என் மலர்tooltip icon

    உலகம்

    • அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் மாபெரும் வெற்றி பெற்றார்.
    • இஸ்ரேல் பிரதமர் அதிபர் டிரம்ப்-ஐ சந்திப்பார் என்று தகவல்.

    பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி மாதம் வெள்ளை மாளிகையில் வைத்து தன்னை சந்திப்பார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

    "இன்று காலை அவருடன் நீண்ட நேரம் பேசினேன். அவர் அடுத்த மாதம், அநேகமாக பிப்ரவரியில் வெள்ளை மாளிகைக்கு வருவார். இந்தியாவுடன் எங்களுக்கு நல்ல உறவு இருக்கிறது," என்று டிரம்ப் கூறினார்.

    முதல் முறை அதிபராக பதவி வகித்த போது, டொனால்டு டிரம்ப் கடைசியாக இந்தியாவுக்கு தான் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடியும் இடையே நல்ல நட்புறவு நீடிக்கிறது. இருவரும் கடந்த செப்டம்பர் 2019-ல் ஹூஸ்டனில் நடந்த இரண்டு வெவ்வேறு பேரணிகள் மற்றும் கடந்த பிப்ரவரி 2020-ல் அகமதாபாத்தில் ஆயிரக்கணக்கான மக்களிடம் உரையாற்றினர்.

    2024 நவம்பர் மாதம் அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதும் அவருடன் பேசிய முதல் மூன்று உலகத் தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர் ஆவார்.

    • கொண்டாட்ட நிகழ்வு விபரீதத்தில் முடிந்தது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
    • கருவின் பாலினத்தை அறிவிப்பதற்காக கலர் வண்ணப்பொடிகளால் ஆன உலர்பனிக்கட்டி (டிரை ஐஸ்) பயன்படுத்தப்பட்டது.

    டிஜிட்டல் உலகில் வளைகாப்பு விழாவும் பரிணாமம் அடைந்து அதனை விளம்பரத்திற்காக நடத்தும் அளவிற்கு வந்துவிட்டனர். குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் வளைகாப்பு நிகழ்வுக்கு மாற்றாக நடத்தப்படும் விழாவில் சூட்டோடு சூடாக கருவின் பாலினத்தை அறிந்து கொள்ளும் வகையில் விளையாட்டு அல்லது வேடிக்கை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.

    அத்தகைய கொண்டாட்ட நிகழ்வு விபரீதத்தில் முடிந்தது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

    இங்கிலந்தை சேர்ந்தவர் ஏமி. பெண் தொழிலதிபரும் கோடீஸ்வரருமான இவா், காதலர் பிராட் என்பவரை கரம்பிடித்தார். தொடர்ந்து கர்ப்பம் அடைந்த நிகழ்வை கொண்டாடுவதற்காக பங்களா வீட்டில் பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. கருவின் பாலினத்தை அறிவிப்பதற்காக கலர் வண்ணப்பொடிகளால் ஆன உலர்பனிக்கட்டி (டிரை ஐஸ்) பயன்படுத்தப்பட்டது.

    அப்போது அந்த அடர் பனிப்புகை வீடு முழுவதும் பரவியது. இதில் ஏமி உள்பட அறையில் இருந்த பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி 50 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.

    • தூதரக அதிகாரிகள் லாவோஸ் பாதுகாப்பு அதிகாரிகளின் துணையுடன் ஒரு குழுவை அந்த மையங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
    • மீட்கப்பட்ட இந்தியர்கள் அனைவரையும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    வியன்டியான்:

    கிழக்கு ஆசிய நாடான லாவோசில் ஏராளமான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களை அங்குள்ள ரவுடி கும்பல் கடத்திச்செல்வது அடிக்கடி நடந்து வருகிறது.

    அந்தவகையில் லாவோசின் பல்வேறு பகுதிகளில் தங்கியிருந்த இந்தியர்கள் 67 பேர் மோசடி கும்பலால் கடத்தப்பட்டு போகியோ மாகாணத்தில் உள்ள சைபர் மோசடி மையங்களில் பணியமர்த்தப்பட்டு இருந்தனர்.

