என் மலர்tooltip icon

    உலகம்

    • 2028 ஆம் ஆண்டில் இந்த சிறுகோள் பூமிக்கு மிக அருகில் வரும்.
    • 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, ஆரம்பக்கால சூரிய மண்டல உருவாக்கத்தின் எச்சங்களே இந்த சிறுகோள்கள்.

    2024 YR4 என்று பெயரிடப்பட்ட சிறுகோள் [asteroid] 2032 ஆம் ஆண்டில் பூமியைத் தாக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

    Asteroid Terrestrial-Impact Last Alert System (ATLAS) விஞ்ஞானிகள், 2024 டிசம்பர் 27 அன்று பூமியிலிருந்து சுமார் 8,29,000 கி.மீ தொலைவிலிருந்து இந்த சிறுகோள் பூமியை நோக்கி வருவதாகக் கண்டறிந்தனர். இந்த சிறுகோள் தற்போது பூமியிலிருந்து 27 மில்லியன் மைல்கள் தொலைவில் சூரிய குடும்பத்தைச் சுற்றி நகர்ந்துகொண்டிருக்கிறது.

    சுமார் 196 அடி விட்டம் கொண்ட இந்த 2024 YR4 சிறுக்கொள் 2032 ஆம் ஆண்டில் பூமியைத் தாக்க 1.2சதவீதம் [1-in-83] வாய்ப்பிருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. 2028 ஆம் ஆண்டில் இந்த சிறுகோள் பூமிக்கு மிக அருகில் வரும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

    2024 YR4 சிறுகோள் பூமியைத் தாக்கினால் பூமியின் மீது சுமார் 8 மெகா டன் ஆற்றலை வெளிப்படுத்தும் என்று நாசா கணித்துள்ளது. 8 மெகா டன் ஆற்றல் என்பது 1945ல் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டு ஆற்றலை விட 500 மடங்கு அதிகமாகும்.

    விண்வெளியில் வைத்து சிறுகோள் மீது மோதலை ஏற்படுத்தி அதன் பாதையை நகர்த்த விஞ்ஞானிகள் பரிசீலித்து வருகின்றனர். 2024 YR4 சிறுகோளை கவனமாகக் கண்காணித்து வரும் ஆய்வாளர்கள் 2032 இல் அது ஏற்படுத்தும் தாக்கம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

    சிறுகோள் என்பது சூரியனைச் சுற்றி வரும் ஒரு சிறிய, பாறைப் பொருளாகும். சிறிய கூழாங்கல் சைஸ் முதல் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் விட்டம் வரை இந்த சிறுகோள்கள் காணப்படுகின்றன.

     

    சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, ஆரம்பக்கால சூரிய மண்டல உருவாக்கத்தின் எச்சங்களே இந்த சிறுகோள்கள். பொதுவாக செவ்வாய் மற்றும் வியாழன் இடையே உள்ள பெல்ட்டில் இவை காணப்படுகின்றன.  

    • விமானம் தெற்கு சூடானின் யூனிட்டி ஸ்டேட் பகுதி அருகே விழுந்து நொறுங்கியது.
    • இந்த விமான விபத்தில் சுமார் 18 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியானது.

    ஜூபா:

    தெற்கு சூடானில் நடந்த விமான விபத்தில் சுமார் 18 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியானது.

    சூடானின் வடபகுதியில் அமைந்துள்ள ஆயில்பீல்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானத்தில் 21 பேர் பயணம் செய்தனர்.

    விமானம் தெற்கு சூடானின் யூனிட்டி ஸ்டேட் பகுதி அருகே இன்று விழுந்து நொறுங்கியது.

    இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 18 பேர் உயிரிழந்துள்ளனர் என ஐக்கிய நாடுகளின் ரேடியோ மிராயா தெரிவித்துள்ளது. விபத்து குறித்த காரணம் இதுவரை தெரியவில்லை. விமான விபத்தில் 18 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த சில ஆண்டுகளாக சூடானில் பல்வேறு விமான விபத்துகள் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்த ஆண்டு உற்பத்தி இலக்கையும் தாண்டி தயாரிக்க கிம் உத்தரவிட்டுள்ளார்.
    • ரஷியா மற்றும் வடகொரியா இடையில் ராணுவ ஒத்துழைப்பு உடன்படிக்கை கையெழுத்தானது.

    அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி 20 ஆம் தேதி டிரம்ப் பதவியேற்றது முதல் சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலையை  ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், தங்கள் நாட்டின் அணு ஆயுத உற்பத்தி மையத்தை பார்வையிட்டு அமெரிக்காவிடம் தனது இருப்பை மீண்டும் நிரூபித்துள்ளார்.

    கிம் ஜாங் உன் அணு ஆயுத கூடத்தில் ஆய்வு செய்யும் புகைப்படங்கள் வெளியாகி அந்நாட்டின் அணுசக்தி போர்த் திறனை குறித்து உலக நாடுகளைக் கவலை கொள்ளச் செய்துள்ளது. முன்னதாக கடந்த 2019 இல் அதிபராக இருந்த சமயத்தில் டிரம்ப் வடகொரியா சென்று கிம் ஜாங் உன் - ஐ சந்தித்தார். வடகொரியாவுக்கு ஒரு அமெரிக்க அதிபர் செல்வது அதுவே முதல் முறை.

    ஆனால் அதன்பின் அமைந்த ஜோ பைடன் அரசுடன் வடகொரியா நல்லுறவைப் பேணவில்லை. மாறாக மேற்கு நாடுகளைப் பகைத்து உக்ரைனுடன் போரிடும் ரஷியாவுடன் வட கொரியா கைகோர்த்தது. ரஷியா மற்றும் வடகொரியா இடையில் ராணுவ ஒத்துழைப்பு உடன்படிக்கை கையெழுத்தானது. உக்ரைன் உடனான போரில் வடகொரிய வீரர்களை ரஷியா பயன்படுத்தியது.

    இதற்கிடையே அவ்வப்போது கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளை சோதனை செய்து வட கொரியா தனது திறனை பறைசாற்றி வருகிறது. கடந்த நவம்பரில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்ற சமயத்திலும் வடகொரியா ஏவுகணை சோதனை செய்தது.

    மேலும் கடந்த செப்டம்பரில் அணு ஆயுதம் தயாரிப்பதற்கான யுரேனியம் செறிவூட்டல் மையத்தில் கிம் ஜாங் உன் ஆய்வு செய்யும் புகைப்படங்கள் வெளியாகி மேற்கு நாடுகளை மிரள வைத்தது. இந்நிலையில் நேற்று அணு ஆயுத உற்பத்தி மையத்தில் கிம் ஜாங் உன் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது அணு ஆயுத உற்பத்திக்குத் தேவையான யுரேனியம் செறிவூட்டலை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று நாட்டின் அணுசக்தி கேடயத்தை வலுப்படுத்த இந்த ஆண்டு உற்பத்தி இலக்கையும் தாண்டி தயாரிக்க கிம் உத்தரவிட்டுளளார் என்று கூறப்படுகிறது.

     

     

    எதிரி நாடான தென் கொரியா மீது எந்நேரமும் வடகொரியா அணு ஆயுதத்தைப் பயன்படுத்தலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. இதற்கிடையில் அமெரிக்க அதிபர் பதவியேற்ற பின் ஒரு பேட்டியில், கிம் ஜாங் உன் புத்திசாலி என்றும் வடகொரியாவுடன் நல்லுறவை பேண விரும்புவதாக டிரம்ப் பேசியிருந்தார்.

    தென் கொரியாவின் அனுமானப்படி 2018 ஆம் ஆண்டிலேயே வட கொரியா 20 முதல் 60 அணு ஆயுதங்களை தயாரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டது. ஆனால் வடகொரியாவிடம் 100 க்கும் அணு ஆயுதங்கள் இருக்கலாம் என்ற வல்லுநர்கள் சந்தேகிக்கின்றனர். 

