என் மலர்tooltip icon

    பாராளுமன்ற தேர்தல் 2024

    • போதமலை தரை மட்டத்திலிருந்து 7 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
    • இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து சாலை போக்குவரத்து வசதி இல்லை.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது போதமலை. தரை மட்டத்திலிருந்து 7 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு கீழூர், மேலூர், கெடமலை என மூன்று கிராமங்கள் உள்ளன. இங்கு 1500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து சாலை போக்குவரத்து வசதி இல்லை. கரடு முரடான பாதைகளில் தான் பொதுமக்கள் சென்று வந்தனர். தற்போது ரூ.140 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்குப்பதிவு எந்திரங்களை தலைச் சுமையாக தான் கொண்டு செல்வது வழக்கம். தற்போது நாளை நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலுக்காக கீழூரில் ஒரு வாக்குச்சாவடி மையமும், கெடமலையில் ஒரு வாக்குச் சுவடி மையமும் அமைக்கப்பட்டுள்ளது. கீழூர் வாக்குச்சாவடி மையத்தில் 428 ஆண் வாக்காளர்களும் 417 பெண் வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர். அதேபோல் கெடமலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் 159 ஆண்களும் 138 பெண்களும் வாக்களிக்க உள்ளனர். நாளை நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு வாக்குச்சாவடி மையங்களிலும் மொத்தம் 1142 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

    இன்று காலை மேற்கண்ட இரண்டு வாக்குச் சாவடி மையங்களுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்களை ராசிபுரம் தாலுகா அலுவலகத்தில் இருந்து ராசிபுரம் தேர்தல் அதிகாரி முத்துராமலிங்கம், தாசில்தார் சரவணன், தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.

    கீழூர் வாக்குச்சாவடி மையத்திற்கு இன்று காலை 7.30 மணியளவில் வடுகம் அருகே உள்ள மலை அடிவாரத்தில் இருந்து 3 வாக்குப்பதிவு எந்திரங்கள், விவி பேட் எந்திரம், கண்ட்ரோல் யூனிட் உள்பட 5 எந்திரங்களை மண்டல அலுவலர் விஜயகுமார், உதவி மண்டல அலுவலர் ஜெயக்குமார் வாக்குச்சாவடி மைய அதிகாரி ராஜாமணி உள்பட 4 தேர்தல் அலுவலர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், ஏட்டு ரமேஷ், ஊராட்சி செயலாளர் பரமசிவன் உள்பட 10 பேர் வாக்கு பதிவு எந்திரங்களை நடந்தே தலைச்சுமையாக பொதுமக்கள் உதவியுடன் மலைப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.

    அதேபோல் கெடமலை வாக்குச்சாவடி மையத்திற்கு புதுப்பட்டி மலை அடிவாரத்திலிருந்து 3 வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்பட 5 எந்திரங்களும் நடந்தே கொண்டு செல்லப்பட்டன. மண்டல அலுவலர் பழனிச்சாமி, உதவி மண்டல அலுவலர் சுரேஷ், வாக்குச்சாவடி மைய அதிகாரி பிரபாகரன் மற்றும் போலீசார் உள்பட 10 பேர் சென்றனர். 

    • ஆனந்த்னாக்-ரஜோரி தொகுதியில் மெஹபூபா முப்தி போட்டியிடுகிறார்.
    • குலாம் நபி ஆசாத் கட்சி முதன்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய பின், தனிக்கட்சி தொடங்கினார். அவர் ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறது. இந்த கட்சி சார்பில் குலாம் நபி ஆசாத் அனந்த்னாக்-ரஜோரி தொகுதியில் போட்டியிடுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் குலாம் நபி ஆசாத் தேர்தலில் போட்டியிடமாட்டார் என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏன் அவர் போட்டியிடவில்லை என்ற காரணத்தை தெரிவிக்கவில்லை. அவருக்குப் பதிலாக சலீம் பர்ரே போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிடிபி கட்சி தலைவர் மெஹபூபா முப்தி இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். தேசிய மாநாடு கட்சி சார்பில் மியான் அல்டாஃப் போட்டியிடுகிறார்.

    "சில விசயங்களை குலாம் நபி ஆசாத் தெரிவித்திருந்தார். அதன்பின் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்" என அக்கட்சி தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய பின் ஆசாத் கட்சி சந்திக்கும் முதல் போட்டி இதுவாகும்.

    கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக உமர் அப்துல்லா, குலாம் நபி ஆசாத் தைரியம் இருந்தால் தன்னை எதிர்த்து பாரமுல்லா தொகுதியில் போட்டியிடட்டும் பார்க்கலாம் எனத் தெரிவித்திருந்தார்.

