search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AUSvIND"

    சிட்னி போட்டியில் அம்பதி ராயுடு பந்து வீசியபோது, அவரது பந்து வீச்சு முறையில் சந்தேகம் இருப்பதாக போட்டி அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று சிட்னியில் நடைபெற்றது. புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, கலீல் அகமது, குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகிய ஐந்து பந்து வீச்சாளர்களுடன் களம் இந்தியா இறங்கியது.

    கலீல் அகமது அதிக அளவில் ரன் கொடுத்தபோது, முகமது ஷமி கை வலி காரணமாக மைதானத்தில் இருந்து வெளியேறினார். இதனால் பகுதி நேர பந்து வீச்சாளரான அம்பதி ராயுடுவை கேப்டன் விராட் கோலி பந்து வீச அழைத்தார்.

    அம்பதி ராயுடு இரண்டு ஓவர்கள் வீசி 13 ரன்கள் விட்டுக் கொடுத்தார். அவரது பந்து வீச்சு முறை ஐசிசி விதிமுறைக்கு மாறாக இருப்பதாக போட்டி நடுவர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை இந்திய அணி நிர்வாகத்திடம் கொடுத்துள்ளனர்.

    இன்னும் 14 நாட்களுக்குள் அம்பதி ராயுடு தனது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அதன் முடிவு வெளியாகும் வரை அவர் பந்து வீசலாம் என்று ஐசிசி தெரிவித்துள்ளார். ஒருவேளை பரிசோதனைக்கு உட்படுத்தவில்லை என்றால், சர்வதேச போட்டியில் ராயுடுவால் பந்து வீச முடியாது.

    இதற்குமுன் தவான் டெஸ்ட் போட்டியில் பந்து வீசும்போது, இதுபோன்ற பிரச்சனை ஏற்பட்டது. ஆனால் தவான் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் பந்து வீசவில்லை என்ற முடிவை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
    முக்கியமான கட்டத்தில் நடுவர் தவறான முடிவில் டோனி ஆட்டமிழந்தது, இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது. #MSDhoni
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று சிட்னியில் நடைபெற்றது. இதில் இந்தியா 34 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஷிகர் தவான் (0), விராட் கோலி (3), அம்பதி ராயுடு (0) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்தியா 4 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று முக்கிய விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.

    4-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா உடன் டோனி ஜோடி சேர்ந்தார். இருவரும் தாக்குப்பிடித்து விளையாடினார்கள். ரோகித் சர்மா நேரம் செல்லசெல்ல அதிரடியாக விளையாடினார். அதேசமயம் டோனி தடுப்பாட்டத்தில் ஈடுபட்டடார். இந்தியாவின் ஸ்கோர் 32.2 ஓவரில் 141 ரன்காக இருக்கும்போது பெரேன்டார்ப் வீசிய பந்தில் டோனி எல்பிடபிள்யூ மூலம் 96 பந்தில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா - டோனி ஜோடி 137 ரன்கள் சேர்த்தது.

    டோனி அவுட்டானதை டெலிவிசன் ரீ-பிளேயில் பார்க்கும்போது, அவருக்கு தவறான அவுட் கொடுக்கப்பட்டது தெரியவந்தது. லெக் ஸ்டம்புக்கு வெளியே பந்து பிட்ச் ஆனது. லெக் ஸ்டம்பிற்கு வெளியே பந்து பிட்ச் ஆனால், அது அவுட் இல்லை. ஆனால் டிஆர்எஸ் முறை இந்தியாவுக்கு முடிந்து விட்டதால் அப்பீல் செய்ய முடியாமல் போனது. ஏற்கனவே அம்பதி ராயுடு டிஆர்எஸ் முறையை விரயமாக்கி இருந்தார். இதனால் டோனி எதுவும் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்ப நேரிட்டது.



