search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new moon"

    • ராமேஸ்வரம் கோவிலுக்கு எதிரே உள்ள கடலே ‘‘அக்கினி தீர்த்தம்’’ ஆகும்.
    • மண்ணால் லிங்கம் செய்து, பூஜித்து, பித்ரு தர்ப்பணம் செய்வது சிறப்பு.

    அமாவாசை திதியில் கடலில் நீராடுவது மிகவும் போற்றப்படுகிறது. இந்நாளில் கடலில் நீராடி முன்னோர்களுக்கு பிதுர் பூஜை செய்தால், குடும்பத்தில் சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறுவதுடன், முன்னோர் களின் ஆசீர்வாதமும் கிடைக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

    தீர்த்தம் என்பது நம் பாவங்களைப் போக்கி, ஆத்ம சுத்தம் தந்து, நம்மை ஆரோக்கியமுடன் வாழவைக்கும் சக்தி கொண்டது என ஞான நூல்கள் கூறுகின்றன.

    கடல் நீராடலுக்கும், பிதுர் பூஜைக்கும், தோஷ நிவர்த்திக்கும் மிகவும் புகழ் பெற்றதாக திகழ்வது ராமேஸ்வரம் தலத்தில் உள்ள அக்னி தீர்த்தக் கடலாகும். இத் தீர்த்தத்தில் ராமபிரான் நீராடி சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

    ராமேஸ்வரம் கோவிலுக்கு எதிரே உள்ள கடலே ''அக்கினி தீர்த்தம்'' ஆகும். சீதை மீது சந்தேகப்பட்ட ராமர், சீதையை தீக்குளிக்கச் சொன்ன போது, சீதை தீக்குள் இறங்கியதும், சீதையின் கற்புக்கனல் தாங்காது, அக்கினி ஓடிவந்து இந்த கடலில் குளித்துதான் குளிர்ந்தது என்று புராணங்கள் கூறுகின்றன. இதனாலேயே இந்த தீர்த்தம் ''அக்கினி தீர்த்தம்'' என்று அழைக்கப்படுகிறது.

    அக்கினி தீர்த்தம் என்ற பெயருக்கேற்ப இந்த தீர்த்தத்தில் நீராடும் போது வெதுவெதுப்பாக இருக்கிறது.

    இந்த அக்கினி தீர்த்தக் கடல் ஆழமும் இல்லை, அலையும் இல்லை. ஆனால், இந்த அக்கினி தீர்த்தத்தில் குளிக்க எந்தவித நியமமும் கிடையாது. யாரும், எந்நேரமும் அக்கினி தீர்த்தத்தில் குளிக்கலாம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    நம் நாட்டில் வேறு எங்கும் கடல் ''அக்கினி தீர்த்தத்தில்'' இருப்பது போல் அமைதியாக இருப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இந்த அக்கினி தீர்த்தக் கரையில் ஆதி சங்கரர் வந்து நின்ற இடம் இருக்கிறது. இந்த அக்கினி தீர்த்தக் கடலில் குளிப்பது, கடலில் குளிப்பது போல் அல்லாமல் பெரிய ஏரியில் குளிப்பது போல் அமைதியாக குளிக்க முடியும். இந்த அக்கினி தீர்த்தக் கரையில் மண்ணால் லிங்கம் செய்து, பூஜித்து, பித்ரு தர்ப்பணம் செய்வது சிறந்த ஒரு புண்ணியம் ஆகும்.

    இந்த தீர்த்தங்கள் யாவும் இயற்கையில் காந்த சக்தி மிகுந்தவையாகவே உள்ளன. இது உடல் ஆரோக்கியத்தை வளப்படுத்தக் கூடியதாகும். உடம்பின் அணுசக்தியை வலுப்படுத்தக் கூடியதும் ஆகும்.

    இந்த தீர்த்தங்களின் மின்னோட்ட மகிமையை தங்களது ஞானத்தாலும், யோகத்தாலும் அறிந்த நமது முன்னோர்கள் இந்த தீர்த்தங்களை ஏற்படுத்தி, அதை ஆன்மிகத்தோடு இணைத்து நமக்கு வழங்கி உள்ளார்கள்.

    இத்தகைய சிறப்புமிக்க தீர்த்தங்களில் நீராடுவதால் புத்திர பாக்கியம் உண்டாகிறது. உடல் பிணி தீருகிறது. பாவங்கள் தொலைகிறது. அனைத்து நலன்களும் கிடைக்கின்றன. இந்த தீர்த்தங்களில் நீராடித்தான் நீண்ட காலம் குழந்தை இல்லாமல் இருந்த ராமகிருஷ்ண பரமஹம்சரின் பெற்றோர்களுக்கு குழந்தைகள் பிறந்தனவாம். இதனால்தான் ''ராமேஸ்வரம் போய் குளிக்காதவன் போல'' என்று ஒரு பழமொழி சொல்கிறார்கள். இப்பழமொழி, ராமேஸ்வரத்தில் தீர்த்தம் ஆடுவது எவ்வளவு சிறப்பு என்பதை எடுத்துரைக்கிறது.

    அயோத்தி சென்று முடிசூட்டிக் கொண்ட ராமர், மீண்டும் ராமேஸ்வரத்திற்கு வந்து தீர்த்தமாடியதாக ''ஆனந்த ராமாயணம்'' கூறுகிறது.

    இத்தகைய சிறப்புமிக்க தீர்த்தங்களில் ஒவ்வொருவரும் நீராடுவது அவசியம் ஆகும். இங்கு, தங்குவதில் இருந்து உணவு, போக்குவரத்து என அனைத்து வசதிகளும் உள்ளன.