    அதற்கு உமர் அப்துல்லாவை ஜம்மு-காஷ்மீரின் சுற்றுலா பயணி என அழைத்தார். அவர் கோடைகாலத்தை லண்டனிலும், குளிர்காலத்தை வெப்பமான இடங்களிலும் கழிக்கிறார் என விமர்சித்திருந்தார்.

    • கடந்த ஒரு மாதமாக நடந்துவந்த அரசியல் கட்சிகளின் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிந்தது.
    • அமைதியாக, நேர்மையாக தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை மறுதினம் தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட உள்ளன.

    தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே, கடந்த ஒரு மாதமாக தமிழ்நாட்டில் நடைபெற்று வந்த அரசியல் கட்சிகளின் அனல்பறந்த பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

    இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அளித்த பேட்டியில் கூறியதாவது:

    இந்த முறை வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். வாக்கு எண்ணும் நாள் வரை ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் செல்லக்கூடாது. வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் உள்ளிட்ட புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அமைதியாக, நேர்மையாக தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    • ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்படும் என ஆட்சிக்கு வந்து,
    • 10 ஆண்டுகளில் 20 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்தாரா?.

    தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மற்றும் தென்சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 22 நாட்களாக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மக்களை சந்தித்துள்ளேன். மக்களுடைய முகத்தில் தெரியும் மகிழ்ச்சி மற்றும் எழுச்சியை வைத்து 40-க்கும் 40-ஐ நாம்தான் வெல்லப் போகிறோம் என்பதை சொல்கிறேன். 40-ஐயும் நமது கூட்டணிதான் ஆளப்போகிறது.

    தமிழ்நாட்டில் மட்டும் அல்ல. வட மாநிலங்களிலும் இந்தியா கூட்டணிக்கான ஆதரவு அலை வீசிக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் பிரதமர் மோடியின் சர்வாதிகர மனப்பான்மை. மாநிலங்களை நசுக்கிற எதேச்சதிகாரம். ஒற்றுமையாக வாழுகின்ற மக்களிடையே பிளவை உருவாக்குகின்றன மதவாத பேச்சு. எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைக்கின்ற பாசிச எண்ணம்.

    ஹேமந்த் சோரன், அரவிந்த் ஜெக்ரிவாலை சிறையில் அடைத்துள்ளார். தேர்தல் களம் சமமாக இருந்தால் தோல்வி நிச்சயம் என்பதை உணர்ந்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் வங்கி கணக்குகளை முடக்கும் தீய செயல்களில் ஈடுபட்டார்.

    மக்களை பற்றி சிந்திக்காமல் கார்ப்பரேட்டர்கள் மட்டுமே முன்னேற வேண்டும் என சிந்தித்து திட்டங்களை தீட்டியதில் விலைவாசி உயர்ந்து, அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறது.

    ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்படும் என ஆட்சிக்கு வந்து, 10 ஆண்டுகளில் 20 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்தாரா?. இல்லை. கேள்வி கேட்ட இளைஞர்களை பகோடா சுடச் சொன்னவர்தான் மோடி.

    தற்போது நடுநிலை வாக்காளர்களும் பாஜக-வின் உண்மையான முகத்தை தெரிந்து கொண்டு வெறுக்க தொடங்கிவிட்டார்கள்.

    ஊழல் பத்திரம் மோடியின் க்ளீன் முகத்தை கிழித்து மோடியின் ஊழல் முகத்தை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. உடனே தனது இமேஜை காப்பாற்றிக் கொள்ள தேர்தல் பத்திரம் வந்த உடன்தான் யார்? யாருக்கு? நிதி அளித்தார்கள் என்பது தெரியவந்தது என வடை சுட ஆரம்பித்தார்.

    நாடு எத்தனையோ பிரதமரை பார்த்திருக்கிறது. இதுபோன்று வசூல் வேட்டையில் ஈடுபட்ட பிரதமரை பார்த்தது இல்லை. கொரோனாவில் கூட பிரதமர் கேர் நிதி வசூல் வேட்டை நடத்தினார். ஊழலுக்கு ஒரு யுனிவர்சிட்டி கட்டி அதற்கு ஒருவரை வேந்தராக நியமிக்க வேண்டுமென்றால் அதற்கு பொருத்தமான நபர் மோடியை விட்டால் வேறு யாரும் கிடையாது. ஊழலை சட்டப்பூர்வமாக்கிய சாதனையாளர் மோடிதான்.

    இப்போது ஊழலுக்கு உத்தரவாதம் கொடுக்கிற Made in BJP. வாஷிங் மெஷின் வைத்து ஊழல் கறை படிந்ததை சுத்தப்படித்தியிருக்கிறார்கள். இது தொடர்பாக கேள்விமேல் கேள்வி கேட்கிறார்களே. நடுநிலையாளர்கள் கேள்வி கேட்கிறார்களே என்ற எந்தவிதமான மான உணர்ச்சி இல்லாமல் திரும்ப திரும்ப அதே செயல்களில் பாஜக ஈடுபடுகிறது.

