என் மலர்
உலகம்
- காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 51,000 த்தை தாண்டியுள்ளது.
- அனைத்து பயணக்கைதிகளையும் ஒப்படைக்க தயார் என ஹமாஸ் தெரிவித்திருந்தது.
இஸ்ரேல்-காசா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் காலாவதியான நிலையில் காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
இதனால் காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 51,000 த்தை தாண்டியுள்ளது. மக்கள் வசிக்கும் முகாம்கள், தற்காலிக கூடாரங்களை குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்கி வருவது சர்வதேச அளவில் கண்டனங்களை குவித்து வருகிறது.
இந்நிலையில் போரிடுவதைத் தவிர வேறு வழியில்லை என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, காசாவில் போரிடுவதைத் தவிர வேறு வழியில்லை. ஹமாஸ் அழிக்கப்பட்டு, பணயக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படும் வரை போரை முடிவுக்குக் கொண்டுவர இயலாது.
அவ்வாறு போரிட்டால்தான், இஸ்ரேலுக்கு ஹமாஸ் படையினரால் அச்சுறுத்தல் இருக்காது. போரைத்தவிர இஸ்ரேலுக்கு வேறு வழியில்லை என்று தெரிவித்தார்.
பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பை எதிர்த்து கடந்த 2023, அக்டோபர் 7 இல் ஹமாஸ் இஸ்ரேலுக்குள் புகுந்து நடத்திய தாக்குதலில் 1,200 பேர் வரை இறந்தனர்.
200 பேர் வரை பணய கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். பலர் இஸ்ரேல் தாக்குதலால் காசாவில் வைத்து கொல்லப்பட்டனர்.
கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை நீடித்த போர் நிறுத்தத்தின்போது இஸ்ரேலிடம் ஹமாஸ் ஒப்படைத்தது. இதற்கிடையே மீதமிருக்கும் அனைத்து பயணக்கைதிகளையும் ஒப்படைக்க தயார் என ஹமாஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- இது சீனாவின் முக்கிய தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
- பதிவேற்ற வேகம் 1008 Mbps ஆக இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹூவாய் (Huawei) தொழில்நுட்ப நிறுவனம், சீனா யூனிகாம் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து, ஹெபெய் மாகாணத்தின் சியோங்கான் நியூ என்ற பகுதியில் சீனாவின் முதல் 10G ஸ்டாண்டர்ட் பிராட்பேண்ட் நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த பகுதி தலைநகர் பெய்ஜிங்கிற்கு அருகில் அமைந்துள்ளது. இது சீனாவின் முக்கிய தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

வெளியிடப்பட்ட தகவலின்படி, நெட்வொர்க்கில் உண்மையான பதிவிறக்க வேகம் 9834 Mbps ஐ எட்டியது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இதன் பதிவேற்ற வேகம் 1008 Mbps ஆக இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த 10 ஜி இணைய சேவை மூலம் 2 மணி நேர படத்தை சில விநாடிகளில் பதிவிறக்கம் செய்ய முடியும்.
இந்த சேவையானது அதி நவீன 50 ஜி பேசிஸ் ஆப்டிகலி நெட்வொர்க் தொழில்நுட்பம் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. விரைவில் சீனாவின் மற்ற மாகாணங்களிலும் இந்த 10ஜி சேவையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் 5G சேவையே தற்போது தான் அறிமுகம் ஆகியுள்ள நிலையில் சீனாவில் 10G சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
- பெண்ணாகப் பிறந்தவரை மட்டுமே சட்டப்படி பெண்ணாகக் கருத முடியும்
- பெண் பாகுபாடு சார்ந்த சட்டங்கள் திருநங்கைகளுக்குப் பொருந்தும்
இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட்டு, சட்டப்படி பெண் என்பவர் யார் என்பது குறித்த வழக்கில் அளித்த தீர்ப்பில் பெண்ணாகப் பிறந்தவரை மட்டுமே சட்டப்படி பெண்ணாகக் கருத முடியும், திருநங்கை களை பெண்களாக கருத முடியாது என்றுதீர்ப்பு அளித்துள்ளது.
அதே சமயம், பெண் பாகுபாடு சார்ந்த சட்டங்கள் திருநங்கைகளுக்குப் பொருந்தும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து இங்கிலாந்தில் போராட்டங்கள் நடைபெற்றது. திருநங்கை உரிமைகளுக்கு ஆதரவாக சமூக ஆர்வலர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஓரின சேர்க்கையாளர்கள் அமைப்பினர், லண்டன், எடின்பர்க்கில் பேரணி நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
பேரணியின் போது லண்டனில் பாராளுமன்ற சதுக்கத்தில் உள்ள வாக்குரிமை பெற்ற மில்லி சென்ட் பாசெட் சிலை உள்பட 7 சிலைகள் சேதப்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
- காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி அமெரிக்காவின் பாஸ்டன் நகரை சென்றடைந்தார்.
- அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வாஷிங்டன்:
மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி 21 மற்றும் 22-ம் தேதிகளில் அமெரிக்கா செல்கிறார். இந்தப் பயணத்தின்போது ரோட் தீவில் அமைந்துள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுடனான கலந்துரையாடலில் பங்கேற்கும் ராகுல் காந்தி, வெளிநாடுவாழ் இந்தியர்கள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களையும் சந்திக்கிறார் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி இன்று அதிகாலை அமெரிக்காவின் பாஸ்டன் நகரைச் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ராகுல் காந்தி தனது அமெரிக்க பயணத்தின்போது டெக்சாஸ் பல்கலைக்கழகம், ஜார்ஜ் டவுன் பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உக்ரைன்-ரஷியா இடையே 3 ஆண்டுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது.
- ஈஸ்டர் நாளில் மட்டும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தப்படாது என அதிபர் புதின் தெரிவித்தார்.
மாஸ்கோ:
உக்ரைன்-ரஷியா இடையே 3 ஆண்டுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகின்றன. ஆனால் இதில் உறுதியான உடன்பாடு எட்ட முடியவில்லை.
இந்நிலையில், ஈஸ்டர் நாளில் மட்டும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தப்படாது என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அதிபர் புதின் கூறுகையில், இன்று (ஏப். 19) மாலை 6 மணி முதல் (ரஷிய நேரப்படி) நாளை (ஏப். 20) நள்ளிரவு 12 மணிவரை தற்காலிக போர் நிறுத்தம் நிலவும் என குறிப்பிட்டுள்ளார்.
ரஷியாவை போலவே உக்ரைன் தரப்பும் இந்தக் காலகட்டத்தில் சண்டையில் ஈடுபடக் கூடாது என்பதை தாங்கள் எதிர்பார்க்கிறோம் என ரஷிய மாளிகை தெரிவித்துள்ளது
- பாத்திமாவுக்கு இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
- அவரின் குடும்பத்தினர் 10 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் அவரின் கர்ப்பமான சகோதரியும் அடங்குவார்.
இஸ்ரேல் - ஹமாஸ் போரின் விளைவுகளை புகைப்படங்களின் மூலம் உலகிற்கு காட்டிய காசாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் ஃபாத்திமா ஹசௌனா (25) இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஃபாத்திமாவுக்கு இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த புதன்கிழமை வடக்கு காசாவில் நடந்த இஸ்ரேல் தாக்குதலில் ஃபாத்திமா மற்றும் அவரின் குடும்பத்தினர் 10 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் அவரின் கர்ப்பமான சகோதரியும் அடங்குவார்.
"நான் ஒரு செய்தியாக இருக்க விரும்பவில்லை. எனது மரணம் உலகத்திற்கே கேட்கும்படியும், காலத்திற்கும் நிலைத்திருக்கும் படியும் இருக்க விரும்புகிறேன்" என ஃபாத்திமா ஒருமுறை இணையத்தில் பதிவிட்டதை பலரும் நினைவுகூர்ந்து வருகின்றனர்.
- போக்ரா சர்வதேச விமான நிலையம் சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து வாங்கிய சுமார் ரூ.22 பில்லியன் கடனில் இருந்து கட்டப்பட்டது.
- சின் தண்டா மலையின் 40 மீட்டர் பகுதியை அகற்றுவதற்கு ரூ.320 மில்லியன் செலவு ஆகியவை அடங்கும்.
நேபாள் நாட்டில் சீன நிறுவனத்தால் கட்டப்பட்ட போக்ரா சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமானத்தில் சுமார் நேபாள ரூ.1400 கோடி மதிப்புள்ள பெரிய அளவிலான ஊழல் நடந்துள்ளதாக நேபாள பாராளுமன்றக் குழு கண்டுபிடித்துள்ளது.
போக்ரா சர்வதேச விமான நிலையம் சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து வாங்கிய சுமார் ரூ.2,2 கோடி கடன் வாங்கி கட்டப்பட்டது. டிசம்பர் 29, 2022 அன்று சீன நிறுவனத்தால் இந்த விமான நிலையம் கட்டி முடிக்கப்பட்டது.
ஒப்பந்தத்தின்படி, விமான நிலைய கட்டுமானம் முடிந்த பிறகு ஏழு ஆண்டுகளுக்கு 2 சதவீத வட்டி விகிதத்தில் கடனை நேபாளம் திருப்பிச் செலுத்த வேண்டும். பின்னர் அடுத்த 13 ஆண்டுகளில் அசல் தொகையை செலுத்தி முடிக்க வேண்டும்.
