என் மலர்
பாராளுமன்ற தேர்தல் 2024
- பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை (19-ம் தேதி) தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது
- அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில், 2 மக்களவைத் தொகுதிகளுடன் சேர்த்து 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடைபெறுகிறது
பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை (19-ம் தேதி) தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதன்படி நாடு முழுவதும் முதல் கட்டமாக நாளை முதல் கட்ட தேர்தல் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் நடைபெறுகிறது.
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில், 2 மக்களவைத் தொகுதிகளுடன் சேர்த்து 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடைபெறுகிறது.
சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 2 ஆம் தேதியும், மக்களவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதியும் எண்ணப்படுகின்றன.
இதையொட்டி, மாநிலத்தில் 2,226 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 228 மையங்களை தோ்தல் அதிகாரிகள் நடந்து மட்டுமே சென்றடைய முடியும். அந்த அளவிற்கு தேர்தல் அதிகாரிகளுக்கு சவால் நிறைந்த பணி, அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ளது. சீன எல்லையொட்டிய அருணாச்சலப் பிரதேசம் கடுமையான நிலப்பரப்புகளைக் கொண்டது. அதிலும் 61 வாக்குப்பதிவு மையங்களுக்கு 2 நாள்களும், 7 மையங்களுக்கு 3 நாள்களும் கால் நடையாக நடந்து செல்ல வேண்டியிருக்கும்.
இந்நிலையில், அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் கஷேங் என்ற மலைக்கிராம வாக்குச்சாவடிக்கு அதிகாரிகள் சிரமப்பட்டு பயணிக்கும் வீடியோவை தேர்தல் ஆணையம் பகிர்ந்துள்ளது.
- 2021 சட்டமன்ற தேர்தலின்போது பல்வேறு மீடியாக்கள் நடத்திய கருத்துக் கணிப்புகளை மக்கள் புறந்தள்ளிவிட்டு எல்டிஎஃப் கூட்டணிக்கு வாக்களித்தார்கள்.
- தற்போதைய கணிப்புகள் பணம் கொடுத்து போடப்பட்ட செய்திகள் (paid news) போன்று இருப்பதாக மக்கள் கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர்.
கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான எல்டிஎஃப் (LDF), காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் (UDF), பா.ஜனதா ஆகியவை போட்டியிடுகின்றன. இடதுசாரி கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. பல மீடியாக்கள் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி முன்னணி வகிப்பதாக தெரிவித்துள்ளன.
இந்த கருத்துக் கணிப்புகளை அம்மாநில முதல்வர் பினராயி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பினராயி விஜயன் கூறுகையில் "நம்பகத்தன்மையின்மை அல்லது ஒருதலை பட்சம் ஆகியவற்றின் காரணமாக சில குறிப்பிட்ட செய்திகள் பணம் கொடுத்து போடப்பட்ட செய்திகள் (Paid News) என முத்திரை குத்தப்படுகின்றன. அதே அடிப்படையில் சில கணிப்புகள் பரப்பப்பட்டு வருகின்றன.
2021 சட்டமன்ற தேர்தலின்போது பல்வேறு மீடியாக்கள் நடத்திய கருத்துக் கணிப்புகளை மக்கள் புறந்தள்ளிவிட்டு எல்டிஎஃப் கூட்டணிக்கு வாக்களித்தார்கள். தற்போதைய கணிப்புகள் பணம் கொடுத்து போடப்பட்ட செய்திகள் போன்று இருப்பதாக மக்கள் கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர்.
கணக்கெடுப்பு நடத்தும் முறை, தகவல் சேகரிப்பில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை, முடிவு எப்படி கணிக்கப்படுகிறது போன்ற தகவல்களை வெளியிடாமல் தேர்தலுக்கு முந்தைய கணக்கெடுப்பு முடிவுகள் வெளியாகின்றன. அவற்றின் உண்மைத் தன்மை மக்களுக்குத் தெரியாது. சில ஏஜென்சிகளால் ஆதரிக்கப்படும் இந்த புள்ளிவிவரங்கள் மக்களை தவறாக வழிநடத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளன.