    பா.ஜனதா ஒரு மாநிலத்தில் வளர்ச்சி அடைய தேடுவது மத பிரச்சனையைத்தான். அங்கு பிரச்சனை இல்லையென்றால் எப்படி தூண்டலாம் என ரூம் போட்டு யோசிக்கின்ற கலவர கட்சிதான் பாஜக.

    பாஜனதா குறித்து பேசினால் நம்மை ஊழல் கட்சி, குடும்ப கட்சி எனக் குறை கூறுகிறார்கள். தேய்ந்து போன டேப் ரெக்கார்டு மாதிரி மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இதற்கு பதில் அளித்தே சோர்ந்து போனோம்.

    நிறையபேர் தனியாக இருந்து இரவு 12 மணிக்குக்கூட பேய் படும் பார்த்து விடுவார்கள். ஆனால் மோடி இரவு டி.வி.யில் பேசப்போகிறார் என்றால், பலரின் நெஞ்சு படபடத்துவிடும். அந்த அளவிற்கு நாட்டு மக்களை மன ரீதியான அளவிற்கு பயத்திற்கு ஆளாக்கியிருப்பவர்தான் பிரதமர் மோடி.

    திடீரென ஒருநாள் டி.வி.யில் வந்தார். 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனக் கூறினார். எந்தவிதமான திட்டமிடுதல் இல்லாமல் ஒரு திட்டத்தை கொண்டு வந்து, அதன்பின் தினந்தோறும் விதி (Rule) போட்டார். கேட்டால், கருப்பு பணத்தை ஒழிக்கிறேன் என வசனம் பேசினார். மக்களும் அதை நம்பி சொன்னதையெல்லாம் செய்தார்கள்.

    கருப்பு பணம் ஒழிந்ததா? 99 சதவீத பணம் திரும்பி வந்ததாக ரிசர்வ் வங்கி சொன்னது. முதலில் ஆதரிவித்தவர்கள் பின்னர் கடுமையாக விமர்சித்தார்கள். அதோடு விடாமல் புதிதாக அறிவித்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்தார். அந்த பணமும் 97 சதவீதம் திரும்பி வந்துள்ளது. அப்போ கருப்பு பணம் ஒழிப்பு என்ன மோடி மஸ்தான் வித்தை எதற்கு? பண மதிப்பிழப்பு நடவடிக்கைதான் ஏழை மீதான முதல் தாக்குதல்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.

    • பிரசாரம் நிறைவடைந்த பின் தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக்கூடாது
    • தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைத்தளங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்குகிறது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாகிறது.

    தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது. தேர்தலை முன்னிட்டு பாதுகாப்புப் பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னையில் மு.க.ஸ்டாலினும், சேலத்தில் எடப்பாடி பழனிசாமியும், தர்மபுரியும் அன்புமணியும், கோவையில் அண்ணாமலையும் இன்றைய நாளில் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    பிரசாரம் நிறைவடைந்த பின் தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக்கூடாது. தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைத்தளங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    தேர்தல் விதிகளை மீறினால் 2 ஆண்டு சிறை, அபராதம் விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார்.
    • தேர்தல் விதிமீறல் தொடர்பாக ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    சிவகங்கை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுதினம் நடைபெற உள்ளது. இதையடுத்து, அரசியல் கட்சியினர் இறுதிநேர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சிவகங்கை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து அவரது மனைவி ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இதற்கிடையே, இன்று மானாமதுரை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் பிரசாரம் செய்யச் சென்றார். அப்போது தேர்தல் அதிகாரிகள் அவரிடம் பிரசாரம் செய்வதற்கான அனுமதிக் கடிதம் குறித்து கேட்டனர். அப்போது ஆட்டோவில் சென்று பிரசாரம் செய்வதற்கான அனுமதி கடிதத்தைக் காட்டினார்.

    தேர்தல் அதிகாரிகள் அதனை ஏற்க மறுத்ததால் அவர்களுடன் தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் வார்டு வாரியாக சென்று பிரசாரம் மேற்கொண்டார்.