நேபாள சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAN) விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்கான செலவை 14.5 கோடி அமெரிக்க டாலர்களாக மதிப்பிட்டது. ஆனால் அது நிராகரிக்கப்பட்டு, சீன நிறுவனத்துடன் 21.5 கோடி அமெரிக்க டாலர் செலவில் விமான நிலையம் கட்டும் ஒப்பந்தம் கையெழுத்தானது என்று பாராளுமன்ற குழு அறிக்கை கூறுகிறது.

மேலும் அந்த அறிக்கையில், திட்டத்தின் கட்டுமானத்தின் போது நடந்த முறைகேடுகளில் ரூ.2.22 பில்லியன் வரி விலக்கு அளித்தல் மற்றும் சின் தண்டா மலையின் 40 மீட்டர் பகுதியை அகற்றுவதற்கு ரூ.320 மில்லியன் செலவு ஆகியவை அடங்கும். ஆனால் அவை ஒருபோதும் செய்யப்படவில்லை. இதுபோன்ற பல்வேறு முறைகேடுகள் அவ்வறிக்கையில் சுட்டுக்காட்டப்பட்டுள்ளது.
போக்ரா சர்வதேச விமான நிலையத் திட்டத்தின் தலைவர் பினேஷ் முனகர்மி, நிர்வாகத் தலைவர் ராஜேந்திர பிரசாத் பவுடெல், CAAN இயக்குநர் மற்றும் பொறியாளர் பாபுராம் பவுடெல் உள்ளிட்டோரை விசாரித்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாராளுமன்ற குழுவின் அறிக்கை பரிந்துரைத்துள்ளது.
- சுமார் 20,000 டாலர்கள் பரிசுத் தொகையைத் திருடிச் சென்றனர்.
- குற்றக் கும்பல்களுடன் தொடர்புடையதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ஈக்வடார் நாட்டில் சேவல் சண்டையின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர். ஒன்பது பேர் காயமடைந்தனர்.
மனாபி மாகாணத்தில் வலென்சியாவில் உள்ள சேவல் சண்டை அரங்கில் கடந்த வியாழக்கிழமை இரவு 11:30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. சண்டையை பார்க்க மக்கள் கூடியிருந்த நிலையில் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
தாக்குதல் நடத்தியவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்வதற்கு முன்பு சுமார் 20,000 டாலர்கள் பரிசுத் தொகையைத் திருடிச் சென்றனர்.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு டொமிங்கோவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்தவர்களில் 12 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்த தாக்குதல் குற்றக் கும்பல்களுடன் தொடர்புடையதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்த விசாரணை நடந்து வரும் சூழலில் தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
- நேற்று பிரதமர் மோடியுடன் எலான் மஸ்க் போனில் உரையாடினார்.
- அமெரிக்காவுடனான கூட்டாண்மையை முன்னேற்றுவதற்கு இந்தியா உறுதி பூண்டுள்ளது.
உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க், டொனால்டு டிரம்ப் உடைய அரசின் செயல்திறன் துறை தலைவராக உள்ளார். தனது ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா ஆகியவற்றை இந்திய சந்தைகளுக்கு கொண்டு வர தீவிரம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவுக்கு வருகை தர ஆவலுடன் உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். நேற்று பிரதமர் மோடியுடன் எலான் மஸ்க் போனில் உரையாடிய நிலையில், இந்தியா வருவதற்கான தனது விருப்பத்தை இன்று மஸ்க் வெளிப்படுத்தியுள்ளார்.
"பிரதமர் மோடியுடன் பேசுவது ஒரு மரியாதை. இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவுக்கு வருகை தர நான் ஆவலுடன் உள்ளேன்!" என்று மஸ்க் எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
மஸ்க் உடன் பேசியது குறித்து மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில்,"எலான் மஸ்க் உடன் பேசினேன். இந்த ஆண்டு தொடக்கத்தில் வாஷிங்டன் டிசியில் எங்கள் சந்திப்பில் நிகழ்ந்து போலவே, நாங்கள் தொழில்நுட்பம் மற்றும் புதுமைத் துறைகளில் ஒத்துழைப்புக்கான மகத்தான ஆற்றலைப் பற்றி நாங்கள் விவாதித்தோம்.
இந்த துறைகளில் அமெரிக்காவுடனான கூட்டாண்மையை முன்னேற்றுவதற்கு இந்தியா உறுதி பூண்டுள்ளது" என்று தெரிவித்தார்.
