search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sabarimala Ayyappan Temple"

    கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது சபரிமலை ஐயப்பன் கோவில். இன்று இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    காலவ மகரிஷியின் மகளாக இருந்த லீலாவதி, ஒரு சாபத்தின் காரணமாக அசுர குலத்தில் மகிஷியாகப் பிறந்தாள். அவள் தனக்கு அழிவு வரக்கூடாது என்பதற்காக வித்தியாசமான வரம் ஒன்றை பிரம்மனிடம் கேட்டுப் பெற்றிருந்தாள். ‘சிவபெருமானுக்கும், விஷ்ணுவுக்கும் மகனாகப் பிறந்த பன்னிரண்டு வயது பாலகனால் மட்டுமே தன் அழிவு இருக்க வேண்டும்’ என்ற வரம் அது.

    ஒரு முறை மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணுவின் அழகில் மயங்கிய சிவபெருமான், மோகினியுடன் இணைந்தார். இதனால் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதன் கழுத்தில் மணி மாலை அணிவித்து காட்டில் விட்டுச் சென்றனர். அங்கு வேட்டையாட வந்த பந்தள நாட்டு மன்னன் ராஜசேகரன், அந்தக் குழந்தையை எடுத்துச் சென்று ராணியிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னான். குழந்தை இல்லாத அவர்களுக்கு அந்தக் குழந்தை ஆறுதலாக இருந்தது. கழுத்தில் மணி மாலை இருந்ததால் குழந்தைக்கு ‘மணிகண்டன்’ என்று பெயரிட்டனர்.

    இந்த நிலையில் ராணிக்கு ஒரு மகன் பிறந்தான். எனவே மணிகண்டன் மீது இருந்த அன்பு, ராணிக்கு குறையத் தொடங்கியது. தனக்கு பிறந்த மகனே அரசாள வேண்டும் என்று நினைத்த ராணி, அதற்கு தடையாக இருக்கும் மணிகண்டனை அழிக்க நினைத்தாள். எனவே தனக்கு தீராத தலைவலி ஏற்பட்டிருப்பதாகவும், அதனை தீர்க்க புலிப்பால் கொண்டு வர வேண்டும் என்றும் அரண்மனை வைத்தியரை வைத்து பொய் கூறினாள்.

    புலியின் பாலைக் கொண்டு வர பலரும் தயங்கிய நிலையில், தாயின் நோய் தீர்க்க தானே செல்வதாக முன் வந்தான் 12 வயதான பாலகன் மணிகண்டன். காட்டில் தன்னை வழி மறித்த மகிஷியையும் வதம் செய்தான். இதனால் தேவர்கள் அனைவரும் மகிழ்ந்தனர். அவர்களே புலிகளாக மாறி, மணிகண்டனுடன் நாடு திரும்பினர். புலிகள் சூழ, ஒரு புலியின் மேல் அமர்ந்து வந்த மணிகண்டனைக் கண்டு ராணி திடுக்கிட்டாள். மணிகண்டனின் தெய்வீக சக்தியை அனைவரும் உணர்ந்து கொண்டனர்.

    தான் இந்த பூமிக்கு வந்த நோக்கம் நிறைவேறி விட்டதாகவும், இனி நான் வேறு இருப்பிடம் செல்ல வேண்டும் என்றும் மணிகண்டன் சொன்னார். பின்னர் ஒரு அம்பை எடுத்து எய்து, ‘நான் எய்த அம்பு விழும் இடத்தில் எனக்குக் கோவில் கட்டுங்கள்’ என்று தந்தை ராஜசேகரனிடம் சொன்னார். அதன்படி அமைக்கப்பட்டது தான் சபரிமலை என்று தல வரலாறு சொல்கிறது.

