search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "occupation"

    உடுமலையில் சுடுகாடு ஆக்கிரமிப்பை கண்டித்து 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்து அமராவதி நகர், சாயப்பட்டறை உட்பட பல கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் அடிப்படை வசதிகள் கூட கிடையாது. குறிப்பாக பொதுமக்கள் பயன்படுத்தும் சுடுகாட்டை கூட ஊராட்சி நிர்வாகத்தினர் வீட்டு மனைகளாக மாற்றி விட்டனர். இதனால் சுடுகாட்டிற்கு பல கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து செல்ல வேண்டியுள்ளது.

    இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ள சுடுகாட்டை மீட்டு தர வேண்டும், குடிநீர் பிரச்சனை, இலவச வீட்டுமனை வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உடுமலை தாசில்தார் அலுவலகம் முன்பு கொட்டும் மழையிலும் வருவாய் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் தாசில்தார் தங்கவேலுவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மூர்த்தி, பால் நாராயணணன் வக்கீல் சாதிக்பாட்ஷா உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    பள்ளிக்கரணை அருகே உள்ள சித்தாலபாக்கம் பகுதியில் ஆக்கிரமித்து கட்டிய 10 கடைகள் மற்றும் ஒரு வீட்டை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
    சோழிங்கநல்லூர்:

    பள்ளிக்கரணை அருகே உள்ள சித்தாலபாக்கம் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து 10 கடைகள், வீடு கட்டப்பட்டு இருந்தது.

    இதனை அகற்ற ஆக்கிரமிப்பாளர்களுக்கு அதிகாரிகள் ஏற்கனவே நோட்டீஸ் வழங்கினர். ஆனால் அவர்கள் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றவில்லை.

    இந்த நிலையில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற தாசில்தார் கல்யாணி தலைமையில் அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர்.

    அவர்கள் ஆக்கிரமித்து கட்டி இருந்த 10 கடைகள், ஒரு வீட்டை இடித்து அகற்றினர். பள்ளிக்கரணை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    கூடுவாஞ்சேரி அருகே அடையாறு ஓடையில் கட்டப்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டன. இதில் அரசுக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.

    செங்கல்பட்டு:

    வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்காக காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    நீர்வழிபாதைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன. மழைநீர் கால்வாய்கள் சீரமைப்பு, நீர் ஓடைகளை அகலப்படுத் துதல், ஏரிகளை தூர்வாருதல் போன்ற பணிகளை வருவாய் துறையினரும், பொதுப் பணித் துறையினரும் இணைந்து செய்து வருகிறார்கள்.

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் சின்னையா உத்தரவுப்படி செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோவில், காட்டாங்கொளத்தூர், மறை மலைநகர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர், மண்ணிவாக்கம் பகுதிகளில் ஏரிகள், குளங்களுக்கு செல்லும் கால்வாய்கள், ஓடைகள் அகலப்படுத்தப் படுகின்றன.

    இதையொட்டி கூடுவாஞ்சேரி அருகே உள்ள சங்கர் கணேஷ் நகர் பகுதியில் அடையாறு ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்றக்கோரி நோட்டீசு அனுப்பப்பட்டு இருந்தது. இந்த வீடுகளை இடிக்கும் பணி நேற்று தொடங்கியது.

    செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் முத்து வடிவேலு மேற்பார்வையில் தாசில்தார் பாக்கியலட்சுமி, பொதுப்பணித்துறை உதவி என்ஜினீயர் பிரகாஷ் நேவ்பிரபு முன்னிலையில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்துறை, பொதுப்பணித்துறை ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.

    அடுக்குமாடி வீடுகள் உள்பட மொத்தம் 19 வீடுகள் இடிக்கப்பட்டன. இதில் அரசுக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.25 கோடி. வீடுகளை இழந்த அனைவருக்கும் நாவலூரில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. ‘‘இந்த அக்கிரமிப்பு வீடுகளை அகற்றியதால் இந்த பகுதியில் இனி மழை காலத்தில் வெள்ளம் தேங்காது’’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலூர் பஸ் நிலையம் முதல் அரசு கல்லூரி வரை இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி இன்று காலை தொடங்கியது. அசம்பாவிதம் நடக்காமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    மேலூர்:

    மேலூரில் கடந்த சில மாதமாக போக்குவரத்து நெரிசல் காரணமாக அடிக்கடி விபத்து ஏற்பட்டது. இதில் உயிரிழப்பு நேர்ந்தது. இவற்றுக்கு மதுரை -திருச்சி நெடுஞ்சாலையில் 2 கி.மீ. தூரத்திற்கு கடைகள் முன்புள்ள ஆக்கிரமிப்பே காரணம் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் குற்றம் சாட்டினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி மேலூர் பஸ் நிலையம் முதல் அரசு கல்லூரி வரை இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி இன்று காலை தொடங்கியது.

    மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சக்கரவர்த்தி தலைமையில் நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குநர் சீனிவாசன், நகராட்சி கமி‌ஷனர் கண்ணன், தாசில்தார் சரவணன் ஆகியோர் முன்னிலையில் சாலையின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

    ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆக்கிரமிப்பு அகற்றத்தை அந்தப்பகுதி மக்கள் வரவேற்று அதிகாரிகளை பாராட்டினர்.

    முருங்கப்பாக்கத்தில் பொதுஇடத்தை ஆக்கிரமிப்பு செய்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கர்ப்பிணி பெண் தாக்கப்பட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை முருங்கப்பாக்கம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது33). வீட்டிலேயே ஊதுபத்தி தயாரித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த ராமலிங்கம். வீட்டுக்கும் இடையே பொதுஇடம் இருந்தது. இதனை இருவரும் பயன்படுத்தி வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த இடத்தை முழுவதையும் ஆக்கிரமித்து ராமலிங்கம் கர்ஷெட் அமைத்தார். இதனை வெங்கடேசன் தட்டிக்கேட்ட போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் நேற்று ராமலிங்கம் அமைத்திருந்த கார்ஷெட் மீது யாரோ கல்வீசி எறிந்ததாக கூறப்படுகிறது. இதனை வெங்கடேசன்தான் செய்ததாக கருதி ராமலிங்கமும், அவரது மருமகனும் சேர்ந்து வெங்கடேசனை தாக்கினர். இதனை தடுக்க முயன்ற வெங்கடேசனின் கர்ப்பிணி மனைவியான லதாவையும் அவர்கள் தாக்கி ஆடைகளை கிழித்து மானபங்கம் செய்தனர். இந்த தாக்குதலில் காயம் அடைந்த லதா ராஜீவ்காந்தி அரசு மகப்பேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    இதுகுறித்து வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சிவகங்கை நகரில் நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆனால் திடீர் நடவடிக்கை எடுத்ததாக கூறி வர்த்தகர்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை நகரின் முக்கிய வர்த்தக வீதியான நேருபஜார் பகுதியில் ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் இருந்தது. இதனால் ஆக்கிரமிப்புகளை வர்த்தகர்கள் முன்வந்து உடனடியாக அகற்ற வேண்டும், இல்லையென்றால் அதிகாரிகள் அகற்றுவார்கள் என்று நகராட்சி நிர்வாகம் சார்பில் நேற்றுமுன்தினம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை நகராட்சி ஆணையாளர் அயூப்கான், தாசில்தார் ராஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அழகர், ரவிச்சந்திரன், மோகன் ஆகியோர் தலைமையிலான போலீசார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சென்று நேருபஜாரில் கடைகளின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள். அப்போது அதிகாரிகளின் இந்த செயலுக்கு அந்த பகுதி வர்த்தகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    கடைகளுக்கு வரும் பொதுமக்கள் மழை மற்றும் வெயிலில் இருந்து தங்களை பாதுகாக்க கடையில் இருந்து 3 அடிக்கு தரையில் கால் ஊன்றாமல் மேற்கூரை அமைக்க அனுமதி பெற்று தான் அமைத்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர். அத்துடன் உரிய அவகாசம் தராமல் திடீரென்று அதிகாரிகள் அகற்றுவது நியாயம் இல்லை என்றனர்.

    இருப்பினும் அந்த வீதியில் இருந்த ஆக்கிரமிப்பு முழுவதையும் அதிகாரிகள் அகற்றினர்.

    இதுகுறித்து நகர் வர்த்தகர் சங்க தலைவர் அறிவுத்திலகம் கூறும்போது, சிவகங்கையில் முக்கிய வர்த்தக பகுதியாக நேருபஜார் உள்ளது. இங்கு தான் ஏராளமான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவார்கள்.

    அவ்வாறு வரும் பொதுமக்கள் மழை மற்றும் வெயில் காலங்களில் தங்களை பாதுகாக்க வசதியாக அனுமதிபெற்று மேற்கூரை அமைத்துள்ளோம். இந்தநிலையில் அதனை ஆக்கிரமிப்பு கூறி எந்தவித அவகாசம் தராமல் திடீரென்று அகற்றியதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    எனவே இதுதொடர்பாக இன்று(ஞாயிற்றுக்கிழமை) வர்த்தகர் மற்றும் அனைத்துக்கட்சியினர் கூடி அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்ய உள்ளோம் என்றார்.

