search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Child marriage"

    • 28-ந் தேதி காடாம்புலியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது.
    • மகளிர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர் :

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மேல்மாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜ்மோகன் (வயது25), இவருக்கும் புதுப்பாளையத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த 28-ந் தேதி காடாம்புலியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது. பெற்றோர்கள் பாலு கருணாநிதி, ராஜ்மோகன் ஆகியோர் மீது குழந்தை திருமணம் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு சமூக நல அலுவலர் தனபாக்கியம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனை தொடர்ந்து மகளிர் போலீசார் 3பேர் மீது வழக்கு பதிந்து சிறுமியை கடலூரில் உள்ள மகளிர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேவராஜி எம்.எல்.ஏ. வழங்கினார்
    • ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, வக்கணம் பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நி லைப்பள்ளி, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது.

    இவ்விழாவிற்கு ஜோலார்பேட்டை நகர கழக செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் ஆஜம், முனியப்பன், சாந்தி, ஐசக் ஆகியோர் வரவேற்றனர். பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர்கள் சி.எஸ்.பெரியார் தாசன், ஆர். மகேந்திரன் மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மேற்கு மாவட்ட பொறுப்பாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வழங்கினார்.

    இதனை அடுத்து அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேற்று ஆசிரியர் தினத்தை யொட்டி பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் எம்.எல். ஏ. தேவராஜி பரிசுகள் வழங்கினார்.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய செயலாளர் க.உமாகன்ரங்கம், ஜோலார்பேட்டை நகர மன்ற தலைவர் காவியாவிக்டர், நகராட்சி ஆணையர் பழனி, நகர மன்ற துணைத்தலைவர் பெ.இந்திரா பெரியார்தா சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • திருமணம் நடைபெறும் இடத்திற்கு சென்று நிறுத்தினர்
    • 18 வயது பூர்த்தி ஆகாததால் நடவடிக்கை

    அரக்கோணம்:

    பாணாவரம் பகுதியைச் சேர்ந்த மைனர் பெண்ணுக்கும் வாலிபருக்கும் நாகுவேடு பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது. இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குழந்தை பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட அதிகாரிகள் மகளிர் போலீசார் திருமணம் நடைபெறும் இடத்திற்கு சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

    இதை சற்று எதிர்ப்பாராத மணமகன் மற்றும் பெண்ணின் பெற்றோர் அப்பெண்ணிற்கு 18 வயது பூர்த்தி ஆகி உள்ளது என அவரது ஆதார் அட்டையை காண்பித்துள்ளனர். இதை ஆதாரமாகக் கொண்டுதான் திருமணம் நடைபெற்றது என கூறினர்.

    அரசு அதிகாரிகள் இந்த ஆதார் அட்டை செல்லுபடி ஆகாது பள்ளி சான்றுகளில் ஏதோ ஒன்று காண்பியுங்கள் என கேட்டனர். பள்ளி சான்றில் 18 வயது ஆவதற்கு சில நாட்கள் உள்ளதால் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • நடுவட்டம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கும், கொடைக்கானல் பகுதியைச் சோ்ந்த 26 வயது வாலிபருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. அந்த திருமணத்தையும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனா்.
    • மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடப்பது தெரிந்தால் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஊட்டி:

    குன்னூரை சேர்ந்தவர் காட்வின்(22). இவா் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.

    விடுமுறை நாட்களில் சொந்த ஊா் சென்று வந்த இவருக்கு, அதே பகுதியை சோ்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது காதலாக மாறியது.

    இதைத் தொடா்ந்து காட்வின் ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். இதனால் அந்த சிறுமி 7 மாதம் கா்ப்பம் அடைந்துள்ளார்.

    சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து இரு வீட்டு பெற்றோரும் கூடி பேசி இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். திருமணத்துக்கான ஏற்பாடுகள் கடந்த சில நாள்களாக தீவிரமாக நடைபெற்று வந்தன.

    இதுகுறித்து மாவட்ட சமூக நல அலுவலா் பிரசன்ன தேவிக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சமூக நலத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினா். மேலும் இதுகுறித்து குன்னூா் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து காட்வினை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனா்.