    கோவில் அமைப்பு :

    சபரிமலையில் பதினெட்டுப் படிகளில் மேல் ஏறிச் செல்லும்படி உயரமான இடத்தில், கிழக்கு நோக்கிய நிலையில் ஐயப்பன் சன்னிதி இருக்கிறது. கோவில் கருவறையில் தர்ம சாஸ்தாவான ஐயப்பன், அறிவின் உயர்நிலையைக் கைவிரல்களால் காட்டும் அடையாளமான சின் முத்திரையோடு காட்சி தருகிறார். மேலும் ஒரு ஆடையால் முழங்காலைச் சுற்றிக் கொண்டு, குத்துக்காலிட்டு அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். கோவில் வளாகத்தில், கன்னிமூல கணபதி, நாகராஜா உள்ளிட்டோருக்கும் சன்னிதிகள் உள்ளன. அருகில் மாளிகைப் புறத்து அம்மன் சன்னிதி இருக்கிறது.

    ஆலயம் ஒவ்வொரு மாதத்திலும் முதல் ஐந்து நாட்கள் மட்டுமே வழிபாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். அதுபோன்ற நாட்களில் அதிகாலை 4 மணி முதல் பகல் 1.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரையும் நடை திறந்திருக்கும். தவிர கார்த்திகை மாதம் முதல் தேதியில் இருந்து தொடர்ச்சியாக 41 நாட்கள் ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடத்தப்படும். இந்த நாட்களில் ஐயப்பனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மண்டல பூஜையின் நிறைவு நாளில் தங்கத்தால் ஆன உடை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். தை மாதம் மகர விளக்கு பூஜை, சித்திரை விஷு ஆகிய தினங்களும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சபரிமலையில் 56 வகையான வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    கோவிலுக்குக் காப்பீடு :

    திருவாங்கூர் தேவஸ்வம் வாரியம், சபரிமலை சுவாமி ‎ஐயப்பன் கோவிலைச் சுமார் ரூ.30 கோடி அளவில் காப்பீடு செய்திருக்கிறது. மேலும், இந்த ‎இடத்திற்கு வருகை தரும் பயணிகளுக்கு ‎விபத்துகளில் இருந்து இலவசக் காப்பீடு அளிக்கும் திட்டத்தையும் ‎அறிமுகப்படுத்திச் செயல் படுத்தி வருகிறது. நீலக்கல்லில் இருந்து ‎மலையேற்றப் பாதையில், சன்னிதானம் சென்றடையும் வரையிருக்கும் 18 ‎கிலோ மீட்டர் தூரம் கொண்ட பாதையில் வரும் பக்தர்களில், ‎விபத்துக்குள்ளாகி காயமடைவோர் மற்றும் உயிரிழப்பவர்களுக்குச் சுமார் ‎ஒரு லட்சம் ரூபாய் வரை இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக ‎வழங்க முடியும்.

    ஐயப்பன் சிலை :

    சபரிமலையில் பரசுராமரால் நிறுவப்பட்டதாகக் கருதப்படும் ஐயப்பன் சிலை, 1950-ம் ஆண்டில் நடைபெற்ற தீ விபத்தில் சேதம் அடைந்தது. அதனைத் தொடர்ந்து ‘சிலையை யார் செய்ய வேண்டும்?’ என்று தேவப்பிரசன்ன குடவோலை முறைப்படி, ஐயப்பன் சன்னிதி முன்பாகச் சீட்டுப் போட்டுப் பார்க்கப்பட்டது. அதில், தமிழகத்தை சேர்ந்த இருவரின் பெயர்கள் வந்தன. அவர்கள் இருவரும் அதனை ஏற்று, கும்பகோணம் அருகிலுள்ள சுவாமிமலையில் இருந்த தேசிய விருது பெற்ற சிற்பக்கலைஞர் ராமசாமி ஸ்தபதியைக் கொண்டு புதிய ஐயப்பன் சிலையை உருவாக்கி, சபரிமலைக்கு வழங்கினர். தற்போது அந்தச் சிலையே வழிபாட்டுக்குரியதாக இருந்து வருகிறது.