கேரள மக்கள் தங்கள் அரசியல் கருத்துகளை உருவாக்க போலியான செய்திகளையோ அல்லது போலியான கணக்கெடுப்பு அறிக்கைகளையோ நம்பியிருக்கமாட்டார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் மொத்தம் 20 மக்களவை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு வருகிற 26-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
- கடந்த தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார்.
- இந்த முறை வயநாடு தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறார்.
பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பாதுகாப்புத்துறை மந்திரியுமான ராஜ்நாத் சிங் இன்று கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் பா.ஜனதா வேட்பாளர் அனில் கே அந்தோணியை ஆதரித்து பேசினார்.
அப்போது "கடந்த முறை அமேதி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட அவருக்கு தைரியம் இல்லை. அங்கு தோல்வியடைந்ததால் உத்தர பிரதேசத்தில் இருந்து கேரளாவிற்கு குடிபெயர்ந்துள்ளார். எனினும், வயநாடு மக்கள் இந்த முறை அவரை எம்.பி. தேர்ந்தெடுக்கமாட்டோம் என முடிவு செய்துள்ளார். இதை என்னால் கேட்க முடிகிறது" என்றார்.
நேற்று ராகுல் காந்தியிடம் மீண்டும் அமேதி தொகுதியில் போட்யிடுவீர்களா? என கேட்கப்பட்டது. இதற்கு ராகுல் காந்தி கூறியதாவது:-
அமேதி தொகுதி குறித்து கட்சி முடிவு எடுக்கும். கட்சியின் எந்த உத்தரவை நான் பெற்றாலும் அதற்கு கட்டுப்படுவேன். எங்களுடைய கட்சியில் இதுபோன்ற முடிவுகள் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில்தான் எடுக்கப்படும்.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி போட்டியிட்டு வந்தார். தற்போது உடல்நலத்தை கருத்தில் கொண்டு மக்களவை தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளார். இதனால் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனால் ரேபரேலி தொகுதியில் பிரியங்காவின் கணவர் வதேரா போட்டியிட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இரண்டு தொகுதிகளிலும் காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் போட்டியிட வேண்டும் என உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளுக்கு காங்கிரஸ் இன்னும் வேட்பாளர் அறிவிக்காமல் உள்ளது.
- 2019 தேர்தல் பா.ஜனதா 25 இடங்களில் வெற்றி பெற்றது.
- தற்போது காங்கிரஸ் கர்நாடகா மாநில ஆளுங்கட்சியாக உள்ளது.
இந்தியாவின் தென் மாநிலங்களில் கடந்த 2019 தேர்தலில் பா.ஜனதா மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 25 இடங்களில் வெற்றி பெற்றது. அதன்பின் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா ஆட்சியை இழந்தது.
சட்டமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை போன்று மக்களவை தேர்தலில் வெற்றி பெற அம்மாநில முதல்வர் சித்தராமையா தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த முறை பா.ஜனதா தனித்து போட்டியிட்டது. காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இரண்டு கட்சிகளும் தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றன.
இந்த முறை மதசார்பற்ற ஜனதா தளம் பா.ஜனதா உடன் கூட்டணி வைத்துள்ளது. மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்காளர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது என சித்தராமையான தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சித்தராமையா கூறுகையில் "கர்நாடகா மாநிலத்தில் வாக்களார்களிடம் நல்ல வரவேற்று உள்ளது. ஆனால் நாட்டின் மற்ற பகுதிகளை பற்றி எனக்குத் தெரியாது. கர்நாடகா மாநிலத்தை பொருத்தவரை நாங்கள் 20 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்.
தற்போது வழங்கப்பட்டு வரும் உத்தரவாத திட்டங்கள், அடுத்த முறை ஆட்சி அமைத்தால் எந்த காரணத்திற்காகவும் நிறுத்தப்படாது. உத்தரவாத திட்டங்கள் தொடரும். அதற்காக பட்ஜெட்டில் 52 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது." என்றார்.
