என் மலர்tooltip icon

    உலகம்

    • சீனாவிற்குச் செல்லும் இந்த 85 ஆயிரம் பேரில் பெரும்பாலானோர் மாணவர்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆவர்.
    • இந்தியர்களை ஈர்க்கும் முயற்சியாக, சீனா இந்த தளர்வை அறிவித்துள்ளது

    அமெரிக்காவுடன் மோதலுக்கு மத்தியில் இந்தியர்களுக்கு 3 மாதத்தில் 85 ஆயிரம் விசாக்களை வழங்கிய சீனா கட்டுப்பாடுகளை தளர்த்தியது

    சீன அரசு கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் ஏப்ரல் 9-ந்தேதி வரை 85 ஆயிரம் இந்தியர்களுக்கு விசாக்களை வழங்கியுள்ளது.

    இதுதொடர்பாக சீன தூதர் சூ பீஹோங்கின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, "ஏப்ரல் 9-ந்தேதி வரை இந்தியாவில் உள்ள சீன தூதரகங்கள் இந்த ஆண்டு சீனாவுக்குச் செல்லும் இந்திய குடிமக்களுக்கு 85,000-க்கும் மேற்பட்ட விசாக்களை வழங்கி உள்ளன.

    சீனாவைப் பார்வையிடவும், பாதுகாப்பான, துடிப்பான, நேர்மையான மற்றும் நட்பு சீனாவை அனுபவிக்கவும் அதிகமான இந்திய நண்பர்களை நாங்கள் வரவேற்கிறோம்" என்றார்.

    இந்தியாவில் இருந்து சீனாவிற்குச் செல்லும் இந்த 85 ஆயிரம் பேரில் பெரும்பாலானோர் மாணவர்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆவர்.

    மேலும் இந்தியர்களுக்கான விசா விதிமுறைகளை சீனா தளர்த்தியுள்ளது. இந்தியர்களை ஈர்க்கும் முயற்சியாக, சீனா இந்த தளர்வை அறிவித்துள்ளது.

    அதன்படி எந்த ஆன்லைன் முன்பதிவுகளும் இல்லாமல் வேலை நாட்களில் தங்கள் விண்ணப்பங்களை நேரடியாகச் சமர்ப்பிக்கலாம். இந்தியர்களுக்கு விசா கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியர்கள் விண்ணப்பிக்கும் விசாக்கள் தற்போது மிக விரைவாக அங்கீகரிக்கப்படுகின்றன.

    அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக போர் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரியை விதித்தார். பின்னர் சீனாவை தவிர மற்ற நாடுகளுக்கு 90 நாட்கள் வரி விலக்கு அறிவித்தார். அதேவேளையில் சீனாவுக்கான வரியை 145 சதவீதமாக உயர்த்தினார். இதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்கா மீதான வரியை உயர்த்தியது.

    இதனால் இரு நாடுகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியாவுக்கு சீனா விசா சலுகைகளை அறிவித்துள்ளது. இது இந்தியா-சீனா இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக கருதப்படுகிறது. வரி விதிப்பு நடவடிக்கையில் அமெரிக்காவுக்கு எதிராக போராட இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்த கடையில் பாகிஸ்தானை சேர்ந்த வாலிபர் ஒருவரும் பணியாற்றி வந்தார்.
    • இதுதொடர்பாக வெளியுறவு மந்திரி எஸ். ஜெய்சங்கரிடம் பேசினேன்.

    தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் உள்ள சோன் கிராமத்தைச் சேர்ந்தவர் அஷ்டபு பிரேம்சாகர் (வயது 35).

    இவரும், தெலுங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாஸ், சாகர் ஆகியோர் துபாயில் உள்ள மாடர்ன் பேக்கரி என்ற கடையில் வேலை பார்த்து வந்தனர். இந்த கடையில் பாகிஸ்தானை சேர்ந்த வாலிபர் ஒருவரும் பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் இந்தியர்களுக்கும், பாகிஸ்தான் வாலிபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கடும் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான் வாலிபர் வாளால் 3 இந்தியர்களையும் சரமாரியாக வெட்டினார். இந்த தாக்குதலில் அஷ்டபு பிரேம்சாகர், சீனிவாஸ் ஆகியோர் உயிரிழந்தனர். சாகர் படுகாயம் அடைந்தார்.

    அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். துபாயில் 2 இந்தியர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்ததும் அவர்களது உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். 2 பேரின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுதொடர்பாக மத்திய மந்திரி ஜி.கிஷன் ரெட்டி கூறும்போது, தெலுங்கானாவைச் சேர்ந்த 2 இளைஞர்கள், துபாயில் கொடூரமாக கொல்லப்பட்டது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.

    இதுதொடர்பாக வெளியுறவு மந்திரி எஸ். ஜெய்சங்கரிடம் பேசினேன். பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு முழு ஆதரவையும், உடலை உடனடியாக தாயகம் கொண்டு வருவதற்கும் அவர் உறுதியளித்துள்ளார், இந்த விஷயத்தில் விரைவான நீதி வழங்கப்படுவதை உறுதிசெய்ய வெளியுறவு அமைச்சகம் பாடுபடும் என்றார்.

    கொல்லப்பட்ட பிரேம்சாகர் கடந்த 6 ஆண்டுகளாக துபாயில் பணிபுரிந்து வந்தார். கடைசியாக 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்தைப் பார்த்துவிட்டு சென்றதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

    • பல்வேறு நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் மாலத்தீவிற்கு சுற்றுலா வருகின்றனர்.
    • பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்து மாலத்தீவு நடவடிக்கை

    சுற்றுலா என்றாலே சட்டென்று நினைவுக்கு வரும் தீவுகளில் ஒன்று மாலத்தீவு. பல்வேறு நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் மாலத்தீவிற்கு சுற்றுலா வருகின்றனர்.

    முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மாலத்தீவில் இஸ்ரேல் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை கண்டித்து இஸ்ரேலிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மாலத்தீவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

    வங்காளதேசம், பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக மாலத்தீவும் தங்கள் நாடுகளுக்குள் இஸ்ரேலிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் நுழைய தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மியான்மர் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
    • மியான்மரை தொடர்ந்து பல தெற்காசிய நாடுகளில் தொடர்ச்சியாக மிதமான நிலநடுக்கங்கள் பதிவாகின.

    மார்ச் 28 அன்று மியான்மர் நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான இந்த பயங்கர நிலநடுக்கத்தால் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

    மியான்மரை தொடர்ந்து தாய்லாந்து, இந்தியா, பாகிஸ்தான் , தைவான், இந்தோனேசியா ஆகிய தெற்காசிய நாடுகளில் தொடர்ச்சியாக மிதமான நிலநடுக்கங்கள் பதிவாகின.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 4.43 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின.

    ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஏவப்படும் சாத்தியமான தேதி குறித்தும் நாசா மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் மறுபரிசீலனை செய்து வருகின்றனர்.
    • விண்வெளியில் பறக்கும்போது அதிக வெப்பத்தால் சேதமடைய வாய்ப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

    அமெரிக்கா விண்வெளி நிறுவனமான நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இணைந்து பூமியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிப்பதற்காக 'நாசா-இஸ்ரோ செயற்கை துளை ரேடார்' (நிசார்) என்ற செயற்கைக்கோளை தயாரித்துள்ளனர். இது அதிநவீன பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளாகும். இதன் மூலம் பூமியின் சுற்றுச்சூழல் அமைப்புகள், காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மாற்றங்கள், வள மேலாண்மை மற்றும் இயற்கை பேரழிவுகள் குறித்த முக்கியமான நுண்ணறிவு தகவல்களையும் வழங்கும்.

