என் மலர்tooltip icon

    உலகம்

    • பல நாடுகளுக்கு விசா இல்லாத நுழைவை சீனா அறிவித்துள்ளது.
    • இத்திட்டம் வரும் 30-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.

    பீஜிங்:

    ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு பயணிக்க பாஸ்போர்ட், விசா ஆகியவை தேவைப்படும். ஒரு நாட்டிற்கு என்ன காரணத்திற்காக செல்கிறோமோ அதற்கேற்ப விசா பெற்றுக் கொள்ளலாம். அதே சமயம் வெளிநாட்டினரை ஈர்க்க சில நாடுகள் விசா இல்லாமல் பயணிக்க அனுமதி வழங்கி வருகிறது.

    நமது அண்டை நாடான இலங்கைக்கு சுற்றுலா செல்ல இந்தியா உள்பட 35 நாடுகளைச் சேர்ந்தோர் விசா இல்லாமல் பயணிக்கலாம் என அந்நாட்டு அரசு சமீபத்தில் அறிவித்தது.

    இந்நிலையில், நமது மற்றொரு அண்டை நாடான சீனாவும் புதிதாக 9 நாடுகள் விசா இன்றி அந்நாட்டிற்குள் பயணிக்கலாம் என அறிவித்துள்ளது.

    அதன்படி ஜப்பான், பல்கேரியா, ருமேனியா, மால்டா, குரோசியா, மாண்டினீக்ரோ, வடக்கு மாசிடோனியா, எஸ்டோனியா, லாட்வியா ஆகிய நாடுகளுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்தார்

    இப்படி பயணம் மேற்கொள்பவர்கள் 30 நாள் வரை சீனாவில் தங்கிக் கொள்ளலாம். இதன்மூலம் சீனாவுக்கு விசா இன்றி பயணம் மேற்கொள்ளும் நாடுகளின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.

    சீனாவில் சுற்றுலாவை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டம் வரும் 30-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.

    • இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே அரசு தீவிர பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது.
    • கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் சர்வதேச நாணய நிதியின் கடன் உதவியை நாடியது.

    கொழும்பு:

    இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசு தீவிர பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்கொண்டது. இதனால் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் சர்வதேச நாணய நிதியின் கடன் உதவியை நாடியது.

    சமீபத்தில் அங்கு நடந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சி வெற்றி பெற்றது. அதிபராக அனுரகுமார திசநாயக தேர்வு செய்யப்பட்டார்.

    சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி திட்டமானது தொடர்ந்து செயல்படுத்தப்படும் என புதிய அதிபர் அறிவித்திருந்தார். இதன்படி சர்வதேச நாணய நிதியத்தின் குழு சமீபத்தில் மதிப்பாய்வை முடித்து சென்றது.

    இந்நிலையில், இலங்கைக்கு 4-வது தவணையாக 3 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.25,330கோடி) தொகையை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது.

    • இத்தாலியைச் சேர்ந்த பிரபல கைவினைக் கலைஞரான மொரிசியோ கட்டெலன் இதை உருவாக்கியுள்ளார்
    • தன்னுடைய இந்த படைப்புக்கு ‘காமெடியன்’ என அவர் பெயர் சூட்டினார்

    எல்லாவற்றையும் கலைநயத்தோடு பார்க்க வேண்டும் என்று பலர் கூறுவதுண்டு. ஆனால் தற்போது நடந்துள்ள இந்த சமபவம் இதெல்லாம் ரொம்ப ஓவர் என்று சொல்லும் அளவுக்கு உள்ளது. அதாவது, சுவரில் டக்ட் டேப் போட்டு ஒட்டப்பட்ட ஒரு வாழைப்பழம் சுமார் 6.2 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

    இத்தாலியைச் சேர்ந்த பிரபல கைவினைக் கலைஞரான மொரிசியோ கட்டெலன் என்பவரது கலைப்படைப்படைப்புதான் இது. அமெரிக்காவின் நியூயார்க் ஏல மையத்தில் சுவற்றில் டக்ட் டேப் போட்டு ஒட்டப்பட்ட இந்த வாழைப்பழம் கடந்த புதன்கிழமை ஏலத்திற்கு வந்துள்ளது.

