search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruchendur Murugan Temple"

    திருச்செந்தூர், சாத்தான்குளம், ஓட்டப்பிடாரம், காயல்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தேவையான முகாம்கள் அமைத்து பொதுமக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    திருச்செந்தூர்:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று இதுவரை இல்லாத அளவில் கனமழை கொட்டி தீர்த்தது.

    குறிப்பாக காயல்பட்டினம், திருச்செந்தூர், ஆறுமுகநேரி, தூத்துக்குடி நகர பகுதிகளில் காலை முதல் இடைவிடாது பெய்த கனமழையால் பல்வேறு இடங்களிலும் சாலைகளில் வெள்ளம் தேங்கியது.

    திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதிகளில் இடி-மின்னலுடன் பெய்த கனமழை காரணமாக சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது. மேலும் கோவில் கிழக்கு பகுதியில் கிரிபிரகாரத்தில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியது.

    பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் கோவிலில் தேங்கிய மழைநீர் அப்புறப்படுத்தப்பட்டது. ஆனால் சுவாமி மூலவர் இருக்கும் மகாமண்டபத்திற்குள் மழைநீர் செல்லவில்லை.

    அதேநேரம் நாழிக்கிணறு கார்நிறுத்தும் இடத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால் மழையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் காத்துநின்று தரிசனம் செய்தனர்.

    திருச்செந்தூர் பஸ்நிலைய பகுதி, டி.பி.ரோடு, காமராஜர் சாலை, ரதவீதிகள், அரசு ஆஸ்பத்திரி பின்புறம் உள்ள சாலை, தினசரி மார்க்கெட் பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

    திருச்செந்தூர் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் பணியாளர்கள் மின்மோட்டார் மூலமும், பொக்லைன் எந்திரம் மூலமும் வெள்ளநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சிலமணி நேரங்களில் வெள்ளம் வடிய தொடங்கியது.

    குறிப்பாக கோவிலை சுற்றி தேங்கிய மழைவெள்ளநீர் வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இதன் காரணமாக சுப்பிரமணிய சுவாமி கோவிலை சுற்றி தேங்கிய வெள்ளம் சிறிது நேரத்தில் முழுமையாக வடிந்தது.

    இதனால் இன்று காலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் வழக்கம் போல் தரிசனம் செய்தனர். மேலும் திருச்செந்தூர் நகரப்பகுதிகளிலும் தேங்கி நின்ற மழைநீர் முழுமையாக வடிந்ததால் இன்று திருச்செந்தூர் இயல்பு நிலைக்கு திரும்பியது.

    இதற்கிடையே திருச்செந்தூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று இரவு நேரில் பார்வையிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி மாவட்டத்திற்கு சிகப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திருச்செந்தூர், சாத்தான்குளம், ஓட்டப்பிடாரம், காயல்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தேவையான முகாம்கள் அமைத்து பொதுமக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் பொதுமக்கள் வளர்க்கக் கூடிய கால்நடைகள் மற்றும் வீட்டு விலங்குகளுக்கு தனியே முகாம்கள் அமைக்கப்பட்டு விலங்குகளையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வெள்ளத்தில் கார் மிதந்து சென்றதை படத்தில் காணலாம்

    இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதையடுத்து தாழ்வான பகுதிகளில் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது .

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரி- குளங்கள் கண்டறியப்பட்டு மழை வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில் காவல் துறையினர், வருவாய்த் துறையினர் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார். 

    2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
    முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரமான வைகாசி விசாகத் திருவிழா மிகவும் சிறப்புமிக்கதாகும். திருச்செந்தூர் கோவிலில் இத்திருவிழா, வசந்த விழாவாக கடந்த 9-ஆம் தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் கோவிலில் உச்சிகால தீபாராதனைக்குப் பின் சுவாமி ஜெயந்திநாதர் திருக்கோவிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சேரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நிறைவு நாளை வசந்த திருவிழாவாக கொண்டாடும் விதமாக, சனிக்கிழமை இன்று வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது.

    இதையொட்டி கோவிலில் அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றது. காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனையாகிறது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் திருக்கோவிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சேர்கிறார். அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வருதலும், முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடைபெறுகிறது. பின்னர், தங்கச் சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து திருக்கோயில் சேர்கிறார்.

    வைகாசி விசாக திருவிழாவையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் பங்கேற்பதற்காக பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர். ராமநாதபுரம், மதுரை, அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து 5 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்பதால் கோயிலில் பொது தரிசன வழி, சிறப்பு வழிகளில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.

    அதனை முன்னிட்டு வருகிற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடை திறப்பு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகம் ஆகியவை நடக்கிறது.

    தொடர்ந்து 18-ந்தேதி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறப்பு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 10 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை ஆகியவை நடக்கிறது.

    பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு முனிகுமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடக்கிறது.

