என் மலர்
உலகம்
- தென்ஆப்பிரிக்காவை சேர்ந்தவர் அல்ல என்ற குற்றச்சாட்டு.
- என்னுடைய பயணம் மிகவும் கடுமையானது.
லாகோஸ்:
நைஜீரியா தலைநகர் லாகோசில் மிஸ் நைஜீரியா அழகி போட்டி நடந்தது. இந்த போட்டியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதில் மிஸ் நைஜீரியா அழகியாக சட்டக்கல்லூரி மாணவியான 23 வயது சிதிம்மா அடெட்ஷினா தேர்ந்தெடுக்கப்பட்டார். பட்டத்தை வென்ற அவர் ஆனந்த கண்ணீர் வடித்தார்.

அழகி பட்டம் வென்ற சிதிம்மா அடெட்ஷினா கடந்த ஜூலை மாதம் தென் ஆப்பிரிக்காவில் நடந்த மிஸ் தென் ஆப்பிரிக்கா இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
அப்போது அவர் தென்ஆப்பிரிக்காவை சேர்ந்தவர் அல்ல என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அவரது தாயார் தென் ஆப்பிரிக்காவில் வசிப்பது போன்று ஏமாற்றியதாக சர்ச்சை எழுந்தது.
இது தொடர்பாக விசாரணையும் நடத்தப்பட்டது. இதையடுத்து சிதிம்மா அடெட்ஷீனா தென் ஆப்பிரிக்கா அழகிப் போட்டியில் இருந்து மனவேதனையுடன் வெளியேறினார். இதனால் அவரால் இறுதி போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.
இவரது தந்தை நைஜீரியாவை சேர்ந்தவர். இதனால் மிஸ் நைஜீரியா போட்டியில் பங்கேற்க சிதிம்மா அடெட் ஷீனாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதை ஏற்று அவர் அழகிப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடி உள்ளார். அவர் கூறியதாவது:-
என்னுடைய பயணம் மிகவும் கடுமையானது. தற்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பெருமையாகவும் இருக்கிறது. எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
நாம் ஒருவரோடு ஒருவர் சண்டையிடக் கூடாது. கறுப்பு கண்டமான ஆப்பிரிக்கா ஒன்றுபட வேண்டும். இதை தான் எப்போதும் விரும்புகிறேன். நாம் அனைவரும் ஒரே குடும்பம். நாம் அனைவரும் ஒரே மனிதர்கள் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த போட்டியில் வென்றது மூலம் வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ள சர்வதேச பிரபஞ்ச அழகி போட்டியில் சிதிம்மா பங்கேற்க உள்ளார். இதில் நான் எப்படியும் வெற்றி பெறுவேன் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
- 723 வனவிலங்குகளைக் கொன்று அவற்றின் இறைச்சியை உணவாகப் பயன்படுத்த நாம்பியா முடிவெடுத்துள்ளது.
- இந்த திட்டத்தின்கீழ் ஏற்கவே 150 விலங்குகள் கொல்லப்பட்டு அவற்றின்மூலம் 63 டன் இறைச்சி பெறப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நாம்பியாவில் கடுமையான வறட்சி நிலவுவதால் மக்களுக்கு உணவளிக்க வனவிலங்குகளைக் கொல்ல அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு 2023 முதல் கடுமையான வறட்சியால் பாதிப்புக்குள்ளாகியுள்ளது நாம்பியா.
இதனால் தென் ஆப்பிரிக்காவில் உள்ள மக்கள் தொகையில் பாதியளவு அதாவது சுமார் 14 லட்சம் மக்கள் நாம்பியாவில் உள்ள நிலையில் வறட்சியால் பசி மற்றும் பட்டினியில் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். எனவே அவர்களுக்கு உணவளிக்கும் பொருட்டு காட்டில் உள்ள 723 வனவிலங்குகளைக் கொன்று அவற்றின் இறைச்சியை உணவாகப் பயன்படுத்த நாம்பியா முடிவெடுத்துள்ளது.