     

    மொரிசியோ கட்டெலன்

    இதன் ஆரம்ப விலையாக 8,00,000 டாலரில் ஏலம் தொடங்கிய நிலையில் சீனாவை சேர்ந்த கிரிப்டோ கரன்சி தொழிலதிபரான ஜஸ்டின் சன், 6.2 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து, அந்த வாழைப்பழத்தை வாங்கியுள்ளார். இது இந்திய மதிப்பில் ரூ.52.35 கோடி ஆகும். இந்த ஏல விவகாரம் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி பேசுபொருளாகியுள்ளது.

    ஜஸ்டின் சன்

     

     

    இந்த படைப்பை உருவாக்கிய கைவினைக் கலைஞர் மொரிசியோ கட்டெலன் வித்தியாசமான படைப்புக்களை உருவாக்குபவர். கடந்த 2016ம் ஆண்டு தங்க கழிப்பறை கோப்பையை உருவாக்கி உலகம் முழுவதும் பிரபலமானார்.

    அதன்பின் கடந்த 2019ம் ஆண்டு மியாமி நகரில் உள்ள  அருங்காட்சியகத்தில் வாழைப்பழத்தை சுவற்றில் ஒட்டி அதை பார்வைக்கு வைத்தார்.

    தன்னுடைய இந்த படைப்புக்கு 'காமெடியன்' என அவர் பெயர் சூட்டினார். அவரது இந்த படைப்பு ரூ.85 லட்சத்து 38 ஆயிரத்துக்கு ஏலம் போனது. ஏலத்தில் எடுக்கப்பட்ட வாழைப்பழம் மக்களின் பார்வைக்காகத் தொடர்ந்து அதே கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. கண்காட்சியைப் பார்வையிட வந்தவர்கள், அனைவரும் அந்த வாழைப்பழத்துடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

    ஆனால் ஒருநாள் அந்தக் கண்காட்சிக்கு வந்த பிரபல கலைஞர் டேவிட் டதுனா, வாழைப்பழத்தை எடுத்து சாப்பிட்டு விட்டார். ஆனால் இதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மீண்டும் அதே இடத்தில் வேறொரு வாழைப்பழம் ஒட்டிவைக்கப்பட்டு, அதற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கண்காட்சி முடிந்ததும் அந்த வாழைப்பழம் ஏலம் எடுக்கப்பட்டவரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.

    இதற்கிடையே சுவற்றில் வாழைப்பழத்தை டக்ட் டேப் போட்டு ஒட்டுவது [ காமெடியன்] தனது அறிவுசார் உடைமை என்ற உரிமத்தை கட்டெலன் வாங்கி வைத்தார். இதனால் தற்போது அதேபோன்று சுவற்றில் டக்ட் டேப் போட்டு அவர் ஒட்டிய வாழைப்பழமே தற்போது நியூயார்க் ஏலத்தில் ரூ.52 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.

    இந்த படைப்பின் சாராம்சம் வாழைப்பழத்தில் இல்லை என்றும் அந்த ஐடியா தான் இதில் விஷயமே என்று கட்டெலன் கூறுகிறார். இது கலை, மீம்ஸ் மற்றும் கிரிப்டோ உலகங்களை இணைக்கும் படைப்பு என்று வாங்கியவர் தெரிவித்துள்ளார். 

    • அமெரிக்காவுக்கு சென்றபோது மியாமியில் கைது செய்யப்பட்டதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.
    • அமெரிக்க பூர்வீக விமானப் பொருட்களைப் பெறுவதற்காக பணியாற்றியாதகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டங்களை மீறி ரஷிய நிறுவனங்களுக்கு விமான உதிரிபாகங்களை வாங்கிய குற்றச்சாட்டில் இந்திய தொழில் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியை தளமாகக் கொண்ட அரேசோ ஏவியேஷன் நிறுவனத்தை சேர்ந்த சஞ்சய் கவுசிக், அமெரிக்காவுக்கு சென்றபோது மியாமியில் கைது செய்யப்பட்டதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.

