என் மலர்
பாராளுமன்ற தேர்தல் 2024
- இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டை காக்கின்ற ஒரு புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க 'இந்தியா' கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்
- யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட, யார் ஆட்சி தொடர்ந்துவிடக் கூடாது என்பதை முடிவெடுப்பதற்கான தேர்தல் இது
உங்களில் ஒருவனான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உரிமையோடு கேட்கிறேன். நீதியின் பக்கம் நின்று, இந்தியா கூட்டணிக்கு வரலாறு காணாத வெற்றியைத் தேடித் தாருங்கள். நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில்,
"இந்திய நாட்டின் இரண்டாவது விடுதலைப் போர் என்று அழைக்கப்படுகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளில் ஏப்ரல் 19-ஆம் நாள் நடைபெற இருக்கிறது.
ஜனநாயகத்தையும் - மக்களாட்சி மாண்புகளையும் மதிக்கின்ற, கூட்டாட்சித் தத்துவத்தைப் போற்றி இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டை காக்கின்ற ஒரு புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க 'இந்தியா' கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளப் பெருமக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். பத்தாண்டு கால இருள் சூழ்ந்த ஆட்சியை அகற்றி, புதிய இந்தியாவுக்கான விடியலுக்கு அச்சாரம் இடும் நாள்தான் - ஏப்ரல் 19.
யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட, யார் ஆட்சி தொடர்ந்துவிடக் கூடாது என்பதை முடிவெடுப்பதற்கான தேர்தல் இது. குஜராத் மாடல், வளர்ச்சியின் நாயகன் என்ற முகமூடிகளுடன் இதுவரை தேர்தல் களத்தில் மோடி நின்றார். அவரது குஜராத் மாடல் என்பது போலியானது என்பதும், வளர்ச்சியின் நாயகன் என்பது பொய்யானது என்பதும் பத்தாண்டுகளில் தெரிந்து விட்டது. மக்கள் தெளிந்து விட்டார்கள். இப்போது அனைவருக்கும் தெரிவது, 'ஊழல் மோடி' தான். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தி பல்லாயிரம் கோடி பணத்தை பாஜக குவித்திருப்பதை தேர்தல் பத்திர ஊழல் அம்பலப்படுத்திவிட்டது.
உலகத்திலேயே மிகப்பெரிய ஊழல், சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய முறைகேடு என்று வர்ணிக்கப்படுகிற தேர்தல் பத்திர ஊழல், பாரதீய ஜனதா கட்சியும் நரேந்திர மோடியும் ஊடகங்களின் துணையோடு உருவாக்கி வைத்திருந்த போலி பிம்பத்தைச் சுக்கு நூறாக்கி, முகத்திரையைக் கிழித்துவிட்டன. தேர்தல் பத்திர நடைமுறையே முறைகேடானது, சட்ட விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், ஊழல் மலிந்த தேர்தல் பத்திரத் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி நியாயப்படுத்தி பேசி வருவது, இதுவரை பாஜகவை ஆதரித்தவர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. வேறு எந்த நாட்டிலாவது இதுபோன்ற இமாலய ஊழல் அரங்கேறி இருந்தால், அந்த நாட்டின் பிரதமர் பதவி விலகி இருப்பார்.
தனது சுயநல அரசியலுக்காக ஒட்டுமொத்த இந்தியாவையும் மோடி நாசப்படுத்தி விட்டார். கருப்புப் பணத்தை மீட்பது, ஊழலற்ற ஆட்சியைத் தருவது, வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, தொழில் வளர்ச்சியை பெருக்குவது, வறுமையை ஒழித்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, சமூகநீதித் திட்டங்களைச் செயல்படுத்தி சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவது, பாதுகாப்பை உறுதிசெய்து மகளிர் வாழ்வை மேம்படுத்துவது என்ற எல்லா தளங்களிலும் படுதோல்வியை மோடியின் அரசு சந்தித்து இருக்கிறது.
வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டம் கோடிக்கணக்கான இளைஞர்களின் கனவுகளைச் சிதைத்து விட்டது. விஷம் போல் ஏறிய விலைவாசி உயர்வு ஏழை மக்களின் வாழ்க்கையைப் பாழ்படுத்திவிட்டது. பெட்ரோல், டீசல், சுங்கக் கட்டணக் கொள்ளை நடுத்தர மக்களை வதைத்துவிட்டது. இரக்கமற்ற ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு சிறு, குறு தொழில்களை சிதைத்துவிட்டது. மதச்சார்பின்மையைக் குழிதோண்டிப் புதைத்து, எப்போதும் மதப் பகையை வளர்க்கும் வெறுப்புப் பேச்சின் மூலம் சமுதாயத்தில் பதற்றத்தை ஏற்படுத்திக் குளிர்காய நினைக்கிறார்கள்.
