என் மலர்
உலகம்
- ஹிஸ்புல்லா மீது முழு வீச்சில் தாக்குதல் தொடரும் என நேதன்யாகு ஐ.நா.வில் பேச்சு.
- லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா தலைமை அலுவலகம் மீது பயங்கர தாக்குதல்.
காசா மீது தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல், தற்போது வடக்குப் பகுதியில் இருந்து வெளியேறிய இஸ்ரேல் மக்களை மீண்டும் பாதுகாப்பாக அதே பகுதியில் குடியமர்த்த முடிவு செய்துள்ளது. இதனால் லெபனான் தெற்குப் பகுதியில் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
கடந்த வாரம் ஏற்கனவே நடத்திய பயங்கர தாக்குதலில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலையில் நேற்று லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா தலைமை அலுவலகம் மீது பயங்கர வான்தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் கட்டடம் கடும் சேதம் அடைந்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் ஹஸ்ரல்லா உள்ளிட்டோரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது.
இந்த தாக்குதலில் குறைந்தது 6 பேர் பலியாகியிருக்கலாம். 91 பேர் காயம் அடைந்துள்ளனர் என லெபனான் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐ.நா. சபையில் உரையாற்றிய நேதன்யாகு, ஹிஸ்புல்லாவிற்கு எதிரான தாக்குதல் முழுவீச்சில் தொடரும் எனக் கூறினார். அவர் பேசிய உடனே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நேரடி போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- ஹாரி பாட்டர் திரைப்பட சீரிஸில் பேராசிரியர் மினெர்வா மெக்கோனகல் கதாபாத்திரத்தில் மேகி ஸ்மித் நடித்திருந்தார்
- 60 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இயங்கி வந்த மேகி ஸ்மித் 60 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
ஜே.கே. ரவுலிங் எழுதிய நாவல்களைத் தழுவி உருவாக்கப்பட்ட ஹாரி பாட்டர் திரைப்பட சீரிஸில் பேராசிரியர் மினெர்வா மெக்கோனகல் கதாபாத்திரத்தில் நடித்த பிரிட்டிஷ் நடிகை மேகி ஸ்மித் [89 வயது]. இவர் வயது மூப்பு காரணமாக இன்று [செப்டம்பர் 27] அதிகாலை மருத்துவமனையில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
2 மகன்கள் மற்றும் 5 பேரக்குழந்தைகளை கொண்ட மேகி ஸ்மித் குடும்பத்தினர் முன்னிலையில் அமைதியான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுளது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இயங்கி வந்த மேகி ஸ்மித் 60 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தி பிரைம் ஆஃப் மிஸ் ஜீன் பிராடி(The Prime of Miss Jean Brodie) மற்றும் கலிபோர்னியா சூட்(California Suite) ஆகிய படங்களுக்காக 2 ஆஸ்கார் விருதுகளையும் பெற்றுள்ளார். பேராசிரியர் கதாபாத்திரம் மூலம் காலத்தால் அழியாது என்றும் வாழ்வார் என்று ஹேரி பாட்டர் ரசிகர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

- விலைவாசி உயர்வு, அரசியல் சர்ச்சைகள் ஆகியவற்றால் ஜப்பான் மக்கள் அதிருப்தியில் இருந்தனர்.
- முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இம்முறை 9 பேர் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட்டனர்
ஜப்பானில் லிபரல் டெமாக்ரடிக் கட்சியைச் (LDP) சேர்ந்த பிரதமர் ஃபுமியோ கிஷிடா (Fumio Kishida) தலைமையிலான ஆட்சி கடந்த 2021 அக்டோபர் முதல் நடந்து வந்தது. ஊழல் மற்றும் மோசடி புகார்களில் சிக்கிய கிஷிடாவின் ஆட்சியில் விலைவாசி உயர்வு, அரசியல் சர்ச்சைகள் ஆகியவற்றால் ஜப்பான் மக்கள் அதிருப்தியில் இருந்தனர்.

இதனால் மக்களுக்கு தன் மீது நமபிகை இல்லையென்றால் சுமுகமான ஆட்சியை வழங்க முடியாது என்று கூறி தான் பிரதமர் பதவியில் இருந்து விலகிக்கொள்வதாக கிஷிடா கடந்த மாதம் அறிவித்திருந்தார். அதன்படி கிஷிடா பதவி விலகிய நிலையில் ஆளும் கட்சியில் சார்பில் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான உட்கட்சித் தேர்தல் இன்று [செப்டம்பர் 27] பிற்பகலில் நடைபெற்றது.
