search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பல்லாவரத்தில் அ.தி.மு.க. பிரமுகர் நிறுவனத்தில் ரூ.2.85 கோடி சிக்கியது
    X

    பல்லாவரத்தில் அ.தி.மு.க. பிரமுகர் நிறுவனத்தில் ரூ.2.85 கோடி சிக்கியது

    • வருமான வரித்துறை அதிகாரிகள் லிங்கராஜிடம் ரூ.2 கோடியே 85 லட்சம் பணத்துக்கு கணக்கு கேட்டுள்ளனர்.
    • அடுத்த கட்ட விசாரணையை வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் நேற்று மாலை முடிவுக்கு வந்துள்ளது.

    தேர்தலையொட்டி பண பட்டுவாடாவை தடுப்பதற்காக பறக்கும் படையினரும், வருமான வரித்துறை அதிகாரிகளும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

    பிரசாரம் ஓய்ந்து தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையிலும் வருமான வரித்துறையினர் தங்களது சோதனையை தொடர்ந்து வருகிறார்கள். அமலாக்கத்துறை சோதனையும் நீடித்து வருகிறது.

    அந்த வகையில் சென்னை பல்லாவரத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரின் வீடு மற்றும் நிறுவனத்தில் நேற்று நள்ளிரவில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டுள்ளனர்.

    சென்னை பழைய பல்லாவரம் சாலையில் வசித்து வருபவர் லிங்கராஜ். அ.தி.மு.க. பிரமுகரான இவர் அப்பகுதியில் பிரபலமான நபராக விளங்கி வருகிறார். இவர் பள்ளிக்கரணை பகுதியில் ரேடியல் சாலையில் பி.எல்.ஆர். புளூமெட்டல் என்ற பெயரில் ஜல்லி, கிரஷர் மற்றும் ரெடிமிக்ஸ் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

    நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் லிங்கராஜின் வீடு மற்றும் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். வரி ஏய்ப்பு புகாரின் பேரில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த சோதனையில் லிங்கராஜின் 'ரெடிமிக்ஸ்' நிறுவனத்தில் ரூ.1 கோடி பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது. பழைய பல்லாவரத்தில் உள்ள லிங்கராஜின் வீட்டில் ரூ.1 கோடியே 85 லட்சம் பணம் இருந்தது. அதையும் வருமான வரித்துறை அதிகாரிகள் மொத்தமாக பறிமுதல் செய்தனர்.

    2 இடங்களிலும் நடைபெற்ற சோதனையில் ரூ.2 கோடியே 85 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் அ.தி.மு.க. பிரமுகரான லிங்கராஜின் வீடு மற்றும் நிறுவனத்தில் ரூ.2 கோடியே 85 லட்சம் பணம் பிடிபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வரி ஏய்ப்பு புகாரின் பேரிலேயே வருமான வரி சோதனை நடத்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டாலும் தேர்தல் நேரம் என்பதால் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக இவ்வளவு பணமும் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா? என்கிற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அது தொடர்பான விசாரணையும் முடுக்கி விடப்பட்டு உள்ளது.

    வருமான வரித்துறை அதிகாரிகள் லிங்கராஜிடம் ரூ.2 கோடியே 85 லட்சம் பணத்துக்கு கணக்கு கேட்டுள்ளனர். தேர்தல் நேரத்தில் இந்த பணத்தை எப்படி எடுத்துச் சென்றீர்கள்? அதற்குரிய கணக்கு உள்ளதா? என்பது போன்ற கேள்விகளை கேட்டு அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் முடிவிலேயே இந்த பணத்தின் பின்னணி என்ன? என்பது தெரியவரும்.

    லிங்கராஜின் வீடு மற்றும் நிறுவனத்தில் நேற்று இரவு 12.30 மணிக்கு தொடங்கிய வருமான வரி சோதனை இன்று காலை 6 மணி அளவில் நிறைவு பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்த பணத்துடன் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

    சுமார் 5½ மணி நேரம் நடத்திய சோதனையில் லிங்கராஜின் நிறுவனம் மற்றும் அலுவலகத்தில் இருந்த ஆவணங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இது தொடர்பாக அடுத்த கட்ட விசாரணையை வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    Next Story
    ×