அண்ணல் அம்பேத்கர் இயற்றி அளித்த அரசியலமைப்புச் சட்டம், மிகப்பெரிய நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள், மாநிலங்களின் முதலமைச்சர் பதவியில் இருந்தாலும் கைது செய்து சிறையில் அடைக்கும் கொடுமையும், ஆளுநர்களை வைத்துப் போட்டி அரசாங்கம் நடத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த விடாமல் முடக்கும் அநியாயம், மாநிலங்களுக்கு வரி மற்றும் நிதிப் பகிர்வில் பாரபட்சம் அரங்கேறாத நாளே இல்லை. இதுவரை இந்தியத் திருநாடு சந்திக்காத அளவு மாநில உரிமைப் பறிப்பு நடவடிக்கைகள் மோடி அரசால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்தன. சுதந்திர இந்தியாவில், பெட்ரோல் – டீசல் மீது மிக அதிகமான வரியை செஸ், சர்சார்ஜ் என்ற பெயரில் வசூலித்து, மாநிலங்களுக்குப் பகிர்ந்து தராமல், மக்களிடம் சுரண்டி மாநிலங்களையும் வஞ்சித்த மோசமான ஆட்சி, மோடியின் ஆட்சி!
வெள்ள நிவாரணம், வறட்சி நிவாரணம், சட்ட மசோதாக்களுக்கு அனுமதி, அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது, துணைவேந்தர்களை நியமனம் செய்வது போன்ற அன்றாட, இயல்பான நிர்வாக நடைமுறைகளுக்குக்கூட உச்ச நீதிமன்றத்தை நாடுவதற்கு மாநிலங்களுக்கு நிர்பந்தம் தருகிற கொடுங்கோல் ஆட்சியாக, மோடி தலைமையிலான ஆட்சி இருப்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். மாநிலங்களின் வயிற்றில் அடிப்பது, மாநில உரிமைகளை நசுக்குவதைப் பெருமையான செயல் என்று கருதிக்கொள்கிற அளவு அதிகார மமதையில் ஆட்டம் போடும் ஆட்சியாளர்களுக்குத் தக்க பாடம் புகட்டுவதற்கான தேர்தல் இது.
இந்தியா போன்ற மகத்தான, மாபெரும் ஜனநாயக நாட்டின் பிரதமராக, தனது கடமையில் நரேந்திர மோடி தோற்றுவிட்டார். எனவே, அவர் அந்த நாற்காலியில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அதை நாடு தாங்காது. நாடாளுமன்ற ஜனநாயகத் தேர்தல் முறையே இல்லாமல் போய்விடும், சர்வாதிகார அதிபர் ஆட்சி முறை கொண்ட நாடாக ஆர்எஸ்எஸ் – பாஜக ஆட்சியாளர்கள் இந்தியா மாற்றிவிடுவார்கள். இன்னொரு வாய்ப்புக் கிடைத்தால் இந்த நாட்டில் ஜனநாயகத்தை ஒழித்துக்கட்டி, மாநிலங்களின் எல்லைக் கோடுகளை மாற்றி, ஒற்றையாட்சி நாடாக மாற்றிவிடுவார்கள் என்ற அச்சம் நாடு முழுவதும் மக்கள் மனங்களில் இருக்கிறது. இந்தியாவைப் பாதுகாக்க மோடி ஆட்சி அகற்றப்பட வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு, தமிழர்களின் வளர்ச்சிக்கு மோடி அரசு தீட்டிய ஒரேயொரு சிறப்புத் திட்டத்தையாவது கூறுங்கள் என்று கடந்த ஒரு மாத காலமாகப் பரப்புரைக் கூட்டங்களில் ஒன்றிய அரசை நோக்கிக் கேள்வி எழுப்பி வந்தேன். தேசியப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒரு பைசா கூட தராமல் தமிழ்நாட்டை வஞ்சிப்பது நியாயமா என்றும் கேட்டு வந்தேன். ஆனால், அதற்கு எந்த நேர்மையான பதிலையும் பிரதமர் மோடியோ, அவரது அமைச்சரவை சகாக்களோ கூறவில்லை. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் மோடியும் பாஜகவும் எதிரிகள் என்பது இதில் இருந்தே உறுதியாகிவிட்டது. தமிழ்நாட்டில் அமைய இருந்த மாபெரும் முதலீட்டை, மிரட்டி குஜராத்துக்கு மடை மாற்றியவர்கள், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு முன்னேறுவதை அனுமதிக்கவே மாட்டார்கள். தமிழ்நாட்டின் வளமான எதிர்காலத்துக்கும், மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரவே கூடாது.
இவர்கள் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கத்தில் அடிமை பழனிசாமியின் கட்சியானது பாஜக போட்டுத் தந்த திட்டப்படி கள்ளக் கூட்டணி அமைத்து தனியாக நிற்கிறது. தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக, பாழ்படுத்திய அதிமுக ஆகிய இரண்டு கூட்டணியையும் புறக்கணிக்குமாறு தமிழ்நாட்டு மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் ஒருவரை ஒருவர் எதிர்ப்பது போல நாடகமாகிக் கொண்டிருந்தாலும், தேர்தலுக்குப் பிறகு கைகோத்து விடுவார்கள். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியை விமர்சிக்காதது மட்டுமல்ல, தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க-வுக்குத் தேவையென்றால் நேரடியாக ஆதரிப்பார்கள்.