இந்த 723 வனவிலங்குகளில் 300 வரிக்குதிரைகள், 100 wildebeest காட்டெருமைகள், 50 இம்பாலா மான்கள், 100 எலான்ட் வகை மான்கள், 30 நீர்யானைகள்[hippopotamuses] , 83 யானைகள் ஆகியவையும் அடங்கும். இந்த திட்டத்தின்கீழ் ஏற்கவே 150 விலங்குகள் கொல்லப்பட்டு அவற்றின்மூலம் 63 டன் இறைச்சி பெறப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள உலகின் மிகப்பெரிய ஆப்பிரிக்கச் சவானா யானைகள் அழிந்து வரும் பட்டியலில் உள்ள நிலையில் கடுமையான வறட்சியால், உணவுக்காக யானைகள் கொல்லப்படுவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை குடிமக்களுக்காக நாட்டின் இயற்கை வளங்களை பயன்படுத்துவதற்கு தங்களின் அரசியல் அமைப்பில் இடம் உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

- Hawk Tuah என்பது நெட்டிஸின்களுக்கு பரிட்சயமான ஒரு சொல்
- ஆபாச நடிகை வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறார்
ஹா தூ[Hawk Tuah] என்பது நெட்டிஸின்களுக்கு பரிட்சயமான சொல்லாக மாறிப் போயுள்ளது. இணையத்தில் பரவிய வைரல் வீடியோ ஒன்றில் பெண் ஒருவரிடம் பாலியல் உறவு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலே ஹா தூ [Hawk Tuah]. இதுதொடர்பான மீம்கள் இணையத்தில் உலா வரும் நிலையில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பையும் Hawk Tuah வார்த்தையையும் இணைத்து டீ - சர்ட் அணிந்த நபர் விமானத்தில் இருந்து இறங்கிவிடப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவில் டெல்டா ஏர்லைன்ஸில் ஏறிய இளைஞர் ஒருவர் தான் செக்யூரிட்டியைத் தாண்டி வரும்வரை உள்புறம் வெளியிலும் வெளிப்புறம் உள்ளே இருக்குமாறு தான் அணிதிருத்த டி சர்ட்டை கழற்றி டிரம்ப் மற்றும் Hawk Tuah மீமியை இணைத்து மோசமான வகையில் சித்தரிக்கும் படம் கொண்ட டீ சர்டின் பகுதி வெளியே தெரியுமாறு அணிந்துள்ளார்.
இதை கவனித்த விமான ஊழியர்கள் அந்த இளைஞரை விமானத்திலிருந்து வெளியேற்றியுள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஆபாச நடிகை வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

- அரச குடும்பத்தினருக்கும், ஹாரி-மேகன் தம்பதிக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டது.
- 2022-ல் இளவரசர் ஹாரி அரச குடும்பத்தை விட்டு அதிகாரப்பூர்வமாக வெளியேறினார்.
லண்டன்:
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் ஹாரி கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்க நடிகை மேகன் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இதனால் அரச குடும்பத்தினருக்கும், ஹாரி-மேகன் தம்பதிக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டது.
இதனையடுத்து 2022-ல் இளவரசர் ஹாரி அரச குடும்பத்தை விட்டு அதிகாரப்பூர்வமாக வெளியேறினார். பின்னர் அவர்கள் இருவரும் அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தனர்.
இந்தநிலையில் தற்போது அரச குடும்பத்துடனான உறவை மீட்டெடுக்க ஹாரி முயற்சித்து வருகிறார். இதற்காக அவர் தனது முன்னாள் ஆலோசகர்களின் உதவியை நாடி உள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் அரச குடும்பத்தில் முழுமையாக திரும்புவதை அவர் நோக்கமாக கொண்டிருக்கவில்லை என அங்குள்ள ஊடகங்கள் கூறுகின்றன.
- ஆரம்ப சலுகையாக இந்திய மதிப்பில் ரூ.15 க்கும் குறைவாக [PKR 50] பொருட்கள் வழங்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது
- கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த மக்கள், துணிகள், பொருட்கள் என அனைத்தையும் திருடி அதை வீடியோவும் எடுத்து மகிழ்ந்துள்ளனர்.
பாகிஸ்தானில் செகண்ட் ஹேண்ட் துணிகள் மற்றும் பொருட்களை விற்கும் மால் திறக்கப்பட 30 நிமிடங்களுக்குள் மொத்தமாக கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ட்ரீம் பஜார் என்று அழைக்கப்படும் மால் திறப்புக்குப் பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டது.
ஆரம்ப சலுகையாக இந்திய மதிப்பில் ரூ.15 க்கும் குறைவாக [PKR 50] பொருட்கள் வழங்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்த நிலையில் மால் திறப்பு விழாவில் ஆயிரக்கணக்கோர் திரண்டனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் மால் ஊழியர்கள் கதவை அடைத்தனர்.
ஆனால் கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த மக்கள், துணிகள், பொருட்கள் என அனைத்தையும் திருடி அதை வீடியோவும் எடுத்து மகிழ்ந்துள்ளனர். மதியம் 3 மணிக்கு மால் திறக்கப்பட்ட நிலையில் 3.30 மணிக்குள் மால் முற்றிலுமாக காலி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- ஏற்கனவே 33 பிணைக்கைதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
- இன்னும் ஹமாஸ் அமைப்பினர் வசம் 90-க்கும் மேற்பட்ட பிணைக்கைதகிள் உள்ளனர்.
பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி இஸ்ரேல் நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தி சுமார் 1,200 பேரை கொன்று குவித்தனர். மேலும் 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்து காசாவுக்கு இழுத்து சென்றனர். இதில் அமெரிக்கர்கள் உள்பட வெளிநாட்டினர் சிலரும் அடங்குவர்.
திடீர் தாக்குதலில் நிலைகுலைந்த இஸ்ரேல் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக வெகுண்டெழுந்தது. அந்த அமைப்பை அடியோடு ஒழித்து, பணய கைதிகள் அனைவரையும் மீட்போம் என சூளுரைத்து காசா மீது போர் தொடுத்தது. இந்த போர் 10 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. இதில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இதனிடையே சர்வதேச நாடுகளின் முயற்சியின் பலனாக கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார காலத்துக்கு தற்காலிகமாக போர் நிறுத்தப்பட்டது. அதற்கு ஈடாக ஹமாஸ் வசம் இருந்த சுமார் 100 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து மீண்டும் அங்கு போர் நிறுத்தத்தை கொண்டுவர உலக நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. ஆனால் அதில் உடன்பாடு எட்டப்படாமல் இழுபறி நீடித்து வருகிறது.
அதேவேளையில் காசா மீதான தாக்குதல்களை தொடர்ந்து தீவிரப்படுத்தி வரும் இஸ்ரேல் அங்கு சிக்கியுள்ள பிணைக்கைதிகளை மீட்பதற்காக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காசாவில் உள்ள ஒரு சுரங்கத்தில் இருந்து கைத் பர்கான் அல்காதி என்ற 52 வயதான பணய கைதி உயிருடன் மீட்கப்பட்டார்.
இந்த நிலையில் தெற்கு காசாவின் ரபா நகரில் உள்ள ஒரு சுரங்கத்தில் இருந்து பயண கைதிகள் 6 பேரின் உடல் மீட்கப்பட்டது. அவர்களில் இஸ்ரேலிய-அமெரிக்கரான கோல்ட்பர்க்-போலினும் ஒருவர் ஆவார்.
தங்கள் வீரர்கள் சுரங்கத்தை சென்றடைவதற்கு சற்று நேரத்துக்கு முன்பாக பிணைக்கைதிகள் 6 பேரையும் ஹமாஸ் அமைப்பினர் கொடூரமாக கொலை செய்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
இந்த நிலையில் பணய கைதிகளின் மரணத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இந்த படுகொலைக்காக ஹமாசுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என சூளுரைத்துள்ளார். மேலும் பணய கைதிகளை கொன்றதன் மூலம் அவர்கள் (ஹமாஸ்) அமைதி ஒப்பந்தத்தை விரும்பவில்லை என்பது தெளிவாகி உள்ளது என அவர் குற்றம் சாட்டினார்.
பிணைக்கைதிகள் கொலை செய்யப்பட்ட நிலையில், உயிருடன் உள்ள மற்ற பிணைக்கைதிகளை உயிரோடு மீட்கும் வகையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இஸ்ரேல் அதிபர் நேதன்யாகு உடனடியாக கையெழுத்திட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதில் சில போலீசார் காயம் அடைந்த நிலையில் 29 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே இஸ்ரேலை சேர்ந்த தன்னார்வலர் அமைப்பு ஒன்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டத்தை நடத்த அழைப்புவிடுத்துள்ளது. இதனால் இன்று இஸ்ரேல் நாட்டின் முழுவதும் பொது சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 97 பிணைக்கைதிகள் உள்ளனர். அவர்கள் ஐந்து வயதிற்கு உட்பட்ட இரண்டு குழந்தைகளும் ஆவார்கள். ஏற்கனவே 33 பேர் உயிரிழந்ததாக இஸ்ரே் ராணுவம் தெரிவித்துள்ளது.
- போரில் ரஷியாவுக்கு உதவிடும் வகையில் வடகொரியா ஆயுதங்களை வழங்கி உள்ளது.
- இருநாடுகளுக்கிடையே கூட்டு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டன.
உக்ரைன் உடன் போரிடுவதற்காக வடகொரியா ரஷியாவிற்கு ஆயுதங்கள் வழங்கியதாகவும் அதற்கு பரிசாக குதிரைகள் வழங்கப்பட்டு உள்ளதாக தென் கொரியா தெரிவித்து உள்ளது. இது குறித்து தென் கொரியா தெரிவித்து இருப்பதாவது: ரஷியா உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.
இந்த போரில் ரஷியாவுக்கு உதவிடும் வகையில் வடகொரியா ஆயுதங்களை வழங்கி உள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ரஷியாவில் இருந்து ஓர்லோவ் டிராட்டர் வகையை சேர்ந்த 24 குதிரைகள் வடகொரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
வடகொரியா அதிபர் கிம் ஜாங்-க்கு குதிரைகள் என்றால் கொள்ளை பிரியமாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்கனவே புதின் 30 குதிரைகளை அனுப்பி உள்ளார். இவை அனைத்தும் வடகொரியா அனுப்பிய ஆயுதத்திற்கான பணம் என தென் கொரியா தெரிவித்து உள்ளது. இந்நிலையில் வடகொரியாவின் அரசு ஊடக நிறுவனமான கேசிஎன்ஏ தெரிவித்து இருப்பதாவது:
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரஷிய அதிபர் புதின் வடகொரியாவுக்கு வந்திருந்தார். அப்போது இருநாடுகளுக்கிடையே கூட்டு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதத்தில் ரஷிய அதிபர் புதினுக்கு ஒரு ஜோடி நாய்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு பதிலாக ஆகஸ்ட் மாதத்தில் 447 ஆடுகளை புதின், கிம் ஜாங் உன்னுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்து உள்ளது.
- மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரப்படுத்தினர்.
- மோசமான வானிலை காரணமாக விபத்து நடந்திருக்கலாம் எனத் தகவல்.
ரஷியாவில் எம்ஐ-8டி ரக ஹெலிகாப்டர் ஒன்று வாக்கசெட்ஸ் எரிமலை பகுதியில் இருந்து நிக்கோலேவ்கா கிராமத்தில் உள்ள தளத்திற்கு நேற்று புறப்பட்டது. ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிட நேரங்களில் தனது தொடர்பை துண்டித்தது.
இந்த ஹெலிகாப்டரில் மூன்று பணியாளர்கள் மற்றும் 19 பயணிகள் என மொத்தம் 22 பேர் பயணித்தனர்.
மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டது.
இந்நிலையில், காணாமல் போன ரஷிய ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில், அதில் பயணித்த 22 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டரின் பாகங்கள் கண்டறியப்பட்டன. மோசமான வானிலை காரணமாக விபத்து நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
- அதை ஒழுங்காகச் செய்யவில்லை என்றால் அவர்களுக்கு உணவு அளிக்காமல் அடித்து துன்புறுத்துகிறது இந்த கும்பல்.
- லாவோஸ் நாட்டில் போலி வேலைவாய்ப்புகளை நம்பி இந்தியர்கள் ஏமாற வேண்டாம்
தென்கிழக்கு ஆசியாவில் தாய்லாந்து அருகே உள்ள லாவோஸ் நாட்டில் சைபர் குற்றங்களுக்காக அடிமைகளாக பயன்படுத்தப்பட்டு வந்த 47 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அதிக சம்பளத்தில் ஐ.டி வேலை இருப்பதாக கூறி லாவோஸ் நாட்டுக்கு அழைத்துச்செல்லப்பட்ட இந்தியர்கள் பலர் சைபர் குற்றங்களில் ஈடுபட நிர்ப்பந்தம் செய்யப்படுகின்றனர் என்று சமீப காலமாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.
லாவோஸ் மற்றும் கம்போடியாவில் இது போன்ற மோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட 635 இந்தியர்கள் மீட்கப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது, லாவோஸின் பொஹியோ மாகாணத்தில் உள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ஐடி நிறுவன போர்வையில் இயங்கி வந்த டேட்டிங் செயலி மோசடிகளில் ஈடுபடுத்தப்பட்ட இந்தியர்கள் 47 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகளின் பின்னணியில் இதுபோன்று இந்தியர்களே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டேட்டிங் செயலிகளில் பெண்களை போன்று புரொபைல் உருவாக்கி இந்தியாவில் உள்ளவர்களிடம் சாட்டிங் செய்து அவர்களை கிரிப்டோ மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடிகளுக்கு இட்டுச் செல்வதே இங்கு பணியமர்த்தப்பட்டுள்ள இந்தியர்களின் வேலை.

அதை அவர்கள் ஒழுங்காகச் செய்யவில்லை என்றால் அவர்களுக்கு உணவு அளிக்காமல் அடித்து துன்புறுத்துகிறது இந்த கும்பல். இதுதொடர்பாக இந்தியத் தூதரகத்துக்குச் சிலர் தகவல் அளித்த நிலையில் உள்ளூர் அதிகாரிகள் உதவியுடன் அதிரடி ஆய்வில் ஈடுபட்டு 47 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்டவர்களில் 30 பேர் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் எஞ்சிய 17 பேரை இந்தியாவுக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருவதாக தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், லாவோஸ் நாட்டில் போலி வேலைவாய்ப்புகளை நம்பி இந்தியர்கள் ஏமாற வேண்டாம் என்று இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
- இன்று [செப்டம்பர் 1] முதல் 3 நாட்களுக்கு தினமும் 8 மணி நேர போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே உடன்பாடு எட்டப்பட்டது.
- நசீரத் பகுதியில் நடந்த வான்வழித் தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 9 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்
பாலஸ்தீன நகரங்களின்மீது கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 40,000 திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். தொடர் போரால் காசா நகரம் முழுவதுமாக உருக்குலைந்துள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களும் சுகாதார சேவைகளும் கிடைக்காமல் தோற்று பரவல் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் காசாவில் உள்ள 6.4 லட்சம் குழந்தைகளுக்கு உலக சுகாதார அமைப்பு போலியோ சொட்டு முகாம் நடத்த முன்வந்தது. இதனை முன்னிட்டு இன்று [செப்டம்பர் 1] முதல் 3 நாட்களுக்கு தினமும் 8 மணி நேர போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே உடன்பாடு எட்டப்பட்டது. ஆனாலும் நேற்றைய தினமே பல இடங்களில் மாதிரி முகாம்கள் நடத்தப்பட்டன.

அந்த வகையில், நேற்றைய தினம் நாசர் மருத்துவமனை வார்டுகளில் அடையாள முகாம் நடத்தி, சில குழந்தைகளுக்கு மருத்துவ அதிகாரிகள் போலியோ சொட்டு மருந்து வழங்கினர். இந்நிலையில், நேற்றய தினம் காசாவில் இஸ்ரேல் படையினர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ மற்றும் சமூக நலப் பணியாளர்கள் சொட்டு மருந்து முகாம்களுக்கு தயாரான நிலையில், காசா பகுதியில் அமைந்த அகதிகள் முகாம்களில் ஒன்றான நசீரத் பகுதியில் நடந்த வான்வழித் தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 9 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காசாவில் நேற்று அடுத்தடுத்து தொடர்ந்து நடந்த தொடர் தாக்குதல்களில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் ஒரே நாளிலில் பலி எண்ணிக்கை 49 ஆக உயர்ந்தது.
