search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cash"

    கோவை ஆத்துப்பாலம் அருகே தறிகெட்டு ஓடிய கண்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாக வதந்தி பரவியதை அடுத்து பொதுமக்கள் லாரியை சிறைப்பிடித்தனர். #ContainerLorry
    கோவை ஆத்துப்பாலம் அருகே சாலையில் தாறுமாறாக கண்டெய்னர் லாரி சென்றது.  அப்போது லாரியில் பணம் இருப்பதாக வதந்தி பரப்பப்பட்டதால் பொதுமக்கள் அதிகமாக அந்த இடத்தில் கூடினர்.

    அப்போது லாரியை முற்றுகையிட்ட பொது மக்கள் கண்டெய்னர் லாரியின் பூட்டை உடைக்க முற்பட்டனர். இதனால் அந்த இடத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து காவல் துறையின்ர் சம்பவ இடத்திற்கு வந்து பொது மக்களை களைந்து செல்லுமாறு அறிவித்தனர்.  

    பொது மக்கள் அந்த இடத்தை விட்டு செல்ல மறுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு தேர்தல் பறக்கும் படையினர் வந்து லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரிடம் விசரணை செய்து வருகின்றனர்.  அப்போது லாரியின் ஓட்டுனர் லாரியில் டீ தூள் இருப்பதாக தெரிவித்துள்ள நிலையல் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் பொது மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த இடத்திலேயே பூட்டை திறக்க வேண்டும் என தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்த அதிகாரிகள் இங்கு இதனை திறப்பது சட்டப்பிரச்சனை ஏற்படும் என்று தெரிவித்த அதிகாரிகள் லாரியை ஆட்சியர் அலுவலகத்திற்கு எடுத்து சென்று திறக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

    தொடர்ந்து அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வரும் நிலையில் பொது மக்கள் லாரியை சூழ்ந்து கொண்டு அவ்விடம் விட்டு செல்ல மறுத்துவரும் நிலையில் கோவை ஆத்துப்பாலம் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  கண்டெய்னர் லாரியை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. பொதுமக்களை கலைந்து செல்லுமாறு உதவி ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    குஜராத்தில் முன்னாள் முதல்-மந்திரி சங்கர்சின் வகேலா வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் ரூ.2 லட்சம் பணம் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். #GujaratCM #ShankersinhVaghela
    ஆமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் கடந்த 1996-97-ல் முதல்-மந்திரியாக இருந்தவர் சங்கர்சின் வகேலா. இவரது வீடு காந்திநகரின் புறநகர் பகுதியான பெதப்பூரில் உள்ளது. சொகுசு மாளிகை போல அமைந்திருக்கும் இந்த வீட்டில் ஏராளமான பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதில் நேபாளத்தை சேர்ந்தவர்களும் அடங்குவர்.

    இந்த நிலையில் வகேலாவின் மனைவிக்கு சொந்தமான ரூ.3 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் ரூ.2 லட்சம் ஆகியவை மாயமானது கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர்கள் வீட்டு பணியாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது வகேலா வீட்டில் பணியாற்றி வந்த நேபாளத்தை சேர்ந்த ஒரு தம்பதிதான் இந்த நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே அவர்கள் தாய்நாடு திரும்பிய நிலையில் அப்போதே இந்த பணம் மற்றும் நகையை திருடிச்சென்றதாக தெரிகிறது. இது தொடர்பாக பெதப்பூர் போலீசில் தற்போது புகார் செய்யப்பட்டு உள்ளது. அது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  
    காங்கேயம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரத்தை திருடிச்சென்று விட்டனர்.
    காங்கேயம்:

    காங்கயம் பழையகோட்டை சாலையில் உள்ள நாட்டார்பாளையத்தில் வசித்து வருபவர் பெரியசாமி (வயது 40) விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னிமலை அருகே உள்ள எக்கட்டாம்பாளையத்திற்கு உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றுவிட்டார்.

    நேற்றுகாலை 8 மணிக்கு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டு முன்பு இருந்த கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோக்களில் இருந்த துணி, பொருட்களை வெளியே எடுத்து வீசப்பட்டிருந்தது. மேலும் நகை பணம் ஏதும் கிடைக்காததால், கட்டிலில் இருந்த மெத்தையை அகற்றி இதன் அடியில் வைக்கப்பட்டிருந்த ரூ.10 ஆயிரத்தை திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரணை நடத்தி திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடிவருகின்றனர். 
    விழுப்புரத்தில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் அரசு ஊழியர் நகரில் பிரசித்தி பெற்ற ஓம்கார செல்வகணபதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்ததும் வழக்கம்போல் கதவை பூட்டிவிட்டு பூசாரி தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

    இந்நிலையில் நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், இந்த கோவிலின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கோவில் வளாகத்தில் இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த காணிக்கை பணத்தை திருடிச் சென்றனர். அந்த உண்டியலில் சுமார் ரூ.10 ஆயிரம் இருந்திருக்கும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    பின்னர் அந்த மர்ம நபர்கள், பக்கத்து தெருவான தந்தை பெரியார் நகருக்கு சென்று அங்கிருந்த மற்றொரு விநாயகர் கோவிலின் முன்பக்க கதவு பூட்டை உடைத்துள்ளனர்.அந்த சமயத்தில் அந்த வழியாக பொதுமக்கள் நடமாட்டம் இருந்ததால் கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பிச்சென்று விட்டனர்.