    ரஷியாவில் உள்ள நிறுவனங்களுக்காக அமெரிக்காவிடமிருந்து விமானப் பொருட்கள் மற்றும் தொழில் நுட்பத்தை சட்டவிரோதமாகப் பெறும் சட்டவிரோத கொள்முதலில் கவுஷிக் இருந்ததாகவும், அவர் தனது ஆஸ்திரியாவை தளமாகக் கொண்ட அசோசியேட் மார்கஸ் கால்டெனெகர் நிறுவனம் மற்றும் பிறருடன் இணைந்து ரஷியா நிறுவனங்கள், அமெரிக்க பூர்வீக விமானப் பொருட்களைப் பெறுவதற்காக பணியாற்றியாதகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    • உக்ரைனுக்கு உதவும் நாடுகளுக்கு ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்தார்.
    • உலகில் வேறு எந்த நாடுகளிலும் இதுபோன்ற ஏவுகணை தொழில்நுட்பம் தற்போது இல்லை.

    மாஸ்கோ:

    ரஷியா-உக்ரைன் இடையேயான போர் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்க உதவி வருகிறது.

    சமீபத்தில் முதல் முறையாக அமெரிக்க ஏவுகணையை பயன்படுத்தி ரஷியா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதனால் ஆத்திரம் அடைந்து உள்ள ரஷியா, போரில் முதல் முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஐ.சி.பி.எம் ஏவுகணையை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது.

    மேலும் உக்ரைனுக்கு உதவும் நாடுகளுக்கு ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்தி இருக்கிறது.

    இதில் உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்காக ஹைப்பர்சோனிக் ஏவு கணைகளை அதிகளவில் தயாரிக்க புதின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து புதின் கூறியதாவது:-

    ரஷியா தனது புதிய ஓரேஷ்னிக் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை போரில் சோதிக்கும். அந்த ஏவுகணைகள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது.

    அமெரிக்க பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் பிரிட்டிஷ் க்ரூஸ் ஏவுகணைகளை ரஷியாவை தாக்க உக்ரைன் பயன்படுத்தி இருக்கிறது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்.

    ரஷியாவிற்கு விடுக்கப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் நிலைமை மற்றும் தன்மையைப் பொறுத்து, போர் நிலைமைகள் உட்பட, இந்த சோதனைகளை நாங்கள் தொடருவோம். ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை பெருமளவில் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    சோதனை செய்யப்பட்ட ஆயுத அமைப்பு ரஷியாவின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு மற்றொரு உண்மையுள்ள உத்தரவாதமாகும். உலகில் வேறு எந்த நாடுகளிலும் இதுபோன்ற ஏவுகணை தொழில்நுட்பம் தற்போது இல்லை.

    ஓரேஷ்னிக் ஏவுகணை தாக்குதல், முதன்முறையாக ரஷிய எல்லையில் அமெ ரிக்கா மற்றும் இங்கிலாந்து வழங்கிய ஏவுகணைகளைப் பயன்படுத்தி உக்ரைன் படைகளுக்கு நேரடியான பதிலடியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஹைப்பர்சோனிக் ஏவு கணைகளை அதிகளவில் தயாரிக்க புதின் உத்தரவிட்டுள்ளதால் வரும் நாட்களில் உக்ரைன் மீதான தாக்குதல் தீவிரமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    • உள்நாட்டுச் சட்டம் மற்றும் உண்மையில் சர்வதேச சட்டத்தால் அமைக்கப்பட்டுள்ள அதன் சட்டப்பூர்வ கடமைகளுக்கு இங்கிலாந்து எப்போதும் இணங்கும்.
    • நாங்கள் சட்டத்தின் கீழ் எங்கள் கடமைகளை வெளிப்படையாக நிறைவேற்றுவோம்.

    லண்டன்:

    பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    இஸ்ரேல் மீது போர்க்குற்ற புகார்கள் முன் வைக்கப்பட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்து உள்ளது.

    இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இங்கிலாந்துக்கு வந்தால் அவர் கைது செய்யப்படலாம் என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து இங்கிலாந்து பிரதம மந்திரி கெய்ர் ஸ்டார்மரின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இங்கு வந்தால் அவரை இங்கிலாந்து போலீசார் தடுத்து வைப்பார்களா என்பது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது.