- அமெரிக்க நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க வருகின்றன.
- வேற்றுமை எண்ணம் துளியும் இன்றி, அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற எண்ணத்துடன் வாழுங்கள்.
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
* உழைப்பு, திறமை மற்றும் தன்னம்பிக்கையால் தமிழ் வம்சாவளியினர் உயர்ந்துள்ளனர்.
* தமிழகத்தில் முதலீடு செய்ய அமெரிக்க நிறுவனங்களை வலியுறுத்த வேண்டும் என உரிமையோடு கேட்கிறேன்.
* தமிழகத்தில் தொழில் தொடங்குமாறு அமெரிக்கா நிறுவனங்களை புலம்பெயர் தமிழர்கள் வலியுறுத்த வேண்டும்.
* அமெரிக்காவில் தங்கிப் பயின்று வரும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம்.
* இந்தியாவின் இரண்டாவது பொருளாதார மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.
* அமெரிக்க நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க வருகின்றன.
* வேற்றுமை எண்ணம் துளியும் இன்றி, அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற எண்ணத்துடன் வாழுங்கள்.
* அமெரிக்கா- இந்தியா இடையிலான வர்த்தகம் மும்மடங்கு உயர்ந்துள்ளது.
* இந்தியா- அமெரிக்கா உறவு இருநாட்டு உறவல்ல, இது இருநாட்டு மக்களுக்கு இடையிலான உறவாக உள்ளது என்றார்.
- உள்துறை அமைச்சகம் மற்றும் சட்ட அமைச்சகம் சார்பில் கோரிக்கை விடுத்தால், நாங்கள் அவரை திரும்பி அனுப்ப கேட்போம்.
- கோரிக்கை எழுந்தால் அது இந்திய அரசாங்கத்திற்கு ஒரு சங்கடமான சூழ்நிலையை உருவாக்கலாம்.
வங்காளதேசத்தில் இட ஒதுக்கீடுக்கு எதிராக மாணவர்களின் போராட்டத்தில் வன்முறை வெடித்து ஏராளமானோர் பலியானார்கள்.
இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விலக கோரி மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். இதனால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மாணவர்கள் போராட்டத்தின்போது நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக ஷேக் ஹசீனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது மேலும் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்று இந்தியாவிடம் வங்காள தேசத்தின் முக்கிய எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இவ்விவகாரத்தில் இடைக்கால அரசின் நிலைப்பாடு குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.
இந்த நிலையில் வங்காளதேச இடைக்கால அரசின் வெளியுறவு ஆலோசகர் டூஹித் ஹொசைன் கூறியதாவது:-
ஷேக் ஹசீனா தற்போது இந்தியாவில் தங்கியிருக்கிறார். அவரை நாடு கடத்த இந்தியாவிடம் கோரிக்கை விடுப்பது தொடர்பாக பதில் சொல்ல நான் சரியான நபர் இல்லை. உள்துறை அமைச்சகம் மற்றும் சட்ட அமைச்சகம் சார்பில் கோரிக்கை விடுத்தால், நாங்கள் அவரை திரும்பி அனுப்ப கேட்போம்.
இந்த கோரிக்கை எழுந்தால் அது இந்திய அரசாங்கத்திற்கு ஒரு சங்கடமான சூழ்நிலையை உருவாக்கலாம்.
அது இந்திய அரசாங்கத்திற்கு தெரியும் என்று நினைக்கிறேன். இவ்விவகாரத்தை அவர்கள் கவனித்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். தேசிய நலன்களைப் பாதுகாக்க அனைத்து நாடுகளுடனும் நல்லுறவைப் பேணுவதே எங்களின் கொள்கையாகும். யாருடனும் பகைமை கொள்ளாமல், சமநிலையான உறவுகளை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளோம். எங்களது முதன்மைப் பணி நமது நலன்களைப் பாதுகாப்பதாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.






