search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drinking water issue"

    கந்தர்வக்கோட்டை ஒன்றியம் காட்டுநாவல் கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாக முறையாக குடிநீர் வரவில்லை. குடிநீர் விநியோகம் செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    கந்தர்வக்கோட்டை:

    கந்தர்வக்கோட்டை ஒன்றியம் காட்டுநாவல் கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாக முறையாக குடிநீர் வரவில்லை. அப்பகுதி பொதுமக்கள் அருகில் உள்ள வயல்பகுதிக்கு சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர். இதனால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    எனவே குடிநீர் விநியோகம் செய்யக்கோரி அப்பகுதி பொதுமக்கள் காட்டுநாவல் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    உடனே சம்பவ இடத்திற்கு கந்தர்வக்கோட்டை போலீசார் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் சுமூக முடிவு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 
    பென்னாகரம் அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த கெண்டைய அள்ளி ஊராட்சிக்குப்பட்ட காவக்காடு கிராமத்தில் சுமார் 300 குடியிருப்புகள் உள்ளனர். இந்த பகுதியில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட  பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 1 மாதமாக இந்த பகுதிக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வரவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமம் அடைந்து அவதிப்பட்டு வந்தனர். மேலும் தேவைக்கு அருகில் உள்ள கிராமத்தில் இருந்து குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர்.

    இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் முறையாக குடிநீர் வழங்ககோரி பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பல முறை மனு கொடுத்தனர். ஆனால் இது வரைக்கும் குடிநீர் கிடைக்க எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் பெண்கள் காலி குடங்களுடன் இன்று காலை 9 மணிக்கு ஒன்று திரண்டு பென்னாகரம்-மேச்சேரி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த பெரும்பாலை போலீசாரும், பென்னாகரம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜ்குமார், பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் விமலன், கிராமநிர்வாக அலுவலர் சுகுமார், ஆர்.ஐ. மாலா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

    அப்போது  அதிகாரிகள் குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன் பின்னர் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    திண்டுக்கல் நகரில்தொடரும் குடிநீர் பிரச்சனையால் 15-வது வார்டு பொதுமக்கள் குடிநீர் கேட்டு மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நகரில் பழைய குடிநீர் குழாய்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்த நடைமுறையை மாற்றி ஜிகா பைப் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பல்வேறு பகுதிகளில் பணிகள் முழுமையாக நிறைவடையாததால் குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் போராட்டம், மறியல், முற்றுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    15-வது வார்டுக்குட்பட்ட குறிஞ்சி நகர் பகுதியில் குடிநீர் முறையாக கிடைக்கவில்லை என கூறி ஏராளமான பெண்கள் மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். பின்னர் அதிகாரிகளிடம் முறையிட்டதைத் தொடர்ந்து விரைவில் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

    இது குறித்து மாநகராட்சி உதவி பொறியாளர் மாரியப்பன் தெரிவிக்கையில், திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் எம்.வி.எம். நகர், அண்ணா நகர், ஆர்.எம்.காலனி, பழையது மற்றும் புதிது, சந்தை பகுதி, சவேரியார் பாளையம், பூச்சிநாயக்கன்பட்டி, குள்ளனம்பட்டி, பழைய பஸ்நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள மேல்நிலை தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்கும் பணிகள் நிறைவடைந்துவிட்டது. ஆர்.எஸ்.ரோடு, ரவுண்டு ரோடு, மலைக்கோட்டை, குடகனாறு உள்ளிட்ட பகுதிகளில் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. ஒரு மாதத்துக்குள் பணிகள் நிறைவுற்று தினசரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்ச முடியாது. எனவே அனைத்து பகுதிகளுக்கும் தடையின்றி குடிநீர் கிடைக்கும் என்று கூறினார். #tamilnews
    திண்டுக்கல் நகரில் முறையான அறிவிப்பு மற்றும் சுகாதாரமற்ற குடிநீர் வருவதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நகரில் குடிநீர் பிரச்சினை பல ஆண்டுகளாகவே தீர்க்கப்படாத பிரச்சினையாகவே உள்ளது. பருவ மழை பெய்யும் காலத்தில் கூட குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும். ஏனெனில் இப்பகுதியில் குடிநீர் வழங்கும் அணைகளோ, மழைகாலத்தில் தண்ணீரை தேக்கி வைக்க தடுப்பணைகளோ கிடையாது.

    குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆத்தூர் காமராஜர் அணையும், கொடைக்கானலில் பெய்யும் மழையைப் பொறுத்தே நீர் மட்டம் உயர்ந்து வரும். இதனால் திண்டுக்கல் மட்டுமின்றி சுற்றுப்புற கிராமங்களில் கூட கோடை காலம் மட்டுமின்றி மழைக்காலத்திலும் குடிநீர் பிரச்சினை ஏற்படுகிறது.

    ஆத்தூர் காமராஜர் அணையில் தற்போது 5 அடிக்கும் கீழ் தண்ணீர் உள்ளது. காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் வழங்கும் தண்ணீர் ஓரளவு தட்டுப்பாட்டை சமாளித்து வருகிறது. இதனால் நகரில் உள்ள பெரும்பாலான மக்கள் பணம் கொடுத்தே தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

    குடிநீர் மட்டுமின்றி அன்றாட உபயோகத்துக்கு பயன்படுத்தப்படும் உப்பு தண்ணீருக்கும் இதே நிலைதான் உள்ளது. இதனால் சாமானிய மக்கள் தண்ணீருக்கு பெரும் போராட்டம் நடத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.

    திண்டுக்கல் நாகல்நகர் டிசில்வாநகரைச் சேர்ந்த கோகிலா என்பவர் தெரிவிக்கையில், 15 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வழங்கப்படுகிறது. அதிலும் புதிய குடிநீர் குழாய் இணைப்பு மூலம் வழங்கப்படும் தண்ணீர் 2 மணி நேரம் கூட வருவதில்லை. ஒரு வீட்டுக்கு 20 குடங்கள் மட்டுமே கிடைக்கிறது. மழை காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து வீடுகளை சூழ்ந்து விடுகிறது. குடிநீர் மற்றும் அடிப்படை பிரச்சினைகளுக்காக பல முறை புகார் அளித்து ஓய்ந்து விட்டோம்.

    பாம்பன் ஆசாரி தெருவைச் சேர்ந்த தனலெட்சுமி என்பவர் தெரிவிக்கையில், மாநகராட்சி சார்பில் வழங்கப்படும் தண்ணீர் எப்போது வினியோகம் செய்யப்படும் என்ற அறிவிப்பே கிடையாது. பகல் மற்றும் இரவு என நினைத்த நேரத்தில் தண்ணீர் விடுகின்றனர். வேலைக்கு செல்லும் பெண்கள் தண்ணீர் வரும் சமயத்தில் விடுப்பு எடுத்து அதற்காக வீட்டிலேயே தங்கும் நிலை உள்ளது. பல சமயங்களில் குடிநீர் துர்நாற்றத்துடன் குடிக்க முடியாத அளவுக்கு உள்ளது. குடிநீர் பிரச்சினை மட்டுமின்றி அடிப்படை வசதிகள் குறித்து புகார் அளிக்க உள்ளாட்சி மன்ற நிர்வாகிகளும் கிடையாது. அதிகாரிகளிடம் சொன்னாலும் நடவடிக்கை எடுப்பதில்லை என்று தெரிவித்தார்.

    திண்டுக்கல் நகர் மட்டுமின்றி கிராமப்புற மக்களும் தண்ணீர் பிரச்சினைக்கு போராடி வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கூட்டமாக திரண்டு வந்து மனு அளித்து செல்கின்றனர். குடிநீர் பிரச்சினைக்கு அரசியல்வாதிகள் மட்டுமின்றி அதிகாரிகளும் மனம் வைத்தால்தான் தீர்வு காணமுடியும் என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

    வேப்பூர் அருகே இன்று குடிநீர் வழங்காததை கண்டித்து காலிகுடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

     வேப்பூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ளது மங்களூர். இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 4 நீர்தேக்க தொட்டிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.