    ஆலயத்தின் உள்ளே உள்ள இருபத்தி இரண்டு தீர்த்த கிணறுகளிலும் குறிப்பிட்ட காசு கொடுக்க, அங்குள்ள பையன்கள் நமக்கு தண்ணீர் இறைத்து ஊற்றுவார்கள். ஒவ்வொரு இந்துவும், ''காசி ராமேஸ்வரம்'' பயணம் மேற்கொள்வது முக்கிய கடமைகளில் ஒன்றாகும்.

    இதனை மேற்கொள்ளும் முறையானது, முதலில் ராமேஸ்வரம் வந்து கடலில் நீராடி, ராமநாதரை வழிபட்ட பின்பு, இங்கிருந்து மண்ணை எடுத்துக் கொண்டு காசி சென்று, கங்கையில் கரைத்து, கங்கையில் நீராடி விசுவநாதரை வழிபட்டு, பின்பு அங்கிருந்து கங்கை நீரைக் கொண்டு வந்து ராமேஸ்வரம் ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்து, வணங்கி, ''காசி ராமேஸ்வர'' பயணத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

    மேலும் ராமேஸ்வரம் தீர்த்தமாட செல்லும் முறையானது முதலில் ராமநாதபுரத்தை ஒட்டி உள்ள ''உப்பூர் விநாயகர்'' கோவில் தீர்த்தத்தில் நீராடி, விநாயகரை வணங்கி தொடங்க வேண்டும். இலங்கை செல்ல கடலைக் கடப்பதற்கு முன், ராமர் இங்கேதான் நீராடிவிட்டு, சங்கல்பம் செய்து கொண்டு சென்றார்.

    இதன்பின் தேவிபட்டினத்தில் கடலுக்குள் உள்ள நவ பாஷாண நவக்கிரகங்களை வழிபட்டு, அங்குள்ள கடலிலும், சக்கர தீர்த்தத்திலும் நீராட வேண்டும். பின்பு, திருப்புல்லாணி வந்து இங்குள்ள சக்கர தீர்த்தத்தில் நீராட வேண்டும். பின்பு, தனுஷ்கோடி வந்து சேது தீர்த்தத்தில் நீராட வேண்டும். பின்பு ஆலயத்தின் வெளியே உள்ள தீர்த்தங்களில் நீராட வேண்டும். பின்பு ஆலயத்தின் எதிரே உள்ள கடல் ஆகிய ''அக்கினி தீர்த்தத்தில்'' நீராட வேண்டும்.

    பின்பு ஆலயம் வந்து 22 தீர்த்தங்களிலும் நீராடி, இறைவனையும், அம்பாளையும் வழிபட்டு, பின்பு மீண்டும் திருப்புல்லாணி வந்து தீர்த்தமாடி, அன்னதானம் செய்துவிட்டு, ராமநாதபுரம் சென்று அங்கு அரண்மனையில் உள்ள சேதுபதி மன்னன் சிலையை தரிசிக்க வேண்டும். இதுவே ராமேஸ்வரம் தீர்த்தமாடலின் விதிமுறையாகும்.

    ராமேஸ்வரம் திருக்கோவில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையில் திறந்திருக்கும். இதில் மதியம் ஒரு மணி முதல் மூன்று மணி வரை கோவில்நடை பூட்டி இருக்கும். நாள்தோறும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது. ஆடி அமாவாசை அன்று நாள் முழுவதும் பூஜையும், அர்ச்சனையும், தரிசனமும் பக்தர்களுக்கு உண்டு.

    தினமும் காலை 5 மணிக்கு நடைபெறும் ''திருவனந்தல் பூஜை''யில் முக்கிய அபிஷேகங்கள் உண்டு. இதில், ''மரகதலிங்கத்தை'' மூலவருக்கு முன்பாக வைத்து, அபிஷேகம் செய்வார்கள். இதை தரிசிப்பது மிகவும் விசேஷமானது ஆகும்.

    இத்தலத்தில் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய, கட்டணத்திற்கு கங்கை தீர்த்தம் கிடைக்கும். இதேபோல், கங்கை தீர்த்தம் கொண்டு வருபவர்கள் கட்டணம் செலுத்தியே இறைவன் அபிஷேகத்திற்குக் கொடுக்க வேண்டும்.

    இந்த தீர்த்த சொம்பு பித்தளை, வெங்கலப் பாத்திரம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

    மேலும் இந்த ராமேஸ்வர தலத்தில் பிதுர்களுக்கு தர்ப்பணம் செய்வது, புத்திர பாக்கியத்துக்கான பரிகாரம், பிதுர்கள் தோஷம் போக்குதல் முதலியன சிறப்பான முறையில் நடைபெறுகிறது. இத்தகைய சிறப்புமிக்க, இந்தியாவின் தலை சிறந்த தீர்த்தமாகிய ''ராமேஸ்வரம்'' பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆலய நிர்வாக அதிகாரியைத் தொடர்பு கொள்ளாலம்.

    இத்தகைய சிறப்புமிக்க ராமேஸ்வரம் தீர்த்தங்களில் ஒவ்வொரு இந்துவும் நீராட வேண்டியது முக்கிய கடமைகளில் ஒன்றாகும்.

    அக்னி தீர்த்தம் எல்லாக் காலங்களிலும் வெது வெதுப்பாக இருக்கும். மேலும், அலைகள் அதிக மில்லாமல் ஆபத்தின்றி நீராடவும் இந்த தீர்த்தம் அருள்புரிகிறது!

    ராமேஸ்வரம் சேதுக் கரை கடல் நீர் சுமார் இரண்டு லட்சம் மைல்கள் சுற்றிச் சுழன்று வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதனால் இக்கடல் நீரோட்டம் அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, நவமி ஆகிய நாட்களில் அதிக வேகம் பெறுவதால், கடலின் அடியிலுள்ள மூலிகைகள், சங்கு, பவளம் போன்றவற்றின் ஜீவ சத்துகள் புரட்டப் பட்டு கடலின் மேல்மட்டத்திற்கு வருகின்றன. அந்த நாட்களில் அக்னி தீர்த்தக் கடல் நீர் அமிர்தம் கலந்த நீராகவும், உடல்நலத்தைக் காக்க உதவுவதாகவும் கருதப்படுகிறது.

