என் மலர்
பாராளுமன்ற தேர்தல் 2024
- இந்தியர்கள் அனைவரும் தவறாது வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி சுதந்திரத்தை காப்பாற்ற வேண்டும்.
- இந்தியா கூட்டணி மக்கள் பலமுள்ள கூட்டணி.
புதுச்சேரி:
முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று காலை மிஷன் வீதியில் உள்ள பசுமை வாக்குச்சாவடியான வ.உ.சி. அரசு பள்ளி மையத்தில் தனது வாக்கை செலுத்தினார்.
சுமார் ½ மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் நின்று தனது மகளுடன் அவர் வாக்கை செலுத்தினார். இதனை தொடர்ந்து நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியர்கள் அனைவரும் தவறாது வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி சுதந்திரத்தை காப்பாற்ற வேண்டும். இந்த தேர்தல் பணநாயகத்திற்கும், மக்கள் சக்திக்கும் இடையில் நடைபெறும் தேர்தல். மோடியின் பணபலமும், ராகுல் காந்தியின் மக்கள் சக்தியும் களத்தில் இருக்கின்றன. எப்போதும் மக்கள் சக்திதான் வெற்றி பெறும் என்பது அனைவருக்கும் தெரியும்.
பிரதமர் மோடி தனது தேர்தல் வாக்குறுதிகளாக அனைவருக்கும் வேலைவாய்ப்பு, நாட்டின் அமைதி, பொதுசொத்தை பாதுகாப்பது, எல்லை பாதுகாப்பு போன்ற வாக்குறுதிகளை கொடுத்தார். 10 ஆண்டுகளாக அவர் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அதை பற்றி பேசுவதும் இல்லை.
காங்கிரஸ் கட்சியை வசைப்பாடி, வாரிசு அரசியல் என பேசி வாக்கு சேகரித்தார். மோடியின் ஆட்சி ஒட்டுமொத்த ஊழல் ஆட்சி, வருமான வரித்துறை வழக்கு போன்ற வழக்குகளில் உள்ளவர்கள் தேர்தல் பத்திரங்களை கொடுத்துள்ளனர். முதலமைச்சர் ரங்கசாமி 3 ஆண்டுகளில் எந்த சாதனையையும் செய்யவில்லை. புதுவையில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. கஞ்சா போதை பொருட்கள் அதிகரித்துள்ளன.
தேர்தல் அறிக்கையில் கூறிய எதனையும் அவர் நிறைவேற்றவில்லை. வேட்பாளர் நமச்சிவாயம் அவரது துறையில் எதையும் செய்யவில்லை. வெளிநாட்டிலேயே அவர் இருக்கிறார். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
மின்சார துறையை தனியாருக்கு தாரைவார்த்து கொடுத்துள்ளார். சொத்து குவித்து வைத்துள்ளார். பா.ஜனதா பணத்தை வாரி இறைத்து வருகிறது. இந்தியா கூட்டணி மக்கள் பலமுள்ள கூட்டணி. புதுவை மக்கள் பணத்திற்கு அடிபணியமாட்டார்கள்
இவ்வாறு அவர் கூறினார்.
- அண்ணாமலை தனது சொந்த ஊரில் வாக்கு செலுத்தி விட்டு கோவை நோக்கி சென்றார்.
- வாக்களிப்பதற்காக நின்று கொண்டிருந்த முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
பல்லடம்:
கோவை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்லடம் சட்டமன்ற தொகுதியில் இன்று 417 வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது சொந்த ஊரில் வாக்கு செலுத்தி விட்டு கோவை நோக்கி சென்றார்.
அப்போது கோவை தொகுதிக்கு உட்பட்ட பல்லடம் பகுதியில் உள்ள அவினாசிபாளையம், மாதப்பூர், பனப்பாளையம், கொசவம்பாளையம், காரணம்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள பூத்களில் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் வாக்களிப்பதற்காக நின்று கொண்டிருந்த முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். வாக்குச்சாவடிகளில் எத்தனை வாக்காளர்கள் உள்ளார்கள்? வாக்குப்பதிவு மையங்கள் முறையாக இயங்குகிறதா என வாக்குச்சாவடி முகவர்களிடம் கேட்டறிந்தார்.
- அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
- அதிகாரிகளிடம் கேட்டால் முறையாக பதில் தெரிவிக்காமல் அலைக்கழிப்பதாக கூறினார்.
சென்னை:
பாராளுமன்ற மக்களவை தேர்தலானது ஏழு கட்டமாக நடைபெறுகிறது. இதில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். அதே போல் அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
இந்நிலையில், சர்கார் பட பாணியை தழுவும் சம்பவம் சென்னை சூளைமேட்டில் நடைபெற்றுள்ளது.
சென்னையை சேர்ந்த பால்ராஜ் (67) என்பவர் பணி நிமித்தமாக லண்டனில் உள்ளார். இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக லண்டனில் இருந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் செலவு செய்து சென்னை வந்துள்ளார்.
இதையடுத்து இன்று வாக்களிக்க சென்ற போது அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் முறையாக பதில் தெரிவிக்காமல் அலைக்கழிப்பதாக கூறினார்.
- ஒருபுறம் இந்திய நாட்டு மக்கள், இன்னொரு புறம் நாட்டுக்கு எதிரான சங்பரிவார் கும்பல்.
- நாடு முழுவதும் இந்திய கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
செந்துறை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தனது சொந்த கிராமமான அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள அங்கனூர் அரசு நடுநிலைப் பள்ளியில் தனது தாயாருடன் வரிசையில் நின்று வாக்கினை பதிவு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த பொது தேர்தல் 2 கட்சிகளுக்கும் இடையே நடக்கும் அதிகார போட்டி அல்ல. ஒருபுறம் இந்திய நாட்டு மக்கள், இன்னொரு புறம் நாட்டுக்கு எதிரான சங்பரிவார் கும்பல்.
சங்பரிவாருக்கும் நாட்டு மக்களுக்கும் இடையே நடக்கிற ஒரு தர்மயுத்தம் இந்த பொது தேர்தல். இதில் நாட்டு மக்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மக்களின் பக்கம் இந்தியா கூட்டணி இருக்கிறோம்.
இந்தியா கூட்டணிக்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வாக்களியுங்கள் என்று நாட்டு மக்களுக்கு அழைப்புகள் விடுத்துள்ளோம். அரசியலமைப்பு சட்டத்தை ஒரு பொருட்டாக மதிக்காமல் ஜனநாயக விளிம்பியங்களை சிதைக்க துடிக்கிற சங்க பரிவார் கும்பல் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது.
ஜனநாயகத்தையும் அரசியலப்பு சட்டத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற பெரும் கவலையோடு இந்தியா கூட்டணி களத்தில் நிற்கிறது. நாடு முழுவதும் இந்திய கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி 40க்கு 40 இடங்களில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
கூட்டணி பலம், இன்னொரு புறம் திமுக அரசின் மூன்றாண்டு கால நலத்திட்டங்கள், மூன்றாவதாக இந்தியா கூட்டணி முன்வைக்கக்கூடிய நாட்டு பாதுகாப்பு ஜனநாயக பாதுகாப்பு என்கிற கருத்தியல் பலம் ஆக இந்த 3 பலங்களுடன் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
எனவே பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 இடங்களிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். இந்த தேசத்தை காப்பதற்கான தீர்ப்பை தமிழகத்திலிருந்து எழுத தொடங்குகிறோம் என்பதை அறிவிப்பதற்கான நாள்தான் இன்றைய வாக்குப்பதிவு நாள்.
தமிழக மக்கள் தி.மு.க. கூட்டணியின் பக்கம் இருக்கிறார்கள். எனவே ஜனநாயகம் பாதுகாக்கப்படும். அரசியல் அமைப்பு சட்டம் பாதுகாக்கப்படும். டெல்லியில் பாசிச பா.ஜ.க. அரசு தூக்கி எறியப்படும். இந்திய கூட்டணியின் ஆட்சி மலரும் என்ற நம்பிக்கை உள்ளது.
