என் மலர்tooltip icon

    உலகம்

    • மூன்று இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 18 பேர் பலியானார்கள்.
    • தாக்குதல் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நைஜீரியா நாட்டில் அரசுக்கு எதிராக ஆயுதக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அந்நாட்டின் வடகிழக்கு போர்னோ மாகாணத்தில் போகோ ஹராம் அமைப்பினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் போர்னோ மாகாணத்தில் திருமண விழா, இறுதி ஊர்வலம் மற்றும் ஆஸ்பத்திரியை குறிவைத்து தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. தற்கொலை படையை சேர்ந்த பெண்கள் உடலில் குண்டுகளை கட்டிக் கொண்டு பொதுமக்கள் கூட்டத்துக்குள் புகுந்து வெடிக்க செய்தனர்.

    மூன்று இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 18 பேர் பலியானார்கள். இந்தத் தாக்குதல்களுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. தாக்குதல் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தூதரகத்துக்கு வில்-அம்புடன் நபர் ஒருவர் வந்தார்.
    • நபர் குறித்த விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.

    செர்பியா நாட்டு தலைநகர் பெல்கிரேடில் இஸ்ரேல் தூதரகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் தூதரகத்துக்கு வில்-அம்புடன் நபர் ஒருவர் வந்தார்.

    அவர் திடீரென்று அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது தாக்குதல் நடத்த முயன்றார். அங்கிருந்த போலீஸ்காரர் மீது அம்பை எய்தாா். இதில் கழுத்தில் அம்பு பாய்ந்து காவலா் காயமடைந்தாா். உடனே போலீஸ்காரர் தற்காப்புக்காக அம்பு வைத்திருந்த நபரை நோக்கி துப்பாக்கியால் சுட்டாா். இதில் அந்த நபா் உயிரிழந்தாா்.

    தாக்குதலில் காயமடைந்த போலீஸ்காரரை மருத்துவ மனையில் சேர்த்தனர். அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தாக்குதலில் ஈடுபட்ட நபர் குறித்த விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.

    காசாவில் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் இஸ்ரேலுடன் சொ்பியா நட்புறவை பேணி வரும் சூழலில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக செர்பியா பிரதமர் மிலோஸ் வுசெவிக் கூறும்போது, `இது கொடூரமான பயங்கரவாத செயல். இது எந்த மதத்திற்கும் எந்த தேசத்திற்கும் காரணமாக இருக்க முடியாது. இது ஒரு தனிநபரின் குற்றம்' என்றார்.

    இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, `செர்பியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தின் அருகே பயங்கரவாதத் தாக்குதலுக்கு முயற்சிக்கப்பட்டுள்ளது. தூதரகம் மூடப்பட்டுள்ளது மற்றும் தூதரகத்தின் எந்த ஊழியரும் காயமடையவில்லை. தாக்குதல் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது' என்று தெரிவித்தார்.

    • 7-ந்தேதி விண்வெளி நிலையத்தை சென்றடைந்தனர்.
    • சர்வதேச விண்வெளி மையத்திலேயே சிக்கி தவிக்கின்றனர்.

    சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், சக வீரர் புட்ச் வில்மோடன் ஆகியோர் கடந்த 5-ந்தேதி போயிங் நிறுவனம் உருவாக்கிய ஸ்டார்லைனர் விண்கலத்தில் புறப்பட்டனர்.

    அவர்கள் இருவரும் 7-ந்தேதி விண்வெளி நிலையத்தை சென்றடைந்தனர். அவர்கள் கடந்த 14-ந்தேதி பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டது. ஆனால், ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பயணம் ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. இதன்படி கடந்த 26-ந் தேதி அவர்கள் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும்.

    ஆனால் ஸ்டார் லைனரின் தொழில்நுட்ப கோளாறுகள் இன்னும் சரி செய்யப்படாததால் பூமிக்கு திரும்பாமல் சர்வதேச விண்வெளி மையத்திலேயே சிக்கி தவிக்கின்றனர். இதனையடுத்து ஜூலை 2-ந்தேதி அனைத்து தொழில்நுட்ப கோளாறுகளும் சரி செய்யப்பட்டு இரண்டு வீரர்களும் பூமிக்கு பத்திரமாக அழைத்து வரப்படுவார்கள் என போயிங் தெரிவித்தது. ஆனால் அதை நாசா உறுதி செய்யவில்லை.