    கடலில் எல்லா காலத்திலும் நீராடக் கூடாது என்பது விதியாகும். ஆனால், அக்னி தீர்த்தமான இக்கடலில் எல்லா நாட்களிலும் எந்த வேளையிலும் நீராடலாம் என்று சேது மகாத்மியம் என்ற நூல் கூறுகிறது.

    இந்த தீர்த்தத்தில் நீராடினால் கங்கை நதியில் நீராடிய பலன் கிட்டும், கிரக தோஷங் கள் நீங்கும். நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு பரிகாரம் செய்து நல்ல பலன் பெறுகிறார்கள். புத்திர தோஷம், பிதுர்தோஷம் நீக்கும் தீர்த்தம் என்றும் இது போற்றப்படுகிறது.

    ஆடி அமாவாசையில் பிதுர்பூஜையை வேத விற்பன்னர் மேற்பார்வை யில் செய்வதால், முன்னோர்கள் நரகத்திலிருந்தாலும் நற்கதி அடைவார்களாம்.

    பிதுர்பூஜை செய்தபின் தானதர்மங்கள், அன்னதானம் செய்வது சிறப்பிக்கப்படுகிறது. வசதி இல்லாதவர்கள் அங்குள்ள பசுமாட்டுக்கு வாழைப் பழங்கள், அகத்திக் கீரை கொடுத்தாலும் புண்ணியம் கிட்டும்.

    • தை மாதத்தில் 18 நாள் புகழ்பெற்ற குண்டம் திருவிழா நடைபெறுகிறது.
    • மாசாணி அம்மன் அவதார தலம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

    1. ஆனைமலை மாசாணி அம்மன் ஆலயம் கோவையில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவிலும், பொள்ளாச்சியில் இருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. காரில் சென்றால் சுமார் 1 மணி நேரத்தில் சென்று விடலாம்.

    2. மாசாணி அம்மன் அவதார தலம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை சிறப்பு வாய்ந்தது.

    3. இத்தலம் அருகே உப்பாறு ஓடினாலும் கிணற்று நீர் தீர்த்தமாக உள்ளது.

    4. தை மாதத்தில் 18 நாள் இங்கு புகழ்பெற்ற குண்டம் திருவிழா நடைபெறுகிறது.

    5. அமாவாசை, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் திருவிழா போல பக்தர்கள் கூட்டம் திரள்கிறது.

    6. மாசாணி அம்மன் ஆலயம் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

    7. அம்பாளுக்கு எதிரே மகாமூனீஸ்வரர், பிரகாரத்தில் பேச்சி, துர்க்கை, மகிஷாசுரவர்த்தினி, சப்தமாதாக்கள், விநாயகர், கருப்பராயர், புவனேஸ்வரி, பைரவர் ஆகியோர் உள்ளனர்.

    8. குடும்ப பிரச்னை, நம்பிக்கை துரோகம், மனக்குறைகள், புத்திரதோஷம், நோய்கள், பில்லி, சூனியம் நீங்க, திருடுபோன பொருட்களை மீட்க இத்தலத்தில் வேண்டிக்கொள்ளலாம்.

    9. அம்பாளுக்கு புடவை, எண்ணெய் காப்பு சாத்தி, மாங்கல்யம், தொட்டில் கட்டி, ஆடு, சேவல், கால்நடைகள் காணிக்கையாக செலுத்தலாம். அங்கப்பிரதட்சணம், முடிகாணிக்கை செலுத்தி, குண்டம் இறங்கியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படுகிறது.

    10. பூப்பெய்தும் பெண்கள் தங்களது உடலில் ஏற்படும் திடீர் மாற்றங்களால்,பல பிரச்னைகளை சந்தித்து, உடல் உபாதைகளால் அவதிப்படுகின்றனர். அவர்களின் பிரச்னைகளை தீர்ப்பவளாக மாசாணி அம்மன் இருக்கிறாள்.

    11. யானைகள் அதிகம் வசித்ததால் ஆனைமலை என அழைக்கப்பட்ட இவ்வூரை "உம்பற்காடு' என பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது.

    12. இக்கோயிலில் பச்சிளம் மருந்து பிரசாதம் தரப்படுகிறது. பெண்கள், இதனை சாப்பிட்டு, கருப்புக்கயிறு கட்டிக்கெள்ள தீவினைகள் நீங்கி, குழந்தைபாக்கியம் உண்டாகும்.

    13. செவ்வரளி உதிரிப்பூமாலை, எலுமிச்சை மாலை சாத்தி நெய்தீபம் ஏற்றி வழிபட, பூப்பெய்தும் சமயத்தில் ஏற்படும் உடல் தொடர்பான பிரச்னைகள், வயிற்று வலிகள் தீரும் என்பது நம்பிக்கை.

    14. இக்கோயில் வளாகத்தில் உள்ள "நீதிக்கல்லில்' மிளகாய் அரைத்து அப்பினால், திருடு போன பொருட்கள் திரும்ப கிடைக்கும், பில்லி, சூனியங்கள் விலகும்.

    15. "முறையீட்டு சீட்டில்' குறைகளை எழுதி அம்பாளின் கையில் கட்டி வைக்க அவற்றிற்கு 90 நாட்களில் தீர்வு கிடைக்கும் என நம்புகின்றனர்.

    16. அம்மனுக்கு பொங்கலிடுவது இத்தலத்தில் சிறப்பாகும்.