    • சவுதி அரேபியாவின் மேற்குப் பகுதியான ஜிசான் அருகே விபத்து நடந்துள்ளது.
    • உயிரிழந்தவர்களின் குடும்பத்துடன் தூதரக அதிகாரிகள் தொடர்பில் இருந்து வருவதாக தகவல்

    சவுதி அரேபியாவின் மேற்குப் பகுதியில் உள்ள ஜிசான் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 9 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த தகவலை ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், முழு ஆதரவு அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

    "சாலை விபத்தில் 9 இந்தியர்கள் உயிரிழந்ததற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். விபத்து தொடர்பாக தகவல் அறிய ஒரு பிரத்யேக உதவி எண் அமைக்கப்பட்டுள்ளது" ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.

    இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் "விபத்து மற்றும் உயிர் இழப்பு குறித்து அறிந்து துயரமடைந்தேன். ஜெட்டாவில் உள்ள தூதர அதிகாரியிடம் பேசினேன். அவர் பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் தொடர்பில் உள்ளார். இந்த துயரமான சூழ்நிலையில் முழு ஆதரவையும் வழங்கி வருகிறார் என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்" என எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    • F-35 Lightning II போர் விமானம் பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது.
    • F-35 ஒரே நேரத்தில் 12 மணி நேரத்திற்கும் மேலாகப் பறக்கும் திறனுடையது

    அமெரிக்காவில் விமானப்படை ஜெட் விமானம் ஒன்று பயிற்சியின்போது கீழே விழுந்து விபத்துக்களாகியுள்ளது.

    நேற்று (ஜனவரி 28) மதியம் அலாஸ்காவின் ஃபேர்பேங்க்ஸ் அருகே அமைந்துள்ள எய்ல்சன் விமானப்படைத் தளத்தில் F-35  Lightning II போர் விமானம் பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது.

    விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    பயிற்சியின் போது தரையிறங்கும் சமயத்தில் விபத்து நேர்ந்ததாக எய்ல்சன் விமானப்படை அறிக்கை கூறுகிறது.

    இதனால் விமானம் கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ளது. விமானம் கீழே விழுவதற்கு முன் விமானி அதிலிருந்து எட்ஜெக்ட் ஆகி வெளியே வெளியேறிய குதித்ததால் பாதுகாப்பாக இருப்பதாகவும், பாசெட் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    F-35 ஒரே நேரத்தில் 12 மணி நேரத்திற்கும் மேலாகப் பறக்கும் திறனுடையது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • கொலம்பியா மீது கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்படும் டிரம்ப் எச்சரிக்கை.
    • 2 ராணுவ விமானங்களை கொலம்பிய அரசு அனுப்பியது.

    அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    இதில் கொலம்பியாவைச் சேர்ந்த பலரை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் சொந்த நாட்டுக்கு அமெரிக்கா அனுப்பி வைத்தது. இதற்கு கொலம்பிய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து கொலம்பியா மீது கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்தார்.

    இதற்கிடையே அமெரிக்க விமானங்களில் திருப்பி அனுப்பப்படும் குடிமக்களை ஏற்க கொலம்பியா முன்வந்தது. இதனால் மோதல் முடிவுக்கு வந்து இரு நாடுகள் இடையே மீண்டும் விமான சேவை தொடங்கியது.


    அமெரிக்காவில் இருந்து கொலம்பிய மக்களை அழைத்து வர 2 ராணுவ விமானங்களை கொலம்பிய அரசு அனுப்பியது. அந்த விமானங்கள், 200-க்கும் மேற்பட்ட கொலம்பியாவை சேர்ந்த புலம் பெயர்ந்தவர்களை ஏற்றிக் கொண்டு தலைநகர் போகோட்டாவை வந்தடைந்தது.

    • இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
    • இந்தியா உலக அரங்கில் ஒரு முக்கியமான நாடாக உள்ளது.

    கனடாவில் வசித்து வந்த காலிஸ்தான் அமைப்பு தலைவர் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டியது. இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இவ்விவகாரத்தால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.

    இதற்கிடையே கனடா பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார். இதையடுத்து கனடாவின் புதிய பிரதமர் வருகிற மார்ச் மாதம் தேர்வு செய்யப்பட உள்ளார்.

