search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kamarajar Birthday"

    • நெல்லை கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்.

    திசையன்விளை:

    நெல்லை கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் 120-வது பிறந்த நாள் விழா திசையன்விளை அருகே உள்ள மன்னார்புரத்தில் நேற்று மாலை நடந்தது.

    மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் அமுதா கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாநில விவசாய அணிசெயலாளர் விவேக் முருகன், நெல்லை மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் மருதூர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நாங்குநேரி வட்டார காங்கிரஸ் தலைவர் வாகை துரைராமஜெயம் வரவேற்று பேசினார். ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்.

    விழாவில் ராதாபுரம் வட்டார காங்கிரஸ் தலைவர் பவான்ஸ், நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மகளிர் காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் அமுதா கலைச்செல்வன், களக்காடு வட்டார மகளிர் காங்கிரஸ் தலைவர் பிரியா முருகன், வள்ளியூர் நகர காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராஜேஷ், மலையன்குடியிருப்பு ராஜேந்திரன், மன்னார்புரம் மார்டீன் உள்பட பலர் கலந்துகொண்டனர். மாவட்ட காங்கிரஸ் முன்னாள் துணைத்தலைவர் விஜயபெருமாள் நன்றி கூறினார்.

    கரூரில் காமராஜர் பிறந்தநாளையொட்டி அவரது உருவ சிலை, படத்திற்கு மாலை அணிவித்து அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
    கரூர்:

    பெருந்தலைவர், கர்மவீரர், ஏழைபங்காளர், கருப்பு வைரம், தமிழக கல்வி வளர்ச்சிக்கு வித்திட்ட படிக்காத மேதை என எல்லோராலும் போற்றப்படும் காமராஜரின் பிறந்தநாள் விழா நேற்று கரூரில் கொண்டாடப்பட்டது. அவரது பிறந்த தினத்தை கரூர் பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாளாக கருதி மாணவ- மாணவிகளுக்கு கருத்துரை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அந்த வகையில் கரூர் நகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அதன் தலைமை ஆசிரியை சண்முக வடிவு தலைமையில் ஆசிரிய- ஆசிரியைகள், மாணவிகள் ஆகியோர் காமராஜரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

    காங்கிரஸ் கட்சியின் தலைவர், தமிழக முதல்- அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளை காமராஜர் வகித்தாலும் பொதுவாழ்வில் நேர்மையையும், எளிமையையும் கடைபிடித்து அவர் ஆற்றிய தொண்டுகள் குறித்து நடத்தப்பட்ட பேச்சுபோட்டியில் காமராஜர் பற்றி பல்வேறு சுவாரசியமான தகவல்களை மாணவிகள் பேசினர். பின்னர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் அந்த பள்ளியின் பிளஸ்-2 மாணவி லட்சுமி பிரபா கல்வியில் மட்டும் அல்லாமல் விளையாட்டு உள்ளிட்டவற்றில் திறமையை வெளிப்படுத்தியதால் அவருக்கு அரசு சார்பில் காமராஜ் விருது வழங்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியின் போது அந்த மாணவிக்கு ஆசிரியர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து கூறி பாராட்டினர். இதேபோல் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளிலும் நேற்று காமராஜர் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கரூர் மாவட்டத்திலுள்ள தெருக்களிலும் ஆங்காங்கே பொதுமக்கள் சார்பில் காமராஜரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தியதையும் பார்க்க முடிந்தது.

    இதற்கிடையே கரூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நகர தலைவர் ஸ்டீபன் பாபு தலைமையில் சுரேகா பாலசந்தர், குமார் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கரூர் மனோகரா கார்னர் ரவுண்டானா அருகேயுள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் கரூர் நாடார் மஹாஜன சங்கம் சார்பில் நாடார் குழும தலைவர் நாடார் பைனான்ஸ் கூடலரசன், மாநில இணைச்செயலாளர் ஜீவிதா ஸ்டோர் சண்முக நாதன், மாவட்ட செயலாளர் நஞ்சை சதீஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் அங்கு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். கரூர் மாவட்ட நாடார் ஐக்கிய சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமையில் அகஸ்டின் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். கரூர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் கட்சி அலுவலகத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் பி.எம்.குப்புசாமி தலைமையில் அரசியல் உயர்மட்டக்குழு தலைவர் முன்னாள் எம்.பி. நாட்ராயன் உள்ளிட்டோர் காமராஜரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கரூரில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 
    கூடிய விரைவில் ஜெயக்குமாரும் அமைச்சர்களும் ஜெயிலுக்கு போவது உறுதி என்று காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார். #Kamarajarbirthday #EVKSElangovan
    சென்னை:

    சென்னையை அடுத்த புழலில் காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    விழாவில் தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இப்படியும் ஒரு தலைவர் வாழ்ந்து இருக்கிறார் என்று பெருமையோடு சொல்லும் வகையில் வாழ்ந்து இன்னும் வழிகாட்டியாக இருப்பவர் பெருந்தலைவர் காமராஜர்.

