என் மலர்tooltip icon

    உலகம்

    • ரஷியாவுக்கு தொடர்பு இருப்பதாக நேட்டோ கூட்டமைப்பு குற்றம்சாட்டியது.
    • கடற்பகுதியில் விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலம் ரோந்து பணி அதிகரிக்கப்பட்டது.

    ஸ்டாக்ஹோம்:

    உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோ கடலுக்கு அடியில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு வயர்களை பொருத்தி வருகிறது. அதன்படி பால்டிக் கடற்பகுதி வழியாக ஐரோப்பிய நாடான லாட்வியாவுக்கு மின்சார வயர் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் அந்த வயர்களை மர்ம கும்பல் சேதப்படுத்தியது.

    இதில் ரஷியாவுக்கு தொடர்பு இருப்பதாக நேட்டோ கூட்டமைப்பு குற்றம்சாட்டியது. எனவே பால்டிக் கடற்பகுதியில் விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலம் ரோந்து பணி அதிகரிக்கப்பட்டது. அப்போது பால்டிக் கடற்பகுதியில் சந்தேகப்படும்படி சென்ற ஒரு கப்பலை சுவீடன் கடலோர போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். அதேபோல் பின்லாந்து-எஸ்டோனியா இடையே செல்லும் மின்சார வயர்களை கடந்த மாதம் ரஷிய கப்பல் சேதப்படுத்தியதாக பின்லாந்து குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்காவில் பெடரல் அரசும் மாகாண அரசும் தனித்தனியாக வருமான வரி விதிக்கின்றன.
    • பெடரல் அரசின் வருமான வரியை ரத்து செய்யும் திட்டம் உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த 20-ந்தேதி பதவியேற்றுக்கொண்டதில் இருந்து பல தடாலடி உத்தரவுகளை வெளியிட்டு வருகிறார்.

    இந்நிலையில், அமெரிக்க மக்களுக்கான வருமான வரியை ரத்து செய்யும் திட்டம் தன்னிடம் இருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    வருமான வரிக்கு பதிலாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரிகளை உயர்த்த போவதாகவும் இதன் மூலம் அமெரிக்க மக்களைப் பணக்காரர்களாக ஆக்க முடியும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

    அமெரிக்காவில் பெடரல் அரசும் மாகாண அரசும் தனித்தனியாக வருமான வரி விதிக்கின்றன. அவ்வகையில் பெடரல் அரசின் வருமான வரியை ரத்து செய்யும் திட்டம் உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். அதே சமயம் மாகாண அரசுகளின் வருமான வரி குறித்து சம்பந்தப்பட்ட மாகாண அரசுகளே முடிவெடுக்கும்.

    பொதுமக்களின் வருமான வரியை டிரம்ப் ரத்து செய்தால் பணவீக்கம் அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாகவும் அதிகரித்த இறக்குமதி செலவுகள் காரணமாக அதிக வட்டி விகிதம் ஏற்படும் என்று சில பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.

    • கைவிலங்கிட்டு கீழ்த்தரமாக அமெரிக்கா நடத்தியுள்ளது என அந்நாடு குற்றம் சாட்டியது.
    • கடந்த சில நாட்களில் 956 பேர் வரை கைது செய்துள்ளனர்.

    அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப் அந்நாட்டில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்றத் தீவிரமும் கடுமையும் காட்டி வருகிறார்.

    முதற்கட்டமாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்களை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்து விமானப்படை விமானங்கள் மூலம் அனுப்பி வைத்தனர். மெக்சிகோ, கொலம்பியா, பிரேசில் ஆகிய நாடுகளைச் சேர்த்தவர்கள் இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

    இதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த தென் அமெரிக்க நாடான கொலம்பியா, டிரம்ப்பின் 25 சதவீத ஏற்றுமதி வரி உயர்வு, விசா ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு அஞ்சி தங்கள் நாட்டு அகதிகளை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தது.