    இருமுடி வண்ணங்கள் :

    சபரிமலைக் கோவிலுக்குப் புனிதப் பயணம் செல்லும் பக்தர்கள், இருமுடி கட்டி செல்வார்கள். பருத்தித் துணியில் கைகளால் தைக்கப்பட்ட பையினுள், இறைவனுக்குப் படைப்பதற்கான ‎பொருட்களை வைப்பதற்கு இரு அறைகள் இருக்கும். இந்தப் பையைத் தான் ‘பள்ளிக்கட்டு’ அல்லது ‘இருமுடிகட்டு’ என்று சொல்கின்றனர். இந்த இருமுடியில் பக்தர்கள் கொண்டு வரும் நெய்யைக் கொண்டு, சுவாமி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்யப்படுகிறது. சபரிமலைக்கு முதல் முறையாகப் புனிதப் பயணம் செல்லும் பக்தர்கள் ‎குங்குமப்பூ நிறம் கொண்ட இருமுடியையும், மற்றவர்கள் கருப்பு அல்லது நீல ‎வண்ணத்திலான இருமுடிகளைப் பயன்படுத்துகின்றனர்.

    சபரிமலை செல்ல.. :


    தமிழ்நாட்டிலிருந்து சபரிமலை செல்வதற்குப் பல வழிகள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், தமிழ்நாடு - கேரள எல்லைப்பகுதி நகரங்களான குமுளி, செங்கோட்டை ஆகிய ஊர்களின் வழி யாகச் சபரிமலைக்குச் செல்கின்றனர். குமுளி வழியில் செல்பவர்கள், அங்கிருந்து வண்டிப்பெரியார், எருமேலி, பிலாப்பள்ளி ஆகிய ஊர்களின் வழியாக சுமார் 176 கிலோமீட்டர் தூரமும், செங்கோட்டை வழியில் செல்பவர்கள் அங்கிருந்து புனலூர், பத்தனம்திட்டா வழியாகச் சுமார் 166 கிலோமீட்டர் பயணித்தும் பம்பையை அடையலாம். பம்பையில் இருந்து நான்கு கிலோமீட்டர் மலைப்பாதையில் நடந்து சபரிமலைக்குச் செல்ல வேண்டும். ஐயப்ப பக்தர்களில் சிலர் எரிமேலி வரை சென்று, அங்கிருந்து மரபுவழியில் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வரும் 45 கிலோமீட்டர் தூரம் கொண்ட பாதையில் நடந்து சபரிமலைக்குச் செல்கின்றனர்.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்திருக்கும் சபரிமலைக்கு செல்ல, பம்பை என்ற இடம் வரை பஸ் வசதி உள்ளது. பம்பையில் இருந்து நான்கு கிலோ மீட்டர் மலைப்பாதையில் நடந்து சபரிமலைக்குச் செல்லலாம். சிலர் எரிமேலி வரை சென்று, அங்கிருந்து மரபு வழியில் பயன்படுத்தி வரும் 45 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பாதையில் நடந்தே சபரிமலைக்குச் செல்கின்றனர். கோட்டயம் நகரிலிருந்து மணிமலை வழியாக 116 கிலோ மீட்டர் தொலைவில்இருக்கும் பம்பைக்குப் பேருந்து வசதி இருக்கிறது.
    சபரிமலை ஐயப்பன் கோவிலை அழிக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார். #Sabarimala #PonRadhakrishnan
    கோவை:

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    நான் சிறுவயது முதலே சபரிமலைக்கு சென்று வருகிறேன். முன்எப்போதும் இல்லாத அளவுக்கு சபரிமலையின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. பம்பைக்கு பஸ்கள் அனுமதிக்கப்படவில்லை. நாங்கள் 3 வாகனங்களில் சென்றிருந்தோம். என்னுடன் வந்த 2 வாகனங்களை நிலக்கல் காவல் கண்காணிப்பாளர் தடுத்து நிறுத்தினார்.

    இதுகுறித்து கேட்டபோது நிலச்சரிவு உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளன. இதற்கு நீங்கள் பொறுப்பேற்பீர்களா? என்று அதிகாரத்தொனியில் கேள்வில் எழுப்பினார். இதை எதிர்த்து கேள்வி எழுப்பிய என்னுடன் வந்த கேரள பா.ஜ.க. நிர்வாகியை மிரட்டும் வகையில் அவரது உடல் மொழி அமைந்திருந்தது. இதுதொடர்பாக வழக்கு தொடர ஆலோசித்து வருகிறோம்.