    இதனை கடந்த 2023-ம் ஆண்டு தொடக்கத்தில் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டது. ஆனால் அப்போது நிசார் செயற்கைக்கோளில் உள்ள பூமி மற்றும் ரேடார் ஆண்டெனா பிரதிபலிப்பானைப் பயன்படுத்துவதற்கு சாதகமான நிலை இல்லாத "கிரகணப் பருவம்" காரணமாக ஏவுதலில் தாமதம் ஏற்பட்டது. சில தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக 2025-ம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதத்தில் விண்வெளியில் ஏவுவதற்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்தியா-அமெரிக்கா கூட்டு ஏவுதல் மீண்டும் இந்த ஆண்டு இறுதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் ஏவப்படும் சாத்தியமான தேதி குறித்தும் நாசா மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் மறுபரிசீலனை செய்து வருகின்றனர்.

    இதுகுறித்து நாசா விஞ்ஞானிகள் கூறும்போது, 'நிசார் செயற்கைக்கோள் வருகிற மே அல்லது ஜூன் மாதம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்கிடையில் சோதனையில் செயற்கைக்கோள் ஈடுபடுத்தப்பட்டபோது, நிசார் செயற்கைக்கோளில் தொழில்நுட்ப பிரச்சினை இருப்பது தெரியவந்தது. அதாவது, நிசார் செயற்கைக்கோளில் உள்ள 12 மீட்டர் விட்டம் கொண்ட 'பிரதிபலிக்கும் ஆண்டெனா' விண்வெளியில் பறக்கும்போது அதிக வெப்பத்தால் சேதமடைய வாய்ப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

    இதை நிவர்த்தி செய்வதற்காக பிரதிபலிக்கும் ஆண்டெனா அதிக வெப்பமடைவதை தடுக்க ஒரு சிறப்பு வெப்ப பூச்சுக்காக அமெரிக்காவிற்கு திருப்பி அனுப்பப்பட்டது. பூச்சு பயன்படுத்தப்பட்ட பிறகு நிசார் செயற்கைக்கோளுடன் மிண்டும் ஒருங்கிணைப்பதற்கும், மேலும் சோதனை செய்வதற்கும் ஆண்டெனா இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. பணிக்கான ஏவுதளத் தயார்நிலை தேதியை வரும் வாரங்களில் நாசா-இஸ்ரோ தீர்மானிக்கும்' என்று தெரிவித்தனர்.

    இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறும்போது, 'நிசார் செயற்கைக்கோள் மீண்டும் பல்வேறு கட்ட சோதனைகள் செய்ய வேண்டியிருப்பதால், நிசார் செயற்கைக்கோள் ஏவுதல் தேதியை இந்த ஆண்டின் இறுதிக்கு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது' என்றனர்.

    • ஆளுங்கட்சி சார்பில் டேனியல் நோபா மீண்டும் போட்டியிட்டார்.
    • வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து முடிந்ததை தொடர்ந்து உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

    குயிட்டோ:

    தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் அதிபர் ஆட்சிமுறை நடைபெறுகிறது. அந்த நாட்டின் அதிபராக டேனியல் நோபா என்பவர் ஆட்சி செய்து வந்தார்.

    அவருடைய பதவிக்காலம் முடிவு அடைந்ததை தொடர்ந்து அங்கு புதிய அதிபருக்கான தேர்தல் நடந்தது. இதில் ஆளுங்கட்சி சார்பில் டேனியல் நோபா மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து இடதுசாரி கட்சி பெண் வேட்பாளர் லூயிஸ் கோன்சலஸ் போட்டியிட்டார். வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து முடிந்ததை தொடர்ந்து உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

    இதில் டேனியல் நோபா 55.6 சதவீதம் வாக்குகளை பெற்று அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட லூயிசை காட்டிலும் 16,468 வாக்குகள் அதிகம் பெற்று ஈகுவடார் நாட்டின் அதிபராக டேனியல் மீண்டும் தேர்வாகி உள்ளார்.

    • 93 இடங்களில் 83 இடங்களில் PAP வென்று மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தது.
    • சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த பின் நடைபெறும் 14-வது பொதுத்தேர்தல் ஆகும்.