    மேலும் பிரேசிலுக்கு இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட அகதிகளுக்கு குடிக்க தண்ணீர் கொடுக்காமல், விமானத்தில் ஏசி இல்லாமல், கைவிலங்கிட்டு கீழ்த்தரமாக அமெரிக்கா நடத்தியுள்ளது என அந்நாடு குற்றம் சாட்டியது.

     

    ஆனால் எதையும் காதில் வாங்காத அமெரிக்கா, தொடர்ந்து தங்கள் நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ளவர்களைக் கண்டறிவதில் தீவிரம் காட்டி வருகிறது. அமெரிக்க குடிவரவு [கஸ்டம்ஸ்] அதிகாரிகள் கடந்த சில நாட்களில் 956 பேர் வரை கைது செய்துள்ளனர்.

     

    இந்தநிலையில்தான் உலகப் புகழ் பெற்ற பாடகி செலினா கோம்ஸ் தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பதிவில், "என் மக்கள் அனைவரும் தாக்கப்படுகிறார்கள், குழந்தைகள் உட்பட. எனக்கு எதுவும் புரியவில்லை. இதற்கு நான் ஏதாவது செய்ய விரும்புகிறேன், ஆனால் என்னால் முடியவில்லை. எல்லா வழிகளிலும் நான் முயற்சி செய்வேன் என்று வாக்கு கொடுக்கிறேன் " என்று தேம்பித் தேம்பி அழுதபடி வீடியோ ஒன்றை பதிவிட்டார்.

    நேற்று அவர் வெளியிட்ட இந்த பதிவை சில மணி நேரம் கழித்து அவர் நீக்கிவிட்டார். ஆனால் அவரின் இந்த வீடியோ இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது. தனது ஆதரவை வெளிப்படையாக கூற கூட உரிமை இல்லாத சூழல் அமெரிக்காவில் வந்துவிட்டது என பலர் கூறி வருகின்றனர்.

    ஆனால் டிரம்ப் ஆதரவாளர்கள் செலினா தேம்பி அழும் வீடியோவை கிண்டலடித்து சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முந்தைய காலங்களிலும் செலினா கோம்ஸ் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வந்தார்.

    2019 இல் புலம்பெயர்ந்தவர்களின் இன்னல்களை பற்றி பேசும் 'லிவ்விங் அண்டாக்குமெண்டட்' என்ற ஆவணப்படத்தை நெட்பிளிக்ஸ் உடன் இணைந்து தயாரித்தார். அமெரிக்கரான செலினா கோம்ஸ் உடைய தந்தை மெக்சிகோ நாட்டை சேர்த்தவர், தாய் இத்தாலி நாட்டின் வழி வந்தவர் ஆவார்.  

    • ஏர் போர்ஸ் ஒன் விமான பயணத்தின்போது பேசிய டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசினார்.
    • அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய 18,000 இந்தியர்களைத் திரும்பப்பெறுவதாக இந்தியாவும் உடன்பட்டுள்ளது.

    நரேந்திர மோடி பிப்ரவரி மாதம் வெள்ளை மாளிகையில் வைத்து தன்னை சந்திப்பார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

    நேற்று ஏர் போர்ஸ் ஒன் விமான பயணத்தின்போது பேசிய டிரம்ப் நேற்று காலை மோடியுடன் நீண்டநேரம் போனில் பேசியதாக தெரிவித்தார். அநேகமாகப் பிப்ரவரியில் வெள்ளை மாளிகைக்கு மோடி வரப்போகிறார் என்றும் இந்தியாவுடன் அமெரிக்காவுக்கு நல்ல உறவு உள்ளது என்றும் தெரிவித்தார்.

     

    மேலும் தங்களது உரையாடலில் இரு நாட்டு உறவை வலுப்படுத்துவது, இந்தோ-பசிபிக், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதித்துள்ளனர்.

