என் மலர்
பாராளுமன்ற தேர்தல் 2024
- அதே போன்று சம்பவம் தென்காசி பாராளுமன்ற தொகுதியிலும் நடந்துள்ளது.
- வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாளான நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
நெல்லை:
ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சுயேட்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்தார்.
இதனை தொடர்ந்து அவரது பெயரை போலவே பன்னீர்செல்வம் என பெயர்கொண்ட 4 பேர் சுயேட்சையாக அந்த தொகுதியில் போட்டியிட மனுத்தாக்கல் செய்தனர். இந்த சம்பவம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அதே போன்று சம்பவம் தென்காசி பாராளுமன்ற தொகுதியிலும் நடந்துள்ளது. இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அதன் கூட்டணி கட்சியான புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்தில் போட்டி யிடுகிறார்.
இதனையொட்டி அவர் வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாளான நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இந்நிலையில் அவரது பெயரை போலவே பெயர் கொண்ட மேலும் 4 பேர் நேற்று சுயேட்சைகளாக மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அதன்படி புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமியை தவிர்த்து, கேசவபுரம் கடஞ்சிகுளத்தை சேர்ந்த பா.கிருஷ்ணசாமி, சிவகிரி விஸ்வநாதபேரி காந்தி காலனியை சேர்ந்த மூ.கிருஷ்ணசாமி, சங்கரன்கோவில் கரிவலம் வந்த நல்லூரை சேர்ந்த க.கிருஷ்ணசாமி, சிதம்பராபுரம் மலையன்குளம் பகுதியை சேர்ந்த வெ.கிருஷ்ணசாமி (45) ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதனால் ஒரே நாளில் கிருஷ்ணசாமி என்ற ஒரே பெயரை கொண்ட 5 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
- தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 26-ந்தேதியன்று பொதுவிடுமுறையாக மாநில அரசு அறிவித்துள்ளது.
- வேட்பு மனுக்கள் தாக்கல் நடந்த அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
திருவனந்தபுரம்:
பாராளுமன்ற தேர்தல் மாநிலங்களில் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக நடக்கும் ஏப்ரல் 26-ந்தேதி, கேரள மாநிலத்தில் தேர்தல் நடைபெறுகிறது. அங்குள்ள 20 மக்களவை தொகுதி களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.
தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி ஏப்ரல் 4-ந்தேதி வரை நடைபெறும் எனவும், வருகிற 29, 31 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய பொது விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தேர்தல் அதிகாரிகளிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி கேரள மாநிலத்தில் உள்ள மக்களவை தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. இதனை முன்னிட்டு வேட்பு மனுக்கள் தாக்கல் நடந்த அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முதல் நாளான இன்று ஒரு சிலர் வேட்பு மனுக்களை வாங்கிச் சென்றனர்.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 5-ந்தேதி நடைபெறுகிறது. அங்கு வேட்பு மனுக்களை வாபஸ் பெற 8-ந்தேதி கடைசி நாளாகும். அதன்பிறகு ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் வெளியிடப்படும்.
வேட்பு மனு தாக்கல் செய்ய வருபவர்கள் தேர்தல் நடத்தை வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படியே வேட்புமனு பெற வந்தவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 26-ந்தேதியன்று பொதுவிடுமுறையாக மாநில அரசு அறிவித்துள்ளது. அன்றைய தினம் அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி, கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருக்கும்.
வணிக நிறுவனங்களுக்கு விடுமுறை ஊதியம் பொருந்தும் என்று அறிவித்துள்ள மாநில அரசு, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வரும் தனியார் நிறுவ னங்கள் மற்றும்வணிக மையங்களுக்கு விடுமுறை அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தொழிலாளர் ஆணையருக்கு அறிவுறுத்தி உள்ளது.
- கடைசி நாளான நேற்று பல்வேறு கட்சிகளின் முக்கிய வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
- மனுக்களை வாபஸ் பெற விரும்புகிறவர்கள் 30-ந் தேதிக்குள் வாபஸ் பெற வேண்டும்.
சென்னை:
தமிழ்நாட்டை பொறுத்தவரை தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க தலைமையில் ஒரு கூட்டணியும், பா.ஜனதா தலைமையில் மற்றொரு கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் இந்த தேர்தலில் களம் இறங்கியுள்ளன.
தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என பலகட்ட பணிகளை பக்குவமாக முடித்த தலைவர்கள், தற்போது சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தொடங்கி விட்டனர்.
ஜனநாயக திருவிழாவான பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. கட்சி வேட்பாளர்களும், சுயேச்சைகளும் போட்டிப்போட்டுக்கொண்டு தங்களது மனுக்களை தேர்தல் அலுவலகங்களில் தாக்கல் செய்தனர். ஆட்டம், பாட்டம், வாணவேடிக்கைகளுடன் ஊர்வலமாக சென்று அவர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
இதில் பங்குனி உத்திர தினமாக கடந்த 25-ந் தேதி மிகவும் நல்லநாள் என்பதால், அன்றைய தினத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் 33 பேரும் தங்களது மனுக்களை தாக்கல் செய்தனர். இதேபோல் தி.மு.க., பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் அதே நாளில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அன்று மட்டும் ஒரே நாளில் 403 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
நேற்று முன்தினமும் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்றது.
வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிந்தது. இதனால் தேர்தல் அலுவலகங்களில் காலை முதல் பிற்பகல் 3 மணி வரை ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா, பா.ம.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் வேட்புமனுக்களை அதிகாரிகளிடம் கொடுத்தனர்.
சில இடங்களில் 3 மணிக்கு பிறகு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. அவர்கள் ஒருவர் பின் ஒருவராக அனுமதிக்கப்பட்டு மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
கடைசி நாளான நேற்று பல்வேறு கட்சிகளின் முக்கிய வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். தி.மு.க. சார்பில் நீலகிரியில் மீண்டும் களம் இறங்கும் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, தென்சென்னையில் போட்டியிடும் தயாநிதிமாறன், அ.தி.மு.க. கூட்டணியில் தென்காசி தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் தங்களது மனுக்களை தாக்கல் செய்தனர்.
பா.ஜனதா சார்பில் கோவையில் போட்டியிடும் அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜனதா கூட்டணியில் தேனி தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், காங்கிரஸ் வேட்பாளர்கள் விஜய்வசந்த் (கன்னியாகுமரி), ஜோதிமணி (கரூர்) ஆகியோரும் நேற்று மனுதாக்கல் செய்தனர்.
திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 31 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. தென்சென்னையில் 64 மனுக்களும், மத்திய சென்னையில் 58 மனுக்களும், வடசென்னையில் 67 மனுக்களும், கரூரில் 73 மனுக்களும் தாக்கல் ஆகியுள்ளது.
இவ்வாறு தமிழகம் முழுவதும் உள்ள 39 தொகுதிகளிலும் 1,749 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. கடைசி நாளில் சுயேச்சைகளே அதிக அளவில் மனு தாக்கல் செய்து உள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலோடு சேர்த்து குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட 18 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை நடைபெறுகிறது. அந்தந்த தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பொதுப்பார்வையாளர்கள் முன்னிலையில் இந்த வேட்புமனுக்கள் பரிசீலனை நடக்கிறது. முறையாக கையெழுத்து போடப்படாத, ஆவணங்கள் இணைக்கப்படாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும்.
மனுக்களை வாபஸ் பெற விரும்புகிறவர்கள் 30-ந் தேதிக்குள் வாபஸ் பெற வேண்டும். அதன் பின்னர் அன்றைய தினம் மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
வேட்புமனு தாக்கல் முடிந்துள்ள நிலையில், வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தென்சென்னையில் பிறந்த மத்திய மந்திரி ஜெய்சங்கரை ஏன் தென்சென்னையில் நிறுத்தவில்லை?
- அடுத்து வரும் சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் முஸ்லிம்களுக்கு தொகுதி ஒதுக்கப்படும்.
சென்னை:
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்ற மாநிலங்களவை பதவி காலம் 5 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் போது எல்.முருகனை எதற்காக நீலகிரியில் வேட்பாளராக அறிவித்தீர்கள். கவர்னராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை ராஜினாமா செய்ய சொல்லிவிட்டு தென்சென்னையில் வேட்பாளராக அறிவித்தது ஏன்? தென்சென்னையில் பிறந்த மத்திய மந்திரி ஜெய்சங்கரை ஏன் தென்சென்னையில் நிறுத்தவில்லை? திருச்சியில் பிறந்த மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு ஏன் திருச்சியில் சீட் கொடுக்கவில்லை?