    இந்நிலையில், தேர்தல் அதிகாரி செந்தில்வேல் அளித்த புகாரின் அடிப்படையில், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம், மாவட்ட காங்கிரஸ் தலைவர் சஞ்சய் காந்தி உள்பட 60 பேர் மீது மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    • இந்தியாவின் கடன் 2014-ல் 55 லட்சம் கோடி ஆனால் பாஜக ஆட்சியில் 204 லட்சம் கோடி
    • மோடி அரசு விளம்பரங்களுக்காக 3000 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது

    மோடி தலைமையிலான பாஜகவை மக்கள் நிராகரிப்பதற்கு 100 காரணங்கள் உள்ளது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பட்டியலிட்டுள்ளார். அவை,

    1. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு

    2. அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு

    3. 8250 கோடி தேர்தல் பத்திர ஊழல்

    4. ரஃபேல் விமானங்கள் வாங்கியதில் ஊழல்

    5. 23 பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரைவார்ப்பு

    6. கார்ப்பரேட்டுகளின் கடன் 25 லட்சம் கோடி தள்ளுபடி

    7. GST வரி

    8. கருப்புப் பணம் ஒழிப்பு நாடகம்

    9. சிறுகுறு தொழில்கள் முடக்கம்

    10. IT, ED, CBI போன்ற தன்னாட்சி அமைப்புகளை எதிர்க்கட்சிகள் மீது ஏவி விட்டது

    11. CAG- 7.5 லட்சம் கோடி ஊழல்

    12. ஊழல் எதிர்ப்பு அமைப்பான லோக்பால் செயலிழப்பு

    13. PM-Cares ஊழல்

    14. விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவதில் தோல்வி

    15. இந்தியாவின் கடன் 2014-ல் 55 லட்சம் கோடி ஆனால் பாஜக ஆட்சியில் 204 லட்சம் கோடி

    16. டெல்லியில் போராடிய விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் தாக்குதல்

    17. சாமானிய மக்களின் வங்கி கணக்கில் இருந்து 35,000 கோடி அபேஸ்

    18. CAA

    19. பொய் செய்திகள் பரப்புவதில் இந்தியா முதலிடம்

    20. மோடி அரசு விளம்பரங்களுக்காக 3000 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது

    21. சண்டிகர் மாநகர மேயர் தேர்தலில் பாஜகவின் முறைகேடு

    22. அக்னிபாத் திட்டம்

    23. புல்வாமா தாக்குதல்-40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது

    24. இந்திய பாராளுமன்ற கட்டிடத்தில் வண்ண புகை குண்டுகளை கொண்டு தாக்குதல்

    25. எதிர்க்கட்சிகளின் வங்கி கணக்கு முடக்கம்

    26. ஊடகங்களின் மீதான அடக்குமுறை

    27. வேலையில்லா திண்டாட்டம்

    28. பணவீக்கம்

    29. தனிநபர் வருமானம் குறைப்பு

    30. 5-டிரில்லியன் டாலர் இலக்கு தோல்வி

    31. பட்டினி குறியீட்டில் 111-வது இடம்

    32. சாதிவாரி கணக்கெடுப்பு

    33. இந்திய எல்லையான லடாக்,அருணாச்சல பிரதேசத்தை சீனாவிற்கு தாரைவார்த்தது

    34. இந்தி/சமஸ்கிருத மொழிகளுக்கே முன்னுரிமை

    35. சுங்கச்சாவடிகளில் வசூல் வேட்டை

    36. எட்டு வயது சிறுமி ஆசிபா கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டது

    37. பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது

    38. உத்திரபிரதேசத்தில் பட்டியலின சிறுமி பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது

    39. பாஜக எம்.பி.பிரிட்ஜ் பூஷன் சிங், இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்

    40. மணிப்பூரில் பெண்கள் வீதிகளில் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு,கொலை செய்யப்பட்டது

    41. உத்திரபிரதேசம் ஹத்ராஸ் பகுதியில் பட்டியலின பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது

    42. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 33% ஆக குறைப்பு

    43. பாஜக ஆட்சியில் பட்டியலின / பழங்குடியின மக்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகள் 40% சதவீதம் உயர்வு

    44. பாஜக ஐ.டி.விங் நிர்வாகிகள் 3 பேர் 20 வயது கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தது

    45. கல்வி சுதந்திர குறியீட்டில் பின்னடைவு

    46. புதிய கல்விக் கொள்கை

    47. சிறுபான்மை மாணவர்களுக்கான ஆதரவு ஊதியத்தை ரத்து செய்தது

    48. 141 நாடாளுமன்ற எம்பிக்கள் பணியிடை நீக்கம்

    49. தமிழ்நாட்டிற்கான நிதி பங்கிட்டில் பாகுபாடு

    50. மாநில சுயாட்சியில் ஓன்றிய அரசின் தலையீடு

    51. பழங்குடியின பெண் குடியரசு தலைவரை புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா மற்றும் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அழைக்காதது

    52. நாடாளுமன்ற நிலை குழுக்களுக்கு அனுப்பப்படும் மசோதாக்கள் விகிதம் 71% இருந்து 21% ஆக குறைப்பு