    டோனி ஆட்டமிழக்கும்போது 106 பந்தில் 148 ரன்கள்தான் தேவைப்பட்டது. டோனி ஆட்டமிழந்ததும் அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் 12 ரன்னிலும், ஜடேஜா 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் ரோகித் சர்மாவிற்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆகவே ஒவ்வொரு பந்தையும் தூக்கியடிக்க முயற்சி செய்து, 133 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    டோனி 40 ஓவர் வரை நின்றிருந்தால் போட்டி இந்தியாவிற்கு சாதகமாக இருந்திருக்கும். நடுவர் தவறுதலாக அவுட் கொடுத்தது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிடடது.
    தொடக்கத்தில் நான்கு ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்ததே தோல்விக்குக் காரணம் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 34 ரன்னில் தோற்றது. சிட்னியில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன் குவித்தது. ஹேண்ட்ஸ்காம்ப் 61 பந்தில் 73 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்), உஸ்மான் கவாஜா 59 ரன்னும், ஷான் மார்ஷ் 54 ரன்னும் எடுத்தனர்.

    புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள். பின்னர் விளையாடிய இந்திய அணியால் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 254 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் ஆஸ்திரேலியா 34 ரன்னில் வெற்றி பெற்றது.

    ரோகித் சர்மா சதம் அடித்தும் பலன் இல்லை. அவர் 129 பந்தில் 133 ரன்னும் (10 பவுண்டரி, 6 சிக்சர்), டோனி 96 பந்தில் 51 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ரிச்சர்ட்சன் 4 விக்கெட்டும், பெரன்டார்ப், ஸ்டாய்னிஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

    எங்களது ஆட்டம் திருப்தி அளிக்கவில்லை. பந்து வீச்சில் நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டதாக கருதுகிறோம். ஏனென்றால் இந்த ஆடுகளத்தில் 300 ரன்னுக்கு மேல் குவிக்கலாம். 289 ரன் இலக்கு சேஸ் செய்யக்கூடியதுதான். தொடக்கத்திலேயே 4 ரன்னில் 3 முக்கிய விக்கெட் சரிந்ததே தோல்விக்கு காரணம். இதுவே ஆட்டத்தின் திருப்புமுனை.

    ரோகித் சர்மா அபாரமாக விளையாடினார். அவருக்கு டோனி உறுதுணையாக இருந்தார். ஆனால் ஆட்டத்தின் வேகத்துக்கு தகுந்தப்படி நாங்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்க வேண்டும். ரோகித்தும், டோனியும் நீண்ட நேரம் களத்தில் நின்று வாய்ப்பை பெற்றுக் கொடுத்தனர். டோனி தவறான நேரத்தில் ஆட்டம் இழந்தார். அவரது அவுட் ரோகித் சர்மாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

    மேலும் ஒரு ஜோடி நிலைத்து இருந்தால் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து இருப்போம். எங்களை விட ஆஸ்திரேலிய அணி சிறப்பாக செயல்பட்டது. ஆட்டத்தின் முடிவை பற்றி நாங்கள் அதிக மன அழுத்தத்துக்கு ஆளாக மாட்டோம். அணியை எவ்வாறு மேம்படுத்துவது என்பதுதான் முக்கியம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    வெற்றி குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறும்போது, “இந்த வெற்றி மகிழ்ச்சியை அளிக்கிறது. தொடக்கத்தில் இந்தியாவின் விக்கெட்டுகளை வீழ்த்தியது சிறப்பானது. இளம் வீரர் ரிச்சர்ட்சன் அபாரமாக பந்து வீசினார்” என்றார்.

    இந்த வெற்றி மூலம் 3 போட்டிக்கெண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது ஒருநாள் போட்டி அடிலெய்டுவில் நாளைமறுநாள் (15-ந்தேதி) நடக்கிறது.
    இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியா மற்றும் லோகேஷ் ராகுலுக்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கரும் ஷுப்மான் கில்லும் சேர்க்கப்பட்டுள்ளனர். #TeamIndia #VijayShankar
    புதுடெல்லி:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் இடம்பெற்றுள்ள ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் ஆகியோர் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் அணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். எனவே அவர்கள் இருவரும் நாடு திரும்பினர்.