ஜெய்சங்கருக்கும், நிர்மலா சீதாராமனுக்கும் ஒரு நீதி, பட்டியல் இனத்தில் பிறந்த எல்.முருகனுக்கும், பிற்படுத்தப்பட்ட இனத்தில் பிறந்த தமிழிசை சவுந்தரராஜனுக்கும் ஒரு நீதியா? இதுதான் பாசிச பா.ஜனதா. நிர்மலா சீதாராமனையும், ஜெய்சங்கரையும் மேட்டுக்குடிகளாக வைத்துக்கொண்டு எல்.முருகனையும், தமிழிசை சவுந்தரராஜனையும் வெயிலில் வாக்கு சேகரிக்க அனுப்பியுள்ளார்கள். இது தான் பா.ஜனதாவின் பாசிச முகம்.
நாங்கள் ஒரு கிறிஸ்துவர், ஒரு முஸ்லிமுக்கு தொகுதி ஒதுக்க முயற்சித்தோம். நாங்கள் கேட்ட தொகுதி கிடைக்காததால் முஸ்லிமுக்கு ஒதுக்க முடியவில்லை. கிறிஸ்தவருக்கு தொகுதி ஒதுக்கி உள்ளோம். ராமநாதபுரத்தில் போட்டியிடும் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடும் ஐ.யூ.எம்.எல். வேட்பாளர் எங்கள் வேட்பாளர் தான். அடுத்து வரும் சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் முஸ்லிம்களுக்கு தொகுதி ஒதுக்கப்படும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க உள்ளார்கள். விரைவில் சுற்றுப்பயண விவரத்தை வெளியிடுவோம்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- கே.எச். முனியப்பா தனது மருமகன் சிக்கபெத்தண்ணாவுக்கு டிக்கெட் வழங்குமாறு காங்கிரஸ் மேலிடத்திடம் கேட்டு வருகிறார்.
- காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் முன்னாள் எம்.பி. ஹனுமந்தய்யாவுக்கு டிக்கெட் வழங்க கோரிக்கை.
கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டமாக அடுத்த மாதம் (ஏப்ரல்) 26, மே 7-ந்தேதி நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. காங்கிரஸ் கட்சி இதுவரை 24 தொகுதிகளுக்கு வேட்பாளா்களை அறிவித்துள்ளது. கோலார், சிக்பள்ளாப்பூர், சாம்ராஜ்நகர், பல்லாரி ஆகிய 4 தொகுதிகளுக்கு இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இந்த 4 தொகுதிகளிலும் டிக்கெட் பெற பலரும் முயற்சிப்பதால் கடும் போட்டி நிலவுகிறது.
குறிப்பாக கோலாரில் உணவுத்துறை மந்திரி கே.எச். முனியப்பா தனது மருமகன் சிக்கபெத்தண்ணாவுக்கு டிக்கெட் வழங்குமாறு காங்கிரஸ் மேலிடத்திடம் கேட்டு வருகிறார். இன்னொரு புறம் அங்குள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் முன்னாள் எம்.பி. ஹனுமந்தய்யாவுக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்று பிடிவாதமாக கூறி வருகிறாா்கள். இதனால் முடிவு எடுக்க முடியாமல் கட்சி மேலிட தலைவர்கள் திணறி வருகிறார்கள்.
இதற்கிடையே மந்திரி கே.எச். முனியப்பாவின் மருமகனுக்கு கோலார் தொகுதியில் டிக்கெட் வழங்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு கோலார் மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், உயர்கல்வித்துறை மந்திரி எம்.சி.சுதாகர், நஞ்சேகவுடா, கொத்தனூர் மஞ்சுநாத், எம்.எல்.சி.க்கள் நசீர் அகமது, சுனில்குமார் ஆகிய 5 பேரும் கடும் அதிருப்தியை பகிரங்கமாகவே வெளிப்படுத்தினர்.
மேலும் பங்காருப்பேட்டை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. நாராயணசாமியும் ராஜினாமா செய்வதாக எச்சரிக்கை விடுத்தார். அவர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று காலை அறிவித்தனர்.