    53. பெண்களுக்கான 33% சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாதது

    54. தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின்படி பாஜக ஆட்சியில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை

    55. கடந்த 10 ஆண்டுகளில் ஒரு முறை கூட மோடி பத்திரிகையாளர் சந்திப்பை எதிர்கொள்ளவில்லை

    56. மதத்தின் அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தும் பாஜக

    57. நாட்டின் வளங்களை கார்ப்பரேட்டுகள் சுரண்ட பாரத் மாலா, சாகர் மாலா, உதான் திட்டங்கள்

    58. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் முறைகேடு

    59. 5-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதில் ஊழல்

    60. ஸ்பெக்ட்ரம் ஊழல்

    61. ஸ்கில் இந்தியா மோசடி

    62. 9,000 கோடி மோசடி செய்த விஜய் மல்லையா மற்றும் 22,000 கோடி மோசடி செய்த நீரவ் மோடியை வெளிநாடுகளுக்கு தப்ப வைத்தது

    63. தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தில் ஊழல்

    64. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவு

    65. ONGC ஊழல்

    66. டெண்டர் முறைகேடு

    67. கேமன் தீவு FDI ஊழல்

    68. அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா நிறுவன ஊழல்

    69. வியாபம் ஊழல்

    70. DMAT ஊழல்

    71. போலி நாணய மோசடியில் பாஜகவினர்

    72. ஜார்க்கண்ட் நிலக்கரி ஊழல்

    73. குஜராத்தில் அதானிக்காக நில மோசடி

    74. அம்பானி, அதானி சொத்து மதிப்பு பாஜக ஆட்சியில் 80% உயர்ந்துள்ளது

    75. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு ரூ.83.2 ஆக வீழ்ச்சி

    76. மோடி அரசு ஊழல் மூலம் தனது கட்சியின் சொத்துக்களையும், ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகளின் சொத்துக்களையும் பன்மடங்கு பெருக்கி உள்ளது

    77. 2000 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்து பிறகு செல்லாது என அறிவித்தது

    78. பத்திரிக்கை சுதந்திரக் குறியீட்டில் 161 வது இடம்

    79. உலக ஊழல் குறியீட்டில் 93-வது இடம்

    80. கடந்த 10 ஆண்டுகளில் மாணவர்களின் தற்கொலை ஒரு லட்சத்திற்கும் மேல்

    81. இந்தியாவில் படித்த இளைஞர்கள் 83% பேர் வேலைவாய்ப்பின்றி உள்ளனர்

    82. வெளிநாட்டு முதலீடு உடைய நிறுவனங்கள் பாஜகவிற்கு நன்கொடை

    83. சமீபத்தில் ஜம்மு & காஷ்மீரில் மோடி ஆட்டிறைச்சி சாப்பிடும் மக்களை இழிவு படுத்தி இருக்கிறார்

    84. தேர்தல் பிரச்சாரங்களில் பிரதமர் மோடியின் பேச்சு முழுக்க முழுக்க மதத்தையும், சாதியையும் சார்ந்தே உள்ளது

    85. மோடி சொன்ன அனைவரின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் வராதது

    86. 2019-2023 வரை 35,680 MSME தொழில்கள் மூடப்பட்டுள்ளன

    87. பல ஆயிரம் கோடி ஊழல் செய்த 25 அரசியல்வாதிகள் பாஜகவில் இணைந்து தப்பித்துள்ளனர்

    88. இந்திய குடும்பங்களின் கடன் அளவு உயர்வு

    89. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி

    90. கடந்த 10 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை அடக்குமுறை அதிகரிப்பு

    91. இன்டர்நெட் இணைப்பை முடக்குவதில் இந்தியா முதலிடம்

    92. ரயில்வே வெயிட்டிங் லிஸ்ட் மூலம் 1230 கோடி வசூல்

    93. மக்கள் மத்தியில் நிலவும் ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு

    94. EVM தயாரிப்பில் பாஜகவினர்

    95. இந்தியாவில் 19.3% குழந்தைகள் 24 மணிநேர இடைவெளியில் பட்டினியால் தவிக்கின்றனர்

    96. எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அரசியல் செய்வது

    97. மணிப்பூரில் கார்கில் போருக்காக உயிர்த்தியாகம் செய்ய முன்வந்த ராணுவ வீரரின் மனைவி பொதுவெளியில் நிர்வாணமாக்கப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது

    98. இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளில் 75% பாஜக ஆளும் மாநிலங்களில் நடக்கிறது

    99. தேர்தல் பத்திர நன்கொடைக்காக கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது

    100. மோடி ஆட்சியில் வாராக்கடன் 55.5 லட்சம் கோடி

    என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஏ.சி.சண்முகம் கதிர் ஆனந்திடம் தோற்றார்.
    • பா.ஜ.க. தேர்தல் பணிகளை இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறது.