    17. மாசாணியம்மன் அருள் வேண்டி தினமும் ஆயிரக் கணக்கில் பக்தர்கள் வருகிறார்கள்.

    அன்னை தீய சக்திகளிடமிருந்து தங்களைக் காக்கக் கூடியவள் என்ற ஆழ்ந்த நம்பிக்கை பரவலாக உள்ளது.

    18. ஒவ்வொரு மாதமும் இத்தலத்தில் கார்த்திகை நட்சத்திரத்திலும், பௌர்ணமி நாட்களிலும் விசேஷ பூசைகள் நடத்தப்படுகின்றன.

    19. ஒவ்வொரு ஆண்டும் தை மாத பவுளர்ணமி நாளில் கொடியேற்றி, 14 ஆம் நாள், விசேஷ பூசைகளுடன், 16 -ம் நாள் தேர் திருவிழாவும், அதே நாள் இரவு 10 மணி அளவில் தீமிதி விழாவும் நடைபெரும். 50 அடி நீளமுள்ள அந்த குண்டம், பக்தர்கள் உண்மையான பக்தியுடன் செல்கையில் காலில் எந்த தீக் காயங்களையும் ஏற்படுத்துவதில்லை என்கின்றனர்.

    20. வைகாசி விசாகம், ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், தமிழ் வருடப்பிறப்பு, அமாவாசை, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, கார்த்திகை தீபம், மார்கழி தனுர் பூசை, நவராத்திரி நாட்களில் இங்கு சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    • ஜோதிடத்தின் வழிகாட்டியாக திதி சூன்யம் உள்ளது.
    • அமாவாசை- பவுர்ணமி நாட்களில் பிறந்தவர்களுக்கு எவ்வித திதி சூன்ய தோஷமும் இல்லை.

    பஞ்சாங்க அங்கத்தில் திதி-வாரம்- நட்சத்திரம்-யோகம்-கரணம் முக்கியமாகும். இதில் திதி என்பது ஆகாயத்தில் ஒரு குறித்த இடத்தில் இருந்து சூரியனுக்கும்- சந்திரனுக்கும் உள்ள தூரமாகும்.

    15 திதிகளில் அமாவாசை- பவுர்ணமி நாட்களில் பிறந்தவர்களுக்கு எவ்வித திதி சூன்ய தோஷமும் இல்லை. மற்ற 14 திதிகளில் பிறந்த வர்களுக்கும் திதி சூன்ய தோஷம் உள்ளது.

    இவைகளை கவனிக்காமல் பலன் சொல்லும் போது சொல்லிய பலன்கள் நடப்பதில்லை ஜோதிடத்தின் வழிகாட்டியாக திதி சூன்யம் உள்ளது.

    இந்த திதிகளில் சதுர்த்தசியில் ஒருவர் பிறந்து இருந்து புதனும் - குருவும் ஜாதகத் தில் உச்ச நிலையில் இருந்தாலும் பலன்கள் அளிப்பதில்லை. சூன்யம் பெற்ற கிரகமும், சூன்ய ராசியில் உள்ள கிரகமும் பலத்தை இழப்பதோடு தமது காரக ஆதிபத்திய பலன்களை யும் செய்வதில்லை. ஜாதகருக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

    திதி சூன்யம் பெற்ற மேற்படி கிரகங்கள் ஆட்சி- உச்சம் பெற்றாலும் கேந்திர- திரிகோணமாக அமைந்தாலும் நல்ல பலனை அளிப்பதற்கு மாறாக தீய பலனை அல்லது பலனே இல்லாமல் செய்கிறது.

    மேற்படி திதி சூன்யம் பெற்ற கிரகங்கள் வக்ர கதியில் இருக்கும் போதும், சிம்மம்- விருச்சிகம்- கும்ப-மேஷ ராசியில் இருக்கும் போதும் சூன்ய தோஷ நிவர்த்தி பெறுகிறது. 1, 5, 9 ஆகிய கிரகங்களின் சாரம் பெறும் போதும், திருவாதிரை- சுவாதி- சதயம் என்னும் ராகுவின் நட்சத்திரக் காலில் இருக்கும்போதும் சூன்யதோஷ நிவர்த்தியைப் பெறுகிறது.

    இப்படிப்பட்ட நிலையில் சூன்ய தோஷத்தை மட்டும் பார்க்காமல் தோஷ நிவர்த்தியையும் ஆராய்ந்து பார்த்து பலன் சொன்னால்,

    "போற்றுகின்ற ஜோதிட நூல்

    பொய்யாது ஒருநாளும்''

    என்கிற ஜோதிட பாடலின்படி ரண பலமும், நலமும் பெற முடியும் என்பதே ஆய்வு.

    சூன்ய திதி, சூன்ய ராசி, சூன்ய கிரகம்

    1. பிரதமை திதி துலாம்-மகரம் சுக்கிரன்-சனி

    2. துதியை திதி தனுசு-மீனம் குரு

    3. திருதியை திதி மகரம்-சிம்மம் சனி-சூரியன்

    4. சதுர்த்தி திதி கும்பம்-ரிஷபம் சனி-சுக்கிரன்

    5. பஞ்சமி திதி மிதுனம்-கன்னி புதன்

    6. சஷ்டி திதி மேஷம்-சிம்மம் செவ்-சூரியன்

    7. சப்தமி திதி தனுசு-கடகம் குரு-சந்திரன்

    8. அஷ்டமி திதி மிதுனம்-கன்னி புதன்

    9. நவமி திதி சிம்மம்-விருச்சிகம் சூரியன்-செவ்வாய்

    10. தசமி திதி சிம்மம்-விருச்சிகம் சூரியன்-செவ்வாய்

    11. ஏகாதசி திதி தனுசு-மீனம் குரு

    12. துவாதசி திதி துலாம்-மகரம் சுக்கிரன்-சனி

    13. திரயோதசி திதி ரிஷபம்-சிம்மம் சுக்கிரன்-சூரியன்

    14. சதுர்த்தசி திதி மிதுனம்-கன்னி புதன்-குரு தனுசு-மீனம்

    • திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது
    • பக்தர்கள் வசதிக்காக மாத வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசை நாட்களில் அனைத்து மண்டலம், கோட்டங்களில் இருந்து பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு சிறப்பு பஸ் இயக்க போக்குவரத்து கழக ஆயத்தமாகி வருகிறது.