தேர்தல் ஆணையம் நேர்மையோடு செயல்பட வேண்டும். தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியான பாஜக அரசுக்கு சாதகமாக செயல்படுவதாக அனைத்து தரப்பு மக்களாலும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. அந்த ஆட்சியே தொடரும் என்ற எண்ணத்தில் அவர்கள் அவ்வாறு செயல்படலாம்.
அது தவறு. தேர்தல் ஆணையம் இந்த நாளிலிருந்து நடுநிலைமையோடு ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும். ஒரு சார்பு இல்லாமல் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் 20 பேர் களத்தில் உள்ளனர். அவர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 வாக்காளர்கள் உள்ள நிலையில் 10.92 லட்சம் முதல் முறை வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
- முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
சென்னை:
தமிழகம், புதுவை உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு முதல்கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
வாக்குப்பதிவு தொடங்கிய காலை முதல் பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 24.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி தொகுதியில் 26. 58 சதவீதமும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 20.09 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 வாக்காளர்கள் உள்ள நிலையில் 10.92 லட்சம் முதல் முறை வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
முதல் முறை வாக்களிக்கும் கல்லூரி மாணவிகள் கூறுகையில், வாக்களிப்பதை சரியாக செய்ய வேண்டும் என்ற ஆவலும், பதற்றமும் உள்ளது. கொஞ்சம் பயமாகவும் இருக்கும். வாக்களிக்கும் முறை சொல்லி இருக்காங்க. முதல்முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் வாக்களிப்பதை ஸ்கிப் செய்யக்கூடாது. சில சமயங்களில் முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்களால் கூட முடிவு மாறலாம். இது நம்மளோட உரிமை என்றனர்.
இதனிடையே முதல்முறை வாக்களிப்பதற்காக சிங்கப்பூரில் இருந்து வந்த மாணவி, வாக்களிப்பது கடமை, கட்டாயம். முதல் முறையாக வாக்களித்து புது அனுபவமாக இருந்தது. முதலில் என்ன செய்வது என்று தெரியவில்லை. பிறகு அங்கு இருந்தவர்கள் வழிகாட்டினார்கள் என்றார்.
- அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் 5 கிராம மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- உரத் தொழிற்சாலை மூடப்படும் வரை தேர்தலை புறக்கணிக்க போவதாக மக்கள் தெரிவித்ததால் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி-காரியாபட்டி சாலையில் உள்ள கே.சென்னம்பட்டி கிராமத்தில் கேரளாவைச் சேர்ந்த தனியார் உரத்தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் கோழி இறைச்சிக் கழிவுகள், மருத்துவக்கழிவுகளை சுத்திகரித்து உரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த உர தொழிற்சாலையால் கே.சென்னம்பட்டி, குராயூர், ஓடைப்பட்டி, மேலப்பட்டி, பேய்குளம் உள்ளிட்ட ஐந்து கிராமங்களில் ஆலையிலிருந்து வெளியேறும் புகையால் சுற்று வட்டார பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் இதனால் குழந்தைகள், வயதானவர்கள் மூச்சுத் திணறலால் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது.
மேலும் இந்த ஆலையால் 5 கிராமங்களில் மண்வளம், நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளதாகவும், இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இந்த பகுதி வறண்ட பூமியாக மாறிவிடும் என்று கூறி சம்பந்தப்பட்ட உர ஆலையை மூட வேண்டும் என வலியுறுத்தி ஏற்கனவே கிராமத்தினர் மனு அளித்திருந்தனர்.
இந்தநிலையில் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் 5 கிராம மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய தாசில்தார் செந்தாமரை, ஆலையை மூட நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதியளித்தார்.