    இந்நிலையில், அணியில் இருந்து நீக்கப்பட்ட இரண்டு வீரர்களுக்கு பதில், தமிழகத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் விஜய் சங்கரும், ஷுப்மான் கில்லும் அணியில்  சேர்க்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் நடந்த ரஞ்சி போட்டிகளில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


    விஜய் சங்கர் ஏற்கனவே, இலங்கையில் நடந்த முத்தரப்பு தொடரில் பங்கேற்றுள்ளார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான விஜய் சங்கர் (வயது 27), ஐந்து டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

    தற்போது அணியில் சேர்க்கப்பட்டுள்ள விஜய் சங்கரும், ஷுப்மான் கில்லும் ஆஸ்திரேலிய தொடரைத் தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. #TeamIndia #VijayShankar
    சிட்னியில் நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்துடன் ஆடி வருகிறது. #AUSvIND #Viratkohli #Dhawan #AmbatiRayudu
    சிட்னி:

    இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    நிர்ணயித்த 50 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் எடுத்திருந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஹேண்ட்ஸ்கோம்ப் 61 பந்துகளில் 73 ரன்களும், கவாஜா 81 பந்துகளில் 59 ரன்களும், மார்ஸ் 70 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்தனர்.

    இந்தியா அணியில் புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்களும், ஜடேஜா 1 விக்கெட்டும் விழ்த்தினர்.

    இதையடுத்து 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.

    தொடக்க ஆட்டகாரரான தவானை எல்பிடபிள்யூ (கோல்டன் டக்) முறையில் ஜேசன் பெரண்டார்ப் வெளியேற்றினார். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி (8 பந்துகளில் 3 ரன்கள்) எடுத்த நிலையில் ரிச்சர்ட்சன் ஓவரில் ஸ்டாயின்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் வந்த அம்பதி ராயுடுவும் வந்த வேகத்தில் வெளியேறினார். 2 பந்துகளை சந்தித்த அவர் ரன் ஏதும் எடுக்கவில்லை. அதன்பின்னர் ரோகித் சர்மா, டோனி  இருவரும் நிதானமாக விளையாடி வருகின்றனர். #AUSvIND #Viratkohli #Dhawan #AmbatiRayudu
    தற்போதைய ஆஸ்திரேலிய அணி 1990-களில் இருந்தது போன்றது கிடையாது. இந்த தொடர் இந்தியாவிற்கு உண்மையான சோதனை அல்ல என வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 எனக் கைப்பற்றி, ஆஸ்திரேலியா மண்ணில் முதன்முறையாக தொடரை வென்று சாதனைப் படைத்தது. ஸ்மித், வார்னர் இல்லாத பலவீனமான ஆஸ்திரேலிய அணி என்று கூறி வந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வெங்கடேஷ் தற்போதுள்ள ஆஸ்திரேலிய அணி, 1990-களில் இருந்த பலம் வாயந்த அணியை போன்று கிடையாது. அதனால் இத்தொடர் இந்தியாவிற்கான உண்மையான சோதனை இல்லை என்று தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து வெங்கடேஷ் பிரசாத் கூறுகையில் ‘‘முதலில் இந்திய அணியின் வெற்றிக்கும், விராட் கோலி தலைமையிலான இந்திய அணியின் கடும் முயற்சிக்கும் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். எனினும், தற்போதுள்ள ஆஸ்திரேலிய அணியை 1990-களில் இருந்த அணியோடு ஒப்பிட முடியாது. மார்க் வாக், ஸ்டீவ் வாக், பிரெட் லீ, ஷேன் வார்னே, ரிக்கி பாண்டிங் போன்ற ஜாம்பவான்களை கொண்ட அணி.