    ஆனால் உள்நாட்டுச் சட்டம் மற்றும் உண்மையில் சர்வதேச சட்டத்தால் அமைக்கப்பட்டுள்ள அதன் சட்டப்பூர்வ கடமைகளுக்கு இங்கிலாந்து எப்போதும் இணங்கும். நாங்கள் சட்டத்தின் கீழ் எங்கள் கடமைகளை வெளிப்படையாக நிறைவேற்றுவோம் என்றார்.

    இதன்மூலம் நெதன்யாகு இங்கிலாந்து வந்தால் அவர் கைது செய்யப்படுவார் என்று இங்கிலாந்து மறைமுகமாக தெரிவித்துள்ளது.

    அதேபோல் கனடா, அயர்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், நார்வே, சுவீடன், பெல்ஜியம், துருக்கி உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்டுக்கு இணங்கப் போவதாக தெரிவித்து உள்ளன.

    • வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
    • மூத்த சகோதரனை போல அந்த நாய் குழந்தையின் வயிற்றில் படுத்துக் கொண்டு கட்டி தழுவுகிறது.

    ஆதிகாலம் முதலே மனிதன் செல்லப்பிராணியாக நாய்களை வளர்த்து வந்துள்ளான். சில நேரங்களில் மற்ற மனிதர்களிடம் அவை கடுமையாக நடந்து கொண்டாலும் தனது உரிமையாளர்களிடம் பாசத்தை காட்ட தவறுவதில்லை. அவர்களை தனது குடும்பமாகவே கருதுகிறது.

    அதேபோன்ற ஒரு வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது ஒரு நாய் தனது உரிமையாளரின் குழந்தை அருகே படுத்து தூங்குகிறது. அப்போது மூத்த சகோதரனை போல அந்த நாய் குழந்தையின் வயிற்றில் படுத்துக் கொண்டு கட்டி தழுவுகிறது.

    லட்சக்கணக்கானோரின் பார்வையை பெற்றுள்ள இந்த வீடியோவை பார்த்த பலரும் பாசத்தில் நாய்களை மிஞ்ச ஆள் இல்லை என்பது போன்ற பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.



    • உக்ரைனுக்கு எதிராக ஈரானின் டிரோன்கள் மற்றும் பிற அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
    • உக்ரைனில் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் போரில் தாக்குப்பிடித்து இருக்கிறது.

    கியேவ்:

    ரஷியா-உக்ரைன் போர் நடைபெற்று வருவதற்கு மத்தியில் மூன்றாம் உலகப்போர் தொடங்கிவிட்டதாக உக்ரைன் முன்னாள் ராணுவ தளபதியும் பிரிட்டனுக்கான தற்போதைய உக்ரைன் தூதருமான வலேரி ஜலுஷ்னி தெரிவித்துள்ளார்.

    உக்ரைன்ஸ்கா பிராவ்டாவின் விருது வழங்கும் விழாவில் உக்ரைன் முன்னாள் ராணுவத் தளபதி ஜலுஷ்னி கூறுகையில்,

    ரஷியா-உக்ரைன் மோதலில் ரஷியாவின் நட்பு நாடுகள் நேரடியாக போரில் ஈடுபட்டிருப்பது மூன்றாம் உலகப்போர் தொடங்கிவிட்டது என்று அர்த்தம் என்று பொலிட்டிகோ செய்தி வெளியிட்டுள்ளது.