    1965 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து சிங்கப்பூரில் மக்கள் செயல் கட்சி (PAP) ஆட்சி ஆட்சியில் உள்ளது. கடந்த 2020 இல் நடந்த தேர்தலில் PAP கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்த்தாலும் அதன் வாக்கு வங்கி முன்பு எப்போதும் இல்லாததை விட 61 சதவீதம் ஆக சரிந்தது.

    மொத்தம் உள்ள 93 இடங்களில் 83 இடங்களில் PAP வென்று மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தாலும், எதிர்கட்சியான தொழிலாளர்கள் கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 6 இல் இருந்து 10 ஆக உயர்ந்தது.

    இந்நிலையில் சிங்கப்பூரில் அடுத்த பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு வேண்டி இன்று பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மே 3 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் ஏப்ரல் 23 வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இந்த தேர்தல், சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த பின் நடைபெறும் 14-வது பொதுத்தேர்தல் ஆகும். இந்த தேர்தலிலும் ஆளும் கட்சியே வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால் கடந்த தேர்தலில் மக்களிடையே நிலவிய அதிருப்தியை சரிக்கட்ட தற்போதைய பிரதமரும் PAP கட்சியின் தலைவருமான லாரன்ஸ் வோங் திட்டமிட்டுள்ளார்.

    அதிருப்தியடைந்த இளம் வாக்காளர்களிடையே கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்களைக் கொண்டு செல்ல கட்சி வியூகம் வகுத்து வருகிறது. வரும் தேர்தலில் 30 புதுமுகங்களைக் களமிறக்க வோங்  திட்டமிட்டுள்ளார்.

    • தேவைப்படும்போது பயன்படுத்தப்படும் கழிப்பறை காகிதத்தைப் போல நான் உணர்ந்தேன்
    • பாராட்டு என்பது தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரு கருவி மட்டுமல்ல.

    சிங்கப்பூரை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தில் இயக்குனராக பணிபுரிந்த ஏஞ்சலா யோ என்பவர் தனது வேலையை ராஜினாமா செய்ய முடிவெடுத்தார். ஆனால் அதற்கு அவர் கையாண்ட வழிமுறை விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தனது நிறுவனம் தன்னை சரியாக நடத்தாதது குறித்து வருத்தமடைந்த ஏஞ்சலா, தனது ராஜினாமா கடிதத்தை டாய்லட் டிஸ்யூ பேப்பரில் எழுதி கொடுத்துள்ளார்.

    இதை தனது லிங்கின்ட்-இன் பக்கத்தில் பகிர்ந்த ஏஞ்சலா தனது வேலையிட  சூழல் குறித்து பகிர்ந்துகொண்டார்.

    அவர் தனது பதிவில், "இந்த நிறுவனம் என்னை எப்படி நடத்தியது என்பதற்கான அடையாளமாக இந்த வகையான காகிதத்தை எனது ராஜினாமாவிற்குத் தேர்ந்தெடுத்துள்ளேன். தேவைப்படும்போது பயன்படுத்தப்படும் கழிப்பறை காகிதத்தைப் போல நான் உணர்ந்தேன்" என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

    மேலும் ஊழியர்களை சின்ன சின்ன விஷயங்களுக்காக பாராட்டுவதால் கூட பெரிய பெரிய மாற்றங்கள் நடக்கும். பாராட்டு என்பது தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரு கருவி மட்டுமல்ல. ஒரு நபர் எவ்வளவு மதிக்கப்படுகிறார் என்பதற்கான பிரதிபலிப்பாகும் என்று நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். ஏஞ்சலாவின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி விவாதப்பொருளாக மாறியுள்ளது. 

    • பில் கேட்ஸ் - மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ் தம்பதி கடந்த 2021 இல் விவாகரத்து பெற்றது.
    • தனது வாழ்வில் தான் செய்த மிகப்பெரிய தவறாக நினைத்து வருந்துவதாகத் தெரிவித்திருந்தார்.

    மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் - மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ் தம்பதி கடந்த 2021 இல் விவாகரத்து பெற்றது.

    இந்த விவாகரத்து பற்றி கடந்த ஜனவரியில், பில் கேட்ஸ் கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில், 27 ஆண்டு கால திருமண வாழ்வை விவகாரத்து மூலம் முடித்துக் கொண்டது தனது வாழ்வில் தான் செய்த மிகப்பெரிய தவறாக நினைத்து வருந்துவதாகத் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் அண்மையில் ஆங்கில ஊடகம் ஒன்றில் நடந்த நேர்காணலில் மெலிண்டா பிரெஞ்ச் பேசுகையில், மிகவும் நெருங்கிய உறவில், உங்களது மதிப்புடன் உங்களால் வாழ முடியாத நிலை ஏற்படும்போது, பிரிவது என்பது மிகவும் அவசியமாகிறது.

    அவர் என்ன சொல்லியிருந்தார் என்பது எனக்குத் தெரியாது, எனவே அதுகுறித்து நான் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை. அது அவரது சொந்த வாழ்க்கை. எனக்கென்று ஒரு வாழ்க்கை உள்ளது. நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன் என்று தெரிவித்தார்.

    • தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மேஹ்னா அந்த அதிகாரியிடம் கேட்டுள்ளார்.
    • மேஹ்னாவின் கைதுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டங்கள் எழுந்துள்ளன.

    வங்கதேசத்தை சேர்ந்த பிரபல நடிகை மேஹ்னா ஆலம். மாடலிங் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்த இவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். 2020 ஆம் ஆண்டு மிஸ் எர்த் பங்களாதேஷ் பட்டத்தை வென்றுள்ளார்.

    வங்கதேசத்தில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பணியாற்றிய திருமணமான அதிகாரி ஒருவரை மேஹ்னா காதலித்து வந்தார். ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மேஹ்னா அந்த அதிகாரியிடம் கேட்டுள்ளார். ஆனால் அந்த அதிகாரி அதற்கு மறுத்துவிட்டார்.

    இந்நிலையில் மேஹ்னா ஆலமை டாக்காவில் உள்ள அவரது வீட்டில் வைத்து வங்கதேச போலீசார் நேற்று நள்ளிரவு கைது செய்தனர்.

    வங்கதேசம், சவுதி அரேபியா இடையேயான இருநாட்டு உறவுக்கு அச்சுறுத்தலாக விளங்குவதால் மேஹ்னா சிறப்பு அதிகார சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட மேஹ்னாவை 30 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே மேஹ்னாவின் கைதுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டங்கள் எழுந்துள்ளன. 

    • அரசாங்க திறன் துறை தலைவர் எலான் மஸ்க்கின் ஆலோசனைப்படி ஏராளமான அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர்.
    • நாசாவின் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் துறை (டி.இ.ஐ) தலைவராக நீலா ராஜேந்திரா பணியாற்றி வந்தார்.

    அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த ஜனவரி 20-ந்தேதி பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    இதில் அரசில் தேவையற்ற செலவுகளை குறைக்கும் நடவடிக்கையும் அடங்கும். அரசாங்க திறன் துறை தலைவர் எலான் மஸ்க்கின் ஆலோசனைப்படி ஏராளமான அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் பல்வேறு அமைச்சகங்களில் சில துறைகளின் செயல்பாட்டை நிறுத்தும்படி உத்தரவிடப்பட்டது.

    இந்த நிலையில் டிரம்பின் நிர்வாக உத்தரவால் அமெரிக்க விண்வெளி கழகமான நாசாவில் பணியாற்றிய இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் அதிகாரியான நீலா ராஜேந்திரா பணிநீக்கம் செய்யப்பட்டார்.

    நாசாவின் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் துறை (டி.இ.ஐ) தலைவராக நீலா ராஜேந்திரா பணியாற்றி வந்தார். இதற்கிடையே டி.இ.ஐ துறையை ரத்து செய்ய டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது. அத்துறையில் பணியாற்றிய அனைத்து ஊழியர்களை நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டது. இதையடுத்து நீலா ராஜேந்திராவை தக்க வைத்து கொள்ள நாசா நடவடிக்கை எடுத்தது.

