search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிசைகள்"

    • பஸ் நிலைய பகுதி சுகாதார கேடால் துர்நாற்றம் வீசி வருகிறது.
    • பஸ்கள் நுழைவு பகுதியில் ஆக்கிரமிப்பு குடிசைகள் ஏராளம் உள்ளன.

    சென்னை பாரிமுனை பிராட்வே பஸ் நிலையம் பழமையான பஸ் நிலையங்களில் ஒன்று ஆகும். சென்னை மாநகரத்தின் பல்வேறு இடங்களுக்கு நூற்றுக்கணக்கான பஸ்கள் இங்கு இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.

    தினமும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் பல்வேறு பகுதிகளுக்கு இங்கிருந்து பஸ்சில் சென்று வருகிறார்கள். இதனால் பாரிமுனை பஸ் நிலையம் எப்போதும் மிக பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தற்போது பெய்த பலத்த மழையால் பாரிமுனை பஸ்நிலையம் குண்டும் குழியுமாக மாறி உள்ளது.

    இதனால் பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் பஸ்கள் தட்டு தடுமாறி செல்கின்றன. இதனால் பயணிகள் தினமும் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    பல்வேறு இடங்களிலிருந்து வரும் மாநகர பஸ்களும் இந்த குண்டும் குழியில் சிக்கி திணறி வருகின்றன.

    மேலும் இந்த பஸ் நிலைய பகுதி சுகாதார கேடால் துர்நாற்றம் வீசி வருகிறது. தற்போது பெய்த மழை நீரால் அங்கு கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. இதனால் பயணிகள் பலர் முகம் சுளித்து செல்கிறார்கள்.

    பல ஆண்டுகளாக இந்த பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு எந்த வித அடிப்படை வசதியும் சரிவர செய்து கொடுக்கப்படவில்லை.

    பயணிகள் அமருவதற்கு இருக்கைகள் இல்லை. போதுமான கழிவறை வசதிகள் இல்லை. சரிவர பராமரிப்பு செய்யப்படாததால் சுகாதாரம் இல்லை. பஸ் நிலைய வளாக பகுதிகள் முழுவதும் குப்பை குவியல்களாக கிடக்கின்றன. இதனால் இந்த பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    பல ஆண்டுகளாக இந்த நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. மேலும் பஸ் நிலைய வளாகம் முழுவதும் ஆக்கிரமிப்பு கடைகள், தள்ளுவண்டி பழக்கடைகள், காய்கறி கடைகள் நிரம்பி உள்ளன. பஸ் நிலைய நுழைவு வாயில் முன் சிறிய அம்மன் கோவில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. பஸ்கள் நுழைவு பகுதியில் ஆக்கிரமிப்பு குடிசைகள் ஏராளம் உள்ளன. இதனால் பஸ்கள் எளிதில் பஸ் நிலையத்துக்குள் செல்ல முடியவில்லை.

    மேலும் பொதுமக்கள், பயணிகள் தங்களது இரு சக்கர வாகனங்களை நிறுத்தி செல்வதற்கு பார்க்கிங் வசதி எதுவும் இல்லை.

    எனவே பயணிகளின் நலன் கருதி உடனடியாக பிராட்வே பஸ் நிலையத்தில் உள்ள குண்டும் குழிகளை சீரமைத்து அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

    ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என பயணிகள், மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    பஸ் பயணி ஈஸ்வரியம்மாள்:-

    திருவான்மியூரில் நான் நீண்ட காலமாக பூ வியாபாரம் செய்து வருகிறேன்.

    வியாபாரத்திற்கு பூ வாங்குவதற்காக பல வருடங்களாக பாரிசில் தான் பூ வாங்கி செல்வேன். பெரும்பாலும் பாரிஸ் பஸ் நிலையம் சுகாதாரமற்ற நிலையில் எப்போதும் நெரிசலாகதான் காணப்படும்.

    மழை காலங்களில் நடப்பதற்கும் அறுவறுப்பாகவே இருக்கும். பொது மக்கள், வியாபாரிகள், பள்ளி மாணவர்கள் என அனைவரும் இங்குதான் பெரும்பாலும் பஸ் ஏறுவார்கள். இப்படி பலர் பயன்படுத்தும் இந்த பஸ் நிலையம் சுகாதார மற்ற நிலையிலும் ஆக்கிரமிப்பு கடைகளுமாகவே காட்சியளிக்கிறது. இங்கு உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளையும் ஆக்கிரமிப்பு கடைகளையும் அகற்ற வேண்டும். அவ்வாறு செய்தால் பொதுமக்களுக்கு இடையூறு எதுவும் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