    மோடியுடன் சட்டவிரோத குடியேற்றப் பிரச்சனை குறித்து விவாதித்ததாக டிரம்ப் குறிப்பிட்டார். சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு வந்த இந்தியக் குடியேறிகளை திரும்பப் பெறும் விஷயத்தில் பிரதமர் மோடி "சரியானதைச் செய்வார்" என்றும் டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய 18,000 இந்தியர்களைத் திரும்பப்பெறுவதாக இந்தியாவும் உடன்பட்டுள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளுக்கு புகலிடம் வழங்குவதாக பல்வேறு குருத்துவாராக்களில் எப்.பி.ஐ சோதனைகளை தொடங்கியள்ளது.

    அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவதில் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். முன்னதாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்களை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்து விமானப்படை விமானங்கள் மூலம் அனுப்பி வைத்தனர்.

    தங்கள் நாட்டு அகதிகளை ஏற்க கொலம்பியா முதலில் மறுத்த நிலையில் அந்நாட்டின் ஏற்றுமதி பொருட்களுக்கு 25 சதவீத வரி உயர்வு, அரசு அதிகாரிகள் அவர்களை சார்ந்தோர்களின் விசா ரத்து உள்ளிட்ட கெடுபிடி உத்தரவுகளை டிரம்ப் பிறப்பித்தார்.

    இதனால் பணிந்த கொலம்பியா தங்கள் நாட்டவரை ஏற்பதாக தெரிவித்தது. தொடர்ந்து தனது வரி உயர்வு, விசா ரத்து உத்தரவுகளை டிரம்ப் திரும்பப்பெற்றார். அதேபோல் பிரேசில் நாடும் தங்கள் அகதிகளை திரும்பப்பெற்றுள்ள நிலையில், தங்கள் நாட்டவரை விமானத்தில் தண்ணீர் கொடுக்கால், ஏசி இல்லாமல், கைவிலங்கிட்டு அமெரிக்கா கீழ்த்தரமாக நடத்தியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே டிரம்ப் - மோடி டெலிபோன் உரையாடல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள வெள்ளை மாளிகை, இந்தியா-அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பை மேலும் ஆழமாக மேற்கொள்ளுதல், நியாயமான இருதரப்பு வர்த்தக உறவை உறுதிசெய்தல் என்பது குறித்து இருதலைவர்களும் உரையாடினர் என குறிப்பிட்டுள்ளது. 

    • இங்கிலாந்தில் வாரத்தில் 4 நாட்கள் வேலை பார்க்கும் திட்டம் வெற்றி பெற்றுள்ளது.
    • இத்திட்டம் ஊழியர்களின் மனநலனையும் உடல்நலனையும் மேம்படுத்தும் என நிறுவனங்கள் கூறியுள்ளது.

    வாரத்துக்கு 5 நாட்கள் வேலை முறை என்பது சோர்வை ஏற்படுத்துவதாக கூறி 4 நாட்கள் மட்டுமே வேலை பார்க்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த பல நாடுகள் முயற்சித்து வருகின்றன.

    அவ்வகையில், இங்கிலாந்தில் வாரத்துக்கு 4 நாட்கள் வேலை திட்டம் சோதனை முயற்சியாக அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்துக்கு 100 நிறுவனங்கள் ஒப்புதல் அளித்தன. இந்த திட்டத்தால் சம்பளம், சலுகைகள் எதுவும் குறைக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் இங்கிலாந்தில் இந்த திட்டம் வெற்றிபெற்றுள்ள நிலையில், வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் திட்டத்தை பிரிட்டனை சேர்ந்த 200 நிறுவனங்கள் நிரந்தரமாக நடைமுறைப்படுத்தி உள்ளன. இந்த 200 நிறுவனங்களில் மொத்தமாக 5000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    வாரத்திற்கு 4 நாட்கள் பணிபுரிவதால் ஊழியர்கள் தங்களின் வாழ்க்கையை சந்தோஷமாகவும், நிறைவுடனும் வாழ முடியும் என தெரிவித்துள்ள நிறுவனங்கள், இது ஊழியர்களின் மனநலனையும் உடல்நலனையும் மேம்படுத்தும் எனவும் கூறியுள்ளது.