    அதிகாரிகள் கூறுகையில், சிவகங்கை நகரில் நேரு பஜாரை தொடர்ந்து மற்ற பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது என்றனர். 
    சிதம்பரத்தில் 3-வது நாளாக கோவிந்தசாமி நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் மழைக் காலங்களில் குடியிருப்புகளை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்காதபடி அந்த தண்ணீர் வடிந்து செல்லும் வகையில் தில்லை காளியம்மன் ஓடை அமைக்கப்பட்டது. காலங்கள் செல்ல , செல்ல ஆக்கிரமிப்பாளர்களின் ஆதிக்கம் அதிகரித்து தில்லை காளியம்மன் ஓடையின் இருபுறமும் உள்ள கரையை ஆக்கிரமித்து குடிசைகள் , அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டபட்டுள்ளன.

    இதனால் தில்லை காளியம்மன் ஓடை சுருங்கி மழை நீர் வடிந்து செல்வதில்லை. இதனால் மழை காலங்களில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து நின்றன. எனவே தில்லை காளியம்மன் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் வழிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இதையடுத்து வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தில்லை காளியம்மன் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 369 கட்டிடங்களை கணக்கெடுத்து இடிக்க பொதுப்பணி துறையினர் மூலம் நோட்டீசு வழங்கப்பட்டது.

    மாவட்ட கலெக்டர் தண்டபாணி உத்தரவின் பேரில் சிதம்பரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன் தலைமையில் அதிகாரிகள் தில்லை காளியம்மன் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட் டிருந்த வீடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். இது வரை 3 கோவில்கள் உள்பட 177 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன.

    இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று 3-வது நாளாக கோவிந்தசாமி நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ஜவஹர் தலைமையிலான 200-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    சிதம்பரம் நகராட்சியில் கடந்த சில ஆண்டுகளாகவே பாதாள சாக்கடை திட்டம் என்ற பெயரில் சிதம்பரம் நகரத்தையே புரட்டிப்போட்டு பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் பணிகள் நடந்து வருகிறது.

    மேலும் சீரான குடிநீர் விநியோகம் உள்பட எந்தவிதமான அத்தியாவசிய தேவைகளும் நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறு பல பிரச்சினைகள் இருந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக தில்லை காளியம்மன் ஓடையின் கரையில் கட்டப்பட்டு இருந்த வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன.

    கடந்த 80 ஆண்டுகளாக குடியிருந்து வரும் பொதுமக்களின் வீடுகளை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் நகர செயலாளர் ராமச்சந்திரன், கூறியதாவது:-

    தில்லை காளியம்மன் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் தற்போது இடித்து அகற்றப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் குறைந்த அளவே ஆழப்படுத்தப்படும். இந்த நிலையில் தில்லை காளிம்மன் ஓடை அருகே உள்ள வீடுகள் இடித்து அகற்றப்பட்டு வருகின்றன.

    எந்தவித மாற்று ஏற்பாடுகளும் செய்யாமல் பொதுமக்கள் கட்டியிருந்த வீடுகளை இடித்து அகற்றி, அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வகையில் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் செயல்பட்டு வருகிறது.

    மேலும் இடித்து அகற்றப்படும் வீடுகளின் உரிமையாளர்களுக்கு நஷ்டஈடும், மாற்று இடமும் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் முடிவண்ணன் கூறியதாவது:-

    தில்லைக்காளியம்மன் ஓடையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடுகளை ஐகோர்ட்டின் உத்தரவின் பேரில் அரசு அதிகாரிகள் இடித்து அகற்றி வருகின்றனர். இதில் எங்களுக்கு எந்த ஆட்சேபணை இல்லை. அதே ஐகோர்ட்டு உத்தரவில்தான், ஆக்கிரமிப் பாளர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால், அதை பொருட்படுத்தாமல் அரசு அதிகாரிகள் எந்தவித மாற்று ஏற்பாடும் செய்யாமல் வீடுகளை இடித்து அகற்றி வருகின்றனர். இதனால் அவர்களின் உடமைகள் அனைத்தும் ரோட்டில் வீசி எறியப்படுகின்றன.

    இதனால் பொதுமக்கள் தங்களது உடமைகளை இழந்து நடுரோட்டில் தவிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×