என் மலர்tooltip icon

    உலகம்

    • ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து சவுதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    • ஆசாத்தின் தண்டனை மறுபரிசீலனை செய்யப்படுமா என்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை.

    சவுதி அரேபிய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து சவுதி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    முகமது அல் காம்தி என்பவர் சவுதி அரேபியாவில் ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் எக்ஸ் தளப்பக்கத்தில் வெறும் 9 பாலோயர்களைக் கொண்டுள்ளார். அதில் அரசுக்கு எதிராக கருத்து பதிவிட்டு வந்தார். இதனால் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு ஜூலை 2023-ம் ஆண்டு அவருக்கு சிறப்பு குற்றவியல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டது. தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். அதனை விசாரித்த கோர்ட், கடந்த ஆகஸ்ட் மாதம், மரண தண்டனையை ரத்து செய்ததது.

    இதனை தொடர்ந்து, ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து சவுதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதனிடையே, இணையத்தில் இதே போன்ற விமர்சனங்களுக்காக காம்தியின் சகோதரர் ஆசாத் அல்-காம்டிக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆசாத்தின் தண்டனை மறுபரிசீலனை செய்யப்படுமா என்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை.

    • ஹிஸ்புல்லா அமைப்பினர் நேற்று இஸ்ரேல் நாட்டின் தலைநகர் டெல் அவிவை குறிவைத்து சக்தி வாய்ந்த ஏவுகணையை வீசினர்.
    • ஏவுகணையை நடுவானில் இடைமறித்து அழித்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

    இஸ்ரேலுக்கும் அதன் அண்டை நாடான லெபனானுக்கும் இடையே தீராப்பகை நிலவியது. குறிப்பாக லெபனானில் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக கடுமையான மோதல்கள் தொடர்ந்து வருகின்றன.

    இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாலஸ்தீனத்தின் காசா நகர் மீது இஸ்ரேல் போர் தொடுக்க தொடங்கிய நாளில் இருந்து, ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் நாட்டின் மீது ராக்கெட் குண்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இதற்கு பதிலடியாக லெபனானில் இஸ்ரேல் வான்தாக்குதல்களை நடத்துகிறது. இருதரப்பு மோதல் பிராந்திய அளவில் பெரிய போராக வெடிக்கும் அபாயம் இருப்பதாக உலக நாடுகள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றன.

    இந்த நிலையில் கடந்த வாரம் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த நூற்றுக்கணக்கான பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள் ஒரே சமயத்தில் வெடிக்க செய்யப்பட்டன. இந்த கோர சம்பவத்தில் 39 பேர் பலியாகினர். சுமார் 4 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த கொடூர தாக்குதல்களின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக குற்றம் சாட்டிய ஹிஸ்புல்லா அமைப்பினர் அதற்கு பதிலடியாக இஸ்ரேல் நாட்டின் மீது தாக்குதல் நடத்த தொடங்கினர்.

    லெபனானின் எல்லையையொட்டிய இஸ்ரேலின் வடக்கு பகுதிகளை குறிவைத்து தாக்குதல்களை முடுக்கிவிட்டனர்.

    அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நேரத்தில் 150-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசி ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

    இதனால் கோபமடைந்த இஸ்ரேல் இதுவரை இல்லாத அளவுக்கு லெபனான் மீது வான்வழி தாக்குதலை தொடுத்தது. கடந்த 2 நாட்களில் லெபனானில் 1,600-க்கும் மேற்பட்ட இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. இதில் 560-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பினர் நேற்று இஸ்ரேல் நாட்டின் தலைநகர் டெல் அவிவை குறிவைத்து சக்தி வாய்ந்த ஏவுகணையை வீசினர்.



    இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் தலைமையகத்தை இலக்காக கொண்டு ஈரானில் தயாரிக்கப்பட்ட காதர் என்கிற நடுத்தர தூர ஏவுகணையை வீசினர். எனினும் அந்த ஏவுகணையை நடுவானில் இடைமறித்து அழித்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

    எனினும் இதுவரை இஸ்ரேலின் வடக்கு பகுதிகளை மட்டுமே இலக்காக கொண்டு ராக்கெட் குண்டுகளை வீசி வந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் தலைநகரை நோக்கி சக்தி வாய்ந்த ஏவுகணையை வீசியது அங்கு பதற்றத்தை அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், லெபனானில் சாத்தியமான தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேலிய இராணுவம் தயாராகி வருவதாக இஸ்ரேலிய ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

    ராணுவ தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி மேலும் கூறுகையில், சமீபத்திய வான்வழித் தாக்குதல்கள் ராணுவம் சாத்தியமான நுழைவுக்கான தரையைத் தயார்படுத்துவதற்கும், ஹிஸ்புல்லாவைத் தொடர்ந்து வீழ்த்துவதற்கும்" வடிவமைக்கப்பட்டுள்ளன என்றார்.

    ஹிஸ்புல்லா தனது தீ வரம்பை விரிவுபடுத்தியுள்ளது, இதனால், அவர்கள் மிகவும் வலுவான பதிலைப் பெறுவார்கள் என்று கூறினார். 

    • ஓரினச்சேர்க்கையாளர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்று.
    • ஒரே பாலின திருமணத்திற்கு அனுமதி அளித்த 3-வது நாடு தாய்லாந்து.

    பாங்காங்:

    தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்டு உள்ளது.

    தென்கிழக்கு ஆசியா நாடுகளின் ஒன்றான தாய்லாந்தில் மன்னராட்சி நடக்கிறது. கடற்கரைகளை அதிகம் கொண்ட இந்த நாட்டின் பொருளாதாரம், சுற்றுலாத்துறையின் வருமானத்தை நம்பி உள்ளது.

    மேலும் வெளிநாட்டவர்களை அதிகளவில் ஈர்க்கும் வகையில் பல்வேறு சலுகைகளை தாய்லாந்து வழங்குகிறது. இதனால் கேளிக்கைகளின் தேசமாக விளங்கும் தாய்லாந்துக்கு ஏராளமான வெளிநாட்டவர்கள் சுற்றுலாவுக்காக செல்கிறார்கள்.

    ஓரினச்சேர்க்கையாளர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்றாகவும் தாய்லாந்து விளங்குகிறது. இருப்பினும் தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு சட்டப்பூர்வமாக அனுமதியளிக்கப்படாமல் இருந்தது. இதனால் ஓரினச்சேர்க்கையாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக கடுமையான எதிர்ப்பை எதிர் கொண்டனர்.

    மேலும் அவர்கள், தங்களுடைய திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்க வலியுறுத்தி தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படலாம் என கருதப்பட்டது.

    இதனையடுத்து தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு அனுமதி அளிக்கப்படுவதற்கான மசோதா அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு பெரும்பான்மையான எம்.பி.க்கள் ஆதரவுடன் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவேற்றப்பட்டது.


    பின்னர் அந்த நாட்டின் மன்னரின் ஒப்புதலுக்காக ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமண சட்டமசோதா அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்தநிலையில் தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமண சட்ட மசோதாவுக்கு அந்த நாட்டின் மன்னர் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் வருகிற ஜனவரி மாதத்தில் இந்த சட்டம் அமலுக்கு வரும் என அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

    தைவான் மற்றும் நேபாளத்திற்கு அடுத்தபடியாக ஆசியாவில் ஒரே பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வ அனுமதி அளிக்கும் 3-வது நாடு என்ற சிறப்பை தாய்லாந்து பெறுகிறது.

    • இனி வரும் காலங்களில் இலங்கையின் சர்வதேச நிலைப்பாடு குறித்து திசநாயக விளக்கம் அளித்துள்ளார்.
    • பிராந்திய பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன

    இலங்கை அதிபராகப் பதவியேற்றுள்ள இடதுசாரி தலைவர் அனுர குமார திசநாயக கொள்கை ரீதியாக சீனாவுக்கே அதிக ஆதரவு அளிப்பார் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இனி வரும் காலங்களில் இலங்கையின் சர்வதேச நிலைப்பாடு குறித்து திசநாயக விளக்கம் அளித்துள்ளார்.

    அதிகரித்து வரும் பிராந்திய பிரச்சனைகளுக்கு இடையே இலங்கையின் வெளியுறவுக் கொள்கை நாட்டின் இறையாண்மையைப் பேணுவதையே பிரதானமாக கொண்டு அமையும். புவிசார் அரசியல் சண்டைகளில் நாங்கள் பங்குபெறப் போவதில்லை. எந்த பக்கமும் நாங்கள் சாயமாட்டோம்.

     

    குறிப்பாக இந்தியா சீனா இடையில் நாங்கள் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை. இரண்டு நாடுகளின் நடப்பையும் நாங்கள் போற்றுகிறோம். எங்கள் அரசின் கீழ் இனி வரும் காலங்களில் இரு நாடுகளுடனும் நெருக்கத்தை அதிகரிக்க முயற்சிப்போம். மேலும், ஐரோப்பிய யூனியன், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடனும் நட்புறவு ஏற்படுத்த விழைகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

    • அவருக்கு மெலோனியும் தனது எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
    • பல்வேறு காதல் உறவுகள் கொண்டவராக அறியப்படும் எலான் மஸ்க் மெலோனியுடன் டேட்டிங் செய்கிறாரா என்ற கேள்வி எழுந்தது

    உலக பணக்காரருக்கும் தொழிலதிபருமான 53 வயதாகும் எலான் மஸ்க்கும்  47 வயதாகும் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியோ மெலோனியும் டேட்டிங் செய்வதாக சமூக வலைதளங்களில் அவர்கள் இருவரின் புகைப்படங்கள் பரவி வருகிறது. நியூயார்க்கில் சம்பீத்தில் அட்லாண்டிக் கவுன்சில் குளோபல் சிட்டிசன் விருது வழங்கும் விழா நடந்தது. இதில்  பிரதமர் மெலோனிக்கு எலான் மஸ்க் விருது வழங்கி பாராட்டி பேசியுள்ளார்.

     

    வெளிப்புறத்தை விட உள்ளுக்குக்குள் அதிக அழகாக இருக்கும் ஒருவருக்கு, இத்தாலி பிரதமராக தனது பணியை சிறப்பாக செய்து வரும் நான் பார்த்து வியக்கும் மெலோனிக்கு இந்த விருதை வழங்குவதில் மகிழ்ச்சி. மெலோனி உண்மையான நேர்மையான ஒருவர் என்று மஸ்க் அந்த விழாவில் மெலோனியை புகழ்ந்து தள்ளியுள்ளார். அவருக்கு மெலோனியும் தனது எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

    பல்வேறு காதல் உறவுகள் கொண்டவராக அறியப்படும் எலான் மஸ்க் மெலோனியுடன் டேட்டிங் செய்கிறாரா என்று அவர் மெலோனியை புகழும் வீடியோவையும் இருவரும் இருக்கும் புகைப்படங்களையும்  பகிர்ந்து பலர் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் எலான் மஸ்க் அதை முற்றிலுமாக மறுத்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் என் தாயாருடன் பங்கேற்றேன். அதிபர் மெலோனியுடன் எந்த காதல் உறவும் இல்லை என்று மஸ்க் விளக்கம் அளித்துள்ளார்.

     

    • நமக்கும் நமது நேச நாடுகளுக்கும் உருவாகியுள்ள புதிய அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
    • 1,572 அணு ஆயுதங்கள் ஏவுகணைகளில் பொருத்தப்பட்டு முக்கிய இடங்களில் எந்நேரமும் தாக்குதலுக்கு தயார் நிலையில் உள்ளன

    2022 ஆம் ஆண்டு தொடங்கிய ரஷிய உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகளைக் கடந்த நீடித்து வருகிறது. மேற்கு நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் சேர உக்ரைன் முயற்சித்ததால் தங்களுக்கு ஆபத்து என்று கூறி ரஷியா இந்த போரை துவங்கியது. ரஷியா பக்கம் வட கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகள் இருக்கின்றன. போரில் உக்ரைனுக்கு பக்க பலமாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஆயுத மற்றும் பொருளாதார ரீதியாக உக்ரைனுக்கு உதவி வருகிறது. உக்ரைனுக்கு பிரிட்டன் ஸ்டார்ம் ஷேடோ என்ற அதிநவீன ஏவுகணைகளை வழங்கியுள்ளது. இதை ரஷியா மீது உக்ரைன் பய்னபடுத்தும்பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு புதின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

     

    இந்நிலையில்தான் இந்த ஒட்டுமொத்த போரானது எந்நேரமும் மூன்றாம் உலகப் போருக்கு இட்டுச் செல்லும் என்று நிலவி வரும் அச்சத்துக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் ரஷிய அதிபர் புதின் முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  இன்று தொலைக்காட்சி வாயிலாக பேசிய புதின், அதிகரித்து வரும் சர்வதேச பாதுகாப்பு அச்சறுத்தல் காரணமாக ரஷியாவின் அணு ஆயுதங்கள் பயன்பாடு [பயன்படுத்தாமல் இருப்பது உள்ளிட்ட கொள்கைகளில்]  திருத்தங்களைக் கொண்டுவர வேண்டியுள்ளது.

    சர்வதேச ராணுவ மற்றும் அரசியல் சூழல் தொடர்ச்சியாக மாறி வருகிறது, அதற்கு ஏற்ற முடிவுகளை நாம் எடுத்தாக வேண்டும். நமக்கும் நமது நேச நாடுகளுக்கும் உருவாகியுள்ள புதிய அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் ரஷிய ராணுவ தளபதிகளுடனான கூட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

    அணு ஆயுதங்களைக் கொண்டுள்ள நாடுகள் உக்ரைனுக்கு உதவி வருவதால் உக்ரைன் ரஷியாவை எதிர்ப்பது என்பது உக்ரைன் வழியாக அதற்கு உதவும் அணு ஆயுத நேரடியாக ரஷியாவை எதிர்ப்பதாகக் கருதப்படும். எனவே தாங்களும் தங்களின் அணு ஆயுதங்களை உபயோகிக்கும் நிர்பந்தம் ஏற்படலாம் என்ற வகையில் புதின் பேசியுள்ளது மேற்கத்திய நாடுகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

     

    உலகில் உள்ள மொத்த அணு ஆயுதங்களில், 8-0 சதவீதம், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் உள்ளன. ரஷியாவிடம் மட்டுமே 6,732 அணு ஆயுதங்கள் உள்ளன. இதில், 1,572 அணு ஆயுதங்கள் ஏவுகணைகளில் பொருத்தப்பட்டு முக்கிய இடங்களில் எந்நேரமும் தாக்குதலுக்கு தயார் நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. 

    • கமலா ஹாரிஸின் பிரச்சார அலுவலகத்தின் மீதும் தாக்குதல் நடந்துள்ளது.
    • ஏற்கனவே என்னை கொல்வதற்காக ஈரான் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தது.

    நவம்பர் 5 ஆம் தேதி நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் மீது அடுத்தடுத்து கொலை முயற்சிகள் நடந்து வருவது குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஜூலை 13 ஆம் தேதி பென்சில்வேனியாவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் மேத்யூ க்ரூக்ஸ் என்ற 20 வயது இளைஞன் மேடையில் பேசிக்கொண்டிருந்த டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினான். காதில் குண்டு உரசிச்ச சென்ற நிலையில் நூலிழையில் டிரம்ப் உயிர் தப்பினார். மேத்யூ க்ரூக்ஸ் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டான்.

     

     

    இதனைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி புளோரிடாவில் தனது சொந்தமான கோல்ப் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த டிரம்ப்பை மீது ரயான் வெஸ்லி ரூத் என்ற 58 வயது நபர் ஏகே 47 துப்பாக்கியால் சுட முயன்றார். ஆனால் இந்த முயற்சி தோல்வியில் முடியவே தப்பியோடிய அவரை போலீஸ் துரத்திப் பிடித்தது. தொடர்ந்து டிரம்ப் குறிவைக்கப்பட்டு வரும் நிலையில் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸின் பிரச்சார அலுவலகத்தின் மீதும் தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதல்களுக்கு வெளிநாட்டு சதி காரணமா என்ற கேள்விகள் எழுந்தவரும் நிலையில் தனது உயிருக்கு ஈரான் நாட்டினால் அதிக அச்சுறுத்தல் இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார்.

     

    தனது சமூக வலைதள பக்கத்தில் டிரம்ப் கூறியதாவது, எனது உயிருக்கு ஈரானால் அச்சுறுத்தல் உள்ளது. மொத்த அமெரிக்க ராணுவமும் விழுப்புடன் காத்திருக்கிறது. ஏற்கனவே என்னை கொல்வதற்காக ஈரான் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. ஆனால் மீண்டும் அவர்கள் என்னை கொல்ல முயற்சிக்கக்கூடும். இது யாருக்கும் நல்லதல்ல. இதற்கு முன் இருந்ததை விட என்னைச் சுற்று அதிக பாதுகாவலர்கள் ஆயுதத்துடன் எந்நேரமும் காவலுக்கு இருக்க வேண்டிய சூழல் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் வைத்து கொல்லப்பட்டதும், அதற்கு இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று அமெரிக்கா ஈரானுக்கு அழுத்தம் கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது. 

    • இஸ்ரேலின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் அந்நாட்டின் தலைநகர் டெல் அவிவ் மீது பேலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
    • இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் தலைமையகத்துக்குக் குறிவைத்துத் தாக்கியதாக ஹிஸ்புல்லா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்களின் தளங்களைக் குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் லெபனானில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நூறைத் தாண்டியுள்ளது. கடந்த வாரம் ஹிஸ்புல்லாவினரின் தொலைத்தொடர்பு சாதனங்கள் வெடித்துச் சிதறியதால் நிலை தடுமாறிய ஹிஸ்புல்லா தற்போது இஸ்ரேல் மீதான தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.

    இஸ்ரேலின் தாக்குதலில் தங்களின் கமாண்டர் இறந்தாலும் அதனால் தங்களின் அமைப்பு ஒட்டுமொத்தமாக அழியும் என்று எண்ணிவிடக்கூடாது என்று ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நசரல்லா தெரிவித்துள்ளார். இந்நிலையில் தங்கள் மீதான தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் நடதத் தொடங்கியுள்ள ஹிஸ்புல்லா இதுவரை வடக்கு இஸ்ரேல் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளிலேயே தாக்குதல் நடத்தியிருந்த நிலையில் தற்போது இஸ்ரேலின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் அந்நாட்டின் தலைநகர் டெல் அவிவ் மீது பேலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

    இந்த பேலிஸ்ட்டிக் தாக்குதலை ஆன்டி- பேலிஸ்டிக் மிசைல்கள் மூலம்  இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. டெல் அவிவ் நகரின் உள்ள இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் தலைமையகத்துக்குக் குறிவைத்துத் தாக்கியதாக ஹிஸ்புல்லா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடந்த பேஜர் தாக்குதல்களுக்கும் தங்களது தளபதிகளைக் குறிவைத்துக் கொன்றதற்கும் மோசாட்டை [பழிதீர்க்க இந்த தாக்குதலை நடாத்தியுள்ளதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலால் தலைநகர் டெல் அவிவில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

     

    • மாமாவின் சில எலும்புகளை எடுத்து, அந்தப் பகுதியில் உள்ள குப்பைக் குவியலில் வைத்தார்.
    • போலீசார் விசாரணை தொடங்கிய நிலையில், இளைஞர் குற்றவாளி என்று கண்டுபிடிக்கப்பட்டது.

