search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alagar Temple"

    • முகூர்த்த கால்கள் நடும் நிகழ்ச்சி மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் நடந்தது.
    • 5-ந்தேதி வைகை ஆற்றில் கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார்.

    மதுரையில் நடைபெறும் சித்திரை பெருந்திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்த விழாவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாணம், தேரோட்டம் முடிந்ததும், கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆண்டு தோறும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    மேலும் 108 வைணவ தலங்களில் ஒன்றான கள்ளழகர் கோவிலின் சித்திரை. திருவிழாவின் முன்னோட்ட நிகழ்ச்சியாக சப்பர முகூர்த்த விழா கடந்த ஜனவரி மாதம், கள்ளழகர் கோவிலின் உப கோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் நடந்தது. இதில் ஆயிரம் பொன் சப்பரத்திற்கு வேண்டிய மூங்கில் சேகரிக்கும் பணி சம்பிரதாயபடி அன்று நடந்தது.

    இதை தொடர்ந்து நேற்று காலையில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில், கள்ளழகர் கோவில் சித்திரை விழாவுக்கு கொட்டகை முகூர்த்த விழா நடந்தது. இதில் யாளி திருமுகத்திற்கு, நூபுர கங்கை தீர்த்தத்தினால் வேத மந்திரங்களுடன் பூஜைகள், அபிஷேகமும் நடந்தது. பின்னர் யாளி முகத்திற்கு சந்தனம், பூ மாலைகள், மாவிலைகள், சாத்தப்பட்டன. அதை தொடர்ந்து வர்ணம் பூசப்பட்ட மரத்தில் சந்தனம் பூசப்பட்டது.

    மேளதாளம் முழங்க அந்த முகூர்த்தகால்கள் எடுத்து செல்லப்பட்டன. மூலவர் சன்னதி முன்பாகவும், ராஜகோபுரம் முன்பாகவும் நடப்பட்டன.

    பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத பெருமாளுக்கு சிறப்பு பூஜைகளும், மகா தீபாராதனைகளும் நடந்தது. விழாவில் துணை ஆணையர் ராமசாமி, தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, கண்காணிப்பாளர்கள் சேகர், பிரதீபா, அருள் செல்வன், உள்துறை பேஷ்கார்கள் முருகன், புகழேந்தி, மற்றும் பணியாளர்கள், ஏராளமான பக்தர்கள், உபயதாரர்கள் கலந்து கொண்டனர். மேலும் தொடர்ந்து வைகை ஆறு தேனூர் மண்டபத்திலும் முகூர்த்தகால் நடப்பட்டது. மேலும் அழகர்கோவிலில் இருந்து வண்டியூர் வரை சுமார் 460-க்கும் மேற்பட்ட மண்டபங்களில் கள்ளழகர் எழுந்தருளுவார்.இந்த மண்டபங்களின் முன்பாக பந்தல் அமைக்கும் பணிகள் நேற்றே தொடங்கி விட்டது.

    சித்திரைக்கு முத்திரை பதிக்கும் அழகர்கோவில் திருவிழா மே மாதம் 1-ந் தேதி தொடங்குகிறது. 2-ந் தேதி கோவிலிலே விழா நடைபெறும்.

    3-ந் தேதி இரவு 7 மணிக்கு அழகர்கோவிலில் இருந்து தங்கப்பல்லக்கில் கள்ளழகர் பெருமாள் மதுரை நோக்கி புறப்படுகிறார். 4-ந் தேதி அதிகாலையில் மதுரை மூன்றுமாவடியில் எதிர் சேவை நடைபெறும்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 5-ந் தேதி வைகை ஆற்றில் கள்ளழகர் காலை 5.45 மணிக்கு மேல் 6.12 மணிக்குள் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்வார்கள். 6-ந் தேதி வைகை ஆறு தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுக்கிறார். அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார காட்சி நடைபெறும்.