    ஊட்டி அருகே உள்ள புதுமந்து பகுதியை சோ்ந்தவா் ராஜன்(26). கூலி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இதுபற்றி அறிந்த பெற்றோர் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

    திருமணத்திற்கு நாளும் குறிக்கப்பட்டது. நேற்று 17வயது சிறுமிக்கு திருமணம் நடப்பதாக அப்பகுதியை சேர்ந்த சிலர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிக்கு புகார் தெரிவித்தனர்.

    அதன்பேரில் மாவட்ட சமூக நல அலுவலர் பிரசன்ன தேவி தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று இருவீட்டு பெற்றோரிடமும் பேசி திருமணத்தை தடுத்து நிறுத்தினா்.

    மேலும் சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். அதன்பின்னர் சிறுமிக்கு 18 வயது பூர்த்தி அடையும் வரை திருமணம் செய்யமாட்டோம் என ஒப்புதல் கடிதம் கொடுத்தனர்.

    அதேபோல நடுவட்டம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கும், கொடைக்கானல் பகுதியைச் சோ்ந்த 26 வயது வாலிபருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. அந்த திருமணத்தையும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனா்.

    மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடப்பது தெரிந்தால் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மகளிர்கள் தங்களது தேவைகள் மற்றும் புகார்களை தெரிவிப்பதற்கு அரசு சார்பில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    • தர்மபுரி, கரூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் குழந்தை திருமணம் அதிகமாக உள்ளது.

    நெல்லை:

    மாநில மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமரி இன்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்். மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் விஷ்ணு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்்.

    ஆலோசனை

    தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள மகளிர் மீதான பிரச்சனைகள் உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார். அதற்கான தீர்வுகள் குறித்தும் ஆலோசனை வழங்கினார்.அதன் பின்னர் ஆணைய தலைவி குமரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    மகளிர்கள் தங்களது தேவைகள் மற்றும் புகார்களை தெரிவிப்பதற்கு அரசு சார்பில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒன் ஸ்டாப் சென்டர் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    பரிந்துரை

    இதன் மூலம் பெண்கள் தங்களது வீட்டில் பணிபுரியும் இடங்களில், பள்ளி- கல்லூரிகளில் படும் துயரங்களை தெரிவிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    மாவட்ட கலெக்டர் விஷ்ணு இந்த ஒன் ஸ்டாப் சென்டரை ஆரம்பித்து அதனை திறம்பட செயல்படுத்தி வருகிறார். இதன் மூலம் பெண்களுக்கு சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    மனுக்களுக்கு துரித நடவடிக்கை எடுப்பதற்கு கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்துள்ளேன்.

    குழந்தை திருமணம்

    தர்மபுரி, கரூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் குழந்தை திருமணம் அதிகமாக உள்ளது. தற்போது 22-வது மாவட்டமாக நான் நெல்லைக்கு வந்துள்ளேன். மற்ற மாவட்டங்களை விட நெல்லை மாவட்டத்தில் பணிகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது.

    இந்த மாவட்டத்தை முன்மாதிரியான மாவட்டமாக கொண்டு மற்ற மாவட்டங்கள் செயல்பட வேண்டும். நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம், பாளை, நாங்குநேரி, மானூர் உள்ளிட்ட தாலுகாக்களில் குழந்தை திருமணம் அதிகரித்து காணப்படுகிறது.

    மாவட்ட கலெக்டர் விஷ்ணு உத்தரவின் பேரில் அந்த தாலுகாக்களில் குழுக்களாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பெண்களுக்கான உதவி எண் 181, குழந்தைகளுக்கான உதவி எண் 1098 மற்றும் முதியவர்களுக்கான உதவி எண் 1 4 5 6 7 ஆகியவற்றை இந்த மாவட்ட மக்கள் சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர்.

    மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தாய் கேர் என்ற திட்டம் தொடங்கப்பட்டு கர்ப்பிணி பெண்களின் தேவைகளை அவர்களின் வீடுகளுக்கு சென்று அறிந்து நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரின் சிறப்பான பணியின் காரணமாக இந்த மாவட்டம் முன்மாதிரியான மாவட்டமாக உள்ளது. இதுபோல் அனைத்து மாவட்டங்களிலும் அதிகாரிகள் சிறப்பாக பணியாற்றினால் தமிழகம் சிறந்த மாநிலமாக உருவாகும்.

    நெல்லையில் மாதத்திற்கு 70 புகார்கள் வரை பெண்கள் தரப்பில் இருந்து வருகிறது. அவற்றில் 50 புகார்கள் வரையில் தீர்வு காணப்பட்டு உள்ளது. இது மிகவும் பாராட்டத்தக்கது.