    யார் காமராஜர்? என்று கேட்டால் இன்று ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், விஞ்ஞானிகளாக உயர்ந்து இருக்கிறார்கள் அல்லவா? அவர்கள் வடிவில் தான் காமராஜர் உள்ளார். காங்கிரஸ்காரர்களால் மட்டுமே பொற்கால ஆட்சியை தர முடியும்.

    நாங்கள் எல்லாம் இந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காரில் வந்து வலதுபுறமாக திரும்பி பொதுக்கூட்ட மேடையில் இருக்கிறோம்.

    கூடிய விரைவில் தமிழக அமைச்சர்கள் சிலர் குறிப்பாக ஜெயக்குமார் போன்றவர்கள் இந்த வழியாக போலீஸ் வேனில் வருவார்கள். இடது புறமாக திரும்பி ஜெயிலுக்குள் செல்வார்கள்.

    காங்கிரசுக்கு சமாதி கட்டுவதாக பேசுகிறார்கள். கோடி கோடியாக கொள்ளையடிக்கும் அவர்களுக்கு தெரிந்தது உண்மைகளை புதைப்பது தான். அதனால் தான் காங்கிரசுக்கு சமாதி கட்டுவோம் என்கிறார்கள். அது முடியுமா உங்களால்?

    தம்பிதுரை தமிழ்நாட்டில் தேசிய கட்சிக்கும் இடமில்லை என்கிறார். அவரைப் போன்றவர்கள் இவ்வளவு உயர்ந்த நிலைக்கு வந்தது காங்கிரசின் தயவால் என்பதை மறந்துவிடக் கூடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.



    விழாவில் அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு பேசியதாவது:-

    காமராஜரை போன்ற எளிமையான தலைவர்களை காங்கிரசில் மட்டுமே பார்க்க முடியும். தியாகம் செய்து வளர்ந்த கட்சி காங்கிரஸ்.

    தமிழகத்தில் தொண்டர்களின் தலைவராக இளங்கோவன் இருக்கிறார். அவரிடம் இருந்து மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். மக்களின் எதிர்பார்ப்பையும், தொண்டர்களின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றும் தகுதி படைத்த தலைவர் இளங்கோவன் தான்.

    மோடி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.15 லட்சம் வங்கியில் போடுவேன் என்றார். ஆனால் வங்கிகளில் இருக்கும் பணத்தை தான் பிடுங்குகிறார்கள். பா.ஜனதா ஆட்சியின் சாதனை என்பது மக்கள் படும் வேதனைதான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் பொருளாளர் நாசே.ராமச்சந்திரன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் வீ.ஆர்.சிவராமன், ரங்கபாஷ்யம், நாசே.ராஜேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் பாலமுருகன், கடல் தமிழ்வாணன், எம்.பி.குணா, உள்பட பலர் கலந்து கொண்டனர். #Kamarajarbirthday #EVKSElangovan
    விருதுநகர் மணி மண்டபத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
    விருதுநகர்:

    முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பிறந்த நாள் விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) அரசு சார்பிலும், பல்வேறு அமைப்புகள் சார்பிலும் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. அவரது பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

    காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு அவர் பிறந்த ஊரான விருதுநகர் விழாக்கோலம் பூண்டுள்ளது. அங்குள்ள காமராஜர் நூற்றாண்டு மணிமண்டபம், காமராஜர் நினைவு இல்லம் போன்றவை மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

    விருதுநகர்-மதுரை சாலையில் உள்ள காமராஜர் நூற்றாண்டு மணிமண்டபத்தில் அரசு சார்பில் நடைபெறும் விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்.

    இதற்காக நாளை (ஞாயிற்றுக்கிழமை) பகல் 11 மணிக்கு விருதுநகர் வரும் அவருக்கு மாவட்ட எல்லையில் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு கொடுக்கின்றனர்.

    மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    வரவேற்பு முடிந்ததும் காமராஜர் நூற்றாண்டு மணிமண்டபத்திற்கு செல்லும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு சார்பில் அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.

    அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திரபாலாஜி, மா.பா.பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி, டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், ராதாகிருஷ்ணன் எம்.பி. ஆகியோரும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கின்றனர்.

    அதன் பிறகு விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப் பள்ளியில் நாடார் மகாஜன சங்கம் சார்பில் நடைபெறும் கல்வித்திருவிழாவிலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். காமராஜர் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தும் அவர் 3 பள்ளிகளுக்கு கல்விச்சேவை விருதினையும், 4 மருத்துவ மாணவிகளுக்கு மருத்துவ சேவை விருதினையும் வழங்குகிறார்.

    முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், காந்தி பேரவை நிறுவனர் குமரி அனந்தன், தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்.

    விழாவில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், காங்கிரஸ் நிர்வாகி வசந்தகுமார் எம்.எல்.ஏ., நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் மற்றும் பலர் பங்கேற்கின்றனர்.

    மதியம் 2 மணிக்கு நடைபெறும் விழாவில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன், பழனிவேல் தியாகராஜன், தங்கப்பாண்டியன், ஏ.ஆர்.சீனிவாசன் ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர்.

    விருதுநகர் காமராஜர் விழாவில் பங்கேற்க வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னதாக மதுரை காளவாசலில் ரூ.55 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள உயர்மட்ட மேம்பால பூமிபூஜை, அ.தி.மு.க. மாநகர் மாவட்ட அலுவலக கட்டுமான பூமி பூஜை ஆகியவற்றிலும் பங்கேற்கிறார். #EdappadiPalanisamy #Kamarajar #KamarajarBirthDay
    பெருந்தலைவர் காமராஜர் பிறந்ததினத்தை, பள்ளிகளில் நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் சுற்றறிக்கை பிறப்பித்துள்ளார். #Kamarajar #KamarajarBirthDay
    சென்னை:

    பெருந்தலைவர் காமராஜர், தமிழ்நாட்டில் கல்விக்கண் திறந்தவர் என்று கல்வியாளர்களால் மட்டும் அல்லாது அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்படுகிறார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) அவரது பிறந்தநாள் ஆகும்.

    2006-ம் ஆண்டு முதல் காமராஜர் பிறந்தநாள், கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் பள்ளிகளில் காமராஜர் உருவப்படம் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். காமராஜர் பற்றி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகிறது. கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்த வருடம் காமராஜர் பிறந்தநாள் ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது. இதனால் பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுமா, கொண்டாடப்படாதா என்ற குழப்பம் நிலவியது.

    இந்தநிலையில் விடுமுறை நாள் என்றாலும்கூட, காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் கொண்டாட வேண்டும் என்று அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், தனியார் பள்ளி முதல்வர்களுக்கும் முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார்.

    அதில் கூறி இருப்பதாவது:-



    காமராஜர் பிறந்த நாள் ஜூலை 15-ந்தேதி (நாளை) வருகிறது. இந்த நாளை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும், முதல்வர்களும் அன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடவேண்டும். இது தொடர்பாக நிகழ்ச்சிகள் நடத்தவேண்டும். சிறந்த பள்ளிகள் தேர்ந்து எடுக்கப்பட்டு அந்த பள்ளிகளில் உள் கட்டமைப்பு வசதி ஏற்படுத்த பரிசு தொகை வழங்கிட பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.56 லட்சமும், தொடக்க கல்வித்துறைக்கு ரூ.24 லட்சமும் ஆக மொத்தம் ரூ.80 லட்சத்துக்கு நிர்வாக அனுமதி வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் சில தலைமை ஆசிரியர்களிடம் பேசுகையில் அவர்கள், “கண்டிப்பாக காமராஜர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக ஞாயிற்றுக்கிழமை கொண்டாடுவோம். அவரது உருவப்படத்தை அலங்கரித்து வைத்து மரியாதை செலுத்துவோம். இனிப்புகள் வழங்கப்படும். ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கூடம் அருகே உள்ள மாணவர்கள் வருவார்கள். நிறைய மாணவ, மாணவிகள் வருகிற பள்ளிகளில் காமராஜர் பற்றிய பேச்சு போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி நடத்தப்படும். மாணவர்கள் ஒருவேளை வராமல் போனால் திங்கட்கிழமை அனைத்து போட்டிகளும் நடத்தப்படும். உறுதியாக ஞாயிற்றுக்கிழமை காமராஜர் உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு இனிப்பு வழங்கப்படும்” என தெரிவித்தனர். #Kamarajar #KamarajarBirthDay

    ×