    7-ந் தேதி இரவு பூப்பல்லக்கு விழா நடைபெறும். 8-ந் தேதி காலையில் கள்ளழகர் அழகர் மலை நோக்கி செல்லுதல், அன்றிரவு அப்பன் திருப்பதி விழா, 9-ந் தேதி காலை 10.32 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் சுவாமி அழகர் கோவிலுக்குள் சென்று இருப்பிடம் சேருதல் நடைபெறும்.. 10-ந் தேதி உற்சவசாற்று முறையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • சித்திரை திருவிழா 1-ந்தேதி தொடங்கி 10-ந்தேதி வரை நடக்கிறது.
    • 5-ந்தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.

    அழகர்கோவில் இணை கமிஷனர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

    மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் சித்திரை திருவிழா வருகிற 1-ந்தேதி தொடங்கி 10-ந்தேதி வரை நடக்கிறது. 3-ந் தேதியன்று மாலை 6 மணியில் இருந்து 7.10 மணிக்குள் அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் புறப்பட்டு மதுரை வருகிறார்.

    இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 5-ந்தேதி அன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும்போது பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சும் வைபவம் ராமராயர் மண்டபத்தில் நடக்க உள்ளது. அந்த நிகழ்ச்சிக்காக பக்தர்கள் விரதம் இருந்து தோல் பையில் தண்ணீர் சுமந்து சிறிய குழாய் மூலம் சுவாமியின் மீது தண்ணீர் பீய்ச்சி நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம்.

    கடந்த சில ஆண்டுகளாக பக்தர்கள் தோல் பையில் விரத ஐதீகத்தை மீறி, செயற்கையான மற்றும் அதிக விசையான குழாயை பொருத்தி தண்ணீரில் திரவியங்கள் மற்றும் வேதிப்பொருட்களை கலந்து பீய்ச்சுவதால் சுவாமி, குதிரை வாகனம் மற்றும் ஆபரணங்களும், பக்தர்கள், பட்டர்கள், பணியாளர்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. மேலும் சிலர், தண்ணீர் பாக்கெட்டுகளை பற்களால் கடித்து அந்த பாக்கெட் தண்ணீரை சுவாமியின் மீது பீய்ச்சுகின்றனர்.

    இந்த ஆண்டு சித்திரைத்திருவிழாவின்போது பக்தர்கள் அதிக விசை உடைய குழாயை தோல் பையில் பொருத்தி தண்ணீர் பீய்ச்ச வேண்டாம். விரத ஐதீகத்தின்படி தோல் பையில் சிறிய பைப் பொருத்தி திரவியங்கள், வேதிப்பொருட்கள் கலக்காமல் சுத்தமான தண்ணீர் மட்டும் பீய்ச்சும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • ஸ்ரீவில்லிபுத்தூர்-அழகர்கோவிலில் திருக்கல்யாண வைபவம் நாளை நடக்கிறது.
    • கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    மதுரை

    108 வைணவ தலங்களில் பிரசித்தி பெற்றதாக திகழும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண விழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் ஆண்டாள்-ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான ரெங்கமன்னார்-ஆண்டாள் திருக்கல்யாணம் நாளை(5-ந்தேதி) நடக்கிறது. இதை முன்னிட்டு திருப்பதி வெங்கடாஜலபதி அணிந்த பட்டு வஸ்திரத்தை ஆண் டாள் கோவிலுக்கு திருப்பதி தேவஸ்தான குழுவினர் கொண்டு வந்தனர்.

    இந்த வஸ்திரத்தை அணிந்து நாளை ஆண்டாள் திருக்கல்யாணத்தில் பங்கேற்பார்.

    நாளை இரவு கோவில் முன்புறமுள்ள ஆடிப்பூர கொட்டகையில் திருமணம் நடக்கிறது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள். திருக்கல்யாண விழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

    மதுரை மாவட்டத்தில் உள்ள மற்றொரு திவ்யதேச மான அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் பங்குனி திருக்கல்யாண விழா 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நாளை காலை நடக்கிறது.

    சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் சுந்தரராஜ பெருமாள் ஒரே நேரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண சுந்தரவல்லி தாயார், ஆண்டாள் ஆகிய 4 பிராட்டி மார்களையும் மணந்து கொள்கிறார். திருக்கல் யாணத்தை முன்னிட்டு 10 ஆயிரம் பக்தர்களுக்கு விருந்தளிக்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

    அதன்படி பஸ் நிலையம் அருகில் உள்ள 2 கோவில் மண்டபங்கள் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள அன்னதான கூடத்தில் கல்யாண விருந்து நடைபெறும்.

    திருக்கல்யாண மொய் செலுத்த சிறப்பு கவுண் டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அழகர்கோவில் திருக்கல்யாண விழாவில் மதுரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    • திருக்கல்யாணம் 5-ந்தேதி நடக்கிறது.
    • 6-ந் தேதி மஞ்சள் நீர்சாற்று முறையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    மதுரை மாவட்டம், அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில், 108 வைணவதலங்களில் ஒன்றானது. ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் திருக்கல்யாண திருவிழாவும் தனி பெருமையுடையது.

    இந்த திருவிழாவானது நேற்று காலை தொடங்கியது. அன்று மாலை 6 மணிக்கு மேளதாளம் முழங்க தீவட்டி வர்ணக்குடை பரிவாரங்களுடன் கள்ளழகர் என்ற சுந்தர்ராசப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன், மனோரஞ்சித மாலைகள் அலங்காரத்தில், சுந்தரவல்லி யானை முன்செல்ல, பல்லக்கில் புறப்பாடாகி சென்று, அங்குள்ள நந்தவன ஆடி வீதிகள் வழியாக சென்று திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்.பின்னர் பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் தீபாராதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அதன் பின்னர் இரவே சுவாமி கோவிலுக்குள் போய் இருப்பிடம் சென்றார். இதை தொடர்ந்து இன்றும், 4-ந்தேதி நாளையும் அதே நிகழ்ச்சிகள் அதே மண்டபத்தில் நடைபெறுகிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண திருவிழா வருகிற 5-ந்தேதி அன்று காலை 9.50 மணிக்கு மேல் 10.20 மணிக்குள் திருக்கல்யாண மண்டபத்தில் சுந்தர்ராசப்பெருமாள், ஒரே நேரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாணசுந்தரவல்லி தாயார், ஆண்டாள் ஆகிய 4 பிராட்டிமார்களையும் மணக்கிறார்.

    திருக்கல்யாணம் முடிந்ததும் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெறும். அதனை தொடர்ந்து கோவில் வளாகத்திற்குள் பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து வழங்கப்படும். அப்போது திருக்கல்யாண மொய் எழுதப்படும். பின்னர் அன்று இரவு பெருமாள் நான்கு தேவியர்களுடன் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். பின்னர் 6-ந் தேதி மஞ்சள் நீர்சாற்று முறையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கண்காணிப்பாளர் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • கள்ளழகர் கோவில் சுந்தரராஜ பெருமாள் திருக்கல்யாணம் வருகிற 5-ந் தேதி நடக்கிறது.
    • விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    மதுரை

    108 வைணவ தேசங்களில் ஒன்றான அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் திருக்கல்யாண திருவிழா விமரிசையாக நடை பெறும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான விழா வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று மாலை 6 மணிக்கு கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி- பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளுகிறார். விழா நடக்கும் 5 நாட்களும் தினமும் காலை, மாலை சுவாமி -அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர் களுக்கு காட்சியளிக்கின்ற னர்.

    சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வருகிற 5-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. அன்றைய நாள் அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறு கின்றன. காலை 7 மணி முதல் 7.30 மணிக்குள் கள்ளழகர் தோளுக்கினி யான் அலங்காரத்தில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளுகிறார். பின்னர் 9.50 மணியில் இருந்து 10 20 மணிக்குள் சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி -பூதேவி, கல்யாண சுந்தரவல்லி தாயார் மற்றும் ஆண்டாள் ஆகியோரை திருமணம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    அன்று இரவு மணக்கோலத்தில் சுவாமி அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக் கிறார்கள். 6-ந் தேதி மஞ்சள் நீர் சாற்று முறையுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • திருக்கல்யாண திருவிழா 5-ந்தேதி நடக்கிறது.
    • 6-ந்தேதி மஞ்சள் நீர்சாற்று முறையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    மதுரை மாவட்டம், அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் திருக்கல்யாண திருவிழா சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டுக்கான இந்த திருவிழா வருகிற 2-ந்தேதி காலை 9.45 மணிக்கு சாமி புறப்பாடு நிகழ்ச்சியுடன் ெதாடங்குகிறது.

