என் மலர்
செய்திகள்

துடியலூர் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்
துடியலூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள், பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கவுண்டம்பாளையம்:
கோவை கணுவாய் நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்குட்பட்ட சோமையனூர் அருகே உள்ள திருவள்ளூவர் நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 50 நாட்களுக்கு மேலாக குடிதண்ணீர் வரவில்லை.
இது குறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் இன்று காலை கோவை- ஆனைகட்டி ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்த தகவல் கிடைத்ததும் தடாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.
Next Story