    பெண்கள் தங்கள் பணி புரியும் இடங்களில் பாலியல் தொந்தரவு உள்ளிட்ட ஏதேனும் இன்னல்களுக்கு ஆளாகினால் அவர்கள் தங்களது புகார்களை திறம்பட தெரிவிக்க பல்வேறு வழி வகைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு நிறுவனத்திலும் புகார் கமிட்டி ஆரம்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    500 பெண்கள் பணி புரியும் அளவிலான நிறுவனங்களில் 7 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டு மாதந்தோறும் கவுன்சிலிங் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் ஒழுங்கு நடவடிக்கை ஆணையர் சுகன்யா, ஆர்.டி.ஓ. சந்திரசேகர், மாவட்ட சமூக நல அலுவலர் சரஸ்வதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் டைட்டஸ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சிறுமி குழந்தை பெற்றது தொடர்பான தகவல் உசிலம்பட்டி அனைத்து மகளிர் போலீசாருக்கு கிடைத்தது.
    • சட்ட விரோதமாக சிறுமியை திருமணம் செய்த உதயகுமார் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள போலக்காபட்டியை சேர்ந்தவர் பெரிய கருப்பன். இவரது மகன் உதயகுமார் (வயது 28). இவருக்கும் தேனியைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது.

    பின்னர் இருவரும் அங்குள்ள தோட்டத்து வீட்டில் குடும்பம் நடத்தினர். இந்த நிலையில் அந்த சிறுமி கர்ப்பமானார். ஆஸ்பத்திரிக்கு சென்றால் குழந்தை திருமணம் குறித்த தகவல் வெளியே தெரிந்துவிடும் என்று கருதிய குடும்பத்தினர் சிறுமிக்கு வீட்டிலேயே வைத்தியம் பார்த்துள்ளனர்.

    7 மாத கர்ப்பிணியாக இருந்த சிறுமிக்கு நேற்று திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவருக்கு வீட்டிலேயே பிரசவம் பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்து சற்று நேரத்தில் இறந்து விட்டது.

    சிறுமி குழந்தை பெற்றது தொடர்பான தகவல் உசிலம்பட்டி அனைத்து மகளிர் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது குழந்தை திருமணத்தை மறைத்து சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இறந்த குழந்தையின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சட்ட விரோதமாக சிறுமியை திருமணம் செய்த உதயகுமார் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இன்று அவரை கைது செய்தனர்.

    • 5 மாத கர்ப்பிணியாக உள்ள சிறுமி, புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளார்.
    • சிறுமியின் விபரங்களை பதிவு செய்தபோது அவருக்கு 18 வயது நிரம்பும் முன்னரே திருமணம் நடந்தது தெரியவந்தது.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள சொக்கம்பட்டியை சேர்ந்தவர் ராஜூ. இவரது மகன் அய்யன்குமார்(வயது 29).

    இவருக்கும், 17 வயது சிறுமிக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணமானது. தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ள அந்த சிறுமி, புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளார்.

    அப்போது அவரது விபரங்களை பதிவு செய்தபோது சிறுமிக்கு 18 வயது நிரம்பும் முன்னரே திருமணம் நடந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக வாசுதேவநல்லூர் யூனியனை சேர்ந்த ஊர்நல அலுவலர் முத்தாத்தாள் புளியங்குடி போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் 2 பேரின் பெற்றோர் சம்மதத்துடன் சிறுமிக்கு திருமணம் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து அய்யன்குமார் மற்றும் அவரது பெற்றோர் மீதும், சிறுமியின் பெற்றோர் மீதும் போலீசார் குழந்தை திருமணம், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது
    • சமூக அக்கறையுடன் கையாள வேண்டும்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் பாலக்கரையில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மூலம், யுனிசெப் மற்றும் தோழமை தன்னார்வலத் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து குழந்தைகளுக்கு எதிரான வன்முறை மற்றும் குழந்தை திருமணத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பெரம்பலூர் மாவட்ட அளவிலான விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதனை குறைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அப்பணியை சமூக அக்கறையுடன் கையாண்டு பொதுமக்களிடம் விரைந்து செல்வதற்காக இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

