என் மலர்
பாராளுமன்ற தேர்தல் 2024
- வாக்குச்சாவடியின் முன்பகுதியில் வாழை மர தோரணம், இளநீர் மற்றும் பழங்கள், காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு பசுமையாக காணப்பட்டது.
- அதிகாலை முதலே ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து மரக்கன்றுகளை வாங்கிச்சென்றனர்.
காஞ்சிபுரம்:
பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் காலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 1932 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் 372 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக அடையாளம் காணப்பட்டு கூடுதல் பாதுகாப்பு செய்யப்பட்டு உள்ளது.
மாவட்டம் முழுவதும் 670 போலீசார் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் 350 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் தேர்தல் பணியில் 800 அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிபாக்கம் பகுதியில் பசுமை வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. வாக்குச்சாவடியின் முன்பகுதியில் வாழை மர தோரணம், இளநீர் மற்றும் பழங்கள், காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு பசுமையாக காணப்பட்டது.
மேலும் இந்த வாக்குச்சாவடியில் ஓட்டுப்போட்ட அனைவருக்கும் மரக்கன்று இலவசமாக வழங்கப்பட்டது. இதனால் அதிகாலை முதலே ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து மரக்கன்றுகளை வாங்கிச்சென்றனர்.
திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஆவடி, மாதவரம், பூந்தமல்லி உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் தலைமையில் 35 பறக்கும் படைகள், 22 அதிவிரைவு படைகள் அமைக்கப்பட்டு 1065 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும், 268 மத்திய பாதுகாப்பு படையினர், 90 தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், 462 முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதே போல் பொன்னேரி, ஆவடி, மாதவரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் தலைமையில் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இணையதளம் வழியாக கண்காணிக்கப்படுகிறது. பதட்டமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2825 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு காலை முதல் விறுவிறுப்பாக தொடங்கியது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திட்டங்கள், செயல்பாடுகளால் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.
- கனிமொழியின் மக்கள் பணி, செயல்பாடுகள், திறமைகள் ஆகியவை அனைத்து தரப்பு மக்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது.
உடன்குடி:
தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது மனைவி ஜெயகாந்தியுடன் சொந்த ஊரான உடன்குடி அருகே உள்ள தண்டுபத்தில் உள்ள உடன்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று காலை 7.20 மணி அளவில் வாக்கு பதிவு செய்தார்.
தொடர்ந்து அமைச்சரின் குடும்பத்தார்கள் வந்து வாக்குப்பதிவு செய்தனர். பின்பு அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திட்டங்கள், செயல்பாடுகளால் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அதுவும் தூத்துக்குடி தொகுதி எம்.பி. ஆக இருந்த கனிமொழி மீண்டும் எனது 2-வதுதாய் வீடு தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறேன் என்று சொல்லி உள்ளார்கள். அவரது மக்கள் பணி, செயல்பாடுகள், திறமைகள் ஆகியவை அனைத்து தரப்பு மக்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது.
அதனால் இந்தியாவில் உள்ள அனைத்து எம்.பி.க்களையும் விட கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி அடைந்து சாதனை படைப்பார் என்பது மட்டும் உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட சரிவுகளை சீர் செய்து விடுவோம்.
- இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் அதனை யாராலும் உடைக்க முடியாது. அது ஒரு வலிமையான கூட்டணி.
காரைக்குடி:
பாராளுமன்ற தேர்தலையொட்டி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூரில் தனது வாக்கினை பதிவு செய்ய வந்த முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்று நான் உறுதியோடு நம்புகிறேன். நட்டாவும், அமித்ஷாவும் காரைக்குடிக்கு வரவில்லை, அவர்கள் வராமல் வருகை ரத்தானதற்கு காரணம் அனைவருக்கும் தெரியும்.
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பன்முகத் தன்மை காப்பாற்றப்படும். பன்முகத்தன்மை காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகவே இந்திய கூட்டணி வெற்றி பெற வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட சரிவுகளை சீர் செய்து விடுவோம்.
இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் அதனை யாராலும் உடைக்க முடியாது. அது ஒரு வலிமையான கூட்டணி. அமலாக்கத்துறை என்பது பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி என்பது அனைவருக்கும் தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமர் ஆக வேண்டும். அதுவே இந்திய நாட்டுக்கு நன்மை பயக்கும்.
- அனைவரும் சமத்துவம், சகோதரத்துவத்துடன் வாழ தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் .
திண்டிவனம்:
திண்டிவனம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீமரகதாம்பிகை அரசு உதவி பெறும் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று காலை 8 மணிக்கு தனது வாக்கைப்பதிவு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதனால் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும். நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமர் ஆக வேண்டும். அதுவே இந்திய நாட்டுக்கு நன்மை பயக்கும். அனைவரும் சமத்துவம், சகோதரத்துவத்துடன் வாழ தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் .
பேட்டியின் போது மயிலம் தொகுதி எம்.எல்.ஏ. சிவக்குமார், பா.ம.க. விழுப்புரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் ஜெயராஜ், முன்னாள் நகர செயலர் சண்முகம், வக்கீல் பாலாஜி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- தேர்தல் அமைதியான முறையில் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது.
- குமரி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் இரவு பணப்பட்டுவாடா நடைபெற்றதாக புகார் வந்துள்ளது.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மகளிர் பள்ளியில் தனது வாக்கை இன்று காலை பதிவு செய்தார். இதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதாவிற்கு வெற்றி வாய்ப்பு உறுதியாகிவிட்டது. தமிழகம் முழுவதும் எல்லா தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெறும். நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி 400 தொகுதிகளில் வெற்றி பெறும். அதில் கன்னியாகுமரி தொகுதியும் ஒன்றாக இருக்கும்.
தேர்தல் அமைதியான முறையில் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத்தில் மதுபானங்கள் சப்ளையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் கேரளாவில் இருந்து கடல் வழியாக படகுகளில் கொண்டு வந்து மதுபாட்டில்களை சப்ளை செய்துள்ளனர். ஒரு சில இடங்களில் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சியினர் மகாத்மா காந்தி கொள்கைகளை எந்த அளவுக்கு கடைபிடிக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
குமரி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் இரவு பணப்பட்டுவாடா நடைபெற்றதாக புகார் வந்துள்ளது. வழிபாட்டு தலங்களுக்கும் பணம் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று தெளிவாக கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாங்கள் எல்லோரும் கடமையை கண்ணாக செய்து கொண்டுள்ளோம்.
- எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
திண்டிவனம்:
திண்டிவனம், ரொட்டிக்கார தெருவில் உள்ள ஸ்ரீ மரகதாம்பிகை நிதி உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தர்மபுரி தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி குடும்பத்துடன் வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மிக முக்கியமான நாள் இது. என் ஓட்டுரிமையை திண்டிவனத்தில் வாக்களித்த பின் தர்மபுரி தொகுதிக்கு செல்கிறேன். எங்கள் கூட்டணி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தேர்தல் நியாயமான முறையில் நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அவரிடம் உங்கள் உடன்பிறந்த சகோதரர் வாழ்த்து தெரிவித்தாரா? என்ற கேள்விக்கு எல்லா தொகுதிகளிலும் என் உடன்பிறந்த சகோதரர்கள்தான் போட்டியிடுகிறார்கள். நாங்கள் எல்லோரும் கடமையை கண்ணாக செய்து கொண்டுள்ளோம். மகளிர் என் மேல் அன்புடன் உள்ளனர். எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
உள்ளூர் வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளாரே என்ற கேள்விக்கு அது முன்னாள் முதல்வரின் கருத்து. நீங்கள் நேரடி அரசியலுக்கு வருவீர்கள் என்று எதிர்பார்த்தீர்களா என்ற கேள்விக்கு நான் ஏற்கனவே அரசியலில்தான் உள்ளேன். தேர்தல் களத்தில் பிரசாரமெல்லாம் செய்துள்ளேன். தேர்தல் எனக்கு புதிதல்ல என்றார்.
