து தெரிவித்திருப்பது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதைத் தொடர்ந்து அ.தி.மு.க.வில் அடுத்து என்ன நடக்க போகிறது? என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. அடுத்த மாதம் 11-ந்தேதி மீண்டும் கூட்டப்பட்டுள்ள பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை தொடர்பாக தீர்மானம் போடப்படும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் அதனை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்பதில் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் உறுதியாக உள்ளனர்.

    இதனை மனதில் வைத்து தான் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கருத்து தெரிவித்துள்ளார்.

    பொதுக்குழு கூட்டத்தில் நடந்த சம்பவங்கள் கோர்ட்டு அவமதிப்பு என்றும் இதனை எதிர்த்து வழக்கு தொடரப் போகிறோம் என்றும் அவர் கூறி இருக்கிறார்.

    இதன் மூலம் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் விரைவில் மனுதாக்கல் செய்யப்பட உள்ளது. அதில் பொதுக்குழு கூட்டத்தில் நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தையும் பட்டியலிட்டு மனுவாக அளிக்க உள்ளனர்.

    பொதுக்குழுவுக்கு முந்தைய நாள் இரண்டு நீதிபதிகள் அளித்த தீர்ப்பை சுட்டிக் காட்டியும், அதற்கு எதிராக பொதுக்குழு கூட்டம் நடந்து முடிந்துள்ளது எனவும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த விவகாரத்தில் சட்ட ரீதியாக அனைத்தையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவாளர்களும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரின் சட்ட நடவடிக்கைளை எதிர்கொள்ள தயாராகி வருகிறார்கள்.

    இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பு மூத்த வக்கீல் ஒருவர் கூறும்போது, ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ள மனுக்களுக்கு பதில் மனு தாக்கல் செய்ய நாங்களும் தயாராகவே உள்ளோம் என்று தெரிவித்தார்.

    பொதுக்குழு உறுப்பினர்களின் முழு ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது. எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்களின் ஆதரவையும் அவர் பெற்று உள்ளார். தேவைப்பட்டால் இதனை கோர்ட்டில் தெரிவிப்போம் என்றும் அவர் கூறினார்.

    நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்ட நிகழ்வுகள் செல்லாது என்பதை நிரூபிப்பதற்கு தேவையான சட்ட நுணுக்கங்கள் பற்றி ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு வக்கீல்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில் பொதுக்குழு உறுப்பினர்களின் தற்போதைய ஆதரவை வைத்துக் கொண்டு தலைமை பதவியை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர்.

    இது தொடர்பாக இரு தரப்பினரும் திரைமறைவு வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    ஓ.பன்னீர்செல்வம், ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவே டெல்லி சென்றிருப்பதாக கூறியுள்ள போதிலும், அவரது டெல்லி பயணத்தின் பின்னணியில் கட்சி விவகாரம் மறைந்திருப்பதாகவே பேசப்படுகிறது.

    அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி அடுத்த மாதம் நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டம் தொடர்பாகவும் அதில் ஒற்றை தலைமை பதவியை ஏற்பது பற்றியும் வியூகம் வகுத்து வருகிறார். எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் இடையேயான போட்டியில் வெல்லப்போவது யார்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    • அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை கோஷம் ஓங்கி உள்ள நிலையில் பொதுச்செயலாளர் பதவி கொண்டு வரப்பட உள்ளதால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மிகவும் உற்சாகமாக உள்ளனர்.
    • பொதுக்குழுவுக்கு வரும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டு வருகிறது.

    சென்னை:

    சென்னை வானகரத்தில் நாளை நடைபெறும் அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்துக்கான பிரமாண்ட ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தீவிரமாக செய்து வருகிறார்கள்.

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை கோஷம் ஓங்கி உள்ள நிலையில் பொதுச்செயலாளர் பதவி கொண்டு வரப்பட உள்ளதால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மிகவும் உற்சாகமாக உள்ளனர். பொதுக்குழுவுக்கு வரும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டு வருகிறது.

    இதற்காக வரவேற்பு பேனர்கள் தயார் செய்யப்பட்டு மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டன. அந்த பேனர்களை வைக்கும் பணி இன்று நடந்து வருகிறது. மேலும் அலங்கார வளைவுகள் மற்றும் முகப்பு தோற்றத்தை உருவாக்கும் பணிகளும் தொடங்கி நடந்து வருகிறது.

    ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராக உள்ளதால் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி இணைந்து இருக்கும் படங்களும் பேனர்களில் அச்சிடப்பட்டுள்ளன.

    மேலும் பொதுக்குழு நடைபெறும் திருமண மண்டப பகுதியில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு உள்ளன. பொதுக்குழுவுக்கு வரும் உறுப்பினர்கள் அனைவரும் அமருவதற்கான இருக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பொதுக்குழு நடைபெறும் இடம் மிகவும் பிரமாண்டமாக காட்சியளிக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க.வில் பொதுக்குழு உறுப்பினர்கள் 2,640 பேர் உள்ளனர்.
    • அவர்கள் அனைவருக்கும் தனித்தனியாக கையெழுத்திட்டு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் அனுப்பி உள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நாளை காலை நடக்கிறது.

    இதில் ஒற்றை தலைமை பற்றிய தீர்மானம் கொண்டுவந்து எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளதால் இதை தடுக்கும் நடவடிக்கைகளை ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்டார். ஆனால் அவரது முயற்சி கைகூடவில்லை.

    இந்த நிலையில் பொதுக்குழு கூட்டத்தை தடுக்கும் நடவடிக்கையாக ஓ.பன்னீர் செல்வம் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் பொதுக்குழு கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என்று கூறி உள்ளார்.

    அ.தி.மு.க.வில் பொதுக்குழு உறுப்பினர்கள் 2,640 பேர் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தனித்தனியாக கையெழுத்திட்டு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் அனுப்பி உள்ளார்.

    பொதுக்குழு உறுப்பினர்களில் 100 பேர் முதல் 150 பேர் மட்டுமே ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக உள்ளனர். எனவே மற்றவர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர். அவர்களில் பலர் தற்போது எடப்பாடி பழனிசாமி வீட்டிலேயே இருக்கிறார்கள். மற்றவர்கள் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

    இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம், பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

    ×