    வியட்நாமில், சூதாட்ட கடனை அடைப்பதற்காக உறவினரின் கல்லறையை தோண்டி, அவரின் எலும்புகளை வைத்து மிரட்டி பணம் பறிக்க முயன்ற லூ தான் நாம் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    வடக்கு வியட்நாமில் உள்ள தான் ஹோ மாகாணத்தைச் சேர்ந்த லூ தான் நாம் கடந்த செப்டம்பர் 9 அன்று தனது மாமாவின் கல்லறையில் 20 செ.மீ ஆழத்தில் குழி தோண்டினார். அவர் தனது மாமாவின் சில எலும்புகளை எடுத்து, அந்தப் பகுதியில் உள்ள குப்பைக் குவியலில் வைத்தார்.

    இந்த இளைஞர் அடுத்த நாள் தொலைபேசியில் தனது உறவினரின் மனைவிக்கு மிரட்டல் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதில், எலும்புகளுக்குப் பதில் பணம் கேட்ட அவர், போலீஸைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார்.

    இதையடுத்து, உறவினர்கள் கல்லறைக்குச் சென்று ஆய்வு செய்தனர். அங்கு, உண்மையாகவே சவப்பெட்டியில் துளை இருப்பதைக் கண்டுபிடித்தனர். பிறகு, உடனடியாக சட்ட அமலாக்கப் பணியாளர்களை அணுகினர்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை தொடங்கிய நிலையில், இளைஞர் குற்றவாளி என்று கண்டுபிடிக்கப்பட்டது. செப்டம்பர் 12 அன்று இளைஞர் கடுமையான அவமதிப்பு மற்றும் மிரட்டி பணம் பறித்ததற்காக கைது செய்யப்பட்டார்.

    தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர், பெரும் கடனில் இருந்ததால் இந்த முயற்சியை எடுத்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். அவரது தண்டனை குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    போலீசார் எலும்புகளை கண்டுபிடித்து அவரது உறவினரிடம் ஒப்படைத்தனர்.

    வியட்நாமிய பாரம்பரியத்தில் கல்லறை அவமதிப்பு மிகவும் அவமரியாதையாக கருகல்லறையை தோண்டி எடுப்பது உயிரிழந்தவரை தொந்தரவு செய்வதாகவும், உயிருடன் இருப்பவர்களுக்கு பிரச்னையை உருவாக்குவதாகவும் வியட்நாம் மக்கள் நம்புகின்றனர்.

    • இஸ்ரேலிய ஏவுகணை வீட்டைத் தாக்கியதில் அவர் காயமடைந்தார்.
    • சமநிலையை இழந்த ஊடகவியலாளர் தூக்கி வீசப்பட்டார்.

    லெபனான் நாட்டு ஊடகவியலாளர் ஒருவர் தொலைக்காட்சி நேரலையில் நேர்காணல் நடத்திக் கொண்டிருந்தபோது இஸ்ரேலிய ஏவுகணை ஒன்று அவரது வீட்டைத் தாக்கியதில் அவர் காயமடைந்தார். மிராயா இன்டர்நேஷனல் நெட்வொர்க்கின் தலைமை ஆசிரியர் ஃபாடி பௌதயா, ஏவுகணை அவரது வீட்டைத் தாக்கிய நேரம், சமநிலையை இழந்த ஊடகவியலாளர் தூக்கி வீசப்பட்டார்.

    நேரலையில், அரங்கேறிய இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. வீடியோவின் படி, நேரலையில் பௌதயா பேசிக் கொண்டிருந்த போது அவரது வீட்டை ஏவுகணை ஒன்று தாக்கியது. திடீர் தாக்குதலை அடுத்து அலறிய பௌதயா வீடியோவை துண்டித்ததாக தெரிகிறது.

    அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் அவருக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டது. நேரலையில், இருக்கும் போது தாக்குதலில் சிக்கிய செய்தியாளருக்கு என்ன ஆனது என எக்ஸ் தளத்தில் பலரும் கேள்விகள் மற்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். தாக்குதலுக்கு பின் சிறிது நேரம் கழித்து ஆன்லைன் வந்த பௌதயா ஃபாளோயர்களுக்கு பதில் அளித்தார்.

    அதில், "தொலைபேசியில் அழைத்தவர்கள், குறுஞ்செய்தி அனுப்பியவர்கள், செக்-இன் செய்தவர்கள் மற்றும் ஏதோ உணர்ச்சியை உணர்ந்த அனைவருக்கும் நன்றி. கடவுளுக்கு நன்றி, நான் நலமாக இருக்கிறேன், கடவுள் மற்றும் அவர் எங்களுக்கு அளித்த ஆசீர்வாதங்களுக்கு நன்றி. எதிர்ப்புக்கு ஆதரவாக எங்கள் ஊடக கடமையைத் தொடர நாங்கள் திரும்புகிறோம், அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி," " என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 



    • நஷ்டத்தை ஈடுகட்ட 51% முதல் 100% விமான நிறுவனங்களை விற்க முடிவு.
    • தேசிய சட்டமன்ற தனியார் மயமாக்கல் குழுவின் தலைவர் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தை வரும் அக். 1-ம் தேதி ஏலம் விடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நஷ்டத்தை ஈடுகட்ட 51% முதல் 100% விமான நிறுவனங்களை விற்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பாகிஸ்தானின் தேசிய விமான நிறுவன ஏலம் அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய சட்டமன்ற தனியார் மயமாக்கல் குழுவின் தலைவர் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.

    மேலும், "பாகிஸ்தான் சர்வதேச விமான நிவறுனம் ஏலம் அடுத்த மாதம் முதல் தேதி இறுதி செய்யப்படும்" என்று தேசிய சட்டமன்ற உறுப்பினர் ஃபரூக் சத்தார் குழுவின் அமர்வில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    சர்வதேச நாணய நிதியத்தால் வலியுறுத்தப்பட்ட சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, நஷ்டத்தில் இயங்கும் விமான நிறுவனத்தில் 51% முதல் 100% வரை விற்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாகிஸ்தானை சேர்ந்த பலர் சவுதி அரேபியாவிற்குள் பிச்சை எடுக்க வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
    • பிச்சை எடுக்க நுழைபவர்களை அரபு அமீரகம் பிடித்து மீண்டும் பாகிஸ்தானுக்கு அனுப்பி வருகிறது.

    துபாய்:

    பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு, வேலைவாய்ப்பின்மை என பல பிரச்சனைகளை அந்நாட்டு மக்கள் சந்தித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, புனித யாத்திரை செல்வதாக அனுமதி வாங்கி அரபு நாட்டுக்குச் சென்று அங்கு பாகிஸ்தானியர்கள் பலர் பிச்சை எடுத்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

    இவ்வாறு புனித யாத்திரை பெயரைச் சொல்லி பிச்சை எடுக்க நுழையும் பாகிஸ்தானியர்களை அரபு அமீரகம் பிடித்து மீண்டும் பாகிஸ்தானுக்கு அனுப்பி வருகிறது.

    மேலும், அரபு அமீரகத்தில் பிடிபட்ட பிச்சைக்காரர்களில் 90 சதவீதம் பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என அரபு அமீரகத்திற்கான பாகிஸ்தான் வெளியுறவு அதிகாரி தெரிவித்தார்.

    இந்நிலையில், புனிதயாத்திரை விசாவின்கீழ் பாகிஸ்தானிய பிச்சைக்காரர்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி சவுதி ஹஜ் அமைச்சகம் பாகிஸ்தானின் மத விவகார அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.

    மத யாத்திரை என்ற போர்வையில் சவுதி அரேபியாவுக்கு பிச்சைக்காரர்கள் செல்வதைத் தடுக்கும் வழிகளைக் கண்டறியுமாறும் பாகிஸ்தான் அரசிடம் அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

    ×