    சபரிமலை வெறிச்சோடி போர்க்களம் போல காட்சி அளிக்கிறது. சாலைகள் எங்கும் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து கேட்டபோது சமூகவிரோதிகளை தடுக்கவே, இரும்புத் தடுப்புகள் போடப்பட்டுள்ளதாக போலீசார் கூறினர்.

    கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் போலீசார் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்கின்றனர். கடுமையான விதிமுறைகளால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து வருகிறது.

    இதற்கு பத்தினம்திட்டா எஸ்.பி. ‘மாஸ்டர் பிளான்’ போட்டுள்ளார். கோவிலை அழிக்கக் கூடிய வகையில் திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது.

    கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பு மட்டுமே கேரள அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. கோவில் ஐயப்பனுக்கு சொந்தமானது. ஐயப்பன் மக்களுக்கு சொந்தமானவர். எனவே சபரிமலை விசயத்தில் கேரள அரசு விதித்துள்ள கெடுபிடிகளை தளர்த்த வேண்டும்.

    சபரிமலையில் தங்கி இருக்க நேரம் கிடையாது என்ற வகையில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் மத்திய மந்திரியையே கேரள அரசு இப்படி நடத்துகிறது என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன என்று எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்களது நிலைமை பரிதாபம் தான்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுக்கு சென்றுள்ளேன். தமிழக அரசு புயலுக்கு முன்னால் எடுத்த நடவடிக்கைகள் சிறப்பாக இருந்தது. தற்போது சாலையில் உள்ள தடைகளை அகற்றினால் மட்டுமே கிராமத்துக்குள் செல்லும் நிலை உள்ளது. சிலர் கஜா புயல் விவகாரத்தை அரசியல் ஆக்குகிறார்கள்.

    கஜா புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து மாநில அரசு அறிக்கை அளித்தால் அதை தேசியப் பேரிடராக அறிவிப்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன், பா.ஜனதா மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன், நாகராஜன் எம்.பி. ஆகியோர் உடன் இருந்தனர். #Sabarimala #PonRadhakrishnan

    ஐப்பசி மாத பூஜைக்காக புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை வருகிற 17-ந்தேதி (புதன்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. #Sabarimala #SaveSabarimala
    புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை விழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த நாட்களில் கேரளா மட்டும் அல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    இதுதவிர ஒவ்வொரு மலையாள மாதத்தின் (நிகரான தமிழ் மாதத்தின்) முதல் 5 நாட்களிலும், வி‌ஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திர விழா நாட்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களிலும் திரளான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து ஐயப்பனை வழிபட்டு செல்வார்கள்.

    இந்த நிலையில் நடப்பு ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை வருகிற 17-ந் தேதி (புதன்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி உண்ணிகிரு‌ஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து தீபாராதனை நடத்துவார்.

    18-ந் தேதி முதல் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உ‌ஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, பு‌ஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும். 22-ந் தேதி வரை தந்திரி ராஜீவரு தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

    முன்னதாக 18-ந் தேதி காலையில் தந்திரி கண்டரரு ராஜீவரு, மேல்சாந்தி உண்ணிகிரு‌ஷ்ணன் நம்பூதிரி முன்னிலையில், 2018-2019-ம் ஆண்டுக்கான புதிய மேல்சாந்திகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    சபரிமலை ஐயப்பன் கோவில், மாளிகப்புரம் கோவில் ஆகியவற்றிற்கு ஏற்கனவே நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள், குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள் நடப்பாண்டின் மண்டல சீசன் (நவம்பர் 16-ந் தேதி முதல்) அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் வரை ஓராண்டு காலத்திற்கு மேல்சாந்திகளாக பணியாற்றுவார்கள். தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுடன், 22-ந் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

    ஐப்பசி மாத பூஜையையொட்டி சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரள அரசின் சிறப்பு பஸ்கள் சபரிமலைக்கு இயக்கப்படும்.

