search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Meenakshi Amman Temple"

    • சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடைசாத்தப்பட்டது.
    • 7.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும்.

    மதுரை

    சந்திர கிரகணம் இன்று மதியம் 2.39 மணிக்கு தொடங்கி, மாலை 6.19 மணி வரை ஏற்படும் என்பதால் சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஆகம விதிப்படி கோவில் நடைகள் சாத்தப்படுவது வழக்கம்.

    அதன்படி இன்று சந்திர கிரகணம் என்பதால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காலசந்தி- சாயரட்சை பூஜைகள் முடிந்த பிறகு கோவில் நடை இன்று காலை 9.30 மணிக்கு சாத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் கிரகண நேரத்தில் அர்ச்சனை செய்யவோ, தரிசனம் செய்யவோ அனுமதிக்கப்படவில்லை.

    சந்திர கிரகணம் முடிந்து இன்று இரவு 7.30 மணிக்கு பிறகு நடை திறக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மட்டுமின்றி 22 உப கோவில்களின் நடைகளும் இன்று சாத்தப்பட்டு உள்ளன. இதனை தொடர்ந்து மத்திம காலத்தில் சுவாமிகளுக்கு மாலை 4.30 மணிக்கு தீர்த்தம் கொடுக்கப்படும். அதன் பிறகு சந்திரசேகரர் புறப்பாடு நடக்கும். இரவு 7 மணிக்கு அர்த்த ஜாம பூஜை நடக்கும். 7.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். அதன் பிறகு பக்தர்கள் மீண்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • மீனாட்சி அம்மன் கோவிலில் மகா ருத்ராபிஷேக உற்சவ நிகழ்ச்சி 12-ந் தேதி நடக்கிறது.
    • வாமிகளுக்கு சிறப்பு தீப ஆராதனை காட்டப்பட்டு, பிரசாதம் வழங்கப்படும்.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மகாருத்ராபிஷேக உற்சவம் வருகிற 12-ந் தேதி நடக்கிறது. அன்று காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை அனுக்ஞை, புண்யாஹவாசனம், விக்னேசுவரபூஜை, பஞ்சகவ்யம், வேதிகார்ச்சனை, 108 கலச பூஜை, மஹன்யாசம், ருத்ரம், சமக பாராயணம், ருத்ர ஹோமம், திரவ்யாகுதி, பூர்ணாகுதி ஆகியவை நடத்தப்படுகிறது.

    அதன் பிறகு சுவாமிகளுக்கு சிறப்பு தீப ஆராதனை காட்டப்பட்டு, பிரசாதம் வழங்கப்படும். மாலை 4 மணி முதல் 5:30 மணி வரை விக்னேசுவர பூஜை, புண்யாஹவாசனம், பஞ்சகவ்யம், வேதிகார்ச்சனை, 108 கலச பூஜை, அஸ்த்ர ஹோமம், திரவ்யாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை, கடம் புறப்பாடு ஆகியவை நடத்தப்படும்.

    மாலை 6 மணிக்கு மீனாட்சி-சுந்தரேசுவரருக்கு ருத்ராபிஷேகம், பஞ்சமுக அர்ச்சனை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெறும். பக்தர்கள் ருத்ராபிஷேகத்துக்காக பால், தயிர் மற்றும் சர்க்கரை, பழவகைகள், சந்தனம், விபூதி, மஞ்சள் பொடி, எண்ணை ஆகியவற்றை கோவில் உள்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வழங்கலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரையில் கனமழை கொட்டித் தீர்த்தது.
    • இதனால் மீனாட்சியம்மன் கோவில் வளாகத்திற்குள் மழைநீர் புகுந்தது.

    மதுரை:

    உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆடி முளைக்கட்டு திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. நேற்று மாலை ஆடிவீதி உலா நடைபெற்றது.

    இந்நிலையில், நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக கோவில் வளாகத்திற்குள் மழைநீர் புகுந்தது. இதையடுத்து கோவில் யானை பார்வதி, மழைநீர் சூழ்ந்த வளாகத்தைக் கடந்து வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது.

    மேலும் சாமி சன்னதி, கொடிமரம் பகுதி மற்றும் ஆடிவீதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்தும் பணிகளில் கோவில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    மதுரையில் திடீரென பெய்யத் துவங்கிய கனமழை காரணமாக, மதுரையின் முக்கிய சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன.

