search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prakash Javadekar"

    மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடைமுறையில், முன்பு இருந்ததுபோன்று இந்த ஆண்டும் தமிழ் உள்பட 20 பிராந்திய மொழிகளில் தேர்வை நடத்தும்படி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி உத்தரவிட்டுள்ளார். #CTETExam
    புதுடெல்லி:

    மத்திய அரசின் பள்ளிகளான கேந்திர வித்யாலயா, டெல்லி மாநில பள்ளிகள், திபெத் பள்ளிகள் போன்ற தேசிய கல்வி முறைகளில் செயல்படும் பள்ளிகளில் பணிபுரிய தேசிய ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் நடத்தப்பட உள்ளது. இதில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பாடம் எடுப்பவர்களுக்கு தனி தேர்வாகவும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் எடுப்பவர்களுக்கு மற்றொரு தேர்வும் நடத்தப்படுகிறது.

    இந்த தகுதி தேர்வில் மொழி அடிப்படையில் 2 தேர்வுகள் எழுத வேண்டும். முதல் பேப்பரை ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் ஏதாவது ஒன்றில் எழுத வேண்டும். 2-வது பேப்பரை முதல் பேப்பரில் தேர்வு செய்த மொழி அல்லாத இன்னொரு மொழியில் எழுத வேண்டும்.

    2-வது பேப்பரில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, வங்க மொழி உள்ளிட்ட 20 பிராந்திய மொழிகள் இடம் பெற்றிருந்தன. ஆனால், இந்த ஆண்டு தமிழ் உள்ளிட்ட 17 மொழிகள் இடம்பெறவில்லை. ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் ஒன்றை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தேர்வர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.


    இதுபற்றி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். முன்பு இருந்ததுபோல் தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் தேர்வு நடத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார். முன்பு இருந்ததுபோல் 20 மொழிகளில் தேர்வு நடத்த ஏற்கனவே உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #CTETExam #CTETLanguages #PrakashJavadekar
    கல்லூரி ஆசிரியர்களுக்கான கல்வி செயல்திறன் குறிகாட்டிகள் (ஏ.பி.ஐ.) முறை ரத்து செய்யப்படுவதாக மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். #PrakashJavadekar
    புதுடெல்லி:

    மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், “கல்லூரி ஆசிரியர்களுக்கான கல்வி செயல்திறன் குறிகாட்டிகள் (ஏ.பி.ஐ.) முறை ரத்து செய்யப்படுகிறது. இதனால் கல்லூரி ஆசிரியர்கள் இனி ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டியது கட்டாயம் இல்லை. ஆராய்ச்சியில் ஈடுபடுவது என்பது கல்லூரி ஆசிரியர்களின் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது ஆகும். இந்த நடவடிக்கையால் பட்ட வகுப்பு ஆசிரியர்கள், இனி பாடம் கற்பித்தலில் கவனம் செலுத்த முடியும்” என்று குறிப்பிட்டார்.

    தொடர்ந்து அவர் பேசும்போது, “கல்லூரிகளில் உதவி பேராசிரியர் (செலக்சன் கிரேடு) பதவி உயர்வுக்கு 2021 ஜூலை மாதம் முதல் முனைவர் (பி.எச்.டி.) பட்டம் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. இதே போன்று பல்கலைக்கழகங்களில் நேரடியாக உதவி பேராசிரியராக நியமனம் செய்யப்படுவதற்கும் முனைவர் பட்டம் 2021 ஜூலை மாதம் கட்டாயம் ஆகிறது” என்று கூறினார்.

    மேலும், பல்கலைக்கழக மட்டத்திலான ஆசிரியர்களுக்கு (அதாவது, முதுநிலை மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கிறவர்களுக்கு) கல்வி செயல்திறன் குறிகாட்டிகள் முறை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.  #PrakashJavadekar #tamilnews 
    சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின் எதிரொலியாக 1, 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்குவதை நிறுத்த வகை செய்யும் சட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டுவர இருப்பதாக மத்திய மந்திரி கூறியுள்ளார். #PrakashJavadekar
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த தீர்ப்பின் எதிரொலியாக 1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்குவதை நிறுத்த வகை செய்யும் சட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டுவர இருப்பதாக மத்திய மந்திரி கூறியுள்ளார்.

    சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் புருஷோத்தமன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘தேசிய கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பரிந்துரை செய்துள்ள பாடப்புத்தகங்களை மட்டுமே சி.பி.எஸ்.இ. பள்ளிகள் வாங்கி மாணவர்களுக்கு வழங்கவேண்டும். ஆனால் இதை பின்பற்றாமல் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தனியார் நிறுவனங்களிடம் இருந்து புத்தகங்களை பெற்று மாணவர்களுக்கு வினியோகம் செய்கின்றன. இதனால் மாணவர்கள் உடல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்படுகின்றனர்’ என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் செயல்பாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

    ‘தேசிய கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பரிந்துரை செய்துள்ள பாடப்புத்தகங்களை மட்டுமே தனியார் பள்ளிகள் வாங்க வேண்டும். குழந்தைகள் பாடங்களை புரிந்து, விருப்பத்துடன் மட்டுமே படிக்கவேண்டும். விதிகளின்படி 1 மற்றும் 2-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மொழி மற்றும் கணித பாடங்களையும், 3 முதல் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மொழி, கணிதம் மற்றும் சுற்றுச்சூழல் பாடங்களை மட்டுமே கற்றுத்தர வேண்டும். சி.பி.எஸ்.இ. மட்டுமின்றி மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் 1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது’ என்று நீதிபதி அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.

    இந்த நிலையில் நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவை விரைவில் நடைமுறைக்கு கொண்டுவருவோம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். கொல்கத்தாவில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது: -

    சென்னை ஐகோர்ட்டு உத்தரவை வரவேற்கிறேன். அந்த உத்தரவை படித்து வருகிறோம். அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதை கண்டிப்பாக அமல்படுத்துவோம். 1, 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்பதற்கு விரைவில் நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்படும். குழந்தைகள் கல்வியை மகிழ்ச்சியுடன் கற்கவேண்டும். கல்வி என்பது அவர்களுக்கு மன உளைச்சலை தரக்கூடாது. எந்த அளவு குழந்தைகளுக்கு கல்வியில் தேவையில்லாத பளுவை குறைக்கமுடியுமோ, அதை நிச்சயம் குறைப்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளனர் என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவ்டேகர் குற்றம் சாட்டியுள்ளார். #congress #jds #prakashjavadekar

    பெங்களூரு:

    பெங்களூரு மல்லேஸ் வராவில் உள்ள பாரதீய ஜனதா அலுவலகத்தில் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவ்டேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாரதீய ஜனதாவை காங்கிரஸ் தோற்கடித்து விட்டதாக ராகுல்காந்தி கூறுகிறார். உண்மையில் கர்நாடகத்தில் பாரதீய ஜனதா தான் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து உள்ளது. இதனை ராகுல் மாற்றி கூறியுள்ளார். 40 எம்.எல்.ஏ.க்கள் இருந்த பாரதீய ஜனதாவுக்கு தற்போது 104 எம்.எல்.ஏ.க்கள் கிடைத்துள்ளனர். ஆட்சியில் இருந்த காங்கிரசுக்கு 78 எம்.எல்.ஏ.க்கள் தான் கிடைத்துள்ளனர்.

    தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளனர்.

    தேர்தலுக்கு முன்பு மதசார்பற்ற ஜனதா தளத்தை பாரதீய ஜனதாவின் பீ டீம் என்று காங்கிரஸ் கூறியது. தேர்தலுக்கு பிறகு காங்கிரசின் பீ டீமாக மதசார்பற்ற ஜனதா தளம் செயல்படுகிறது என்ற உண்மையை மக்கள் புரிந்து கொண்டு விட்டனர்.


    இந்த புதிய கூட்டணியால் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் குறித்து விசாரணை செய்யப்படாமல் கோப்புகள் மூடப்படும். தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று குமாரசாமி கூறியிருந்தார். இப்போது அவர் அதை செய்வாரா என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #congress #jds #prakashjavadekar

    ×