என் மலர்tooltip icon

    உலகம்

    • ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உள்பட 23 பேர் உயிரிழந்தனர்.
    • கடந்த 50 நாட்களாக காசாவுக்குள் செல்லும் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் முற்றாக நிறுத்தி வைத்துள்ளது.

    இஸ்ரயேலிய பிணை கைதிகள் அனைவரையும் விடுவிப்பதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ள சூழலில் கடந்த 24 மணிநேரத்தில் காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தியுள்ளது.

    தெற்கு நகரமான கான் யூனுஸ் பகுதியில் மக்கள் தங்கியிருந்த கூடாரங்கள் மீது இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உள்பட 23 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    உயிரிழந்தவர்கள் கூடாரத்துக்குள் உயிருடன் எரிந்து பலியானதாக உடல்களைப் பெற்ற மருத்துவமனை தெரிவித்துள்ளது.

    காசாவில் இதுவரை இஸ்ரேலிய தாக்குதலால் 51,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 50 நாட்களாக காசாவுக்குள் செல்லும் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் முற்றாக நிறுத்தி வைத்துள்ளது.

    • அதிபர் டொனால்டு டிரம்ப், துப்பாக்கிக்கள் சுடுவதல்ல, மனிதர்கள் தான் சுடுகிறார்கள் என்று கூறினார்.
    • சம்பவத்தின் பின் அவரை போலீசார் சுட்டுப் பிடித்தினர்.

    அமெரிக்காவின் புளோரிடா மாகாண பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.

    துப்பாக்கிச்சூடு நடத்தியவர் 20 வயதான போனிக்ஸ் சின்கர் என்று கண்டறியப்பட்டுள்ளது. சம்பவத்தின் பின் அவரை போலீசார் சுட்டுப் பிடித்தினர்.

    போனிக்ஸ் சின்கர் அதே பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மாணவர் ஆவார். உள்ளூர் துணை ஷெரீப் ஆன அவரது தந்தையின் துப்பாக்கியை கொண்டு அவர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்.

    போலீஸ் சுட்டதில் காயமடைந்த போனிக்ஸ் சின்கர்க்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரால் சுடப்பட்டு காயமடைந்த 6 பேரும் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

    இந்த துப்பாக்கிச்சூடு குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், துப்பாக்கிக்கள் சுடுவதல்ல, மனிதர்கள் தான் சுடுகிறார்கள் என்று கூறினார். சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • இம்ரான்கான் 2023-ம் ஆண்டு முதல் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • சமீப காலமாக இம்ரான்கானைச் சந்திக்க உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான்கான் பல்வேறு வழக்குகளில் கைதுசெய்யப்பட்டு கடந்த 2023-ம் ஆண்டு முதல் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வியாழக்கிழமைகளில் சிறையில் அவரை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவரது கட்சி தலைவர்கள் சந்திக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    சமீப காலமாக இம்ரான்கானைச் சந்திக்க அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில், சிறையில் இம்ரான்கானைச் சந்திக்க அவரது சகோதரிகளான அலீமா கான், உஸ்மா கான், நொரீன் கான் மற்றும் அவரது கட்சி தலைவர்கள் நேற்று வந்தனர். ஆனால் போலீசார் அவர்களுக்கு அனுமதி மறுத்து சாலை குறுக்கே கன்டெய்னர்களை போட்டு மறித்தனர். அவர்களை அங்கிருந்து திரும்பிச் செல்லும்படி எச்சரித்தனர். இருப்பினும், இம்ரான்கானின் சகோதரிகள் அங்கிருந்து செல்ல மறுத்தனர்.

    இதையடுத்து போலீசார் சகோதரிகள் 3 பேர் மற்றும் இம்ரான்கான் கட்சி தலைவர்கள் சிலரையும் கைது செய்தனர். பின்னர் வாகனத்தில் ஏற்றி சிறையில் இருந்து சற்று தொலைவான பகுதிக்கு கொண்டு சென்று விடுவித்தனர்.

    ஏற்கனவே கடந்த செவ்வாய்க்கிழமையும் இம்ரான்கானைச் சந்திக்க வந்தபோது, அவரது 3 சகோதரிகளும் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • போர்நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் அமைப்பு பிணைக்கைதிகளை விடுவித்து வருகிறது.
    • அதற்கு ஈடாக பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் ராணுவம் விடுதலை செய்து வருகிறது.

    கெய்ரோ:

    இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் 15 மாதத்துக்கு பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் கடந்த ஜனவரி 19-ல் முடிவுக்கு வந்தது. இஸ்ரேல் தரப்பில் சுமார் 2,000 பேரும், பாலஸ்தீன தரப்பில் சுமார் 50,000 பேரும் கொல்லப்பட்டனர்.

    போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் உள்ள இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவித்து வருகின்றனர். அதற்கு ஈடாக பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்து வருகிறது.

    மீதமுள்ள பிணைக்கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஹமாஸ் அமைப்பினருக்கு அதிபர் டிரம்ப் கடந்த மாதம் எச்சரிக்கை விடுத்தார்.

    இதற்கிடையே, இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் கடந்த மார்ச் 1-ம் தேதி முடிந்த நிலையில் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், எங்களிடம் உள்ள அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவிக்கத் தயார் என அறிவித்துள்ள ஹமாஸ் அமைப்பின் தலைவர் காலி அல்-ஹய்யா இஸ்ரேலுக்கு போர்நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    ஹமாஸ் அமைப்பிடம் 50-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நேபிள்சுக்கு தெற்கே மான்டே பைட்டோவுக்கு கேபிள் கார் ஒன்று சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்றது.
    • இதில் கேபிள் அறுந்து விழுந்த விபத்தில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டனர்.

    மிலன்:

    இத்தாலியில் உள்ள நேபிள்ஸ் விரிகுடா மற்றும் வெசுவியஸ் மலை காட்சிகளுக்காக கேபிள் கார் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு சீசன் என்பதால் கேபிள் கார் சேவை கடந்த வாரம் தொடங்கப்பட்டது.

    இந்நிலையில், நேபிள்சுக்கு தெற்கே மான்டே பைட்டோவுக்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்ற கேபிள் காரில் கேபிள் அறுந்து விழுந்ததில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் காயமடைந்தார்.

    விபத்து குறித்து தகவலறிந்ததும் இத்தாலிய ஆல்பைன் மீட்புப் படையினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

    கேபிள் கார் அறுந்து விழுந்த விபத்தில் 4 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • அணு ஆயுத பயன்பாடு குறித்து அமெரிக்கா, ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
    • இதில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இந்த வார இறுதியில் நடைபெற உள்ளது.

    மாஸ்கோ:

    அணு ஆயுத பயன்பாடு குறித்த அமெரிக்கா உடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை ரோம் நகரில் இந்த வார இறுதியில் நடைபெறும் என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், ஈரானிய வெளியுறவுத்துறை மந்திரி அப்பாஸ் அராக்சி இன்று ரஷிய தலைநகர் மாஸ்கோ வந்தடைந்தார். அவர் கிரெம்ளின் மாளிகையில் அதிபர் விளாடிமிர் புதினைச் சந்தித்துப் பேசினார்.

    இதுதொடர்பாக, ஈரான் அதிகாரிகள் கூறுகையில், அணுசக்தி பிரச்சனையைப் பொறுத்தவரை, எங்கள் நண்பர்களான சீனா மற்றும் ரஷியாவுடன் நாங்கள் எப்போதும் நெருக்கமான ஆலோசனைகளைக் கொண்டிருந்தோம். இப்போது ரஷிய அதிகாரிகளுடன் அவ்வாறு செய்ய இது ஒரு நல்ல வாய்ப்பு என தெரிவித்துள்ளனர்.

    • 2003-ல் தலிபானை பயங்கரவாத குழுவில் சேர்த்தது ரஷியா.
    • தலிபான் உடன் தொடர்வு வைத்திருந்தால் ரஷியா சட்டப்படி குற்றமாகும்.

    ரஷியா கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பயங்கரவாத குழு பட்டியலில் தலிபான் அமைப்பை வகைப்படுத்தியிருந்தது. தற்போது அந்த பட்டியலில் இருந்து தலிபானை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பயங்கரவாத குழு பட்டியலில் வகைப்படுத்தியிருந்ததால், கடந்த 2003ம் ஆண்டில் இருந்து தலிபான் உடன் தொடர்பு வைத்திருந்தால் அது ரஷிய சட்டத்தின்படி குற்றமாகும். தற்போது நீக்கப்பட்டுள்ளதால் ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபானுக்கு இது ராஜாங்க ரீதியிலான வெற்றியாக பார்க்கப்படுகிறது.

    பயங்கரவாத அமைப்பு என வகைப்படுத்தப்பட்டதை நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படும் என கடந்த வருடம் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதனடிப்படையில் தடையை நீக்க வேண்டும் என அரசு தரப்பு நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்த நிலையில், நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    • கே12-18பி கிரகம் நமது பூமியை விட இரண்டரை மடங்கு பெரியது
    • ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி உதவியுடன் விஞ்ஞானிகள் இதை கண்டுபிடித்துள்ளனர்.

