search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aavin milk"

    • ஆவின் நிர்வாகம் இரட்டை வேடம் போட்டு, மக்களை ஏமாற்றும் செயலில், முறைகேட்டில் ஈடுபட்டு வருவதை உறுதி செய்கிறது.
    • ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விநியோகத்தை தமிழகம் முழுவதும் படிப்படியாக ஆவின் நிர்வாகம் குறைத்து வந்துள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மாநகரில் உள்ள நேரடி ஆவின் பாலகங்களுக்கு அக்டோபர் 1-ந் தேதி முதல் 4.5சதவீதம் கொழுப்பு சத்துள்ள நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விநியோகத்தை எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி 50 சதவீதம் குறைத்து விநியோகம் செய்த நிலையில், மொத்த விநியோகஸ்தர்கள் வாயிலாக பால் முகவர்கள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் 4.5 சதவீதம் கொழுப்பு சத்துள்ள நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விநியோகத்தையும் நாளை (அக்டோபர்-3) முதல் 50சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளது பால் முகவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஏனெனில் ஆவின் 4.5 சதவீதம் கொழுப்பு சத்துள்ள பச்சை நிற பால் பாக்கெட்டுகள் கிடைக்காமல் பொதுமக்கள் அல்லல்பட்டு வருவதோடு, அதிக விலை கொண்ட தனியார் நிறுவனங்களின் பாலினை வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    சமன்படுத்தப்பட்ட பால் என்றால் 3.0 சதவீதம் கொழுப்பு சத்தும், 8.5 சதவீதம் திடசத்தும் இருக்க வேண்டும் என்கிற நிலையில் ஊதா நிற பாக்கெட்டில் "செறிவூட்டப்பட்ட பசும்பால்" என அறிமுகம் செய்து விட்டு, தற்போது அதனை "டிலைட் பால்" என மாற்றியிருப்பதும், ஏற்கனவே நீல நிற பாக்கெட்டில் சமன்படுத்தப்பட்ட பால் விற்பனையில் இருக்கும் போது தற்போதைய ஊதா நிற பாக்கெட் பின்புறமும் "சமன்படுத்தப்பட்ட பால்" என போட்டிருப்பதன் மூலம் ஆவின் நிர்வாகம் இரட்டை வேடம் போட்டு, மக்களை ஏமாற்றும் செயலில், முறைகேட்டில் ஈடுபட்டு வருவதை உறுதி செய்கிறது.

    ஏற்கனவே 5 சதவீதம், 10 சதவீதம், 20 சதவீதம் என நிலைப்படுத்தப்பட்ட ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விநியோகத்தை தமிழகம் முழுவதும் படிப்படியாக குறைத்து வந்துள்ள ஆவின் நிர்வாகம் தற்போது சென்னை மாநகரில் ஒரேயடியாக 50 சதவீதம் குறைத்துள்ளதை வைத்துப் பார்க்கும்போது தமிழகம் முழுவதும் பச்சை நிற பால் பாக்கெட் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்தி விட்டு, அதற்கு பதிலாக 1 சதவீதம் கொழுப்பு சத்து குறைவான ஊதா நிற பாக்கெட்டினை விற்பனை செய்து, மறைமுகமாக விற்பனை விலையை உயர்த்திட திட்டமிட்டு வருவதாகவே தெரிகிறது.

    தற்போது நடைமுறையில் உள்ள பால் பாக்கெட்டுகளின் கொழுப்பு சத்து அளவையும், பால் பாக்கெட்டில் பாலின் அளவையும் குறைத்து, அதன் மூலம் லிட்டருக்கு முதல் ரூ.8 வரை மறைமுகமாக விற்பனை விலையை உயர்த்துவது போன்றவற்றை செய்வதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆவின் நிர்வாக இயக்குநர் சென்னை ஐகோர்ட்டில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
    • அதில், கண்ணாடி பாட்டிலில் பால் விற்பனை செய்வதை நுகர்வோர் விரும்பவில்லை என தெரிவித்தார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் விசாரித்து வருகிறது.