    இந்த நிலையில் கனடாவின் தேர்தல்களில் சில வெளிநாட்டு அரசாங்கங்கள் தலையிடுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஆணையம் தனது அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் இந்தியா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


    அந்த அறிக்கையில், கனடா தேர்தலில் வெளிநாட்டு தலையீட்டில் 2-வது மிகவும் சுறுசுறுப்பான நாடாக இந்தியா உள்ளது. இந்தியா உலக அரங்கில் ஒரு முக்கியமான நாடாக உள்ளது. கனடாவும், இந்தியாவும் பல தசாப்தங்களாக ஒன்றாக வேலை செய்து உள்ளன.

    ஆனால் இரு நாடுகள் உறவில் சவால்கள் உள்ளன. நாங்கள் நீண்ட காலமாக இந்தியாவின் வெளிநாட்டு தலையீடு நடவடிக்கைகள் குறித்து தெரிவித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளது.

    கனடாவின் குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:-

    இந்தியா குறித்த கனடா அறிக்கையின் குற்றச்சாட்டுகளை நாங்கள் நிராகரிக்கிறோம். தலையீடு என்று கூறப்படும் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை நாங்கள் பார்த்தோம். உண்மையில் இந்தியாவின் உள் விவகாரங்களில் கனடா தொடர்ந்து தலையிட்டு வருகிறது. அவர்கள் தான் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

    • வெள்ளை மாளிகை அதிகாரியும் உறுதிப்படுத்தியுள்ளார்.
    • இஸ்ரேல் பிரமதர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    வெள்ளை மாளிகைக்கு வருமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு அமெரிக்க அதிபர் அதிபர் டொனால்டு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். இதனை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதனை வெள்ளை மாளிகை அதிகாரியும் உறுதிப்படுத்தியுள்ளார்.

    அதன்படி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அடுத்த வாரம் அதிபர் டிரம்ப்-ஐ வெள்ளை மாளிகையில் வைத்து சந்திக்கவுள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றதும் அவரை சந்திக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முதல் சர்வதேச தலைவர் பெஞ்சமின் நேதன்யாகு தான் என்று இஸ்ரேல் பிரமதர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு முதல் முறையாக அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் நேதன்யாகு சந்திக்க உள்ளனர். முன்னதாக போர் நிறுத்தம் தொடர்பாக பல மாதங்கள் வரை பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன.

    முன்னதாக இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள தேவையான கருவிகளை வழங்கியதற்காக அமெரிக்காவுக்கும் அதன் அதிபர் டொனால்டு டிரம்பிற்கும் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நன்றி தெரிவித்து இருந்தார்.

    • டாக்டரான அவர் தொழில் அதிபராகவும் இருந்து வருகிறார்.
    • ரூபி தல்லா 3 முறை எம்.பியாக இருந்துள்ளார்.

    கனடா பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ விலகியதையடுத்து புதிய பிரதமர் வருகிற மார்ச் மாதம் தேர்வு செய்யப்படுகிறார். இதில் பலர் களத்தில் குதித்துள்ளனர்.

    இந்த நிலையில் கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக இந்திய வம்சாவளி பெண் எம்.பியான ரூபி தல்லா அறிவித்துள்ளார். டாக்டரான அவர் தொழில் அதிபராகவும் இருந்து வருகிறார். ஆளும் லிபரல் கட்சியை சேர்ந்த ரூபி தல்லா 3 முறை எம்.பியாக இருந்து உள்ளார்.

    இதற்கிடையே ரூபி தல்லா கூறும்போது, கனடாவில் 5 லட்சம் பேர் சட்டவிரோதமாக வசித்து வருகின்றனர். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. புலம்பெயர்ந்தோர் நம் நாட்டை மகத்தானதாக கட்டியெழுப்ப உதவியிருப்பதை நன்கு அறிவேன்.

    ஆனால் மனிதர்கள் கடத்தி வரப்படுவதை நாம் தடுக்க வேண்டும். கனடாவில் சட்டவிரோதமாக வசிக்கும் ஒவ்வொருவரையும் நான் நாடு கடத்துவேன். இப்போது தொடங்கி கனடா மீண்டு வருகிறது என்றார்.

