search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ADMK NDA ties"

    • அ.தி.மு.க.வை உருவாக்கிய தலைவர்களை அண்ணாமலை விமர்சித்தார்
    • அண்ணாமலையை நீக்குமாறும் இந்திய தலைமையிடம் கோரிக்கை வைத்தனர்

    மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ்நாட்டின் எதிர்கட்சியான அ.தி.மு.க. அங்கம் வகித்து வந்தது. ஆனால், 2021 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியுற்றது. பா.ஜ.க.வுடனான கூட்டணிதான் இதற்கு காரணம் என அக்கட்சியில் சிலர் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனாலும் கூட்டணி தொடர்ந்தது.

    இந்நிலையில், தமிழக பா.ஜ.க.வின் தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க.வினரின் சித்தாந்த தலைவர்களில் முக்கியமானவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான அண்ணாதுரை குறித்து கூறிய கருத்து சர்ச்சைக்குள்ளானது. இது அ.தி.மு.க.வினரை ஆத்திரமடைய செய்தது.

    இது மட்டுமல்லாமல், "மத்தியில் மோடி, தமிழகத்தில் எடப்பாடி" எனும் அ.தி.மு.க.வின் முழக்கத்தையும் அண்ணாமலை ஏற்க மறுத்தார். 

    இதை தொடர்ந்து அண்ணாமலையை பா.ஜ.க.வின் தலைமை பொறுப்பில் இருந்து நீக்குமாறு அ.தி.மு.க.வினர் பா.ஜ.க.வின் அகில இந்திய தலைமையிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், இதனை தலைமை ஏற்க மறுத்ததாக தெரிகிறது.

    இந்நிலையில், பா.ஜ.க.வை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகுவதாகவும், அக்கூட்டணி முறிந்ததாகவும் அ.தி.மு.க.வின் முக்கிய தலைவர் கே.பி. முனுசாமி அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

    இது தொடர்பாக அ.தி.மு.க.வின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

    மாவட்டக் கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் !

    தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த ஒருவருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் மீதும், எங்களுடைய கழக தெய்வங்களான பேரறிஞர் அண்ணா அவர்களையும், இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களையும் அவதூறாக பேசியும், எங்களின் கொள்கைகளை விமர்சித்தும் வருகின்றது.

    மேலும், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைமை, கடந்த 20.06.2023 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை சிறுமைப்படுத்தியும், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தி வரும், எங்கள் கழக பொதுச் செயலாளர் மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை பற்றியும் அவதூறாக விமர்சித்து வருகிறது.

    இந்த செயல், கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், தலைமைக் கழக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று மாலை (25.9.2023 திங்கட்கிழமை) கழகப் பொது செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் 'புரட்சி தமிழர்' திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற தலைமை கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இன்று முதல், பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    இதற்கிடையே, பா.ஜ.க.வுடன் எக்காலத்திலும் கூட்டணி கிடையாது என தீர்மானம் இயற்றி அ.தி.மு.க. அக்கூட்டணியிலிருந்து விலகியதற்கான காரணங்களை குறிப்பிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாரதிய ஜனதா கட்சி இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகி" என்பதற்கு பதிலாக "பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகி" என வாசகங்கள் இடம் பெற்றிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ×