என் மலர்
உலகம்
- சோச்சியில் இருந்து 89 பயணிகளுடன் தரையிறங்கியபோது தீ விபத்து
- விமான நிலைய தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வந்து தீயை அணைத்தனர்.
95 பேருடன் சென்ற ரஷிய விமானம் துருக்கியின் தெற்குப் பகுதியில் உள்ள அந்தாலியா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது, விமானத்தின் என்ஜின் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இருந்தபோதிலும் பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் பத்திரமாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என துருக்கி போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுகோய் சூப்பர்ஜெட் 100 வகையை சேர்ந்த அஜிமுத் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் சோச்சியில் இருந்து 89 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
விமானம் தரையிறங்கியதும் விமானி அவசர அழைப்பு கொடுக்க விமான நிலைய மீட்புக்குழு, தீயணைப்புப்படை வீரர்கள் விரைவாக வந்து தீயை கட்டுப்படுத்தினர்.
தீ விபத்திற்கான காரணம் குறித்து உடனடியாக தகவல் ஏதும் தெரிவிக்கப்டவில்லை. இந்த விபத்து தொடர்ந்து ஓடுபாதையில் இருந்து விமானத்தை அப்புறுப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அதுவரை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
- மெக்சிகோவில்மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு நடந்தது.
- இதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மெக்சிகோ சிட்டி,
வட அமெரிக்கா நாடானா மெக்சிகோவின் தபஸ்கோ மாகாணம் வில்லாஹெர்மோசா என்ற பகுதியில் மதுபான விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த விடுதியில் நேற்று வழக்கம்போல் சிலர் மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, மதுபான விடுதிக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஹமாசுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
- இஸ்ரேல் மீது 250-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
பெய்ரூட்:
இஸ்ரேல் நாட்டின் ஆக்கிரமிப்பை எதிர்த்து கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டுக்குள் அதிரடியாக நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 200 பேர் வரை பிணைக்கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் 117 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
திடீர் தாக்குதலால் ஆத்திரம் அடைந்த இஸ்ரேல் கடந்த 13 மாதமாக பாலஸ்தீனிய நகரங்கள் மேல் தாக்குதல் நடத்தி 44 ஆயிரம் பேரை கொலை செய்துள்ளது. இவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஐக்கிய நாடுக்ள் சபை அறிக்கை தெரிவிக்கிறது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் ஓராண்டை கடந்துள்ளது. அதேபோல், லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது ஓராண்டுக்கு மேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் நேற்று ராக்கெட் தாக்குதல் நடத்தினர். ஒரே நாளில் இஸ்ரேல் மீது 250-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் 7 பேர் காயமடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- காலநிலை நிதி தொகுப்பு உருவாக்கப்பட்டு இருக்கிறது.
- 100 பில்லியன் டாலர் வழங்க இலக்கு.
காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை நிர்வகிக்கவும், காலநிலை சார்ந்த பிரச்சினைகளை சமாளிக்கவும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்கி வருகின்றன. இதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை நிதி தொகுப்பு உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிதி தொகுப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாநாட்டில் ஒப்பந்தம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 100 பில்லியன் டாலர் வழங்க இலக்கு நிர்ணயிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இது தொடர்பாக அஜர்பைஜானில் நடைபெற்ற காலநிலை மாநாட்டின் நிறைவு நாளில் நிதி தொகுப்பு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் காலநிலை நிதி தொகுப்பை மூன்று மடங்கு உயர்த்த தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இதனால் 2035 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 300 பில்லியன் டாலர்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தை இந்தியா நிராகரித்துள்ளது. மாநாட்டின் நிறைவில் இந்தியா சார்பில் பங்கேற்ற பொருளாதார விவகாரத்துறை ஆலோசகர் காந்தினி ரெய்னா, "இந்த நிதி மிகவும் குறைவான ஒன்று, மற்றும் மிகவும் தாமதமானது. வளர்ந்த நாடுகள் தங்களின் பங்களிப்பை வழங்க விரும்பவில்லை என்பதை இந்த முடிவு தெளிவாக எடுத்துரைக்கிறது. நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம்," என தெரிவித்துள்ளார்.
- சிசிடிவி கேமராவில் பார்த்த மேலதிகாரிகள் அவரை வேலையை விட்டு தூக்கியுள்ளனர்
- வேலையில் தூங்கும் உங்கள் நடத்தை நிறுவனத்தின் கொள்கை மீறலாகும்
ஆபீசில் வேலையின்போது அசதியில் தூங்கிய நபர் வேலையிலிருந்து அதிரடியாகத் தூக்கப்பட்டார். இதனை எதிர்த்து அவர் தொடர்ந்து வழக்கில் அவருக்கு ரூ. 41.6 லட்சம் நிறுவனம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.