    மீனாட்சி அம்மன் கோவிலில் பெண் மாரடைப்பால் உயிரிழந்ததையடுத்து இன்று நடைபெற வேண்டிய திருமணங்கள் நிறுத்தப்பட்டன.
    மதுரை:

    மதுரை வில்லாபுரம் கற்பகம் நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் நீலகண்டன். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 62). இவர் மீனாட்சி அம்மனை தரிசிப்பதற்காக இன்று காலை கோவிலுக்கு வந்தார்.

    அம்மன் சன்னதி பிரகார வீதியில் வலம் வந்தபோது மகேஸ்வரிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காப்பாற்ற போராடினர். இருப்பினும் மகேஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து மகேஸ்வரியின் உடல் பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்லப்பட்டது. பின்னர் கோவில் நடை சாத்தப்பட்டது.

    கோவில் ஆகம விதிகளின்படி சிறப்பு பரிகார பூஜைகள் நடத்தப்பட்ட பிறகே பக்தர்களை அனுமதிக்க முடியும். எனவே கோவிலில் இருந்த அனைத்து பக்தர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இன்று முகூர்த்தநாள் என்பதால் கோவிலில் 5 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற இருந்தது. திடீரென பெண் உயிரிழந்ததால் திருமணங்கள் நிறுத்தப்பட்டன. பரிகார பூஜைகள் முடிந்ததும் திருமணங்கள் நடைபெறும்.

    சித்திரை திருவிழாவை முன்னிட்டு, மதுரையில் பாராளுமன்ற தேர்தல் தேதியை மாற்ற முடியாது என ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதிபட தெரிவித்துள்ளது. #LSPolls #MaduraiHCBench #EC
    மதுரை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் கமி‌ஷன் அறிவித்துள்ளது. அந்த நாளில் மதுரையில் பிரசித்திப் பெற்ற சித்திரை திருவிழா தேரோட்டம், மறுநாள் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளதால், தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வக்கீல் பார்த்தசாரதி முறையீடு செய்தார்.
     
    இதனை மனுவாக தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் தெரிவித்ததை தொடர்ந்து மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

    மனுதாரர் தரப்பு வக்கீல் ஆஜராகி, தமிழகத்தில் மிக முக்கியமான சித்திரை திருவிழாவையொட்டி நடைபெறும் தேரோட்டம், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆகியவற்றை காண 15 லட்சம் பேர் வரை மதுரையில் கூடுவார்கள். அன்றைய தினம் தேர்தல் நடத்தப்பட்டால் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்படும். வாக்குப் பதிவு கடுமையாக பாதிக்கப்படும். எனவே அன்றைய தினம் நடைபெறவுள்ள தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும் என்றார்.

    இதற்கு தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல், நாடு முழுவதும் பாதுகாப்பு காரணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கருத்தில் கொண்டு ஆராய்ந்து திட்டமிட்டு தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே சித்திரை திருவிழாவை காரணம் காட்டி தேர்தலை தள்ளிவைக்க இயலாது என்றார்.



    அப்போது நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் குறுக்கிட்டு, மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் மாதம் நடக்க இருக்கிறது என்பதை தமிழக அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு ஏன் கொண்டு செல்லவில்லை. இந்த விழாவின் காரணமாக மதுரை மட்டுமின்றி மற்ற மாவட்டங்களிலும் வாக்குகள் குறையாதா? 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற தேர்தல் ஆணையம் ஆர்வம் காட்டவில்லையா? என்றனர்.

    மாற்றுத் தேதியில் தேர்தல் நடத்தலாமா? என்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் உரிய விளக்கம் பெற்று நாளை மறுநாள் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை 14-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    இந்நிலையில், இந்த மனு மதுரை ஐகோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, தேர்தல் ஆணைய வழக்கறிஞர் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை பாராளுமன்ற தேர்தலை தள்ளிவைக்க முடியாது.

    கோயிலை சுற்றியுள்ள 18 வாக்குச்சாவடிகளை பதற்றம் நிறைந்தவையாக அறிவிக்க வேண்டும். வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. துணை ராணுவ படையுடன் தேர்தல் நடத்த முடியும் என தெரிவித்தார்.

    இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வெறும் கடமைக்காக தேர்தலை நடத்த வேண்டாம். வாக்காளர்களை பற்றியும் சிந்திக்க வேண்டும். 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையத்துக்கு அக்கறை இல்லையா?

    இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நாளை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால் நேரில் ஆஜராக நேரிடும் என உத்தரவிட்டனர். #LSPolls #MaduraiHCBench #EC
    சிவபெருமான் பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படிபட்ட திருநாளானது, ஆவணி மாதம் மூலம் நட்சத்திரம் ஆகும். அன்றைய தினம் சிவாலயங்கள் தோறும் சிறப்பாக பிட்டுக்கு மண்சுமந்த திருநாளைக் கொண்டாடுவர்.
    ‘அடி உதவுவது போல அண்ணன் தம்பிகூட உதவமாட்டான்’ என்பது பழமொழி. ஆண்டவனின் திருவடியைப் பற்றினால் அனைத்திலும் வெற்றி காணலாம் என்பதைக் குறிக்கும் விதத்திலேயே அந்தப் பழமொழி அமைந்திருக்கின்றது. அப்படிப்பட்ட ஆண்டவனே “அடி” வாங்கித் திருவிளையாடல் நடத்திய மாதம் ஆவணி மாதமாகும்.

    சிவபெருமான் பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படிபட்ட திருநாளானது, ஆவணி மாதம் மூலம் நட்சத்திரம் ஆகும். அன்றைய தினம் சிவாலயங்கள் தோறும் சிறப்பாக பிட்டுக்கு மண்சுமந்த திருநாளைக் கொண்டாடுவர். அதில் கலந்து கொண்டு வழிபாடு செய்தால் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். இறைவனே வேலை பார்த்துச் சம்பளம் வாங்கிய நாள் என்பதால், உத்தியோகத்தில் பிரச்சினைகள் இருப்பவர்கள், இந்த தினத்தில் உள்ளன்போடு சிவபெருமானை வழிபட்டால் எதிர்ப்புகள் அகன்று இனிய வாழ்க்கை அமையும்.

    மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் இந்த விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆவணி மூல வழிபாட்டில் கலந்து கொண்டால், மூல நடத்திர தோஷங்கள் விலகி ஓடும். முன்னேற்றங்கள் வந்து சேரும். மூல நட்சத்திரத்தில் பிறந்த ஆண், பெண் இருபாலரும் இந்த விழாவில் கலந்து கொள்வது நல்லது. 
    மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவில் ஆனி ஊஞ்சல் உற்சவம் தொடங்கியது. நாளை (21-ந் தேதி) பாலாபிஷேகம் நடக்கிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவில் ஆனி ஊஞ்சல் உற்சவம் நேற்று தொடங்கியது. 2-வது நாளான இன்று (புதன் கிழமை) இரவு முதல் ஆனி உத்திரம் நடைபெறுகிறது. நாளை (21-ந் தேதி) பாலாபிஷேகம் நடக்கிறது.

    இது குறித்து கோவில் இணை ஆணையர் நட ராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ் மாதமான ஆனியில் மக நட்சத்திரம் முதலாக மூல நட்சத்திரம் வரையில் 10 நாட்கள் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. நேற்று தொடங்கிய உற்சவம் வருகிற 27-ந் தேதி வரை நடைபெறுகிறது. இன்று (20-ந் தேதி) இரவு முதல் ஆனி உத்திரம் தொடங்குகிறது.

    நாளை (வியாழக்கிழமை) மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவிலின் பழைய திருக் கல்யாண மண்டபத்தில் பாலாபிஷேகம் நடை பெறும். இரவு பஞ்சமூர்த்தி கள் ரி‌ஷப வாகனத்தில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருகிறார்கள்.

    நாளை அதிகாலை பஞ்ச சபை நடராஜர்-சிவகாமி அம்மனுக்கும், பிரதான கால்மாறி ஆடும் நடராஜர்- சிவகாமி அம்மனுக்கும் கோவிலின் 6 கால் பீடத்தில் பாலாபிஷேகம் நடைபெறும்.

    இதர 4 சபை நடராஜர்- சிவகாமி அம்மனுக்கு சுவாமி சன்னதி 100 கால் மண்டபத்தில் ஆனி உத்திர திருமஞ்சனம் நடைபெறும். கால பூஜைகள் முடிந்ததும் காலை 7 மணிக்கு மேல் பஞ்ச சபை நடராஜர்-சிவகாமி அம்மன் மாசி வீதிகளில் வலம் வந்து அருள் பாலிப் பார்கள்.

    திருவிழாவில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் திரவிய பொருட்களை கோவில் உள்துறை அலுவலகத்தில் நாளை முதல் பக்தர்கள் வழங்கலாம்.