    இதை தொடர்ந்து அன்று மாலை 6 மணியளவில் கள்ளழகர் ஸ்ரீதேவி, பூமிதேவியருடன் பல்லக்கில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்கிறார்.பின்னர் இரவு 7.30 மணிக்கு சுவாமி இருப்பிடம் செல்கிறார்.தொடர்ந்து 3-ந்தேதியும், 4-ந்தேதியும் அதே நிகழ்ச்சிகள் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது.

    இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண திருவிழா 5-ந்தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 9.50 மணிக்கு மேல் 10.20 மணிக்குள் திருக்கல்யாண மண்டபத்தில் கள்ளழகர் ஒரே நேரத்தில் ஸ்ரீதேவி, பூமிதேவி, கல்யாண சுந்தரவல்லி தாயார், ஆண்டாள் ஆகிய 4 பிராட்டிகளை மணக்கிறார்.

    திருக்கல்யாணம் முடிந்ததும் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெறும். அதனை தொடர்ந்து இரவு பெருமாள் நான்கு தேவியர்களுடன் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். பின்னர் 6-ந்தேதி மஞ்சள் நீர்சாற்று முறையுடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, கண்காணிப்பாளர் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை திருவிழா முக்கியமானதாகும்.
    • மே மாதம் 5-ந் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.

    மதுரையில் நடைபெறும் சித்திரை பெருந்திருவிழா உலக பிரசித்தி பெற்றது ஆகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாணம் முடிந்ததும், அதை தொடர்ந்து கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கும் வைபமும் ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள்.

    மேலும் 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றானது, மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும். இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை திருவிழா முக்கியமானதாகும். இந்த திருவிழாவின் முன்னோட்ட நிகழ்ச்சியாக சப்பர முகூர்த்த விழா நேற்று கள்ளழகர் கோவிலின் உப கோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலின் உள்பிரகார சன்னதி முன்பாக நடந்தது.

    மேளதாளம் முழங்க சப்பர முகூர்த்த விழா நடந்தது. இதில் ஆயிரம் பொன் சப்பரத்திற்கு வேண்டிய மூங்கில் சேகரிக்கும் பணி சம்பிரதாய படி நடந்தது. பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத பெருமாளுக்கு சிறப்பு பூஜைகளும், மஹா தீபாராதனைகளும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வருகிற மே மாதம் 5-ந் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார். அதற்கு முன்னோட்ட நிகழ்வுதான் இது. இந்த விழாவில் கள்ளழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி, தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், கூடலழகர்கோவில், நிர்வாக அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள் சேகர், பிரதிபா, அருள் செல்வம், கோவில் பட்டர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    • ராப்பத்து விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • கள்ளழகர் வர்ணக்குடையுடன் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் கடந்த மாதம் 23-ந் தேதி வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கியது. பகல்பத்து விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் என்னும் பரமபத வாசல் திறக்கப்பட்டது. இதைதொடர்ந்து ராப்பத்து விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

    ராப்பத்து விழாவின் 8-ம் நாள் விழாவில், வேடுபறி நிகழ்ச்சி கோவில் உட்பிரகாரத்தில் நடைபெற்றது. முன்னதாக கள்ளழகர் என்ற சுந்தரராஜபெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஆடி வீதி, கோவில் உட்பிரகாரம் வழியாக வந்து தொடர்ந்து சுவாமி, தீவட்டி பரிவாரங்கள் மற்றும் மேளதாளம் முழங்க வர்ணக்குடையுடன் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    • இந்த நடைமுறை மார்கழி மாதம் 30 நாளும் பொருந்தும்.
    • நாளை முதல் ஜனவரி 14-ந்தேதி வரை இது நடைமுறையில் இருக்கும்.

    மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) மார்கழி மாதப்பிறப்பையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். பின்னர் பகல் 12 மணிக்கு நடை சாத்தப்படும். தொடர்ந்து மாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 7 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    மேலும் கோவிலின் உப கோவில்களான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவில், வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 11.30 மணிக்கு நடை சாத்தப்படும், பின்னர் மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    இந்த நடைமுறை மார்கழி மாதம் 30 நாளும் பொருந்தும். அதாவது நாளை முதல் அடுத்த மாதம் ஜனவரி 14-ந் தேதி வரை இது நடைமுறையில் இருக்கும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, மற்றும் கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் செய்து உள்ளனர்.

    • வேத மந்திரங்கள் முழங்க அழகருக்கு திருத்தைலம் சாத்தப்பட்டது.
    • தீர்த்தத்தில் அழகர் நீராடியது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

    மதுரையில் பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் நடக்கும் தைலக்காப்பு உற்சவம் தனி சிறப்புடையதாகும். இந்த ஆண்டுக்கான தைலக்காப்பு உற்சவம் கடந்த 3-ந் தேதி நவநீதகிருஷ்ணன் சன்னதி மண்டபத்தில் பரமபத நாதன் சேவையுடன் தொடங்கியது.

    முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலையில் கள்ளழகர்், அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் இருப்பிடத்தில் இருந்து மேளதாளம் முழங்க, யானை, பரிவாரங்களுடன் நூபுர கங்கை ராக்காயி அம்மன் கோவிலை நோக்கி சென்றார். வழியில் மலைப்பாதையில் அனுமன் தீர்த்தம், கருட தீர்த்த எல்லையில் அழகருக்கு தீபாராதனை நடந்தது.

    சுமார் 4 கி.மீ தூரம் உள்ள அழகர்மலைக்கு சென்றைடைந்தார். அங்கு நூபுரகங்கை மண்டபம் முழுவதும் வண்ண, வண்ண விளக்குகளாலும், பூமாலைகளாலும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சகல மங்கலவாத்தியங்களுடன் கள்ளழகர், அங்குள்ள மண்டபத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளினார். அந்த மண்டபத்தில் ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, அன்னாசி, திராட்சை, வாழை உள்ளிட்ட 9 வகையான பழ வகைகள் தோரணங்களாக அலங்கரிக்கப்பட்டு அழகரை வரவேற்றன.

    இதைதொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க அழகருக்கு திருத்தைலம் சாத்தப்பட்டது. அதன் பின்னர் கள்ளழகர் பெருமாள், நூபுர கங்கையில் திருமஞ்சனமாகி நீராடினார். காலத்திற்கும் வற்றாத தீர்த்தத்தில் அழகர் நீராடியது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

    அதன் பிறகு மேல்மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மீண்டும் பல்லக்கில் எழுந்தருளி அழகர்கோவிலுக்கு சென்று இருப்பிடம் சேர்ந்தார்.

    தைலக்காப்பு திருவிழாவின் அனைத்து நிகழ்ச்சிகளும் பக்தர்கள் வசதிக்காக எல்.இ.டி. திரை மூலம், நூபுர கங்கை அடிவாரம், முருகப்பெருமானின் 6-வது படைவீடான சோலைமலை கோவில், கள்ளழகர் கோவில் ஆகிய இடங்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டன.

    முன்னதாக ராக்காயி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தன. ஆண்டிற்கு ஒருமுறை அழகர், சோலைமலைக்கு சென்று திரும்புவது பெருமை படைத்ததாகும்.

    விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா நடந்தபோது, இந்த வருடமும் நூபுர கங்கை பகுதியில் மதியம் சாரல் மழை பெய்தது. இந்த தைலக்காப்பு திருவிழாவை காண வெளிமாவட்டங்கள், சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து தரிசனம் செய்தனர்.

    ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை பணியாளர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அப்பன் திருப்பதி போலீசார் செய்திருந்தனர்.

