என் மலர்
நீங்கள் தேடியது "woman road blockage"
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் பகுதியில் தற்போது பாதாள சாக்கடை பணி நடந்து வருகிறது. இதனால் ஆங்காங்கே குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டு தண்ணீர் வீணாக வெளியே சென்று கொண்டிருக்கிறது.
பல்வேறு இடங்களில் சீராக குடிநீர் வினியோகிக்க படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் சத்திய மங்கலம் அருகே உள்ள வடக்கு பேட்டை, திப்பு சுல்தான் ரோடு, புளியம் கோம்பை ரோடு, கட்டபொம்மன் நகர் உட்பட பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்களுக்கு கடந்த ஒரு மாதமாக சீராக குடிநீர் விநியோகிக்க படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். தினமும் ஒரு குடம் தண்ணீர் மட்டுமே குடிக்க வருவதாக குற்றம் சாட்டினார்.
எனவே இதனை கண்டித்தும் சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தியும் இன்று காலை 9.20 மணி அளவில் அப்பகுதி பெண்கள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் அத்தாணி ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சத்தியமங்கலம் போலீசார் மற்றும் சத்தியமங்கலம் நகராட்சி அலுவலர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்கள் பகுதியில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். சுமார் 30 நிமிடம் நடந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கவுண்டம்பாளையம்:
கோவை கணுவாய் நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்குட்பட்ட சோமையனூர் அருகே உள்ள திருவள்ளூவர் நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 50 நாட்களுக்கு மேலாக குடிதண்ணீர் வரவில்லை.
இது குறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் இன்று காலை கோவை- ஆனைகட்டி ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்த தகவல் கிடைத்ததும் தடாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.

கோபி:
சத்தியமங்கலம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதி இண்டியம்பாளையம். இங்கு கடந்த சில நாட்களாகவே ஆற்று குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படவில்லையாம்.
இது குறித்து அப்பகுதி மக்கள் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இந்த நிலையில் இண்டியம் பாளையம் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆண்கள்- பெண்கள் அப்பகுதியில் உள்ள சத்தி- ஈரோடு மெயின் ரோட்டில் காலி குடங்களுடன் திரண்டனர்.
திடீரென அவர்கள் நடுரோட்டில் அமர்ந்து கொண்டும் நின்று கொண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம், கடத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் காந்திமதி ஆகியோர் விரைந்து சென்றனர். பி.டி.ஓ.வும் சென்றார். அவர்கள் சாலைமறியல் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் தான் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.
விரைவில் அது சரி செய்யப்பட்டு சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார். இதை தொடர்ந்து சாலைமறியல் நடத்திய பொதுமக்கள் சமாதானமாகி அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த திடீர் சாலைமறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 1 வாரமாக கோடியக்கரை பகுதியில் குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் அருகில் உள்ள தோட்டத்தில் உள்ள கிணற்றில் குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பெண்கள் கூறியுள்ளனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த கோடியக்கரை பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் கோடிக்கரை மெயின்ரோட்டில் காலி குடங்களுடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு அங்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு வாரத்தில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதனை ஏற்று சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் அந்த இடத்தை விட்டு கலைந்து சென்றனர்.
குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் 1 மணி நேரம் அந்த இடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