    இதனால் "2024-ம் ஆண்டு மூன்றாம் உலகப்போர் தொடங்கிவிட்டது. 10,000 வடகொரிய ஆயதக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் குர்ஸ்க் பகுதியில் நிலைநிறுத்தியிருப்பதாகவும், உக்ரைனுக்கு எதிராக ஈரானின் டிரோன்கள் மற்றும் பிற அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

    இதனிடையே உக்ரைனில் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் போரில் தாக்குப்பிடித்து இருக்கிறது. ஆனால், போரில் தனியாக வெல்லுமா என்று உறுதியாக கூறமுடியாது. வட கொரியாவைச் சேர்ந்த வீரர்கள் உக்ரைனுக்கு முன்னாள் உள்ளனர். உக்ரைனில், ஈரானிய வீரர்கள் பொதுமக்களை எந்தவித பாரபட்சம் இல்லாமல் கொல்கிறார்கள். உக்ரைனின் ஆதரவாளர்கள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் போர் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ஆனால் உக்ரைன் போரை நிறுத்துவதுகூட இன்னும் சாத்தியம்தான். சில காரணங்களால், எங்கள் ஆதரவாளர்கள் இதை புரிந்து கொள்ள விரும்பவில்லை. உக்ரைனுக்கு ஏற்கனவே பல எதிரிகள் உள்ளனர் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் வலேரி ஜலுஷ்னி, உக்ரைனின் ராணுவ மற்றும் அரசியலில் முக்கிய புள்ளியாக இருந்து வருகிறார். ரஷியா- உக்ரைன் போரில் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் ஜலுஷ்னி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த பிப்ரவரியில் ராணுவத் தளபதியாக இருந்த ஜலுஷ்னியை பதவி நீக்கம் செய்ய வழிவகுத்தது. மேலும், ஜலுஷ்னியின் வளர்ந்து வரும் புகழ் அவரை ஜெலென்ஸ்கிக்கு அரசியல் போட்டியாக மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்காவின் கன்சாஸ் மாநில பல்கலைக்கழகத்தில் ஆர்யன் முதுகலை படிப்பு பயின்றுவந்தார்.
    • துப்பாக்கி தற்செயலாக வெடித்ததில் குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    வாஷிங்டன்:

    தெலுங்கானா மாநிலம் புவனகிரி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் ஆர்யன் ரெட்டி குடும்பத்தினர். தற்போது உப்பல் மாவட்டத்தில் வசித்து வருகின்றனர்.

    ஆர்யன் ரெட்டி அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள கன்சாசில் முதுகலை பட்டப்படிப்பில் படித்து வந்தார்.

    இந்நிலையில், ஆர்யன் ரெட்டி தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, சமீபத்தில் வாங்கிய துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது துப்பாக்கி தற்செயலாக சுட்டதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டதும், ஆர்யன் அறைக்கு வந்த அவரது நண்பர்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆர்யனை மீட்டு அருகிலுள்ள மருத்துவனையில் சேர்த்தனர். ஆனால் ஆர்யன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆர்யன் இறப்பு குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிறந்த நாளன்று துப்பாக்கி குண்டு பாய்ந்த இந்திய மாணவர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வாங்குவதற்கு உக்ரைனுக்கு கணிசமான நிதியுதவியை ஸ்வீடன் அறிவித்துள்ளது.
    • சர்வதேச சட்டத்தின்படி, உக்ரைன் அதன் எல்லைக்கு உள்ளேயும் வெளியேயும் தற்காத்துக் கொள்ள முழு உரிமை உள்ளது

    உக்ரைன் போர்  

    ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து ஆயிரம் நாட்களை தாண்டியுள்ள நிலையிலும் சண்டை முடிவுக்கு வரவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன் உக்ரைன் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளைப் பயன்படுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அனுமதி அளித்தார்.

    இதனை பயன்படுத்தி அமெரிக்கா வழங்கிய இந்த ATACMS பால்சிடிக் ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷியாவின் பிரையன்ஸ்க் [Bryansk] பகுதியில் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக உக்ரைன் மீது முதன்முறையாக கண்டம் விட்டு கண்டம் தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணையை பயன்படுத்தி ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது.

     

    புதின்  மிரட்டல் 

    புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மிட்-ரேஞ்ச் பாலிஸ்டிக் ஏவுகணையை உக்ரைன் மீது ஏவி ரஷியா பரிசோதனை செய்துள்ளது. ஒரேஷ்னிக் என்று பெயரிடப்பட்ட இந்த ஏவுகணை  உக்ரைன் இலக்கை துல்லியமாக தாக்கியதாக புதின் தெரிவித்துள்ளார்.