கர்நாடகா மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு வருகிற 26-ந்தேதியும், 2-வது கட்ட வாக்குப்பதிவு மே 7-ந்தேதியும் நடக்கிறது.
- தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது
- நாளை தேர்தல் நடைபெறவுள்ளதால், நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்தது
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண்கின்றன.
நாளை தேர்தல் நடைபெறவுள்ளதால், நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. அதன்படி புதுச்சேரியின் பாகூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவத்தில் நுழைவு வாயிலில் அலங்காரம் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இத்தகைய அலங்காரம் பாஜகவிற்கு உதவிகரமாக இருக்கும் என திமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் அதிகாரிகளிடம் புகாரளித்தனர். பின்னர் தாமரை அலங்காரங்களை தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்.
- சின்னமலையூரில் ஆண் வாக்காளர்கள் 116 பேர், பெண் வாக்காளர்கள் 109 பேர் என மொத்தம் 225 வாக்காளர்கள் உள்ளனர்.
- வாக்குப்பெட்டிகள் தாசில்தார் சுகந்தி மேற்பார்வையில் மலைக்கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதியில் 327 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் மலைப்பகுதி கிராமங்களான எல்லைப்பாறை மலை அடிவாரத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் லிங்கவாடி-மலையூர் மலை உச்சியில் உள்ளது. இங்கு வருடந்தோறும் பாதை வசதி இல்லாமல் கரடு முரடான கற்கள் நிறைந்த பாதையை கடந்து செல்ல வேண்டும். அதன்படி நாளை நடைபெறும் தேர்தலுக்காக இன்று காலை குதிரைகளில் 2 ஓட்டுப்பெட்டிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள், எழுதுபொருட்கள் அடங்கிய பெட்டிகளும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் 3 குதிரைகளில் அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் இந்த மலையூரில் ஒரே ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது. 4 தேர்தல் உதவி அலுவலர்களும், 4 காவல்துறையை சேர்ந்தவர்களும் இதற்காக சென்றுள்ளனர். இதில் ஆண் வாக்காளர் 237 பேரும், பெண் வாக்காளர்கள் 247 பேரும் மொத்தம் 484 வாக்காளர்களும் உள்ளனர். இதைபோலவே நத்தம் அருகே குட்டுப்பட்டி அருகில் கரந்தமலை மலை உச்சியில் அடிவாரத்திலிருந்து சுமார் 10கி.மீ தொலைவில் பெரிய மலையூர், சின்னமலையூர் மற்றும் வலசு ஆகிய 3 மலை கிராமங்கள் உள்ளது. இங்கு 3 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. இதில் பெரிய மலையூரில் ஆண் வாக்காளர்கள் 340 பேர், பெண் வாக்காளர்கள் 320 பேர் என மொத்தம் 660 வாக்காளர்கள் உள்ளனர்.
சின்னமலையூரில் ஆண் வாக்காளர்கள் 116 பேர், பெண் வாக்காளர்கள் 109 பேர் என மொத்தம் 225 வாக்காளர்கள் உள்ளனர். வலசையில் ஆண் வாக்காளர்கள் 181 பேர், பெண் வாக்காளர்கள் 179 பேர் என மொத்தம் 360 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு மினி பிக்-அப் வேனில் வைத்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மலை கிராமங்களுக்கு ஓட்டுப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டது. இதில் 4 காவல்துறை அதிகாரிகள், தேர்தல் உதவி அலுவலர்கள், தேர்தல் பார்வையாளர்கள், வனத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட 25 பேர் குழுவினர் 3 வாக்குச்சாவடிகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்த வாக்குப்பெட்டிகள் தாசில்தார் சுகந்தி மேற்பார்வையில் மலைக்கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் டி.எஸ்.பி. உதயகுமார், நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி உள்பட 500க்கும் மேற்பட்ட போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள்.
- வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்.
சென்னை :
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18-ஆவது பாராளுமன்ற பொதுத்தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.
மார்ச் 22-ஆம் தேதி தீரர் கோட்டமாம் திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம், ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும்.
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள், முழுமையான போர் வீரர்கள்.
இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன்.
காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும்.
அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும்.
விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
- பிழையான ஆளைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அநீதி வெளியேற ஐந்தாண்டுகள் ஆகும்.
- வாக்கு என்பது நீங்கள் செலுத்தும் அதிகாரம்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலையொட்டி கவிஞர் வைரமுத்து அவரது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
விரலில் வைத்த கருப்புமை
நகத்தைவிட்டு வெளியேறச்
சில வாரங்கள் ஆகும்
பிழையான ஆளைத்
தேர்ந்தெடுத்துவிட்டால்
அநீதி வெளியேற
ஐந்தாண்டுகள் ஆகும்
சரியான நெறியான
வேட்பாளருக்கு வாக்களியுங்கள்
வாக்கு என்பது
நீங்கள் செலுத்தும் அதிகாரம்
இவ்வாறு அவர் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து பதிவிட்டுள்ளார்.
விரலில் வைத்த கருப்புமை
— வைரமுத்து (@Vairamuthu) April 18, 2024
நகத்தைவிட்டு வெளியேறச்
சில வாரங்கள் ஆகும்
பிழையான ஆளைத்
தேர்ந்தெடுத்துவிட்டால்
அநீதி வெளியேற
ஐந்தாண்டுகள் ஆகும்
சரியான நெறியான
வேட்பாளருக்கு வாக்களியுங்கள்
வாக்கு என்பது
நீங்கள் செலுத்தும் அதிகாரம்#Elections2024
- வருமான வரித்துறை அதிகாரிகள் லிங்கராஜிடம் ரூ.2 கோடியே 85 லட்சம் பணத்துக்கு கணக்கு கேட்டுள்ளனர்.
- அடுத்த கட்ட விசாரணையை வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் நேற்று மாலை முடிவுக்கு வந்துள்ளது.
தேர்தலையொட்டி பண பட்டுவாடாவை தடுப்பதற்காக பறக்கும் படையினரும், வருமான வரித்துறை அதிகாரிகளும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
பிரசாரம் ஓய்ந்து தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையிலும் வருமான வரித்துறையினர் தங்களது சோதனையை தொடர்ந்து வருகிறார்கள். அமலாக்கத்துறை சோதனையும் நீடித்து வருகிறது.
அந்த வகையில் சென்னை பல்லாவரத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரின் வீடு மற்றும் நிறுவனத்தில் நேற்று நள்ளிரவில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை பழைய பல்லாவரம் சாலையில் வசித்து வருபவர் லிங்கராஜ். அ.தி.மு.க. பிரமுகரான இவர் அப்பகுதியில் பிரபலமான நபராக விளங்கி வருகிறார். இவர் பள்ளிக்கரணை பகுதியில் ரேடியல் சாலையில் பி.எல்.ஆர். புளூமெட்டல் என்ற பெயரில் ஜல்லி, கிரஷர் மற்றும் ரெடிமிக்ஸ் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் லிங்கராஜின் வீடு மற்றும் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். வரி ஏய்ப்பு புகாரின் பேரில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சோதனையில் லிங்கராஜின் 'ரெடிமிக்ஸ்' நிறுவனத்தில் ரூ.1 கோடி பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது. பழைய பல்லாவரத்தில் உள்ள லிங்கராஜின் வீட்டில் ரூ.1 கோடியே 85 லட்சம் பணம் இருந்தது. அதையும் வருமான வரித்துறை அதிகாரிகள் மொத்தமாக பறிமுதல் செய்தனர்.
2 இடங்களிலும் நடைபெற்ற சோதனையில் ரூ.2 கோடியே 85 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பாராளுமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் அ.தி.மு.க. பிரமுகரான லிங்கராஜின் வீடு மற்றும் நிறுவனத்தில் ரூ.2 கோடியே 85 லட்சம் பணம் பிடிபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வரி ஏய்ப்பு புகாரின் பேரிலேயே வருமான வரி சோதனை நடத்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டாலும் தேர்தல் நேரம் என்பதால் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக இவ்வளவு பணமும் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா? என்கிற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அது தொடர்பான விசாரணையும் முடுக்கி விடப்பட்டு உள்ளது.