மங்களூருவில் உள்ள சபாநாயகர் யு.டி.காதரை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு தொலைபேசியில் பேசி அனுமதி பெற்றனர். மேலும் அவர்கள் பெங்களூருவில் இருந்து மங்களூரு செல்ல தனி விமானத்தையும் முன்பதிவு செய்தனர். இதனால் விழித்தெழுந்த கோலார் மாவட்ட பொறுப்பு மந்திரி பைரதி சுரேஷ், அதிருப்தியாளர்களை அழைத்து தனது வீட்டில் வைத்து ஆலோசனை நடத்தினார். அவர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தார். ஆனால் இந்த முயற்சி பலனளிக்கவில்லை.
அதைத்தொடர்ந்து எம்.எல்.சி.க்கள் நசீர் அகமது, சுனில் குமார் ஆகிய 2 பேரும் பெங்களூருவில் உள்ள விதான சவுதாவுக்கு (சட்டசபை) வந்து மேல்-சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டியை நேரில் சந்தித்தனர். அவர்கள் தயாராக வைத்திருந்த ராஜினாமா கடிதத்தை வழங்க முற்பட்டனர். அப்போது மந்திரி பைரதி சுரேஷ் அங்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தினார்.
அவர்களிடம் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோர் தொலைபேசியில் பேசி அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து அவர்கள் தங்களின் முடிவை தற்காலிகமாக கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதற்கிடையே சபாநாயகர் யு.டி.காதர், தானே பெங்களூருவுக்கு வருவதாகவும், நீங்கள் மங்களூரு வர வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
இதனால் எம்.எல்.ஏ.க்கள் தாங்கள் முன்பதிவு செய்த தனி விமானத்தை ரத்து செய்துவிட்டனர். இதுபற்றி கொத்தனூர் மஞ்சுநாத் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
'கோலார் தொகுதியில் தலித் சமூகத்தில் வலது சாரி பிரிவுக்கு டிக்கெட் வழங்கக்கூடாது என்று நாங்கள் கூறி வருகிறோம். எக்காரணம் கொண்டும் மந்திரி கே.எச். முனியப்பாவின் குடும்பத்திற்கு வாய்ப்பு அளிக்கவே கூடாது என்று ஏற்கனவே கூறினோம்.
ஆனால் அதையும் மீறி கட்சி அவரது குடும்பத்திற்கு டிக்கெட் வழங்க முடிவு எடுத்துள்ளதாக அறிந்தோம். வாய்மொழியாக சொன்னால் சரிப்பட்டு வராது. அதனால் நாங்கள் பதவியை ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளோம். இன்று (நேற்று) பகலில் பெங்களூரு செல்கிறோம். சபாநாயகரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதம் வழங்குவோம்'
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார், தற்போதைய உயர்கல்வித்துறை மந்திரி எம்.சி.சுதாகர் ஆகியோர், கே.எச்.முனியப்பாவின் குடும்பத்தை தவிர வேறு யாருக்கு டிக்கெட் கொடுத்தாலும் அவரை வெற்றியுடன் அழைத்து வருகிறோம் என்று கட்சி மேலிடத்திடம் கூறியுள்ளனர்.
ஒருவேளை தனது மருமகனுக்கு டிக்கெட் வழங்காவிட்டால், தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு தான் சார்ந்துள்ள இடதுசாரி பிரிவு சமூக மக்களிடம் மாநிலம் முழுவதும் பயணம் செய்து நீதி கேட்பேன் என்று கே.எச். முனியப்பாவும் காங்கிரஸ் மேலிடத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கோஷ்டி பிரச்சினையால் கோலார் தொகுதிக்கு வேட்பாளரை இறுதி செய்ய முடியாமல் காங்கிரஸ் தலைவர்கள் திணறி வருகிறார்கள். கோஷ்டி பூசலில் சிக்கி தவிக்கும் கோலார் மாவட்ட காங்கிரசாரை முதல்-மந்திரி சித்தராமையாவும், துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரும் நேரில் சந்தித்து சமாதான பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.
இந்த பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டு இன்று (வியாழக்கிழமை) மாலைக்குள் மீதமுள்ள 4 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. கோலார் தொகுதிக்கு ஏப்ரல் 26-ந்தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. ஆனால் கோலார் தொகுதியில் வேட்பாளர் தேர்வில் ஏற்பட்டுள்ள குழப்பம் காங்கிரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் கோலார் மாவட்ட காங்கிரசில் நிலவும் கோஷ்டி பூசல் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஆந்திர பிரதேசம் அல்லது தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களில் ஏதாவது ஒன்றில் இருந்து மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கினார்.