    வேலூர் :

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வேலூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் கதிர் ஆனந்த், பா.ஜ.க. சார்பில் ஏ.சி.சண்முகன், அ.தி.மு.க. சார்பில் பசுபதி, நாம் தமிழர் கட்சி சார்பில் மகேஷ் ஆனந்த் களம் காண்கிறார்கள்.

    அதிக அளவு முஸ்லிம்கள் வேலூர் தொகுதியில் வசிப்பதால், அவர்கள் வாக்கு வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. திமுகவின் வாக்கு வங்கி இங்கு அதிகம். அதனால் இந்த முறையும் அதனை சரியாக பயன்படுத்தி வெற்றி பெற்றுவிட கதிர் ஆனந்த் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறார்.

    அதே நேரம் பா.ஜ.க. தேர்தல் பணிகளை இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறது. வேலூரின் முன்னாள் எம்.பி., ஏ.சி.சண்முகம் பாஜக சார்பில் களம் காண்பதால், திமுக - பாஜக - அதிமுகவுக்கு இடையே போட்டி உள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஏ.சி.சண்முகம் கதிர் ஆனந்திடம் தோற்றார். அதனால் இந்த முறையும் கதிர் ஆனந்த் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. வேலூர் தி.மு.க. கோட்டை என்பதால் கதிர் ஆனந்த்தை வீழ்த்துவது எளிதல்ல.

    அதிமுகவும் வன்னியரான பசுபதியை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. ஆனால் கதிர் ஆனந்த் தான் பலமான வேட்பாளராக இருப்பார் என திமுக அவரை தேர்ந்தெடுத்தது. பெரிய அளவில் பரிட்சையம் இல்லாத பசுபதி என்பவரை அதிமுக வேட்பாளராக நிறுத்தியது கட்சியினருக்கே அதிர்ச்சி தான். பாஜகவில் இருந்து மக்கள் நலனுக்காக பிரிந்து விட்டோம் என்பதை மட்டுமே முன்நிறுத்தி அதிமுக நிர்வாகிகள் வாக்கு கேட்டு வருகின்றனர். இது எந்த அளவுக்கு வெற்றி வாய்ப்புக்கு கை கொடுக்கும் என்பது தெரியவில்லை.

    • நீங்கள் திமுகவிற்கு வாக்களிப்பதும், பாஜகவுக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான்.
    • அது நம் மாநிலத்தின் எதிர்காலத்தையே பாதித்துவிடும்.

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீடியோ மூலம் வெளியிட்டுள்ள செய்தியுள்ள கூறியிருப்பதாவது:-

    நீட் தேர்வு ரத்து, போதைப்பொருள் புழக்கம், காவிரி-மேகதாது விவகாரம் என அனைத்து முக்கிய பிரச்சனைகள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் விடியா முதல்வரிடம் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினேன்- பதில் சொல்ல முடியாமல் திணறினார்!

    அறிக்கை வாயிலாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் கேட்டேன்- பதில் சொல்ல முடியாமல் நழுவினார்!

    இப்போது எஜமானர்களாம் உங்களிடமே வந்தேன்- 40 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் முன்னிலையில் மேடையில் நம் கேள்விகளை உரக்கக் கேட்டேன்- பதில் சொல்ல திராணியின்றி என் மீது தனிப்பட்ட விமர்சனம்தான் வைத்தார்!

    மு.க. ஸ்டாலின் என்னைப்பற்றி கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் நான் பதில் அளித்துவிட்டேன். நான் கேட்ட ஒரு கேள்விக்காவது அவருக்கு பதில் சொல்ல தெம்பு, திராணி இருந்ததா?

    இல்லை. ஏனெனில், தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக்கொடுத்து, தமிழ்நாட்டைக் காக்கத் தவறிய, பொய் வாக்குறுதிகளால் பொதுமக்களையும், அரசு ஊழியர்களையும் ஏமாற்றிய ஒரு விடியா ஆட்சிதான் ஸ்டாலினின் ஆட்சி.

    ஒரு மக்களவை உறுப்பினரின் அடிப்படைக் கடமையான "MPLADS" நிதியைக் கூட சரிவரக் கேட்டு பெறமுடியாமல், வெறும் 25 சதவீதம் மட்டுமே செலவிட்டு, 75 சதவீத ஒதுக்கீட்டை வீணடித்த திமுக கூட்டணி எம்பிக்களுக்கு மீண்டும் வாக்களித்து என்ன பயன்?