    திருப்பூர்:

    மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக, ஆண்டுதோறும் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் இன்று மாதம் தொடங்கியது.இதையொட்டி திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது. திருப்பூர் தாராபுரம் ரோடு கோட்டை மாரியம்மன் கோவில், கருவம்பாளையம் மாகாளியம்மன் கோவில், ஏ.பி.டி., ரோடு பட்டத்தரசிம்மன் கோவி்ல், தில்லை நகர் ராஜ மாகாளியம்மன் கோவில், வாலிபாளையம் போலீஸ்லைன் மாரியம்மன் கோவில், செல்லாண்டியம்மன் கோவில், மேட்டுப்பாளையம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், ெபருமாநல்லுார் கொண்டத்து காளியம்மன் கோவில், அவிநாசியை அடுத்துள்ள கருவலூர் மாரியம்மன் கோவில் உள்பட உடுமலை, தாராபுரம், பல்லடம், காங்கயம், வெள்ளகோவில் உள்பட பல்வேறு அம்மன் கோவில்களில், இன்று சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது.

    அம்மன் கோவில்களில் இன்று அதிகாலையில் இருந்தே, பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள், அம்மனை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். பெண்கள் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற ஆடைகளில் வந்து, அம்மனை வழிபட்டனர். கோவில்களில், பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், தக்காளி சாதம், தயிர்சாதம் போன்றவை பிரசாதமாக வழங்கப்பட்டது. வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு கூழ் வழங்கப்பட உள்ளது.

    சேவூர் அழகு நாச்சியம்மன் என்ற பத்ரகாளியம்மன் மற்றும் காமராஜ் நகர் புற்றுக்கண் மாரியம்மன் கோவில்களில் த்திருவிழா இன்று தொடங்கியது. மாத வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு திரவியஅபிஷேக ஆராதனைகளும், அலங்கார பூஜைகளும் நடைபெற உள்ளது.

    அதை தொடர்ந்து வாரந்தோறும் உபயதாரர்களால் கூழ் ஊற்றுதல் மற்றும் அன்னதானமும் வழங்கப்படுகிறது. இன்று அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதேபோல் 18-ம் நாள் ஆடிப்பெருக்கு, கிருத்திகை, பவுர்ணமி, பூரம் ஆகிய நாட்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட உள்ளது. மாத கடைசி வெள்ளிக்கிழமை அன்று (ஆகஸ்டு 11-ந்தேதி) காலை 10 மணிக்கு, தீர்த்தக்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும். அதை தொடர்ந்து மகாதீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்துள்ளனர்.

    பக்தர்கள் வசதிக்காக மாத வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசை நாட்களில் அனைத்து மண்டலம், கோட்டங்களில் இருந்து பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு சிறப்பு பஸ் இயக்க போக்குவரத்து கழக ஆயத்தமாகி வருகிறது.அதன் ஒரு பகுதியாக, போக்குவரத்து அலுவலர்கள் ஆலோசனை நடத்தினர். பக்தர்கள் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு, சிறப்பு பஸ் இயக்க முடிவு செய்யப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் இன்று மாத முதல் அமாவாசையையொட்டி தாராபுரம் அமராவதி ஆறு மற்றும் உடுமலையில் நீர்நிலைகளில் பக்தர்கள் புனிதநீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    • முருகனுக்குரிய விரதங்கள் மூன்று. அவையாவன வெள்ளிக்கிழமை (வாரம்) விரதம், கார்த்திகை (நட்சத்திரம்) விரதம், கந்த சஷ்டி (திதி) விரதம் என்பனவாம்.
    • முருகப் பெருமானை வழிபடுவதன் மூலம் தமது கன்ம வினைகளை மிக விரைவில் அறுத்து ஆன்மாக்களின் இறுதி இலட்சியமாகிய மோட்சத்தினை இலகுவில் அடையலாம் என்பது ஐதீகம்.

    சஷ்டி விரதம் ஐப்பசி மாத தீபாவளி அமாவாசையின் பின் அதாவது வளர்பிறை பிரதமை முதல் ஆரம்பித்து, ஆறாம்/ஐந்தாம் நாளான சஷ்டி திதி வரையான ஆறு தினங்களும் நோற்கப்படும் முருகப்பெருமானுடைய சிறப்பான நோன்பாகும். இலங்கையில் இவ்விரதம் இந்த வருடம் 04.11.2013 திங்கட்கிழமை ஆரம்பமாகி ஐந்தாவது தினமான 08.11.2013 வெள்ளிக்கிழமை அன்று சூரசங்கார நிகழ்வுடன் நிறைவு பெறுகின்றது. ஆனால் கனடா, அமெரிக்கா போன்ற வட-அமெரிக்க நாடுகளில் 03.11.2013 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி ஆறாவது தினமான 08.11.2013 அன்று சூரன்போருடன் நிறைவு பெறுவதாக ஜோதிடம் கணிக்கின்றது.