    • சீனாவில் 1990 இல் 1.3% ஆக இருந்து மாணவர்களின் உடல் பருமன் விகிதம் 2022 இல் 15.2% ஆக உயர்ந்தது.
    • உடல் பருமன் சீனாவின் மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தலாக மாறிய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சீனாவில் பள்ளி குழந்தைகள் இடையே அதிகரித்துவரும் உடல் பருமனை தடுக்க உடற்கல்வி வகுப்பை முதன்மையான பாடங்களுள் ஒன்றாக சேர்க்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

    சீனாவில் மாணவர்களின் உடல் பருமன் பிரச்சனை அதிகரித்து வருகிறது. 1990 இல் 1.3% ஆக இருந்து மாணவர்களின் உடல் பருமன்விகிதம் 2022 இல் 15.2% ஆக உயர்ந்தது. இதனால் உடல் பருமன் சீனாவில் ஒரு பெரிய பொது சுகாதார பிரச்சினையாக மாறியுள்ளது. குறிப்பாக கொரோனா பெருந்தொற்றுக்கு பின்பு உடல் பருமன் பிரச்சனைகள் மேலும் அதிகரித்துள்ளது.

    இதனால் சீனாவில் உள்ள அனைத்து பள்ளிகளும் கட்டாயமாக ஒருநாளில் 2 மணி நேரமாவது உடற்கல்வி பாடத்திற்காக ஒதுக்க வேண்டும் என அறிவுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்களின் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, உடல் பருமன்பிரச்சனைகளை கட்டுப்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

    சீன மொழி ஆசிரியர், கணித ஆசிரியர், அறிவியல் ஆசிரியருக்கு இணையாக உடற்கல்வி ஆசிரியருக்கும் மரியாதையை தரவேண்டும் என்றும் கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளை பள்ளிகளில் ஊக்குவிக்க வேண்டும் என்றும் சீனாவின் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • டீப்சீக், ஆர்1 மற்றும் ஆர்1 ஜீரோ என்ற இரு ஏஐ மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
    • நேற்று அமெரிக்க பங்குச்சந்தையில் வரலாறு காணாத வகையில் என்விடியாவின் பங்குகள் 17% வீழ்ச்சியை கண்டன.

    வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு [ஏஐ] தொழில்நுட்பத்தின் அமெரிக்க நிறுவங்கள் மட்டுமே வல்லாதிக்கம் செலுத்திவந்த நிலையில் சீன நிறுவனம் புதிய ஏஐ மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.

    2023ஆம் ஆண்டில் சீன குவாண்ட் ஹெட்ஜ் ஃபண்ட் தலைவரான லியாங் வென்ஃபெங் என்பவரால் தொடங்கப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனமான டீப்சீக் (Deepseek) அறிமுகப்படுத்தியுள்ள ஏஐ மாடல் அமெரிக்க நிறுவனங்களைக் கதிகலங்க வைத்துள்ளது.

    டீப்சீக், ஆர்1 மற்றும் ஆர்1 ஜீரோ என்ற இரு ஏஐ மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஆர்1 பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அமெரிக்காவின் ஓபன் ஏஐ - சாட்ஜிபிடி மற்றும் கூகுள் ஜெமினி ஆகியவை பிரீமியம் முறையில் நவீன வசதிகளை வழங்கிவரும் நிலையில், டீப்சீக் ஆர்1 அனைத்து நவீன வசதிகளையும் முற்றிலும் இலவசமாக வழங்குகிறது.

    இதனால் சாட்ஜிபிடி ஐ விஞ்சி ஆப்பிளின் US ஸ்டோரிலும் உலகளவிலும் டீப்சீக் செயலி அதிகமான டவுன்லோட்களை கடந்துள்ளது. டீப்சீக் ஏஐ அறிமுகம் பங்குசந்தையிலும்பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்க தொழில்நுட்ப பங்குகள் நேற்று [திங்கள்கிழமை] பூகம்பத்தை சந்தித்துள்ளன.

    என்விடியா கார்ப் இணை நிறுவனர் ஜென்சன் ஹுவாங் மற்றும் உலகின் முன்னணி பணக்காரர்கள் ஒரே நாளில் 108 பில்லியன் டாலர்கள் [ ரூ.9.34 லட்சம் கோடி] இழந்துள்ளனர் என்று ப்ளூம்பெர்க் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    நேற்று அமெரிக்க பங்குச்சந்தையில் வரலாறு காணாத வகையில் என்விடியாவின் பங்குகள் 17% வீழ்ச்சியை கண்டன. இதனால் நிறுவனத்தின் சந்தை மதிப்பில் 589 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டது.

    டீப்சீக் வருகையால் செயற்கை நுண்ணறிவுடன் தொடர்புடைய நிறுவனங்களைக் கொண்ட பணக்காரர்களின் செல்வம் மிகவும் நஷ்டத்தை சந்தித்தது. என்விடியா கார்ப் இணை நிறுவனர் ஜென்சன் ஹுவாங் உடைய சொத்துமதிப்பில் நேற்று ஒரே நாளில் 20 சதவீதம் [20.1 பில்லியன் டாலர்கள்] குறைந்துள்ளது.

    ஜென்சன் ஹுவாங் 

     

    Oracle Corp இணை நிறுவனர் லேரி எலிசன் உடைய சொத்தில் 12 சதவீதம் [22.6 பில்லியன் டாலர்கள்] குறைந்துள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தை அமெரிக்க நிறுவனங்கள் அதிக செலவு செய்து தயாரித்துள்ள நிலையில் டீப்சீக் நிறுவனம் 6 மில்லியன் டாலர்களில் அதை உருவாகிவிட்டது.

    டீப்சீக் உடைய தாக்கம் தொடர்வதால் முதலீட்டாளர்கள் நடுக்கத்தில் உள்ளனர். டீப்சீக் வருகை அமெரிக்காவுக்கான எச்சரிக்கை மணி என அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நாடகம் போன்று நடத்தி அதற்காக பணம் ஈட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளாராம்.
    • வார நாட்களில் ரூ. 1,975, வார இறுதி நாட்களில் ரூ. 2,963 வரை வசூலிக்கிறார்.

    சினிமாக்களில் நடிக்க வேண்டும் என்பது இளைஞர்கள் பலரது கனவாக உள்ளது. அதில், சிலர் வில்லனாக நடித்து புகழ் பெற வேண்டும் என ஆசைப்படுவார்கள். ஆனால் மலேசியாவை சேர்ந்த ஷாசாலி சுலைமான் (வயது 28) என்பவர் சினிமாவில் வருவது போல நிஜத்திலும் வில்லனாக நடித்து பணம் சம்பாதிக்கிறார். அதாவது காதலி மற்றும் மனைவி முன்பு தங்களை ஹீரோ போல காட்டிக்கொள்ள நினைப்பவர்கள் இவரை தொடர்பு கொள்ளலாம்.

    உங்களுக்காக வில்லனாக மாற தயார் என்று விளம்பரம் செய்துள்ளார். காதலி மற்றும் கணவன் இல்லாத நேரத்தில் பெண்களை பின் தொடர்ந்து அவர்களுக்கு தொல்லை கொடுத்து பின்னர் கணவர் அல்லது காதலன் வரும் போது அவர்களிடம் அடி வாங்கி பெண்கள் முன்பு உங்களை ஹீரோவாக்கி கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

    நாடகம் போன்று நடத்தி அதற்காக பணம் ஈட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளாராம். ஆண்கள் மட்டுமல்லாது பெண்களும் கூட தன்னை அணுகலாம் என கூறியுள்ள சுலைமான் இதற்காக கட்டணம் வசூலிக்கிறார்.

    வார நாட்களில் ரூ. 1,975, வார இறுதி நாட்களில் ரூ. 2,963 வரை வசூலிக்கிறார். இவரது அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

    • டீப்சீக் ஏஐ, அமெரிக்காவுக்கான எச்சரிக்கை மணி என்று டிரம்ப் கூறியுள்ளார்
    • டீப்சீக் ஏஐ, அனைத்து நவீன வசதிகளையும் இலவசமாக வழங்குகிறது.

    செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது. இப்போதுவரை இந்த ஏஐ தொழில்நுட்பத்தில் ஓபன் ஏஐ - சாட்ஜிபிடி, கூகுள் - ஜெமினி ஆகியவையே அமெரிக்க நிறுவனகளே கோலோச்சி வந்தன.

    இந்நிலையில் அவற்றுக்கு சவால் விடும் வகையில் சீன நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய ஏஐ மாடல் அமைந்துள்ளது. இது ஏஐ உலகில் புரட்சியை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

    2023ஆம் ஆண்டில் சீன குவாண்ட் ஹெட்ஜ் ஃபண்ட் தலைவரான லியாங் வென்ஃபெங் என்பவரால் தொடங்கப்பட்ட நிறுவனம் டீப்சீக் (Deepseek).

    இந்த நிறுவனம் தற்போது டீப்சீக், ஆர்1 மற்றும் ஆர்1 ஜீரோ என்ற இரு ஏஐ மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஆர்1 மாடல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ஆர்1 என்பது வழக்கமான ஏஐ மாடல் ஆகும். இன்னும் பயன்பாட்டுக்கு வாராத ஆர்1 ஜீரோ தானாகவே கற்பித்துக்கொள்ளும் (self-taught) ஏஐ மாடல் ஆகும். அமெரிக்க நிறுவனங்களை விட குறைவாக 6 மில்லியன் டாலர்கள் செலவில் டீப்சீக் ஏஐ உருவாக்கப்பட்டுள்ளது.

     

    டீப்சீக் ஏஐ மாடல் வருகையால் அமெரிக்க நிறுவனங்கள் ஆட்டம் கண்டுள்ளன. ஏனெனில் டீப்சீக் ஏஐ முற்றிலும் இலவசமாகும். தற்போது சந்தையில் உள்ள சாட்ஜிபிடி, ஜெமினி ஆகியவை பயனர்களுக்குப் பழைய வெர்ஷன்களை மட்டுமே இலவசமாக வழங்குகிறது. புதிய அம்சங்களுக்குக் கட்டணம் பெறுகிறது. ஆனால் டீப்சீக் ஏஐ, அனைத்து நவீன வசதிகளையும் இலவசமாக வழங்குகிறது.

    மேலும் டீப்சீக் ஏஐ மாடலை இயக்கும் செலவும் குறைவாகும். ஓபன் ஏஐ மாடலை இயக்க 10 இன்புட் டோக்கன்கள் தேவை, அதற்கு 15 டாலர் செலவாகும். ஆனால் டீப்சீக் மாடலில் அதே 10 இன்புட் டோக்கன்கள் செலவு 0.55 டாலர்கள் மட்டுமே. அதாவது ஓபன் ஏஐ மாடலை விட டீப் சீக் மாடலை இயக்க 27 மடங்கு குறைவாகவே செலவாகிறது.

    மேலும் சாட்ஜிபிடி மற்றும் ஜெமினி ஆகியவை க்ளோஸ்ட்டு சோர்ஸ் ஏஐ மாடல்கள். ஆனால் டீப்சீக் ஏஐ ஓபன் சோர்ஸ் ஏஐ மாடல், அதவாது, யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் இதை அணுக முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு. எனவே அமெரிக்க நிறுவனங்கள் இந்த புதிய போட்டியாளரை கண்டு நடுக்கத்தில் உள்ளன. பங்குச்சந்தையிலும் டீப்சீக் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    மியாமியில் நடந்த கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப், டீப்சீக் ஏஐ, அமெரிக்காவுக்கான எச்சரிக்கை மணி என்று பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே சாட்ஜிபிடி ஐ விஞ்சி ஆப்பிளின் US ஸ்டோரில் அதிகமாக இன்ஸ்டால் செய்யப்பட்டு வருகிறது. டீப்சீக் செயலி உலகளவில் அளவுக்கு அதிகமான டவுன்லோட்களை கடந்து அசத்தியது.

