search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்செந்தூர் கோவில் பகுதியில் இயல்பு நிலை திரும்பியதால் தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள்
    X
    திருச்செந்தூர் கோவில் பகுதியில் இயல்பு நிலை திரும்பியதால் தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள்

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் மழை நீர் முழுமையாக வடிந்தது - பக்தர்கள் வழக்கம் போல் சுவாமி தரிசனம்

    திருச்செந்தூர், சாத்தான்குளம், ஓட்டப்பிடாரம், காயல்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தேவையான முகாம்கள் அமைத்து பொதுமக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    திருச்செந்தூர்:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று இதுவரை இல்லாத அளவில் கனமழை கொட்டி தீர்த்தது.

    குறிப்பாக காயல்பட்டினம், திருச்செந்தூர், ஆறுமுகநேரி, தூத்துக்குடி நகர பகுதிகளில் காலை முதல் இடைவிடாது பெய்த கனமழையால் பல்வேறு இடங்களிலும் சாலைகளில் வெள்ளம் தேங்கியது.

    திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதிகளில் இடி-மின்னலுடன் பெய்த கனமழை காரணமாக சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது. மேலும் கோவில் கிழக்கு பகுதியில் கிரிபிரகாரத்தில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியது.

    பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் கோவிலில் தேங்கிய மழைநீர் அப்புறப்படுத்தப்பட்டது. ஆனால் சுவாமி மூலவர் இருக்கும் மகாமண்டபத்திற்குள் மழைநீர் செல்லவில்லை.

    அதேநேரம் நாழிக்கிணறு கார்நிறுத்தும் இடத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால் மழையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் காத்துநின்று தரிசனம் செய்தனர்.

    திருச்செந்தூர் பஸ்நிலைய பகுதி, டி.பி.ரோடு, காமராஜர் சாலை, ரதவீதிகள், அரசு ஆஸ்பத்திரி பின்புறம் உள்ள சாலை, தினசரி மார்க்கெட் பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

    திருச்செந்தூர் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் பணியாளர்கள் மின்மோட்டார் மூலமும், பொக்லைன் எந்திரம் மூலமும் வெள்ளநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சிலமணி நேரங்களில் வெள்ளம் வடிய தொடங்கியது.

    குறிப்பாக கோவிலை சுற்றி தேங்கிய மழைவெள்ளநீர் வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இதன் காரணமாக சுப்பிரமணிய சுவாமி கோவிலை சுற்றி தேங்கிய வெள்ளம் சிறிது நேரத்தில் முழுமையாக வடிந்தது.

    இதனால் இன்று காலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் வழக்கம் போல் தரிசனம் செய்தனர். மேலும் திருச்செந்தூர் நகரப்பகுதிகளிலும் தேங்கி நின்ற மழைநீர் முழுமையாக வடிந்ததால் இன்று திருச்செந்தூர் இயல்பு நிலைக்கு திரும்பியது.

    இதற்கிடையே திருச்செந்தூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று இரவு நேரில் பார்வையிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி மாவட்டத்திற்கு சிகப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திருச்செந்தூர், சாத்தான்குளம், ஓட்டப்பிடாரம், காயல்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தேவையான முகாம்கள் அமைத்து பொதுமக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் பொதுமக்கள் வளர்க்கக் கூடிய கால்நடைகள் மற்றும் வீட்டு விலங்குகளுக்கு தனியே முகாம்கள் அமைக்கப்பட்டு விலங்குகளையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வெள்ளத்தில் கார் மிதந்து சென்றதை படத்தில் காணலாம்

    இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதையடுத்து தாழ்வான பகுதிகளில் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது .

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரி- குளங்கள் கண்டறியப்பட்டு மழை வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில் காவல் துறையினர், வருவாய்த் துறையினர் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார். 

    Next Story
    ×