- போட்டியிடுதவற்கான பணம் இல்லை. எனக்கும் ஆந்திராவா? அல்லது தமிழ்நாடா? என்ற பிரச்சனை உள்ளது.
மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் உள்ளார். இவருக்கு தமிழ்நாடு அல்லது ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்ததாகவும், தன்னிடம் தேவையான பணம் இல்லை என்பதால் மறுத்து விட்டதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் தெரிவித்திருப்பதாவது:-
பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா ஆந்திர பிரதேசம் அல்லது தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களில் ஏதாவது ஒன்றில் இருந்து மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கினார். ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் நன்றாக சந்தித்து விட்டு, பின்னர் திரும்பிச் சென்று ஒருவேளை இல்லை என பதில் அளித்தேன். போட்டியிடுதவற்கான பணம் இல்லை. எனக்கும் ஆந்திராவா? அல்லது தமிழ்நாடா? என்ற பிரச்சனை உள்ளது.
நீங்கள் இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களா? இந்த மதத்தில் இருந்து வந்தவரா? இங்கிருந்து வந்தீர்களா? போன்ற வெற்றிக்கான அளவுகோல்களின் கேள்வியாக இருக்கும். இதையெல்லாம் செய்ய நம்மால் முடியும் என்று நான் நினைக்கவில்லை.
என்னுடைய வாதத்தை ஏற்றுக்கொண்டதற்காக நான் நன்றியுள்ளவராக உள்ளேன். ஆகவே, நான் போட்டியிடவில்லை." என்றார்.
நாட்டின் நிதியமைச்சரிடமே போட்டியிடுவதற்கான பணம் இல்லையா? என்று கேள்வி எழுந்தது.
இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன் "என்னுடைய சம்பளம், என்னுடைய சம்பாத்தியம், என்னுடைய சேமிப்பு எல்லாம் என்னுடையது. இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதி எனக்கு சொந்தம் கிடையாது" என்றார்.
- சன்னி தியோல் தொகுதி மக்கமே செல்லவில்லை என விமர்சனம் எழுந்துள்ளது.
- கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதிநிதியை நியமித்தாக கூறப்படும் அறிவிப்பை வெளியிட்டார் காங்கிரஸ் தலைவர்.
பா.ஜனதா கட்சி இமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் கங்கனா ரனாவத்தை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இத்தொகுதியின் எம்.பி.யாக அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக இருக்கும் பிரதிபா சிங் இருந்து வருகிறார். இவர் மீண்டும் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி இன்னும் இந்த தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் பிரதிபா சிங் மகனும், இமாச்சல பிரதேச மாநில மந்திரியுமான விக்ரமாத்தியா சிங், நடிகரும் எம்.பி.யுமான சன்னி தியோல் உடன் கங்கனா ரனாவத்தை ஒப்பிட்டு பேசியுள்ளார்.
சன்னி தியோல் பாராளுமன்றத்திற்கும், பாராளுமன்ற தொகுதிக்கும் செல்வதில்லை என விமர்சனம் வைக்கப்படுகிறது. சன்னி தியோல் தனது தொகுதி கூட்டத்திற்கா தனக்குப்பதிலாக தனது பிரதிநிதியை நியமித்ததாக கூறப்படும் அறிவிப்பை விக்ரமாத்தியா சிங் வெளியிட்டுள்ளார்.
இதை வெளியிட்டு விக்ரமாதித்யா "அதேபோன்ற நிலை மண்டி தொகுதிக்கும் உருவாகிவிடக் கூடாது என நான் கடவுள் ராமரிடம் வேண்டிக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் வாக்களிப்பதற்கு முன்னதாக இதை நினைத்து பார்க்க வேண்டும் என்றார்.
- மைக் சின்னத்திற்கு பதிலாக படகு, கப்பல் சின்னங்களில் ஏதாவது ஒன்றை ஒதுக்க நாம் தமிழர் கட்சி கோரிக்கை
- இறுதியாக நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் 'மைக்' சின்னம் ஒதுக்கியது
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாராளுமன்ற தேர்தலில், ஏற்கனவே தங்கள் கட்சி பயன்படுத்திய கரும்பு விவசாயி சின்னத்தை தரும்படி, தலைமை தேர்தல் ஆணையத்திடம் கேட்டார்.