2019-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் வலுவான கூட்டணியை அமைத்தது திராவிட முன்னேற்றக் கழகம். அன்று முதல் நடந்த அனைத்து தேர்தல்களிலும் தொடர் வெற்றிகளைக் குவித்த சிறப்பும் பெருமையும் திமுக கூட்டணிக்கு உண்டு.
திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான 'இந்தியா' கூட்டணியில் அகில இந்திய காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. நண்பர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யமும் நம் அணியில் இணைந்துள்ளது. திராவிடர் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் பேரவை உள்பட பல்வேறு கட்சிகள், அமைப்புகள், சமுதாய இயக்கங்கள் நமது அணிக்கு ஆதரவைத் தெரிவித்து உள்ளன. இந்தத் தொண்டர்களின் சலிக்காத உழைப்பைத் தமிழ்நாடு முழுவதும் நான் பார்த்தேன். அவர்களது முகங்களில் தெரிந்த நம்பிக்கை, என்னை மேலும் மேலும் உற்சாகம் அடைய வைத்துள்ளது.
தேர்தலுக்கு முன்னதாக நான் வெளியிட்ட அறிக்கையில், '' புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 40 தொகுதிகளிலும் யார் வேட்பாளர், எந்தச் சின்னம் என்பதை மறந்து விட்டு , 'வேட்பாளர் மு.க.ஸ்டாலின்' என்பதை மனதில் வைத்து அனைவரும் பணியாற்ற வேண்டும். அனைத்துத் தொகுதியிலும் நானே போட்டியிடுகிறேன் என்பதை உள்ளத்தில் தாங்கி அனைத்து உடன்பிறப்புகளும் பணியாற்ற வேண்டும்" என்று உரிமையோடு நான் கேட்டுக் கொண்டேன். அந்தச் சொல்லுக்கு கட்டுப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்து உடன்பிறப்புகளும் தேர்தல் பணியாற்றி வரும் காட்சியை நான் பார்த்தேன். 'இவர்களைத் தொண்டர்களாகப் பெற என்ன தவம் செய்துவிட்டேன்' என்ற பெருமித உணர்வை நான் அடைகிறேன்.
இதே ஆர்வமும் சுறுசுறுப்பும் தேர்தல் முடியும் வரை இருந்தாக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பொதுமக்களை வாக்குச்சாவடிக்கு வர விழிப்புணர்வு ஏற்படுத்துவது முதல், வாக்குப் பெட்டிகள் உரிய பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவது வரையிலும் கண்துஞ்சாது கண்காணிக்க வேண்டும் என்று கழக உடன்பிறப்புகளைக் கேட்டுக் கொள்கிறேன். உங்களது உழைப்பின் பயன்தான் இந்தியாவையும் தமிழ்நாட்டையும் காக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.
தமிழ்நாட்டில் தனக்கு பிடித்த ஊர்ப் பெயர்களில் ஒன்று 'எப்போதும் வென்றான்' என்று தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவார்கள். திராவிட முன்னேற்றக் கழகமும் எப்போதும், எல்லாத் தேர்தல்களிலும் வென்றான் என்பதை மெய்ப்பிக்கும் தேர்தல் இது.
ஊடகங்களின் கருத்துக் கணிப்புகளைக் கண்டு நம் கவனம் துளியும் சிதறிவிடக்கூடாது. அவற்றைக் கடந்த காலங்களிலும் நாம் பொருட்படுத்தியது இல்லை. கடைசி வாக்கு பதிவாகி, வெற்றிக் கனி நம் கைகளில் வந்து சேரும் வரை, கண் துஞ்சாது – பசி நோக்காது – கருமமே கண்ணாயினர் என நாம் கவனத்தோடும் உற்சாகம் குன்றாமலும் உழைத்திட வேண்டுகிறேன். கருத்துக்கணிப்புகளை எல்லாம் விஞ்சுகிற, நாடே தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்க்கிற வெற்றியாக நம் வெற்றி இருக்க வேண்டும்.
தேர்தல் விதிகளை முறையாகப் பின்பற்றி, வாக்காளப் பெருமக்கள் ஒவ்வொரையும் மீண்டும் தேடிச் சென்று சந்தித்து, அவர்களிடம் மோடி ஆட்சியில் நாடு எதிர்கொண்டுள்ள ஆபத்துகளை விளக்கிச் சொல்லி, திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்ற மகத்தான மக்கள் நலத்திட்டங்களையும் சாதனைகளையும் எடுத்துரைத்து, நம் அணியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.