    மேலும் உக்ரைனுக்கு உதவும் நாடுகளுக்கு ரஷியா தக்க பதிலடி கொடுக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். எங்கள் மீது ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதிக்கும் நாடுகளின் இராணுவ தளங்களுக்கு எதிராக எங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்த நாங்கள் தகுதியுடையவர்கள் என்று தெரிவித்தார்.

     ஸ்வீடன்

    இந்நிலையில் ரஷியாவின் இந்த மிரட்டலுக்கு ஸ்வீடன் பயப்படாது அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் பால் ஜான்சன் இன்று தெரிவித்தார்.நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வாங்குவதற்கு உக்ரைனுக்கு கணிசமான அளவு நிதியுதவியை ஸ்வீடன் அளிக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டு அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

     உக்ரைனை ஆதரிப்பதிலிருந்து எங்களைப் பயமுறுத்தும் முயற்சிதான், ரஷியாவின் மிரட்டல், அது தோல்வியடையும் என்று ஜான்சன் தெரிவித்துள்ளார்.  உக்ரேனிய பிரதிநிதி ருஸ்டெம் உமெரோவுடன் ஸ்டாக்ஹோமில் நடந்த  செய்தியாளர்  சந்திப்பில் அவர் ஜான்சன் இதை கூறினார்.

     

    உக்ரைனை ஆதரிப்பது சரியான மற்றும் புத்திசாலித்தனமான விஷயம், மேலும் இது நமது சொந்த பாதுகாப்பிற்கான முதலீடு, ஏனெனில் (உக்ரைனின்) பாதுகாப்பும் எங்கள் பாதுகாப்பு என்று அவர் கூறினார்.

    சர்வதேச சட்டத்தின்படி, உக்ரைன் அதன் எல்லைக்கு உள்ளேயும் வெளியேயும் தற்காத்துக் கொள்ள முழு உரிமை உள்ளது, மேலும் நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் நீண்ட தூர தாக்குதல் ட்ரோன்களை உற்பத்தி செய்யும் உங்கள் திறனை நாங்கள் மேலும் மேம்படுத்த முடிந்தால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று ஜான்சன் உமெரோவிடம் கூறினார்.

    ஒரேஷ்னிக்

    ரஷியா கண்டுபிடித்துள்ள ஒரேஷ்னிக்,  அணு அல்லாத ஹைப்பர்சோனிக் கட்டமைப்பு கொண்டது. நொடிக்கு 2.5 முதல் 3 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. நவீன ஏர் பாதுகாப்பு சிஸ்டங்கள் கூட இதை தடுத்து நிறுத்த முடியாது. தடுத்து நிறுத்துவதற்கான சாத்தியம் இல்லை. இன்றைய நிலவரப்படி, இந்த ஏவுகணையை எதிர்கொள்ள எந்த வழியும் இல்லை என புதின் கூறுகிறார். 

     

    • ரஷியா தக்க பதிலடி கொடுக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • இராணுவ நடவடிக்கையின் போக்கை மாற்ற முடியாது.

    உக்ரைன் நாட்டிற்கு எதிரான போர் உலகளாவிய மோதலை நோக்கி விரிவடைந்து வருவதாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைனுக்கு உதவும் நாடுகளுக்கு ரஷியா தக்க பதிலடி கொடுக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    முன்னதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஏவுகணைகளால் உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு ரஷியா பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலின் போது ரஷியா புதிய வகை ஏவுகணையை பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை நீண்ட தூரம் சென்று தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஆகும். இத்தகைய ஏவுகணைகளை பயன்படுத்தும் முன் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதலுக்கு பிறகு அமெரிக்கா தயாரித்த ஏவுகணைகளை கொண்டு உக்ரைன் கடந்த 19 ஆம் தேதியும் நவம்பர் 21 ஆம் தேதி பிரிட்டன் தயாரித்த ஏவுகணைகளை கொண்டு எங்களை தாக்கியது என அதிபர் புதின் தெரிவித்தார்.