    தொடர்ந்து 19-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு நடை திறப்பு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகம் ஆகியவை நடக்கிறது.

    திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் முருகனை வழிபட வருவார்கள்.

    ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழாவில் சுவாமி சண்முகர், வள்ளி, தெய்வானையுடன் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்றார்.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 8-ம் திருநாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. அதிகாலையில் சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் வெண்பட்டு அணிந்து, வெண்மலர்கள் சூடி, பெரிய வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வெள்ளை சாத்தி கோலத்தில் 8 வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்ந்தார்.

    அங்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. காலை 11.30 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் பச்சை பட்டு உடுத்தி, பச்சை இலை, மரிக்கொழுந்து மாலை அணிந்து பச்சை நிற கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி பச்சை சாத்தி கோலத்தில் 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலா வந்த சுவாமியை திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்களின் பாதுகாப்பு கருதி திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் ஷீஜாராணி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு 10-ம் திருநாள் தேரோட்டம் நடக்கிறது. நாளை மறுநாள் (புதன்கிழமை) 11-ம் திருநாள் இரவு சுவாமி தெப்பத்தில் 11 முறை சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர். 
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழாவில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் குடவருவாயில் தீபாராதனை நடந்தது.
    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    5-ம் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலையில் சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாலையில் சாயரட்சை தீபாராதனை நடந்தது.

    இரவு 7.30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவில் பிரதான வாயில் அடைக்கப்பட்டது. அந்த வாயிலின் முன்பு சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் எழுந்தருளினர். பின்னர் இரவு 7.35 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவிலின் பிரதான வாயில் திறக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமி-அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை நடந்தது.

    அப்போது கீழ ரத வீதி பந்தல் மண்டப முகப்பில் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதருக்கு எதிர்சேவை நடந்தது. தொடர்ந்து சுவாமி-அம்பாள் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் எட்டு வீதிகளிலும் சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    6-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு மேலக் கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் கோ ரதத்தில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வருகிறார். இரவு 8 மணிக்கு மேலக் கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி தேரிலும், தெய்வானை அம்பாள் இந்திர விமானத்திலும் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திருவிழாவில் சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    4-ம் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலையில் மேலக் கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க முத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    மாலையில் மேலக் கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பால்குடம், புஷ்ப காவடி எடுத்து வந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

    விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் பாத யாத்திரையாக கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். கேரள மாநிலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து நேற்று ஏராளமான பக்தர்கள் புஷ்ப காவடி, பால்குடம் எடுத்து கோவிலுக்கு வந்து வழிபட்டனர்.

    5-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) இரவு 7.30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவிலில் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் எழுந்தருளி, குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். 
    சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தச‌ஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதை காண்பதற்காக திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். #Soorasamharam #ThiruchendurMurugan
    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான‌ கந்தசஷ்டி திருவிழா கடந்த 8-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

    தொடர்ந்து திரளான பக்தர்கள் கோவிலில் விரதம் இருந்து வழிபட்டு வருகின்றனர். விழா நாட்களில் தினமும் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், சுவாமி ஜெயந்தி நாதர் யாகசாலைக்கு புறப் பாடு, உச்சிகால தீபாராதனை ஆகியவை நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூர‌சம்ஹாரம் 6-ம் திருநாளான இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடக்கிறது. விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

    இதன்பிறகு காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்கியது. மதியம் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடந்த‌து. இதையடுத்து யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளிதெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடனும், மேளவாத்தியங்களுடனும் சண்முகவிலாச மண்டபத்தை வந்தடைந்தார். பின்னர் சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது.


    கோவில் முன் திரண்ட பக்தர்கள்.

    மதியம் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி, சூரனை வேல் கொண்டு வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது. முதலில் யானை முகம் கொண்ட தாரகாசூரனை சுவாமி வேல் கொண்டு வதம் செய்கிறார்.

    பின்னர் சிங்கமுகமாகவும், தன்முகமாகவும் அடுத்தடுத்து உருமாறும் சூரனை சுவாமி வதம் செய்கிறார். இறுதியில் மாமரமும், சேவலுமாக உருமாறும் சூரனை சேவலும், மயிலுமாக மாற்றி அருள்கிறார். சூரசம்ஹாரம் முடிந்த பின்னர் சந்தோ‌ஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமிஅம்பாள் கிரிப்பிரகாரம் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து கோவிலை சேர்கின்றனர். இரவில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமிக்கு சாயாபிஷேகம் (கண்ணாடி யில் தெரியும் சுவாமியின் பிம்பத்துக்கு அபிஷேகம்) நடக்கிறது.

    கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப் பட்டு உள்ளது. சூரசம்ஹார நிகழ்ச்சியை காண்பதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலில் குவிந்த வந்த வண்ணம் உள்ளனர்.