    விசாரணையின்போது, ஆவின் பாலை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பதற்கு பதில் கண்ணாடி பாட்டிலில் அடைத்து விற்றால் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்கப்படும். எனவே ஆவின் பாலை பாட்டிலில் அடைத்து விற்க முடியுமா? என்று ஆவின் நிறுவனத்துக்கு நீதிபதிகள் ஏற்கனவே கேள்வி எழுப்பியிருந்தனர். இதுதொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய முன்னதாக உத்தரவிடப்பட்டு இருந்தது.

    அதன்படி, ஆவின் நிர்வாக இயக்குநர் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த அறிக்கையில், சென்னை, கோவையில் 7 இடங்களில் ஆய்வு நடத்தியதாகவும், அதில் 5 இடங்களில் பாலை பாட்டிலுக்கு பதில் பிளாஸ்டிக் பாக்கெட்டாக வழங்கவேண்டும் என்று தெரிவித்ததாகக் கூறப்பட்டு இருந்தது.

    பாட்டில்களில் பால் விற்பனை செய்தால் விலை உயர்ந்துவிடும் என்பதால், பிளாஸ்டிக் பாக்கெட்டில் விற்கப்படும் பால் தங்களுக்கு போதுமானது என்று தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

    நுகர்வோரின் விருப்பத்தின் அடிப்படையில், இதனை ஆய்வு செய்து நீதிமன்றம் தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்று ஆவின் நிறுவனம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு, வழக்கின் விசாரணையை அக்டோபர் 9-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பால் விலை மிகவும் குறைவாக இருப்பதாக பொது மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
    • பசும்பால் பாக்கெட் விலையும் பச்சை நிற பாக்கெட் விலையும் ஒன்றாக உள்ளது.

    சென்னை:

    சென்னையில் தினமும் ஆவின் பால் 16 லட்சம் லிட்டர் விற்பனையாகிறது. ஆரஞ்சு, நீலம், பச்சை, மெஜந்தா மற்றும் பசும்பால் என பல்வேறு வகைகளாக தரம் பிரித்து வினியோகிக்கப்படுகிறது.

    தனியார் பாலைவிட ஆவின் பால் விலை குறைவாக இருப்பதால் கடைகளில் உடனடியாக விற்பனை ஆகிவிடுகிறது. குறிப்பாக பச்சை நிற கவரில் உள்ள பால் 4.5 சத வீத கொழுப்புச் சத்துடன் வழங்கப்படுகிறது.

    இந்த பால் ஆவின் விற்பனை முகவர்களிடம் அரை லிட்டர் ரூ.22-க்கு கிடைக்கிறது. கடைகளில் ரூ.23-க்கு விற்கப்படுகிறது.

    ஆவினில் தயாரித்து வினியோகிக்கப்படும் மற்ற பால்களைவிட பச்சை நிற பால் விலை மிகவும் குறைவாக இருப்பதாக பொது மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

    ஆனால் இதர ஆவின் பால் நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துவதோடு மார்க்கெட்டில் சரி சமமான வினியோக முறையை கொண்டு வருவதில் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பச்சை பால் மட்டுமே அதிகளவு உற்பத்தி செய்யப்பட்டதால் மற்ற பால் தயாரிப்புகள் பாதிக்கக் கூடும் என்பதால் அனைத்து பால் பாக்கெட் வகைகளையும் சீராக சமமான அளவு வினியோகிக்க திட்டமிட்டு அதற்கான நடவடிக்கையில் ஆவின் நிர்வாகம் இறங்கி உள்ளது.

    அதன் ஒரு பகுதியான பச்சை பால் பாக்கெட் உற்பத்தியை 10 சதவீதம் குறைத்து பசும்பால் உற்பத்தியை 10 சதவீதம் அதிகரித்து சென்னையில் வினியோகம் செய்து வருகிறது.