    இந்த நிலையில் ஸ்டார்லைனர் விண்கலத்தில் வாயு கசிவு , தொழில் நுட்ப கோளாறுகள் சரி செய்ய குறைந்தது 30 நாட்களுக்கு மேல் ஆகும் என கூறப்படுகிறது. இதனால் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்ப இன்னும் ஒரு மாதம் ஆகலாம்.

    இதற்கிடையே நாசாவின்அதிகாரியான ஸ்டீவ் ஸ்டிச் கூறும்போது, ஸ்டார்லைனரின் பயண காலத்தை 45 நாட்களில் இருந்து 90 நாட்களுக்கு நீட்டிக்க பரிசீலித்து வருகிறோம். சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோரை அழைத்து வருவதில் அவசரம் காட்டவில்லை என்றார். * * * இங்கிலாந்து பிரதர் ரிஷிசுனக், தனது மனைவி அக்ஷதா மூர்த்தியுடன் லண்டனில் உள்ள சுவாமி நாராயண் கோவிலில் வழிபட்டார்.

    • பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் நேற்று அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.
    • கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் காசா நகரம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 பேர் பலி

    பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் நாளுக்குக் நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 9 மாதங்களாக நடந்து வரும் போரில் சுமார் 37,834 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 86,858 படுகாயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் நேற்று அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த போரினால் அதிகம் பாதிப்புக்குள்ளானது பெண்களும் குழந்தைகளிலுமே ஆவர்.

     

    அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு, போர் நிறுத்த முன்மொழிவு என உலக நாடுகளும் ஐ.நா சபையும் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர பல வகையில் முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும் அது அனைத்திலும் தோல்வி அடைந்துள்ளது.

     

    அதை உறுதி செய்யும் வகையில் பாலஸ்தீன நகரங்களான காசா மற்றும் ரஃபாவில் உள்ள பொதுமக்களின் பலி எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று ரஃபாவில் மக்கள் வசிக்கும் கூடாரங்கள் மீது இஸ்ரேல் பொழிந்த குண்டுமழையில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

     

    இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மற்றும் காசா நகரத்தின் பல்வேறு பகுதிகளின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்த முன்மொழிவை ஏற்படுத்தும் பணிகளில் எந்த முன்னேற்றமும்  ஏற்படவில்லை என ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் தயாராக உள்ள நிலையில் இஸ்ரேல் அதை மறுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

    • சீன நெட்டிசன்களில் 76.7 சதவீதம் பேர் ஆன்லைனில் ஷாப்பிங் செய்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
    • சீனாவில் 900 மில்லியன் மக்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்கிறார்கள்.

    சீனாவின் ஆன்லைன் நுகர்வு பற்றிய நீல புத்தகம் சமீபத்தில் அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கிராமப்புறங்களில் உள்ள சீன நெட்டிசன்களில் 76.7 சதவீதம் பேர் ஆன்லைனில் ஷாப்பிங் செய்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

    கிராமப்புறங்களில் உள்ள நெட்டிசன்கள் குறுகிய பிளாட்ஃபார்ம்களில் ஷாப்பிங் செய்ய விரும்புகிறார்கள். அத்தகைய தளங்களில் ஷாப்பிங் செய்யும் நெட்டிசன்களின் விகிதம் நகர்ப்புறங்களுடன் ஒப்பிடும்போது கிராமப்புறங்களில் 1.2 சதவீதம் புள்ளிகள் அதிகம் என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள சீன இன்டர்நெட் நெட்வொர்க் தகவல் மையம் நீல புத்தகம் தெரிவித்துள்ளது.