    சூரிய மண்டலத்துக்கு அப்பால் உயிர்கள் இருப்பதற்கான உறுதியான ஆதாரங்களை கேம்பிரிட்ஜ் பல்கலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

    ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி உதவியுடன் சூரிய மண்டலத்திற்கு அப்பால் உயிர்கள் இருப்பதற்கான ஆதாரம்

    கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    கே12-18பி எனப் பெயரிடப்பட்டுள்ள கிரகத்தில், பூமியில் வாழும் நுண்ணுயிர்களால் உருவாக்கப்படும் இரண்டு வாயுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    கே12-18பி கிரகம் நமது பூமியை விட இரண்டரை மடங்கு பெரியது மற்றும் பூமியில் இருந்து 124 ஒளியாண்டுகள் தொலைவில் இக்கிரகம் உள்ளது.

    • பன்டாக்கா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென படகில் தீ விபத்து ஏற்பட்டது.
    • பயணிகள் உயிர் தப்பிப்பதற்காக படகில் இருந்து அடுத்தடுத்து ஆற்றில் குதித்தனர்.

    கின்சாசா:

    மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஆறுகளில் படகு போக்குவரத்து மக்களின் முக்கிய போக்குவரத்தாக இருக்கிறது.

    இந்நிலையில், நேற்று முன்தினம் இரவில் வடமேற்கு காங்கோவில் உள்ள மடான் குமு துறைமுக பகுதியில் இருந்து போலோம்பா பகுதிக்கு ஒரு மோட்டார் படகு புறப்பட்டது. அந்தப் படகில் சுமார் 400 பேர் பயணம் செய்தனர். பன்டாக்கா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென படகில் தீ விபத்து ஏற்பட்டது.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் உயிர் தப்பிப்பதற்காக படகில் இருந்து அடுத்தடுத்து ஆற்றில் குதித்து உள்ளனர். அப்போது துரதிருஷ்டவசமாக படகும் ஆற்றில் கவிழ்ந்தது.

    இந்தக் கோர விபத்தில் படகில் இருந்து 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். சுமார் 100 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். காணாமல் போன மற்றவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டனர்.

    படகு தீப்பிடித்த விபத்துக்கு பெண் ஒருவர் சமையல் செய்ததே காரணம் என கூறப்படுகிறது.

    • ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் இந்த இரு நாடுகளின் தலைவர்கள் சந்தித்துப் பேசிக்கொண்டனர்.
    • அணு ஆயுதம் தொடர்பாக ஒப்பந்தம் ஒன்று ஏற்படாவிட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் டிரம்ப்.

    தெஹ்ரான்:

    ஈரான் நாடு அணு சக்தி பயன்பாடு மற்றும் அணு ஆயுதத்தில் இருந்து விலகி இருப்பது பற்றி அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    இதற்கிடையே, ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் இந்த இரு நாடுகளின் தலைவர்கள் சந்தித்துப் பேசிக்கொண்டனர். அப்போது, அமெரிக்காவும், ஈரானும் அணு ஆயுத பயன்பாடு பற்றி அடுத்த வாரம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புதல் அளித்துள்ளன.

    ஓமனின் வெளியுறவுத்துறை மந்திரி பத்ர பின் ஹமத் அல்-புசைதி என்பவரை தலைமை மத்தியஸ்தராக கொண்டு ஈரானிய வெளியுறவுத்துறை மந்திரி அப்பாஸ் அராக்சி மற்றும் அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    இது ஆக்கப்பூர்வ முறையில் மற்றும் பரஸ்பர மதிப்பு அடிப்படையில் நடந்துள்ளது என வெள்ளை மாளிகை தெரிவித்தது.

    முன்னதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், அணு ஆயுதம் தொடர்பாக ஒப்பந்தம் ஒன்று ஏற்படாவிட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

    இந்நிலையில், அணு ஆயுத பயன்பாடு குறித்த அமெரிக்கா உடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை ரோம் நகரில் இந்த வார இறுதியில் நடைபெறும் என ஈரானிய அரசு டிவி தெரிவித்துள்ளது.

    • சீன வியாபாரிகள் டிக்டாக்கில் களமிறங்கி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
    • அமெரிக்காவில் 100 டாலர்களுக்கு விற்கப்படுகின்றன என்றும் அதை வெறும் 5-6 டாலருக்கு வழங்குவதாக கூறுகிறார்.