    நடப்பாண்டின் மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடுத்த மாதம் (நவம்பர்) 16-ந் தேதி திறக்கப்படும்.
    சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து தேவசம் போர்டு சீராய்வு மனு தாக்கல் செய்தால் அதை அரசு எதிர்க்காது என கேரள மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். #SabarimalaVerdict
    திருவனந்தபுரம்:

    சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து தேவசம் போர்டு சீராய்வு மனு தாக்கல் செய்தால் அதை அரசு எதிர்க்காது என கேரள மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்ததும் அதை வரவேற்பதாக கேரள மாநில அரசும், திருவிதாங்கூர் தேவஸ்தானமும் கூறியது.

    கோர்ட்டு தீர்ப்பை ஏற்று பெண்கள் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்யப் போவதாக தெரிவித்தன. நாளை மறுநாள் (புதன் கிழமை) இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. அப்போது வருகிற 18-ந்தேதி முதல் பெண்களை அனுமதிப்பது பற்றிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    இந்த நிலையில் சபரி மலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் மூன்று நாட்களுக்குள் தனது முடிவை கேரள மாநில அரசு மாற்றியுள்ளது. இதற்கு முன்பு கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த கேரள மாநில அரசு தீவிரம் காட்டியது. தற்போது அரசு அதிகாரிகள் அதில் வேகத்தை குறைத்து பல்டி அடித்துள்ளனர்.

    பெண்களை சபரி மலைக்கு வர அனுமதிக்கக் கூடாது என்று பந்தள ராஜ குடும்பத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தேவசம்போர்ட்டை ராஜ குடும்பத்தினர் வலியுறுத்தியபடி உள்ளனர்.

    இதைத் தொடர்ந்து மறு சீராய்வு மனு செய்ய தேவசம் போர்டு ஆலோசித்து வருகிறது. இந்த நிலையில் மறுசீராய்வு மனுவை ஆதரித்து கேரள மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-


    சுப்ரீம் கோர்ட்டின் சபரிமலை தீர்ப்பை எதிர்த்து தேவசம் போர்டு சீராய்வு மனு தாக்கல் செய்தால் அதை அரசு எதிர்க்காது. அது சுதந்திரமாக செயல்படும் அமைப்பு. அரசின் நிலைப்பாட்டை தேவசம்போர்டு மீது திணிக்கப் போவதில்லை.

    இவ்வாறு மந்திரி சுரேந்திரன் கூறியுள்ளார்.

    சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்புக்கு கேரள மாநில காங்கிரஸ் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. ‘‘தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று கேரள காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா கூறியுள்ளார்.

    இதன் மூலம் கேரள மாநில அரசியல் கட்சிகள் அனைத்தும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. எனவே சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் சிக்கல்கள் உருவாகத் தொடங்கி உள்ளன.

    இதற்கிடையே சபரி மலைக்கு குடும்ப பெண்கள், உண்மையான பெண் பக்தர்கள் வர மாட்டார்கள். பெண்ணியவாதிகள் மட்டுமே வந்து செல்வார்கள் என்று தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறினார்.

    அவரது பேச்சு சர்ச்சையை உருவாக்கி உள்ளது. இதனால் நாளை மறுநாள் நடைபெற உள்ள தேவசம் போர்டு ஆலோசனை கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. #Sabarimala #SabarimalaTemple #SabarimalaVerdict
    புரட்டாசி மாத பூஜைகள் நிறைவு பெற்றதையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்றிரவு 10.30 மணியளவில் அடைக்கப்பட்டது. #Sabarimala
    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 5 நாட்களாக சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு அதிக பொருட்செலவில் நடத்தப்படும் படி பூஜை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

    புரட்டாசி மாத பூஜைகள் நிறைவு நாளான நேற்று சகஸ்ர கலசாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளுடன் சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இரவு 10.30 மணிக்கு அடைக்கப்பட்டது.

    மீண்டும் ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அக்டோபர் மாதம் 17-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 22-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும். இந்நாட்களில், தேவ பிரசன்ன பரிகாரத்தின் படி கூவி அழைத்து பிராயசித்தம் செய்யும் சிறப்பு வழிபாடு நடத்தப்படும் என்று தந்திரி கண்டரரு ராஜீவரு தெரிவித்தார். #Sabarimala
    ×