    இந்தநிலையில் குடிநீர் தொட்டிகளுக்கு நீர் ஏற்றும் மின் மோட்டார் பழுதடைந்தது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு கடந்த 1 மாத காலமாக சீரானமுறையில் குடிநீர் வழங்கப்படவில்லை. கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

    இதனைத்தொடர்ந்து ஊர் பொதுமக்கள் பழுதான மின்மோட்டாரை சீர் செய்யக்கோரி மங்களூர் ஊராட்சி செயலாளருக்கும், வட்டார வளர்ச்சி அதிகாரிக்கும் மனுகொடுத்தனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

    இதையடுத்து குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்த பொதுமக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் மங்களூர் பஸ்நிலையம் அருகே காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிறுபாக்கம் போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்றனர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பழுதான மின்மோட்டார்களை சரிசெய்து விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். அதனைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    கோபி அருகே குடிநீர் வசதி செய்து தரக்கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டததால் பரபரப்பு ஏற்பட்டது.

    கோபி:

    கோபி ஊராட்சி ஒன்றியம் அளுக்குழி ஊராட்சி கோபி பாளையம் பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று தெரிகிறது.

    இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் அவதியடைந்தனர். இது குறித்து பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

    இதன் காரணமாக அந்த பகுதி பெண்களும், ஆண்களும் இன்று கலை திடீர் போராட்டத்தில் குதித்தனர். ஈரோடு-சத்தியமங்கலம் ரோட்டில் கோபிபாளையம் பிரிவில் அவர்கள் திரண்டனர்.

    பெண்கள் காலி குடங்களுடன் வந்திருந்தனர். திடீரென ரோட்டில் அமர்ந்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். குடிநீர் வசதி கேட்டு அவர்கள் கோ‌ஷம் எழுப்பினர்.

    இந்த போராட்டத்தால் ஈரோடு-சத்தியமங்கலம் ரோட்டில் போக்குவரத்து பாதிப்பும், பரபரப்பும் நிலவியது. முக்கியமான சாலை என்பதால் அந்த வழியாக வந்த வாகனங்கள் மேற்கொண்டு செல்ல முடியாமல் நின்றன.

    இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    வருவாய்த்துறை அதிகாரிகளும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் அங்கு வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்களும், பெண்களும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    மத்தூர் அருகே குடிநீர் பிரச்சினைக்காக கிராம மக்கள் சாலைமறியல் செய்ய முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் சமரசம் செய்தனர்.
    மத்தூர்:

    மத்தூர் அருகே உள்ளது நாகம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் கடும் குடிநீர் பிரச்சினை கடந்த 2 மாதமாக நிலவி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஊர் பொதுமக்கள் மற்றும் பெண்கள் காலிக்குடங்களுடன் இடும்பன் கோவில் அருகில் சாலை மறியல் செய்வதற்காக நேற்று திரண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன் பொதுமக்கள் கூட்டமாக இருந்ததை கண்டு என்ன பிரச்சினை என விசாரித்தார். அப்போது குடிநீர் பிரச்சினை காரணமாக சாலை மறியல் செய்ய போவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) சண்முகம், நாகம்பட்டி ஊராட்சி செயலாளர் சண்முகம், ஊர் முக்கிய பிரமுகர்கள் மாதையன், கதிர்வேல் உள்பட பலரிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன், ஆழ்துளை கிணறு உள்ள இடத்தை பார்வையிட்டார்.

    அங்கிருந்து சிறு மின்விசை நீர்தேக்க தொட்டிக்கு உடனடியாக பைப்லைன்கள் அமைத்து நீரை ஏற்றும்படியும், அதன் மூலம் குடிநீர் வினியோகத்தை மேற்கொள்ள முடியும் என்று வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. 
    ×