    அறியாமை என்னும் அஞ்ஞான இருளை அகற்றி, மெய்ஞானமாகி மிளிர்கின்ற பரம்பொருளின் முக்திப் பேரருளை அடைவதற்காகச் சைவப் பெருமக்களால் அனுஷ்டிக்கப்படும் விரதங்களுள் தலையாயது கந்தசஷ்டி விரதம். முருகனுக்குரிய விரதங்கள் மூன்று. அவையாவன வெள்ளிக்கிழமை (வாரம்) விரதம், கார்த்திகை (நட்சத்திரம்) விரதம், கந்த சஷ்டி (திதி) விரதம் என்பனவாம். வல்வினை நீக்கி, வரும் வினை போக்கி, செல்வமும் செல்வாக்கும் தந்து; அழகும், அறிவும் தந்திடும் வள்ளி மணாளனை, வடிவேலனை வழிபடும் விரதங்களில் மிகவும் சிறந்தது இந்தக் கந்தசஷ்டி விரதமாகும்.

    அனாதியாகவே "செம்பில் களிம்பு போன்று" ஆன்மாக்கள் ஆணவமலத்தால் பீடிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆன்மாக்கள் இப்பூவுலகில் பிறந்ததன் நோக்கம் சகல இன்பங்களையும் அறவழியில் அனுபவித்து, இறுதியில் பிறப்பு, இறப்பு அற்ற மோட்ச நிலையில் இறைவனுடன் இரண்டறக் கலந்தற்கேயாகும். எனவே முருகப் பெருமானை வழிபடுவதன் மூலம் தமது கன்ம வினைகளை மிக விரைவில் அறுத்து ஆன்மாக்களின் இறுதி இலட்சியமாகிய மோட்சத்தினை இலகுவில் அடையலாம் என்பது ஐதீகம்.

    ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும் மூலங்களை மட்டுமன்றி ஆறுவகை எதிரிகளான காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம், தற்பெருமை ஆகிய வகைகளை அழித்து முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு, பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்டுவதால் "ஒப்பரும் விரதம்" என ஸ்கந்தஷஷ்டி விரத மகிமை பற்றிக் கந்தபுராணம் சிறப்பாகப் புகழ்ந்து பேசுகின்றது.

    கந்தசஷ்டி விரதம்; சுழிபுரம் பறாளை-முருகன் ஆலயம், காலையடி ஞானவேலாயுதர் ஆலயம் உட்பட எல்லா முருகன் ஆலயங்களிலும் அதிவிஷேச அபிஷேக ஆராதனைகள், பூசைகள் நிறைந்த பக்தியான விரதமாக அனுஸ்டிக்கப் பெறுவதுடன் சூரன்போர் காட்சியும் வெகுசிறப்பாக நிகழ்த்தப்பெறுகின்றன.

    முருகன் ஆலயத்தில் பக்தர்கள் உண்ணா நோன்பிருந்து; பக்திசிரத்தையுடன் முருகனை நினைந்துருகி வழிபட்டு, தியானத்திலும், பஜனை செய்வதிலும், கந்தரனுபூதி, கந்தசஷ்டிகவசம், கந்தரலங்காரம் ஓதுவதிலும், கந்தபுராணம்-பயன் கேட்பதிலும் தம்மை ஈடுபடுத்தி முருகனருள் வேண்டி நிற்பர்.

    அத்துடன்; விரத முடிவு தினமான சஷ்டிதினம் (சூரன்போரில்) முருகன் வீசும் வேல் குறிதவறாது சூரனின் சகோதரர்களான; யானை முகம் கொண்ட தாரகன், சிங்க முகம் கொண்ட சிங்கன் கழுத்தில் வீழ்ந்து தலைகள் சாய்வதும்; பல மாயைகள் செய்து போர்புரிந்து கடைசியாக, நடுக்கடலில் மாமரமாய் நின்ற சூரன்-பதுமனை சங்காரம் "சங்கரன் மகன் சட்டியில் மாவறுப்பதை" (சங்கரன் புதல்வராகிய முருகப் பெருமான் சஷ்டித் திதியிலே மாமரமாக தோன்றிய சூரனை, இரண்டாக பிளந்து சாங்காரம் செய்யும் காட்சியை கண்டு) தரிசித்து தம் வினை போக்க பக்தர்கள் காதலாகி கசிந்துருகி நிற்கும் காட்சியும், கண்கொள்ளாக் காட்சிகளாகும்.

    கொடுங்கோலாட்சி செலுத்திய ஆணவத்தின் வடிவமாகிய சூரனையும், கன்மத்தின் வடிவமாகிய சிங்கனையும், மாயா மூலத்தின் வடிவமாகிய தாரகனையும், (ஆணவம், கன்மம், மாயை என்ற) அசுர சக்திகளையெல்லாம் அழித்து, நீங்காத சக்தியை கலியுக வரதனான முருகப் பெருமான் நிலை நாட்டிய உன்னத நாளே கந்த சஷ்டியாகும்.

    கந்தசஷ்டி விரத நாட்களில், ஆன்மா மும்மூலங்களையும் நீக்குவதற்குரிய பக்குவமான மனதுடன் தனித்து, விழித்து, பசித்து இருக்க வேண்டும். உணவையும் உறக்கத்தையும் தவிர்த்து, தனித்திருந்து செய்யும் தவமே கந்தசஷ்டி விரதமாகும். உணர்வுகளை அடக்கி உள்ளத்தை ஒருநிலைப்படுத்தி கந்தப் பெருமானின் பெருமை பேசி இம்மைக்கும் மறுமைக்கும் சிறந்த வழியமைப்பதே இந்த விரதத்தின் பெறும்பேறாக அமைகிறது.

    கந்தசஷ்டி விரதத்தை முறையாக அனுஷ்டிப் போர்க்கு இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளுக்கும் தலைவனான முருகப்பெருமானது பேரருள் கிட்டும். சஷ்டியன்று கந்தனுக்கு அபிஷேகம் செய்த பாலைப் பருகுவோர்க்கு புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்!.