    இக்கூட்டத்தில் சீரார் நிதி குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் உள்ளிட்ட சட்ட ஆலோசனைகளும், குழந்தைகளின் கருத்துகளுக்கு மதிப்பளிப்தோடு ஊடகங்களில் குழந்தைகள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (மாநில வள மையம்) பூரணி, மூத்த பத்திரிகையாளர் ராமசுப்ரமணியன் (எ) மணி, தோழமை தொண்டு நிறுவன இயக்குநர் தேவநேயன், வழக்கறிஞர் சுப. தென்பாண்டியன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் மகாகிருஷ்ணன், பெருமாள், தோழமை ஒருங்கிணைப்பாளர் பிரபாகர், பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் ரோவர் கல்லூரியில் பயிலும் ஊடகவியல் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • பள்ளிக்கல்வித்துறையின் மூலம் நடந்த கணக்கெடுப்பின் போது 3,000 பெண் குழந்தைகள் இடைநிற்றல் ஆகியிருப்பது தெரியவந்தது.
    • பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்து உயர் கல்வியை ஊக்குவித்தும், குழந்தை திருமணத்தை தடுத்தும் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு நீங்கள் உறுதுணையாக இருந்து ஒத்துழைப்பு நல்கவேண்டும்.

    கரூர் :

    கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாளியாம்பட்டியில் மாவட்ட நிர்வாகம், சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு இணைந்து நடத்தும் "பள்ளிக்கூட மணி அடிச்சாச்சு" என்ற (பள்ளி செல்லா குழந்தைகள் திருமணம், குழந்தை தொழிலாளர்களுக்காக) விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்தது:

    கரூர் மாவட்டத்தில் கொரோனா காலங்களில் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் நடந்த கணக்கெடுப்பின் போது 3,000 பெண் குழந்தைகள் இடைநிற்றல் ஆகியிருப்பது தெரியவந்தது. குறிப்பாக தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆர்.டி.மலை ஊராட்சி வாளியாம்பட்டியில் 32 பெண் குழந்தைகள் இடைநிற்றல் ஆகியிருப்பது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அவர்கள் பள்ளிக்கு செல்வதற்கான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, ஊரக வளர்ச்சித்துறை, பள்ளிக்கல்வித்துறை ஆகிய துறைகள் மூலம் அவர்களின் தேவைகளை வீடு வீடாக சென்று அவர்களின் அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    ஆகையால் பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்து உயர் கல்வியை ஊக்குவித்தும், குழந்தை திருமணத்தை தடுத்தும் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு நீங்கள் உறுதுணையாக இருந்து ஒத்துழைப்பு நல்கவேண்டும்.

    பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் காலத்தில் பாதுகாப்பு சூழலை ஏற்படுத்தும் பெண்கள் சிறப்பு ஓய்வறை அமைத்து தரப்படும். அந்த ஓய்வறையில் சுடு தண்ணீர் வசதி, கழிப்பறை, குளியலறை வசதி, புத்தகங்கள், தொல்லைக்காட்சி, சாதனை பெண்களின் புகைப்படங்கள் வைக்கப்படும்.

    மேலும் நாளை (ஆக. 1ம் தேதி) பேருந்துகள் தொடங்கப்பட்டு அனைத்து குழந்தைகளுடன் பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    • கடலூர் மாவட்டத்தில் 7 குழந்தைகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
    • பணம்கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக 4 புகார் கள் பெறப்பட்டு ரூ.2.45 லட்சம் பெற்றுத்தரப்பட்டுள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் பெண்களின் நலன் காக்க 'லேடிஸ் பர்ஸ்ட்' என்ற திட்டத்தைதொடக்கி வைத்து,82200 06082 என்ற உதவி எண்ணை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் வெளியிட்டார். இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை 666 புகார் கள் வரப்பெற்று அதில், 654 புகார் மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. இதில், சிறார் திருமணம் தொடர்பாக வரப்பெற்ற 7 புகார்களின் மீதும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 7 திருமணங்களும் தடுத்து நிறுத்தப்பட்டன.