ஆனால் அந்த சின்னம் கர்நாடகாவை சேர்ந்த ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து அந்த சின்னத்தை கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் ஒதுக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்து அதற்கு பதிலாக படகு, கப்பல் அல்லது தீப்பெட்டி சின்னங்களில் ஏதாவது ஒன்றை தங்கள் கட்சிக்கு வழங்கும்படி தேர்தல் ஆணையத்திடம், நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்தது.
நாம் தமிழர் கட்சியின் கோரிக்கையை, தேர்தல் கமிஷன் நிராகரித்தது. நாம் தமிழர் கட்சிக்கு ஏற்கனவே ஒதுக்கியுள்ள 'மைக்' சின்னம் தான் என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிடும் என்று சீமான் இன்று அறிவித்தார். சென்னையில் சீமான் மைக் சின்னத்தை அறிமுகப்படுத்தி பேசத் தொடங்கினார். அப்போது சீமானின் பின்னால் நின்றிருந்த ஒருவரின் செல்போன் ரிங் டோன், 'ரத்த கொதிப்பு எங்க மாமனாருக்கு ரத்த கொதிப்பு' என்ற பாடலுடன் சப்தமாக ஒலித்தது. இதனால் சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மிகவும் கோபமடைந்தனர். உடனே அந்த நபரும் அங்கிருந்து வேகமாக வெளியேறினார்.
- தமிழகத்தை பொறுத்தவரை மத்திய அரசு பாரபட்சமாக செயல்பட்டு வருகிறது.
- திருச்சியில் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
திருச்சி:
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது. அத்தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளராக துரை வைகோ களமிறங்கியுள்ளார். இதையடுத்து ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னத்தை பெற அக்கட்சி முயற்சித்தது. ஆனால் தலைமை தேர்தல் ஆணையம் ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்கவில்லை. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், பாராளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க.விற்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது. ம.தி.மு.க. 2010-ம் ஆண்டு அங்கீகாரத்தை இழந்து விட்டது. வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் இந்த வழக்கில் தீர்வு காண இயலாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், திருச்சியில் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* பம்பரம் சின்னத்தை தர முடியாது என தேர்தல் ஆணையம் கூறிவிட்டது.
* மேல்முறையீட்டுக்கு செல்லாம்... ஆனால் பிரசாரம் காரணமாக செல்லவில்லை.
* இருக்கும் சின்னங்களில் ஒன்றை தேர்வு செய்வோம்.
* சின்னம் கிடைக்காததால் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை.
* வேட்பாளர் யார், அவரின் சின்னம் என்ன என்பதை தெரிந்து கொண்டு வாக்களியுங்கள்.
* தேர்ந்தெடுக்கும் புதிய சின்னத்தை மக்களிடம் விரைவில் கொண்டு செல்வோம்.
* தமிழகத்தை பொறுத்தவரை மத்திய அரசு பாரபட்சமாக செயல்பட்டு வருகிறது.
* திருச்சியில் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
* சின்னம் குறித்து நாளை தெரியப்படுத்துவோம்.
இவ்வாறு துரை வைகோ கூறினார்.
- வேட்பு மனு தாக்கலின்போது வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே வர தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது.
- காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
இதற்காக வேட்பு மனு தாக்கல் கடந்த 20ஆம் தேதி தொடங்கி இன்று மதியம் 3 மணியுடன் முடிவடைகிறது.
இதனையடுத்து அரசியல் கட்சிகள் தங்களது சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
இதில் திருவள்ளூர் பாராளுமன்ற தனி தொகுதியில் போட்டியிடும் தேமுதிக, நாம் தமிழர் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் கடைசி நாளான இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் தெருக்கூத்து, மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த வேட்பு மனு தாக்கலின்போது வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே வர தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது.
இந்நிலையில் வேட்பாளர் உடன் முன்னாள் அமைச்சர் ஆவடி சா.முநாசர், திமுக எம்எல்ஏக்கள் வி. ஜி ராஜேந்திரன், மாதவரம் சுதர்சனம் கும்மிடிப்பூண்டி கோவிந்தராஜன், பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை சந்திரசேகர் உள்பட 5 பேர் வந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான த.பிரபுசங்கரிடம் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
பின்னர் சுதாரித்துக் கொண்ட மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி பிரபு சங்கர் தேர்தல் விதிகளை மீறி 6 பேர் இருப்பதால் ஒருவர் வெளியேற வேண்டும் என எச்சரித்தார்.