வருமான வரித்துறை அதிகாரிகள் லிங்கராஜிடம் ரூ.2 கோடியே 85 லட்சம் பணத்துக்கு கணக்கு கேட்டுள்ளனர். தேர்தல் நேரத்தில் இந்த பணத்தை எப்படி எடுத்துச் சென்றீர்கள்? அதற்குரிய கணக்கு உள்ளதா? என்பது போன்ற கேள்விகளை கேட்டு அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் முடிவிலேயே இந்த பணத்தின் பின்னணி என்ன? என்பது தெரியவரும்.
லிங்கராஜின் வீடு மற்றும் நிறுவனத்தில் நேற்று இரவு 12.30 மணிக்கு தொடங்கிய வருமான வரி சோதனை இன்று காலை 6 மணி அளவில் நிறைவு பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்த பணத்துடன் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
சுமார் 5½ மணி நேரம் நடத்திய சோதனையில் லிங்கராஜின் நிறுவனம் மற்றும் அலுவலகத்தில் இருந்த ஆவணங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இது தொடர்பாக அடுத்த கட்ட விசாரணையை வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.
- சோதனையின் போது சில இடங்களில் இன்று புறப்பட்டு செல்லலாம் என தங்கியிருந்த வெளிமாநிலத்தவர்கள் எச்சரிக்கையுடன் வெளியேற்றப்பட்டனர்.
- தொகுதிக்கு தொடர்பில்லாமல் தங்கி இருக்கும் வெளியூர்காரர்கள் அனைவரையும் முழுமையாக வெளியேற்ற போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்ததை தொடர்ந்து தொகுதிகளுக்கு தொடர்பில்லாத வெளியூர்காரர்கள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
தேர்தல் பிரசாரத்துக்காக வெளியூர்களில் இருந்து வந்து தங்கியவர்கள் பிரசாரம் முடிவடைந்த பிறகும் லாட்ஜ்-களில் தங்கியுள்ளார்களா? என்பது பற்றி ஆய்வு செய்வதற்காக தமிழகம் முழுவதும் லாட்ஜ்-கள் மற்றும் தங்கும் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். நேற்று மாலையில் தொடங்கிய சோதனை விடிய விடிய நடைபெற்றது. இன்றும் சோதனை தொடர்கிறது. போலீசார் நடத்தும் இந்த சோதனையின் போது லாட்ஜ்-களில் தங்கியுள்ளவர்களின் முகவரி மற்றும் அவர்களது அடையாள அட்டை ஆகியவை சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
இந்த சோதனையின் போது சில இடங்களில் இன்று புறப்பட்டு செல்லலாம் என தங்கியிருந்த வெளிமாநிலத்தவர்கள் எச்சரிக்கையுடன் வெளியேற்றப்பட்டனர்.
தேர்தல் நாளில் தேவையில்லாத வெளியூர் நபர்கள் உள்ளூர்களில் தங்கி இருந்தால் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உருவாகும் என்பதை கருத்தில் கொண்டே இந்த வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னையில் எழும்பூர், திருவல்லிக்கேணி, பெரியமேடு, கோயம்பேடு உள்பட அனைத்து பகுதிகளிலுமே லாட்ஜ்-களில் போலீசார் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த சோதனை இன்று பகலிலும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இரவிலும் சோதனை நடத்தப்பட உள்ளது. இதன் மூலமாக தொகுதிக்கு தொடர்பில்லாமல் தங்கி இருக்கும் வெளியூர் நபர்கள் அனைவரையும் முழுமையாக வெளியேற்ற போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
- யார்-யார் எந்தெந்த மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்கிற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- நாளை மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெறும் நிலையில் வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் கொடுத்து ஓட்டு போட ஏற்பாடுகள் செய்யப்படும்.
சென்னை:
நமது நாட்டின் அடுத்த பிரதமர் யார்? என்பதை தேர்வு செய்வதற்கான பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது.