    இந்த காரணிகளை கருத்தில் கொண்டு, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா தொடரை வென்றது உண்மையான சோதனை இல்லை என்பேன்’’ என்றார்.
    ஓய்விற்குப் பிறகு பிக் பாஷ் போன்ற டி20 லீக் தொடரில் விளையாடுவீர்களா? என்று கேட்டதற்கு, வாய்ப்பே இல்லை என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். #ViratKohli
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடக்கிறது. ஒருவேளை பிசிசிஐ இந்திய வீரர்களுக்கான தடையை தளர்த்தினாலோ அல்லது ஓய்விற்குப் பிறகோ பிக் பாஷ் தொடரில் விளையாடுவீர்களா? என்று நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு விராட் கோலி பதிலளித்து கூறுகையில் ‘‘எதிர்காலத்தில் என்னுடைய வாழ்க்கை எப்படி செல்லப்போகிறது என்பது குறித்து எனக்குத் தெரியாது. என்னால் முடியும் அளவிற்கு போதுமான கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்தி வருகிறேன். உண்மையிலேயே எதிர்காலம் குறித்து நான் சிந்திக்கவே இல்லை.



    கடந்த ஐந்து ஆண்டுகளில் நான் போதுமான அளவு கிரிக்கெட் விளையாடியுள்ளேன். எனது ஓய்வு குறித்து கருத்து கூற முடியாது. ஏனென்றால், திரும்பவும் பேட்டை எடுப்பது குறித்து சிந்திக்கவில்லை.

    என்னுடைய கிரிக்கெட் காலம் ஒருநாள் முடியும் என்றால், அதற்குள் ஒட்டுமொத்த கிரிக்கெட்டையும் விளையாடியிருப்பேன். காரணம், அப்போது நான் முடிவை நோக்கி சென்று கொண்டிருப்பேன். ஆகவே, திரும்பவும் கிரிக்கெட் வாழ்க்கைக்கு திரும்புவதை நான் பார்க்கவில்லை. ஒருமுறை கிரிக்கெட் விளையாடி முடித்துவிட்டால், அது முடிந்ததாகத்தான் இருக்கும். மீண்டும் அதே சூழ்நிலையை விரும்பமாட்டேன்’’ என்றார்.
    இந்தியாவின் டாப் 3 பேட்ஸ்மேன்களான தவான், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரை சாய்ப்பதே முதல் இலக்கு என்று ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை சிட்னியில் தொடங்குகிறது. இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது ஆரோன் பிஞ்ச் கூறுகையில் ‘‘கடந்த 12 மாதங்களில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஒருநாள் போட்டியில் 133 சராசரி வைத்துள்ளார். ஷிகர் தவான் 75-ம், ரோகித் சர்மா 50-ம் சராசரி வைத்துள்ளார். ஆகவே, ஏராளமான ரன்கள் குவித்ததுடன், ஏராளமான பந்துகளை சந்தித்தவர்களும், இந்த டாப் 3 பேட்ஸ்மேன்கள்தான். ஆகவே, இவர்களை விரைவில் வீழ்த்தியாக வேண்டும். ஏனென்றால், அவர்கள் களத்தில் நின்று விரைவாக ரன்குவிக்க தொடங்கிவிட்டால், எளிதில் ஆட்டமிழக்க செய்ய இயலாது.



    தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், டோனி ஆகியோர் அவரவர் இடத்தில் சிறப்பாக விளையாட முடியும். இருந்தாலும் டாப் 3 பேட்ஸ்மேன்கள்தான் முக்கியம். இவர்களையும் எளிதாக எடைபோட முடியாது. களத்தில் அவர்களுக்குரிய நாளாக அமைந்தால் ஆட்டத்தை திசை திருப்பி விடுவார்கள்’’ என்றார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னி மைதானத்தில் நாளை நடக்கிறது. #AUSvIND
    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆஸ்திரேலியா மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது.

    அடுத்து இரு அணிகளும் 3 ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடுகின்றன. இதில் முதல் ஒருநாள் போட்டி நாளை சிட்னி நகரில் நடக்கிறது. இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 2-வது போட்டி 15-ந்தேதி அடிலெய்டிலும், 3-வது போட்டி 18-ந்தேதி மெல்போர்னிலும் நடக்கிறது.