இரண்டு முறை இருண்ட காலத்தைக் காட்டிய பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். இந்தியா கூட்டணியின் வெற்றியில்தான் இந்திய நாட்டின் சிறப்பான எதிர்காலமும் தமிழ்நாட்டின் முன்னேற்றமும் இருக்கிறது. திமுக தேர்தல் அறிக்கையும், அதை வழிமொழிந்தும் வலு சேர்த்தும் காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையும் திட்டங்களாக மாற வேண்டும்.
தமிழ்நாட்டின் வாக்காளப் பெருமக்களுக்கு பணிவான வேண்டுகோளை கரம் கூப்பி முன்வைக்கிறேன். இந்தியா என்றென்றும் மதச்சார்பின்மையும் கூட்டாட்சியும் சகோதரத்துவமும் கொண்ட நாடாகத் திகழ, தமிழ்நாட்டின் தனித்தன்மையை நிலைநாட்டுவதற்கு நம் முன் உள்ள ஒரே வாய்ப்பும் ஆயுதமும் உங்கள் வாக்குதான். உங்கள் பொன்னான வாக்குகள், இந்தியாவைக் காக்கட்டும், சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டை மீட்கட்டும். தமிழ்நாட்டின் தனித்தன்மையை உறுதி செய்யட்டும்.
தமிழ்நாட்டின் மக்கள் நலத் திட்டங்கள் தொய்வின்றித் தொடர, எங்கும் எதிலும் தமிழ்நாடு முன்னோடி என்ற பெருமை நிலைத்திட, தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்கு மதிப்பளிக்கிற அரசு டெல்லியில் அமைந்தாக வேண்டும். நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு, ஒன்றியத்தில் ஆட்சி மாற்றமே ஒன்றே தீர்வு. தமிழ்நாட்டின் பகைவர்களை, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் எதிரிகளை வீழ்த்துவோம்.
ஜனநாயகத்தைக் காக்கும் போர்க்களத்தில், நீதியின் பக்கம் நின்று, இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வரலாறு காணாத வெற்றியைத் தமிழ்நாட்டு மக்கள் தேடித் தர வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் எழுதியுள்ளார்.
- கடந்த முறை ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
- தற்போது அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி கடந்த வருடம் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். காந்தி குடும்பத்திற்கு பாரம்பரியமான அமேதி தொகுதியிலும், கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். அமேதி தொகுதியில் ஸ்மிரிதி இரானியிடம் தோல்வி கண்டார். வயநாட்டில் வெற்றி பெற்றார்.
இந்த முறை வயநாடு தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறார். வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். வருகிற 26-ந்தேதி வயநாடு தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதிக்கு மே 20-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த தொகுதிக்கான வேட்பாளரை காங்கிரஸ் கட்சி இன்னும் அறிவிக்காமல் உள்ளது.
இந்த நிலையில் ராகுல் காந்தியிடம் மீண்டும் அமேதி தொகுதியில் போட்யிடுவீர்களா? என கேட்கப்பட்டது. இதற்கு ராகுல் காந்தி கூறியதாவது:-
அமேதி தொகுதி குறித்து கட்சி முடிவு எடுக்கும். கட்சியின் எந்த உத்தரவை நான் பெற்றாலும் அதற்கு கட்டுப்படுவேன். எங்களுடைய கட்சியில் இதுபோன்ற முடிவுகள் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில்தான் எடுக்கப்படும்.
ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி போட்டியிட்டு வந்தார். தற்போது உடல்நலத்தை கருத்தில் கொண்டு மக்களவை தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளார். இதனால் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனால் ரேபரேலி தொகுதியில் பிரியங்காவின் கணவர் வதேரா போட்டியிட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இரண்டு தொகுதிகளிலும் காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் போட்டியிட வேண்டும் என உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
உத்தர பிரதேசம் மாநிலத்தில் மொத்தம் 80 தொகுதிகள் உள்ளன. காங்கிரஸ் கட்சி சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. காங்கிரஸ் 17 இடங்களில் போட்டியிடுகிறது.
உத்தர பிரதேச மாநிலத்தில் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது, வருகிற வெள்ளிக்கிழமை (நாளைமறுதினம்) முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
- தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை.
- வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை.
சென்னை:
நாளை மறுநாள் வாக்களிப்பதற்கு வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டால் 12 ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம். அந்த 12 ஆவணங்கள் விவரம் வருமாறு:-
* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை,
* புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகங்கள்,
* தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை,
* வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை,
* தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை,
* புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்,
* மத்திய, மாநில அரசுகள்/பொதுத்துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்,
* பாராளுமன்ற/சட்டமன்ற/சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை,
* இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட இயலாமைக்கான தனித்துவமான அடையாள அட்டை உள்ளிட்ட 12ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம்.