    குடும்பப் பிரச்சினை, கணவன்-மனைவி இடையிலான பிரச்சினை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 69புகார்கள் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், குடும்ப பிரச்சினை, கணவன்-மனைவி இடையிலான பிரச்சினை, பொதுப் பிரச்சினைகள் ,5 பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்டவை தொடர்பாக 113 புகார்களுக்கு மனு ரசீது வழங்கப்பட்டுள்ளது. பணம்கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக 4 புகார் கள் பெறப்பட்டு ரூ.2.45 லட்சம் பெற்றுத்தரப்பட்டுள்ளது. குடும்பப் பிரச்சினை , மாமியார்-மருமகள் பிரச்சினை , பணம்கொடுக்கல் வாங்கல் பிரச்சினை தொடர்பாக 467 மனுக்கள் பெறப்பட்டு இருதரப்பையும் அழைத்து சமாதானம் பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    • பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
    • குழந்தை திருமண தடுப்பு சட்டம், குற்றம் செய்பவர்களுக்கான தண்டனைகள், குழந்தை திருமணம் குறித்து தகவல் அளிக்க வேண்டிய இலவச தொலைபேசி எண் 1098 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு ஊராட்சி, திருவாரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு இணைந்து நடத்தும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார்.

    ஊராட்சி தலைவர் மாலினி ரவிச்சந்திரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராணி, தலைமையாசிரியர் பாலு, தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தனர்எஸ்ஐ. முருகவேல், குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஒருங்கிணைப்பாளர் மணிமாறன், மாவட்ட குழந்தைகள் அலகு உறுப்பினர் வெங்கடாஜலபதி, சைல்டுலைன் பணியாளர் செந்தில்குமார் ஆகியோர் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம், குற்றம் செய்பவர்களுக்கான தண்டனைகள், குழந்தைத் திருமணம் குறித்து தகவல் அளிக்க வேண்டிய இலவச தொலைபேசி எண் 1098 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.

    இதில் கிராம நிர்வாக அலுவலர் முகம்மது யூசுப், கல்வியாளர் மற்றும் சமூக ஆர்வலர்கள் ரவிச்சந்திரன், சேது முருகானந்தம்,ஊராட்சி துணைத்தலைவர் பாக்கியராஜ் செயலர் புவனேஸ்வரன் ஒன்றிய குழு உறுப்பினர் சரஸ்வதி ராமகிருஷ்ணன், அங்கன்வாடி ஆசிரியைகள், மகளிர் குழு பிரதிநிதிகள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2021-ல் 146 குழந்தை திருமணங்கள் ரிப்போர்ட் ஆகியுள்ளது. நடப்பாண்டில் 46 திருமணங்கள் நடந்துள்ளன.
    • குழந்தை திருமண சட்டப்படி சம்பந்தப்பட்ட மணமகன், பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், மண்டப உரிமையாளர் என சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும்.

    கோவை:

    இன்றைய நவீன காலத்தில், சமூக வலைதளங்கள், சினிமா மற்றும் மொபைல் போன் பயன்பாடு அதிகரித்து விட்டது.

    இதனால் பள்ளி பருவத்திலேயே, பருவக் கோளாறால் பலரும் காதல் வயப்பட்டு, திருமணம் செய்து, வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர்.

    கோவை மாவட்டத்தில், 2019-2020-ம் ஆண்டு வரை குழந்தை திருமணங்கள் 100-க்கும் குறைவாக இருந்த நிலையில் கொரோனாவுக்கு பின்பு 2021-ம் ஆண்டு 146, நடப்பாண்டு மே மாதம் வரை 46 என 192 குழந்தை திருமண புகார்கள் பதிவாகியுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    பதின் பருவத்தில் ஏற்படும் காதல், குடும்பங்களின் வறுமை, பெற்றோர் பாதுகாப்பு இல்லாத குழந்தைகளே பெரும்பாலும் குழந்தை திருமணங்களில் சிக்கி கொள்கின்றனர்.

    இதில், பெற்றோர் செய்து வைத்த திருமணத்தை விட காதல் திருமணம் செய்தவர்களே அதிகம்.

    திருமணத்திற்கு முன்பே உறவு வைத்து கொண்டு திருமணம் செய்த வேதனைக்குரிய சம்பவங்களும் உள்ளன. 2021-ல் 146 குழந்தை திருமணங்கள் ரிப்போர்ட் ஆகியுள்ளது. நடப்பாண்டில் 46 திருமணங்கள் நடந்துள்ளன. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளோம்.

    குழந்தை திருமண சட்டப்படி சம்பந்தப்பட்ட மணமகன், பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், மண்டப உரிமையாளர் என சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும்.

    குற்றத்துக்கு 2 முதல் 3 ஆண்டு வரை சிறை தண்டணை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். தற்போது ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று மாணவிகள் மட்டுமல்லாது, மாணவர்களிடமும் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×