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இம்முறை 9 பேர் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட்டனர். அதில் 3 பேர் இறுதிப் பட்டியலுக்குத் தேர்வாகிய நிலையில் வேட்பாளராகப் போட்டியிட்ட ஜப்பான் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஷிகெரு இஷிபா (Shigeru Ishiba) (67வயது) அதிக வாக்குகள் பெற்று கட்சி உறுப்பினர்களால் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதன்படி வரும் அக்டோபர் 1 ஆம் தேதி ஜப்பான் பிரதமராக பதவியேற்க உள்ளார். அரசியல் குடும்பப் பின்னணியில் இருந்து வந்த இஷிபா டோட்டோரி கிராமப்புற பகுதியை சேர்நதவர் ஆவார். 1986 இல் தனது 29 வது வயதில் LDP நாடளுமன்ற உறுப்பினரான இஷிபா பாதுகாப்பு மட்டுமின்றி விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் பதவிகளையும் வகித்த கட்சியின் மூத்த தலைவர் ஆவார்.
மிதவாத போக்கை கொண்டுள்ள இஷிபா ஜப்பான் அணுசக்தியை சார்ந்திருப்பதை எதிர்ப்பவர் ஆவார். சீனா, வட கோரிய நாடுகளால் அதிகரித்து வரும் ஆபத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருபவராக இஷிபா உள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு தேர்தலில் அப்போதைய பிரதமர் சின்ஷோ அபேவை எதிர்த்து தோல்வியடைந்தார். இந்நிலையில் தற்போது பிரதமராகியுள்ள ஷிகெரு இஷிபா தலைமையிலான ஜப்பானின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
- Task, Incentive Target, Apprisal உள்ளிட்டவை கார்ப்பரேட் ஊழியர்களைப் பிணைக்கும் சங்கிலிகளாக இறுகி வருகிறது.
- பெண்ணின் உயிரிழப்புக்கு நிறுவனம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதிலும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் வலுப்பெற்றுள்ள நிலையில் ஊழியர்கள் நவீன அடிமைத்தனத்தில் உழன்று வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதை உறுதிப்படுத்தும் வகையில் பணிச்சுமை மரணங்கள் தொடர்கதையாகி வருகிறது. Task, Incentive Target, Apprisal உள்ளிட்டவை கார்ப்பரேட் ஊழியர்களைப் பிணைக்கும் சங்கிலிகளாக இறுகி வருகிறது. கடந்த வாரம் புனேவின் எர்னஸ்ட் எங் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 26 வயது பணிச்சுமை மற்றும் பணியிட அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் உ.பியில் தனியார் வங்கியில் பணியாற்றிவந்த பெண் ஊழியர் வேலையில் இருக்கும்போதே சேரில் இருந்து சரிந்து விழுந்து உயிரிழந்தார். இந்நிலையில் தாய்லாந்தைச் சேர்ந்த 30 வயது பெண் Sick லீவு கிடைக்காமல் மேனேஜர் முன்னையே நிலைகுலைந்து விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தில் சமுத் பிராகன் [Samut Prakan] மாகாணத்தில் இயங்கி வரும் எலக்ட்ரானிக் பொருட்கள் தொடர்புடைய பிளான்டில் வேலை செய்தி வந்த மே [May] என்ற 30 வயது பெண் ஊழியர் உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 5 முதல் அவரது உடல்நிலை மோசமான நிலையில் மெடிக்கல் சர்டிபிகேட்டை பணிபுரியும் நிறுவனத்தில் சமர்பித்து செப்டம்பர் 5 முதல் 8 ஆம் தேதி வரை லீவ் எடுத்துவிட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். டிஸ்சார்ஜ் ஆன பிறகு செப்டம்பர் 12 லீவு வரை ஓய்வுக்காக மேலும் 2 நாட்கள் லீவு வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் அதிக நாட்கள் லீவு எடுத்து விட்டதால் இனி லீவ் தர முடியாது என்றும் கூடுதலாக செப்டம்பர் 9 முதல் 12 வரை எடுத்த லீவுக்கு மெடிக்கல் சர்டிபிகேட் கொண்டு வந்து கொடுத்துவிட்டு வேலை செய்யும்படியும் மேனேஜர் உத்தரவிட்டுள்ளார்.
வேலையை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி மேலும் ஒரு மெடிக்கல் சர்டிபிகேட்டுடன் வந்து மேனேஜரிடம் கொடுத்துவிட்டு வேலை செய்யத் தொடங்கிய 20 நிமிடத்திற்குள் சுயநினைவை இழந்து மயங்கி விழுந்துள்ளார். தொடந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அடுத்த நாளே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சக ஊழியர்கள் மூலம் இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில் மே வேலை பார்த்து வந்த நிறுவனம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.
- நியூயார்க்கில் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் 79-வது கூட்டம் நடைபெற்றது.
- பாதுகாப்பு கவுன்சில் விரிவாக்கப்படுவதற்கு பிரான்ஸ் ஆதரவாக உள்ளது என்றார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் 5 நிரந்தர உறுப்பினர்களையும், 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளையும் கொண்டுள்ளது. அவை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையால் இரண்டு வருட காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
5 நிரந்திர உறுப்பினர்களான ரஷியா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகியவை எந்தவொரு முக்கிய தீர்மானத்தையும் வீட்டோ செய்ய அதிகாரம் கொண்டவை.
இந்த நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் ஆதரவு தெரிவித்து இந்த நிலையில், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) நிரந்தர உறுப்பினராக இந்தியாவை இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆதரித்தார்.
நியூயார்க்கில் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் 79-வது கூட்டத்தின் பொது விவாதத்தில் உரையாற்றிய இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர், "அரசியலால் முடங்கிவிடாமல், செயல்படத் தயாராக இருக்கும், அதிக பிரதிநிதித்துவ அமைப்பாக ஐ.நா. மாற வேண்டும். பிரேசில், இந்தியா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகியவை நிரந்தர உறுப்பினர்களாகக் காண விரும்புகிறோம். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கும் அதிக இடங்கள் இருக்க வேண்டும்.
நம்மிடம் ஒரு பாதுகாப்பு கவுன்சில் தடைசெய்யப்பட்டிருக்கும் வரை, ஒவ்வொரு தரப்பினரின் நலன்களுக்கும் ஏற்ப, நாம் முன்னோக்கிச் செல்வதில் சிரமம் இருக்கும் என்று கூறுவேன். எனவே இந்த ஐக்கிய நாடுகள் சபையை மிகவும் பயனுள்ளதாக்குவோம், முதலில் அவற்றை அதிக பிரதிநிதிகளாக்குவோம். அதனால்தான் பாதுகாப்பு கவுன்சில் விரிவாக்கப்படுவதற்கு பிரான்ஸ் ஆதரவாக உள்ளது என்றார்.
- ஹிஸ்புல்லா மீது முழு சக்தியுடன் தாக்குதல் தொடரும் என நேதன்யாகு அறிவிப்பு.
- ஹிஸ்புல்லாவின் இரண்டு முக்கிய கமாண்டர்களை இஸ்ரேல் வான் தாக்குதல் மூலம் கொலை செய்துள்ளது.
இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது தாக்குதல் நடத்தினர். காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் வடக்குப் பகுதியில் உள்ள லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
அதனால் இஸ்ரேல் வடக்குப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வடக்குப் பகுதியில் இருந்து வெளியேறிய மக்களை மீண்டும் அதே இடத்தில் பாதுகாப்பாக குடிமயர்த்துவதுதான் இலக்கு என இஸ்ரேல் தெரிவித்தது.
அந்த அறிவிப்பு வெளியான அடுத்தடுத்த நாளில் ஹிஸ்புல்லா பயன்படுத்தி வந்த பேஜர்கள், வாக்கி டாக்கிகள் வெடித்து சிதறின. அதன்பிறகு ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.
ஹிஸ்புல்லா அமைப்பின் இரண்டு முக்கிய கமாண்டர்களை இஸ்ரேல் தாக்கி கொன்றுள்ளது. மூன்று நாட்களாக பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்துமாறு ஈரானை வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், தற்போது அதற்கான நேரம் இல்லை என இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரான் மண்ணில் கொல்லப்பட்டபோது, இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் சூளுரைத்திருந்தது. கொலை செய்யப்பட்ட ஓரிரு நாளில் இஸ்ரேல் மீது 350-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. அதன்பின் பெரிய அளவில் தாக்குதல் நடத்தவில்லை.
இஸ்ரேல் பாதுகாப்புப்படை, ஹிஸ்புல்லா உடனான மோதல் இணையும் வகையிலான எந்தவித காரணத்தையும் ஈரானுக்கு கொடுத்துவிட வேண்டாம் எனக் கூறியதாக இஸ்ரேலின் மூத்த அதிகாரிகள் ஒருவர் தெரிவித்துள்ளார்.
- துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
- இதுவரை 385 துப்பாக்கி சூடு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. ஆனாலும் துப்பாக்கி சூடு தொடர்ந்து வருகிறது.
குறிப்பாக பள்ளிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. அமெரிக்காவில் இந்த ஆண்டு இதுவரை 385 துப்பாக்கி சூடு சம்ப வங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
துப்பாக்கி வன்முறையை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்தார்.
இந்தநிலையில் அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர அதிபருக்கான நிறைவேற்று அதிகாரம் மூலம் புதிய சட்டத்தை கொண்டு வரப்போவதாக ஜோபைடன் அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-
துப்பாக்கி கலாச்சாரம் மற்றும் அச்சுறுத்தல்களை முறியடிப்பதற்கான ஒரு நிர்வாக உத்தரவில் கையெ ழுத்திடுவேன். பள்ளிகளில் துப்பாக்கி சூட்டை தடுப்பதற்கான பயிற்சிகளுக்கு உதவ எனது அமைச்சரவைக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்தார்.
பின்னர் ஜோபைடன் கூறும்போது, அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையை முடிவுக்கு கொண்டு வர, முதலில் அமெரிக்காவில் துப்பாக்கி பிரச்சினை பற்றி நாம் வெளிப்படையாக பேச வேண்டும்.
அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையால் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை, நோய் அல்லது விபத்துகளில் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகம். இது மிகவும் வேதனையானது என்றார்.
இதற்கிடையே துப்பாக்கி சூடு தாக்குதலை தடுப்பதற்கான புதிய சட்டத்தில் ஜோபைடன் கையெழுத்திட்டுள்ளார்.
- ஒரு குடும்பத்தின் நான்கு உறுப்பினர்களைக் கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு 2014-ல் விடுவிக்கப்பட்டார்.
- தண்டனையை ஆதாரங்களின் அடிப்படையில் மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மரண தண்டவை வழங்கப்பட்டு உலகின் மிக நீண்ட காலத்தை ஜெயிலில் கழித்ததாகக் கூறப்படும் ஜப்பானியர் ஒருவர் நேற்று கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
1966-ம் ஆண்டு மத்திய ஜப்பானியப் பகுதியில் நான்கு பேர் கொல்லப்பட்ட வழக்கில், 88 வயதான இவாவோ ஹகமடாவை ஷிசுவோகா மாவட்ட நீதிமன்றம் விடுவித்தது.
நீதிமன்ற அறையில் "குற்றவாளி அல்ல" என்ற வார்த்தைகளைக் கேட்பது இனிமையாக இருந்தது, தனது தம்பியின் பெயரை அழிக்க பல தசாப்தங்களாக போராடியதாகவும், அதைக் கேட்டபோது, மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மகிழ்ச்சியடைந்தேன், என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை என்று இவாவோ ஹகமடா சகோதரர் கூறினார்.
முன்னாள் ஜப்பானிய தொழில்முறை குத்துச்சண்டை வீரர் இவாவோ ஹகமடா (எல்), 1966-ல் ஒரு குடும்பத்தின் நான்கு உறுப்பினர்களைக் கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு 2014-ல் விடுவிக்கப்பட்டார். குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரது தண்டனையை ஆதாரங்களின் அடிப்படையில் மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவர் தண்டனையிலிருந்து விடுவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- நெதன்யாகுவின் நிலைப்பாடு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட போர்நிறுத்த முன்மொழிவுக்கான நம்பிக்கையை தகர்த்தது.
- லெபனான் தெற்குப்பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி கொல்லப்பட்டார்.
இஸ்ரேலுக்கும் அதன் அண்டை நாடான லெபனானுக்கும் இடையே தீராப்பகை நிலவியது. குறிப்பாக லெபனானில் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக கடுமையான மோதல்கள் தொடர்ந்து வருகின்றன.
இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாலஸ்தீனத்தின் காசா நகர் மீது இஸ்ரேல் போர் தொடுக்க தொடங்கிய நாளில் இருந்து, ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் நாட்டின் மீது ராக்கெட் குண்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதற்கு பதிலடியாக லெபனானில் இஸ்ரேல் வான்தாக்குதல்களை நடத்துகிறது. இருதரப்பு மோதல் பிராந்திய அளவில் பெரிய போராக வெடிக்கும் அபாயம் இருப்பதாக உலக நாடுகள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றன.