    பசும்பால் பாக்கெட் விலையும் பச்சை நிற பாக்கெட் விலையும் ஒன்றாக உள்ளது. ஆனால் ஒரு சதவீதம் கொழுப்புச்சத்து பசும்பாலில் குறைக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் கடந்த சில மாதங்களாக பச்சை நிறபால் தட்டுப்பாடாக இருந்த நிலையில் இன்று 30 சதவீதம் பால் வினியோகத்தை குறைத்துள்ளதாக பால் முகவர்கள் சங்க மாநில தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

    எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் ஆவின் நிர்வாகம் பச்சை நிறபால் பாக்கெட் வினியோகத்தை குறைத்திருப்பது பால் முகவர்களுக்கு பல்வேறு சங்கடங்களை ஏற்படுத்துகிறது. பசும்பால் பாக்கெட்டுகளை வலுக்கட்டாயமாக விற்பனை செய்ய கூறுவதால் பால் முகவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    • ஆவின் நிறுவனம் தினமும் 30 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
    • வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா உள்பட 225 வகையான பால் பொருட்களை தமிழகம் முழுவதும் விற்பனை செய்கிறது.

    சென்னை:

    ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலையேற்றம் இன்று முதல் அமலுக்கு வருவதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தின் மூலம் தரமான பொருட்களை குறைந்த விலையில் மக்களுக்கு பயன்தரும் வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 25 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் மட்டும் 13 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், ஐந்து லட்சம் பேர் ஆவின் அட்டைதாரர்கள் ஆக இதில் பங்கெடுத்துள்ளனர்.

    ஆவின் நிறுவனத்தினால் பால் மட்டுமின்றி, குலாப்ஜாமுன், பால்கோவா, ஐஸ்கிரீம், நெய், நூடுல்ஸ், மில்க் கேக், பாயாசம் மிக்ஸ், யோகர்ட் டிரிங்ஸ் உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆவினில் நெய் மற்றும் வெண்ணெயின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    15 மில்லி நெய்யின் விலை 14 ரூபாயில் இருந்து 15 ரூபாயாகவும் ,100 மில்லி நெய்யின் விலை 70 ரூபாயில் இருந்து 80 ரூபாயாகவும், 100 மில்லி நெய் பாட்டிலின் விலை 75 ரூபாயிலிருந்து 85 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    200 மில்லி நெய் பாட்டில் 145 ரூபாயில் இருந்து 160 ரூபாயாகவும் 500 மில்லி நெய் பாட்டில் 315 ரூபாயில் இருந்து 365 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு லிட்டர் நெய்யின் விலை 630 ரூபாயில் இருந்து 700 ரூபாயாகவும், 15 கிலோ டின் நெய்யின் விலை 10,725 ரூபாயில் இருந்து 11880 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    இதேபோல் வெண்ணெயின் விலையானது 100 கிராம் 55 ரூபாயில் இருந்து 60 ரூபாயாகவும், 500 கிராம் 260 ரூபாயில் இருந்து 275 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • பால் பதப்பட்டு சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.
    • லஞ்ச ஒழிப்பு மற்றும் ஆவின் பொருட்களை கைப்பற்றினர்.

    சென்னை:

    திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் ஆவின் பால் பண்ணை உள்ளது. இங்கு தினமும் 1.25 லட்சம் லிட்டர் பால் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டப் பகுதியில் உள்ள பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பெறப்படுகிறது.

    அங்கு பால் பதப்பட்டு சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பெறப்பட்டு லாரியில் கொண்டு வரும் பாலில் கலப்படும் செய்து தெரிய வந்துள்ளது.

    ஆவின் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. சத்தியசீலன் தலைமையிலான குழுவினர் ராணிப்பேட்டை மாவட்டம் சோழிங்கரை அடுத்த ஜெகநாதபுரம் கிராமத்தை சேர்ந்த தயாளன் (70) வீட்டில் சோதனை செய்தனர். அங்கிருந்து 140 கிலோ பால் பவுடர், 150 கிலோ வெண்ணெய், 5 லிட்டர் பால், கொழுப்பை தனியாக பிரிக்கக்கூடிய எந்திரம் ஆகியவற்றை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ராஜ்குமார் காக்களூர் பால் பண்ணையில் டிரைவராக பணிபுரிந்து வருவதாகவும் அவர்தான் இந்த பொருட்களை வாங்கி பயன்படுத்தியதாக தெரிவித்தார்.