    இவர்கள் ஒருபுறம் எனில், நம் மாநிலத்தின் உரிமைகளை கிஞ்சற்றும் மதிக்காத, நாட்டின் கூட்டாட்சியில் நமக்குரிய பங்கை அளிக்க மறுக்கும் பாரதிய ஜனதா அரசு மறுபுறம். மதத்தின் மூலம் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியே கொள்கையாக வைத்துக்கொண்டு, மாநில கட்சிகளில் பிளவுகள் ஏற்படுத்த முயன்று, அதன் மூலம் அரசியல் லாபம் தேடும் பாரதிய ஜனதாவின் எண்ணம் ஒருபோதும் தமிழ்நாட்டில், குறிப்பாக அதிமுவிடம் ஈடேறாது.

    அன்பார்ந்த தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களே- வரும் 19-ம் தேதி நீங்கள் அளிக்கப் போகும் வாக்கு மிகவும் முக்கியமானது. நீங்கள் திமுகவிற்கு வாக்களிப்பதும், பாஜகவுக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான்; அது நம் மாநிலத்தின் எதிர்காலத்தையே பாதித்துவிடும்.

    நம் மாநிலத்தின் உரிமைகளை மறுக்கும் தேசிய கட்சிகளையும், 38 எம்பிக்கள் இருந்தும் மவுனியாக இருந்து மாநில உரிமைகளை தாரைவார்த்த திமுகவையும் ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்!

    அதிமுகவின் தலைமையிலான வெற்றிக் கூட்டணியின் வேட்பாளர்கள், மக்களவையில் உங்களின் குரலாக, நம் தமிழ்நாட்டின் உரிமைக்குரலாக ஓங்கி ஒலிப்பார்கள் என்ற வாக்குறுதியை நான் உங்களுக்கு அளிக்கிறேன்.

    தந்தை பெரியார்- பேரறிஞர் அண்ணா- புரட்சித்தலைவர் எம்ஜிஆர்- புரட்சித்தலைவி அம்மா ஆகிய திராவிடப் பேரியக்கத்தின் மாபெரும் ஆளுமைகள் கட்டமைத்த வளமிக்க தமிழ்நாட்டை, சமூகநீதி-சமத்துவம்-சகோதரத்துவம் ஆகிய கொள்கை நெறிகொண்ட ஒருங்கிணைந்த வளர்ச்சிசார் பாதையில் வழிநடத்த உங்கள் பொன்னான வாக்குகளை இரட்டைஇலை சின்னத்திலும் முரசு சின்னத்திலும் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

    • தேர்தல் பணியில் 19,419 அதிகாரிகள் ஈடுபடுகிறார்கள்.
    • அனைத்து வாக்குச் சாவடிகளும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்குப் பதிவு எந்திரங்கள் கணினி முறையில் ஒவ்வொரு பகுதிகளுக்கும் பிரிக்கப்பட்டது. மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

    சென்னையில் 3 தொகுதிகளுக்கும் 11,843 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 4469 கட்டுப்பாட்டு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. நாளை காலையில் ஒவ்வொரு தொகுதிக்கும் எந்தெந்த வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குச்சாவடி வாரியாக அனுப்புவதற்கு குலுக்கல் முறையில் ஒதுக்கப்படுகிறது.

    3,726 வாக்குச் சாவடிகளுக்கும் ஜி.பி.எஸ். கருவி பொருத்திய வாகனத்தில் எந்திரங்கள், பிற உபகரணங்கள், பொருட்கள் அனுப்பப்படுகின்றன. தேர்தல் பணியில் 19,419 அதிகாரிகள் ஈடுபடுகிறார்கள்.

    அனைத்து பணிகளும் இரவு பகலாக நடந்து வருகிறது. தேர்தல் நடத்த தயார் நிலையில் இருக்கிறோம். 19-ந்தேதி வாக்களிக்க பொதுமக்கள் தயாராக வர வேண்டும், அடுக்குமாடி குடியிருப்பு மக்கள், ஏழை-எளிய மக்கள் எளிதாக ஓட்டுப்பதிவு செய்ய வழி வகை செய்யப்பட்டுள்ளது.

    காவல் துறையுடன் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டு உள்ளது. பதட்டமான 708 வாக்குச் சாவடிகளில் கூடுதலாக போலீஸ் குவிக்கப்படுகிறது. அனைத்து வாக்குச் சாவடிகளும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. 65 சதவீத வாக்குச் சாவடிகளில் வெப் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது.

    தேர்தலை சுமூகமாக நடத்த 708 நுண் பார்வையாளர்கள் பதட்டமான வாக்குச் சாவடிகளை கண்காணித்து அறிக்கை தருவார்கள். வாக்குச் சாவடி மையங்களில் பந்தல், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

    வாக்குப்பதிவு மையங்களில் கூட்டம் இருந்தாலும் காத்திருந்து பதிவு செய்யுங்கள். வாக்களிப்பில் நமது கடமை, உரிமை.