    • ஏற்பாடுகளை செய்யுமாறு வலியுறுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
    • சிக்கி தவிப்பது கொடூரமானது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்க தொழிலதிபரும், உலக பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் அதிபர் டொனால்டு டிரம்ப் தன்னிடம் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பூமிக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் இரண்டு விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் ஆகியோரை மீட்க தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு வலியுறுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    முன்னாள் அதிபர் ஜோ பைடனின் நிர்வாகத்தால் இரண்டு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் நீண்ட காலமாக சிக்கி தவித்து வருவது கொடூரமானது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

    "விண்வெளி ஆய்வு மையத்தில் சிக்கித் தவிக்கும் இரண்டு விண்வெளி வீரர்களை விரைவில் வீட்டிற்கு அழைத்து வர டொனால்டு டிரம்ப் ஸ்பேஸ் எக்ஸ்-ஐ கேட்டுள்ளார். நாங்கள் அவ்வாறு செய்வோம். பைடன் இவர்களை நீண்ட காலம் தவிக்க செய்தது கொடூரமானது," என்று மஸ்க் எக்ஸ் தள பதிவில் கூறினார்.

    கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக விண்வெளி ஆய்வு மையத்தில் வீரர்கள் சிக்கித் தவிக்கும் நிலையில், அவர்கள் சிக்கி தவிக்கவில்லை, நலமுடன் இருக்கிறார்கள் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தொடர்ச்சியாக தெரிவித்து வருகிறது.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பத்து நாட்களில் பூமிக்க திரும்ப திட்டமிடப்பட்டு இருந்தது. எனினும், அவர்கள் இன்றுவரை பூமிக்கு திரும்ப முடியாத சூழல்தான் நிலவுகிறது. 



    • கடைக்குள் இருந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
    • தகவலின்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் இண்டியானா மாகாணம் எல்கார்ட் நகரில் ஒரு வணிக வளாகம் செயல்படுகிறது. அங்குள்ள ஒரு கடைக்கு பொருட்கள் வாங்குவது போல் வாலிபர் ஒருவர் சென்றிருந்தனர்.

    அப்போது திடீரென அவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்தார். இதில் கடைக்குள் இருந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    இதுகுறித்த தகவலின்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை நோக்கியும் அவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் 2 போலீசார் படுகாயம் அடைந்தனர்.

    அதற்கு பதிலடியாக போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் அந்த வாலிபர் கொல்லப்பட்டார்.

    • விமானம் புறப்பட தயாரானபோது விமானத்தின் ஒரு பகுதியில் திடீரென தீப்பற்றியது.
    • விபத்துக்கான காரணம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சியோல்:

    தென் கொரியாவின் பூசன் நகரில் உள்ள கிம்ஹே சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹாங்காங் நோக்கி இன்று பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்யும் பயணிகள் 169 பேர், விமான பணியாளர்கள் 7 பேர் என அனைவரும் விமானத்தில் ஏறினர்.


    விமானம் புறப்பட தயாரானபோது விமானத்தின் ஒரு பகுதியில் திடீரென தீப்பற்றியது. பின்னர் மளமளவென விமானத்தின் மற்ற பகுதிகளுக்கும் தீ பரவியது. இதனால் பயணிகள் பீதி அடைந்தனர். பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் என அனைவரும் அவசரகால எஸ்கேப் ஸ்லைடு (ஊதப்பட்ட ஸ்டைடு) மூலமாக பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.


    எனினும் மூன்று பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்துக்கான காரணம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த மாதம் 29-ம் தேதி முவான் விமான நிலையத்தில் பயணிகள் விமானம் தரையிறங்கியபோது லேண்டிங் கியர் வேலை செய்யாததால் விமானம் கான்கிரீட் அமைப்பில் மோதி தீப்பிடித்தது. இந்த விபத்தில் 179 பேர் உயிரிழந்தனர். 2 பேர் மட்டுமே உயிர்பிழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×