இருதரப்பினருக்கும் இடையே நடைபெற்று வரும் தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான முழு வலிமையான ராணுவத் தாக்குதல்களை, அதன் ராக்கெட் வீச்சை நிறுத்தும் வரை தொடர இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், நாங்கள் முழு பலத்துடன் ஹிஸ்புல்லாவைத் தொடர்ந்து தாக்குவோம். எங்கள் எல்லா இலக்குகளையும் அடையும் வரை நாங்கள் நிறுத்த மாட்டோம், அவற்றில் முக்கியமானது வடக்கில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளுக்கு பாதுகாப்பாக திரும்புவது என்றார்.
நேதன்யாகுவின் இந்த நிலைப்பாடு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட போர்நிறுத்த முன்மொழிவுக்கான நம்பிக்கையை தகர்த்தது.
முன்னதாக, அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐ.நா. மாநாட்டின் இடையே அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் இஸ்ரேல்-ஹிஸ்புல்லா மோதல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அமைதி பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு ஏதுவாக 21 நாள் போர் நிறுத்தத்தை உடனடியாக அறிவிக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர்.
லெபனான் தெற்குப்பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- குட்டி பென்குயின் தற்போது பூங்காவின் முக்கிய அங்கமாக மாறி உள்ளது.
- ‘பெஸ்டோ’ விளையாடி மகிழுவது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வலைத்தளவாசிகளின் அன்பை பெற்று வருகிறது.
ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் பிரபல உயிரியல் பூங்கா உள்ளது. வனவிலங்குகள் மட்டுமின்றி டால்பின்கள், கடல் சிங்கம், நீர்நாய் போன்ற அரியவகை நீர்வாழ் மிருகங்களும் இங்கு உள்ளன.
குறிப்பாக அந்த பூங்காவில் வடதுருவங்களில் உள்ளது போல பனிக்கட்டிகளால் ஆன நிலப்பரப்பை உண்டாக்கி பென்குயின்களை பரமாரித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு அங்கு பென்குயின் ஒன்று புதிதாக பிறந்தது. 'பெஸ்டோ' என பெயரிட்டு பூங்கா ஊழியர்களை அதை கருத்துடன் பராமரித்து வந்தனர். அந்த குட்டி பென்குயின் தற்போது பூங்காவின் முக்கிய அங்கமாக மாறி உள்ளது.
இயல்பை மீறி அதிக எடையுடன் கூடிய இந்த குட்டி பென்குயின் செய்யும் சேட்டைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திழுக்கிறது. வயது வித்தியாசம் எதுமின்றி சக பென்குயின்களுடன் 'பெஸ்டோ' விளையாடி மகிழுவது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வலைத்தளவாசிகளின் அன்பை பெற்று வருகிறது.
- சீன அரசாங்கம் பள்ளி மாணவர்களுக்கு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
- ஒவ்வொரு வகுப்புக்கு பின்னரும் விடப்படும் இடைவெளி சமீபத்தில் 15 நிமிடமாக உயர்த்தப்பட்டது.
பீஜிங்:
இன்றைய இளம் தலைமுறையினர் ஆன்லைன் விளையாட்டுகளையே பெரிதும் விரும்புகின்றனர். வெளியில் சென்று விளையாடாமல் இருப்பதால் அவர்களுக்கு கண் பாதிப்பு, உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
இதனை களைய சீன அரசாங்கம் பள்ளி மாணவர்களுக்கு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
அதன்படி மாணவர்கள் தினமும் 2 மணி நேரம் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் கட்டாயம் பங்கு பெற வேண்டும். மேலும் ஒவ்வொரு வகுப்புக்கு பின்னரும் விடப்படும் இடைவெளி சமீபத்தில் 15 நிமிடமாக உயர்த்தப்பட்டது. இதன்மூலம் மாணவர்களின் கல்வி மற்றும் உடல்நலம் மேம்படும் என சீன கல்வித்துறை துணை மந்திரி வாங் ஜியாயி தெரிவித்துள்ளார்.
- வஜிரிஸ்தான் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
- முகாமில் இருந்து துப்பாக்கி, வெடிமருந்து போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் சமீபகாலமாக பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த ராணுவம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஆப்கானிஸ்தான் எல்லை பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.
இந்தநிலையில் அங்குள்ள வஜிரிஸ்தான் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராணுவ வீரர்கள் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை குறிவைத்து ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அவர்களது முகாமில் இருந்து துப்பாக்கி, வெடிமருந்து போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.