    அந்த ரவுடி கும்பலால் பல்வேறு துயரங்களை அனுபவித்து வந்த இந்தியர்கள், தங்களை மீட்குமாறு தலைநகர் வியான்டியானில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து தூதரக அதிகாரிகள் லாவோஸ் பாதுகாப்பு அதிகாரிகளின் துணையுடன் ஒரு குழுவை அந்த மையங்களுக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் அதிரடியாக செயல்பட்டு 67 இந்தியர்களையும் பத்திரமாக மீட்டனர். பின்னர் அவர்கள் வியான்டியானுக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ள அவர்களை இந்திய தூதர் பிரசாந்த் அகர்வால் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் அவர்களது அனுபவங்களை கேட்டறிந்த அவர், இந்த கடத்தலுக்கு உடந்தையாக இருந்த ஏஜென்டுகள் மீது புகார் அளிக்க நடவடிக்கை எடுப்பதாகவும், விரைவில் நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.

    இதைத்தொடர்ந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் அனைவரையும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகள் லாவோசில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். தற்போது மீட்கப்பட்டுள்ள 67 பேரையும் சேர்த்து மொத்தம் 924 இந்தியர்கள் இதுவரை ரவுடி கும்பலிடம் இருந்து மீட்கப்பட்டு உள்ளதாகவும், இதில் 857 பேர் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் இந்திய தூதரகம் கூறியுள்ளது.

    அதேநேரம் தாய்லாந்துக்கு பணிக்கு அனுப்பி வைப்பதாக வெளியாகும் தகவல்களை குறித்தும், இந்த ஏஜென்டுகளை குறித்தும் கவனமாக இருக்குமாறு இந்தியர்களை லாவோசில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.

    • டிரம்பிற்கு பெஞ்சமின் நேதன்யாகு ஜனவரி 26-ம் தேதி நன்றி தெரிவித்தார்.
    • இதுகுறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தகவல்.

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அடுத்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்க திட்டமிட்டு வருவதாக தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்காக அவர் வாஷிங்டன் டி.சி.க்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இந்த பயணம் இறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் புரோஸ்டேட் அறுவை சிகிச்சை செய்து கொண்டு குணமடைவதால் நேதன்யாகுவின் உடல்நிலையை பொறுத்து இதுகுறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    தற்போதைய தகவல்களின் படி பயணம் செய்தால், தனது இரண்டாவது பதவிக்காலத்தில் அதிபர் டொனால்டு டிரம்பை சந்திக்கும் முதல் வெளிநாட்டுத் தலைவராக நேதன்யாகு இருப்பார். முன்னதாக இஸ்ரேலுக்கு தற்காப்பு கருவிகள் வழங்கியதற்காக அதிபர் டிரம்பிற்கு பெஞ்சமின் நேதன்யாகு ஜனவரி 26-ம் தேதி நன்றி தெரிவித்தார்.

    இது குறித்த எக்ஸ் தள பதிவில் அவர், "இஸ்ரேலுக்கு தன்னைத் தற்காத்துக் கொள்ளவும், நமது பொதுவான எதிரிகளை எதிர்கொள்ளவும், அமைதி மற்றும் செழிப்பு நிறைந்த எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் தேவையான கருவிகளை வழங்குவதாக நீங்கள் அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றியதற்காக அதிபர் டிரம்பிற்கு நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • மீனவர்களை கைது செய்ததோடு, விசைப்படகையும் சிறைபிடித்தது.
    • துப்பாக்கி சூடு நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகளில் தமிழக மீனவர்கள் மீன்துறை அலுவலக அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 13 பேரை கைது செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்ததோடு, விசைப்படகையும் சிறைபிடித்தது.

