search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "protests"

    சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் தனி நீதிபதி வழங்கிய அனுமதியையும் ரத்து செய்தது. #ProtestsInMarina #MadrasHighCourt
    சென்னை:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு இயக்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு. சென்னை ஐகோர்ட்டில் அவர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    ‘விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி மெரினா கடற்கரையில் தொடர்ந்து 90 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு போலீஸ் கமி‌ஷனரிடம் மனு கொடுத்தேன். அவர் அனுமதி வழங்க மறுக்கிறார்.



    அதனால், மெரினா கடற்கரையில் 90 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

    இந்த மனு நீதிபதி டி.ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், மெரினா கடற்கரையில் எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்த அனுமதி வழங்க முடியாது. அங்கு கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்று வாதிட்டார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி டி.ராஜா, 90 நாட்கள் தொடர் போராட்டம் நடத்த மனுதாரருக்கு அனுமதி வழங்க முடியாது. அதே நேரம், ஒரு நாள் மட்டும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அய்யாக்கண்ணுவுக்கு அனுமதி வழங்கவேண்டும் என்று போலீசாருக்கு உத்தர விட்டார்.

    இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கை முதலில் விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச், ‘தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில், இந்த வழக்கு இறுதி விசாரணைக்காக நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கினால், தேவையில்லாத சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டதை ஏற்றுக் கொள்கிறோம்.

    மேலும், வள்ளுவர் கோட்டம், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே உள்ளிட்ட பகுதிகளில் அனுமதி வழங்க தயாராக இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    எனவே, மெரினா கடற்கரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி வழங்கிய தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்கிறோம்’ என்று உத்தரவிட்டனர். #ProtestsInMarina  #MadrasHighCourt
    தூத்துக்குடி கலவர வழக்கு தொடர்பாக வக்கீல் வாஞ்சிநாதன் சென்னையில் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் பாளை. சிறையில் அடைத்தனர். #LawyerVanchinathan #Arrested #Thoothukudi
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கடந்த 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் உயிர் இழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.

    இந்த கலவரம் தொடர்பாக போலீசார் 243 வழக்குகள் பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    அதன்படி தூத்துக்குடி சிப்காட் போலீசார் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் ஒருங்கிணைப்பாளர் மதுரையை சேர்ந்த வக்கீல் வாஞ்சிநாதன் (37), தூத்துக்குடியை சேர்ந்த வக்கீல் அரிராகவன் உள்ளிட்ட 100 பேர் மீது எந்தவித முன் அனுமதியும் இன்றி 144 தடை உத்தரவை மீறி, போலீஸ் தடுப்புகளை சேதப்படுத்துதல், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல், வாகனங்களை எரித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



    இந்த வழக்கு தொடர்பாக வக்கீல் வாஞ்சிநாதன் உள்ளிட்டவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சென்னை விமான நிலையம் முன்பு நின்று கொண்டு இருந்த வக்கீல் வாஞ்சிநாதனை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவர் விமான நிலையம் முன்பு நின்றபோது பிடிபட்டார். பின்னர் அவரை தூத்துக்குடிக்கு அழைத்து வந்தனர்.

    விசாரணைக்கு பிறகு அவர் தூத்துக்குடி 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு தமிழ்செல்வி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தர விட்டார். அதன்பேரில் அவர் பாளையங் கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

    கடந்த சில நாட்களாக போலீசார் கைது நடவடிக்கையை நிறுத்தி வைத்து இருந்தனர். தற்போது மீண்டும் கைது நடவடிக்கையை தொடங்கி இருப்பதால் தூத்துக்குடியில் பரபரப்பும், பதற்றமான நிலையும் உருவாகி உள்ளது. 
    பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் பகுதியில் 1998-ம் ஆண்டு நடத்தப்பட்ட அணு குண்டு சோதனைக்கு கண்டனம் தெரிவித்து உலக நாடுகளில் வரும் 28-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
    லண்டன்:

    பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்துக்குட்பட்ட சாகாய் மாவட்டத்துக்குட்பட்ட மலைப்பகுதியில் கடந்த 28-5-1999 அன்று பாகிஸ்தான் அணு குண்டுகளை வெடித்து சோதித்தது. இதனால், அந்த மாவட்டத்தின் பல பகுதிகளில் அணுக்கழிவு மாசுகளால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

    அப்பகுதியில் வசித்த மக்கள் நோய்வாய்ப்பட்டு பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். மேலும், இங்கு கடும் வறட்சியும், விவசாயம் செய்ய இயலாத நிலையும் நீடிக்கின்றது.

    இந்த அணு குண்டு சோதனை நடைபெற்ற 20-ம் ஆண்டை நினைவுகூரும் வகையிலும், பாகிஸ்தானிடம் உள்ள அணு ஆயுதங்களால் பலூசிஸ்தான் பகுதி மக்களுக்கு உள்ள அச்ச உணர்வை வெளிப்படுத்தும் வகையில் உலகளாவிய அளவில் ஆர்ப்பாட்டங்களை நடத்த பலூசிஸ்தான் விடுதலை இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.

    அமெரிக்கா தலைநகர் வாஷிங்டன், பிரிட்டன் தலைநகர் லண்டன், கனடாவின் வான்கோவர் நகரம், ஆஸ்திரியாவின் தலைநகரமான வியன்னா மற்றும் ஸ்வீடன் நகரில் வரும் 28-ம் தேதி நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொள்ளுமாறு அந்நகரங்களில் உள்ள பலூசிஸ்தான் மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், அன்றைய தினத்தில் #NoToPakistaniNukes என்ற ஹாஷ்டேக் உடன் டுவிட்டரில் அணு ஆயுதங்களுக்கு எதிரான இணையவழி பிரசாரம் செய்யவும் பலூசிஸ்தான் விடுதலை இயக்கம் திட்டமிட்டுள்ளது.  #TamilNews
    ×