சீனா நாட்டின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள டாய்க்சிங் [Taixing] நகரில் இயங்கி வரும் கெமிக்கல் நிறுவனத்தில் ஜாங் [Zhang] என்ற நபர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை பார்த்து வந்துள்ளார்.
நள்ளிரவுவரை வேலை இருந்ததால் அவர் ஆபீசில் தனது மேஜையிலேயே ஒரு மணி நேரம் வரை குட்டித் தூக்கம் போட்டுள்ளார். இதனை சிசிடிவி கேமராவில் பார்த்த மேலதிகாரிகள் அவரை வேலையை விட்டு தூக்கியுள்ளனர். வேலையின்போது தூங்கி கம்பெனியில் நெறிமுறைகளை அவர் மீறியதாக HR டிபார்ட்மென்ட் கூறியுள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனம் அவருக்கு அனுப்பிய நோட்டீஸில், ஜாங், நீங்கள் 2004 இல் ஓபன் கான்டிராக்ட்டில் கையெழுத்துப்போட்டு நிறுவனத்தில் சேர்ந்தீர்கள்.
வேலையில் தூங்கும் உங்கள் நடத்தை நிறுவனத்தின் கொள்கை மீறலாகும். இதன் விளைவாக, தொழிற்சங்கத்தின் ஒப்புதலுடன், நிறுவனம் உங்களை வேலையை விட்டு நிறுத்த முடிவு செய்துள்ளது கூறப்பட்டிருந்ததது.
ஆனால் தன்னை பணியிலிருந்து நீக்கியது நியாயமற்ற செயல் என கூறி அந்த நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜூ குய், ஜாங் வேலையிடத்தில் தூங்கியது நிறுவனத்திற்கு எந்த தீங்கு விளைவிக்கவில்லை, ஜாங்கின் அந்த நிறுவனத்துக்கு 20 வருடங்களாக உழைத்துள்ளார்.
அவருக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் வழங்க விரும்பாததால் அவரை நிறுவனம் பணிநீக்கம் செய்ததாகத் தெரிகிறது. எனவே இது நியமற்றது என கூறிய நீதிபதி, ஜாங்கிற்கு 350,000 யுவான் [ரூ. 41.6 லட்சம்] இழப்பீடு வழங்குமாறு நிறுவனத்துக்கு உத்தரவிட்டுத் தீர்ப்பளித்தார்.
- தகவல்கள் இணையத்தில் பரவிய நிலையில், பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.
- சில பயனர்கள், அரசாங்கம் இதுபோன்ற சலுகைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என பரிந்துரைத்தனர்.
மக்கள் தொகை பெருக்கம் பெரும் பிரச்சனையாகி வரும் நிலையில், சீனாவில் குழந்தை பிறப்பு விகிதமும், திருமணம் செய்து கொள்வோரின் விகிதமும் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சீன நிறுவனம் ஒன்று டேட்டிங் செல்லும் ஊழியர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கிய சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது. சீன தொழில்நுட்ப நிறுவனமான இன்ஸ்டா 360 டேட்டிங் செல்லும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவித்திருந்தது.
பணிபுரியும் இடத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தில் பணியாளர்களுக்கு பல்வேறு வகைகளில் வெகுமதிகள் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்த தகவல்கள் இணையத்தில் பரவிய நிலையில், பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.
சில பயனர்கள், அரசாங்கம் இதுபோன்ற சலுகைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என பரிந்துரைத்தனர். ஒரு விமர்சகர், அன்பை பணத்தால் அளந்துவிட முடியாது என பதிவிட்டுள்ளார்.
- கிராமத்தில் நடந்த தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.
- இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 3,670 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பாலஸ்தீனம் மீது கடந்த 13 மாதங்களாகத் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் கடந்த செப்டம்பர் இறுதியிலிருந்து அண்டை நாடான லெபனானையும் தாக்கி வருகிறது. லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பைக் குறிவைத்துத் தாக்குவதாகக் கூறும் இஸ்ரேல் தலைநகர் பெய்ரூட்டில் குடியிருப்பு கட்டடங்களையும் தகர்த்து வருகிறது.