    மேலும், கைது செய்யப்படுவதில் இருந்து தப்பி செல்ல முயன்ற இரண்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. துப்பாக்கி சூட்டில் காயமுற்ற தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினர் சிகிச்சை அளித்ததாகவும் கூறப்படுகிறது.

    சமீபத்தில் தான் தமிழகத்தை சேர்ந்த 33 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்தனர். மீனவர்கள் கைது சம்பவத்தை கண்டித்து தமிழக மீனவர்கள் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ள நிலையில், மீண்டும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • வங்காளதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் இரு நாடுகள் இடையேயான உறவில் சுமூக நிலை காணப்படுகிறது.
    • இரு நாடுகளுக்கும் இடையே நேரடி கப்பல் போக்குவரத்து சமீபத்தில் தொடங்கியது.

    டாக்கா:

    பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்த வங்காளதேசம் 1971-ல் தனிநாடாக சுதந்திரம் பெற்றது. இதனையடுத்து இரு நாடுகளும் மோதல் போக்கையே கடைபிடித்து வந்தன. ஆனால் வங்காளதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் இரு நாடுகள் இடையேயான உறவில் சுமூக நிலை காணப்படுகிறது. அதன்படி இரு நாடுகளுக்கும் இடையே நேரடி கப்பல் போக்குவரத்து சமீபத்தில் தொடங்கியது.

    இந்தநிலையில் பாகிஸ்தானுக்கான வங்காளதேச உயர் ஆணையர் இக்பால் ஹுசைன் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    இதனையடுத்து தலைநகர் டாக்காவில் இருந்து கராச்சி வழியாக இங்கிலாந்துக்கு விமானத்தை இயக்க வங்காளதேச விமான நிறுவனமான பிமான் ஏர்லைன்ஸ் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் இரு நாடுகள் இடையேயான உறவு மேலும் வலுப்படும் என இக்பால் தெரிவித்துள்ளார்.

    • தென்கொரியா தொடர்ந்து கூட்டுப்போர் பயிற்சியை நடத்துகிறது.
    • கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

    பியாங்க்யாங்:

    கொரிய தீபகற்ப பகுதியில் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனை மூலம் வடகொரியா அவ்வப்போது பதற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே அணு ஆயுத சோதனை நடத்துவதற்கு வடகொரியாவுக்கு ஐ.நா.சபை தடை விதித்துள்ளது.

    அதனை பொருட்படுத்தாமல் வடகொரியா அணு ஆயுத உற்பத்தியை அதிகரித்து வருகிறது. இதனால் தங்களது பாதுகாப்பு கருதி தென்கொரியாவும், ஜப்பானும் அமெரிக்காவுடன் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபடுகின்றது.

    ஆனால் இதனை தங்களுக்கு எதிரான போர் ஒத்திகையாக வடகொரியா கருதுகிறது. எனினும் தென்கொரியா தொடர்ந்து கூட்டுப்போர் பயிற்சியை நடத்துகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வடகொரியா நேற்று ஏவுகணை சோதனையை நடத்தியது. இது சுமார் 1,500 கிலோ மீட்டர் தொலைவு பாய்ந்து இலக்குகளை தாக்கியது. இதனை தொடர்ந்து அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் எனவும் தலைவர் கிம் ஜாங் அன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

    • தன்னுடைய 11 வயது பேரனுடன் கடைசி காலம் வரை அந்த வீட்டில்தான் இருப்பேன் என்று அவர் கூறினார்.
    • அவரின் வீட்டை மட்டும் விட்டுவிட்டு இரு பக்கமும் நெடுஞ்சாலை கட்டி முடிக்கப்பட்டது.

    சீனாவை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது வீட்டை அரசாங்கத்துக்குக் கொடுக்க மறுத்ததால் விசித்திரமான சிக்கலை சந்தித்துள்ளார்.

    சீனாவின் ஷாங்காயின் தென்மேற்கில் உள்ள ஜின்சி நகரில் வசிக்கும் முதியவர் ஹுவாங் பிங். இவரது 2மாடி வீடு இருக்கும் பகுதியில் அரசு நெடுஞ்சாலை அமைத்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வசித்த மக்கள் அனைவரும் அரசு கொடுத்த நஷ்டஈடு தொகையைப் பெற்றுக்கொண்டு அங்கிருந்து காலி செய்தனர்.

    ஆனால் முதியவர் ஹுவாங் பிங் தனது வீட்டை விற்க ஒரேயடியாக மறுத்துவிட்டார். தன்னுடைய 11 வயது பேரனுடன் கடைசி காலம் வரை அந்த வீட்டில்தான் இருப்பேன் என்று அவர் கூறினார். அரசு அதிகாரிகள் பல முறை அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

    ரூ.2 கோடி வரை நஷ்ட ஈடு தருவதாகவும், வேறு இடத்தில் வீடு கட்ட நிலம் ஒதுக்குவதாகவும் பேசிப்பார்த்துள்ளனர். ஆனால் முதியவரை என்ன சொல்லியும் வழிக்கு கொண்டுவர முடியவில்லை என்பதால் அவர்கள் திரும்பி சென்றுவிட்டனர். ஆனால் அதன்பின்தான் முதியவருக்கு சிக்கல் ஆரம்பித்துள்ளது. அவரின் வீட்டை மட்டும் விட்டுவிட்டு இரு பக்கமும் நெடுஞ்சாலை கட்டி முடிக்கப்பட்டது.

    இதனால் முதியவர் தனது பிடிவாதத்தின் விளைவை நினைத்து வருந்தி வருகிறார். அரசு பணம் தருவதாக சொன்னது நியாயமானதாக இப்போது தெரிகிறது. நெடுஞ்சாலை பயன்பாட்டுக்கு வந்த பிறகு வாகனங்கள் இரைச்சல், தூசியுடன், தனி வீட்டில் இருக்க முடியாது.

    முந்தைய காலத்துக்கு என்னால் செல்ல முடிந்தால், அரசு கொடுக்கும் பணத்தை வாங்கி கொண்டு என் வீட்டை இடிக்க ஒப்புக் கொள்வேன். ஆனால் அது இப்போது அது முடியாது என்று அவர் புலம்பி வருகிறார். 

    • ஒப்பந்தப்படி, பணய கைதிகளில் அர்பெல் யாஹுட் என்ற பெண்ணை ஹமாஸ் விடுவிக்கவில்லை.
    • இதனால் ஆறரை லட்சம் பாலஸ்தீனிய மக்கள் வடக்கு காசாவுக்கு திரும்ப காத்திருந்தனர்.

    இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் 15 மாதத்துக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 250-க்கும் மேற்பட்டோரைப் பிணைக் கைதிகளாகப் பிடித்துச்சென்றனர்.

    அதன்பின், தற்காலிக போர் நிறுத்தத்தின்போது 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 94 பிணைக் கைதிகள் உள்ளனர். 34 பேர் உயிரிழந்துவிட்டனர்.

    கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தால் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் சமீபத்தில் அமலுக்கு வந்தது. இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் 6 வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும்.

    முதற்கட்டமாக 3 பெண் பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்தது. இரண்டாவது கட்டமாக 4 இளம் இஸ்ரேல் பெண் பிணைக் கைதிகளை ஹமாஸ் நேற்று முன் தினம் விடுவித்தது. அவர்களுக்கு ஈடாக 200 பாலஸ்தீனிய பிணை கைதிகளை இஸ்ரேல் விடுவித்துள்ளது.

    ஒப்பந்தப்படி, பணய கைதிகளில் அர்பெல் யாஹுட் என்ற பெண்ணை ஹமாஸ் விடுவிக்கவில்லை.

    ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறிவிட்டது என்றும், அர்பெல் யாஹுட் விடுதலை செய்யப்படும்வரை பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவுக்கு திரும்ப அனுமதிக்கமாட்டோம் என்று இஸ்ரேல் தெரிவித்தது. இதனால் இடம்பெயர்ந்த ஆறரை லட்சம் பாலஸ்தீனிய மக்கள் வடக்கு காசா பகுதிக்கு திரும்புவதற்கு காத்திருப்பதாக பாலஸ்தீனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

     

    ஆனால் பணய கைதி அர்பெல் யாஹுட் உயிருடன் இருப்பதாகவும், வரும் சனிக்கிழமை அவர் விடுதலை செய்யப்படுவார் என்றும் ஹமாஸ் தெரிவித்தது.

    இந்நிலையில் இதுதொடர்பாக நேற்று [ஞாயிற்றுக்கிழமை] இரவு நடந்த பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்பட்டுள்ளது. அதன்படி இரண்டு கட்டமாக அர்பெல் யஹூட் உட்பட 6 பணய கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுதலை செய்ய முடிவு எட்டப்பட்டுள்ளது. எனவே வடக்கு காசாவுக்குள் பாலஸ்தீனியர்கள் நுழைய இஸ்ரேல் அனுமதித்துள்ளது.

    இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததையடுத்து, இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளதாக காசா பகுதியில் உள்ள ஹமாஸ் உள்துறை அமைச்சகம் உறுதிப் படுத்தியுள்ளது. 

    • விமான பயணியான பெர்ன்ஹார்டு வார் என்பவர் வீடியோ எடுத்துள்ளார்.
    • வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

    பிரேசில் நாட்டின் தெற்கே சாவோ பவுலோ நகரில் கடுமையான இடி- மின்னலுடன் மழை பெய்துள்ளது. மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசியது. ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை சில மணிநேரங்களிலேயே பெய்தது.

    அப்போது அங்குள்ள குவாருலோஸ் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம் மீது மின்னல் தாக்கி உள்ளது. இதனை விமான பயணியான பெர்ன்ஹார்டு வார் என்பவர் வீடியோ எடுத்துள்ளார்.

    இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இதுகுறித்து பெர்ன்ஹார்டு வார் கூறுகையில், பெரிய புயல் வீசியது. இதனால் விமானங்கள் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நாங்களும் பாதுகாப்பான இடத்தில் அமர்ந்திருந்தோம். அப்போது தான் விமானத்தின் வால் பகுதியில் கடுமையாக மின்னல் தாக்கியதை வீடியோ எடுத்தேன் என்றார்.

    • காசா என்ற இந்த ட்ரோன் 22 மீட்டர் இறக்கைகள் மற்றும் 3,100 கிலோகிராம் எடை கொண்டது.
    • இந்த டிரோனின் 13 குண்டுகள் வரை எடுத்துச் செல்ல முடியும்

    ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையின் (IRGC) கீழ் இயங்கும் வான்படை, காசா என்ற அதி கனரக ஆளில்லா விமானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

    நேற்று [ஞாயிற்றுக்கிழமை] நடந்த இராணுவப் பயிற்சியின் போது இந்த ஆளில்லா விமானத்தை ஈரான் அறிமுகப்படுத்தியுள்ளது.

    ஷஹீத்-149 காசா என்ற இந்த ட்ரோன் 22 மீட்டர் இறக்கைகள் மற்றும் 3,100 கிலோகிராம் எடை கொண்டது. 35 மணி நேரம் பறக்கும் திறன் கொண்ட 'காசா' மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது.

     

    காசா டிரோனின் பேலோட் திறன் குறைந்தது 500 கிலோகிராம் ஆகும். இந்த டிரோனின் 13 மிஸைல் குண்டுகள் வரை செல்ல முடியும். இது 1,000 கிலோமீட்டர் தூரம் மற்றும் 4,000 கிலோமீட்டர் ரேடியஸ்[ஆரம்] வரை இயங்கும் திறன் உடையது.