    லஞ்ச ஒழிப்பு மற்றும் ஆவின் பொருட்களை கைப்பற்றினர். மேலும் அங்கு இருந்த பாலையும் பறிமுதல் செய்து மாதவரம் பால் பண்ணையில் பரிசோதனை செய்தனர்.

    அதில் அந்த பாலில் கலப்படம் செய்திருப்பது உறுதியானது.

    இதையடுத்து நடந்த விசாரணையில் ராஜ்குமார், தனது தந்தை வீட்டிற்கு ஆவின் பாலை கொண்டு சென்று அங்கு கொழுப்பை எடுத்து விட்டு அதற்கு பதிலாக பால் பவுடர் மற்றும் தண்ணீரை கலந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    இதற்காக பாலில் இருந்து கொழுப்பை பிரிக்கும் எந்திரத்தையும் அவர் பயன்படுத்தி உள்ளார். அதன் பிறகு பாலை கே.ஜி. கண்டிகையில் உள்ள சொந்த வீட்டிற்கு கொண்டு சென்று அங்கு பாலில் பவுடரையும், தண்ணீரையும் தேவையான அளவிற்கு கலப்படம் செய்துள்ளார். கலப்படத்திற்கு தேவையான பால் பவுடர் மற்றும் வெண்ணெயை காக்கனூர் பார் பண்ணையில் ராஜ்குமார் திருடி பயன்படுத்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    மேலும் ராஜ்குமார் தொடக்க கூட்டுறவு பால் வினியோக சங்கத்தில் தனது தந்தை தயாளன் உறுப்பினராக இருப்பதாக பெயரை பதிவு செய்து உள்ளார். ஆனால் அவர் பால் உற்பத்தியாளரே இல்லை என தெரிய வருகிறது.

    இது தவிர ஆந்திராவில் பாலை வாங்கி ஆவினுக்கு சப்ளை செய்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து ஆவின் மேலாண்மை இயக்குனர் வினித் துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு வருகிறார். பொது மேலாளர் ராஜ்குமார் மற்றும் துணைப் பொது மேலாளர் அனிஷ் ஆகியோரிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.

    காக்கனூர் பால் பண்ணையில் கடந்த சில வருடங்களாக பால் கலப்பட மோசடி நடந்து இருக்கலாம் என்று லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.

    ராஜ்குமாரின் தந்தையிடம் பால் மாடுகள் எதுவும் இல்லை. சங்கத்திற்கு பால் சப்ளை செய்யாமல் அவரது பெயரில் நடந்து வந்த மோசடியில் அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.

    • ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட்டில் இன்றைய தேதி 5 என இல்லாமல் 4-ந் தேதி அச்சிடப்பட்டு இருந்தது.
    • தவறுக்கு காரணமான ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் ஆவின் பால் பண்ணையில் இருந்து இன்று வினியோகம் செய்த ஆரஞ்சு பால் பாக்கெட்டில் நேற்றைய தேதி இருந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

    பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பழவேற்காடு ஆகிய பகுதிகளில் வினியோகம் செய்த ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட்டில் இன்றைய தேதி 5 என இல்லாமல் 4-ந் தேதி அச்சிடப்பட்டு இருந்தது. இதனால் பழைய பால் பாக்கெட்டை விற்பனை செய்ததாக முகவர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    பால் பாக்கெட்டை வாங்கிய சிலர் திருப்பி கொடுத்துவிட்டு சென்றனர். இதுபற்றி காக்களூர் பால் பண்ணை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆய்வு செய்ததில் 4-ந் தேதி என தவறுதலாக அச்சடித்து வினியோகம் செய்துள்ளது தெரியவந்தது.