- இந்தியா கூட்டணி கட்சிகளின் வாக்குறுதிகள் சமூக நல்லிணக்கத்தையும், சமூக நீதியையும் காப்பாற்றும் என்கிற நம்பிக்கை அளிக்கின்றன
- மாநில உரிமை, மொழி உரிமை, கருத்து உரிமை, கல்வி உரிமை போன்ற அடிப்படை உரிமைகளை மீட்டெடுப்பதும், காத்துக் கொள்வதும் அவசியம்.
மக்களவைத் தேர்தலில் 'இந்தியா' கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில்,
"வாக்குரிமை என்பது என் உரிமைகளைக் காத்து, உணர்வுகளைப் புரிந்து ஆட்சி செய்கிற ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் சமூகக் கடமை.
வருங்கால தலைமுறையினருக்கு வெறுப்பு நிலவாத, சக இந்தியர்களின் தனித்துவத்தை மதிக்கிற பாதுகாப்பான சூழலை அமைத்து தருவது நமது தார்மீக கடமை.
இந்தியா கூட்டணி கட்சிகளின் வாக்குறுதிகள் சமூக நல்லிணக்கத்தையும், சமூக நீதியையும் காப்பாற்றும் என்கிற நம்பிக்கை அளிக்கின்றன
மாநில உரிமை, மொழி உரிமை, கருத்து உரிமை, கல்வி உரிமை போன்ற அடிப்படை உரிமைகளை மீட்டெடுப்பதும், காத்துக் கொள்வதும் அவசியம். அதன் அடிப்படையில் தி.மு.க, காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளடக்கிய இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி நானறிந்த, என்னை அறிந்த அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, இந்தியா கூட்டணிக்கே எனது ஆதரவு என 'அயலான்' பட இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்திருந்தார்.
திண்டுக்கல் மற்றும் மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களான சச்சிதானந்தம், சு.வெங்கடேசன் ஆகியோரின் படங்களைப் பதிவிட்டு இந்தியா கூட்டணிக்கே எனது ஆதரவு என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
- கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன.
- தி.மு.க. ஆட்சியிலும் பல முறை புகார் எழுப்பியும் யாரும் கண்டு கொள்ளவில்லை.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நல்லூர் சாலையில் டிரெண்ட் சிட்டி என்ற தனியார் லே அவுட்பகுதி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்த நிலையில், கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன.
கடந்த ஆட்சியிலும், தற்போதைய தி.மு.க. ஆட்சியிலும் பல முறை புகார் எழுப்பியும் யாரும் கண்டு கொள்ளவில்லை என இப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
எனவே எங்கள் பகுதியில் சாலை வசதி செய்து தர யாரும் முன்வராததால், பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து நோ ரோட், நோ வோட் " என்ற வாசகத்துடன் வீடுகள், கடைகள் என பகுதி முழுவதும் நோட்டீஸ் ஒட்டி எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
- குமரன் நகரில் தி.மு.க.வினர் பணம் கொடுப்பதாக புகார் எழுந்தது.
- தி.மு.க.வினர் போலீஸ் நிலையம் வந்து முற்றுகையிட்டனர்.
கோத்தகிரி:
நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோத்தகிரி அரவேணு பகுதியில் உள்ள சக்கத்தா கிராமத்தில் தி.மு.க.வினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக பா.ஜ.க. மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் பறக்கும் படை அதிகாரி ராஜலட்சுமி, கோத்தகிரி இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு நின்ற கோத்தகிரி ஒன்றிய தி.மு.க. செயலாளர் நெல்லை கண்ணனின் காரை தனிப்படை போலீசார் சோதனையிட்டனர். அப்போது ரூ.8 லட்சத்து 500 பணம் காரில் இருந்தது. அந்த பணத்தை போலீசார் கைப்பற்றினர்.
அந்த பணம் ஓட்டுக்காக கொடுக்க வைக்கப்பட்டிருந்ததா அல்லது என்ன நோக்கத்திற்காக காரில் வைக்கப்பட்டிருந்தது என்பது பற்றி விசாரணை நடக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஒப்படைக்க தனிப்படை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதேபோல நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட அன்னூர் குமரன் நகரில் தி.மு.க.வினர் பணம் கொடுப்பதாக புகார் எழுந்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று இருந்தனர்.
அங்கு பணத்துடன் நின்ற தி.மு.க.வைச் சேர்ந்த நபரை பறக்கும் படை அதிகாரிகள் கையும், களவுமாக பிடித்து அன்னூர் போலீஸ்நிலையம் கொண்டு வந்தனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த ஏராளமான தி.மு.க.வினர் போலீஸ் நிலையம் வந்து முற்றுகையிட்டனர். பிடிபட்ட நபர் பணம் எதுவும் கொடுக்கவில்லை எனவும், அவரை விடுவிக்க வேண்டும் எனவும் கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- வாக்குச் சாவடிக்கு வர இயலாத 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கும் தபால் வாக்கு வசதி வழங்கப்பட்டுள்ளது.
- திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மட்டுமே 3,369 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன.