லெபனானில் இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 3,670 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 58 லட்சம் மக்கள் தொகை கொண்ட லெபனானில் இஸ்ரேல் தாக்குதலுக்கு அஞ்சி இதுவரை 1,30, 000 பேர் தங்கள் வீடுகளை விட்டு புலம்பெயர்ந்துள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் பெய்ரூட் அருகே உள்ள எல்லை வலியாக அண்டை நாடான சிரியாவுக்குள் அகதிகளாகச் சென்றுள்ளனர். இதற்கிடையே பெய்ரூட் மற்றும் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் உள்ள மக்களை அப்பகுதியை காலி செய்யும்படி இஸ்ரேலிய இராணுவம் எச்சரித்தது.
இந்நிலையில் லெபனானில் தலைநகர் பெய்ரூட் முழுவதும் உள்ள பல குடியிருப்புகள் மீது நேற்று [சனிக்கிழமை] இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர். 66 பேர் படுகாயமடைந்துள்ளனர். பெய்ரூட்டின் மையப்பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடம் தரைமட்டமானது.


கிழக்கு லெபனானில் பால்பெக் மாவட்டத்தில் சிம்ஸ்டார் கிராமத்தில் நடந்த தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர். போதாய் கிராமத்தின் மீதான தாக்குதலில் 5 பேர் என மொத்தம் 13 பேர் கொல்லப்பட்டதாக அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி வருவதால் லெபனானில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
- துப்பாக்கி சூடு நடத்திய நபர் யார் என்பதை போலீசார் தெரிவிக்கவில்லை.
- இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகில் அடிக்கடி ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஜோர்டான் நாட்டு தலைநகர் அம்மானில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே மர்மநபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தினார். உடனே போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த நபர், போலீசார் மீது தாக்குதல் நடத்தினார்.
இதையடுத்து அவரை போலீசார் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவத்தில் 3 போலீசார் காயம் அடைந்தனர். துப்பாக்கி சூடு நடத்திய நபர் யார் என்பதை போலீசார் தெரிவிக்கவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் தொடுத்துள்ள போருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜோர்டானில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகில் அடிக்கடி ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- ஜெய்டவுன் புறநகர்ப் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர்.
- வடக்கு முனையில் உள்ள மருத்துவமனையின் மீது நடத்தப்பட்டது
பாலஸ்தீன நகரமான காசாவின் மருத்துவமனை, குடியிருப்புகள் மீது இஸ்ரேல் மீது இஸ்ரேல் கடந்த 48 மணி நேரத்தில் நடத்திய வான் வழித் தாக்குதலில் 120 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவற்றுள் காசாவின் ஜெய்டவுன் புறநகர்ப் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர். மேலும் மத்திய காசா மற்றும் தெற்கு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஏனையோர் பலியாகினர்.
மேலும் வடக்கு முனையில் உள்ள மருத்துவமனையின் மீது நடத்தப்பட்டது. இதில் மருத்துவ ஊழியர்கள் படுகாயமடைந்ததோடு முக்கிய மருத்துவ உபகரணங்களும் சேதமடைந்தது. வடக்குப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலிய பெண் பிணைக் கைதி ஒருவர் கொல்லப்பட்டு இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்த்து கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி அந்நாட்டுக்குள் அதிரடியாக நுழைந்து ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 200 பேர் வரை பிணைக் கைதிகளாக அழைத்துச்செல்லப்பட்டனர். இதில் 117 பேரை இஸ்ரேல் உயிருடன் மீட்டுள்ளது.
இதற்கிடையே இந்த திடீர் தாக்குதலால் கோபமடைந்த இஸ்ரேல் கடந்த 13 மாதங்களாக பாலஸ்தீனிய நகரங்கள் மேல் தாக்குதல் நடத்தி 44 ஆயிரம் பேரை கொலை செய்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் 70 சதவீதம் பேர் [சுமார் 30,000 பேர்] பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஐநா அறிக்கை கூறுகிறது.
- தேர்தல் நடந்து 2 வாரங்களுக்கு மேலாகியும் வெற்றியாளர் முடிவு செய்யப்படவில்லை.
- இன்னும் 3 லட்சம் வாக்கு எண்ணப்பட வேண்டும்.
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 5-ந்தேதி நடந்தது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்ப் வெற்றி பெற்றார். இதற்கிடையே அமெரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட (3.9 கோடி பேர்) கலிபோர்னியா மாகாணத்தில் செனட் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் மைக்கேல் ஸ்டீல், ஜனநாயகக் கட்சி சார்பில் டெரெக் டிரான் போட்டியிட்டனர். தேர்தல் நடந்து 2 வாரங்களுக்கு மேலாகியும் வெற்றியாளர் முடிவு செய்யப்படவில்லை. இன்னும் 3 லட்சம் வாக்கு எண்ணப்பட வேண்டும்.