    இதுகுறித்து ஆவின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டில் இன்றைய தேதியை எந்திரத்தில் மாற்றம் செய்யாமல் நேற்றைய தேதியில் அச்சிடப்பட்டு வினியோகம் செய்யப்பட்டுள்ளது. அவை பழைய பால் அல்ல. இன்று வழங்கக்கூடிய பால் தான் ஆனால் தேதி தவறுதலாக அச்சிடப்பட்டுள்ளது. ஒரு எந்திரத்தில் தான் இந்த தவறு நடந்துள்ளது. 400 லிட்டர் பால் தவறுதலாக அச்சிடப் பட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த தவறுக்கு காரணமான ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னையில் பால் வினியோகம் கொரோனா பாதிப்புக்கு முன்பு இருந்த நிலையை கடந்த மாதம் ஆவின் மீண்டும் எட்டி உள்ளது.
    • பால் விற்பனை அதிகரித்து உள்ள நிலையில் அதன் கொள்முதல் குறைந்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் அரசின் ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. தனியாரை விட குறைந்த விலையில் பால் கிடைப்பதால் பொதுமக்கள் இடையே ஆவின் பாலுக்கு எப்போதும் வரவேற்பு உள்ளது.

    பால் பொருட்கள் மற்றும் பால் விற்பனையில் இதுவரையில் இருந்து வந்த பல்வேறு குளறுபடிகள் படிப்படியாக களையப்பட்டு வருகின்றன. பால் விநியோகத்தில் ஏற்பட்ட தாமதம் சரி செய்யப்பட்டது உள்ளிட்ட பல சீர்திருத்த நடவடிக்கைகளை தொடர்ந்து பால் விற்பனை 7 சதவீதம் அதிகரித்து உள்ளது.

    சென்னை தவிர பிற மாவட்டங்களில் ஆவின் பால் விற்பனை கூடி உள்ளது. சென்னையில் மட்டும் 15 லட்சம் லிட்டர் பால் தினமும் வினியோகிக்கப்படுகிறது. பிற மாவட்டங்களில் இதுவரையில் 15 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது 16 லட்சம் லிட்டராக உயர்ந்து உள்ளது. சென்னையில் பால் வினியோகம் கொரோனா பாதிப்புக்கு முன்பு இருந்த நிலையை கடந்த மாதம் ஆவின் மீண்டும் எட்டி உள்ளது.

    பால் விற்பனை அதிகரித்து உள்ள நிலையில் அதன் கொள்முதல் குறைந்துள்ளது. பால் உற்பத்தியாளர் சங்கங்கள் மூலம் விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்யும் அளவு 24 சதவீதம் குறைந்து இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    கடந்த ஆண்டு ஆகஸ்டில் பால் கொள்முதல் 38.21 லட்சமாக இருந்தது. ஆனால் தற்போது 28.78 லட்சமாக குறைந்துள்ளது.

    14.96 லட்சம் லிட்டராக இருந்த பால் விற்பனை 16.1 லட்சம் லிட்டராக உயர்ந்து உள்ளது.

    மாவட்ட அளவில் உள்ள பால் உற்பத்தியாளர் ஒன்றியங்கள் பால் கொள்முதலுக்கான திட்டமிடலை முறையாக வகுக்காததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    ஆவின் நிர்வாகத்தில் உள்ள சில குளறுபடிகளை சரி செய்வதால் பால் கொள்முதல் அதிகரிக்கலாம். தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதலை அதிகரிக்கும் போது ஆவின் நிறுவனத்தால் செய்யமுடியாதா? பால் கொள்முதலை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பால் வினியோகர் நல சங்க தலைவர் பொன்னுசாமி தெரிவித்து உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 5 லிட்டர் பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் விலை லிட்டருக்கு ரூ. 2 வீதம் 10 ரூபாய் உயர்ந்து தற்போது 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் பொதுமக்களுக்கு ஒரு லிட்டர் ரூ.44-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சென்னை:

    வணிக நிறுவனத்திற்காக விற்பனை செய்யப்படும் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விலை உயர்ந்துள்ளது.

    5 லிட்டர் பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் விலை லிட்டருக்கு ரூ. 2 வீதம் 10 ரூபாய் உயர்ந்து தற்போது 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக 210 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 10 ரூபாய் அதிகரித்துள்ளது.

    பொதுமக்களுக்கு வழங்கப்படும் விலையிலேயே வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் பொதுமக்களுக்கு ஒரு லிட்டர் ரூ.44-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதனை ஊடகங்கள் தவறாக புரிந்துகொண்டு ஆவின் நிறுவனம் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விலையை உயர்த்தி விட்டதாக தெரிவித்துள்ளது.