    • வருகிற 4-ந்தேதி முடிய இந்த விழா நடைபெறுகிறது.
    • தினமும் மாலையில் நவராத்திரி கலை விழா நடைபெறுகிறது.

    கள்ளழகர் கோவிலில் நவராத்திரி திருவிழா இன்று (திங்கட்கிழமை) மாலையில் அங்குள்ள கல்யாணசுந்தரவல்லி தாயார் சன்னதியில் தொடங்குகிறது. இதில் சுந்தரவல்லி தாயார் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் புறப்பாடு நடைபெறும். மேலும் தினமும் அதே மண்டபத்தில் பல்வேறு அலங்காரத்தில் தாயார் காட்சி தருவார்.

    இதையொட்டி அந்த மண்டபம் முழுவதும் வண்ண விளக்குகளாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வருகிற 4-ந்தேதி முடிய இந்த விழா நடைபெறுகிறது. இதற்காக தினமும் மாலையில் அங்குள்ள திருக்கல்யாண மண்டப வளாகத்தில் நவராத்திரி கலை விழா நடைபெறுகிறது.

    இதில் இன்று மாலையில் நாதஸ்வர நிகழ்ச்சியும், 27-ந் தேதி பரத நாட்டியம், மிருதங்க கச்சேரி, 28-ந் தேதி கோவிந்த நாம சங்கீர்த்தனம், 29-ந் தேதி கர்நாடக சங்கீர்த்தனம், 30-ந் தேதி சங்கீர்த்தனம், 1-ந் தேதி பரத நாட்டியம், 2, 3, 4-ந் தேதி ஆகிய 3 நாட்களும் அதே நிகழ்ச்சிகள் அதே மண்டபத்தில் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் சுவாமி புறப்பாடாகி இருப்பிடம் போய் சேர்ந்தது.
    • திருப்பவுத்திர திருவிழா 10-ம்தேதி தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது.

    மதுரை அருகே அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றானது. இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நிறைநாளில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் திருப்பவுத்திர திருவிழா நடைபெறுவது உண்டு. இதில் நேற்று காலையில் மூலவர் சன்னதி முன்பாக உள்ள மண்டப வளாகத்தில் 108 வெள்ளி கலசங்கள் புனிதத்தீர்த்தத்துடன் வைக்கப்பட்டது. அதன் மீது தேங்காய், பழம், மாவிலை, தாம்பூலம், வண்ணப்பூக்கள், மாலைகளால் கலசங்களும், கும்பம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    பின்னர் உற்சவ கள்ளழகர் சுந்தரராஜ பெருமாளுக்கு 136 வகையான வாசனை திரவியங்கள் மூலிகைகள் இணைந்த பூஜைகள் நடந்தது. மேலும் நெய், தேன், பால், புஷ்பம், இளநீர், மஞ்சள், துளசி உள்ளிட்ட 36 வகையான பொருட்களுடன் அபிஷேகங்களும், நூபுரகங்கை புனித தீர்த்ததுடன் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகள் பட்டர்களின் வேத மந்திரங்களுடன் நடந்தது.

    இதைதொடர்ந்து கள்ளழகர் பெருமாள், சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். மேலும் மாலையில் உற்சவர் சாமி சர்வ அலங்காரத்தில் அருள்பாலித்தார். பின்னர் மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் சுவாமி புறப்பாடாகி இருப்பிடம் போய் சேர்ந்தது. முன்னதாக பூஜையில் வைக்கப்பட்டிருந்த திருபவுத்திர பட்டு நூல், மாலைகள் மூலவர், ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத சுந்தரராச பெருமாளுக்கும் மற்றும் கல்யாண சுந்தரவல்லி தாயார், ஆண்டாளுக்கும் அணிவிக்கப்பட்டது.

    இந்த திருப்பவுத்திர திருவிழா வருகிற 10-ம் தேதி பவுர்ணமி நிறை நாளில் 5 நாட்கள் நடந்து முடிந்து நிறைவு பெறுகிறது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கண்காணிப்பாளர்கள் உள்துறை பணியாளர்கள் செய்திருந்தனர்.

    ×