இதைத்தொடர்ந்து தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் தொடர்ந்து ஆலையை மூட நடவடிக்கை எடுக்காததால் நேற்று தாசில்தார் செந்தாமரையிடம் உரத் தொழிற்சாலையை மூடநடவடிக்கை எடுக்காவிட்டால் தேர்தலை புறக்கணிக்க போவதாக ஐந்து கிராம மக்கள் மனு அளித்திருந்தனர். இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று தேர்தல் நடைபெறுவதையொட்டி 5 கிராம மக்களும் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்து தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் 5 கிராமங்களில் வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடி கிடக்கிறது. இதனை அறிந்த திருமங்கலம் தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தி, தாசில்தார் செந்தாமரை, திருமங்கலம் டி.எஸ்.பி. அருள் தலைமையில் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து சம்பந்தப்பட்ட உரத் தொழிற்சாலை மூடப்படும் வரை தேர்தலை புறக்கணிக்க போவதாக மக்கள் தெரிவித்ததால் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
- வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மற்றொரு கிராமமான கருக்கனஅள்ளி கிராமத்திலும் தேர்தலை புறக்கணித்து வாக்காளர் யாரும் வாக்களிக்கவில்லை.
- வாக்காளர்கள் யாரும் வராததால் வாக்கு சாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டன.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேட அக்ரஹார ஊராட்சியில் உள்ள கடவரஅள்ளி கிராமத்தில் இன்று காலை வாக்கு பதிவுக்கான பணிகள் நடைபெற்று தயார் நிலையில் இருந்தன.
ஆனால், கடவரஅள்ளி கிராமத்தில் உள்ள வாக்காளர்கள் ஒருவர் கூட காலை 10 மணி நிலவரப்படி வாக்களிக்க வரவில்லை.
இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கூறியதாவது:
கடவரஅள்ளி கிராமமானது வனபகுதியையொட்டி உள்ளது. இந்த பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
மேலும், இந்த பகுதியில் 450 வாக்காளர்கள் உள்ளனர். இந்த நிலையில் இந்த பகுதியில் வீட்டுமனை பட்டா கேட்டு பல ஆண்டுகளாக அதிகாரிகளிடம் மனு அளித்தும், அவர்கள் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இதனால் இன்று நடைபெறுகிற தேர்தலை புறக்கணிக்கும் விதமாக ஒருவர் கூட நாங்கள் வாக்களிக்கவில்லை என்றனர்.
இதேபோல் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மற்றொரு கிராமமான கருக்கனஅள்ளி கிராமத்திலும் தேர்தலை புறக்கணித்து வாக்காளர் யாரும் வாக்களிக்கவில்லை.
மேலும், அந்த பகுதியில் 1050 வாக்காளர்கள் உள்ளனர். இந்த பகுதியில் 4 வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் சாலையை கடக்கும் விதமாக எந்தவித மேம்பாலமும் அமைக்கவில்லை. இதனால் பொதுமக்கள் 4 வழிச்சாலை கடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் இன்று தேர்தலை புறக்கணித்து ஒருவர் கூட வாக்களிக்கவில்லை.
இதேபோன்று தேன்கனிக்கோட்டை அருகே காரண்டஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட கச்சுவாடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்காளர் ஒருவர் கூட காலை 7 மணி முதல் 10 மணி வரை வாக்களிக்க வரவில்லை. இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது, கச்சுவாடி பகுதியில் சாலை வசதி கோரி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக நாங்கள் தேர்தலை புறக்கணிக்கின்றோம் என்றனர்.
இந்த பகுதியில் 961 பேர் வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்காளர்கள் யாரும் வராததால் வாக்கு சாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டன.
- கடந்த இரு மாதமாக முறையாக குடிநீரும் வழங்காததால் பொதுமக்கள் அதிருப்தியில் இருந்தனர்.
- கால்நடைகளிடம் மனு அளித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் அன்னூர் அருகே பொகலூர் ஊராட்சிக்குட்பட்ட 9-வது வார்டில் கோபிராசிபுரம், கூலே கவுண்டன்புதூர் கிராமங்கள் உள்ளது.
இந்த கிராமங்களில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாய கூலித் தொழிலாளர்கள்.