    அமெரிக்கா சீனா மாறி மாறி இறக்குமதிகளுக்கு வரி விதித்து வருகின்றன. இதனால் விலைவாசியில் பெரிய மாற்றம் ஏற்படும் என்று கணிக்கப்படுகிறது. இந்நிலையில் சீன வியாபாரிகள் நேரடியாக அமெரிக்கர்களுக்கு தங்கள் பொருட்களைக் குறைந்த விலையில் விற்க டிக் டாக்கை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

    அமெரிக்காவில் வரியுடன் விற்கப்படும் ஹேண்ட்பேக் போன்ற ஆடம்பர சீன பிராண்டட் பொருட்களை நேரடியாக தாங்களே தருகிறோம் என்றும், இவ்வாறு சீன உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக வாங்குவதன் மூலம் சில்லறை விலைகள் மற்றும் கட்டணங்களைத் தவிர்த்து விலை பன்மடங்கு குறையும் என்றும் சீன வியாபாரிகள் டிக்டாக்கில் களமிறங்கி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

    உதாரணமாக ஒரு வீடியோவில், லுலுலெமன் லெகிங்ஸ், லூயிஸ் உய்ட்டன் கைப்பைகள் மற்றும் பிர்கின் பைகள் போன்ற உயர் ரகப் பொருட்களை அவற்றின் சில்லறை விலையின் ஒரு பகுதிக்கு விற்பனை செய்வதாகக் கூறும் வீடியோக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    வீடியோ ஒன்றில் கையில் பொருளுடன் பேசும் வியாபாரி, தொழிற்சாலை இயந்திரங்களுக்கு முன்னால் நின்று, லுலுலெமன்ஸ் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட யோகா பேன்ட்கள் அமெரிக்காவில் 100 டாலர்களுக்கு விற்கப்படுகின்றன என்றும் அதை வெறும் 5-6 டாலருக்கு வழங்குவதாக கூறுகிறார். இந்த வீடியோ TikTok இல் 10 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

    இதுபோன்ற எண்ணற்ற வீடியோக்கள் TikTok ஐ ஆக்கிரமித்து வருகின்றன. மேலும் பிர்கின் பிராண்டட் ஹேண்ட்பேக் அமெரிக்காவில் 38,000 டாலர்கள்(ரூ.32 லட்சம்) என்றும் அதே பொருளை 1,400 டாலர்களுக்கு (சுமார் ரூ. 1 லட்சத்துக்கு) தருவதாகவும் அவர் விளம்பரப்படுத்துகிறார்.

    இருப்பினும் இந்த பொருட்களில் பெரும்பாலானவை ஆடம்பர பிராண்ட்களின் தயாரிப்பை ஒத்த போலியான தயாரிப்புகள் என்ற விமர்சனமும் எழுந்து வருகிறது.      

    • 'போயிங்'கிடம் இருந்து விமானங்கள் வாங்க தங்கள் நாட்டு விமான நிறுவனங்களுக்கு சீனா தடை விதித்தது.
    • சீனா சண்டையிட விரும்பவில்லை, ஆனால் சண்டையிட பயப்படவில்லை

    அமெரிக்கா சீனா இடையே வர்த்தக போர் வலுத்து வரும் சூழலில் சீனா இறக்குமதிகளுக்கான வரியை அமெரிக்கா 245 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

    நேற்று முன் தினம் அமெரிக்காவுக்கு, கனிமங்கள், உலோகம், காந்தம் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியைச் சீனா அதிரடியாக நிறுத்தி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

    பாதுகாப்பு, மின்சார வாகனம், எரிசக்தி மற்றும் மின்னணுவியல் துறைகளில் பயன்படுத்தப்படும் 17 தனிமங்களின் தொகுப்பான 'உலகின் அரிய மண் தாது'க்களில் சுமார் 90 சதவீதத்தை சீனா உற்பத்தி செய்கிறது. தனது உற்பத்திக்கு அமெரிக்கா சீனாவையே அதிகம் சார்ந்துள்ளது.

    இதனால் அமெரிக்காவின் ஆயுதங்கள், மின்னணுவியல், வாகன உற்பத்தியாளர்கள், எரோஸ்பேஸ் உற்பத்தியாளர்கள், செமிகண்டக்டர் நிறுவனங்கள், மற்றும் பிற நுகர்வோர் பயன்பாட்டுக்கான பொருட்களை தயாரிக்க தேவையான மூலக் கூறுகள் முற்றிலும் தடைப்படும் அபாயம் உருவாகி உள்ளது. 

    மேலும் அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான 'போயிங்'கிடம் இருந்து விமானங்கள் வாங்க தங்கள் நாட்டு விமான நிறுவனங்களுக்கு சீனா தடை விதித்தது. மேலும் விமானம் தொடர்பான எந்த கருவிகளையும் அமெரிக்காவிடமிருந்து வாங்க வேண்டாம் எனவும் உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு சீனா உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் சீன இறக்குமதிக்கான வரியை ஏற்கனவே விதித்த 145 சதவீதத்தில் இருந்து 245 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அரசுக் குறிப்பில், "சீனாவின் பழிவாங்கும் நடவடிக்கைகளின் விளைவாக அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இப்போது 245% வரை வரி விதிக்கப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

    முன்னதாக "சீனா சண்டையிட விரும்பவில்லை, ஆனால் சண்டையிட பயப்படவில்லை" என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    ×