    இதுகுறித்த தகவல் அறிந்ததும் நேற்று காலை விழுப்புரம் தாலுகா போலீசார், அந்த 2 கோவில்களுக்கும் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    நீடாமங்கலம் அருகே கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே பழைய நீடாமங்கலம் கிராமத்தில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் அர்ச்சகர் நேற்று காலை வழக்கம்போல் கோவிலுக்கு சென்றார். அப்போது கோவிலின் பின் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கோவிலுக்குள் சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் மாயமாகி இருந்தது. மேலும் கோவிலுக்குள் 2 அம்மன் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க சங்கிலிகளை காணவில்லை.



    நள்ளிரவில் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தையும், அம்மன் சிலைகளுக்கு அணிவிக்கப் பட்டிருந்த நகைகளையும் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. நகைகளின் மதிப்பு என்ன? என்பது பற்றி தெரியவில்லை.

    இதுகுறித்து தகவல் அறிந்த நீடாமங்கலம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், தனிப்பிரிவு ஏட்டு கமலநாதன் மற்றும் போலீசார் கோவிலுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக பழையநீடாமங்கலம் கிராம தலைவர் பரமசிவம் அளித்த புகாரின் பேரில் நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு கூடுதல் மார்க் வழங்கியதாக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #AnnaUniversity
    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகத்தில் அனைத்து பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதம் நடந்த செமஸ்டர் தேர்வு எழுதிய மாணவர்கள் சிலர் கூடுதல் மார்க் பெற லஞ்சம் கொடுத்துள்ளதாக புகார் எழுந்தது.

    மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் ரூ.10 ஆயிரம் பெற்று அவர்களுக்கு கூடுதல் மார்க் வழங்கியதாக, அப்போதைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியும் தற்போதைய ஐடி துறை பேராசிரியையுமான உமா மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மேலும், மண்டல அதிகாரிகள் விஜயகுமார், சிவகுமார் மற்றும் விடைத்தாள் திருத்திய 7 ஆசிரியர்கள் உள்பட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    மணவாளக்குறிச்சி அருகே நள்ளிரவில் மர்ம நபர்கள் கோவில் வளாகத்துக்குள் புகுந்து அங்கிருந்த உண்டியல்களை உடைத்து காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
    மணவாளக்குறிச்சி:

    மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை கருங்காலிவிளையில் சிவசுடலை மாடசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் மாலையில் பூஜைகள் நடைபெறும். இதில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக கோவில் வளாகத்தில் 2 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் ஆண்டுக்கு ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்த பின்பு பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றார்.

    நேற்று காலையில் கோவிலுக்கு சென்றவர்கள் கோவில் வளாகத்தில் இருந்த 2 உண்டியல்களும் உடைக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    நள்ளிரவில் மர்ம நபர்கள் கோவில் வளாகத்துக்குள் புகுந்து அங்கிருந்த உண்டியல்களை உடைத்து காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    இதுகுறித்து கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் கோவிலுக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இந்த கொள்ளை குறித்து கோவில் பொருளாளர் ஈஸ்வர பாக்கியம், மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
    நாகையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை நீலா மேலவீதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான காக்கா பிள்ளையார் என்று அழைக்கப்படும் சாபம் தீர்த்த பிள்ளையார் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு குருக்கள் வழக்கம் போல் கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை அந்த பகுதியில் நடைபயிற்சி சென்றவர்கள் கோவிலில் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு நாகை டவுன் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கோவிலின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிசென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் விஜய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடி சென்றவர்களை தேடி வருகிறார்கள். 
    பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே வணி வளாகத்தில் நிறுத்தப்பட்ட கார் கண்ணாடியை உடைத்து ரூ.1 லட்சத்து 77 ஆயிரம் பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். #CashTheft
    பெரம்பலூர்:

    பெரம்பலூர்-எளம்பலூர் சாலையில் உள்ள முத்துநகர் கிழக்கு முதல் தெருவை சேர்ந்தவர் ஜவஹர் (வயது 43). இவர் எல்.ஐ.சி. நிறுவனத்தில் முதன்மை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் காரில் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்துக்கு சென்றார்.