கோபிராசிபுரம், கூலே கவுண்டன்புதூர் கிராமங்களுக்கு சொந்தமாக 3½ ஏக்கர் பரப்பளவில் குட்டை உள்ளது. இந்த குட்டைக்கு அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் கீழ் தண்ணீர் கொண்டு வர கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் பணிகள் ஆரம்பிக்கப்படாமலேயே திடீரென நின்று விட்டது. இதுகுறித்து பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. கடந்த இரு மாதமாக முறையாக குடிநீரும் வழங்காததால் பொதுமக்கள் அதிருப்தியில் இருந்தனர்.
இதுகுறித்து அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை பலமுறை நேரில் சந்தித்து மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கோபிராசிபுரம், கூலே கவுண்டன்புதூர் கிராம மக்கள் அன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தங்கள் ஊரின் பஸ் நிறுத்தம் பகுதியில் தேர்தலை புறக்கணிக்க போவதாக பதாகைகள் வைத்தனர்.
இன்று பாராளுமன்றத் தேர்தல் தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
இந்த நிலையில் கோபி ராசிபுரம், கூலே கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதிக்கு அத்திக்கடவு-அவினாசி திட்டம் கொண்டு வரப்படாததை கண்டித்து தேர்தலை புறக்கணித்தனர்.
மேலும் கால்நடைகளிடம் மனு அளித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனிடையே கிராம மக்கள் யாரும் வாக்களிக்க செல்லாததால் கிராமத்திற்கு உட்பட்ட பொகலூர் 58-வது வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் யாரும் இன்றி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் காத்து வாங்கிக் கொண்டு உள்ளனர்.
- பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையான வாக்கினை செலுத்தி வருகின்றனர்.
- வாக்கு சாவடியில் அவரது மகள் சமியுத்தா, சங்கமித்ரா, சஞ்சித்ரா ஆகியோர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
திண்டிவனம்:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக தொடங்கி காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையான வாக்கினை செலுத்தி வருகின்றனர்.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், அவரது குடும்பத்தினருடன் தனது சொந்த ஊரான திண்டிவனம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள மரகதாம்பிகை பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார். இதே வாக்கு சாவடியில் அவரது மகள் சமியுத்தா, சங்கமித்ரா, சஞ்சித்ரா ஆகியோர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
- இது நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல். ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய தேர்தல்.
- எல்லா இடங்களிலும் சீக்கிரம் ஓட்டுப்போட வேண்டும் என்ற உணர்வோடு மக்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சென்னை:
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. மயிலாப்பூர், ஆர்.கே.சாலையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
வாக்களித்த பிறகு நிருபர்களை சந்தித்த கனிமொழி கூறியதாவது:-
இது நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல். ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய தேர்தல். அரசியல் சாசனத்தை சட்டத்தை காப்பாற்ற வேண்டிய தேர்தல் என்ற அந்த தெளிவோடு மக்கள் வாக்களிக்க வேண்டும்.
இங்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் இந்த உணர்வோடு இந்த புரிதலோடு நாம் வாக்களிக்க வேண்டும்.
கேள்வி:- முதலமைச்சர் சொன்னது போல் 40-க்கு 40 வெற்றிக்கான வாய்ப்புகள் எப்படி உள்ளது? பிரகாசமாக இருக்கிறதா?
பதில்:- நிச்சயமாக தமிழ்நாட்டில் 39 இடங்களிலும், புதுவையிலும் நிச்சயமாக இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.
கேள்வி:- மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு எப்படி உள்ளது?
பதில்:- எல்லா இடங்களிலும் சீக்கிரம் ஓட்டுப்போட வேண்டும் என்ற உணர்வோடு மக்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நான் தூத்துக்குடி செல்கிறேன். அங்குள்ள நிலவரத்தை பிறகு சொல்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வாக்குச்சாடிகளில் வெயிலில் வாக்காளர்கள் நிற்பதை தடுக்க நிழல் பந்தல், குடிநீர் உட்பட அடிப்படை வசதிகளை செய்திருந்தனர்.
- சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நிற்பதை தவிர்க்க பெஞ்சு, நாற்காலி போன்ற வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
புதுச்சேரி:
தமிழகம், புதுவை உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு முதல்கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்தது.