    கடலில் புனித நீராட கடற்கரையில் திரண்ட பக்தர்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.

    சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்ப‌ட்டுள்ளது. சுமார் 3 ஆயிரத்து 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பக்தர்கள் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு வசதியாக 10 எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 300 துப்புரவு பணியாளர்கள் பணியில் உள்ளனர். 100 தற்காலிக கழிப்பறைகள், 8 தற்காலிக தங்கும் இடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    தூத்துக்குடி, நெல்லை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதேபோன்று தற்காலிக வாகன நிறுத்தும் இடத்தில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வருவதற்காக 15 மினி பஸ்கள் இயக்கப்படுகின்றது. சூரசம்ஹாரம் முடிந்ததும் ஊர் திரும்பும் பக்தர்கள் வசதிக்காக திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு மாலை 6.30 மணி, இரவு 8.50 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றது.

    கோவில் கிரிபிரகாரத்தில் அங்கப்பிரதட்சணம் செய்யும் பக்தர்கள்.

    சூரசம்ஹார நிகழ்ச்சியை பக்தர்கள் எளிதில் காணும் வகையில், கடற்கரை முழுவதும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. திருச்செந்தூர் நகர் முழுவதும் போலீசார் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கடற்கரையில் கண்காணிப்பு கோபுரங்களை அமைத்து, அதில் இருந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    திருச்செந்தூர் - பாளையங்கோட்டை ரோடு, தூத்துக்குடிரோடு, கன்னியாகுமரி ரோடு, சாத்தான்குளம் ரோடு ஆகியவற்றில் புறநகர் பகுதிகளில் தற்காலிக பஸ் நிலையங்கள், வாகன நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். #Soorasamharam #ThiruchendurMurugan
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாவில் சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி வீதிஉலா வந்தனர்.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 30-ந் தேதி ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் ஒவ்வொரு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகின்றனர். 4-ம் திருநாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமுத்து கிடா வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். மாலை 4 மணிக்கு சுவாமிக்கு சாயரட்சை தீபாராதனை நடந்தது. பின்னர் மாலை 6.30 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளினர். தொடர்ந்து உள்மாட வீதி நான்கிலும், ரதவீதி நான்கிலும் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    ஆவணித் திருவிழாவின் 5-ம் திருநாளான இன்று (திங்கட்கிழமை) இரவு 7.30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவிலில் சுவாமி குமரவிடங்க பெருமானும், வள்ளி அம்பாளும் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி குடவருவாயில் தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் வீதிஉலா நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு நேற்று மாலையில் கொடிப்பட்ட வீதி உலா நடந்தது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாக்கள் மிகவும் சிறப்பு பெற்றதாகும்.

    இந்த ஆண்டு ஆவணித் திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று மாலையில் 14 ஊர் செங்குந்தர் முதலியார் உறவின்முறை 12-ம் திருவிழா மண்டகப்படி மண்டபத்தில் பூஜை செய்யப்பட்ட கொடிப்பட்டமானது 1-ம் படி, செப்பு ஸ்தலத்தார் கோபி அய்யர் யானை மீது கையில் ஏந்தியவாறு வீதி உலா வந்து கோவிலில் சேர்ந்தது.

    கொடியேற்றத்தை முன்னிட்டு காலை 5.30 மணிக்கு கோவில் செப்புக் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது, மாலையில் அப்பர் சுவாமிகள் கோவிலிலிருந்து தங்க சப்பரத்தில் புறப்பட்டு வீதிகளில் உழவாரப்பணி செய்து கோவில் வந்து சேர்கிறார். இரவில் ஸ்ரீபெலிநாயகர் அஸ்திரத் தேவருடன் தந்தப் பல்லக்கில் 9 சந்திகளில் வீதிஉலா வந்து கோவிலில் சேர்கிறார்.

    திருவிழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி, அலுவலக கண்காணிப்பாளர் யக்ஞ நாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி வருசாபிஷேக விழா வருகிற 23-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி வருசாபிஷேக விழா வருகிற 23-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. அதிகாலை 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து கோவில் மகா மண்டபத்தில் மூலவர், வள்ளி, தெய்வானை கும்பங்களுக்கும், குமரவிடங்க பெருமான் சன்னதியில் சண்முகர் கும்பத்திற்கும், பெருமாள் சன்னதி முன்பு பெருமாள் கும்பத்திற்கும் பூஜைகள் நடக்கிறது.

    காலை 8 மணிக்கு பூஜை செய்யப்பட்ட கும்பங்கள் விமான தளத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு 8.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் மூலவர், சண்முகர், பெருமாள் ஆகிய விமானங்கள் புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து வள்ளி, தெய்வானை விமானங்களுக்கும் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.

    இரவில் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது. இரவில் சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி அம்பாள் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். 
    ×