இது குறித்து, எலான் மஸ்க் சமூகவலைதளத்தில் கூறும்போது, இந்தியாவில் ஒரே நாளில் 64 கோடி ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்டு விட்டன. கலிபோர்னியாவில் இன்னும் எண்ணப்படுகின்றன என்று தெரிவித்து உள்ளார்.
கலிபோர்னியாவில் அதிகளவில் தபால் ஓட்டுகள் பதிவானது. இதில் அந்த ஓட்டுச்சீட்டை அனுப்பியது உண்மையான வாக்காளர்தானா என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு தபால் வாக்குச் சீட்டும் தனிப்பட்ட சரிபார்ப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். இதனால் முடிவு அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
- தேர்தலில் வெற்றிப் பெற்ற டிரம்ப் தனது தலைமையில் அமைய இருக்கும் புதிய அரசில் எலான் மஸ்குக்கு முக்கிய பொறுப்பை வழங்கியுள்ளார்.
- தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் மட்டும் எலான் மஸ்கின் சொத்து ரூ.2.19 லட்சம் கோடி உயர்ந்ததாக கூறப்படுகிறது.
வாஷிங்டன்:
டெஸ்லா, ஸ்பேக்ஸ் எக்ஸ், மற்றும் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் ஏற்கனவே உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார். இந்த சூழலில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுக்கு பிறகு அவரது சொத்து மதிப்பு இன்னும் உயர்ந்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வந்த எலான் மஸ்க், டிரம்பின் பிரசாரத்துக்கு பல ஆயிரம் கோடி நிதியையும் வழங்கினார்.
இதன் மூலம் அவர் டிரம்புக்கு மிகவும் நெருக்கமான நபராக மாறினார். தேர்தலில் வெற்றிப் பெற்ற டிரம்ப் தனது தலைமையில் அமைய இருக்கும் புதிய அரசில் எலான் மஸ்குக்கு முக்கிய பொறுப்பை வழங்கியுள்ளார். இதன் காரணமாக எலான் மஸ்கின் நிறுவனங்களின் பங்குகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருகின்றன. இதனால் அவரது சொத்து மதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது. தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் மட்டும் எலான் மஸ்கின் சொத்து ரூ.2.19 லட்சம் கோடி உயர்ந்ததாக கூறப்படுகிறது.
அந்த வகையில் தேர்தலுக்கு பிறகு அவரது சொத்து மதிப்பு 29 லட்சம் கோடியை கடந்துள்ளதாக போர்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அவர் உலக வரலாற்றிலேயே பெரும் பணக்காரர் என்கிற பெருமையை பெற்றுள்ளதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
- குருநானக் பிறந்த ஊர் பாகிஸ்தானில் லாகூர் அருகே உள்ள நன்கனாசாகிப் என்ற இடத்தில் உள்ளது.
- குருநானக் தேவின் 555-வது பிறந்த நாளை சீக்கியர்கள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடினர்.
சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவரான குருநானக் தேவின் 555-வது பிறந்த நாளை கடந்த நவம்பர் 15 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்கள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடினர்.
இந்நிலையில், குருநானக்கின் 555வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நினைவு நாணயத்தை பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ளது.
சிறப்பு நாணய வெளியீட்டு நிகழ்ச்சியில் 2,500க்கும் மேற்பட்ட இந்திய சீக்கிய யாத்ரீகர்கள் கலந்து கொண்டனர்.
30 மிமீ விட்டம் மற்றும் 13.5 கிராம் எடை கொண்ட இந்த சிறப்பு நாணயம் 79 சதவீதம் பித்தளை, 20 சதவீதம் துத்தநாகம் மற்றும் 1 சதவீதம் நிக்கலால் செய்யப்பட்டுள்ளது.
இந்த நினைவு நாணயம் ஸ்டேட் பாங்க் ஆப் பாகிஸ்தானின் அனைத்து கிளைகளிலும் உள்ள எக்ஸ்சேஞ்ச் கவுண்டர்களில் கிடைக்கும் என்று பாகிஸ்தானின் ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
குருநானக்கின் 550வது பிறந்தநாளை முன்னிட்டு பாகிஸ்தான் இதேபோன்ற சிறப்பு நாணயத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.