    வாக்காளர்கள் 12 வகையான அடையாள அட்டையில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தலாம். ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் பொதுமக்களுக்கு உதவ "பெசிலிட்டி பூத்" ஒன்று அமைக்கப்படுகிறது. உங்கள் பெயரை சொன்னால் போதும், எந்த பூத்தில் ஓட்டு இருக்கிறது, எங்கு ஓட்டு போடலாம் என்று விவரமாக சொல்வார்கள்.

    பூத் சிலிப் 86 சதவீதம் வீடு வீடாக கொடுக்கப்பட்டு உள்ளது. நாளை வரை கொடுப்பார்கள். நாளை மதியத்திற்கு மேல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படும். 899 செக்டார் ஜோனல் பார்ட்டி இதனை பாதுகாப்பாக கொண்டு போய் சேர்ப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 6-ந்தேதி இரவு தாம்பரம் ரெயில் நிலையத்தில் பறக்கும் படையினரால் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது
    • இந்த பணத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார்

    கடந்த 6-ந்தேதி இரவு தாம்பரம் ரெயில் நிலையத்தில் பறக்கும் படையினரால் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. நெல்லை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என தகவல் பரவியது. இது தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டல் மேலாளர் சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    விருகம்பாக்கத்தைச் சேர்ந்த முருகன், ஜெய்சங்கர், ஆசைத்தம்பி ஆகியோர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான கீழ்ப்பாக்கம் ஓட்டலில் பணத்தை வைத்து விட்டு சென்றதாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    இந்த பணத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார். இதையடுத்து, ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரத்தில் திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேரில் விசாரணைக்கு ஆஜராக தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

    இதுதொடர்பாக நெல்லை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    அதில், "தாம்பரம் ரெயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பிடிபட்டது தொடர்பாக பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத்துறையிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், அந்த மனு மீது அமலாக்கத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மேலும், வாக்களர்களுக்கு அளிப்பதற்காக பணம் பதுக்கி வைத்திருந்ததால் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென தமிழக தேர்தல் ஆணையரிடம் மனு அளித்தும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும். அவரை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இம்மானுவேல் முறையிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், நாளை விசாரிப்பதாக தெரிவித்தது.

    • விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீருவோம்.
    • மத்திய அரசின் நிதி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், எங்கள் சொந்த நிதியை பயன்படுத்தி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்.

    திருப்பரங்குன்றம்:

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று காலை அவர் திறந்த ஜீப்பில் தொகுதிக்கு உட்பட்ட திருப்பரங்குன்றத்தில் பஸ் நிலையம் முதல் சுப்பிரமணியசுவாமி கோவில் வாசல் வரை பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார்.

    அப்போது ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பிரேமலதாவுக்கு வேல் ஒன்றை பரிசாக வழங்கினார். அதனை பெற்றுக்கொண்ட பிரேமலதா திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

    முருகப்பெருமானின் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் கோவில் முன்பு எனது மகனுக்கு வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். நமது கேப்டன் தே.மு.தி.க.வை தொடங்கியதும் இங்குதான். அதே இடத்தில் இன்று உங்கள் வீட்டுப் பிள்ளை விஜயபிரபாகரனுக்கு வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். அவர் இந்த தொகுதியைச் சேர்ந்தவர், மண்ணின் மைந்தர், கேப்டனின் மகன், உங்கள் மகன். நாங்கள் குடும்பத்துடன் பிழைக்க வரவில்லை, மக்களுக்காக உழைக்க வந்திருக்கிறோம்.

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீருவோம். மத்திய அரசின் நிதி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், எங்கள் சொந்த நிதியை பயன்படுத்தி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்.

    எற்கனவே இந்த தொகுதியில் 10 ஆண்டுகளாக எம்.பி.யாக இருக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணிக்கம் தாகூருக்கு ஓய்வு கொடுங்கள், விஜயபிரபாகரனுக்கு வாய்ப்பு கொடுங்கள். உங்கள் வீட்டு பிள்ளையாக நினைத்து உங்களிடம் ஒப்படைத்து விட்டேன், அவரை மகத்தான வெற்றி பெற செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அ.தி.மு.க. சார்பில் தனக்கு பரிசாக வழங்கப்பட்ட வேலை, மகனிடம் வழங்கிய பிரேமலதா தொடர்ந்து பேசுகையில், சூரபத்மனை வதம் செய்ய சக்தியிடம் வேல் வாங்கிய முருகப்பெருமான், போரில் வெற்றி பெற்றது போல் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் மகத்தான வெற்றியை பெற இதனை தருகிறேன் என்றார்.

    ×