    வருகிற 27-ந் தேதி அரு ளாளர் அருணகிரிநாதர் ஜெயந்தி நடைபெறுகிறது. அன்று இரவு 8 மணிக்கு ஆவணி மூல வீதிகளில் அருணகிரிநாதர் புறப்பாடு நடைபெறும்.

    ஆனி மாத பவுர்ணமி அன்று (28-ந் தேதி) உச்சிகால வேலையில் மூலஸ்தான சொக்கநாதருக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளால் முப்பழ பூஜை அபிஷேகம் நடைபெறும்.

    இந்த அபிஷேகத்திற்கு பின்னர் சித்திரை வீதிகளில் சுவாமி, குதிரை வாகனத்தில் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளுவார்.

    ஆனி ஊஞ்சல் உற்சவ திருநாள் தொடங்கி வருகிற 28-ந் தேதி வரை கோவில் சார்பிலோ, உபயதாரர் சார்பிலோ திருக்கல்யாணம் மற்றும் தங்க ரத உலா ஆகியவை நடத்த இயலாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    மீனாட்சி அம்மன் கோவில் அருகே தீயணைப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
    மதுரை:

    தமிழக சட்டசபையில் மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் நடந்த மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழகத்தில் 22,336 கிலோமீட்டர் உயர் மின் பாதைகளும், 68,728 தாழ் வழுத்த மின் பாதைகளும் 87,187 கிலோமீட்டர் மின் மாற்றிகளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன தமிழகத்தில் மட்டும் ஏறத்தாழ மின்சாரத்துறையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் 80,000 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர் இவர்களின் சிறப்பான செயல்களின் மூலம் தானே மற்றும் ஒக்கி புயல் போன்ற இயற்கைச்சீற்றங்களில் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.

    தொடர்ந்து மின்சாரத் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அவர்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை வகுத்து வரும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் மின்சாரத்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    மதுரை வடக்குத் தொகுதியில் கலெக்டர் அலுவலகத்தில் புதிய கட்டிடம் கட்ட முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அடிக்கல் நாட்டினர். இதற்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    அந்த புதிய கட்டிடம் கட்டும் இடத்தில் ஏற்கனவே உள்ள தீயணைப்பு நிலையம் அப்புறப்படுத்தப்பட்டு வேறு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு கட்டிடம் கட்ட நிதியினை முதலமைச்சர் ஒதுக்கித்தர வேண்டும்.

    அதே போல் மீனாட்சியம்மன் கோவில் அருகே தீயணைப்பு நிலையம் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்து தர வேண்டும்.

    பந்தல் குடி கால்வாய் சுத்தம் செய்ய ரூ.14 கோடி அளவில் திட்டம் வந்துள்ளது. அதையும் விரைவாக நிறைவேற்றிதர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    வண்டியூர் கண்மாயை சுற்றுலாத்துறை மூலம் ரூ.26 கோடி அளவில் திட்டம் வகுத்துள்ளார்கள் அந்த திட்டத்தினை சுற்றுலாத் துறை மூலம் நிறைவேற்றித் தருமாறு முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ. 4 ஆயிரம் கோடி மதிப்புள்ள நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக திருத்தொண்டர்கள் சபை குற்றம் சாட்டி உள்ளது.
    மதுரை:

    தமிழ்நாடு திருத்தொண்டர்கள் சபையின் தலைவர் ராதாகிருஷ்ணன் இன்று மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஏராளமானோர் தானமாக நிலங்களை வழங்கியுள்ளனர். கோவில் நிர்வாகத்தின் மெத்தனத்தால் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன.

    மதுரை எம்.ஜி.ஆர். பஸ் நிலையம் எதிரே சுமார் 50 ஏக்கர் நிலம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சுப்பையா என்பவரால் தானமாக வழங்கப்பட்டது. இதன் தற்போதைய மதிப்பு ரூ.4 ஆயிரம் கோடி ஆகும்.

    இந்த நிலங்களை போலி ஆவணங்கள் தயாரித்து பெயர் மாற்றம் செய்து பலர் ஆக்கிரமித்துள்ளனர்.

    இது தொடர்பாக ஒரு வருடத்திற்கு முன்பே கோவில் ஆணையரிடம் புகார் அளித்தேன். ஆனால் அவர்கள் சொத்துக்களை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதே போல் தமிழகம் முழுவதும் பல்வேறு கோவில்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனை மீட்க வேண்டும்.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    ×