புதுவை மாநிலத்தில் வாக்குப்பதிவுக்காக 967 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. புதுவை பிராந்தியத்தில் 739 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது.
இன்று காலை 6.30 மணிக்கு வாக்குச்சாவடிகளில் வேட்பாளரின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. காலை 6.30 மணி முதல் வாக்காளர்கள் தேர்தல் துறை வழங்கிய பூத் சிலிப், வாக்காளர் அடையாள அட்டை உட்பட ஆவணங்களோடு தங்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வரிசையில் காத்திருந்தனர்.
காலை 7 மணிக்கு முறையான வாக்குப்பதிவு தொடங்கியது. ஒரு சில இடங்களில் எந்திர கோளாறு காரணமாக சற்று காலதாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. ஆரம்பத்தில் வாக்காளர்கள் வாக்கு செலுத்தி வெளியில் வர காலதாமதம் ஆனது. இதனால் வாக்காளர்கள் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.
இதன்பின் வாக்குப்பதிவு வேகமெடுத்தது. புதுச்சேரியில் கோடை வெயில் தகித்து வருவதால் வெயிலுக்கு முன்பாக வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு காலையிலேயே மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு படையெடுத்தனர். இதனால் நகரம் மட்டுமின்றி, கிராமப்புறங்களிலும் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தினர்.
வாக்குச்சாடிகளில் வெயிலில் வாக்காளர்கள் நிற்பதை தடுக்க நிழல் பந்தல், குடிநீர் உட்பட அடிப்படை வசதிகளை செய்திருந்தனர். சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நிற்பதை தவிர்க்க பெஞ்சு, நாற்காலி போன்ற வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
காலை 7 மணி முதல் 8 மணிவரை 8 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது. இதன்பின் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பதட்டமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப்படையினர், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மாற்றுத்திறனாளிகள், முதியோரை அழைத்துச்செல்ல மாணவ தன்னார்வலர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை அழைத்துச் செல்ல வீல் சேர், சாய்தளம் போன்ற வசதிகளும் செய்யப்பட்டிருந்தது. முதியோரை காத்திருக்க வைக்காமல் முன்னுரிமை அடிப்படையில் வாக்குகளை பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
ஒரு சில இடங்களில் எந்திரம் பழுது, கால தாமதத்தில் சில நிமிடங்கள் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கினாலும் பெரியளவில் பாதிப்பு ஏதுமின்றி அமைதியான முறையில் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
- தமிழ்நாட்டில் உள்ள பொதுமக்கள் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற எண்ணத்தில் தெளிவாக உள்ளார்கள் என்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது தெரிந்து கொண்டோம்.
- சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடும் தொல்.திருமாவளவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
சிதம்பரம்:
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அவரது மனைவி ஜான்சிராணியுடன் சிதம்பரம் மானா சந்து நகராட்சி நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை செலுத்தினார்.
பின்னர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் முதல் கட்டமாக நடைபெற்று வருகிறது. இதில் காலையிலிருந்து பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்கு செலுத்தி வருகின்றனர். கடந்த 2019-ம் ஆண்டை விட இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளில் வெற்றி பெறும். சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடும் தொல்.திருமாவளவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
தமிழ்நாட்டில் உள்ள பொதுமக்கள் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற எண்ணத்தில் தெளிவாக உள்ளார்கள் என்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது தெரிந்து கொண்டோம். வட இந்தியாவில் பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வரும் சூழ்நிலையில் 2019-ல் வட இந்தியாவில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மோடி வெற்றி பெற்றார். அதேபோல் இம்முறை வெற்றி பெற வாய்ப்பு இல்லை.
கடந்த 2019 தேர்தலை விட இந்த தேர்தலில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பது, மதசார்பின்மையை பாதுகாப்பது, கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பது, இந்தியாவின் பன்முகத் தன்மையை பாதுகாப்பது, மக்களுடைய வாழ்வாதாரம், வேலை இல்லா திண்டாட்டம் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக, அடிப்படை பிரச்சனைகளை முன்னிறுத்தி பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தோம். இந்த பிரசாரம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.