- இங்கு அரிசி நுகர்வு ஒரு பெரிய சுகாதார அச்சுறுத்தலாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- அதிகபட்சமாக சீனாவில் 1.34 கோடி புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் அரிசியில் அதிக அளவு ஆர்சனிக் ஏற்பட வழிவகுக்கும், இது 2050 ஆம் ஆண்டுக்குள் ஆசிய நாடுகளில் உள்ள மக்களுக்கு வாழ்நாள் புற்றுநோய் மற்றும் உடல்நல அபாயங்களை அதிகரிக்கும் என்று தி லான்செட் பிளானட்டரி ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், 2 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை அதிகரிப்பதும், கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகரிப்பதும் மண் வேதியியலில் மாற்றங்களை ஏற்படுத்தி, ஆர்சனிக்கிற்கு சாதகமாக மாறக்கூடும் என்று கண்டறிந்துள்ளனர்.
இந்த ஆர்சனிக், அரிசி தானியத்தில் எளிதில் உறிஞ்சப்படுகிறது. நெல் சாகுபடியின் போது மாசுபட்ட மண் மற்றும் பாசன நீர் ஆகியவை அரிசியில் கனிம ஆர்சனிக் அளவை அதிகரிப்பதாக அறியப்படுகிறது. சமையலுக்குப் பயன்படுத்தப்படும் தண்ணீரிலிருந்து கூடுதல் ஆர்சனிக்கையும் அரிசி உறிஞ்சிவிடும்.
ஆர்சனிக்கின் அதிகரித்த வெளிப்பாடு நுரையீரல், சிறுநீர்ப்பை மற்றும் தோல் புற்றுநோய்கள் உள்ளிட்டவற்றின் அபாயத்தை அதிகரிப்பதாக அறியப்படுகிறது.
இந்தியா, வங்கதேசம், நேபாளம், தாய்லாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அரிசி முக்கிய உணவாக உள்ளதால், இங்கு அரிசி நுகர்வு ஒரு பெரிய சுகாதார அச்சுறுத்தலாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் வயலில் 10 ஆண்டுகளில் 28 அரிசி வகைகளில் அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் கார்பன் டை ஆக்சைட்டின் விளைவுகளை அளந்தனர்.
மாதிரிகளைப் பயன்படுத்தி, பங்களாதேஷ், சீனா, இந்தியா, இந்தோனேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகிய ஏழு ஆசிய நாடுகளுக்கான கனிம ஆர்சனிக் அளவுகள் மற்றும் சுகாதார அபாயங்கள் மதிப்பிடப்பட்டன.
இந்த ஆய்வின் முடிவில், அரிசியில் ஆர்சனிக் செறிவுகளை அதிகரிக்க வெப்பநிலை மற்றும் CO2 ஒருங்கிணைந்த முறையில் செயல்படுவதையும், அரிசி நுகர்வோருக்கு உணவு ஆர்சனிக் வெளிப்பாடுகளை அதிகரிப்பதையும், 2050 ஆம் ஆண்டில் ஆசிய நாடுகளின் மக்கள்தொகையில் கோடிக்கணக்கானோருக்குப் புற்றுநோய் பாதிப்புகள் ஏற்பட வழிவகுக்கும் என்பதையும் கண்டறிந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
ஆய்வு செய்யப்பட்ட ஏழு நாடுகளில், 2050 ஆம் ஆண்டில் அரிசியில் உள்ள ஆர்சனிக் காரணமாக அதிகபட்சமாக சீனாவில் 1.34 கோடி புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
- இன்று மதியம் 12.17 மணிக்கு 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- ஜம்மு காஷ்மீர், டெல்லி உள்பட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது.
ஆப்கானிஸ்தானில் இன்று (சனிக்கிழமை) 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தேசிய நில அதிர்வு மையம் (NCS) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தான் - தஜிகிஸ்தான் எல்லைப்பகுதியில் 86 கிலோமீட்டர் ஆழத்தில்இன்று மதியம் 12.17 மணிக்கு 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின்போது கட்டிடங்கள் அதிர்ந்ததால் அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகள், அலுவலகங்களை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டது. ஜம்மு காஷ்மீர், டெல்லி உள்பட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது.
- சவுத் பெண்ட் சாலையில் பேருந்துக்காக அவர் காத்திருந்தார்.
- இரு தரப்பினரும் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.
கனடாவில் உள்ள ஆண்டாரியோ மாகாணம் ஹமில்டன் நகரில் உள்ள மொஹ்வாக் கல்லூரியில் இந்தியாவைச் சேர்ந்த ஹர்சிம்ரத் ராதாவா (21 வயது) என்ற மாணவி கல்வி பயின்று வந்தார்.
உள்ளூர் நேரப்படி கடந்த புதன்கிழமை இரவு 7:30 மணியளவில், சவுத் பெண்ட் சாலையில் பேருந்துக்காக அவர் காத்திருந்தார். அப்போது, அங்கு இரு கார்களில் வந்த நபர்களுக்கு இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இரு தரப்பினரும் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் அங்கு பேருந்துக்காக காத்திருந்த ஹர்சிம்ரத் ராதாவா மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஹர்சிம்ரத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் ஹர்சிம்ரத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