    மிக குறுகிய காலக்கட்டத்தில் மிகவும் பிரபலம் அடைந்த நிலையில், டீப்சீக் தளத்தை குறிவைத்து சைபர் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதையடுத்து, டீப்சீக் சேவையை பயன்படுத்த வழிவகை செய்யும் பதிவு முறையை அந்நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. 

    • அங்கே அவ்வளவு தான். எல்லாம் முடிந்துவிட்டது.
    • 907 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகளை இஸ்ரேலுக்குவுக்கு அனுப்ப டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

    இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் 15 மாதங்களுக்குப் பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது. இதில் இஸ்ரேல் தரப்பில் சுமார் 1,700 பேரும், பாலஸ்தீன தரப்பில் சுமார் 47,000 பேரும் கொல்லப்பட்டனர்.

    போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுத்துவித்து வருகின்றனர். அதற்கு ஈடாக பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்து வருகிறது.

    போர் நிறுத்தத்தையடுத்து இடப்பெயர்ந்த மக்கள் தங்களது பகுதிகளுக்குத் திரும்பி வருகிறார்கள். எல்லையைத் திறந்தபின் வடக்கு காசாவுக்குள் நெட்சாரிம் பாதை வழியாக லட்சக்கணக்கான மக்கள் நேற்றுமுதல் செல்லத் தொடங்கியுள்ளனர்.

    இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு ஜோர்டான், எகிப்து மற்றும் பிற அரபு நாடுகள் புகலிடம் வழங்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காசாவை முழுவதுமாக சுத்தம் செய்யவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

    சில தினங்களுக்கு முன்னர் தனது ஏர் ஃபோர்ஸ் ஒன் விமான பயணத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

    "அது (காசா) இப்போது ஒரு பாதிக்கப்பட்ட இடமாகவே உள்ளது, கிட்டத்தட்ட எல்லாமே இடிக்கப்பட்டுள்ளன. மக்கள் அங்கே இறந்து கொண்டிருக்கிறார்கள். நான் அங்கிருந்து வெளியேறும் 15 லட்சம் மக்களின் எதிர்காலம் குறித்து யோசிக்க வேண்டும்.

    அதை(காசாவை) நாம் முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும். அதுதான் ஒரே வழி. அங்கே அவ்வளவு தான். எல்லாம் முடிந்துவிட்டது. அங்கிருந்து அவர்கள் வெளியேறுவதே சரியாக இருக்கும். எனவே நான் சில அரபு நாடுகளுடன் இணைந்து, அவர்களுக்கு வேறு இடத்தில் வீடுகளை அமைத்துத் தர வேண்டும். அங்கு அவர்கள் நிம்மதியாக வாழலாம்" என்று டிரம்ப் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

     

    பாலஸ்தீனிய அகதிகளை ஜோர்டான் இப்போதே ஏற்று வருகிறது. கூடுதலாக இன்னும் அவர்கள் காசா அகதிகளை ஏற்க வேண்டும். இதுதொடர்பாக ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா மற்றும் எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இதனால் சூழ்நிலையை சாதமாக பயன்படுத்தி டிரம்ப் மறைமுகமாக காசாவை காலி செய்து இஸ்ரேலிடம் கொடுக்க உள்ளாரா என்ற கேள்வியும் பலரிடையே எழுந்துள்ளது.

    இதனிடையே, ஏற்கனவே அமெரிக்காவுடன் செய்த ஒப்பந்தங்களின்படி 907 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகளை இஸ்ரேலுக்குவுக்கு அனுப்ப டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

    காசா மீதான போரில், இஸ்ரேல் கட்டுப்பாடுகளை மீறியதால், முன்னாள் அதிபர் ஜோ பைடன் இந்த வெடிகுண்டுகளை அனுப்பாமல் தாற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. பிற பாலஸ்தீனிய நகரங்களில் இருந்து துண்டிக்கப்பட்டு தனியாக உள்ள காசாவை ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வருகிறது.

    • வடக்கு காசாவுக்கு நெட்சாரிம் பாதை வழியாக நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
    • பிரதான சாலை முழுவதும் மனித தலைகளாக காட்சி அளிக்கிறது.