    டெஸ்ட் தொடரில் பெற்ற வெற்றி உத்வேகத்தை ஒருநாள் போட்டியிலும் தொடர இந்தியா முனைப்பில் உள்ளது. பேட்டிங்கில் ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி, அம்பதி ராயுடு, டோனி, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக் போன்றோர் உள்ளனர். பந்து வீச்சில் புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, கலீல் அகமது, சாஹல், குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் உள்ளனர். டெஸ்ட் தொடரில் கலக்கிய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா பேட்டிங், பந்து வீச்சில் சம பலத்துடன் உள்ளது. இதனால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி ஒருநாள் போட்டி தொடரில் சாதிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது. டெஸ்ட் தொடரை இழந்ததால் அந்த அணி வீரர்கள் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அந்த அணியில் உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ், பீட்டர் சிடில், ஆடம் ஜம்பா, நாதன் லயன், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் போன்ற வீரர்கள் உள்ளனர்.

    இதுவரை இரு அணிகளும் 128 போட்டிகளில் மோதி உள்ளன. இதில் இந்தியா 45 முறையும், ஆஸ்திரேலியா 73 முறையும் வெற்றி பெற்றன. 10 ஆட்டத்தில் முடிவு இல்லை.



    இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், அம்பதி ராயுடு, டோனி, தினேஷ் கார்த்திக், கேதர் யாதவ், லோகேஷ் ராகுல், ஹர்த்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், சாஹல், ஜடேஜா, புவனேஸ்வர் குமார், முகமது சிராஜ், கலீல் அகமது.

    ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ், அலெக்ஸ் கேரி, ரிச்சர்ட்சன், பில்லி ஸ்டேன்லேக், ஜேசன் பெரன்டார்ப், பீட்டர் சிடில், நாதன் லயன், ஆடம் ஜம்பா, ஆஸ்டன் டர்னர்.
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 1980-களில் பயன்படுத்தியது போன்ற ஜெர்சியை தற்போது இந்திய தொடரின்போது அறிமுகம் செய்துள்ளது.#AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் (சனிக்கிழமை) சிட்னியில் தொடங்குகிறது. பொதுவாக ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஒருநாள் போட்டியில் மஞ்சள் நிறத்திலான ஆடைகளை அணிந்து விளையாடுவார்கள்.



    சமீப காலமாக ஆஸ்திரேலியா அணி தோல்விமேல் தோல்விகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவிற்கு எதிரான தொடரில் விளையாடும் வீரர்களுக்கான ஜெர்சியை மாற்றியுள்ளது. 1980-களில் ஆலன் பார்டர் தலைமையிலான ஆஸ்திரேலியா அணிந்திருந்த ஜெர்சியை போன்று தற்போது புதிதாக அறிமுகம் செய்துள்ளது.
    உடல் நலக்குறைவால் இந்தியாவிற்கு எதிரான சிட்னி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் பங்கேற்கமாட்டார் என ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளைமறுநாள் சிட்னியில் தொடங்குகிறது. இதற்கான ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் இடம்பிடித்திருந்தார்.

    அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனால் சிட்னியில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்கமாட்டார் என்று ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
    இந்தியாவின் ‘லெஜண்ட்’ எம்எஸ் டோனி. அவரது ஹெலிகாப்டர் ஷாட்டை ஆடுவதற்கு முயற்சி செய்து வருகிறேன் என்று மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 12-ந்தேதி (சனிக்கிழமை) தொடங்குகிறது. டெஸ்ட் போட்டியில் இடம்பெறாத ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் அணியில் இடம்பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முக்கிய துருப்புச்சீட்டாக அவர் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணியில் எம்எஸ் டோனி இணைந்துள்ளார். டோனி குறித்து மேக்ஸ்வெல் கூறுகையில் ‘‘எம்எஸ் டோனி இந்தியாவின் லெஜண்ட், அவரது ஹெலிகாப்டர் ஷாட்டை காப்பியடிக்க முயற்சி செய்கிறேன்’’ என்றார்.



    மேலும், ‘‘ஒரு ஆட்டத்தில் டோனி கொடுத்த கேட்ச் வாய்ப்பை தவறவிட்டேன். பால்க்னெர் வீசிய அடுத்த பந்தில் சிக்ஸ் விளாசினார்’’ என்று மேக்ஸ்வெல் நினைவூட்டினார்.
    ×