    சீனாவில் 900 மில்லியன் மக்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்கிறார்கள். 1990 மற்றும் 2000-களில் பிறந்த 90-களுக்குப் பிந்தைய மற்றும் 2000-களுக்குப் பிந்தைய தலைமுறைகளில் 95.1 சதவீதம் மற்றும் 88.5 சதவீதம் பேர் ஆன்லைன் ஷாப்பிங் செய்துள்ளார்கள்.

    சீனாவில் 85.4 சதவீத பெண்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்கிறார்கள். இது நாட்டின் ஆன்லைன் நுகர்வோரின் முக்கியமானதாக உள்ளது என்று நீல புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

    2023-ம் ஆண்டின் இறுதியில் கிட்டத்தட்ட 300 மில்லியனை எட்டிய 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மக்கள்தொகையில் 69.8 சதவீதம் பேர் ஷாப்பிங்கிற்காக ஆன்லைன் தளங்களைப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக உடல்நலம் மற்றும் மருந்துகள், கலாச்சாரம், சுற்றுலா மற்றும் பிற பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகின்றனர் என அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

    • டொனால்டு டிரம்ப்- ஜோ பைடன் இடையே விவாதம் நடைபெற்று வருகிறது.
    • நாங்கள் ஒருபோதும் அமெரிக்கா தேர்தல் விவாதங்களில் தலையிடுவது கிடையாது- ரஷியா.

    அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.

    தற்போது இருவர்களுக்கும் இடையில் விவாதம் நடைபெறுகிறது. ஜார்ஜியா அட்லாண்டாவில் அமெரிக்க நேரப்படி வியாழக்கிழமை நடைபெற்ற விவாதத்தில் டொனால்டு டிரம்ப் ஜோ பைடனை திகைக்க வைத்தார். சிஎன்என் இதை ஒளிபரப்பியது.

    அமெரிக்க தேர்தலில் ரஷியா தலையிடுமா? அதை எப்படி எடுத்துக் கொள்ளும் என உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன. இந்த நிலையில் அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான விவாதங்களை பார்ப்பது அதிபர் நிகழ்ச்சி நிரலில் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது:-

    ரஷிய அதிபர் புதின் அலாரம் வைத்து காலையிலேயே எழுந்து அமெரிக்க அதிபர் போட்டிக்கான விவாதங்களை பார்ப்பார் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லை. தற்போது வரைக்கும் அவருடைய நிகழ்ச்சி நிரலில் இது இல்லை.

    எங்கள் நாட்டு தொடர்பான முக்கிய பிரச்சனைகளை அதிபர் புதின் கையாண்டு வருகிறார். நிகழ்ச்சி நிரலின் முக்கியமானதில் அமெரிக்க விவாதங்கள் இல்லை.

    நாங்கள் இந்த விவாதம் குறித்து மதிப்பீடு செய்யப்போவதில்லை. இது அமெரிக்காவின் உள்நாட்டு பிரச்சனை. இது அமெரிக்க தேர்தல் பிரசாரம். அமெரிக்க தேர்தல் பிரசாரங்களில் நாங்கள் ஒருபோதும் தலையிடுவது இல்லை.

    இவ்வாறு டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

    • மே மாதம் நிலவரப்படி ஜெர்மனியில் 2.722 மில்லியன் பேர் வேலைவாய்ப்பு இல்லாமல் இருந்தனர்.
    • வேலையாப்பின்மை எண்ணிக்கை 15 ஆயிரமாக உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 19 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

    ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் வேலைவாய்ப்பின்மை கடந்த மே மாதம் 5.9 சதவீதமாக இருந்த நிலையில், ஜூன் மாதம அது 6 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஜெர்மனியின் மத்திய வேலைவாய்ப்பு ஏஜென்சி இந்த தகவலை தெரிவித்துள்ளது.

    ஜூன் மாதத்தில் வேலையாப்பின்மை எண்ணிக்கை 15 ஆயிரமாக உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 19 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

    மே மாதம் நிலவரப்படி ஜெர்மனியில் 2.722 மில்லியன் பேர் வேலைவாய்ப்பு இல்லாமல் இருந்தனர். இதன் எண்ணிக்கை ஜூன் மாதம் 2.726 மில்லியமான உயர்ந்துள்ளது.