    காசா:

    இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் 15 மாதங்களுக்கு பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.

    இதில் ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவித்தது. அதற்கு ஈடாக பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்கிறது. போர் நிறுத்தத்தையடுத்து இடப்பெயர்ந்த மக்கள் தங்களது பகுதிகளுக்கு திரும்பி வருகிறார்கள்.

    இதற்கிடையே ஒப்பந் தப்படி, பணய கைதிகளில் அர்பெல் யாஹுட் என்ற பெண் பிணைக்கைதியை ஹமாஸ் விடுவிக்கவில்லை.

    அவர் விடுதலை செய்யப்படும் வரை பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவுக்கு திரும்ப அனுமதிக்க மாட்டோம் என்று இஸ்ரேல் தெரிவித்தது. அவர் வருகிற 1-ந்தேதி விடுவிக்கப்படுவார் என்று ஹமாஸ் தெரிவித்தது.

    இதுதொடர்பான பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்பட்டதையடுத்து வடக்கு காசாவுக்குள் பாலஸ்தீனியர்கள் நுழைய இஸ்ரேல் அனுமதி அளித்தது.

    இதனால் லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கூட்டம் கூட்டமாக வடக்கு காசாவுக்கு திரும்புகிறார்கள். அவர்கள் நெட்சாரிம் பாதை வழியாக நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனால் கடற்கரையை ஒட்டிய பிரதான சாலை முழுவதும் மனித தலைகளாக காட்சி அளிக்கிறது.


    காசா மீது இஸ்ரேல் போரை தொங்கியபோது வடக்கு காசாவை முதல் முதலில் குறிவைத்து சரமாரியாக தாக்கியது. அங்கிருந்த கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் முற்றிலும் சேதமடைந்தன.

    தாக்குதல் காரணமாக சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வடக்கு காசாவில் இருந்து தெற்கு காசாவுக்கு இடம் பெயர்ந்தனர். அவர்கள் அகதிகள் முகாம், ஆஸ்பத்திரிகள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் தஞ்சம் அடைந்திருந்தனர்.

    • காவல்துறையில் முழு நேரம் பணியாற்றும் மோப்ப நாய் அந்தஸ்து அளிக்கப்பட்டது.
    • உணவு கிண்ணத்திலேயே சிறுநீர் கழித்த புகாரிலும் இந்த நாய் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதோடு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

    சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள போலீஸ் நாய் பயிற்சி தளத்தில் வெடி பொருட்களை கண்டுபிடிக்கும் பிரிவில் ஒரு நாய்க்கு பயிற்சி அளிக்கப்பட்டது. புசாய் என்ற பெயர் கொண்ட இந்த நாய்க்குட்டி கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்டு 28-ந்தேதி பிறந்தது. தனது அழகான சிரிப்பு மற்றும் கண்டறியும் திறமை மூலம் சமூக வலைதளங்களில் வைரலான இந்த நாய்க்குட்டி சீனா காவல் துறையில் சேர்க்கப்பட்டதும் இதை சாங்கிள் கவுன்டி பொதுபாதுகாப்பு பணியகத்தை சேர்ந்த பயிற்சியாளரான ஜாவோ கிங்ஸ்சுவாய் நன்கொடையாக வழங்கி இருந்தார்.

    பிறந்து 4 மாதத்தில் போலீஸ் பயிற்சி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட இந்த நாய்க்குட்டிக்கு அனைத்து வகையான பயிற்சிகளும் அளிக்கப்பட்டது. பின்னர் காவல்துறையில் முழு நேரம் பணியாற்றும் மோப்ப நாய் அந்தஸ்து அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் பணியின் போது தூங்கியதற்காக இந்த நாய்க்கு வருடாந்திர ஊக்கத்தொகை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் உணவு கிண்ணத்திலேயே சிறுநீர் கழித்த புகாரிலும் இந்த நாய் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதோடு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, அபராதமாக, அந்த நாய்க்கு வழங்கப்படும் தின்பண்டங்கள் அகற்றப்பட்டுள்ளது.



    ×