    "அந்த தருணத்திலிருந்து, நாங்கள் மீண்டும் மீண்டும் கூறியது போல, மேற்கு நாடுகளால் தூண்டப்பட்ட உக்ரைனில் பிராந்திய மோதல் உலகளாவிய தன்மைக்கான கூறுகளை பெற்றுள்ளது," என அதிபர் புதின் அரசு தொலைக்காட்சி மூலம் நாட்டுக்கு ஆற்றிய உரையில் கூறினார்.

    தொடர்ந்து பேசிய புதின், "மேலும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் அதிகரித்தால், நாங்கள் தீர்க்கமாக பதிலளிப்போம். எதிரி இதுபோன்ற ஆயுதங்களை பயன்படுத்துவதால் எங்களின் சிறப்பு இராணுவ நடவடிக்கையின் போக்கை மாற்ற முடியாது."

    "எங்கள் வசதிகளுக்கு எதிராக ஆயுதங்களை பயன்படுத்த அனுமதிக்கும் நாடுகளின் இராணுவ வசதிகளுக்கு எதிராக எங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்த நாங்கள் தகுதியுடையவர்கள் என்று கருதுகிறோம். வேறு யாராவது இதை சந்தேகித்தால், அவர்கள் தவறு செய்கிறார்கள் - எப்போதும் அவர்களுக்கான பதில் இருக்கும்," என்று கூறினார்.

    • அனா செலியா டி அர்மாஸ் கேஸோ என்பது இவரின் முழு பெயர்.
    • நடிகர் பென் அப்லெக் உடன் காதலில் இருந்த அர்மாஸ் கடந்த 2021 ஆம் ஆண்டு பிரேக் அப் செய்து கொண்டார்.

    ஜேம்ஸ் பாண்ட் படமான 'நோ டைம் டு டை' [ 2021], கிணைவ்ஸ் அவுட் [2019], பிளேட் ரன்னர் 2049, ஜான் விக் நடிகர் கியானு ரீவ்ஸ் நடித்த கினாக் கினாக் உள்ளிட்ட படங்கள் மூலம் புகழ் பெற்ற நடிகையாக ஹாலிவுட் அரங்கில் வளம் வருபவர் அனா டி அர்மாஸ். கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான 'THE BLONDE ' படத்தில் தனது நடிப்புக்காக ஆஸ்கார் தேர்வு பட்டியலிலும் இடம்பெற்றார்.  

    அனா செலியா டி அர்மாஸ் கேஸோ என்பது இவரின் முழு பெயர்.கியூபா - ஸ்பானிய வம்சாவளியை சேர்ந்தவர் இவர். இவரின் தாய் வழியினர் ஸ்பெயினை சேர்த்தவர்கள் ஆவர். கியூபாவில் 1988 இல் பிறந்த அர்மாஸ் அந்நாட்டில் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.

     

    இதைத்தொடர்ந்து ஹாலிவுட் படங்களில் தோன்றினார். கியூபாவை சேர்ந்த நடிகைகளுள் ஹாலிவுட் வரை சென்று அதிக புகழை ஈட்டியவர் அர்மாஸ். இந்நிலையில் தற்போது கியூபா நாட்டின் அதிபர் மிகுவல் டியாஸ்-கேனல் அவரது மகன் [ stepson ] மானுவல் அனிடோ கஸ்டா உடன் ஸ்பெயினில் ஒன்றாக அனா டி அர்மாஸ் நேரம் செலவிடும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

     

     

    ஸ்பெயின் நாட்டின் மாத்ரித் பகுதியில் இருவரும் முத்தம் கொடுத்துக்கொள்ளும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இருவரும் டேட்டிங் செய்து வருவதாக யூகிக்கப்படுகிறது. முன்னதாக ஹாலிவுட் நடிகர் பென் அப்லெக் உடன் காதலில் இருந்த ஆஅர்மாஸ் கடந்த 2021 ஆம் ஆண்டு பிரேக் அப் செய்து கொண்டார்.

     

    இருவரும் டீப் வாட்டர் என்ற படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். அதன்பின் பென் அப்லெக், பாடகி மற்றும் நடிகை ஜெனிபர் லோபஸ் ஐ 2022 இல் மணந்து 2024 இல் விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. 

    ×