    • நேட்டோ மாநாடு ஜூலை 9-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
    • நேட்டோ அமைப்பு தொடங்கி 75 வருடங்கள் ஆன நிலையில் அமெரிக்கா பல்வேறு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

    நேட்டோ மாநாடு அடுத்த மாதம் 9-ந்தேதியில் இருந்து 11-ந்தேதி வரை அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடக்கிறது. இதில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கலந்து கொள்கிறார். நேட்டோ அமைப்பின் 75-வது ஆண்டு விழாவாக இந்த மாநாடு அமைகிறது.

    இதனால் அமெரிக்கா இஸ்ரேல் நாட்டின் வெளியறவுத்துறை மந்திரி கட்ஸ்-க்கு அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் பிட்ஸ்-க்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    இஸ்ரேலைத் தொடர்ந்து பல அரபு நாடுகளுக்கும் அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் உள்பட 32 நாடுகள் நேட்டோவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் நேட்டோவில் இணைய விரும்பியதால் ரஷியா அந்த நாடு மீது படையெடுத்தது குறிப்பிடத்தக்கது.

    • இஸ்ரேல் தூதரகம் முன் பாதுகாப்பு பணியில் இருந்து வீரர் மீது தாக்குதல்.
    • தன்னை பாதுகாத்துக் கொள்ள அதிகாரி துப்பாக்கியால் சுட்டதில் மர்ம நபர் உயிரிழப்பு.

    செர்பியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன் பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென மர்ம நபர் ஒருவர் அதிகாரியின் கழுத்தில் இரும்பு போல்ட் (Bolt) ஆல் பயங்கரமாக தாக்கினார்.

    இதனால் அந்த அதிகாரி அதிர்ச்சி அடைந்தார். கழுத்தில் காயம் அடைந்த அதிகாரி, தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கான மர்ம நபரை துபாக்கியால் சுட்டார். இதில் அந்த மர்ம நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதற்கிடையே காயம் அடைந்த அதிகாரி மயக்கம் அடைந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஆபரேசன் செய்து போல்ட் நீக்கப்பட்டது.

    தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் அடையாளம் கானும் பணி நடைபெற்று வருவதாகவும், தாக்குதல் நடத்துவதற்கான நோக்கம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் செர்பியா உள்துறை மந்திரி இவிகா டேசிக் தெரிவித்துள்ளார்.

    காசா மீது இஸ்ரேல் கடுமையாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இஸ்ரேல் உடனான நெருக்கமான உறவை செர்பில் தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • நேபாளத்தில் கனமழை பெய்து வருகிறது.
    • இதனால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.

    காத்மண்டு:

    நேபாள நாட்டில் பருவமழை தொடங்கியதில் இருந்து அங்கு கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன. கனமழை மற்றும் மின்னல் தாக்குதலும் ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில், கனமழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 9 பேர் பலியாகி உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது. இதில் 3 குழந்தைகளும் அடங்குவர். மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நிலச்சரிவில் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    கனமழையால் ஏற்படும் நிலச்சரிவுகளால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் சுற்றுச்சூழலுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிறது.

    நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் பல லட்சம் பேர் பருவகாலத்தின்போது ஏற்படும் மழை தொடர்பான சம்பவங்களால் பாதிக்கப்படுகின்றனர் என தேசிய பேரிடர் மேலாண் கழகம் தெரிவித்துள்ளது.

    • வட கொரிய தலைங்கர் பியங்காங்கில் கிம் ஜாங் உன் - ஐ சந்தித்து அவருக்கு ரஷிய தயாரிப்பான அவுரஸ் லிமவுசைன் [Aurus limousine] என்ற சொகுசு காரை பரிசளித்தார் புதின்.
    • கிம் ஜாங் உன் அருகில் அமர்ந்திருக்க புதின் சொகுசு காரை ஓட்டிக்காட்டினார்.

    ரஷியாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையிலான உறவு நாளுக்குநாள் வலுவடைந்துகொண்டே வருகிறது. மேற்கு நாடுகளுக்கு பரம எதிரிகளாக விளங்கும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தங்களது நாடுகளுக்கிடையில் பரஸ்பர உறவை நிலைநாட்ட முயற்சித்து வருகின்றனர்.

    உக்ரைன் போரில் ரஷியாவுக்கு ஆதராவாக ஆயுதங்களை அனுப்பும் அளவுக்கு இந்த புதிய உறவு வலுப்பெற்றுள்ளது. 24 ஆண்டுகள் கழித்து கடந்த ஜூன் 19 ஆம் தேதி இரண்டாவது முறையாக ரஷிய அதிபர் புதின் வட கொரியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.

    வட கொரிய தலைங்கர் பியங்காங்கில் கிம் ஜாங் உன் - ஐ சந்தித்து அவருக்கு ரஷிய தயாரிப்பான அவுரஸ் லிமவுசைன் [Aurus limousine] என்ற சொகுசு காரை பரிசளித்தார் புதின். மேலும் இருவரும் அந்த காரில் சிறிது தூரம் பயணம் மேற்கொண்டனர். கிம் ஜாங் உன் அருகில் அமர்ந்திருக்க புதின் சொகுசு காரை ஓட்டிக்காட்டினார். பின்னர் கிம் ஜாங் உன் காரை ஆர்வமாக ஓட்டிப்பார்த்தார். இந்த  வீடியோ இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.

    இந்நிலையில் புதின் பரிசளித்த அவுரஸ் லிமவுசைன் கார் குறித்த சர்ச்சைக்குரிய உண்மை ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, அவுரஸ் லிமவுசைன் கார்களை அவுரஸ் மோட்டார்ஸ் என்ற ரஷிய நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் கார் தயாரிப்பிற்கான உதிரிபாகங்களை அந்நிறுவனம் தென் கொரியா, சீனா, இந்தியா, துருக்கி, இத்தாலி என பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதாக ரியூட்டர்ஸ் நிறுவனம் கண்டறிந்துள்ளது.

     

    வட கொரியாவும் தென் கொரியாவும் பரம் எதிரிகளாக இருந்து வருவது அனைவரும் அறிந்ததே. அப்படி இருக்க வட கொரிய அதிபருக்கு தென் கொரிய உதிரி பாகங்களைக் கொண்ட காரை புதின் பரிசளித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.  

    • பாகிஸ்தானின் பாதுகாப்பு மந்திரியின் சமீபத்திய அறிக்கை விவேகமற்றது.
    • எல்லைக்குள் ஊடுருவும் எந்தவொரு ஆக்கிரமிப்பும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

    இஸ்லாமாபாத்:

    ஆப்கானிஸ்தானில் உள்ள எல்லையில் பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது. இந்த தீவிரவாதிகள் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே பாகிஸ்தான் பாதுகாப்பு மந்திரி கவாஜா ஆசிப் கூறும்போது, "பயங்கரவாதத்திற்கு எதிராக புதிதாக தொடங்கப்பட்ட ராணுவ நடவடிக்கையின் கீழ், ஆப்கானிஸ்தானில் உள்ள தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாத குழு புகலிடங்களை பாகிஸ்தான் குறிவைத்து தாக்குதல் நடத்தும்" என்றார்.

    இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தலிபான்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படை கூறும்போது, `ஆப்கானிஸ்தானின் தேசிய இறையாண்மையை மீறும் சாத்தியம் குறித்து பாகிஸ்தானின் பாதுகாப்பு மந்திரியின் சமீபத்திய அறிக்கை விவேகமற்றது.

    தண்ணீரில் சேறு பூசும் முயற்சியாகும், இது யாருக்கும் பயனளிக்காது. முக்கியமான விஷயங்களில் இதுபோன்ற உணர்ச்சிகரமான அறிக்கைகளை வெளியிடுவதை பாகிஸ்தான் தலைமை தவிர்க்க வேண்டும்.

    எங்கள் எல்லைக்குள் ஊடுருவும் எந்தவொரு ஆக்கிரமிப்பும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

    ×