search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாங்கள் பிழைக்க வரவில்லை; மக்களுக்காக உழைக்க வந்திருக்கிறோம்- மகனுக்கு வேல் பரிசு வழங்கி பிரேமலதா பிரசாரம்
    X

    நாங்கள் பிழைக்க வரவில்லை; மக்களுக்காக உழைக்க வந்திருக்கிறோம்- மகனுக்கு வேல் பரிசு வழங்கி பிரேமலதா பிரசாரம்

    • விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீருவோம்.
    • மத்திய அரசின் நிதி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், எங்கள் சொந்த நிதியை பயன்படுத்தி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்.

    திருப்பரங்குன்றம்:

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று காலை அவர் திறந்த ஜீப்பில் தொகுதிக்கு உட்பட்ட திருப்பரங்குன்றத்தில் பஸ் நிலையம் முதல் சுப்பிரமணியசுவாமி கோவில் வாசல் வரை பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார்.

    அப்போது ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பிரேமலதாவுக்கு வேல் ஒன்றை பரிசாக வழங்கினார். அதனை பெற்றுக்கொண்ட பிரேமலதா திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

    முருகப்பெருமானின் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் கோவில் முன்பு எனது மகனுக்கு வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். நமது கேப்டன் தே.மு.தி.க.வை தொடங்கியதும் இங்குதான். அதே இடத்தில் இன்று உங்கள் வீட்டுப் பிள்ளை விஜயபிரபாகரனுக்கு வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். அவர் இந்த தொகுதியைச் சேர்ந்தவர், மண்ணின் மைந்தர், கேப்டனின் மகன், உங்கள் மகன். நாங்கள் குடும்பத்துடன் பிழைக்க வரவில்லை, மக்களுக்காக உழைக்க வந்திருக்கிறோம்.

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீருவோம். மத்திய அரசின் நிதி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், எங்கள் சொந்த நிதியை பயன்படுத்தி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்.

    எற்கனவே இந்த தொகுதியில் 10 ஆண்டுகளாக எம்.பி.யாக இருக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணிக்கம் தாகூருக்கு ஓய்வு கொடுங்கள், விஜயபிரபாகரனுக்கு வாய்ப்பு கொடுங்கள். உங்கள் வீட்டு பிள்ளையாக நினைத்து உங்களிடம் ஒப்படைத்து விட்டேன், அவரை மகத்தான வெற்றி பெற செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அ.தி.மு.க. சார்பில் தனக்கு பரிசாக வழங்கப்பட்ட வேலை, மகனிடம் வழங்கிய பிரேமலதா தொடர்ந்து பேசுகையில், சூரபத்மனை வதம் செய்ய சக்தியிடம் வேல் வாங்கிய முருகப்பெருமான், போரில் வெற்றி பெற்றது போல் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் மகத்தான வெற்றியை பெற இதனை தருகிறேன் என்றார்.

    Next Story
    ×