search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "People Suffer In Dindigul"

    திண்டுக்கல் நகரில் முறையான அறிவிப்பு மற்றும் சுகாதாரமற்ற குடிநீர் வருவதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நகரில் குடிநீர் பிரச்சினை பல ஆண்டுகளாகவே தீர்க்கப்படாத பிரச்சினையாகவே உள்ளது. பருவ மழை பெய்யும் காலத்தில் கூட குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும். ஏனெனில் இப்பகுதியில் குடிநீர் வழங்கும் அணைகளோ, மழைகாலத்தில் தண்ணீரை தேக்கி வைக்க தடுப்பணைகளோ கிடையாது.

    குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆத்தூர் காமராஜர் அணையும், கொடைக்கானலில் பெய்யும் மழையைப் பொறுத்தே நீர் மட்டம் உயர்ந்து வரும். இதனால் திண்டுக்கல் மட்டுமின்றி சுற்றுப்புற கிராமங்களில் கூட கோடை காலம் மட்டுமின்றி மழைக்காலத்திலும் குடிநீர் பிரச்சினை ஏற்படுகிறது.

    ஆத்தூர் காமராஜர் அணையில் தற்போது 5 அடிக்கும் கீழ் தண்ணீர் உள்ளது. காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் வழங்கும் தண்ணீர் ஓரளவு தட்டுப்பாட்டை சமாளித்து வருகிறது. இதனால் நகரில் உள்ள பெரும்பாலான மக்கள் பணம் கொடுத்தே தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

    குடிநீர் மட்டுமின்றி அன்றாட உபயோகத்துக்கு பயன்படுத்தப்படும் உப்பு தண்ணீருக்கும் இதே நிலைதான் உள்ளது. இதனால் சாமானிய மக்கள் தண்ணீருக்கு பெரும் போராட்டம் நடத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.

    திண்டுக்கல் நாகல்நகர் டிசில்வாநகரைச் சேர்ந்த கோகிலா என்பவர் தெரிவிக்கையில், 15 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வழங்கப்படுகிறது. அதிலும் புதிய குடிநீர் குழாய் இணைப்பு மூலம் வழங்கப்படும் தண்ணீர் 2 மணி நேரம் கூட வருவதில்லை. ஒரு வீட்டுக்கு 20 குடங்கள் மட்டுமே கிடைக்கிறது. மழை காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து வீடுகளை சூழ்ந்து விடுகிறது. குடிநீர் மற்றும் அடிப்படை பிரச்சினைகளுக்காக பல முறை புகார் அளித்து ஓய்ந்து விட்டோம்.

    பாம்பன் ஆசாரி தெருவைச் சேர்ந்த தனலெட்சுமி என்பவர் தெரிவிக்கையில், மாநகராட்சி சார்பில் வழங்கப்படும் தண்ணீர் எப்போது வினியோகம் செய்யப்படும் என்ற அறிவிப்பே கிடையாது. பகல் மற்றும் இரவு என நினைத்த நேரத்தில் தண்ணீர் விடுகின்றனர். வேலைக்கு செல்லும் பெண்கள் தண்ணீர் வரும் சமயத்தில் விடுப்பு எடுத்து அதற்காக வீட்டிலேயே தங்கும் நிலை உள்ளது. பல சமயங்களில் குடிநீர் துர்நாற்றத்துடன் குடிக்க முடியாத அளவுக்கு உள்ளது. குடிநீர் பிரச்சினை மட்டுமின்றி அடிப்படை வசதிகள் குறித்து புகார் அளிக்க உள்ளாட்சி மன்ற நிர்வாகிகளும் கிடையாது. அதிகாரிகளிடம் சொன்னாலும் நடவடிக்கை எடுப்பதில்லை என்று தெரிவித்தார்.

    திண்டுக்கல் நகர் மட்டுமின்றி கிராமப்புற மக்களும் தண்ணீர் பிரச்சினைக்கு போராடி வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கூட்டமாக திரண்டு வந்து மனு அளித்து செல்கின்றனர். குடிநீர் பிரச்சினைக்கு அரசியல்வாதிகள் மட்டுமின்றி அதிகாரிகளும் மனம் வைத்தால்தான் தீர்வு காணமுடியும் என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

    ×