search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    டேட்டிங் செயலி மோசடியில் இந்தியர்கள்.. லாவோஸில் கொத்தடிமைகளாக இருந்த 47 பேர் மீட்பு - பின்னணி
    X

    டேட்டிங் செயலி மோசடியில் இந்தியர்கள்.. லாவோஸில் கொத்தடிமைகளாக இருந்த 47 பேர் மீட்பு - பின்னணி

    • அதை ஒழுங்காகச் செய்யவில்லை என்றால் அவர்களுக்கு உணவு அளிக்காமல் அடித்து துன்புறுத்துகிறது இந்த கும்பல்.
    • லாவோஸ் நாட்டில் போலி வேலைவாய்ப்புகளை நம்பி இந்தியர்கள் ஏமாற வேண்டாம்

    தென்கிழக்கு ஆசியாவில் தாய்லாந்து அருகே உள்ள லாவோஸ் நாட்டில் சைபர் குற்றங்களுக்காக அடிமைகளாக பயன்படுத்தப்பட்டு வந்த 47 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அதிக சம்பளத்தில் ஐ.டி வேலை இருப்பதாக கூறி லாவோஸ் நாட்டுக்கு அழைத்துச்செல்லப்பட்ட இந்தியர்கள் பலர் சைபர் குற்றங்களில் ஈடுபட நிர்ப்பந்தம் செய்யப்படுகின்றனர் என்று சமீப காலமாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.

    லாவோஸ் மற்றும் கம்போடியாவில் இது போன்ற மோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட 635 இந்தியர்கள் மீட்கப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது, லாவோஸின் பொஹியோ மாகாணத்தில் உள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ஐடி நிறுவன போர்வையில் இயங்கி வந்த டேட்டிங் செயலி மோசடிகளில் ஈடுபடுத்தப்பட்ட இந்தியர்கள் 47 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

    இந்தியாவில் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகளின் பின்னணியில் இதுபோன்று இந்தியர்களே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டேட்டிங் செயலிகளில் பெண்களை போன்று புரொபைல் உருவாக்கி இந்தியாவில் உள்ளவர்களிடம் சாட்டிங் செய்து அவர்களை கிரிப்டோ மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடிகளுக்கு இட்டுச் செல்வதே இங்கு பணியமர்த்தப்பட்டுள்ள இந்தியர்களின் வேலை.

    அதை அவர்கள் ஒழுங்காகச் செய்யவில்லை என்றால் அவர்களுக்கு உணவு அளிக்காமல் அடித்து துன்புறுத்துகிறது இந்த கும்பல். இதுதொடர்பாக இந்தியத் தூதரகத்துக்குச் சிலர் தகவல் அளித்த நிலையில் உள்ளூர் அதிகாரிகள் உதவியுடன் அதிரடி ஆய்வில் ஈடுபட்டு 47 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

    மீட்கப்பட்டவர்களில் 30 பேர் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் எஞ்சிய 17 பேரை இந்தியாவுக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருவதாக தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், லாவோஸ் நாட்டில் போலி வேலைவாய்ப்புகளை நம்பி இந்தியர்கள் ஏமாற வேண்டாம் என்று இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×