    சகல செல்வங்களையும், சுகபோகங்களையும் தரவல்ல இந்த விரதம் புத்திரலாபத்துக்குரிய சிறப்பான விரதமுமாகும். "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பதற்கேற்ப; ஸ்கந்தஷஷ்டியில் விரதமிருந்தால் "அகப் பையாகிய "கருப்பையில்" கரு உண்டாகும் என்பதும்; கந்தர் சஷ்டி விரதத்தை முறையாகக் கைக்கொள்வதால் அகப்"பை" எனும் "உள்ளத்தில்" நல்ல எண்ணங்களும் பக்தி எனும் பாதையால் எழுந்த அமைதியும் அமையும் என்பதும் மறை பொருள்களாகும்.

    அறிவு வளர்ச்சிக்கு விஞ்ஞானம் உதவுவதைப் போன்று மன வளர்ச்சிக்கு சமயம் அடிகோலுகின்றது. இறைவன் ஒருவன், அவன் மக்களின் தந்தை என்றெல்லாம் போதிப்பதன் மூலம் அன்பு, சகோதரத்துவம் போன்ற ஜீவ ஊற்றுகளை அருளி மக்களின் வாழ்வு நலம் பெறச் சமயம் உதவுகின்றது. நல்லவர்களைப் பாதுகாக்கவும் தீயவர்களை அடக்கவும் தர்மத்தை நிலை நாட்டவும் யுகந்தோறும் இறைவன் அவதாரம் செய்தருளுகின்றான்.

    தனு, கரண, புவன, போகங்கள் அனைத்தையும் படைத்தலும், காத்தலும், அழித்தலும் இறைவனது இடையறாத திருவிளையாடல்கள். இறைவனை உணர்ந்து அவனைச் சரணடைந்தால் அழிவில்லாத பேரின்பம் அடையலாம் என்பது சமயங்கள் காட்டும் பேருண்மை. இறைவனது திவ்ய அவதாரத்தையும் செயலையும் யாரொருவர் உள்ளபடி அறிகின்றார்களோ அவர்கள் மீண்டும் பிறவாமல் இறைவனையே அடைந்து விடுகிறார்கள் என்று கீதையில் கிருஷ்ணபகவான் கூறியுள்ளார்.

    தெய்வ அவதாரங்களில் தீய சக்திகளை அடக்கி நல்லவர்களைக் காத்தார்கள் என்றால் இச்செயல்கள் தீமைகளை நீக்கி நன்மைகளையே செய்து மக்கள் உய்ய வேண்டும் என்று போதிப்பதற்கே நிகழ்ந்தன என உணர்ந்து பக்தியுடன் வாழ்ந்து இகபர நலன்களை அடைய முயலவேண்டும். இத்தகைய அவதார இரகசியத்தை விளக்கி மக்கள் உய்வதற்கு உகந்த பெருவழிகளை விளக்கிக் காட்டுவதே ஆறுமுகப்பெருமானின் அவதாரம்.

    வசிட்ட மாமுனிவர் முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு சஷ்டி விரத மகிமையையும் வரலாற்றையும் விதிமுறைகளையும் உபதேசித்த பெருமையையுடையது. அரசர்கள், தேவர்கள், முனிவர்கள் பலரும் இந்த விரதம் அனுஷ்டித்து வேண்டிய வரங்களைப் பெற்றதோடு, இம்மை இன்பம், மறுமை இன்பம் ஆகியவற்றை பெற்றனர். இவ்விரதம் தொடர்பான "புராணக் கதை"யை பார்ப்போம்.

    பிரம்மாவிற்கு தக்கன், காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தனர். இவர்களுள் தக்கன் சிவனை நோக்கித் கடுந்தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றிருந்த போதிலும் இறுதியில் சிவனால் தோற்றுவிக்கப் பெற்ற வீரபத்திரக் கடவுளால் கொல்லப்பட்டார். காசிபனும் கடுந்தவம் புரிந்து சிவனிடம் இருந்து மேலான சக்தியைப் பெற்றான். ஒருநாள் அசுரர்களின் குருவாகிய சுக்கிரனால் (நவக்கிரகங்களுள் வெள்ளியாக கணிக்கப்படுபவர்) ஏவப்பட்ட மாயை என்னும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவ வலிமை எல்லாவற்றையும் இழந்தான்.

    இதனைத் தொடர்ந்து காசிபனும் மாயை என்னும் அசுரப் பெண்ணும் முதலாம் சாமத்தில் மனித உருவத்தில் இணைந்து மனித தலையுடன் கூடிய சூரனும், இரண்டாம் சாமத்தில் சிங்க உருவில் இருவரும் இணைந்து சிங்க முகத்துடன் கூடிய சிங்கனும், மூன்றாம் சாமத்தில் யானை உருவில் இணைந்து யானை முகத்துடன் கூடிய தாரகனும், நான்காம் சாமத்தில் ஆட்டின் உருவத்தில் இருவரும் இணைந்து ஆட்டுத் தலையுடன் கூடிய அசமுகி என்னும் அசுரப் பெண்ணும் பிறந்தனர்.

    மாயை காரணமாக தோன்றிய இந்நால்வரும் ஆணவ மிகுதியால் அகங்கார மமகாரம் (செருக்கு) கொண்டு காணப்பட்டனர். இவர்களுள் சூரபதுமன் சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்து; 108 யுகம் உயிர்வாழவும் 1008 அண்டம் அரசாளும் வரத்தையும், இந்திரஞாலம் எனும் தேரையும், சிவன் சக்தி அன்றி வேறு ஒரு சக்தியாலும் அழிக்க முடியாது எனும் வரத்தையும் பெற்றிருந்தான். இவ்வரத்தினைப் பெற்ற சூரன் முதலானோர் தம்மைப் போல் பலரை உருவாக்கி அண்ட சராசரங்கள் எல்லாவற்றையும் ஆண்டு இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலிட்டு சொல்லொணா துன்பங்களைக் கொடுத்து அதர்ம வழியில் ஆட்சி செய்தனர்.

