என் மலர்
நீங்கள் தேடியது "தண்ணீர் பிரச்சினை"
வாணியம்பாடி:
வாணியம்பாடி அருகே உள்ள மரிமாணிக்குப்பம் ஊராட்சி ஓம குப்பம் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீர் வழங்கபடவில்லை. இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபட வில்லை என்று கூறபடுகிறது.
இதனால் ஆததிரமடைந்த பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஆலங்காயம் -திருப்பத்தூர் செல்லும் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த வாணியம்பாடி தாசில்தார் முருகன், குருசிலாபட்டு மற்றும் ஆலங்காயம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது உங்கள பகுதிக்கு உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கபடும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பெண்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்து.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட 19-வது வார்டு பகுதியில் 15 நாட்கள் மேலாகியும் குடிநீர் வழங்காததை கண்டித்தும் சாக்கடை மற்றும் சரியாக கவனிக்கப்படாத கண்டிக்கும் பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் ஆத்தூர் சென்னை பிரதான சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் இந்த சாலை மறியல் நடைபெற்றது.
இதனால் சேலம்-சென்னை செல்லும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, பல முறை நகராட்சி ஆணையாளர் மற்றும் அதிகாரிகளுடன் புகார் கூறியும் எந்த பயனும் இல்லை குப்பை சுத்தம் செய்வதில்லை குடிநீர் 15 நாட்களுக்கு மேலாகி வழங்கப்படவில்லை சாக்கடை சுத்தம் செய்யாமல் குழந்தைகளுக்கு காய்ச்சல் வாந்திபேதி ஏற்படுகிறது. இதனால் பொருக்க முடியாமல் சாலை மறியல் செய்கிறோம் என்றனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு ஆத்தூர் போலீசார் மற்றும் நகராட்சி பணியாளர்கள் நேரில் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக இதற்கான தீர்வு காணப்படும் என உறுதியளித்ததின் பேரில் பெண்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை, விளார் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வரும் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் கடந்த 15 நாட்களாக குடிநீர் சப்ளை செய்யப்பட வில்லை. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மிகுந்த சிரதத்திற்கு உள்ளான பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர்.
இன்று காலை விளார் கண்டிதம்பட்டு பிரிவு சாலையில் ஒன்று திரண்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தஞ்சை தாலுகா போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டம் நடத்தியர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் குழாயை சரி செய்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று பொதுமக்கள் உறுதியாக கூறினர். இதனால் உடனடியாக தொழிலார்களை வரவழைத்து குடிநீர் குழாயை சீரமைக்கும் பணிக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைதொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
கிணத்துக்கடவு:
கிணத்துக்கடவு அருகே உள்ள தேவராயபுரம் ஊராட்சி சென்றாம் பாளையம் கிராமத்தில் கடந்த 18 நாட்களாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இன்று காலை 7.30 மணியளவில் சென்றாம் பாளையம் பஸ் நிறுத்தத்தில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அந்த வழியாக பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு செல்லும் அரசு பஸ் வந்தது. அதனை பொதுமக்கள் சிறை பிடித்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் தாஸ், அம்பராம் பாளையம் கூட்டு குடிநீர் திட்ட உதவி பொறியாளர் திருமலை சாமி, கிணத்துக்கடவு சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் விரைந்து வந்தனர்.
அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தான் தண்ணீர் சப்ளை செய்ய முடியவில்லை.
இன்று முதல் முறையாக தண்ணீர் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி இன்று தண்ணீர் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 7, 9-வது வார்டுகளுக்கு உட்பட்டது துரைராஜநகர், வரதராஜபுரம், சுப்பிரமணியபுரம், நாயக்கர்புதுதெரு ஆகிய பகுதகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் 8 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
ஆனால் கடந்த 10 நாட்களாக குடிநீர் வரவில்லை என்று அந்த மக்கள் புகார் தெரிவித்தனர். குடிநீர் குறித்து புகார் செய்வதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் 18004254181 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணுக்கு போன் செய்தால் யாரும் எடுப்பது இல்லை.
அப்படியே எடுத்தாலும் அங்குள்ளவர்கள் இன்று விடுமுறை. அப்புறம் பேசுங்கள் என்று மக்களை புறக்கணிக்கின்றனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே அந்த பகுதி மக்கள் ஆதங்கத்தில் உள்ளனர். குடிநீர் சீராக வழங்காவிட்டால் மாநகராட்சி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.