    நேற்று நடந்த பயிற்சியின் போது முதன்முறையாகக் காசா ட்ரோனைப் பயன்படுத்தி எட்டு இலக்குகளை IRGC வான்படை வெற்றிகரமாக அழித்தது. காசா என்பது கடந்த 13 மாதங்களாக இஸ்ரேல் குண்டுகளால் துளைக்கப்பட்டு 37,400 பேர் உயிரிழந்த பாலஸ்தீனிய நகரம் ஆகும்.

    • இறுதிக்கட்ட போரின் போது பிரபாகரன் தப்பி சென்று விட்டதாக மற்றொரு தகவல் வெளியானது.
    • உடலை சிங்கள ராணுவம் கைப்பற்றி தகனம் செய்து விட்டது.

    கொழும்பு:

    இலங்கையில் வடகிழக்கு பகுதியில் தமிழர் அதிகம் வசிக்கும் இடங்களை ஒருங்கிணைத்து தனி தமிழ் ஈழம் நாட்டை உருவாக்க பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தி போராடி வந்தார்கள்.

    இலங்கையில் உள்ள சிங்கள அரசால் தமிழ் விடுதலைப்புலிகளை அடக்க இயலவில்லை. இந்த நிலையில் கடந்த 2000-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியா உள்பட பல வெளிநாடுகளில் ஆயுத உதவியை பெற்ற இலங்கை அரசு தீவிர போரை மேற்கொண்டது.

    2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள படைகளுக்கும் இடையே மிக கடுமையான போர் நடந்தது. அந்த போரில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மே மாதம் 17-ந்தேதி இறந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரது உடலை சிங்கள ராணுவம் கைப்பற்றி தகனம் செய்து விட்டது.

    பிரபாகரன் உடன் அவரது மூத்த மகன் சார்லஸ், மகள் துவாரகா ஆகியோரும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இறுதிக்கட்ட போரின் போது பிரபாகரன் தப்பி சென்று விட்டதாக மற்றொரு தகவல் வெளியானது.

    இதனால் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்பதில் தொடர்ந்து மாறுபட்ட தகவல்கள் அடிக்கடி வெளியாகியபடி உள்ளது. பிரபாகரன் நிச்சயமாக மீண்டும் வருவார் என்று பழ.நெடுமாறன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உறுதிப்பட தெரிவித்து வருகிறார்கள்.

    ஆனால் விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருந்த மற்றவர்களும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சில மூத்த தலைவர்களும் பிரபாகரன் 2009-ல் கொல்லப்பட்டு விட்டதை உறுதி செய்கிறார்கள். இதன் காரணமாக பிரபாகரன் விஷயத்தில் மர்மம் நீடிப்பதாக கருதப்படுகிறது.

    இந்த நிலையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வெளிநாடு ஒன்றில் ரகசிய இடத்தில் இருப்பதாகவும் வருகிற மே மாதம் அவர் தமிழ் மக்கள் மத்தியில் தோன்றுவார் என்றும் புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

    பிரபாகரனுடன் பொட்டு அம்மனும் வர வாய்ப்பு இருப்பதாக இந்த தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உளவு பிரிவு தலைவரான பொட்டு அம்மனும் போரில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஆனால் பிரபாகரனை யார் கண்ணிலும் படாமல் வெளிநாட்டுக்கு அழைத்து சென்றது பொட்டு அம்மன்தான் என்று விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஒருசாரார் கூறி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்களால் உலகம் முழுக்க வாழும் ஈழத்தமிழர்கள் மத்தியில் புதிய பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

    பிரபாகரனுடன் நெருக்கமாக பழகியவர்களில் ஒருவரான கே.எஸ்.ராதாகிருஷ்ணனிடம் இது தொடர்பாக கேட்டபோது, "எனக்கும் அப்படி ஒரு தகவல் வந்து இருக்கிறது" என்றார். இதனால் பிரபாகரன் மீண்டும் உயிரோடு வருவாரா? என்ற எதிர்ப்பார்ப்பு ஈழ தமிழ் மக்களிடம் உருவாகி இருக்கிறது.

    ×