சென்னை:
தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் வருகிற வெள்ளிக்கிழமை பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல் துறையினருக்கும் அவர்கள் பயிற்சி பெறும் மையங்களிலேயே தபால் வாக்கு செலுத்த வசதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் இ.டி.சி. எனப்படும் மின்னணு வாக்கு செலுத்தும் வசதியும் வழங்கப்பட்டது.
இது தவிர வாக்குச் சாவடிக்கு வர இயலாத 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கும் தபால் வாக்கு வசதி வழங்கப்பட்டுள்ளது. தபால் வாக்கு செலுத்த விருப்பம் உள்ளவர்களுக்கு வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் கடந்த மாதம் 25-ந்தேதி வரை '12-டி' படிவத்தை வீடு வீடாக வழங்கினர். பின்னர் அந்த படிவங்கள் பூர்த்தி செய்து பெறப்பட்டது. முதியோர், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கடந்த 8-ந்தேதி முதலும், போலீசாரிடம் கடந்த 11-ந்தேதி முதல் 137 பேர் வரையிலும் தபால் வாக்கு பெறும் பணி நடந்தது.
திருச்சி கலை அரங்கம் திருமண மண்டபத்தில் தபால் ஓட்டுகளுக்கான ஒருங்கிணைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணியிலிருந்து மாநிலம் முழுவதும் இருந்து கொண்டு வரப்படும் தபால் ஓட்டுகள் பிரிக்கப்பட்டு தொகுதி வாரியாக வழங்கப்பட்டது.
39 தொகுதிகளில் மொத்தமாக 8,400 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மட்டுமே 3,369 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன.
திருச்சியில் வைக்கப்பட்டு தபால் வாக்கு பெட்டிகளை தேர்தல் அலுவலர் நேரில் பார்வையிட்டார்.
- முகவர்கள் வாக்குப் பதிவை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.
- வாக்குப் பதிவு நாளன்று வாக்காளப் பெருமக்கள் அனைவரும் அன்று காலை 7 மணி முதலே வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்குமாறு செய்திடல் வேண்டும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பாராளுமன்ற தேர்தலையொட்டி, ''தமிழர் உரிமை மீட்போம்; தமிழ்நாடு காப்போம்'', "ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம்" என்ற தாரக மந்திரத்தை குறிக்கோளாகக் கொண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டேன்.
எனது இந்த சுற்றுப் பயணத்தின்போது, மக்களைப் பாதுகாக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான் என்பதை நிரூபிக்கின்ற வகையில் கோடானு கோடி மக்கள் திரண்டிருந்து, எங்கள் வாக்கு இரட்டை இலைக்கே, முரசு சின்னத்திற்கே என விண்ணதிர முழக்கமிட்டது, இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
கழக உடன்பிறப்புகளும், தோழமைக் கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்களும், வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் வாக்குச்சாவடிக்கு வரும் பொதுமக்களிடம் பண்போடும், பாசத்தோடும் கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கக் கோர வேண்டும். மேலும், நம் முகவர்கள் வாக்குப் பதிவை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.
வாக்குப் பதிவு நாளன்று வாக்காளப் பெருமக்கள் அனைவரும் அன்று காலை 7 மணி முதலே வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்குமாறு செய்திடல் வேண்டும். வாக்குப்பதிவு நிறைவுபெற்று அதனை சீலிட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டுசென்று சேர்க்கும் வரையிலும் மிகவும் கவனமாகவும், விழிப்புடனும் இருந்திடல் வேண்டும்.
எனதருமை வாக்காளப் பெருமக்களே,
அ.தி.மு.க.சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரின் வெற்றிச் சின்னமாம் ''இரட்டை இலை'' சின்னத்திலும்; தே.மு.க.வின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ''முரசு'' சின்னத்திலும்; விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளருக்கு ''இரட்டை இலை'' சின்னத்திலும், உங்களது பொன்னான வாக்குகளை அளித்து, வேட்பாளர்கள் அனைவரையும் மகத்தான வெற்றி பெறச் செய்து, புதிய வரலாற்றுச் சாதனையை படைத்திட வேண்டும் என்று, வாக்காளப் பெருமக்களாகிய உங்கள் அனைவரையும் இருகரம் கூப்பி மிகுந்த பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அனைத்து மக்களிடமும் சகஜமாக பழகக் கூடியவன் நான். மக்கள் என்னை ஆதரிப்பார்கள்.
- சுயேட்சைகள் வெற்றி பெற முடியாது என சொல்கிறார்கள்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலையொட்டி வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார்.
தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வரும் மன்சூர் அலிகான் இன்று கடைசிநாள் பிரசாரத்துக்கிடையே அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-
ஆள்பலம், பணபலம் இல்லாமல் தேர்தலில் நான் வேலூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறேன். 1980-ல் பள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜனாப் அப்துல்சமது சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றார்.