    அதன்படி அவரது பதவியை 'குழு சிறப்பு மற்றும் பணியாளர் வெற்றி அலுவலகத் தலைவர்' என்று மாற்றியது. ஆனால் இதை டிரம்ப் நிர்வாகம் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நீலா ராஜேந்திராவை பணிநீக்கம் செய்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது. இதுதொடர்பாக நாசா தனது உயர்மட்ட விண்வெளி ஆய்வகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நீலா ராஜேந்திராவின் வெளியேற்றம் குறித்து மின்னஞ்சலில் தகவல் தெரிவித்தது.

    அதில், நீலா ராஜேந்திரா இனி ஆய்வகத்தில் பணிபுரியவில்லை. எங்கள் நிறுவனத்திற்கு அவர் ஏற்படுத்திய நீடித்த பயன்களுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அவருக்கு நல்வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளது.

    நீலா ராஜேந்திரா பல ஆண்டுகளாக நாசாவில் தலைமைப் பொறுப்பில் இருந்தார். அவர் நாசாவை பன்முகப்படுத்த உதவும் முயற்சிகளுக்காக பணியாற்றி வந்தார். இதன் முதன்மை நோக்கம் பெண்களையும் சிறுபான்மையினரையும் அமைப்பில் பணியமர்த்துவதாகும்.

    • 193 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி வரை வடக்கே உணரப்பட்டது.
    • காலை வெயிலில் அமைதியாக நின்றிந்த யானைகள், நிலநடுக்கம் ஏற்பட்டபோது திடுக்கிட்டன.

    அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள சான் டியாகோ நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவானது.

    உள்ளூர் நேர்ப்படி காலை 10:08 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மலை நகரமான ஜூலியனில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சான் டியாகோ கவுண்டியில் மையம் கொண்டிருந்தது.

    இது சுமார் 193 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி வரை வடக்கே உணரப்பட்டது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல பின்அதிர்வுகள் ஏற்பட்டன.

    நிலநடுக்கத்தை தொடர்ந்து கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சான் டியாகோவிற்கு வெளியே உள்ள கிராமப்புற சாலைகளில் பாறைகள் சரிந்து விழுந்தன. நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்ட சமயத்தில் சான் டியாகோ மிருகக்காட்சிசாலை சஃபாரி பூங்காவில் ஆப்பிரிக்க யானைகளின் கூட்டம் தங்கள் குட்டிகளை பாதுகாக்க செய்த செயல் கவனத்தை ஈர்த்துள்ளது.

    நிலஅதிர்வை உணர்ந்த யானைக் கூட்டத்தின் மூத்த யானைகள் உள்ளுணர்வால் தூண்டப்பட்டு, கூட்டமாக தங்கள் குட்டிகளை சூழ்ந்து பாதுகாப்பு அரணாக நின்ற காட்சிகள் மெய்சிலர்க வைப்பதாக உள்ளது.

    இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், காலை வெயிலில் அமைதியாக நின்றிந்த யானைகள், நிலநடுக்கம் ஏற்பட்டபோது திடுக்கிட்டு, அவை முதலில் சிதறி, பின்னர் விரைவாக மீண்டும் ஒன்றுகூடி, ஜூலி மற்றும் மக்யா ஆகிய இரண்டு யானைக்குட்டிகளை மூத்த தாய்மார்கள் நட்லுலா, உமங்கானி மற்றும் கோசி ஆகியவை சூழ்ந்து நிற்கின்றன.

    நிலநடுக்கம் நின்ற பிறகும், வயது வந்த யானைகள் தங்கள் பாதுகாப்பு வலயத்தை கலைக்காமல் காதுகளை விரித்து, எச்சரிக்கையாக, பல நிமிடங்கள் அப்படையே நின்றிருந்தன. 

    ×