    பஸ் பயணி மோகன் கூறியதாவது:-

    சென்னையில் மிக முக்கிய பஸ் நிலைய மாக திகழ்ந்து வரும் பிராட்வே பஸ் நிலையத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. பயணிகள் சுகாதார சீர்கேட்டால் பாதிக்கப்படுகிறார்கள். அசுத்தம் நிறைந்து காணப்படும். பாரிமுனை பஸ் நிலையத்தை புதுப்பித்து சீரமைக்க வேண்டும். பஸ்நிலைய வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி உடனடியாக அகற்ற வேண்டும். நவீன முறையில் பல்வேறு சிறப்பு வசதிகளுடன் புதுப்பிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். பஸ் நிலையத்தில் கழிவறைகள் சுகாதாரமாக பேண வேண்டும். வாகனம் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிதம்பரத்தில் 3-வது நாளாக கோவிந்தசாமி நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் மழைக் காலங்களில் குடியிருப்புகளை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்காதபடி அந்த தண்ணீர் வடிந்து செல்லும் வகையில் தில்லை காளியம்மன் ஓடை அமைக்கப்பட்டது. காலங்கள் செல்ல , செல்ல ஆக்கிரமிப்பாளர்களின் ஆதிக்கம் அதிகரித்து தில்லை காளியம்மன் ஓடையின் இருபுறமும் உள்ள கரையை ஆக்கிரமித்து குடிசைகள் , அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டபட்டுள்ளன.

    இதனால் தில்லை காளியம்மன் ஓடை சுருங்கி மழை நீர் வடிந்து செல்வதில்லை. இதனால் மழை காலங்களில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து நின்றன. எனவே தில்லை காளியம்மன் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் வழிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இதையடுத்து வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தில்லை காளியம்மன் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 369 கட்டிடங்களை கணக்கெடுத்து இடிக்க பொதுப்பணி துறையினர் மூலம் நோட்டீசு வழங்கப்பட்டது.

    மாவட்ட கலெக்டர் தண்டபாணி உத்தரவின் பேரில் சிதம்பரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன் தலைமையில் அதிகாரிகள் தில்லை காளியம்மன் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட் டிருந்த வீடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். இது வரை 3 கோவில்கள் உள்பட 177 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன.

    இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று 3-வது நாளாக கோவிந்தசாமி நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ஜவஹர் தலைமையிலான 200-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    சிதம்பரம் நகராட்சியில் கடந்த சில ஆண்டுகளாகவே பாதாள சாக்கடை திட்டம் என்ற பெயரில் சிதம்பரம் நகரத்தையே புரட்டிப்போட்டு பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் பணிகள் நடந்து வருகிறது.

    மேலும் சீரான குடிநீர் விநியோகம் உள்பட எந்தவிதமான அத்தியாவசிய தேவைகளும் நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறு பல பிரச்சினைகள் இருந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக தில்லை காளியம்மன் ஓடையின் கரையில் கட்டப்பட்டு இருந்த வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன.

    கடந்த 80 ஆண்டுகளாக குடியிருந்து வரும் பொதுமக்களின் வீடுகளை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் நகர செயலாளர் ராமச்சந்திரன், கூறியதாவது:-

    தில்லை காளியம்மன் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் தற்போது இடித்து அகற்றப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் குறைந்த அளவே ஆழப்படுத்தப்படும். இந்த நிலையில் தில்லை காளிம்மன் ஓடை அருகே உள்ள வீடுகள் இடித்து அகற்றப்பட்டு வருகின்றன.

    எந்தவித மாற்று ஏற்பாடுகளும் செய்யாமல் பொதுமக்கள் கட்டியிருந்த வீடுகளை இடித்து அகற்றி, அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வகையில் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் செயல்பட்டு வருகிறது.

    மேலும் இடித்து அகற்றப்படும் வீடுகளின் உரிமையாளர்களுக்கு நஷ்டஈடும், மாற்று இடமும் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் முடிவண்ணன் கூறியதாவது:-

    தில்லைக்காளியம்மன் ஓடையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடுகளை ஐகோர்ட்டின் உத்தரவின் பேரில் அரசு அதிகாரிகள் இடித்து அகற்றி வருகின்றனர். இதில் எங்களுக்கு எந்த ஆட்சேபணை இல்லை. அதே ஐகோர்ட்டு உத்தரவில்தான், ஆக்கிரமிப் பாளர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால், அதை பொருட்படுத்தாமல் அரசு அதிகாரிகள் எந்தவித மாற்று ஏற்பாடும் செய்யாமல் வீடுகளை இடித்து அகற்றி வருகின்றனர். இதனால் அவர்களின் உடமைகள் அனைத்தும் ரோட்டில் வீசி எறியப்படுகின்றன.

    இதனால் பொதுமக்கள் தங்களது உடமைகளை இழந்து நடுரோட்டில் தவிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×