முதல் கட்டமாக தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் நாளை தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் மற்ற மாநிலங்களில் குறிப்பிட்ட சில தொகுதிகளில் மட்டுமே முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை தேர்தல் நடைபெறுகிறது.
தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் புதுச்சேரி தொகுதியிலும் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள் சிரமமின்றியும் கால தாமதமின்றியும் ஓட்டு போடுவதற்கு வசதியாக 68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்காளர்களின் விரலில் வைக்கப்படும் அடையாள மை உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் 80 சதவீதத்துக்கு அதிகமான வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு சேர்க்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள வாக்குச்சாவடிகளுக்கு இந்த பொருட்களை அனுப்பும் பணிகளும் இன்று முழு வீச்சில் நடைபெற்றன.
இன்று மாலைக்குள் அனைத்து மையங்களுக்கும் மின்னணு எந்திரங்களை கொண்டு சேர்ப்பதற்கான பணிகள் அனைத்தும் முடிக்கப்படுகிறது.
தேர்தல் பணியில் 3 லட்சத்து 32 ஆயிரம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். வாக்குப்பதிவு மையத்தில் ஓட்டு போட வரும் வாக்காளர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்பது பற்றி 3 கட்டங்களாக இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு தயார்படுத்தப்பட்டு உள்ளனர்.
தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவரும் நாளை அதிகாலையிலேயே பணிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மொத்தம் உள்ள 68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடிகளில் 44 ஆயிரத்து 800 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 3726 மையங்களில் 708 மையங்கள் பதற்றமானவையாகும்.
இந்த வாக்குச்சாவடிகள் அனைத்திலும் வெப் கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இந்த பதற்றமான வாக்குச்சாவடிகளை தலைமை செயலகத்தில் இருந்தபடியே அதிகாரிகள் கண்காணிக்க முடியும். அங்குள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தில் இதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 1½ லட்சம் போலீசார், 190 கம்பெனி துணை ராணுவப் படையினர், முன்னாள் ராணுவத்தினர், காவலர்கள் என 1 லட்சத்து 90 ஆயிரம் பேர் ஈடுபடுகிறார்கள். இவர்களில் யார்-யார் எந்தெந்த மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்கிற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலையில் இருந்தே வாக்குப்பதிவு மையங்கள் போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.
தற்போது கோடை வெயில் வாட்டி எடுப்பதால் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதற்கு முன்பே ஓட்டு போட்டுவிட வேண்டும் என்றே பெரும்பாலான மக்கள் விரும்புவார்கள். இதனால் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே மக்கள் ஓட்டு போட வருகை தந்து விடுவார்கள்.
இதுபோன்று முன் கூட்டியே வரும் வாக்காளர்களை வரிசையில் நிற்க வைத்து வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் இதனை கண்காணித்து வாக்காளர்களை வரிசையாக அனுப்பி வைக்க உள்ளனர்.
சக்கர நாற்காலியில் வரும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்குப்பதிவு மையம் வரை சென்று ஓட்டு போடுவதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர். ஆனால் பல மையங்களில் ஏற்பாடுகள் அரைகுறையாக செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல மையங்களில் நுழைவுவாயல்களில் உள்ள படிகளே மாற்றுத்திறனாளிகளுக்கு தடைகளாக உள்ளன.