    உண்மையில் பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள அதே விலையை வணிக பயன்பாட்டு நிறுவனங்களுக்கும் வழங்கவே வணிக நிறுவனங்களுக்கான விலை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

    • ஆவினின் பால் கொள்முதல் 4 லட்சம் லிட்டர் அதிகரித்து இருக்கிறது.
    • தினமும் ஒரு லட்சம் லிட்டர் கேரள மாநிலத்துக்கு கொண்டு செல்லப்படுவதாக கூறப்படும் தகவல் தவறானது.

    சென்னை:

    சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் பால் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் அதிகாரிகளின் மாத ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மத்தியில் அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆவினின் பால் கொள்முதல் 4 லட்சம் லிட்டர் அதிகரித்து இருக்கிறது. விற்பனையை பொறுத்தவரையில் சென்னையில் மட்டும் நாளொன்றுக்கு 50 ஆயிரம் லிட்டர் கூடியுள்ளது. இதேபோல், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் விற்பனை அதிகரித்து இருக்கிறது. இதுபோல நிர்வாகத்திலும் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சிறப்பாக நடந்து வருகிறது.

    முதல் முறையாக மின்சார செலவை குறைப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதன் மூலம் கடந்த மாதம் 2 லட்சத்து 40 ஆயிரத்து 500 யூனிட்டையும், பணத்தின் மதிப்பில் ரூ.25 லட்சத்தையும் ஆவினுக்கு மிச்சப்படுத்தி இருக்கிறோம். பால் கொள்முதலுக்கான பணத்தை தாமதமாக கொடுத்து வருவதாக விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை இருந்து வந்தது. இப்போது வாரம் ஒரு முறை பணம் அவர்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    மேலும் அவர்களின் பால் தரத்தை பார்த்து, அதே இடத்தில் விலையை நிர்ணயம் செய்யும் முறை 60 சதவீதம் நிறைவேற்றப்பட்டு விட்டது. மீதமுள்ள 40 சதவீதத்தை பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 2 லட்சம் கறவை மாடுகளை விவசாயிகளுக்கு கடன் மற்றும் மானியத்தை வங்கிகள் மூலமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வங்கி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

    தினமும் ஒரு லட்சம் லிட்டர் கேரள மாநிலத்துக்கு கொண்டு செல்லப்படுவதாக கூறப்படும் தகவல் தவறானது. தமிழ்நாட்டிலேயே பாலின் தேவை அதிகமாக உள்ளது. நமக்கு தேவையான பாலை குறைந்த விலையில் நுகர்வோருக்கு வழங்குவதுதான் நம்முடைய நோக்கம். நம்முடைய தேவைக்கு மிகுதியாக பால் கொள்முதல் செய்யப்படும் பட்சத்தில் வெளி மாநிலங்களுக்கு பால் விற்பனை செய்யப்படும்.

    அதேபோல், பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையையும் நிறுத்த சொல்லியிருப்பதாக வெளியாகும் தகவலும் உண்மை இல்லை. அந்த பாலை சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள். அதுதொடர்பாக ஆய்வு செய்யத்தான் சொல்லியிருக்கிறோமே தவிர, பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை நிறுத்தவில்லை.

    பால் கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆவின் பால் பாக்கெட் மிகவும் குறைவான விலையில்தான் விற்கிறோம். மற்ற பால் நிறுவனங்களைவிட ரூ.10 முதல் ரூ.15 வரை குறைவாகவே விற்பனை செய்து வருகிறோம். விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து முதல்-அமைச்சருடன் நிச்சயம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஆவின் தயாரிப்பு பொருட்களின் தரம், சுவையை அதிகரித்து உள்ளோம். வெண்ணெய், நெய் ஆகியவற்றில் தட்டுப்பாடு இருக்கிறது. வெளி இடங்களில் வாங்கி விற்பனை செய்வதை குறைத்து, உள்ளூரிலேயே வாங்கி விற்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஊட்டியில் ஒருசில கட்டமைப்புகளை மாற்றி பால் கொள்முதலை வேகப்படுத்த வேண்டும்.
    • ஆவின் நிறுவன தயாரிப்பு பொருட்களில் இனிப்பு சுவையை மேலும் கூட்ட ஆராய்ச்சிக்குழு நியமிக்கப்பட்டு உள்ளது.