    அப்போது ஒரு வணிக வளாகம் முன்பு காரை நிறுத்தி விட்டு பொருட்கள் வாங்க சென்றார். பின்னர் ஜவஹர் திரும்பி வந்து பார்த்த போது காரின் பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதையடுத்து காரின் கதவை திறந்து பார்த்த போது, உள்ளே ரூ.1 லட்சத்து 77 ஆயிரம், ஏ.டி.எம்., கிரேடிட் அட்டைகள் இருந்த பேக் திருடு போயிருந்தது. மர்மநபர்கள் காரின் கண்ணாடியை உடைத்து பணம் உள்ளிட்டவை இருந்த பேக்கை திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து ஜவஹர் உடனடியாக பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.1 லட்சத்து 77 ஆயிரத்தை திருடியது தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வணிக வளாகம் முன்பு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்த்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 
    பாளையங்கோட்டையில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரிடம் ரூ.2 லட்சம் திருடப்பட்டது. மொபட்டில் வைத்து இருந்த போது கைவரிசை காட்டிய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நெல்லை:

    பாளையங்கோட்டை கோரிப்பள்ளம் புனித மத்தேயூ தெருவை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 60). இவர், பாளையங்கோட்டையில் உள்ள ஒரு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி வசந்தா.

    இவர்கள் பாளையங்கோட்டை பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு வங்கிக்கு பணம் எடுக்க தனது மொபட்டில் நேற்று சென்றனர். பின்னால் அவருடைய மனைவி வசந்தா உட்கார்ந்து இருந்தார். வங்கிக்கு சென்று பொன்ராஜ் ரூ.2 லட்சம் பணம் எடுத்தார்.

    அந்த பணத்தை பையில் சுருட்டி தனது மொபட்டில் வைத்தார். பின்னர் எதிரே உள்ள டீக்கடையில் பகல் 12 மணி அளவில் பொன்ராஜ் டீக்குடித்து கொண்டு இருந்தார். மொபட் அருகே வசந்தா நின்று கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஆஸ்பத்திரிக்கு எப்படி போவது என வசந்தாவின் கவனத்தை திசை திருப்பினார்.

    அப்போது அந்த நபர் மொபட்டில் இருந்து ரூ.2 லட்சத்தை நைசாக திருடி கண் இமைக்கும் நேரத்தில் அந்த நபர் தப்பிச் சென்று விட்டார்.

    இதுகுறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக வடிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    தூத்துக்குடியில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வீட்டில் ரூ.50 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்ட பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கே.டி.சி.நகர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலன் சுந்தர்சிங் சாமுவேல் (வயது 62). ஓய்வுபெற்ற தொழிலாளர் ஆய்வாளர். இவருடைய மனைவி டல்சி எலிசபெத். இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகிறார்கள். பெங்களூருவில் உள்ள தனது மூத்த மகனின் குழந்தையை பார்ப்பதற்காக கணவன்-மனைவி 2 பேரும் கடந்த 12-ந்தேதி தூத்துக்குடியில் இருந்து பெங்களூரு சென்றனர்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் ஜெயசீலன் சுந்தர்சிங் சாமுவேல் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை அறிந்த அந்த பகுதி மக்கள் ஜெயசீலன் சுந்தர்சிங் சாமுவேலிடம் தகவல் தெரிவித்தனர். அவர் நேற்று காலையில் வீட்டுக்கு வந்தார். அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் 2 வெளிநாட்டு கேமராக்கள், 2 கைக்கெடிகாரங்களை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர். 
    கோவையில் ஓட்டல் முன்பு நிறுத்தி இருந்த டாக்டரின் கார் கண்ணாடியை உடைத்து பணம், கையடக்க கணினியை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர்.
    கோவை:

    கோவை காளப்பட்டி அருகே உள்ள ராம்மேனன் நகரை சேர்ந்தவர் மதனகோபால் (வயது 31). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் கோவை விமான நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட காரில் சென்றார்.

    அவர் அந்த ஓட்டல் முன்பு தனது காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். இரவு 10 மணியளவில் சாப்பிட்டுவிட்டு அவர் வெளியே வந்தார். அப்போது, காரின் பின்பக்க கதவு கண்ணாடி உடைக் கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் காருக்குள் பார்த்தபோது பின் இருக்கையில் வைத்து இருந்த பையை காணவில்லை.

    அந்த பைக்குள் ரூ.50 ஆயிரம், கையடக்க கணினி, விலை உயர்ந்த செல்போன் ஆகியவை இருந்தது. மர்ம ஆசாமிகள் காரின் கண்ணாடியை உடைத்து அந்த பையை திருடிச்சென்றது தெரியவந்தது. திருடப்பட்ட அந்த பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இது குறித்து மதனகோபால் பீளமேடு குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விசாரணை நடத்தினார்கள். அத்துடன் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

    அப்போது 2 பேர் அங்கு வந்து காரின் கண்ணாடியை உடைப்பதும், அதில் இருந்த பையை எடுத்துச்செல்வதும் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை வைத்து போலீசார் மர்ம நபர்களை கண்டறிய தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    ×