இதையடுத்து மாவட்ட காங்கிரஸ் தலைவரும் பொன்னேரி எம்எல்ஏவுமான துரை சந்திரசேகர் வேட்பு மனு தாக்கல் அறையில் இருந்து ஓட்டம் பிடித்தார்.
- மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.திமு.க. வேட்பாளர் சரவணனின் அறிமுகம் மற்றும் பிரசாரம் கூட்டம் நடைபெற்றது.
- செல்லூர் ராஜூவின் பேச்சை கேட்டு கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.
மதுரை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெறும் தேர்தலுக்காக பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் பிரசாரத்துக்கு இன்னும் 21 நாட்களே உள்ள நிலையில் தலைவர்கள் கட்சி, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.திமு.க. வேட்பாளர் சரவணனின் அறிமுகம் மற்றும் பிரசாரம் கூட்டம் செல்லூரில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, "நான் பேசும்போது யாராவது பாதியில் எழுந்து போனால் ரத்தம் கக்கி சாவீங்க" என்று கூறியதால் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.
மேலும் செல்லூர் ராஜூ கூறியதாவது:- கூட்டத்தில் பேச்சை ஆரம்பிக்க போவதால் நீண்ட நேரம் அமர்ந்து உள்ளவர்கள் எழுந்து போவது என்றால் போகலாம். இங்க இருந்தா பேசக்கூடாது. இடையில் எழுந்திருக்க கூடாது. அப்படி இருக்கிறங்க உட்காருங்கள். அப்படி இல்லன்னா ரத்தம் கக்கி செத்துருவீங்க. நான் மந்திரம் போட்டு வந்துருக்க. நான் ஆலோசனை கூட்டத்தில் பேசும்போது யாராவது எழுந்திருச்சி போனா அவங்க வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி ரத்தம் கக்கி சாவாங்க...னு சொல்லிட்டு வந்துருக்கேன் என்று பேசினார்.
செல்லூர் ராஜூவின் பேச்சை கேட்டு கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.
- எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக புகார் அளித்தவர்களுக்கும் தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் இதே பதில் அளிக்கப்பட்டு உள்ளது.
- ஜம்மு-காஷ்மீரில் ஒரு விவகாரத்தில் சின்னம் முடக்கப்பட்டுள்ளது.
சென்னை:
இரட்டை இலை சின்னம் தொடர்பாக அ.தி.மு.க. பிரமுகர் வ.புகழேந்தி தாக்கல் செய்த மனுவை டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி சச்சின் தத்தா அமர்வு கடந்த 14-ந் தேதி விசாரித்தது. அப்போது, மனுதாரர் புகழேந்தியிடம் புதிதாக ஒரு மனுவைப் பெற்று தேர்தல் ஆணைய சட்ட விதிமுறைகளின் படி அ.தி.மு.க. பிரிவுகள் குறித்து முடிவு எடுக்க தேர்தல் ஆணையத்தை அறிவுறுத்தியது.
தேர்தல் அறிவிப்பு வெளியாகி வேட்புமனு பெறும் கடைசி நாள் நெருங்குவதை முன்னிட்டு டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு புகழேந்தி வந்தார். அப்போது அவர் தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர் அந்தஸ்திலான அதிகாரியைச் சந்தித்து முறையிட்டார்.
பின்னர் இது குறித்து புகழேந்தி கூறியதாவது:-
ஜம்மு-காஷ்மீரில் ஒரு விவகாரத்தில் சின்னம் முடக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. விவகாரத்திலும் தகராறுக்குரிய கட்சி என்கிற கோப்பில் வைக்கப்பட்டுள்ளதால் அது போன்று முடி வெடுக்க வேண்டும். தற்போது முடிவெடுக்க அவகாசமில்லை என்பதால் சின்னத்தை முடக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தடையில்லை என்று தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்து உள்ளது. தேர்தல் ஆணையத்தில் உள்ள ஆவணங்களில் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று தான் உள்ளது.
எனவே அ.தி.மு.க. வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை என்று தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக புகார் அளித்தவர்களுக்கும் தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் இதே பதில் அளிக்கப்பட்டு உள்ளது.