    ஊட்டி:

    ஊட்டியில் உள்ள தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையம், தருவூல ஜெர்சி காளை பண்ணையை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்தார்.

    அதன்பிறகு அப்புக்கோடு பகுதியில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள முதன்மை மகளிர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தை திறந்து வைத்தார்.

    இதனை தொடர்ந்து மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 8 விவசாயிகளுக்கு கறவை மாடுகள் மற்றும் ரூ.11.36 லட்சம் மதிப்பில் கடனுதவிகளையும் வழங்கினார்.

    பின்னர் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் ஆவினுக்கு சொந்தமான கருவூட்டல் பொலிகாளை பண்ணையில் சிறந்த மரபுத்திறன் உடைய ஜெர்சி, ப்ரீசியன் வகையை சேர்ந்த 157 கால்நடைககள் சுகாதாரமான முறையில் வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.

    அந்த காளைகளிடம் இருந்து உறைவிந்து சேகரிக்கப்பட்டு, மாநில அளவில் 27 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கு உள்ள கால்நடைகளுக்கு செயற்கைமுறை கருவூட்டல் நடத்தப்பட்டு வருகிறது.

    இதன்மூலம் உள்ளூர் பசுக்களின் பால் உற்பத்தி திறனை பெருக்க முடியும். கால்நடைகளின் ஒட்டுமொத்த தரமும் உயரும். இதன்மூலம் கிராமப்புற விவசாயிகளுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை உருவாக்க முடியும்.

    தமிழகத்தில் ஒட்டுமொத்த தினசரி பால் உற்பத்தி 27 லட்சம் லிட்டராக இருந்தது. அது தற்போது 31 லட்சம் லிட்டராக உள்ளது. தமிழகத்தின் தினசரி பால் உற்பத்தியை 45 லட்சம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதற்காக மாநில அளவில் 70 லட்சம் லிட்டர் பாலை கையாள தேவையான அடிப்படை வசதிகளை, ஆவின் நிர்வாகம் நடப்பாண்டு இறுதிக்குள் கொண்டு வரும்.

    ஊட்டியில் ஒருசில கட்டமைப்புகளை மாற்றி பால் கொள்முதலை வேகப்படுத்த வேண்டும். சுற்றுலா பிரதேசம் என்பதால் இலக்கு நிர்ணயித்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆவின் நிறுவன தயாரிப்பு பொருட்களில் இனிப்பு சுவையை மேலும் கூட்ட ஆராய்ச்சிக்குழு நியமிக்கப்பட்டு உள்ளது.

    தீபாவளிக்கு சிறப்பு இனிப்பு வகைகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ளோம். ஆவின் நிர்வாகத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. நீலகிரி மாவட்டத்தில் ஆவின் பால் கூடுதலாக விற்கப்படுவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பால் அட்டைதாரர்கள் தாங்களாகவே மண்டல அலுவலகங்களுக்கு சென்று ஆவணங்களை வழங்கி அட்டைகளை புதுப்பிக்க வேண்டும்.
    • ஒரு ரேஷன் கார்டுக்கு ஆரஞ்சு பால் பாக்கெட் தினமும் 1 லிட்டர் மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஆவின் நிறுவனத்தின் மாதாந்திர பால் அட்டைகள் மூலம் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தற்போது போலி மாதாந்திர பால் அட்டைகள் நடமாடுவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து கம்ப்யூட்டரில் இருந்து போலி மாதாந்திர அட்டைகளை அகற்ற ஆவின் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இதை தொடர்ந்து ஆரஞ்சு பால் பாக்கெட்டுகள் வாங்கும் வாடிக்கையாளர்கள் ஆவின் மாதாந்திர பால் அட்டைகளை புதுப்பிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    அதன்படி, வாடிக்கையாளர்கள் ரேஷன் கார்டு அல்லது வீட்டு வாடகை ஒப்பந்தம் போன்ற ஆவணங்களின் நகலை ஆவின் நிறுவனத்தில் கொடுத்த பின்னரே தங்களுடைய மாதாந்திர பால் அட்டைகளை புதுப்பிக்க முடியும்.