அதே பள்ளப்பட்டி தான் எனக்கு சொந்த ஊர். அங்கு தான் நான் படித்து வளர்ந்தேன். மக்கள் எனக்கு மிகுந்த ஆதரவினை கொடுத்து வருகிறார்கள். எனவே நான் சுமார் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றி பெறுவேன். பாரதிய ஜனதாவிடம் பணம் வாங்கி கொண்டு வாக்குகளை பிரிப்பதற்காக தேர்தலில் நிற்கிறேன் என வதந்தி பரப்புகிறார்கள்.
ஆரம்பத்தில் இருந்தே பிரதமர் மோடியை விமர்சித்து வருகிறேன். சுயேட்சைகள் வெற்றி பெற முடியாது என சொல்கிறார்கள். பல பேர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று மந்திரியாக உள்ளனர். அனைத்து மக்களிடமும் சகஜமாக பழகக் கூடியவன் நான். மக்கள் என்னை ஆதரிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.
- துணை ராணுவ படையினர், ஓய்வுபெற்ற ராணுவத்தினர், காவல் துறையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
சென்னை:
தமிழகம் மற்றும் புதுவையில் பாராளுமன்ற தேர்தல் நாளை மறுநாள் (19-ந்தேதி) நடைபெறுகிறது. அமைதியான முறையில் தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகளை முழுவீச்சில் செய்துள்ள நிலையில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள். தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைவதை தொடர்ந்து தொகுதிகளில் தங்கியுள்ள வெளி மாவட்டத்தினர் அனைவரும் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் மீறி வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களுக்கு தொடர்பில்லாத தொகுதிகளில் தங்கியிருந்தால் அவர்களை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இது தொடர்பாக இன்று மாலை 6 மணிக்கு பிறகு லாட்ஜூகள் மற்றும் தங்கும் விடுதிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இதற்கான பணிகளை போலீசார் மேற்கொள்கிறார்கள்.
நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் 1 லட்சத்து 90 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தமிழகம் முழுவதும் 1½ லட்சம் காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் இருந்தும் 10 ஆயிரம் போலீசார் இன்று வருகை தருகிறார்கள். இவர்களும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இவர்களை தவிர துணை ராணுவ படையினர், ஓய்வுபெற்ற ராணுவத்தினர், காவல் துறையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இப்படி ஒட்டுமொத்தமாகவே 1 லட்சத்து 90 ஆயிரம் பேர் தேர்தல் பாதுகாப்பு பணிகளை கவனிக்க உள்ளனர்.
தேர்தல் பாதுகாப்புக்காக 200 கம்பெனி துணை ராணுவ படையினரை அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்கப்பட்டிருந்தது. இதில் 190 கம்பெனி துணை ராணுவ படையினர் ஏற்கனவே வந்துவிட்டனர். இவர்கள் அனைவரும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவ படையினர் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மீதமுள்ள 10 கம்பெனி துணை ராணுவ படையினரையும் அனுப்பி வைக்க வேண்டும் என்று மாநில போலீஸ் சார்பில் 2 நாட்களுக்கு முன்பு கோரிக்கை விடுக்கப்பட்டது. அவர்களும் இன்று வருகை தருகிறார்கள்.
தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 611 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்பது தெரிய வந்துள்ளது.
மதுரையில் 511 சாவடிகளும், இதற்கு அடுத்தபடியாக தேனியில் 381 வாக்கு சாவடிகளும் பதற்றமானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற சாவடிகள் அனைத்திலும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினருடன் கூடுதல் போலீசாரும் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகிறார்கள்.
பதற்றமான சாவடிகள் மற்றும் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படும் இடங்களில் இன்று மாலையில் துணை ராணுவ படையினர் மற்றும் கொடி அணிவகுப்பு நடத்தப்படுகிறது. வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டுப்போடுவதை உறுதி செய்வதற்காகவே இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்படுகிறது.
இன்று மாலையுடன் பிரசாரம் ஓயும் நிலையில் நாளை யாரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபடக்கூடாது என்பதால் அதனை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்றும், நாளையும் சந்தேக நபர்கள் மற்றும் ரவுடிகளை பிடிக்கவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.
இதற்காக வாகன சோதனை மற்றும் லாட்ஜூகளில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. முன்எச்சரிக்கையாக மாநிலம் முழுவதும் 21 ஆயிரம் ரவுடிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். தேர்தல் நாளில் பிரச்சனைகள் ஏற்படாத வகையில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
- நானா, நானி என்ற முதியோர் இல்லத்திற்கு சென்றார்.
- பாராளுமன்ற தேர்தல் பரப்புரை காரணமாக உங்களை சந்திக்க முடியாமல் போய்விட்டது.
பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை கஸ்தூரிநாயக்கன்பாளையத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அங்குள்ள நானா, நானி என்ற முதியோர் இல்லத்திற்கு சென்றார். அவர்கள் அவருக்கு மாலை அணிவித்து, பூரண கும்ப மரியாதையும் அளித்தனர். அதனை தொடர்ந்து அவர்கள் மத்தியில் அண்ணாமலை பேசியதாவது:-
நான் இங்கு உங்களிடம் வாக்கு சேகரிப்பதற்காக வரவில்லை. உங்களை சந்திக்க வேண்டும் என்பதற்காக வந்துள்ளேன். கடந்த ஒரு வருடகாலமாகவே உங்களை சந்திக்க வேண்டும். உங்களுடன் நேரத்தை செலவிட வேண்டும் என பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தேன்.
இருப்பினும் என் மண், என் மக்கள் யாத்திரை, பாராளுமன்ற தேர்தல் பரப்புரை காரணமாக உங்களை சந்திக்க முடியாமல் போய்விட்டது. இறுதிகட்ட பிரசாரமான நாளை எங்கும் செல்லக்கூடாது. உங்களை சந்திக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதன்படி உங்களை பார்ப்பதற்காகவே இன்று வந்துள்ளேன். உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். மற்றொரு நாளில் உங்களை வந்து கட்டாயமாக சந்திக்கிறேன் என்றார்.
இந்த வார்த்தையை பேசியபோது, அண்ணாமலை திடீரென கண் கலங்கி விட்டார். இதனை பார்த்த முதியோர்கள் அவரை ஆறுதல் படுத்தினர். ஜெய்ஸ்ரீராம் என கோஷம் எழுப்பி அவருக்கு ஆறுதல் கூறி உற்சாகப்படுத்தினர்.
- மூன்றாண்டு கால தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் விளையவில்லை.
- தி.மு.க. அரசின் சாதனை என்று சொல்லிக் கொள்வதற்கு ஒன்று கூட இல்லை.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தான் மத்தியில் மீண்டும் அமைய வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் விருப்பம் ஆகும். இந்தியா முழுவதும் வீசும் அதே மோடி ஆதரவு அலை தான் தமிழ்நாட்டிலும் வீசுகிறது. தமிழகத்தின் பெரும் பான்மையான பகுதிகளுக்கு பரப்புரை சென்று வந்ததன் மூலம் மோடி ஆதரவு அலையை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில் 90 விழுக்காடு தமிழ்நாட்டு மக்கள் தங்களின் வாக்கு யாருக்கு? என்பதை முடிவு செய்து விட்டார்கள்.
கடந்த பத்தாண்டுகளில் 2014-ம் ஆண்டில் தமிழ் நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க.வைச் சேர்ந்த 37 உறுப்பினர்களும், 2019-ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. அணியைச் சேர்ந்த 38 உறுப்பினர்களும் சமூக நீதிக்காகவோ, தமிழக நலன்களுக்காகவோ குரல் கொடுக்கவில்லை.
பா.ம.க. போட்டியிடும் 10 இடங்களிலும் வெற்றி பெற்றால் தான் தமிழகத்தின் குரல் பாராளுமன்றத்தில் வலிமையாக ஒலிக்கும்; உரிமைகள் கிடைக்கும்.

மூன்றாண்டு கால தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் விளையவில்லை. மாறாக, மின்கட்டணம் உயர்வு, சொத்துவரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு, மோட்டார் வாகன வரி உயர்வு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, 10 முறை பால் விலை உயர்வு ஆகியவை தான் வாக்களித்த மக்களுக்கு தி.மு.க. அரசு அளித்த பரிசு ஆகும். தி.மு.க. அரசின் சாதனை என்று சொல்லிக் கொள்வதற்கு ஒன்று கூட இல்லை. வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை என்பதில் இருந்தே மக்களை தி.மு.க. அரசு மதிக்கவில்லை என்பது தெளிவாகிறது. மக்களை மதிக்காத தி.மு.க.வுக்கு மக்கள் அளிக்க வேண்டிய சரியான தண்டனை தோல்வி தான். அதை தி.மு.க.வுக்கு நீங்கள் அளிக்க வேண்டும்.
தமிழக வாக்காளர்களுக்கு ஒரே தேர்தலில் இரு இலக்குகளை சாதிக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளன. மத்தியில் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான நல்லாட்சியை மீண்டும் ஏற்படுத்துவது, தமிழ் நாட்டில் மக்களை வாட்டும் தி.மு.க. அரசை தண்டிப்பது ஆகியவை தான் அந்த இரு இலக்குகள். இந்த இலக்குகளை சாதிக்க நாளை மறுநாள் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் பா.ம.க., பாஜக மற்றும் அவற்றின் கூட்டணிக் கட்சிகளுக்கு மாம்பழம், தாமரை, சைக்கிள், குக்கர், பலாப்பழம் ஆகிய சின்னங்களில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்; அதன்மூலம் தமிழ்நாட்டை தீமைகளில் இருந்து மீட்டெடுக்கவும், தமிழ்நாட்டின் உரிமைகளைவென்றெடுக்கவும் வகை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