    அசுரர்களின் இக்கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள் கைலாயம் சென்று சிவனிடம் முறையிட்டனர். இறைவனும் அவர்கள்மேல் திருவுளம் கொண்டு அவர்களை அந்த துன்பத்தில் இருந்து காப்பாற்றும் நோக்குடன் தனது (6) நெற்றிக் கண்களையும் திறக்க (சிவபெருமானுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் ஆகிய ஐந்து முகங்கள் உண்டு. இவை தவிர ஞானிகளுக்கு மட்டுமே தெரியக்கூடிய "அதோமுகம்" (மனம்) என்ற ஆறாவது முகமும் உண்டு) அவைகளிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் வாயுபகவான் ஏந்திச் சென்று; வண்ண மீனினம் துள்ளி விளையாடும் தண்மலர் நிரம்பிய சரவணப்பொய்கையில் தாமரை மலர்களின் மீது சேர்க்கப்பெற்றன.

    அந்த தீப்பொறிகள் ஆறும்; உலகின் பொன்னெல்லாம் உருக்கி வார்த்ததென ஆறு குழந்தைகள் தோன்றின. அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் சீராட்டி பாலூட்டி வளர்த்து வரும் வேளை; அகிலலோக நாயகி பார்வதி தன் மைந்தர்களை அன்புடன் கட்டியணைத்திட அவையாவும் ஒரு திருமேனியாக வடிவங்கொண்டு ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடைய ஒரு திரு முருகனாக தோன்றினன் உலகமுய்ய. ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடைய திருவுருவை பெற்றமையால் "ஆறுமுக சுவாமி" எனப் பெயர் பெற்றார்.

    இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீர்யம், வைராக்கியம், புகழ் என்னும் ஆறு குணங்களையும் குறிக்கின்றன. பிரணவ சொரூபியான முருகப் பெருமானிடம் காக்கும் கடவுளான முகுந்தன், அழிக்கும் கடவுளான ருத்ரன், படைக்கும் தெய்வமான கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடக்கம். ஆறுமுகன் சிவாக்னியில் தோன்றியவன். அதனால் "ஆறு முகமே சிவம்; சிவமே ஆறுமுகம்" எனப்படுகிறது.

    முருகப்பெருமான் அசுரர்களான சூர பத்மாதியரை அழிக்கப் போர் புரிந்த திருவிளையாடலையே நாம் கந்தசஷ்டி விழாவாகக் கொண்டாடுகிறோம். சூரபத்மனின் ஒரு பாதி "நான்' என்கிற அகங்காரம்; மற்றொரு பாதி "எனது" என்கிற மமகாரம்.

    பன்னிரண்டு கைகளுடன் ஆறு திருமுகமும் கூடிய அழகின் அழகாய் தேவசேனாதிபதியாய், தேவரும் முனிவரும் வாழ்த்த சர்வ சத்தியாம் பார்வதி தந்த தனிப்பெரும் ஞான வேலை சக்தியாகக் கொண்டு சூரபன்மனைச் சம்ஹாரம் செய்யப் புறப்பட்டு சென்றார். அவர்களுடன் முருகப் பெருமான் மேற்கொண்ட போர் ஐப்பசித் திங்கள் வளர்பிறையில் பத்து நாட்கள் நடைபெற்றது. முதல் நான்கு நாட்களில் சூர பத்மனைச் சேர்ந்த வீரர்களை அழித்து அவனது பலத்தை துவம்சம் செய்தார்.

    தாரகனையும் அவனுக்குத் துணை நின்ற கிரௌஞ்சத்தையும் பிளந்து, சிங்கமுகனை அழித்து பின் சூரனின் சேனை அழிந்த போதும் சூரபதுமனின் ஆணவம் அழிய இல்லை. அதனால் முருகன் தன் திருப்பெரு வடிவம் (விஸ்வரூபம்) காட்டி, எல்லாம் வல்ல பரம்பொருள் தாமே என பரமேசுர வடிவம் காட்டி, சிவனும் அவன் மகனும் மணியும் ஒலியும் போல ஒருவரே என்றுணர்த்தியும், தன் தன்மை மாறாது மாயைகள் பல புரிந்து போர் செயலானான்.

    கடைசியாக; நடுக்கடலில் மாமரமாய் நின்ற சூரபத்மனைத் முருகன்; தன் வேலாயுதத்தால் இரு கூறாக்கினார். ஆணவம் அழியப் பெற்ற சூரன் தம் தவறை உணர்ந்து; தன்னை மன்னித்து, ஏற்றுக்கொள்ளும்படி மன்றாடி வேண்டி நிற்க; அவை இரண்டையும் முருகன் தன் அருளால் சேவலாகவும் மயிலாகவும் மாற்றி, மயிலை வாகனமாகவும் சேவலைக் கொடியிலும் தன்னுடன் பிணைத்துக் கொண்டார்.

    ஞானசக்தியான வேலின் தாக்கத்தால் ஆணவ மூலம் வலியிழந்து ஆன்ம பரம்பொருளின் திருவடி அடைந்ததெனும் மறைபொருளை உணர்த்த அனுஷ்டிக்கப்படும் விரதமே கந்தர் சஷ்டி விரதம். இந்த அருட்பெருங்கருணைச் செயலை வியந்து இப்போர் நிகழ்ந்த காலமாகிய ஐப்பசி மாத வளர்பிறை முதலாறு நாட்களையும் விரத நாட்களாகக் கொண்டு முனிவரும் தேவரும் நோற்று வந்தனர். இதுவே கந்தசஷ்டி என்ற நாமத்தோடு நாம் அநுஷ்டிக்கும் விரதமாகும்.

    ×