    மேலும் பால் அட்டைதாரர்கள் தாங்களாகவே மண்டல அலுவலகங்களுக்கு சென்று ஆவணங்களை வழங்கி அட்டைகளை புதுப்பிக்க வேண்டும்.

    மேலும் ஒரு ரேஷன் கார்டுக்கு ஆரஞ்சு பால் பாக்கெட் தினமும் 1 லிட்டர் மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இது வாடிக்கையாளர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆவின் நிறுவனம் தற்போது தினமும் மாதாந்திர அட்டைகள் மூலம் சுமார் 6.5 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்கிறது.

    இதில் 4 லட்சம் லிட்டர் நீல நிற பால் பாக்கெட்டுகளும், 2 லட்சம் லிட்டர் பச்சை நிற பால் பாக்கெட்டுகளும், 7 ஆயிரம் லிட்டர் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படுகின்றன.

    மாதாந்திர அட்டைகள் மூலம் பால் பாக்கெட் பெறுபவர்கள் அதற்கான தொகையை முன்கூட்டியே செலுத்தி விடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆவின் 500 மில்லி நைஸ் நீல பாக்கெட் ரூ.20, பச்சை ரூ.22, ஆரஞ்சு ரூ.30 என்று அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • மொத்த விற்பனையாளர்கள் என்ற இடைத்தரகர் இல்லாமல் முகவர்களுக்கு நேரடியாக சப்ளை செய்யலாம்.

    சென்னை:

    ஆவின் பால் பாக்கெட்டுகளில் அச்சிடப்பட்டுள்ள எம்.ஆர்.பி. விலையைவிட கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. லிட்டருக்கு ரூ.2 வரை உயர்வாக இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறி வருகிறார்கள்.

    இது தொடர்பாக பால் முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி கூறியதாவது:-

    ஆவின் பால் விற்பனை மொத்த விற்பனையாளர்கள், பால் முகவர்கள், சில்லரை விற்பனையாளர்கள் என்ற மூன்று அடுக்குகளை கொண்டது. மாவட்டத்துக்கு மாவட்டம் சில்லரை விற்பனை, விலை, கமிஷன் ஆகியவை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஆவின் 500 மில்லி நைஸ் நீல பாக்கெட் ரூ.20, பச்சை ரூ.22, ஆரஞ்சு ரூ.30 என்று அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதை மொத்த விற்பனையாளர்களுக்கு ரூ.1 குறைத்து வழங்குகிறார்கள். இது தவிர போக்குவரத்து மானியமாக லிட்டருக்கு 70 காசுகளும் வழங்கப்படுகிறது.

    இதில் மொத்த விற்பனையாளர்கள் தங்கள் லாப பங்காக 50 காசுகளை எடுத்து கொண்டு பால் முகவர்களுக்கு 50 காசு குறைவாக சப்ளை செய்கிறார்கள். பால் முகவர்கள் லீக்கேஜ் போன்ற இழப்புகளையும் தாங்கி சில்லரை கடைகளுக்கு அதிகாலை 4 மணி முதல் வழங்குகிறார்கள். அவர்கள் தங்களுக்கான கமிஷனை எடுத்து கொண்டு ஒரு பாக்கெட் 50 காசு கூடுதலாக விற்கிறார்கள். கடைக்காரர்கள் கூடுதலாக 50 காசு வைத்து விற்கிறார்கள். இப்படித் தான் லிட்டருக்கு ரூ. 2 வரை கூடுதல் விலைக்கு விற்பனையாகிறது.

    இதை சரிகட்ட மொத்த விற்பனையாளர்கள் என்ற இடைத்தரகர் இல்லாமல் முகவர்களுக்கு நேரடியாக சப்ளை செய்யலாம். விற்பனைக்கான கமிஷன் தொகையை சதவீத அடிப்படையில் நிர்ணயம் செய்ய வேண்டும். அது வரை இந்த சுமை பொதுமக்கள் தலையில்தான் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×