சேத்துப்பட்டில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சாய்வு தளம் கைப்பிடிகள் இல்லாமல் காட்சி அளிக்கிறது. ஊன்றுகோலை பயன்படுத்தி வரும் வயதான முதியவர்கள் இந்த சாய்வு பாதையை பயன்படுத்துவதில் சிரமம் ஏற்படும். இதுபோன்று பல்வேறு வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் மேம்படுத்தப்படாமலேயே இருப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இதுபோன்ற குறைகளை வாக்குப்பதிவு மையங்களில் சரிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
நாளை நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிக்க டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். தேர்தல் நாளில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் தேவையான ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் போலீஸ் கமிஷனர்கள் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையில் கூடுதல் கமிஷனர்கள் பிரேமானந்த் சின்கா, அஸ்ரா கார்க் ஆகியோரது மேற்பார்வையில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதன் மூலம் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் போலீசார் இன்றே உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
நாளை மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெறும் நிலையில் வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் கொடுத்து ஓட்டு போட ஏற்பாடுகள் செய்யப்படும். வாக்குப்பதிவு முடிந்த பின்னர் மின்னணு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி ஆகிய 3 மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் 42 நாட்கள் பாதுகாக்கப்பட உள்ளன. இதன் பின்னர் ஜூன் 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
- தேர்தல் பாதுகாப்பு பணிகளில் சுமார் 2 லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
- தேர்தல் பாதுகாப்புக்காக பக்கத்து மாநிலங்களில் இருந்து 10 ஆயிரம் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
* தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
* தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள்-3 கோடியே 6 லட்சத்து 5 ஆயிரத்து 793, பெண்கள்-3 கோடியே 17 லட்சத்து 19 ஆயிரத்து 665, மூன்றாம் பாலினத்தவர்கள் 8 ஆயிரத்து 467.
* தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் மிக எளிதாக வாக்களிப்பதற்காக 68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
* தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன.
* மிக மிக பதட்டம் நிறைந்ததாக 181 வாக்குச்சாவடிகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த 181 வாக்குச்சாவடிகளிலும் துணை நிலை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.
* தேர்தல் பாதுகாப்பு பணிகளில் சுமார் 2 லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
* தேர்தல் பாதுகாப்புக்காக பக்கத்து மாநிலங்களில் இருந்து 10 ஆயிரம் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
* தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் ஆண்கள்-873 பேர், பெண்கள்-77 பேர்.
* 950 வேட்பாளர்களில் 606 பேர் சுயேட்சைகள். மற்றவர்கள் அரசியல் கட்சி வேட்பாளர்கள்.
* தமிழக வாக்காளர்களில் முதல் முறையாக நாளை வாக்களிக்க இருக்கும் இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 92 ஆயிரத்து 420.
* 20 முதல் 29 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 10 லட்சத்து 17 ஆயிரத்து 679.
* 30 வயது முதல் 39 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 29 லட்சத்து 263.
* 40 வயது முதல் 49 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 37 லட்சத்து 96 ஆயிரத்து 152.
* 50 வயது முதல் 59 வயதுக்குட்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 10 லட்சத்து 51 ஆயிரத்து 484.
* 60 வயது முதல் 69 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 71 லட்சத்து 64 ஆயிரத்து 278.
* 70 வயது முதல் 79 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 38 லட்சத்து 66 ஆயிரத்து 798.
* 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 14 லட்சத்து 44 ஆயிரத்து 851 பேர் உள்ளனர்.
* தேர்தல் பணிகளில் 3 லட்சத்து 32 ஆயிரம் அரசு ஊழியர்கள், முன்னாள் ஊழியர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
* தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு அவர்களது பணிக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்பட உள்ளது.
* தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு 95 சதவீதம் பூத் சிலிப் வழங்கி முடிக்கப்பட்டுள்ளது.
* சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய 5 நகரங்களில் வாக்களிப்பதற்காக இலவச ரபிடோ பயணத்துக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த திட்டத்துக்கு "கடமைக்கான சவாரி" என்று பெயரிடப்பட்டுள்ளது.

* நாளை ஓட்டுப்பதிவு எப்படி நடைபெறுகிறது என்பதை முழுமையாக கண்காணிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்காக 44 ஆயிரத்து 800 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. அதன் மூலம் அந்த வாக்குச்சாவடிகளின் செயல்பாடுகள் 100 சதவீதம் கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருக்கும்.
* அரசு ஊழியர்கள் இன்று மாலை 6 மணி வரை தபால் வாக்குகளை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
* வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதை பெருமளவில் தடுத்து இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. என்றாலும் விதிமுறைகளை மீறி எடுத்துச் செல்லப்பட்ட ரொக்கம், நகை பறிமுதல் செய்யப்பட்டன.
* தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் ரூ.1,297 கோடி மதிப்புள்ள நகைகள், ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன. உரிய ஆவணத்தை காட்டி இவற்றை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.