அப்போது சிவகுமார் எம்எல்.ஏ., மாவட்ட செயலாளர் ஜெயராஜ், முன்னாள் நகர செயலாளர் சண்முகம், வக்கீல் பாலாஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.
- அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்குப்பதிவு செய்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றிட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
எடப்பாடி:
தமிழகம் முழுவதும் இன்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அ.தி.மு.க பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரான சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.
முன்னதாக இன்று அதிகாலை தனது சொந்த கிராமத்திற்கு வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, காலை 7.10 மணி அளவில் அப்பகுதியில் உள்ள தனது பூர்வீக வீட்டிலிருந்து அவரது மனைவி ராதா, மகன் மிதுன், மருமகள் திவ்யா, பேரன் ஆதித், சகோதரர் கோவிந்தன் உள்பட குடும்பத்தினருடன் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு நடந்து சென்ற அவர் அங்கு பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

வாக்குப்பதிவிற்கு பின் நிருபர்களிடம் கூறுகையில், பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்குப்பதிவு செய்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றிட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
- ராகுல் காந்தி இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வெளியிடும் அறிக்கையில் வயநாடு அவரது குடும்பம் என குறிப்பிடுவது நமக்குத் தெரியும்.
- சிலர் வீடுகளை மாற்றுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், ஒருவர் குடும்பத்தை மாற்றிவிட்டார் என்பதை நாம் முதன்முறையாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி இந்த முறை அமேதி தொகுதியில் போட்டியிடவில்லை.
2014 தேர்தலில் அமேதியில் ராகுல் காந்தி- ஸ்மிரிதி இரானி போட்டியிட்டனர். ராகுல் காந்தி வெற்றி பெற்றார். 2019-ம் ஆண்டு இருவரும் மீண்டும் போட்டியிட்டனர். அப்போது ராகுல் காந்தி வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். அமேதி தொகுதியில் ஸ்மிரிதி இரானி வெற்றி பெற்றார்.
தற்போது ஸ்மிரிதி இரானி மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார். ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிடுகிறார்.
வயநாட்டில் வருகிற 26-ந்தேதி வாக்குப்பதி நடைபெற இருக்கிறது. அமேதியில் மே 20-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் ராகுல் காந்தி குடும்பத்தை மாற்றிவிட்டார் என ஸ்மிரிதி இரானி என விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ஸ்மிரிதி இரானி கூறியதாவது:-
ராகுல் காந்தி இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வெளியிடும் அறிக்கையில் வயநாடு அவரது குடும்பம் என குறிப்பிடுவது நமக்குத் தெரியும். சிலர் வீடுகளை மாற்றுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், ஒருவர் குடும்பத்தை மாற்றிவிட்டார் என்பதை நாம் முதன்முறையாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஏப்ரல் 26-ந்தேதிக்குப் பிறகு அவர் இங்கு வரும்போது, நம்மை மதம் மற்றும் ஜாதி அடிப்படையில் பிரிக்க முயற்சி செய்வார்.
அவர் சனாதனத்திற்கு எதிரானவர் என்பது தெரிந்த பிறகும், ராமபக்தர்கள் அவரை ராம் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு அழைத்தனர். அமேதியை பிரதிநிதித்துவப்படுத்தியவர் (எம்.பி.) ஆணவத்தால் அழைப்பை மறுத்தது வருத்தமளிக்கிறது" என்றார்.
ராகுல் காந்தியை விமர்சனம் செய்திருந்த நிலையில், அமேதி தொகுதிக்காக ஸ்மிரிதி இரானி செய்த ஐந்து பணிகளை தெரிவிக்கட்டும் என காங்கிரஸ் தலைவர் சவால் விட்டுள்ளார்.
- காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென்று பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
- இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது எனவும் இது டீப்பேக் AI தொழிற்நுட்பத்தின் கீழ் உருவாக்கியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென்று பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், "நமது சோகமான வாழ்க்கை, நமது பயம், நமது வேலையின்மை மற்றும் பணவீக்கத்தை கொண்டாடுவதுதான் மோடிஜியின் நோக்கம். ஏனென்றால், நம் இந்தியா இப்போது அநீதியின் காலத்தை நோக்கி மிகவும் வேகமாக சென்று கொண்டிருக்கிறது. எனவே நாம் நமது வளர்ச்சி மற்றும் நீதியைக் கோருவதை ஒருபோதும் நிறுத்தக்கூடாது. அதனால்தான் நாம் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்" ஏன்னு ரன்வீர் சிங் பேசுகிறார்.
இந்நிலையில் இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது எனவும் இது டீப்பேக் AI தொழிற்நுட்பத்தின் கீழ் உருவாக்கியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் பாலிவுட் பிரபல நடிகர் ரன்வீர் சிங் நடிகை க்ரிதி சனோனுடன் வாரணாசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்றிருந்தார். அதன் பின்பு அந்த ஆன்மீக அனுபவங்களை அவர் ANI செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்து கொண்டார்.
அந்த அசல் வீடியோவில், "உத்தரபிரதேசத்தின் வாரணாசி, காசி கோவிலில் தனது அனுபவம் மற்றும் அந்த நகரத்தில் பிரதமர் மோடி கொண்டு வந்த வளர்ச்சி குறித்து ரன்வீர் சிங் பேசுகிறார்.
அந்த வீடியோ தான் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு எடிட் செய்து பரப்பப்பட்டு வருகிறது.
இதற்கு முன்னதாக, அமீர் கான் கூட ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவு தருவதாக கூறும் டீப்பேக் AI வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த வீடியோ போலியானது என அமீர் கான் மும்பை காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்திருந்தார்.
பல வருடங்களுக்கு அவர் தொகுத்து வழங்கிய 'சத்யமேவ ஜெயதே' நிகழ்ச்சியில் இருந்து இந்த டீப்பேக் வீடியோ உருவாக்கப்பட்டிருந்தது.
- வாக்குப்பதிவு நாளான நாளை சாதாரண நகர சேவைகளில் இலவச பயணச்சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- தங்கள் இருப்பிடத்தில் இருந்து வாக்குச்சாவடி உள்ள இடத்திற்கு வாகன வசதி இல்லை என்றால் 1950 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
மூத்த குடிமக்கள், கண்பார்வை, உடலியக்க குறைபாடு உள்ள வாக்காளர்களுக்கு தேர்தல் நாளன்று பொது போக்குவரத்தை பயன்படுத்த இலவச பயணச்சீட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உடலியக்க குறைபாடு உள்ளவர்கள் மற்றும் பலவீனமான உடலியக்கம் உள்ள வாக்காளர்களுக்கு இலவச பயணச்சீட்டு. வாக்குப்பதிவு நாளான நாளை சாதாரண நகர சேவைகளில் இலவச பயணச்சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தங்கள் இருப்பிடத்தில் இருந்து வாக்குச்சாவடி உள்ள இடத்திற்கு வாகன வசதி இல்லை என்றால் 1950 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணை அழைத்தால் தேர்தல் ஆணையம் வாக்களிக்க வாகனங்கள் ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கேரளாவில் இந்தியா கூட்டணி 20 இடங்களில் வெற்றி பெறும் என நம்புகிறேன்.
- இந்த முறை பா.ஜனதா போட்டியிடும் இடங்களில் டெபாசிட் கூட வாங்காது என நினைக்கிறேன்.
மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கிறது. பா.ஜனதா கூட்டணி இந்த தேர்தலில் 400 இடங்கள் என்ற இலக்குடன் களம் இறங்கியுள்ளது. தனியாக 370 இடங்கள் என பா.ஜனதா இலக்கு நிர்ணயித்துள்ளது.
பா.ஜனதா இந்த இலக்கை எட்ட வேண்டுமென்றால் தென்இந்தியாவில் அதிகப்படியான இடங்களை பிடித்தாக வேண்டும். தென்இந்தியாவில் கர்நாடாகாவை தவிர மற்ற மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் பா.ஜனதா சாதித்தது கிடையாது.
இந்த முறை தமிழகம் மற்றும் கேரளாவில் கால் பதிக்க தீவிரம் காட்டி வருகிறது. இந்த இரண்டு மாநிலங்களிலும் பிரதமர் மோடி அதிக அளவில் பிரசாரம் மேற்கொண்டார். அடிக்கடி இரண்டு மாநிலங்களுக்கும் வருகை தந்து ரோடு ஷோ நடத்தியதுடன் பொதுக்கூட்டத்திலும் பேசி வாக்கு சேகரித்தார்.
இந்த நிலையில் தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தென் இந்தியாவில் (தமிழ்நாடு-39, கேரளா-20, கர்நாடகா-28, ஆந்திரா-25, தெலுங்கானா-17) உள்ள 130 இடங்களில் பா.ஜனதா எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்பதை கணித்துள்ளார்.
இது தொடர்பாக ரேவந்த் ரெட்டி கூறுகையில் "தென்இந்தியாவில் சுமார் 130 தொகுதிகள் உள்ளன. பா.ஜனதா கஷ்டப்பட்டு 12 முதல் 15 இடங்களை கைப்பற்றப் போகிறது. மற்ற அனைத்து இடங்களும் இந்தியா கூட்டணிக்கு செல்லும்.
கேரளாவில் இந்தியா கூட்டணி 20 இடங்களில் வெற்றி பெறும் என நம்புகிறேன். இந்த முறை பா.ஜனதா போட்டியிடும் இடங்களில் டெபாசிட் கூட வாங்காது என நினைக்கிறேன். தெலுங்கானாவில் இந்தியா கூட்டணி 17 இடங்களில் 14-ல் வெற்றி பெறும்.
2023 சட்டமன்ற தேர்தலின்போது சந்திரசேகர ராவ் என்ன செய்தாரோ? அதேபோன்று பா.ஜனதா தற்போது பிரசாரம் மேற்கொள்கிறது. சந்திரசேகர ராவ் 100 இடங்களில் வெற்றி பெறுவோம் என்றார். ஆனால் அவருக்கு கிடைத்தது 39 இடங்களே. அதேபோன்று தற்போது பா.ஜனதா செய்து மக்களை குழப்ப முயற்சி செய்து வருகிறது. ஆனால் வாக்காளர்கள் பா.ஜனதாவுக்கு பாடம் புகட்டுவார்கள்" என்றார்.
பா.ஜனதாவுக்கு கடந்த தேர்தலில் புதுச்சேரி, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவில் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. தெலுங்கானாவில் 4 இடங்களில் வெற்றி பெற்றது. கர்நாடகாவில் 28 இடங்களில் 25-ல் வெற்றி பெற்றது.
- வாக்காளர்கள் சொந்த ஊர் செல்ல ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
- தேர்தலை முன்னிட்டு பயணிகள் தங்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கான தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆயிரக்கணக்கான பேருந்துகளை போக்குவரத்துத்துறை இயக்கி வருகிறது.
இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக சென்னை தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை தாம்பரத்தில் இருந்து இந்த சிறப்பு ரெயில் (06007) இன்றிரவு 9.50 மணிக்கு புறப்படுகிறது. மறுமார்க்கமாக நாளை இரவு 7 மணிக்கு நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில் (06008) இயக்கப்படுகிறது.






